ஞாயிறு, 12 மார்ச், 2023

தமிழர் தலைவருக்கு ''சமூகநீதிப் போராளி'' விருது!

 

சென்னை, ஜன.9 யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் சங்கத்தின் தலைவர் கோ. கருணாநிதி உட்பட, சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.

30 ஆம் ஆண்டு தொடக்க விழா!

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆண்டு தொடக்க நாள் விழா தியாகராயர் நகரில், தியாகராயர் சாலையில் உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதி யின் முதல் மாடியில், 8.1.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.  

சிறப்பிக்கப்பட்ட தலைவர்கள்!

முன்னதாக குழல் (புல்லாங்குழல்) குமரனின் இன்னிசை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் தொடங்கியது. தொடக்கத்தில் ஆசிரியருக்கு சிறப்பு செய்யப் பட்டது. அதைத்தொடர்ந்து மேனாள் மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.எஸ். இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பின ரும் மூத்த வழக்குரைஞருமான வில்சன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன், துணைப் பொது மேலாளர்  ஜி.முருகன் (சென்னை மண்டலம்), சென்னை தெற்கு மண்டலத் தலைவர் செழியன், சென்னை வடக்கு பிராந்திய தலைவர் பிரபு,  ஆகியோருக்கு பயனாடை போர்த்தி, மரக்கன்று, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 

சமூகநீதிப் பயணத்தின் அடுத்த கட்டம்!

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசும் படலம் தொடங்கியது. சென்னை வடக்குப்பிராந்தியத் தலைவர் பிரபு, யூனியன் வங்கி தெற்கு பிராந்தியத் தலைவர் செழியன், சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் முருகன், மூத்த வழக்குரைஞர் வில்சன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி சங்கத்தின் வரலாற்றை தந்தை பெரியார், ஆசிரியர் ஆகியோரின் சமூகநீதிப் போராட்டங்களையும் இணைத்து விவரித்தார். தொடர்ந்து சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வாழ்த்துரையோடு சமூகநீதிப் பயணம் செல்ல வேண்டிய பாதை குறித்தும் பேசினார். நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ், இளங்கோவன் நாடாளு மன்றத்தில் சமூகநீதி தொடர்பாக தான் பேசியதை சுட்டிக் காட்டி பேசி, எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் எடுத்துரைத்து அமர்ந்தார்.

தமிழர் தலைவருக்கு, 

''சமூக நீதிப் போராளி விருது”

நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் ஆசிரியருக்கு சிறப்பு விருதை அமைப்பின் தலைவர் கோ. கருணாநிதி அறிவித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று முன்னதாக சங்கத்தின் துவக்க கால உறுப்பினர்கள் இணைந்து ஆசிரி யருக்கு பூங்கொத்து வழங்கினர். அத்தோடு மண்டல செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் இணைந்து பயனாடையணிவித்து சிறப்பித்தனர். அதன்பிறகு தந்தை பெரியாருக்கு 1938 இல் பெண்கள் இணைந்து மேடையில் “பெரியார்” என்ற பட்டத்தை வழங்கியது போல என்று குறிப்பிட்ட கோ. கருணாநிதி பெண் நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார். அதேபோலவே பெண்கள் இணைந்து ”சமூகநீதிப் போராளி” எனும் விருதை, பலத்த கைதட்டல் களுக்கிடையே தமிழர் தலைவருக்கு வழங்கினர். விருதுக் கான குறிப்பை பலத்த கரவொலிக்கிடையே சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி வாசித்தார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை!

விழா நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில், எதிர்பாராமல் வழங்கப்பட்ட விருதுக்கு நன்றி தெரிவித்தார். தான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியதை இந்த விருது சுட்டிக் காட்டுவதாக கூறிவிட்டு, நிகழ்ச்சியில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களில் சமூகம் சார்ந்த தீர்மானங்களை குறிப்பிட்டு பேசினார். அதையொட்டி, பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க உத்தரவிட்டதை நினைவுபடுத்தினார். கிரிமிலேயரை அமல்படுத்தியது அர சமைப்புச் சட்டவிரோதம் என்பதை காரணத்தோடு எடுத்துரைத்து தனது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் சற்றும் சளைக்காமல் பயனாடையணிவித்து மரியாதை செய்தார்.

கலந்து கொண்டு சிறப்பித்தோர்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞர் சு. குமார தேவன் கழகத் தோழர் திருச்சி ராஜூ, ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சோ. சுரேஷ், கமலேஷ், சமூகநீதி கண்காணிப்புக் குழு மற்றும் யூனியன் வங்கி  அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, அய்.சி.எப்., மக்கள் கணக்கெடுப்பு துறை, சி.பி.சி.எல்., கனரக தொழிற்சாலை, ஆவடி ஆகிய நிறுவன ஓபிசி நல சங்க நிர்வாகிகள்,  வங்கி யின் அதிகாரிகள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நல சங்க உறுப்பினர்கள், குறிப்பாக பெண்கள், நல சங்கத்தை 1994 இல் துவக்கிய தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக