ஞாயிறு, 12 மார்ச், 2023

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

 

 ‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து 

என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்!

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர்  நலச் சங்கத்தின் 

30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

சென்னை, ஜன.17 ‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘சமூகநீதிப் போராளி’’ விருது வழங்கும் விழா

கடந்த 8.1.2023 அன்று தியாகராயர் நகரில், உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதியில், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா - யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது  வழங்கும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடிய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம்

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க  விழா விற்குத் தலைமையேற்றுள்ள தோழர்க கருணாநிதி, தொடக்கத்திலிருந்து சிறப்பாகப் போராடி, வாதாடி யதால், பிறகு ஒரு நல்ல அளவிற்கு அது கட்டுக் கோப்பான ஓர் அமைப்பாக வளர்ந்து இருக்கிறது. அது மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஓர் அமைப்பாக இருக்கிறது என்றால், அது முதல் வரிசையில், முதலிடத்தில் இருக்கக்கூடிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சார்ந்த பெருமைக்குரிய எங்களுடைய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கமாகும். 

முதலாவது ஆண்டு விழாவிலும் - 30 ஆவது ஆண்டுவிழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு

எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அளவிற்கு இதை ஆக்கிய பெருமை அருமைத் தோழர் கருணாநிதி (இவ்வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற) அவர்களையும், அவருக்கு ஒத்துழைப்புத் தரக்கூடிய உங்களைப் போன்ற ஓர் அருமையான, தோழர்களையும் சேர்ந்த தாகும். அவருக்கு நல்ல வகையில் ஆதரவு தரக் கூடியவர்கள் - ஒருங்கிணைந்து ஒரு நல்ல கூட்டுக் குடும்பம் - நல்ல சிறப்பான முறையில் இருப்பதைப்போல, எடுத்துக்காட்டான ஓர் அமைப்பாக இது திகழ்கின்றது. இந்த அமைப்பின் 30 ஆம் ஆண்டு விழாவில், - முதலாவது ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு, 30 ஆவது ஆண்டுவிழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருப்பது - அதை எனக்கு அளித் திருப்பதற்காக நானும் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஏனென்றால், நிறைய வங்கிகளில் எனக்குக் கணக்கு கிடையாது. வங்கித் தோழர்களை இப்படிப்போன்ற விழாவில்தான் பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதிலும் இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்ன வென்றால், இந்த அருமையான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதின்மூலம் முதலில் அனைவருக்கும் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மகிழ்ச்சி கலந்த வணக்கம்.

சமூகநீதிக்காகப் போராடக் கூடிய களப் பணியாளர்கள்

வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் பொதுச் செயலாளர் சிவா நடராசன் அவர்களே, 

தலைமையேற்று இருக்கக்கூடிய தோழர் கருணாநிதி அவர்கள், இங்கே மட்டுமல்ல, எல்லா வங்கிகளிலும் சரி, இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கன ஓர் அமைப்பு, ஒடுக்கப்பட்டவர்களுடைய அமைப்பு எது வாக இருந்தாலும், அவற்றில் பங்கெடுத்து, சமூகநீதிக் காகப் போராடக் கூடிய களப் பணியாளர், களத்திலே இருக்கக்கூடியவர் நல்ல அளவிற்குக் கொள்கையாளர் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பணியாற்றிவருபவர். தமிழ்நாடு அரசே அவருடைய தொண்டை மதித்த கார ணத்தினால்தான், இன்றைக்குத் தமிழ்நாடு அரசினுடைய மிகப்பெரிய ஒரு பொறுப்பில், சமூகநீதி கண்காணிப்புக் குழுவில் இருக்கக்கூடிய அளவிற்குக் கருணாநிதி இடம்பெற்றிருக்கின்றார் என்றால், அது அவருக்கு மட்டும் பெருமையல்ல; இந்த வங்கிக்கே பெருமை - இந்த வங்கியினுடைய அமைப்பிற்கே பெருமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் தமிழ்நாட்டினுடய சிறப்பை அவருக்குத் தேடித் தந்திருக்கின்றீர்கள்.

அதற்கு அடித்தளம் இந்த அமைப்பு. இந்த அமைப் பினுடைய அருமைத் தலைவர் அவர்களே,

ஏனைய அருமைத் தோழர்களே, ‘விடுதலை’யின் நிர்வாக ஆசிரியரும், திராவிடர் கழகத் துணைத் தலை வருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

மற்றும் அருமை நண்பர்களே, உங்கள் எல்லோருக் கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டப் பசி தீரவில்லை!

நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள்; வயிற்றுப் பசி உங்களுக்கு; ஆனால், இந்த நாட்டில் போராட்டத்தின் பலன் இன்னமும் எதுவும் கிடைக்கவில்லையே, என்று ‘அந்தப் பசி’ தீராத அளவில் இருக்கக்கூடிய - அந்தப் பசிக்கு உணவு கிடைக்காதா? என்பதற்காக நாங்கள் ஒரு பக்கத்திலே போராடிக் கொண்டிருக்கின்ற காரணத் தினால், நாம் எல்லோரும் சேர்ந்து போராடிக் கொண் டிருக்கின்ற காரணத்தினாலும் - வயிற்றுப் பசியைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு - இந்த போராட்டப் பசி தீருவதற்கு, பசி ஆறுவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி நாம் யோசிப்பதற்காகத்தான் - இந்த விழா!

அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதலில் உரையைத் தொடங்குவதற்குமுன் என்னுடைய அன்பான நன்றியை மிகுந்த பணிவன்போடு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பால், நட்புறவால் என்னை  திணற வைத்துவிட்டீர்கள்

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை; 90 வயது என்பதை எனக்கு நினைவூட்டி - எனக்கு வயதாகிவிட்டதை எனக்கு அடிக்கடி நினைவூட்டி - அதற்காக தனி சிறப்பு செய்தீர்கள். இங்கே ஒவ்வொருவரும் உங்களுடைய அன்பால், நட்புறவால் என்னை  திணற வைத்து விட்டீர்கள்; அதற்காக என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக, இவையெல்லாம் எங்களுக்கு மிகவும் புதுமையானது, எதிர்பாராதது. இதுவரை நாங்கள் இங்கே கொடுத்ததுபோன்று ‘பொக்கே’ வாங்கியதில்லை. கல்லடி யையும், சொல்லடியையும்தான் இதுவரையில் வாங்கியிருக்கின்றோம். 

இங்கே வரும்பொழுது எனக்கே கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றியது; நாம் வேறொரு உலகத்தில் இருக்கின்றோமா என்று சொல்லக்கூடிய அளவில், அதிலும் அறிவார்ந்த ஓர் அரங்கத்தில், இப்படிப்பட்ட தோழர்கள், இருபால் தோழர்கள்,  தோழர்களிடமிருந்தும் வாழ்த்துப் பெற்றிருக்கின்றோம்.

நீங்கள் என்னை கொஞ்சம்  தட்டிக் கொடுக்கிறீர்கள்

அதைவிட மகிழ்ச்சி என்னவென்றால், வங்கியில் சமூகநீதி செயல்பட்டது; அந்த சமூகநீதி செயல்படுவதற்கு இன்னும் தீவிரமாக களத்தில் இறங்கக்கூடிய உறுதிப்பாடு, ஈடுபாடு இந்த இரண்டுமே பெற்றிருக்கக் கூடியவர்களிட மிருந்து பாராட்டை நான் பெறுகிறேன் என்று சொல்லும் பொழுது, இன்னும் அதிகமாக வேலை செய்; உங்களிட மிருந்து இன்னும் அதிகமான பணியை எதிர்பார்க்கிறோம் என்று சொல்வதற்கு, நீங்கள் என்னை கொஞ்சம் தட்டிக் கொடுக்கிறீர்கள் என்றுதான் அதற்குப் பொருள்.

அதைவிட எனக்கு இன்னொரு மகிழ்ச்சி - வங்கி களில் பணியாற்றும் மகளிர் தோழர்கள் அனைவரும் சேர்ந்து மேடைக்கு வந்தார்கள்; இவ்வளவு மகளிர் வங்கியில் பணியாற்றுவதே பெரியாருக்குக் கிடைத்த வெற்றி - சமூகநீதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! பூரிப்படைகிறோம்.

மிகப்பெரிய சமூகப் புரட்சி - ரத்தம் சிந்தாதப் புரட்சி- ஆயுதம் ஏந்தாத புரட்சி

பிற்படுத்தப்பட்டோரில், ஆண்களே முன்னேறாத நிலையில், பெண்களே படிக்கக் கூடாது என்று இருந்த காலத்தில், ‘சரசுவதி’ என்று பெயர் வைத்திருக்கின்ற பாட்டிக்குக்கூட எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால், ‘பேத்தி சரசுவதி’ இன்றைக்கு வங்கி அதிகாரியாக, மற்ற மற்ற துறைகளிலும் இருக்கிறார்கள் என்று சொன்னால், இது மிகப்பெரிய சமூகப் புரட்சி - ரத்தம் சிந்தாதப் புரட்சி- ஆயுதம் ஏந்தாத புரட்சி. எப்படி ஏற்பட்டது?

அதேநேரத்தில், திராவிட இயக்கம் இந்த நாட்டில் அரும்பாடுபட்டு உருவாக்கிய இது ஓர் அற்புதமான சிறப்பான புரட்சியாகும்.

அந்த வகையில், நீங்கள் எனக்கு இங்கே கொடுத்த பட்டயத்தைவிட மிக முக்கியம் - இத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள்; இத்தனை மகளிர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வங்கியிலே பணிபுரிகிறார்கள்; அதி காரிகளாக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது, இதைவிட பெரிய பரிசு, இதைவிட மிகப்பெரிய சிறப்பு எங்களுக்கு வேறு கிடையாது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து, இந்த எண்ணிக்கை பெருகவேண்டும்.

நம்முடைய உரிமைகளை நாம் பெறுவதற்காகக் கேட்டுக்கொள்கிறோம்

அதேபோல, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகள் பெறப்படவேண்டும்; மற்றவர்களுடைய உரிமைகளை நாம் பறிப்பதற்காக இதை நாம் கேட்கவில்லை; நம் முடைய உரிமைகளை நாம் பெறுவதற்காகக் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனென்றால், சமூகநீதியினுடைய தத்துவத்தை பலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதுதான் சமூகநீதியே தவிர, மற்றவர்களுக்குக் கிடையாது என்று சொல்வது அல்ல.

ஆனால், அனைவருக்கும் அனைத்தும் கூடாது எல்லாம் எங்களுக்கே என்று சொல்வதுதான் சமூக அநீதி.

அந்த சமூக அநீதியை எதிர்த்து நிற்பதுதான் சமூகநீதி. எப்பொழுதுமே அநீதி நடக்கும்பொழுதுதான், நீதி கேட்கவேண்டிய அவசியமே வரும்.

அந்த வகையில்தான், நீதி கேட்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இங்கே 30 ஆம் ஆண்டு விழாவில், அவர் சொன்னதுபோன்று, ஓர் அமைப்பை 30 ஆண்டு கள் கட்டி காத்து, மேலே மேலே அது வளர்ந்துகொண்டே செல்வது என்பது மிகுந்த உற்சாகத்தைத் தரக்கூடிய ஒன்றாகும்.

தீர்மானங்கள் மிக முக்கியமானவை

இங்கே நிறைவேற்றப்பட்டு இருக்கக் கூடிய தீர் மானங்கள் மிக முக்கியமானவையாகும். ஏழு தீர்மானங் கள் பொதுவானவை;  வங்கி நிர்வாகத்திற்குக் கோரிக் கைகளை 6 தீர்மானங்களாக வைத்திருக்கிறீர்கள். 

வங்கி நிர்வாகக் கோரிக்கைகள் உங்களைப் பொறுத்து தெளிவாக வந்திருக்கிறது என்றாலும், எல் லோருக்கும் தேவை - நாட்டிற்கே தேவையானதை ஏழு கோரிக்கையாக வைத்திருக்கிறீர்கள்.

(தொடரும்)

சமூகநீதி - நீதிக்காக நீங்கள் போராடுங்கள்; வீதியில் நின்று நாங்கள் போராடுகிறோம்!

 யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர்  நலச் சங்கத்தின் 

30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

சென்னை, ஜன.18 சமூகநீதி - நீதிக்காக நீங்கள் போராடுங்கள்; வீதியில் நின்று நாங்கள் போராடுகிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘சமூகநீதிப் போராளி’’ விருது 

வழங்கும் விழா

கடந்த 8.1.2023 அன்று தியாகராயர் நகரில், உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதியில், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா - யூனியன் வங்கி பிற் படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது  வழங்கும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அதில், 

1. எல்.அய்.சி.  வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கிடும் கொள் கையைக் கைவிடுக.

2. ஜாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு தொடங்கிட வேண்டும்.

3. பீகாரில் இதைக் கேட்டு, கேட்டு, அனைத்துக் கட்சியினரும்,  பிரதமர் உள்பட பலரைப் பார்த்தும்கூட, அதை செய்யவில்லை என்கிற காரணத்தினால்,  மற்றவர் களிடம் நாம் கேட்பதைவிட, மக்கள் இருப்பது மாநிலத்தில்தானே, அதற்கு நாமே வழிகாட்டுவோம் என்று சொல்லி, இன்றைக்கு நிதிஷ்குமார் அவர்கள் ஜாதி வாரிக் கணக்கெடுப்பைத் தொடங்கியிருக்கும் சூழ்நிலை, இந்தியா முழுவதும் வந்தால், அதிசயமில்லை. அதைப் பற்றி இங்கே உங்களுக்குத் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார்கள்.

4. அதேபோல, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக, அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் வரவேண்டும்.

5. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கிட,  உரிய சட்டம் தேவை.

6. ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 102, 105 அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினை - கிரிமீலேயர் முறையை முற்றிலும் நீக்கவேண்டும்.

இந்த சட்டம் நிறைவேறியவுடனே, இப்பொழுது இருக்கிற நிலைமை என்னவென்றால்,  கிரிமீலேயர் தானாகவே அது நீக்கப்பட்டுவிட்டது என்று சொல்வது தான் சட்டப்படி சரியான நிலையாகும்..

கிரிமீலேயரை நடைமுறைப்படுத்துவது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும்

அதனை போதிய அளவிற்குப் பலரது கவனத்திற்குக் கொண்டு போகவில்லை. அதற்கு முன்பு, இந்தத் திருத் தம் வந்த பிறகு, கிரிமீலேயரை நடைமுறைப்படுத்துவது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும்.

அதை கூடுமானவரையில், இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்திற்குக்கூட எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனென்றால், ஏற்கெனவே இருந்த சட்டத்தில் என்னென்ன இருந்ததோ அவை அத்தனையும் இருக் கிறது. இதற்கென்று தனியே விவாதம் செய்யவேண்டிய அளவிற்கு, அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வாய்ப்பு இருக்கிறது.

எங்கே நீதி இருக்கிறது? 

எங்கே விளக்கம் இருக்கிறது? 

அப்படி இருந்தாலும், அதில் தெளிவில்லாத கார ணத்தினால்தான், கிரீமிலேயர் முறை என்பது அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்ற சட்டத்திற்கு முரண்பாடு. தானாகவே அது போய்விட்டது. ஆனாலும், அதை இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால், எங்கே நீதி இருக்கிறது? எங்கே விளக்கம் இருக்கிறது? யாரைப் பற்றியும் நடந்துகொண்டிருக் கின்றார்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

அதற்கு அடுத்தபடியாக நண்பர்களே, தற்பொழுது மத்திய பணியாளர்கள் நலத் துறையில், 6.10.2017 தேதி யிட்ட ஆணை  வங்கி உள்ளிட்ட, பொதுத் துறை நிறுவ னங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு எதிராக இருப்பதால், அந்த ஆணையை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்பது மிக முக்கியமானது.

வங்கிப் பணியாளர்கள் தேர்வுக் கழகம் - பொதுத் துறை நிறுவனங்களில் பணியாளர் தேர்வு மற்றும் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. ஆணையத்தில் நடக்கும் தேர்வுகள் - தமிழ் உள்பட - அனைத்துத் தேசிய மொழிகளிலும் நடத்தப்படவேண்டும்.

நன்றாக நீங்கள் கவனியுங்கள், ‘‘அனைத்துத் தேசிய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படவேண்டும்’’ என்று.

தேசிய மொழி என்று தனியே எந்த மொழிக்கும் ஹிந்தி உள்பட தகுதி கிடையாது

அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் இருக்கக்கூடிய மொழிகள் 22 -ம், தேசிய மொழிகள்தான். தனியே எந்த மொழிக்கும் ஹிந்தி உள்பட தேசிய மொழி தகுதி கிடையாது - அரசமைப்புச் சட்டப்படி.

நிறைய பேர் அரசமைப்புச் சட்டத்தையே சரியாகப் படித்ததில்லை; சில நீதிபதிகள் போன்றவர்களேகூட சரியாகப் படிப்பதில்லை.

முதலில் 14 மொழிகள் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மொழிகளை அதிகப்படுத்தி, 22 மொழி களாக ஆக்கியிருக்கிறார்கள்.

நண்பர்களே, இதில் மிகத் தெளிவாக இருக்கிறது - தலைப்பு என்னவென்றால், மொழிகள் என்பதுதான்.

மொழிகள் என்று மொத்தமாகப் போட்டால், 22 மொழிகளிலும் போட்டால், அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதற்கும் மொழி என்று பெயர். அதன்படி அவை அங்கீகரிக்கப்பட்டு  தேசிய மொழிகள் என்றால், 22 மொழிகளும் தேசிய மொழிகள்தான்.

ஆகவேதான், ‘‘ஆட்சி மொழி’’ (Official Language)  என்பது வேறு; ‘‘தேசிய மொழி’’ (National Language )என்பது வேறு.

இதைவிட இன்னொரு மகிழ்ச்சி - 30 ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஒரு சிறப்பு இந்த அமைப்பிற்கு உண்டு.

பிற்படுத்தப்பட்டோர் சங்கங்கள் உள்ள வங்கிகள் எவ்வளவு? தேசிய மயமாக்கப்பட்ட, நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை எனக்குத் தெரிந்த வரையில் 12. 

அந்த 12 வங்கிகளில், இதுபோன்ற அமைப்பு இருக்கிறதா? பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு என்று சொல்லக் கூடிய அமைப்பு எத்தனை வங்கியில் இருக்கிறது?

எனக்கு முன்பாக உரையாற்றிய டி.கே.எஸ். இளங் கோவன் மிக அருமையாகச் சொன்னார்.

ஒரு சட்டம் இயற்றினால், ஓர் அமைப்பை உரு வாக்கினால், அவை எல்லோருக்கும் பொருந்தவேண்டும் என்று சொன்னார்.

நம் மக்களுக்குத் தம் உரிமைபற்றிய  தெளிவு இன்னமும் வரவில்லை. நாம் சட்ட விரோதமாக நடக்க வில்லை.

விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்

அனுமதி கொடுத்ததில், யூனியன் வங்கியை நாம் பாராட்டவேண்டும். வங்கி அதிகாரிகள், மற்றவர்கள் இதனை ஏற்றுக்கொண்டு, கருணாநிதி போன்றவர்கள், உங்களைப் போன்றவர்கள் முன்னால் நின்று, அதைக் கட்டிக் காத்து - ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக் கிறார்கள்.

யூனியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ரிசர்வ் பாங்க் ஆஃப் இண்டியா, எஸ்.பி.அய். அளவிற்கு வந்திருக்கிறது.

தகுதிக்குமேலே பிற்படுத்தப்பட்டோர் வங்கி அமைப்பு என்பது இன்னமும் வரவில்லையானாலும், அந்த அளவிற்கு, இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள்.

யார் வந்திருக்கிறார்கள்?

நாளைக்குத் தனியார் மயமானால், தனியார்த் துறையில் இப்பொழுது இட ஒதுக்கீடு இல்லை. பல பொதுத் துறை அமைப்புகள் கார்ப்பரேட் முதலாளி களுக்குப் பிரித்துப் பிரித்து விற்கப்படுகிறது என்றெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள். அதைவிட மிக முக்கிமானது என்னவென்று சொன்னால், இட ஒதுக்கீடு என்பதை ஒழிக்கவேண்டும். அப்படி ஒழித்துவிட்டால், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற எதுவுமே இருக்காது.

தனியார்த் துறையில் எப்படி இட ஒதுக்கீடு முடியும்? என்று கேட்கவேண்டிய அவசியமில்லை. அதற்கொரு நல்ல பதிலை நம்முடைய தோழர் டி.கே.எஸ்.இளங் கோவன் அவர்கள் கூறினார்கள்.

ஒரு சட்டம் இயற்றினால், அந்த சட்டம் எல்லோ ருக்கும்தான் பொருத்தமாக இருக்கவேண்டுமே தவிர, அந்தச் சட்டம் ‘தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயாக இருக்கக்கூடாது’ என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

ஆனால், இதில் அலட்சியமாக இருக்கின்ற காரணத் தினால்தான், பல நேரங்களில் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது.

வங்கிகளே தனியார் மயம் 

ஆகிவிடக் கூடிய ஆபத்து

எனவே, இங்கேயே முதலில் ஏற்பாடு செய்வதற்குள், வங்கிகளே தனியார் மயம் ஆகிவிடக் கூடிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ஏனென்றால், எங்கே இதுபோன்ற விழிப்புணர்வு வந்துவிடுமோ என்பதுதான் அதனுடைய அடிப் படையாகும்.

தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்வதற்கோ அல்லது தனியார்த் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொடுக்காதே என்று சொல்வதற்கோ, அப்படி கொடுத்தால், ‘‘தகுதி போய்விடும்’’; ‘‘திறமை போய்விடும்’’ என்று சொல்வதற்கோ இடமில்லை.

வளர்ந்த நாடு என்று அமெரிக்காவைத்தானே சொல்கிறீர்கள்? இன்றைக்கும் எடுத்துக்காட்டுகிறார்கள்; அங்கேதானே நோபல் பரிசு வாங்கியவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

பேராசிரியர் சுப.வீ. அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னதுபோல, ஒவ்வொரு நாட்டிற்கும் இட ஒதுக்கீடு பல துறைகளிலும் இருக்கிறது.

தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு கட்டாயம் இருக்கவேண்டும். அந்த சட்டத்தை அவர்கள் மீற முடியாது.  பொதுத் துறை அலுவலகத்தை விற்றால், எத்தனை பேர் இருக்கிறார்கள்; அங்கே இருக்கின்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் அத்தனை பேரும், தனித் தனியே இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறவர் களாக இருக்கிறார்கள்.

ஆகவே, அங்கே நிர்வாகம் கெட்டுப் போய்விட்டது என்று யாரும் சொல்ல முடியாது.

தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது

எனவே, தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது; அப்படி கொடுத்ததால், ‘தகுதி திறமை’ போய்விட்டது என்றும் சொல்ல முடியாது.

ஆகவே, தனியார்த் துறைக்கு இட ஒதுக்கீடு பொருந்தாதது என்றும் சொல்ல முடியாது என்று, எல்லா வகையிலும், எல்லா கோணத்திலும் இங்கே பதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆகவேதான், அடுத்தபடியாக இந்தப் போராட் டங்களை வலிமைப்படுத்தவேண்டிய கட்டாயம், அவசியம் இருக்கிறது.

இன்னொரு நகை முரண்பாடு இங்கே இருக்கிறது. அது என்னவென்றால், மற்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று சிறு பான்மையினர் கேட்பார்கள். ஆனால், நம்முடைய நாட்டில் பெரும்பான்மையோர்தான் (அதாவது 85 விழுக்காடு உள்ளவர்கள்) எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள்; இதுதான் மிகவும் விசித்திரமானது!

அரசமைப்புச் சட்ட பீடிகையில்...

அதைவிட இன்னொரு விசித்திரம் என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தில் எல்லோருக்கும் சொல்லக் கூடியது - அதில் உள்ள ‘பிரியாம்பிள்’ (றிக்ஷீமீணீனீதீறீமீ) என்று சொல்லக்கூடிய பீடிகையிலேயே மிகத் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பது,

Justice, Social, Economic and Political  என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

எனவே, சமூகநீதிக்குத்தான் முதலிடம்.

ஆனால், முதலிடம் என்று சொல்லக்கூடிய சமூகநீதி போராடி, போராடி கொஞ்சம் கொஞ்சமாக, சொட்டு சொட்டாக வரக்கூடிய சொட்டுநீர்ப் பாசனம் போன்று இருக்கிறது. அவ்வளவுதான் - இங்கே உரிமைகள் தாராளமாக வரக்கூடிய சூழ்நிலை இல்லை.

யூனியன் வங்கி மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது

காரணம், நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. அந்த விழிப்புணர்வுக்கு யூனியன் வங்கி மற்ற வர்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது என்பதில் மிகப்பெரிய பெருமையாகும்.

ஏனென்றால், நீங்கள் சரியான நேரத்தில், தெளிவான முடிவெடுத்து, வழிகாட்டக்கூடிய அளவிற்கு இதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.

இது எல்லா இடங்களிலும் பரவவேண்டும் என்று சொல்லும்பொழுது, எங்களைப் போன்றவர்கள் உங் களுக்கு என்றைக்கும் துணை நிற்கக் கூடியவர்களாக இருப்போம்.

பொதுவாக இங்கே நல்ல  அதிகாரிகள் இருக்கின்ற காரணத்தினாலும், இதில் இருக்கின்ற நியாயங்கள் நம் பக்கம் இருக்கின்ற காரணத்தினாலும், நீங்கள் வைக்கின்ற கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறக் கூடிய வாய்ப்பு கள் இருக்கின்றன.

ஆனால், பொதுவான கோரிக்கைகள் என்பது இருக்கிறதே, அதில் அரசியல் சாயம் கலந்து பூசிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், அவை அவ்வளவு சீக்கிரம் வராது.

வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடவேண்டும்; போராடவேண்டிய நேரத்தில் போராடவேண்டும்!

வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடலாம்; வாதாடி னாலும்   அது இனிமேல் பலன்தராது என்ற நிலை உருவானால், போராட வேண்டிய கட்டத்திற்கு நாம் செல்லுகிறோம்; நிச்சயம் போராட்டம்தான் அதற்குப் பதிலாக இருக்கும்.

அந்த வகையில், நீங்கள் உங்கள் உத்தியோகங்களில் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள். அறவழி ஆதரவு தாருங்கள்; எங்களைப் போன்றவர்கள் அதற்காகவே இருக்கின்றோம்; எனவே, அந்தப் பணியை செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம்.

எனவே, நாம் இணைந்து பல்வேறு பகுதிகளில் - வெளியில் கருத்துகளை உருவாக்குவோம், வீதிகளில் போராடுவதற்கு நாங்கள் இருக்கிறோம். நீதிக்குப் போராட நீங்கள் இருங்கள்.

சமூகநீதியை வென்றிடவேண்டும்!

எல்லோரும் இணைந்து சமூகநீதியை வென்றிட வேண்டும் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டியதுதான் மிக முக்கியமானதாகும்- 30  ஆவது ஆண்டில் எடுக்கக் கூடிய முடிவுகள் - உறுதிகள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக