ஞாயிறு, 12 மே, 2024

வரலாற்றுச் சுவடுகளிலிருந்து… சில பகுதிகள் வரலாறும் தலைகுனியும் அவமானகரமான வரி!



விடுதலை ஞாயிறு மலர்
Published February 25, 2023

“இது போன்ற கட்டுப்பாடுகள், அவமானங்களிலிருந்து தப்பிக்க, 

மதம் மாறுவதே தீர்வு என்று நாடார் 

இன மக்களில் பெருங்கூட்டம் கிறிஸ்தவத்தைத் தழுவியது.”

நாம் இன்று எத்தனையோ விஷயங்களுக்காக அரசுக்கு வரி கட்டுகிறோம் அல்லவா… அதுபோலவே 18ஆம் நூற்றாண்டிலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வரிகள் இருந்தன. ஆனால், அவை இன்றுபோல் அனைவருக்கும் சமமானதாக அல்லாமல் பலவிதமான பாகுபாடுகளுடனும், கொடூர ஒடுக்குமுறையுடனும் இருந்தன. மனிதகுல வரலாற்றில் மிக அவமானகரமான காலத்தின் சாட்சியமாக அந்த வரிகள் இருந்தன!

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்துவந்த சாணார்/நாடார், பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட பதினெட்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் விதவிதமான வரிகளை எதிர்கொண்டார்கள். வீட்டில் பசுமாடு வளர்த்தால் வரி, மண்வெட்டி-அரிவாள் வைத்திருந்தால் வரி, வளர்க்கும் பனை மரங்களுக்கு வரி, தலைப்பாகை கட்டினால் வரி, முகத்தில் மீசை வளர்த்தால் வரி, திருமணங்களில் தாலி கட்டினால் வரி, வீட்டுக்குக் கதவு இருந்தால் வரி, ஜன்னல் இருந்தால் வரி… என அன்றைய காலத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள்மீது மட்டும் 110 விதமான அநியாயமான வரிகள் விதிக்கப்பட்டன. இவர்களின் வீட்டுக் கதவுகள் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இவர்கள் சொந்தமாக நிலம் வைத்திருக்க உரிமையில்லை. வீட்டில் செம்புப் பாத்திரங்கள் வைத்திருக்கக் கூடாது. குடும்பத்தில் யாரையும் செல்லப்பெயர்களை வைத்து அழைக்கக் கூடாது. இவர்கள் வடிக்கும் சோற்றைக் கஞ்சி என்றே அழைக்க வேண்டும். இவர்கள் வசிப்பிடத்தைக் குடிசை என்றே அழைக்க வேண்டும். பெரிய கோயில்களில் உள்ள தெய்வங்களை வழிபடக் கூடாது என்பது போன்ற எண்ணற்ற கட்டுப்பாடுகளும் இருந்தன.

1754ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராணுவச் செலவுகளுக்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது மட்டும் தலைஇறை வரி விதிக்கப்பட்டது. இந்த வரியின் சுமையைத் தாங்க முடியாமல், இனி இங்கே வாழ முடியாது எனக் குடும்பம் குடும்பமாக மக்கள் திருநெல்வேலி நோக்கிப் படையெடுத்தார்கள். 1807ஆம் ஆண்டு மட்டும் தலைஇறை வரியாக 88,000 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்றால் அதன் சுமையை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள். மனிதாபிமானமற்றவர்கள் ஆட்சி செய்யும்போது, வரி என்பது ஒருவித தண்டனையாக மாறுகிறது, குடிமக்களை வறுமை நோக்கித் தள்ளுகிறது என்பதை வரலாறு நெடுகிலும் பார்க்கிறோம்.

இதையெல்லாம்விட முக்கியமானது அங்கு அமலில் இருந்த ஒரு வரி. உலகம் முழுவதிலும் எந்தவோர் அரசும் யோசித்துக்கூடப் பார்க்காத ஒரு வரி. அந்த வரியை எப்படித் திட்டமிட்டிருப்பார்கள், எப்படி நிர்ணயம் செய்திருப்பார்கள் என்று நம்மால் யூகிக்கவே முடியவில்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த பெண்களின் முலைகளுக்கு வரி போடப்பட்டது. தமிழில் `முலை வரி’ என்றும், மலையாளத்தில் அதை `முலைக்காரம்’ என்றும் அழைத்தார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த ஜாதி நம்பூதிரிகள் உள்ளிட்ட ஆதிக்க ஜாதிப் பெண்களும் ஒரு கட்டம் வரை மேலாடை அணியவில்லை. அய்ரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு, அய்ரோப்பியப் பெண்கள் தங்களின் மார்புகளை மறைத்து மேலாடை அணிந்திருப்பதைப் பார்த்து, இவர்களும் மெல்ல மெல்ல மேல் முண்டு அணிந்து நாகரிகமாகத் தங்களது மார்பகங்களை மறைத்துக் கொண்டார்கள். அப்படித் தங்களின் மார்பகங்களை மறைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட அவர்கள், அந்தப் பழக்கத்தை ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பின்பற்றி விடாதபடி தடைகளை விதித்தார்கள்.

அந்தத் தடைகள், கட்டுப்பாடுகள், பாகுபாடுகளுக்கிடையே பெண்கள் எவ்வளவு அவமானகரமான உணர்வுகளுடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பெரும் வலியாக இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு, ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் தலையிட்டுப் பார்த்தது. ஆனால் “இது எங்கள் நிலம், எங்கள் நிலத்தின் கலாசாரத்தில், சடங்குகளில், சம்பிரதாயங்களில் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை” என்று சமஸ்தானத்தின் ஆதிக்க ஜாதியினர் வைத்த வாதங்களில் குழம்பிப்போய், பின்வாங்கியது பிரிட்டிஷ் அரசு.

இதுபோன்ற கட்டுப்பாடுகள், அவமானங்களிலிருந்து தப்பிக்க, மதம் மாறுவதே தீர்வு என்று நாடார் இன மக்களில் பெருங்கூட்டம் கிறிஸ்தவத்தைத் தழுவியது. ரொட்டிக்காக, அரிசிக்காக அல்ல, தங்களின் சுயமரியாதைக்காகவே மதமாற்றம் நிகழ்ந்தது. ஆனால் மதம் மாறிய பின்னரும் அவர்களுக்கு மேலாடை அணிய அனுமதியில்லை என்றார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார்கள், முதன்முதலில் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக பலமாகக் குரல் எழுப்பினார்கள்; போராடினார்கள். தேவாலயங்களுக்கு வரும் பெண்களை மேலாடை அணிந்துவரும்படி கோரினார்கள். அதேசமயம், மேலாடை அணிந்து வந்த பெண்களைத் தெருவில்வைத்து அவர்களது மேலாடையைக் கிழித்து அவமானப்படுத்தினார்கள் ஆதிக்க ஜாதியினர். இந்த வன்முறைக்குப் பயந்து, பல பெண்கள் ஒரு மாற்று உடையுடன் தேவாலயம் நோக்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம், ‘கிறிஸ்தவம் தழுவியவர்கள் மட்டும் இனி மேலாடை அணியலாம்‘ என்று 

அறிவித்தது.

1822 முதல் 1859 வரை மேலாடை அணியும் உரிமைக்கான போராட்டம் இடைவிடாமல் நடைபெற்றது. நெய்யாற்றின்கரை, பாறசாலை, நெய்யூர், ஆத்தூர், திற்பரப்பு கண்ணனூர் அருமனை, உடையார்விளை புலிப்புனம் என்று போராட்டம் சூடுபிடித்தது. போராடிய பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்; அவமானப்படுத்தப்பட்டார்கள். மேலாடை அணிந்த பெண்களை ஏரில் பூட்டி உழவு செய்தார்கள். அய்யா வைகுந்தர் போன்றோர் போராடும் பெண்களுக்குத் துணை நின்றார்கள்; ஊக்கமளித்தார்கள். இந்தப் போராட்டம் வெகு மக்கள் போராட்டமாக மாறியது. தொடர் போராட்டத்துக்குப் பிறகு 1859, ஜூலை 26ஆம் தேதி, ‘அனைத்து சமயப் பெண்களும் மேலாடை அணியலாம்‘ என்கிற அதிகாரப்பூர்வ அறிக்கை வந்தது ‘சாணார் பெண்கள், கிறிஸ்தவப் பெண்கள் அணியும் குப்பாயம் அல்லது மீனவப் பெண்களைப் போன்று கட்டிச்சீலை உடுத்திக்கொள்ளலாம். ஆனால், ஆதிக்க ஜாதிப் பெண்கள் அணிவதுபோல் மேலாடை அணியாமல் வேறு விதங்களில் மார்பை மறைத்துக் கொள்ளலாம்’ என்றது. அப்போதும்கூட சமஸ்தானம் இந்தத் தீர்ப்புக்குப் புதிய விளக்கமளித்து, ‘இந்த உரிமை சாணார் சமூகப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பிற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களுக்கு இந்த உரிமையில்லை’ என்று தனது பிரித்தாளும் சூழ்ச்சியையே செய்தது. உடையைவைத்து ஜாதியை அடையாளம் காணும் ஆணவ வெறியின் வெளிப்பாடாகவே இது கருதப்பட்டது.

‘ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, இந்தச் சமரசம்‘ என்றும் மகாராஜா தரப்பு தெரிவித்தது. பின், 1865இல்தான் அனைத்து ஜாதியைச் சேர்ந்த பெண்களும் மேலாடை அணிவதற்கான உரிமையைப் பெற்றனர். இத்தனை போராட்டங்களுக்குப் பின்புதான் ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்களின் மார்புகளை மறைத்துக்கொள்ள முடிந்தது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, மார்பகங்கள் வளரத் தொடங்கியதுமே அரசாங்கம் அவர்களுக்கு முலை வரியை நிர்ணயம் செய்யும். வரியை வசூலிப்பவர்கள் ஒவ்வொரு வீடாக வந்து பெண்ணின் மார்பகங்களை அளவெடுத்து அதன் அளவைப் பொறுத்து வரியை நிர்ணயிப்பார்கள்; வசூல் செய்வார்கள். நம்பூதிரி பிராமணர்களுக்கு முன்பாக இருக்கும்போது தங்கள் மார்பகங்களைப் பெண்கள் மறைக்க அனுமதியில்லை. ‘இது ஒடுக்கப்பட்ட ஜாதிகள், நம்பூதிரிகளுக்கு அளிக்கும் மரியாதை’ என்றே மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்.

“ஜாதி அமைப்பு புனிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் புனிதத் தன்மையை முதலீடாகக் கொண்டு இயங்கும். மதத்தையும், சாஸ்திரங்கள் மீதான நம்பிக்கையையும் ஒழிக்க வேண்டும்” என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.

சேர்த்தலை என்கிற கிராமத்தில் வசித்த நங்கேலிக்கு, இந்த முலை வரி விதிப்பின்மீது தீராத கோபம் ஏற்பட்டது. அதை அவளால் ஏற்கவே முடியவில்லை. 1803இல் அவளது வீட்டுக்கு வரி வசூல் செய்ய, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ‘பார்வதியார்’ என்கிற வரி வசூலிப்பவர்கள் வந்தார்கள். ‘இதோ உங்களுக்கு வரியைக் கொண்டுவருகிறேன் என்று வீட்டுக்குள் சென்ற நங்கேலி, சற்று நேரம் கழித்து வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள். தனது கைகள் இரண்டிலும் வாழையிலைகளை வைத்திருந்தாள். இலையில் தனது இரண்டு மார்புகளையும் அறுத்து வைத்திருந்தாள். ‘இதுதான் உங்களுக்கு நான் செலுத்தும் வரி’ என்று அதை நீட்ட, வரி வசூலிக்க வந்தவர்கள் தெறித்து ஓடினார்கள். ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தாள் நங்கேலி.

இன்று விதவிதமான ரவிக்கைகளை அணியும் பெண்கள், இந்தச் சுதந்திரத்தைத் தங்களின் முலைகளை அறுத்தெறிந்துதான் நங்கேலிகள் தங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்கிற சமூக வரலாற்றை அறிவார்களா… நம் பாடப்புத்தகங்கள் நமக்கு இந்தச் சமூக வரலாற்றை ஏன் கற்றுத் தரவில்லை?

(ஆதாரம்: அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய போராட்டங்களின் கதை என்ற நூலிலிருந்து, பக்கம் 109-114 வரை)

பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’


Published September 23, 2023, விடுதலை ஞாயிறு மலர்

“மலையாளத்தாரை வெறி பிடித்தவர்கள் என்று கொள்ளாமல் வேறு எவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்?’’ என்று துறவியான விவேகானந்தரையே பேச வைத்திருக்கிறது என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் எப்படிப்பட்ட அவல நிலை இருந்திருக்க வேண்டும்?

கேரள மாநிலம். கோட்டயத்திலிருந்து 32 கி.மீ. தூரத்தில் இருக்கிற வைக்கத்தில் வேம்பநாடு ஏரிக்கரையில் இருக்கிறது பழைமையான மகாதேவர் கோவில். 

உள்ளே இருப்பது சிவபெருமான் தான். மலையாளத்தில் ‘வைக்கத்தப்பன்’ என்று அழைக்கிறார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கு நடக்கும் திருவிழா விசேஷம்.

அப்போது திருவிதாங்கூர் ராஜாவின் சமஸ்தான ஆட்சி. மகா ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வைக்கம் கோவிலைச் சுற்றிலும் பந்தல் போட்டிருந்தார்கள். அதையொட்டி இருந்த நீதிமன்றத்திற்கு முன்னாலும் பந்தல் அலங்காரம்.

அந்த நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வந்த மாதவனை அவருடைய சமூகத்தைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்குள் நுழையத் தடை விதிக்கிறார்கள் உயர்ஜாதிக்காரர்கள்.

அந்த இழிவு தான் பொறி. எதிர்த்துக் கலகக் குரல்கள் எழுந்தன.

அன்றைக்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் உட்படப் பலர் கூடிப் பேசினார்கள். சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்தார்கள். நடத்தினார்கள். நடத்தியவர்கள் கைதானார்கள்.

இதெல்லாம் நடந்தது 1924 ஏப்ரல் மாதத் துவக்கத்தில். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி பெரியாருக்குக் கைதானவர்கள் கடிதம் எழுதுகிறார்கள்.

சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார் ஈரோட்டுக்குத் திரும்பிச் சிலரை அழைத்துக் கொண்டு நேரே வைக்கத்திற்குக் கிளம்பிவிட்டார்.

பெரியாருக்கு ஏற்கெனவே அறிமுகமானவராக திருவிதாங்கூர் ராஜா இருந்தாலும், அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட வரவேற்பை மறுத்தார் பெரியார்.

பொதுக்கூட்டங்களில் தெருவில் சில சமூகத்தினர் நடக்கக் கூடத் தடை விதித்திருப்பதை எதிர்த்துக் கடுமையாகப் பேசினார்.

போராட்டம் வலுவடைந்தது. போராடுவதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெரியார் உட்படப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டு அருவிகுத்தி என்கிற ஊரில் சிறை வைக்கப்பட்டார்கள்.

இருந்தாலும் வெளியே போராட்டம் தொடர்ந்தது. பெரியாரின் மனைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். போராட்டம் தீவிரமானது.

ஒரு மாதத்தில் பெரியார் விடுதலை ஆகி வெளியே வந்ததும் போராட்டம் இன்னும் வலுக்கிறது. “பெரியார் அங்கே தலைமை தாங்கும்போது நான் கூட்டத்திலிருந்த சாதாரணத் தொண்டன்’’ என்று பின்னாளில் பதிவு செய்திருக்கிறார் காமராஜர்.

ஈழவ சமுதாயத்தின் பெரும்தலைவரான நாராயணகுரு, ’’ஒருவன் தீண்டுவதனால் இன்னொருத்தனின் பரிசுத்தம் கெடுமானால், அந்தப் பரிசுத்தம் அழியட்டும்’’ என்று சொல்லக்கூடிய அளவுக்குப் போனார்.

அதற்குள் மறுபடியும் பெரியாரைக் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைக்கிறார்கள். அவருடைய காலில் விலங்கு, தலையில் குல்லா, கழுத்தில் கைதி எண் எழுதப்பட்ட மரச்சட்டம்.

“இப்படி வைத்திருப்பது நியாய விரோதம். திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது’’ என்றார் ராஜாஜி. (சுதேசமித்திரன்- 28.8.1924)

போராட்டம் வலுத்த நிலையில் ராஜாஜி கடிதம் எழுதியபிறகு காந்தியார் வைக்கத்திற்கு வந்தார்.

ராணியைச் சந்தித்தார். நாராயணகுருவைச் சந்தித்தார். தடை விதித்திருந்த உயர்ஜாதியினரை அழைத்துப் பேசினார்.

கடைசியில் ராணியின் உத்தரவுக்குப் பிறகு 1925ஆம் ஆண்டில் சில சமூகத்தினருக்குத் தெருவில் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதன் பிறகு கோவிலுக்குள் நுழைவதற்கான தடையும் நீக்கப்பட்டது.

சுதந்திர உணர்வுடன் அதுவரை உரிமை மறுக்கப்பட்ட தெருக்களில் ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்தோடு பேரணியாகச் சென்றபோது அதற்குத் தலைமை தாங்கியவர் பெரியார்.

இன்று வரை வைக்கம் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் நீடித்துக் கொண்டிருந்தாலும், கேரள அரசின் முயற்சியோடு வைக்கத்தில் 1994 ஜனவரியில் நினைவகம் எழுப்பி அவருடைய பங்களிப்பின் அடையாளமாக அவருடைய சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அன்றைக்குச் சக மனிதனை படுகேவலமாகத் தாழ்த்திய அவலம் தொடர்ந்தபோது அதை எதிர்த்து “பொது வாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’ என்று கலகக் குரலை உயர்த்திப் போராடி, சிறைப்பட்டவரை காலத்தின் இன்னொரு கரையில் நின்று வசதியாக விமர்சிப்பது மிக எளிது.

இன்றைய இலக்கிய முலாம் பூசிய எந்தச் சொற்களை விடவும், அன்றைய செயல் தான் வலிமையானது.

அப்படிச் சமூகத்தின் தேவையை உணர்ந்து நின்றதால் தான் பெரியார் போராட்டம் நடத்திய அதே வைக்கம் மண்ணில் அவருக்கு நினைவகமும், சிலையும் எழுந்திருக்கிறது.

அவை எல்லாமே பிறர் வலியைத் தன்வலியாக உணர்ந்தவருக்கு அளிக்கப்பட்ட காலங்கடந்த அங்கீகாரத்திற்கான எளிய அடையாளங்கள்.

நன்றி: ‘குமுதம்’, 25.10.2017

வரலாற்றை அறிவோம்!” தாழ்த்தப்பட்ட மக்களும் – கோவில் நுழைவுப் போராட்டமும்!



விடுதலை நாளேடு
Published March 18, 2023

ஹிந்து மதம் எனும் பெயரில் பெரும்பான்மை மக்களை ஒன்றாகக் கணக்குக் காட்டினாலும், அதில் உள்ள ஜாதி ஏற்றத் தாழ்வுகள், மனிதர்களை வேறுபடுத்தியே வைத்திருந்தன. பெரும்பான்மை மக்களில் மிக மிக சிறுபான்மையினரான பார்ப்பன சமுதாயத்தவரே கடவுளின் நேரடிப் பிரநிதிகள் போல அனைத்து அதிகாரமும் உரிமையும் செல்வாக்கும் கொண்டவர்களாக இருந்தனர்.

ஆண்ட பரம்பரையினராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சூத்திரர்களுக்கு அரசுப் பணியிடங்கள் உள்பட எல்லா இடங்களிலும் புறக்கணிப்பே தொடர்ந்தது. பஞ்சமர்- தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட ஆதிதிராவிட மக்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பார்ப்பனர்களும் – சூத்திரர்களும் நடத்தினர். ஜாதிப் படிநிலையின் உச்சத்தில் இருந்த பார்ப்பனர்கள் சொல்வதே வேதம் என்கிற பொதுப்புத்திக்கு மக்கள் கட்டமைக்கப்பட்டிருந்தனர்.

ஹிந்துக்கள் எனப்படும் அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைத்திட வேண்டும் என்பதை முன்னெடுத்த திராவிட இயக்கம், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சனை செய்யும் உரிமை கொண்ட கோவில்களில் அனைத்து சமுதாயத்தினருக்கும் வழிபாட்டு உரிமையும் பூசை செய்யும் உரிமையும் வழங்கவேண்டும் எனத் தொடர்ந்து போராடியது. குறிப்பாக, ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள்ளும்- கோவில்கள், அக்ரகாரங்கள் உள்ள தெருக்களுக்குள்ளும் அனுமதிக்காத தீண்டாமையை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன.

தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே 1922இல் நடந்த திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் அனைத்துச் சமூகத்தினரும் கோவிலுக்குள் செல்ல வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரசிலிருந்து பிரிந்து, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகும் அவரது செயல்பாடுகள் தொடர்ந்தன.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18.01.1926 இல் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் நடைபெற்ற கிளர்ச்சியே இதில் முதன்மையானதாகும். இதனையடுத்து, கோவிலுக்குள் ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துச் செல்லும் கோவில் நுழைவுப் போராட்டத்தை முதற் கட்டமாக திருவண்ணாமலையில் தொடங்கினார், நீதிக்கட்சி சார்பில் வெளியான ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர். 1927ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் திருவண்ணாமலை கோவிலுக்குள் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரையும் மற்றவர்களையும் கோவிலுக்குள் வைத்து பூட்டிவிட்டனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஓர் ஆண்டு காலம் நடைபெற்ற வழக்கின் இறுதியில், கண்ணப்பருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஜே.என் இராமநாதன் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோவிலுக்கு ஆதிதிராவிடர்களை அழைத்துக் கொண்டு சென்றார். இதுவும் 1927ஆம் ஆண்டு நடைபெற்ற கோவில் நுழைவுப் போராட்டமாகும். அப்போது,தாயுமானவர் சன்னதியில் இருந்தவர்கள் குண்டர்களைக் கொண்டு. இராமநாதன் உள்ளிட்டோரை படிக்கட்டுகளில் உருட்டிவிட்டனர்.

அதே 1927ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதசாமி கோவிலுக்கு சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் அனைத்து ஜாதியை சேர்ந்த 1000 பேர் கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து, கோவில் நுழைவாயிலையும் கருவறையையும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் பூட்டிவிட்டனர் போராட்டக்காரர்களோ, பக்கவாட்டுக் கதவு வழியாக சென்று, அப்பர் சாமிகள் எனப்படும் திருநாவுக்கரசரின் ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற பாடலைப் பாடி போராட்டக்குரல் எழுப்பினர். 1928ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோவிலிலும், திருவானைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை சுயமரியாதை இயக்கத்தினர் மேற்கொண்டனர்.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் 1929ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி, ஆதிதிராவிடர்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என தேவஸ்தானக் கமிட்டியின் தலைவராக இருந்த பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அதற்கு மறுநாள், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் முடிவுடன் பெரியாரின் வாழ்விணையர் நாகம்மையார் அவர்கள் குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் ஆகியோருடன் ஆதிதிராவிடத் தோழர்கள் மூவருக்கு நெற்றியில் திருநீறு பூசி, அருச்சனைத் தட்டுடன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். சென்றவர்களை வைத்துக் கோவில் கதவு பூட்டப்பட்டதால், இரண்டு நாள் உள்ளேயே இருந்தனர். வெளியூர் சென்றிருந்த பெரியார் ஈரோடு திரும்பியபிறகே, கோவில் கதவு திறக்கப்பட்டது.

****

கோவில் நுழைவு தொடர்பாக குத்தூசி குருசாமி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆதிதிராவிடத் தோழர்கள் பசுபதி, கருப்பன், ஈஸ்வரன் மூவருக்கும் அபராதம் விதித்தது நீதிமன்றம். அதனைக் கட்ட மறுத்த ஈஸ்வரன் சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு கோவில் நுழைவு- சுசீந்திரம் கோவில் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான உரிமைப் போராட்டம் ஆகியவை தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் வரை கொண்டு சென்று சுயமரியாதை இயக்கத்தினர் வெற்றி பெற்றனர்.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ஈரோட்டில் கண்ணப்பர், காரைக்குடியில் சொ.முருகப்பா, தலைச்சேரியில் டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்களில் பண்டிதர் திருஞானசம்பந்தன்- சுப்ரமணியன் ஆகியோரும் முன்னின்று கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர்.

1932இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் டாக்டர் சுப்பராயன் கொண்டு வந்த கோவில் நுழைவு மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக்கட்சியின் கடமை என குடி அரசு இதழில் 30.10.1932 அன்று தலையங்கம் எழுதினார் பெரியார்.

இத்தகையத் தொடர்ச்சியான போராட்டங்களை 1920களிலேயே திராவிட இயக்கம் நடத்தியது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்த இன்றைய ஆர்.எஸ்.எஸ். மனநிலை கொண்ட பார்ப்பனர்கள் இதனை எதிர்த்தனர். அதன் பிறகு. 1937இல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜாகோபாலாச்சாரி முதல்வர் (பிரிமியர்) ஆனார். அப்போது, பல்வேறு வகையில் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்திகளை தவிர்க்கும் வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் நடைசாத்தப்படும் நேரத்தில் ஆதிதிராவிடர் சிலருடன் காங்கிரஸ் கட்சிக்காரரான வைத்தியநாத அய்யர் உள்ளே சென்றார். இது ஆலய நுழைவுப் போராட்ட வரலாற்று நிகழ்வாகப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் வரை பதிவாகின. சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்கள் அதற்கும் முந்தையவை-வலிமையானவை.

(கோவி.லெனின் எழுதியுள்ள “சமூகநீதியின் நெடும் பயணம்” என்ற நூலின் பக்கம் 27-30)

ஜிகுஜிகு ரயிலே! ஜிகுஜிகு ரயிலே!!



Published March 18, 2023, விடுதலை நாளேடு

கி.தளபதிராஜ்


கரகரவென சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலே

கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!!

மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி

மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!!

தஞ்சையில்  5.8.1943 மாலை நடைபெற்ற நகர்மன்ற தேர்தல் வெற்றியை ஒட்டிய ஒரு தேநீர் விருந்தில் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேப பாடல் இது. பின்னர் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த நல்ல தம்பி படத்திலும் இடம் பெற்றது.

இந்தப் பாடலின் ஊடே கலைவாணர் அவர்கள் “எத்தனையோ பெரிய பெரிய தலைவர்கள் எங்கள் தேசத்திலே தீண்டாமையை ஒழிக்க எவ்வளவோ பாடுபட்டும் இன்னும் தீண்டாமை அறவே ஒழிந்த பாடில்லை. இப்பேற்பட்ட அருமையான காரியத்தை, கஷ்டமான காரியத்தை மனிதர்களால் செய்ய முடியாத காரியத்தை மரக்கட்டையாகிய நீ வந்த அன்றைக்கே செய்து விட்டாய்! சகல ஜாதியாரையும் ஒரே பெஞ்சில் உட்கார வைத்தது உன்னுடைய சாதனை அல்லவா!” என்று கதாகாலட்சேபம் செய்வார்.

இரயில் வண்டி இப்படி மக்களை பாகுபாடு இல்லாமல் ஏற்றிச் சென்றது என்றாலும் ரயில் நிலைய உணவு விடுதிகளில் ஒரு பக்கம் பார்ப்பனர்கள் தங்கள் வேலையைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இரயில் நிலைய உணவு விடுதிகளில் ‘பார்ப்பனர்’ ‘பார்ப்பனரல்லாதார்’ என தனித்தனியாக போர்டு வைத்து வெவ்வேறு இடத்தில் உணவு பரிமாறப்பட்டது. அதைக் கண்டு வெகுண்டெழுந்தார் பெரியார்.

இந்திய ரயில்வே அப்போது தென்னிந்தியாவில் எஸ்.அய்.ஆர், எம்.எஸ்.எம் போன்ற தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப் பட்டு வந்தது. ரயில்வே சிற்றுண்டி சாலைகள் பெரும்பாலும் பார்ப்பனர்களால் நடத்தப்பட்டுவந்த நிலையில் உணவருந்த, பார்ப்பனர்களுக்குத் தனி இடமும் பார்ப்பனர் அல்லாதார்க்குத் தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்ததைப்  பெரியார் கடுமையாக எதிர்த்தார். இந்த வேற்றுமையை ஒழிக்காவிட்டால் நிர்வாகத்திற்கு எதிராக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தார். 

இது குறித்து ‘இந்திய கவர்மெண்ட் கவனிப்பார்களா?’ என்று விடுதலையில் தலையங்கம் தீட்டினார்.

ஹிந்து மகா சபை தலைவர்கள் உண்மையிலேயே ஹிந்துக்கள் என்பவர்கள் எல்லோருக்கும் தலைவர்களாக இருப்பார்களானால், இந்த நாட்டின் ‘பார்ப்பான்’ ‘சூத்திரன்’ ‘பறையன்’ என்கின்ற பேதத்தையும், கொடுமையையும் கவனித்திருக்க மாட்டார்களா? இந்த நாட்டில் இந்த கூட்டங்களுக்கு தனித்தனி ஸ்தாபனமும் பேதமும் ஏன் என்று கேட்டிருக்க மாட்டார்களா? ஓட்டல்களிலும், காப்பிக் கடைகளிலும், கோவில்களிலும் சூத்திரனையும் பறையனையும் எப்படி நடத்துகிறார்கள் என்பதை கவனித்திருக்க மாட்டார்களா?

தென்னாட்டில் பார்ப்பனர் அல்லாதவருக்கு ‘சூத்திரன்’ என்று இடப்பட்டிருக்கும் பெயர்களை எடுக்க இதுவரை எவ்வளவோ கிளர்ச்சி நடந்தும் யாரும் கவலை செலுத்தியதாக காணப்படவில்லை. சோற்றுக்கடைகளிலும் சிற்றுண்டிச் சாலைகளிலும் பிராமணாள் சூத்திரன் என்றும் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்றும் பிரிவு படுத்தி காட்டப்பட்டிருக்கும் பலகையையும், எழுதி இருக்கும் எழுத்துக்களையும் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் என்று சுமார் 17 ஆண்டு காலமாக முயற்சித்தும் நூற்றுக்கணக்கான மாநாடுகளில் தீர்மானங்கள் செய்தும் இதுவரை எந்த இந்து மகாசபை தலைவர்களோ, ‘ஓர் தாய் வயிற்றில் பிறந்தோம்!’ என்று ஓலமிட்டுக் கொண்டு தெருவில் திரியும் எந்தத் தேசியத் தலைவரோ, தேசபக்தரோ சிறிதும் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.

இந்த நிலையில் இந்தியாவில் இந்தியர்களுக்குள் அபிப்பிராய பேதம் இல்லை என்றும் பிரிட்டீஷார்தான் பேதப்படுத்தி வருகிறார்கள் என்றும் சொல்வது எப்படி நாணயமும் அறிவுடைமையும் ஆகும் என்று கேட்கிறோம். 

நம்மைப் பொறுத்தவரை ஓட்டல்களிலும் சிற்றுண்டிச் சாலைகளிலும் இருந்து வரும் பேதத்திற்கு சர்க்கார் (பிரிட்டீஷார்) தான் காரணம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் சர்க்காரால் நடத்தப்படும் ஓட்டல்களில் ஏன் இம்மாதிரி பிராமணன் – பிராமணரல்லாதார் என்று இடம் பிரித்து எழுதி வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. அதாவது ரயில்வேக்கள் எல்லாம் சர்க்காரால் நடத்தப்படுவதாகும். ரயில்வே சம்பந்தமான ஓட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், ரயில்வேக் காரர்களால் நடத்தப்படுகின்றன என்று தான் அர்த்தமாகும். உண்மையும் அதுதான். அப்படி இருக்க, அவர்கள் இதை அனுமதித்துக் கொண்டு வருவதன் காரணம் இந்திய மக்களை, ஹிந்து மக்கள் என்பவர்களையே பிரித்து வைப்பதற்கு இவர்கள் காரணமாய் இருக்கிறார்கள் என்று சொல்ல இடம் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்கிறோம்.

ஆதலால் இந்திய ஒன்றிய அரசாங்கத்தார் இதைக் கவனித்து உடனே தங்கள் ஆதிக்கத்தில் உள்ள இடங்கள் எல்லாவற்றிலும் உள்ள இந்த பேதங்களை எடுத்து விடச் செய்வார்களா? இல்லாவிட்டால் இதை மானமுள்ள மக்கள் இனியும் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களா?

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயிலுக்குள் தீண்டாதார் உள்பட சகல வகுப்பாரும் செல்லுகிறார்கள். இப்படி இருக்க பிரிட்டிஷ் இந்தியாவில் மாத்திரம் ஜாதி இந்துக்கள் என்பவர்கள் ஓர் இடத்தில் இருந்து ஆகாரம் சிற்றுண்டி சாப்பிட பிரிட்டிஷார் உரிமை கொடுக்கவில்லை என்றால் பிரிட்டிஷாரும் மக்களை பிரித்து வைத்து ஆளப் பார்க்கிறார்கள் என்பவர்களுக்கு இடம் கொடுத்தவர்களாக ஆகவில்லையா என்று கேட்கிறோம். என்று  அந்த தலையங்கத்தில் எழுதியிருந்தார்.

மேற்படி நிர்வாகம் தனியாரால் நடத்தப்பட்டு வந்தாலும் அது ரயில்வே வாரியத்திற்கு கட்டுப்பட்டதுதான் என்பதால் பிரிட்டீஷாருக்கே நேரடியாக வேண்டுகோள் விடுத்தார் பெரியார்.

பெரியாரின் எச்சரிக்கைக்குப் பின் பார்ப்பனர்கள் உணவு அருந்த தனியிடம் ஒதுக்கப்பட்டு இருந்ததை எம்.எஸ்.எம் ரயில்வே நிர்வாகம் நீக்கியது. 1941 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி ‘பிராமணாள் சாப்பிடும் இடம்‘ என்ற போர்டு நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.

எம்.எஸ்.எம். நிர்வாகம் தன் போக்கை மாற்றிக்கொண்ட நிலையிலும் மற்றொரு நிறுவனமான எஸ்.அய்.ஆர். தொடர்ந்து பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாகவே இடத்தை ஒதுக்கி உணவு விடுதியை நடத்தி வந்தது.

ஒரே இடத்தில் உணவருந்த அனுமதித்தால் வைதீக யாத்ரீகர்கள், யாத்திரைகளை நிறுத்திவிடுவார்கள் என்றும், இதனால் வருமானம் பாதிக்கப்படும் என்றும் மேற்படி நிறுவனத்திற்கு ஆதரவாக தென்னிந்திய அதிகாரிகளால் காரணம் சொல்லப்பட்டது. அதை அறிந்த பெரியார் எஸ்.அய்.ஆர். நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தார்.

பெரியாரின் போராட்டத்திற்குப் பின் மார்ச் 20 ஆம் தேதி எஸ்.அய்.ஆர். நிர்வாகமும் உணவு விடுதியில் ‘பிராமணாள்’ பெயர்ப் பலகையை நீக்கியது. பெரியார் மேற்படி நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்து விடுதலையில் அறிக்கை வெளியிட்டார்.

ரயில்வே உணவு விடுதிகளில் ஜாதி பேதம் ஒழிந்ததையொட்டி வெற்றிவிழா கொண்டாடச் சொல்லி தோழர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது விடுதலை நாளிதழ்.

வெற்றி! வெற்றி!! தமிழர் கிளர்ச்சிக்கு வெற்றி!!!

எஸ்அய்ஆர் ஓட்டலிலும் ஒழிந்தது ஜாதி பேதம். தென்னிந்திய ரயில்வே ஓட்டல்களில் இதுவரை பிடிவாதமாக இருந்து வந்த ஜாதி பேத முறையான பார்ப்பனனுக்கு தனி இடம் பார்ப்பனரல்லாதாருக்கு வேறு இடம் என்ற கொடுமை இன்றோடு ஒழிந்து விட்டது என்ற செய்தி நமது செய்தியாளரின் தந்தி மூலம் நமக்கு கிடைத்தது. தமிழரின் உள்ளம் பூரித்தது. பார்ப்பன அகம்பாவம் பாழாயிற்று. வெற்றி! வெற்றி!! ஆரியத் திமிர் அடங்கிற்று! பெரியார் பெருவற்றி அடைந்தார்! தமிழர் ‘சம உரிமைப் போரில்’ மற்றோர் வெற்றி பெற்றனர்! வெற்றி விழா கொண்டாடுக!

என்று எழுதி தோழர்களை உற்சாகப் படுத்தியது.

விடுதலை செய்தி கண்டு 1941 மார்ச் 30 ஆம் தேதி தமிழ்நாடே விழாக்கோலம் பூண்டது.  சேலத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் மார்ச் 23ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தாலுகா நீதிக்கட்சி மாநாட்டிலேயே இந்த வெற்றி பிரதிபலித்தது. ஈரோட்டிலிருந்து கரூர் வந்திறங்கிய பெரியார், அண்ணா உள்பட்ட தலைவர்களுக்கு ஏகபோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொண்டர் படை அணி வகுப்பு மரியாதை செய்தது. தொண்டர்கள் கொடி உயர்த்தி  குதிரையில் முன் வரிசையில் செல்ல மேள வாத்தியங்கள் முழங்க, தோழர்கள் வான்முட்ட வெற்றி முழக்கமிட, தலைவர்களை மோட்டார் வாகனத்தில் அமர வைத்து மாநாட்டுப் பந்தலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கிறது. 

இது நடந்தது 1941இல். இந்த வரலாற்றுப் பின்னணிதான் ‘தந்தை பெரியாரின் குடிஅரசே எனது குருநாதர்’ என்று சொன்ன கலைவாணரை கிந்தனார் கதாகாலட்சேபம் நடத்த தூண்டியிருக்கக் கூடும்!

பெரியார் எழுதிய தலையங்கத்தில், இந்திய தேசியத் தலைவர்களை கடுமையாக தாக்கி எழுதியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. காங்கிரசில் தலைவர்களாக இருந்த பார்ப்பனர்கள் அந்தக் காலத்தில் அடித்த கொட்டமோ சொல்லி மாளாது.

கல்கத்தாவில் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து புறப்பட்ட தென்னிந்திய பார்ப்பனப் பிரதிநிதிகள், தங்களுக்கான உணவை பார்ப்பன சமையல் காரர்களைக் கொண்டுதான் சமைக்க வேண்டும் என்றும் அதையும் குறிப்பிட்ட மங்கள நேரத்தில் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அந்தக் கப்பல் நிறுவனத்திடம் முறையிட்டிருக்கிறார்கள். அதோடு கப்பலில் பயணம் செய்த பார்ப்பனர் அல்லாதவரின் பார்வைப்பட்டு அவர்களுக்கும் அவர்கள் உட்கொள்ளும் உணவிற்கும் தோஷம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் தங்கி இருந்த அறைகளிலேயே உணவு பரிமாறப்பட வேண்டும் என்றும் அடம் பிடித்திருக்கிறார்கள். அதிலும் ரகுநாதராவ் என்ற பார்ப்பனர் தீட்டுப் பட்டுவிடும் எனக் கருதி  அய்ந்து நாள் கப்பல் பயணத்தின் போதும் சமைக்கப்பட்ட உணவில் ஒரு கவளத்தை கூட உண்ணாமல் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த வேர்க்கடலை, உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு ஒப்பேத்தியிருக்கிறார். இன்னொரு வைணவப் பார்ப்பனர் தனது வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவைக் கொண்டு வந்து தனது பார்ப்பன நண்பர்களின் பார்வை கூட படாதவாறு சாப்பிட்டு நாட்களை நகர்த்தியிருக்கிறார்.

1889ஆம் ஆண்டில் பம்பாயில் அனைத்திந்திய காங்கிரஸ் மாநாடு கூடியபோதும் காங்கிரஸ் பிரதிநிதிகளாக வரும் தென்னிந்திய பார்ப்பனர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதுதான் பெரிய சிக்கலாக இருந்திருக்கிறது. அவர்கள் வைணவ பார்ப்பன சமையல்காரர்கள் சமைப்பதை தவிர வேறு எந்த உணவையும் உட்கொள்ள மறுத்ததுடன் ஒவ்வொருவரும் தனித்தனி சமையல் அறைகளை கேட்பதுடன் ஒவ்வொருவரும் தனக்கு வேண்டிய காப்பியை தனித்தனியாக தயாரித்து குடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். 1917 ஆம் ஆண்டிலும் இதே நிலைதான் நீடித்திருக்கிறது.

திரு.வி.க கூட தனது வாழ்க்கை குறிப்பில் தேசியவாத நண்பர்களான பண்டித அசலாம்பிகை அம்மையார், வெங்கந்தூர் கணபதி சாஸ்திரி, கடலங்குடி நடேச சாஸ்திரி போன்றோர் தீட்டாகி விடும் என்பதால் தனக்கு எதிரே ஒருபோதும் உணவு அருந்தியது இல்லை என்று கூறியிருக்கிறார் . தேசியத் தலைவர்களே இப்படி என்றால் மற்றவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறதல்லவா? இந்த கொடுங்களத்தில் தான் சளைக்காமல் போராடி வெற்றி கண்டிருக்கிறார் பெரியார்.

ரயில்வே உணவு விடுதிகளில் ஜாதி பேதம் ஒழிந்த நாள் – மார்ச் 20! நினைவைப் போற்றுவோம்!

சனி, 9 மார்ச், 2024

அன்னையாரின் தியாக வாழ்க்கை – தன் நிலை விளக்கம்

 

என்னைப் பற்றி சில வார்த்தைகள் பெருமைக்காகவோ, அகம்பாவத்திற்காகவோ இவை என்று எடுத்துக் கொள்ளாமல் அய்யாவின் தொண்டு புரிவதே வாழ்நாள் இலட்சியம் என்று ஒப்படைத்த ஒரு சிறிய ‘ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதாக நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதின் உண்மை நன்கு புரிய முடியும்.

தந்தை பெரியார் அவர்களிடம் நான் வந்து அடைந்தது எந்தவிதமான பலனை எதிர்பார்த்தோ, பணத்திற்கு ஆசைப்பட்டோ, பெருமை, ஆடம்பர, உல்லாச வாழ்வு வாழ்வதற்கோ, என் குடும்ப முன்னேற்றம் கருதியோ அல்லது வேறு எந்தவிதமான பலனையும் லாபத்தையும் எதிர்பார்த்தோ வந்தவளல்ல, அல்லவே அல்ல!

என் குடும்பத்தைப் பொறுத்தவரையில் பெரும் பணக்காரத் தன்மையில் இல்லை என்றாலும், போதிய கவுரவமும் – மதிப்பும் கொண்ட நடுத்தர நிலையில், கஷ்டம் இன்னதென்று தெரிந்துகொள்ள முடியாத தன்மையில் இருந்து வந்ததுதான். வாழ்க்கைக்குப் போதிய வசதியான அளவிற்கு ஏதோ கொஞ்சம் இருந்தாலும் மனக்குறை இல்லாது, மற்றவர்களின் ஆதரவையும் எதிர்பார்க்காது வாழத் தகுதியுடைய நிலையில் இருந்ததுதான். சிறுவயது முதல் என் தந்தையாரால் சுயமரியாதை கருத்துபட வளர்க்கப்பட்டு தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி எங்கள் இல்லத்தில் தங்குவதில் அவரோடு பழகி, அவரது கருத்துக்களாலும் கொள்கையாலும் கவரப்பட்டதால், என் தந்தையார் மறைவுக்குப் பிறகு நான் ஒரு திடமான முடிவுக்கு வந்து அய்யா அவர்களின் தொண்டுக்கு நம்மால் ஆனதை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து, இயக்கத்தில் தீவிரப் பணிபுரியச் சேர்ந்தவளே தவிர வேறில்லை. 1948லிருந்து என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் – அன்று முதல் இன்று வரை என் செயல்கள். நடவடிக்கைகள், வாழுகின்ற முறைகள், அய்யா மறைவிற்குப் பிறகும், என் போக்கு. தன்மை – இவைகளெல்லாம் எப்படிப்பட்டவை என்று என்னைப் பொறுத்தவரையில் என்றும் ஒளிவு மறைவு இல்லாத ஒரே சீரான தன்மையில் தான் இருந்து வருகிறேன். எந்தவிதமான புதிய மாற்றங்களுக்கும் அவசியமில்லை என்பதையும் உணருகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் தனது இயக்க இலட்சியங்கள் – கருத்துக்கள். பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக செய்துள்ள ஏற்பாடுகள். நாட்டு மக்களிடத்தில் அவர் கொண்டுள்ள உண்மையான அன்பின் பிடிப்பையும் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது தனக்கென என்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் பொது நன்மைக்கே. பயன்படும் வகையில் தக்க முறையில் ஏற்பாடு செய்து தனக்குப் பின்னால் பயனுறும் வகையில் செய்துள்ள அந்நற்செயல் மற்ற எவரும் சாதாரணமாய் நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்றாகும். அப்படிப்பட்ட தன்னலமற்ற தியாகமும் அன்பு உள்ளமும் கொண்ட ஒரு உத்தமரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பணிபுரிய வந்த என்னை சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கத்திற்காக ஒரு ஏற்பாடு என்ற கவலையினால் தனது வாழ்க்கைத் துணைவி என்று. எதிர்ப்பு ஏளனம் இவற்றைப் பொருட்படுத்தாமல் அறிவித்தார்கள்.
சில சமயங்களில் சுபாவ குணத்தால் எனக்கும் பிடிவாதம், அர்த்தமற்ற கோபம் இவைகளால் ஏற்படுகிற தொல்லைகளை எல்லாம் அன்போடு சகித்து, அவர் சகித்து அரவணைத்து ஏற்றுக்கொண்டு, தனது மனநிலைக்கு ஒத்தவாறு என்னையும் மாற்றி அமைத்துப் பக்குவமான நிலையை அடையச் செய்தார்கள்.
அவர்களது காலத்திற்குப் பிறகு எனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதி எனக்குத் தெரியாமல் சில ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தது பல ஆண்டுகள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது.

அந்த ஏற்பாட்டின்படி எனக்குத் தனிப்பட்ட வாழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட, கிடைத்துள்ள சொத்துக்களையும், அதன் மூலம் வரும் வருமானங்களையும், அய்யா அவர்கள் காட்டிய வழியிலேயே அய்யா அவர்களைப் போன்றே, பொது மக்களுக்கே உபயோகப்படும் தன்மையில், நான் நல்ல வண்ணம் சிந்தித்து ஒரு ஏற்பாட்டினைச் செய்வது என்ற திடமான முடிவுக்கு வந்து, சென்ற 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் சேதி “Periyar Maniammal Educational and Charitable Society” என்ற பெயரால் ஒரு அறக்கட்டளை (Trust) ஏற்படுத்தி தக்கபடி. முறையாக. சட்டரீதியாக அதற்குச் செய்யவேண்டிய காரியங்களைச் செய்து முடித்து விட்டேன்.
தலைவர் பெரியார் அவர்கள் பிறந்த வீட்டை. (அது எனக்கே உரியதாய் சட்டப்படி இருந்தபோதிலும்) என்றென்றும் அவர் வீடாகவே’ வைத்திருக்க ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது.

சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற அய்யா அவர்களது 96ஆவது பிறந்தநாள் விழாவின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். ஈரோட்டில் அய்யா அவர்கள் பிறந்த இல்லத்தை தமிழ்நாடு அரசுக்கு அளிக்கும்படியும், அதை அரசு சார்பான நினைவுச் சின்னமாக நிறுவ தமது அரசு முடிவு செய்துள்ளது என்றும் அறிவித்து கேட்டுக் கொண்டதே அவ்வாய்ப்பாகும். அந்த மேடையிலே நான். நமது முதலமைச்சர் அவர்களிடம் அந்த வீட்டை ஒப்படைப்பதாக அறிவித்தேன்.
நமது தமிழ்நாடு அரசு அதை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அய்யா நினைவுச் சின்னமாக அழகுபடச் செய்யப்பட்டு, மக்கள் பார்த்து மகிழும் வண்ணம், காலம் உள்ள அளவு நிலைத்து நிற்கும்படியான அரும் பெரும் ஏற்பாடுகளை எல்லாம் செய்து இருக்கிறார்கள். பொதுமக்கள் பார்வைக்கு அய்யா அவர்களின் பிறந்த நாளில் திறந்து வைக்கப்படுகிறது.

(‘விடுதலை’ – 23.9.1975)

திராவிடர் கழகத்தின் சோர்விலா தொடர்பணி (சுதந்திரத் தனித் தமிழ்நாடு போராட்டம்)

 


Published March 9, 2024, விடுதலை ஞாயிறு மலர்

“நம்மைப் பிறவி இழிவுள்ள மக்களாக ஆக்கி வைத்திருக்கின்ற ஜாதி முறையினை ஒழிப்பதுதான் திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் திராவிடர் கழகம் தயாராகவுள்ளது. திராவிடர் கழகம் சென்ற ஆண்டு நடத்திய ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்து, சுமார் 3,000- த்துக்கும் மேற்பட்ட கழகத்தினர் பலவித கடுங்காவல் தண்டனை அடைந்து சிறை சென்றனர். இன்னும் பலர் சிறையில் வாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். 15 தோழர்களுக்கு மேல் சிறைக்கு உள்ளும் வெளியிலும் பிணமாக ஆகியிருக்கின்றனர்.

இதனால் நாம் சலிப்போ, மனச் சோர்வோ அடைந்து விடவில்லை. சுயநலம் அற்ற உண்மைத் தொண்டர்களுக்கு ஒருபோதும் சோர்வு மனப்பான்மை ஏற்படாது.
இதற்கு அறிகுறியாக. அடுத்து நடக்க இருக்கும் “சுதந்திரத் தனித் தமிழ்நாடு ” போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் ஈடுபட முன்வரவேண்டும். இதற்குத் தயங்கப் போவதில்லை.”

(பாபநாசம் தாலுகா, கோவிந்தக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய உரை) – ‘விடுதலை’ 15.06.1959

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

பகுத்தறிவு வார ஏடு

 Published August 26, 2023, விடுதலை நாளேடு

தந்தை பெரியார் அவர்கள் கடந்த 99 ஆண்டுகளுக்கு முன்பு “பகுத்தறிவு” வார இதழினை 26.8.1934இல் வெளியிட்டார். “குடிஅரசு” ஏட்டிற்கு மாற்றாக வெளியிடப்பட்ட “புரட்சி” ஏடு மூன்று முறை அரசின் அடக்கு முறைக்கு உட்பட்டு அபராதம் கட்டி தொடர்ந்து வெளிவர முடியாத நிலைக்கு சென்றது. “பகுத்தறிவு” என்னும் பேரால் அதே வடிவமைப்புடன் ஒரு வார ஏட்டினை பெரியார் வெளியிட்டார்.

சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லித் தீர வேண்டுமானால் “பகுத்தறிவு” தோன்றலானது, இன்றைய உலக வழக்கில் இருந்து வரும் காரியங்களில் பெரும்பான்மை மக்களால் முதன்மையானதாகவும் இன்றியமையாதனவாகவும் கருதப்படும்.

“எங்கும் நிறைந்த

இறைவனை” வாழ்த்தவோ

“எல்லாம் வல் மன்னனை

வாழ்த்தவோ,

“யாதினும் மேம்பட்ட

வேதியனை” வணங்கவோ

“ஏதும் செய்ய வல்ல செல்வவானை”

வாழிய செப்பவோ கருதி அல்ல” வென்பதேயாகும்.

மேலும் மனித சமூகத்தில் மவுட்டியத்தால் ஏற்பட்ட துரபிமானங்களாகிய கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும் ஒற்றுமையையும் பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும் சொல்லுவோம்.

இத்தொண்டாற்றுவதில் “பகுத்தறிவு” வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்துக்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழைமைக்கோ, புதுமைக்கோ, அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும், ஆற்றலையுமே துணை கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும். முடிவாய் கூறுமிடத்து “பகுத்தறிவு” மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய, எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வியல் உயிர் வாழாது என்பதேயாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

(பகுத்தறிவு – தலையங்கம் – 26.8.1934)