புதன், 18 ஏப்ரல், 2018

‘ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் அழுகின்றன!’


கி.தளபதிராஜ்



தந்தை பெரியார் மீது தமிழறிஞர்களின் மதிப்பீடு என்ன? தமிழ் மீது அந்த அறிஞர்களுக்கு இல்லாத அக்கறை இந்த வந்தேறிகளுக்கு பொங்கி வழிவது ஏன்?

சின்னசங்கரன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத போது கண்டிக்காத இந்தப் பேர்வழிகள் மொழி பற்றி பேசலாமா? தமிழ் மொழி பற்றி பெரியார் கொண்ட பார்வை என்ன?

“தமிழனுக்கென்று ஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் இல்லை. அதாவது  ஆரியர் வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம், விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது மிக்க அருமையாகத் தானிருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்திற்கு முந்தியதாக இருக்கலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவு என்ன பலனைக் கொடுத்திருக்கிறது?

விஞ்ஞானத்திற்குச் சிறிதும் பயன்படத்தக்கதாகவும் இல்லை. அறிவுக்குத் தக்கபடி பலனளிக்க முடியவில்லை. தமிழ் மொழி ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அதைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் இன்னும் இந்த விஞ்ஞான பரவல் காலத்திலும் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மூடநம்பிக்கை உள்ளவனாகவும், மான உணர்ச்சி என்பது 100க்கு 75 பாகம் இல்லாதவனாகவும் இருந்து வருகிறான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் மொழியானது மொழியிலாகட்டும், பொருளிலாகட்டும் வேறு முறையிலாகட்டும் எவ்வித முன்னேற்றமும், மாறுதலும் அடையவில்லை.

உலகத்திலேயே சிறந்த நீதி இலக்கியம் குறள் தமிழில் உள்ளது. அது துருப்பிடித்துவிட்டது. என் அனுபவத்துக்கு எட்டிய வகையில் உலகத்தில் சிறந்த துறை அறிவு, தமிழிலுள்ள கணக்கு முறை அதாவது இளஞ்சுவடி என்றும் எண் கணக்கு என்றும் சொல்லக்கூடிய இலக்க முறை குப்பைக்கே போய்விட்டது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் இருந்து தமிழன் தெரிந்துகொள்ளத் தக்கதோ, தமிழனுக்குப் பயன்படக் கூடியதோ எதுவும் தென்படவில்லை. தமிழும், தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன.

அரசியல், விஞ்ஞானம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது _- பயன்படக் கூடியது? என்று என்னைக் கேட்டால் எனக்கு ஆங்கில மொழிதான் சிறந்தது எனத் தோன்றுகிறது.’’

-_ தந்தை பெரியார் (நூல்:மொழியும் அறிவும்)

“தமிழ்நாட்டில் நம் தன்மையையும் பார்ப்பானின் தன்மையையும் பார்த்தோமானால் இருவர் வாழ்வின் பேத அளவு விளங்குவதோடு, அந்தப் பேதத்துக்குப் பெருங்காரணம் வேறு எது எதுவோ இருந்தாலும் பெரிதும் அது ஆங்கிலம் படிக்காதது என்பது விளங்கும்.

இன்றைய தினம் ஆட்சி நம்முடையது என்று சொல்லப்பட்டாலும், இதில் இங்கிலீஷ் படித்தாலொழிய அந்த இங்கிலீஷிலும் திறமையான படிப்பாளி என்கிற தகுதி இருந்தால் ஒழிய ஆட்சியில் பங்குபெற முடியாது என்கிற நிலை இருந்துவருவதை யாராவது மறுக்க முடியுமா?

மற்றும் இன்றைய உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் இங்கிலீஷைத் தவிர வேறு எந்த மொழியிலாவது நாடோ மனிதனோ முன்னேறுவதற்கு ஏற்ப வசதியோ வாய்ப்போ இருக்கிறதா? என்று கேட்கிறேன்.

சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வறட்டுக்கத்தல் கத்துகிற எந்தப் பார்ப்பானாவது இங்கிலீஷ் வேண்டாம் என்று தள்ளுகின்றனரா? சொல்கின்றனரா? அப்படிச் சொல்கின்றபடி சங்கராச்சாரிகள், மகான்கள் கூட்டத்திலாவது யாராவது ஒருவர் இருக்கின்றார்களா?

இப்போது நாம் உலக அந்தஸ்தில் மிகமிகத் தாழ்வான நிலையில் இருக்கிறோம். மனிதன் இன்றைய ஆசாபாசங்களுக்கு, அனுபவங்களுக்கு இன்றியமையாத தேவைகளுக்கு மற்ற நாட்டானோடு தலைநிமிர்ந்து நடப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது?

மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தனையோ துறைகளின் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு நமக்குத் தக்க அறிவும், அனுபவமும் செய்முறையும் வேண்டுமானால் நமது தமிழ்மொழியில் என்ன இருக்கிறது?’’

என்று கேட்ட பெரியார்தான் ஆங்கில எழுத்துகளையே தமிழ் எழுத்துக்குப் பதிலாக நெடுங்கணக்காக, அகர வரிசையில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

தமிழை ஆங்கில வடிவில் எழுதலாம் என்று கருத்துத் தெரிவித்த பெரியார்தான் எந்தத் தமிழ்த் தேசிய திலகங்களும் செய்யாத தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தனது ‘குடிஅரசு’ பத்திரிகையில் 1934ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்தார்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான பெரியாரின் உரையைச் சற்று உற்றுநோக்கினாலே பெரியாரைக் கொச்சைப்படுத்த முயலும்  பித்தலாட்டம் தோலுரிந்து போகும்.

“சமஸ்கிருதத்தைப் புகுத்தவே இந்தியைக் கொண்டு வருகிறேன்” என்றார் பிரதமர் ராஜாஜி. அன்று 1938இல் தலைமை தாங்கி இந்தியை விரட்டியது யார்?

ஸ்ரீ - திரு ஆனது எப்படி?

அக்ராசனாதிபதி - தலைவர் ஆனதும், நமஸ்காரம் - வணக்கம் ஆனதும், 1938 இந்தி எதிர்ப்பின் விளைவு அல்லவா?

தொடர்வண்டி நிலையங்களில் ஊர்ப் பெயர் வரிசையில் தமிழ் முதலிடத்தை இன்று பெற்றதற்குப் போராடியது யார்?

தமிழ்ப் பெயர்கள் தமிழர் வீட்டுப் பிள்ளைகளுக்குச் சூட்டப்பட அடி எடுத்துக் கொடுத்தவர் யார்?

பெரியார் அல்லவா?

“தமிழ்மொழி தாய்மொழியாக உள்ள இந்த நாட்டில் இந்தியைப் புகுத்தக்கூடாது என்று கிளர்ச்சி செய்தேன் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும்விட தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல், மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையே உள்ள இழிவு நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழி அமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. நம்நாட்டுச் சீதோஷ்ண நிலைமையைப் பொருத்தும், கருத்துகளின் செழுமையைப் பொருத்தும் நமக்கு தமிழ்தான் உயர்ந்த மொழியாகும்.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க முயற்சிகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்மொழி வளர்ச்சிக்காக அதில் செய்யப்பட வேண்டிய சில சீர்திருத்தங்கள் குறித்து எனது கருத்துகளைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.

தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும். மொழி என்பது உலகப் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.’’

_ தந்தை பெரியார் (நூல்: மொழி-எழுத்து)

தமிழர் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க நினைப்பது தமிழின் மீது ஏற்பட்ட வெறுப்பாலோ அல்லது ஆங்கிலத்தின் மீதான பற்றாலோ அல்ல. தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்கிற ஒரே வேட்கையே அன்றி அதற்கு வேறு காரணம் இருக்க இயலுமா?

பெரியாரின் மேற்கண்ட பேச்சைக் காண்போருக்கு ஒரு பெற்றோர் தன் குழந்தை மீது காட்டும் பரிவும், அக்கறையும் எப்படிப்பட்டதோ அப்படியே தமிழினத்தை முன்னேற்ற வேண்டிய அக்கறையில் அமைந்தவைதான் பெரியாரின் செயல்பாடுகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

- உண்மை இதழ், 1-15.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக