ஞாயிறு, 10 டிசம்பர், 2017

ஜாதிக் கொடுமைகளை ஒழிக்கவே சுயமரியாதை இயக்கம்

-8-1929, குடிஅரசிலிருந்து...

ஆதி திராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக் கூடாதென் கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப் பட்டபோதிலும் அவர்களை இழிவு படுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவ தில்லை. இந்து வென்று சொல்லப்படும் திரு.முனுசாமி என்னும் ஆதிதிராவிடரும் மனிதர்தான். அவர் ஆலயத்தருகில் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டு சாமி செத்துப் போகுமாம். ஆனால், பிறவியில் மிருகமாய்ப் பிறந்ததும் ஜாதியில் நாய் என்று அழைக்கப்படுவதுமான மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டுவிடும்போது ஆறறிவுள்ள மனித னாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் முனுசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும் விட மறுக்கப்படுவது என்ன கொடுமை? இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய் பிறந்துவிட்டார்கள், அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரத்தில் இப்படிச் சொல்லுகிறது. வேதத் தின் கர்ம காண்டத்தில் அப்படிச் சொல்லுகின்றது என்று சாஸ்திரக் குப்பைகளின்மீது பழியைப் போடுவ தோடு, மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதர வாக்கிக் கொள்ளுகின்றார்கள். இவ்வாறு மதத்தின் பேராலும் சமயநூல்கள், சாஸ்திரங்கள், புராணங் களின் பேராலும் செய்யப்படும் கொடுமை களுக்கு அளவில்லை. மற்றும் பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்; கடவுளால் வேதங் களிலும் சாஸ்திரங்களிலும் எழுதி வைக்கப்பட்டு விட்டது. அதைப்பற்றி அதிகமாகக் கேட்காதீர்கள் என்று கொடுமைகளுக்குச் சாக்குச் சொல்லிக் கொண்டு, ஆயி ரக்கணக்கான வருடங்களாய் மக்களில் சில சார்பாரைப் பெரும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றது.

ஆயிரக்கணக்கான வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமுகம் கொடுமைக் குட்படுத்தப்பட்டு வரு கின்றது. ஆதிதிராவிடர் களாகிய உங்களை விட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப் படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை. எங்களை விட உயர்ந்த ஜாதியார் என்பவர்கள் போகுமிடத்திற்கு எங்களை விடக்கூடாதென்ற ஏற்பாடில்லாமல் போக வில்லை. உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டும் என்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென் கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப்பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்கள் என்று இழி பெயர்களு மிட்டழைக்கிறார்கள். இக்கேவலச் செயலுக்குக் கடவு ளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென் கிறார்கள். நம் மக்களுள் அநேகர் எவர் எப்படிச் செய்தா லென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும் வித்தியாசங்களையும் ஒழிக்கப்பாடுபட்ட போதிலும் அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கித் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றனர். ஒவ்வொருவரும் நமக்கென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்போமென்று இழிவுக்கிடங்கொடுத்துக் கொண்டு போகும்வரை சமுகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்க மேற்படாது என்பது திண்ணம்கேளுங்கள்!

ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலை நாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சுயமரியாதை .இயக்கத்தைக் குறித்து அந்த விரோதிகள் என்ன சொல்லு கின்றார்கள் என்பதைக் குறித்து நமது நண்பர் பால குருசிவம் சிறிது நேரத்திற்குமுன் தெளிவாய் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அவர் இவ்வியக்கத்தில் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மையாவது வந்திருக்கின்றதெனக் கூறியது முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதைக்காரர்கள் கோயில் குளம், சாமி இல்லை என்கிறார்கள்; மதமில்லை என்கின்றார்கள்;  இவர்கள் நாஸ்திகர்கள்; இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய்விடும் போலிருக்கிறது, சுவாமி போய்விடும் போலிருக்கிறது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூக்குரலிடு கின்றார்கள். பலர் கிளம்பி கூலிகளுக்கும் காலி களுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப் பிரச்சாரம் செய்வதற்காகத் தூண்டி விட்டு மிருக்கிறார்கள்.

அவர்கள் சூழ்ச்சிகளையும் கூலிப் பிரச்சார மோசத்தை யுமுணராது அவர்கள் பிதற்றல் களை நம்பி நமது பாமர மக்கள் ஏமாறி அவர்கள் சொல்லுவது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லு கிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கமென்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்துகின்றேன்.

உண்மையில் ஆஸ்தீக, நாஸ்தீகம் என்பவைகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. உலகத்தில் அவன் உயர்ந் தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமுக முன்னேற்றத்திற்கும் விடு தலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் தயாராயிருக் கிறோம், மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால் அது எந்த மதமாய் இருந்தாலும் அதனை ஒழித்துத்தானாகவேண்டும் (கேளுங்கள்) கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்? அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமை களுக்கு ஆதரவாயும் அக்கிர மங்களுக்கு அனுகூலமாயுமிருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம். சும்மா கிடக்கும் கடவு ளையும் மதத்தையும், சாஸ்திரத்தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.

கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கடவுளையும் ஒழிப்பதற்கு பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்த வனாயும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கேவலமாகத் தானிருந்தாக வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்த கடவுளும் மதமும் போகவேண்டியதுதான்.

உதிர்ந்த மலர்கள்
18.05.1930 - குடிஅரசிலிருந்து....

1. கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.

2. கடவுள் ஒருவர் உண்டு, அவர் உலகத் தையும் அதிலுள்ள வஸ்த்துக்களையும் உண் டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத் தையும்தான் இச்சையால், புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங் களில் பிறரைத் தூஷித்துக்கொண்டு திரிபவன் அயோக் கியன்.

பார்ப்பனப் பிரச்சாரம்

3. ஆழ்வார்கள் கதைகளும், நாயன் மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரசாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப் பட்டதாகும்.

4. புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சி யென்று அறிந்து கொள்ளாமல் அவை களையெல்லாம் உண் மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர் களாவார்கள்.

5. வயிறுவளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மதஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே, பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதி களாவார்கள்.

6. எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.

7. நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள்போல் வேஷம் போட்டுக்கொண்டு நம்மிடம் வந்து நானும் சுயமரியாதைக்காரன்தான் என்னிடம் மூடப் பழக்கவழக்கம் கிடையாது, புராணங் களெல்லாம் பொய் என்றும், சமயங்களெல்லாம் ஆபாசம் என்றும் பேசி மேடையில் இடம் சம் பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப் புக்கு புராண பிரசாரத்தையே செய்பவர்களாகிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால் பண்டிதர்களை கிட்டசேர்க்கும் விஷ யத்தில் வெகு ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும்.

நமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்

02.09.1934 - பகுத்தறிவிலிருந்து..

நமது நாட்டில் பெண்கள் சமையலுக்கும், படுக் கைக்கும் மாத்திரம் பயன்படக் கூடியவர்கள் என்கின்ற எண்ணம் வைதிகர்களுக்குள்ளும், வயோதிகர்களுக் குள்ளும் இருந்து வருவதோடு பலப் பெண்களும் அப்படியே நினைத்துக் கொண்டு மிருக்கிறார்கள். சில பெண்கள் இந்த இரண்டு வேலைகளுக்கும் இடையூறு இல்லாமல்  ஏதாவது வேலை கிடைத்தால் மாத்திரம் செய்யலாமே தவிர மற்றபடி பெண்கள் ஆண்களைப் போல் வேலை பார்ப்பது பாவமென்றும் கருதி இருக்கிறார்கள்.

சில பெண்கள் சட்டசபையில் இருந்தவர்களும், இருக்க பாக்கியம் பெற்றவர்களும் கூட பெண்களுக்கு கும்மி, கோலாட்டம், கோலம், தையலில் பூப்போடுதல் ஆகிய வேலைகள் சம்பந்தமான கல்வி கற்றால் போதும் என்றும் சொல்லிக்கொண்டு இருக் கிறார்கள்.

நம்முடைய தேசத்து தேசியத்தலைவர்களும், மகாத்மாக்கள் என்போர்களுக்கும், பெண்கள் சந்திரமதி போலும், சீதை போலும், நளாயினி போலும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தகுந்த பிரசாரமும் செய்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட கஷ்ட மான நிலையில் நம் தென்இந்தியாவில் சென்னையில் பெண்கள் பி.ஏ., பி.எல்., படித்து வக்கீல்களாகி, அட்வகேட்டுகளும் ஆகி இருக்கின்றார்கள் என்றால் பெண்களை எல்லாத் துறையிலும் ஆண்களைப் போலவே பார்க்கவேண்டும் என்கிற ஆசை உள்ளவர் களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் என்பதை நாம் எழுதிக் காட்ட வேண்டியதில்லை. அப்பெண் வக்கீல்களில் இருவர்கள் தோழர் எம்.எ. கிருஷ்ணம்மாள் எம்.ஏ., எதுகிரியம்மாள் ஆகியவர் களாவார்கள்.

இவர்களது மூத்த சகோதரியாரும் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் பரிட்சையில் தேறி அட்வ கேட்டாகி இருக்கிறார்கள்.

சில வருஷங்களுக்கு முன் மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜி தோழர் தேவதாஸ் அவர்கள் குமார்த்தியும் வக்கீல் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி கோயமுத்தூரில் தொழில் நடத்தி வருகிறார்கள். தங்களைப் பெண்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு வெட்க மில்லாமல் கும்மியும், கோலாட்டமும், கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களே அப்படிப்பட்ட பெண்களுக்கு இனியாவது புத்திவருமா? என்று நினைக்கின்றோம்.
- விடுதலை நாளேடு,9.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக