வியாழன், 19 ஏப்ரல், 2018

சுயமரியாதை இயக்கச் சாதனை

குடிஅரசு தரும் அரிய தகவல்கள்-10

சுயமரியாதை இயக்கச் சாதனை

  தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு பார்ப்பனர் ஒருவரால் 1944இல் எழுதப்பட்ட மொட்டைக் கடிதமும், அதையொட்டிய தோழர் மாப்பிள்ளையன் கடிதமும், அந்நாளில் இயக்கம் ஏற்படுத்திய எதிரொலி எத்தகையது என்பதை தெளிவாக விளக்குவதாக உள்ளது. சுவைமிக்க இவ்விரு பழைய கடிதங்களும் தந்தை பெரியார் அவர்கள் வசமிருந்தவைகளிலிருந்து இங்கு வெளியிடப்படுகிறது.

ராமசாமி நாயக்கருக்கு பட்டுக்கோட்டை வாசி எழுதிக் கொண்டது. தாங்கள் 12.3.1944இல் இவ்வூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தாங்கள் காலித்தனமான செய்கையில் இறங்கி வேலை செய்யுமாறு இவ்வூர் சு.ம.காரர்களை ஏவிவிட்டு விட்டீர்கள். அவர்கள், தாங்கள் போனது முதல் பார்ப்பனர்களைச் செய்யும் இம்சை சொல்லி முடியாது. இதில் எழுதியும் மாளாது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு சுமார் 500பேர்கள் கொண்ட கூட்டம் அக்கிரகாரத்தில் புகுந்து குறிப்பிட்ட பெரிய மனுசர் வீட்டின் முன் நின்றுகொண்டு அவர்களைப் பேசிய வார்த்தை சொல்லி முடியாது. பிரபல வக்கீல் சாமிநாத அய்யரை அன்று இந்தக் கூட்டம் கண்டிருந்தால் கொலை செய்திருப்பார்கள். சில பிராமணர்கள் போலீஸ் அதிகாரியிடம் முறை யிட்டதற்கு அவர்களும் தலையிடமாட்டேன் என்கிறார்கள். இப்படியே தினம் நடந்து கொண்டு இருக்கிறது. பிராமணர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்கு சில கள்ளர்களை பணம் கொடுத்து இவ்வூரில் இருக்கும் சங்கராச்சாரியார் மடத்திற்கு காவலாக வைத்திருந்தார்கள். அதற்காக ஏன் அவர்களை வைத்தாய்? வைத்து எங்கள் தமிழர்களை எங்கள் மீதே ஏவி விட்டாய் என்று மிரட்டுகிறார்கள். நீங்கள், இங்கே இருக்கக் கூடாது என்றால், இங்கிருக்கும் பிராமணர்கள் எங்கு போவது? எங்கள் நாட்டில் உனக்கென்ன வேலை என்றால் அவர்கள் எங்கு போவது? இது அடுக்குமா? மேலும் ஸ்ரீராமநவமி அன்று சில பறையர்களை தப்புடன் மடத்திற்கு அழைத்து வந்து வைத்துக்கொண்டு காலித்தனம் செய்கிறார்கள்.

தாங்கள் இது விஷயத்தை நேரில் வந்து பார்த்தாவது அல்லது கடிதம் மூலமாவது இவ்வூர் சு.ம. சங்கத்தைக் கண்டித்து வைத்தால் தான் நன்மையாக இருக்கும். அல்லாவிட்டால் இன்னும் சில தினங்களுக்குள் கண்டிப்பாய் கொலை நடந்துவிடும் போலிருக்கிறது. நேற்று ஸ்ரீமான் நாடிமுத்துப்பிள்ளையிடம் ஒரு தூது கோஷ்டி போனோம். அவரிடம் சொன்னதற்கு, நான் ஒன்றும் தலையிட முடியாது. வேண்டு மானால் ராமசாமி நாயக்கரைஅழைத்துவந்து ராஜி செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார். ஆகையால் தயவுகூர்ந்து இவ்விடம் வந்தால் நாங்கள் தைரியமாக தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்து எங்களுக்குள்ள குறைகளைச் சொல்லி தங்களுக்குண்டாகும் சில விளக்கங்களையும் கொடுத்துவிடுகிறோம். அல்லது தங்கள் காரியதரிசியாம் அண்ணாதுரை அவர்களையாவது அனுப்பி வைக்கவும்.

8.4.1944இல் இவ்வூர் நாடியம்மன் உற்சவத்திற்காக மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் கச்சேரி செய்ய வந்தார். அப்பொழுது ஸ்ரீமான் நாடிமுத்துப்பிள்ளை, போலீஸ் ஜில்லா சூப்பிரிண்டண்ட், டிப்டி கலெக்டர், ஸ்பெஷல் கலெக்டர், சப்மாஜிஸ்டிரேட், டிஸ்டிரிக்ட் முன்சீப் இன்னும் இவ்வூர் பிரபலஸ்தர்களும் வீற்றிருந்தார்கள். அப்பொழுது இவ்வூர் சு.ம.சங்க காரியதரிசி என்று நினைக்கிறேன். மாப்பிள்ளையன் தமிழில்தான் பாடவேண்டும் என்று சொன்னார். அவர் தமிழில் தெரியாது என்றார். மீண்டும் பாடினார். நிறுத்து என்று மறுபடியும் சொன்னார். உடனே நாடிமுத்துப் பிள்ளை மாப்பிள்ளையனை வெளியே பிடித்துத் தள்ளச்சொன்னார். நாடிமுத்துப் பிள்ளையையைப பார்த்து மாப்பிள்ளையன் சொல்கிறார், கொலை விழும் ஜாக்கிரதை என்று. இதுதானா தங்களின் கட்சிக் கொள்கை? போலீஸ் சூப்பிரிண்டண்டும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறார்.

உடனே டிப்டி கலெக்டர், தமிழில் பாடும் என்று பாடகரைச் சொன்னார். பிறகு பாடினார் தமிழில். அதில் வெற்றிதான். அதுமாதிரி காரியங்களில் தலையிடலாம். முறையுங்கூட. பிராமணர்கள் இருக்கக் கூடாது என்றால் அவர்கள் எங்கு போவது? முட்டாள்தனமான கிளர்ச்சி செய்கிறார்கள். இதற்காவன செய்வதே தலைவர் கடமை. எங்கே பார்ப்போம். -_ 15.4.1944

சுயமரியாதை இயக்கப் பொன்விழா மலர்-1975, பக்கம்: 92

(தொடரும்...)

- உண்மை இதழ்,16-31.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக