வெள்ளி, 6 அக்டோபர், 2017

தந்தை பெரியாரின் ஒப்புவமையற்ற உயர்சீடர் அண்ணா!

தந்தை பெரியார் அவர்கள்தான் நம் இனத்தின் மானமீட்பர்; பிறவி இழிவைத் துடைத்தெறிய உழைத்த பிறவிப் போர்வீரர் _ போர்ப்படைத் தலைவர்; அவர் தம் படையின் தன்னிகற்ற, தளபதிகளில் முதன்மையானவர் அறிஞர் அண்ணா அவர்கள்.

அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் தலைசிறந்த மாணாக்கர்களில் ஒருவர் அறிஞர் அண்ணா. தந்தை பெரியார் என்ற அந்தக் குருவிடம் அண்ணா கொண்ட “பக்தி’’ ஈடு இணையற்றது!
அய்யாவிடம் அரசியல் அணுகுமுறையில் மாறுபட்டாலும், அடிப்படைக் கொள்கை, லட்சியங்களில் மாறுபடாத காரணத்தால்தான் 1967இல் அவர் ஆட்சித் தலைவராகத் தேர்வு பெற்றவுடன், நேரே தனது முக்கிய தோழர்களுடன் 200 மைலுக்கு அப்பால் அய்யா இருந்தாலும், இதயத்தில் நெருக்கம் என்பதால் திருச்சிக்கு உடனே சென்று, தனது வெற்றியை அவர்தம் காலடியில் வைத்து, அய்யாவின்  அன்பை, வாழ்த்தைப் பெற்று வரலாறு படைத்தவர் அண்ணா!

சட்டப்பேரவையில் முதல்வர் அண்ணா அவர்கள், “தி.மு.க. அமைச்சரவையே _ அரசே தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்ட ஒன்று’’ என்று பிரகடனப்படுத்தி, தமது நன்றி உணர்வை நானிலத்துக்கு, அறிவித்த நனி நாயகர்!உலக வரலாற்றில் ஒரு சமுதாயப் புரட்சி இயக்கத்தின் கொள்கைகளை அவ்வியக்கத் திலிருந்து அரசியலில் கிளைத்த சீடர்களே சட்டங்களாக்கி, தங்கள் தலைவரின் தோளுக்கு வெற்றி மாலையாகச் சூட்டிப் பெருமை செய்த வரலாறு திராவிடர் இயக்க வரலாற்றின் தனித்தன்மையான சாதனையாகும்!

அய்யா, அண்ணா ஆகியவர்களது வாழ்வுக்குப் பிறகும்கூட அச்சாதனை வரலாறு ஒரு தொடர் வரலாறாகி வருகிறது!

அண்ணா மறைந்தபோது, மிக அருமையாக அவர்தம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்,
“புரந்தார்கண் நீர்மல்கிச் சாகின்பின் சாக்காடு

இரந்து கோள்தக்கது உடைத்து’’      (குறள் 780)

என்பதற்கேற்ப, வழிந்த துயரத்தைத் துடைத்துக் கொண்டு வைக்கம் வீரர் பெரியார், “அண்ணா மறைந்தார், அண்ணா வாழ்க’’ என்ற மிக ஆழமான பொருள் பொதிந்த வீர வணக்கக் கருத்து மலர் வளையத்தை வைத்தார்கள்!

ஆம், அண்ணா என்பவர் ஒரு கொள்கை லட்சியத்தின் உருவகம். அண்ணாவைப் பற்றி பெரியார் கூறுகிறார்:

“அண்ணாவை ‘அறிஞர் அண்ணா’ என்று சொல்லக் காரணம் அவருடைய அறிவின் திறம்தான்.’’

“அண்ணா அவர்கள் சமுதாயத்துறையில் பெரிய மாற்றம் ஏற்படுத்த அவர் கைகொண்டிருக்கும் ஆயுதம் பகுத்தறிவாகும். அதாவது எந்தக் காரியமானாலும் அறிவு என்ன சொல்கின்றது என்று பார்த்துச் சிந்தித்துச் செயல்படுத்துவதாகும்.’’“அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி. கடவுள், மதம், சாத்திரம், சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர். அதனை அவர் காரியத்தில் காட்டினார். எனக்குச் சொல்லவே வெட்கமாக இருக்கின்றது; இருந்தாலும் சொல்கிறேன். “இந்த மந்திரி சபையையே எனக்குக் காணிக்கையாக வைத்திருப்பதாக அவர் சொன்னார்.’’

“அண்ணா மீது உண்மையான அன்பு காட்டுகிறவர்கள் அவரைப் பின்பற்றிப் பகுத்தறிவுப் பாதையில் நடக்க வேண்டும்.’’

“அறிஞர் அண்ணாவின் புகழ் மேலும் மேலும் ஓங்க வேண்டுமானால் அவரது பகுத்தறிவுக் கொள்கையையும், சுயமரியாதை மேம்பாட்டையும் மனதில் நிறுத்திச் செயல்படுவதுதான் அதற்கு வழிவகுக்கும்.’’

அய்யாவிடம் இருந்த காலத்தைத்தான் தன், வாழ்வில் மறக்க முடியாத ‘அந்த வசந்தம்’ என்கிறார் அண்ணா!

1967இல் ஆட்சி அமைத்த பின்புகூட தன் தலைவரை நோக்கி, ‘இங்கிருந்து அரசியலில் முடிந்ததைச் செய்யவா? அல்லது அங்கு தங்களுடனேயே வந்து தொடர்ந்து சமுதாயப் பணி செய்யவா? என்று மனந்திறந்து 

கேட்ட ஒப்புவமையற்ற உயர் சீடர் அறிஞர் அண்ணா!    


                                                                                                    - கி.வீரமணி

-உண்மை இதழ், 1-15.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக