ஞாயிறு, 7 ஜனவரி, 2018

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்கான அவதூறுகளைத் தொடர்ந்து ஊடகங்கள் வழி பரப்புகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் சில முற்போக்குச் சிந்தனையாளர்கள் கூட குழப்பம் அடைகிறார்கள். இப்படி எதிரிகள் பரப்பும் பொய்களில் ஒன்றுதான் மேற்கண்ட கேள்வி! எனவே, இதுசார்ந்த சில உண்மைகளைத் தொகுத்துத் தருகிறேன். 1. அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் கொள்கைகளை, சாதனைகளை, வரலாற்றை எல்லோரும் அறியும்படி நான் எழுதிய நூல் (மறைக்கப்பட்ட மாமனிர்கள்) திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டு, தொடர்ந்து நாடு முழுக்க விற்பனை செய்யப்படுகிறது. 2. இவர்களைப் பற்றி நான் பேசிய உரை பெரியார் வலைத்தளம் மூலம் உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. 3. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், "மயிலாடன்" என்ற பெயரில், விடுதலையில் "ஒற்றைப்பத்தி” என்ற பகுதியில் நிறைய எழுதியுள்ளார். அவையும் தொகுக்கப்பட்டு நூலாகத் திராவிடர் கழகத்தால் விற்பனை செய்யப்படுகிறது. 4. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவிடம் பராமரிப்பின்றி இருந்ததைப் படம் எடுத்து "உண்மை" இதழில் எழுதி, அரசு அதைச் சீர் செய்ய ஏற்பாடு செய்தது திராவிடர் கழகம். 5. உண்மை, விடுதலையில் இவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் செய்திகள் வெளியிட்டு அவர்களை மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது. 6. பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் இவர்கள் இருவருக்கும் விழாக்கள் எடுத்து, அந்த விழாக்களில் சிறப்புப் பேச்சாளர்கள் மூலம் அவர்களது கொள்கைகளும், பெருமைகளும் பரப்பப்படுகின்றன. ஒரு நிகழ்வில் அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தியை அழைத்து வந்து சிறப்பு செய்தது திராவிடர் கழகம். அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் கொள்கைகள் எப்போதும் பிரச்சாரம் செய்யப்படும். நன்றி! தரவு: மஞ்சை வசந்தன், பெரியார் திடல், சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக