வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

வைக்கம் நூற்றாண்டு – வரலாற்றுச் சுவடுகள்

 Published August 26, 2023, விடுதலை நாளேடு

“வைக்கம் போராட்டம்” நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த போராட்டம் இரவில் முடிவு செய்து காலையில் நடந்து முடிந்ததல்ல. சமத்துவத்தைக் கோரிய அப்போராட்டத்திற்கான சூழலை உருவாக்கிய பல ஜீவன்கள் பல ஆண்டுகள் பாடுபட்டனர். அதன் பின்னர் தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் இரண்டாண்டுக் காலம் நடைபெற்று அது வெற்றி பெற்ற வரலாற்றை நாள்வாரியாக தொகுத்து அளிக்கப்படுகிறது.

“வைக்கம்” என்பது வெறும் ஊரின் பெயரல்ல; அது அடையாளம், தாழ்த்தப்பட்டோர் சம உரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தந்தை பெரியார் கேரளர்களின் அழைப்பின் பேரில் சென்று சமூகநீதியின் அடையாளமாக இருமுறை சிறை சென்றார். நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். வைக்கத்தில் 141 நாளில் 74 நாள் சிறையில் இருந்தார். தான் மட்டும் அல்ல; தம் துணைவியாரையும், தங்கையையும் அப்போராட்டத்தில் ஈடுபடுத்தி வெற்றி பெற்ற வரலாறே இவைகள்…

வைக்கம் போராட்ட வரலாறு

6 பிப்ரவரி 1924

கொல்லம், சுயராஜ்ய ஆசிரமத்தில் தீண்டாமை விலக்குக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. சுதந்திர நடமாட்டத்துக்கும், கோயில் நுழைவுக்கும் ஆதரவாகத் தீவிர பிரச்சாரம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

29 பிப்ரவரி 1924

தீண்டாமை விலக்குக் குழு சார்பில் காங்கிரஸ் கட்சி வைக்கத்தில் பொதுக்கூட்டம் நடத்தியது.

30 மார்ச் 1924

வைக்கம் போராட்டம் தொடங்கியது. குன்னப்பி (புலையர்), பாஹுலேயன் (தீயர்), கோவிந்த பணிக்கர் (நாயர்) கொண்ட குழுவினர், மாலை அணிவிக்கப்பட்டு முன்னோக்கிச் சென்றனர். அம்மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இன்று ஞாயிறு, தொடங்கிய நாள் தவிர, மற்ற ஞாயிற்றுகிழமைகளில் சத்தியாகிரகம் நடைபெறவில்லை.

31 மார்ச் 1924

ஒரு நாயர், இரண்டு ஈழவர் கொண்ட மூவர் குழுவினர் தடைப்பகுதியை அணுகினர். கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

1 ஏப்ரல் 1924

கே.பி. கேசவ மேனன் அனுப்பியிருந்த சத்தியாகிரகத் தொடக்கம் பற்றிய செய்திகள் அடங்கிய தந்தியை காந்தியார் பெறுகிறார். சத்தியாகிரகிகள் இன்னும் சிறிது காலம் பிரச்சாரம் செய்யவும் சமாதானப் பேச்சுக்குத் தயார் செய்து கொள்ளவும் ஏதுவாகச் சிறிதுகாலம் போராட்டத்தைத் தள்ளி வைக்கலாம் என காந்தியார் யோசனை அளித்தார்.

7 ஏப்ரல்

இரண்டு நாட்கள் நடந்து பின்னர் ஆறு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட போராட்டம் இன்று மீண்டும் துவங்கியது. கே.பி. கேசவ மேனன், டி.கே. மாதவன் தடைப்பகுதியை நோக்கி நடந்து சென்று கைதாகினர். ஆறுமாத சிறைத்தண்டனை பெற்றனர்.

9 ஏப்ரல்

ஏ.கே. பிள்ளை, கே. வேலாயுத மேனன், கே. கேளப்பன் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றனர்.

10 ஏப்ரல்

இன்று முதல் சத்தியாகிரகிகளைக் கைது செய்வதில்லை. என்று காவல்துறை முடிவு செய்தது. சத்தியாகிரகிகள் பட்டினிப் போராட்டம் தொடங்கினர்,

11 ஏப்ரல்

ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், செபாஸ்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றனர்.

13 ஏப்ரல் 

பெரியார் வைக்கம் வந்தார்.

14 ஏப்ரல்

பட்டினிப் போரை நிறுத்துங்கள் என்ற காந்தியாரின் செய்தி சத்தியாகிரகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. கோயிலின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார். வரதராஜுலு நாயுடு தன் ஆதரவைத் தந்தி மூலம் தெரிவித்தார்.

15 ஏப்ரல்

அய்யாமுத்து வருகை

17 ஏப்ரல்

எஸ்.சீனிவாச அய்யங்கார் வைக்கத்தில் குறிப்பிட்ட வீதிகளைச் சுற்றிப்பார்த்தார்.

21 ஏப்ரல்

டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யர் கைது.

29 ஏப்ரல்

நாராயண குருவிற்குச் சொந்தமான இடத்திற்குச் சத்தியாகிரகிகள் குடிபெயர்ந்தனர், காந்தியார், வெளியாட்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள தடைவிதித்தார்.

3 மே

இலவச உணவு அளிக்க அகாலியர் வைக்கம் வருகை.

8 மே

சிரத்தானந்தர் சத்தியாகிரகத் தலைவர்களுடன் சந்திப்பு.

13 மே

கோட்டயம் மாவட்டத்தில் நுழைய பெரியாருக்குத் தடை.

22 மே

பெரியார் முதன்முறை கைது.

26 மே

ராஜாஜி வைக்கம் வருகை.

21 ஜூன்

சத்தியாகிரகிகளின் ராட்டினங்களைக் காவல்துறை கைப்பற்றியது.  பெரியார் அருவிக்குட்டி சிறையிலிருந்து விடுதலை.

ஜூன் – ஆகஸ்ட்

மழை பெய்து வைக்கம் வெள்ளத்தால் நிரம்பியது. சத்தியாகிரகிகள் கழுத்தளவு நீரில் நின்று போராடினர். காவல்துறையினர் படகுகளில் காவலிருந்தனர்.

சத்தியாகிரகத்திற்கு ஆதரவாய் மக்கள் திரண்டனர்.

13 ஜூலை

நாகம்மையார் போராட்டத்தில் கலந்துகொள்ளல்.

18 ஜூலை

பெரியார் இரண்டாம் முறை கைது.

7 ஆகஸ்ட்

மகாராஜா காலமானார், துக்கம் அனுசரித்து போராட்டம் மூன்று நாளைக்கு நிறுத்திவைக்கப்பட்டது.

31 ஆகஸ்ட்

பெரியார், கேபி. கேசவமேனன் உள்ளிட்ட சத்தியாகிரகிகள் திருவனந்தபுரம் மத்திய சிறையிலிருந்து விடுதலை.

1 செப்டம்பர்

சேதுலட்சுமி பாய் பொறுப்பு அரசியாக (Maharani Regent) பதவி ஏற்றார். இன்று சத்தியாகிரகம் இல்லை.

28 செப்டம்பர்

நாராயண குரு சத்தியாகிரக ஆசிரமத்திற்கு வருகை.

2 அக்டோபர்

ஈழவர் தலைவரும், திருவாங்கூர் சட்டசபை நியமன உறுப்பினருமான என். குமாரன் வைக்கம் கோயில் தெருக்களை எல்லா ஜாதியினருக்கும் திறந்துவிடவேண்டும் எனச் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தார்.

1 நவம்பர்

கோயில் தெருக்களில் தீண்டாதாரை அனுமதிப்பதற்குத் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவிப்பதோடு அதற்கு அரசு அனுமதியளிக்கக் கோரும் நோக்கத்துடன் உயர்ஜாதியினர் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். சத்தியாகிரகிகளுக்கு ஆதரவான சவர்ணர்களின் இந்த ஊர்வலம் வைக்கத்திலிருந்து சமஸ்தான தலைநகரான திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டது. மன்னத்து பத்மநாபன் இதன் தலைவர். திருவனந்தபுரத்தின் தெற்குப் பகுதியிலிருந்து இத்தகைய இன்னொரு ஊர்வலம் சுசீந்திரத்திலிருந்து புறப்பட்டு தலைநகரம் நோக்கி வந்தது. இதன் தலைவர் எம்பெருமாள் நாயுடு- இன்று சத்தியாகிரகம் இல்லை.

11 நவம்பர்

உயர் ஜாதியினரின் பேரணிகள் திருவனந்தபுரத்தை அடைந்தன.

12 நவம்பர்

மகாராணி ரீஜண்டிடம், 12 பேர் அடங்கிய குழுவினர் பெரிய மகஜரை அளித்தனர். கோயில் தெருக்களை அனைவருக்கும் திறந்துவிட ஆதரவு தெரிவித்து 25,000 ஜாதி இந்துக்கள் அதில் கையொப்பம் இட்டிருந்தனர். மாலை திருவனந்தபுரம் கடற்கரையில் பெரும் பொதுக்கூட்டம். இன்றும் சத்தியாகிரகம் இல்லை.

7 பிப்ரவரி 1925

சுதந்திர நடமாட்டத்திற்கென சட்டசபையில் 2 அக்டோபர் 1924இல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் விவாதத்திற்குப் பிறகு இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 22 – 21 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அது தோற்றது. அரசாங்கம் இதன் பின்னணியில் இருந்தது எனச் சந்தேகிக்கப்பட்டது.

9 மார்ச்

காந்தியார் வைக்கம் வந்தார்.

10 மார்ச்

காந்தியார் சத்தியாகிரக ஆசிரமத்தில் சத்தியாகிரகிகளைச் சந்தித்துப் பேசினார், மதியம் 2:30 மணிக்கு உயர் ஜாதியினரைச் சென்று சந்தித்தார், மூன்று திட்டங்களை முன்னுரைத்தார். உயர் ஜாதிக்குழு அவற்றை நிராகரித்தது.

12 மார்ச்

காந்தியார் மகாராணி ரீஜண்டை வர்க்கலையில் சந்தித்தார். பிறகு நாராயண குருவையும் காந்தியார் சந்தித்தார். குருவுடனான சந்திப்பின்போது பெரியார், ராஜாஜி, வ.வே.சு.அய்யர் உடன் இருந்தனர்.

13 மார்ச்

காந்தியார் ராஜமாதாவைத் திருவனந்தபுரத்தில் சந்தித்தார். அப்போது பெரியார் திருவனந்தபுரத்தில் இருந்ததாக உறுதிப்படுத்த இயலாத தகவல் உண்டு.

17 மார்ச்

காந்தியாரை உயர் ஜாதிக்குழு சந்தித்து, சங்கர ஸ்மிருதியை ஆதாரமாகத் தந்தது. காந்தியார் வள்ளத்தோல் சந்திப்பு வைக்கத்தில் நிகழ்ந்தது.

18 மார்ச்

காந்தியார் வைக்கத்திலிருந்து புறப்பட்டார். அரசு விருந்தினராக காந்தியார் திருவாங்கூரில் சுற்றுப்பயணம் செய்தபோது உடனிருந்தவர் காவல்துறை ஆணையாளர் பிட் ஆவார். அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் வைக்கம் கோயில் பாதையில் மார்ச் 1924 முதல் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளை நீக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏப்ரல்: திருவாங்கூர் அரசாங்கம் 1924 மார்ச் 24ஆம் தேதி பிறப்பித்த தடை உத்தரவைத் திரும்பப் பெற்றது.

24 ஜூன்

சத்தியாகிரக செயலாளர் கே.கேளப்பன் அறிக்கை.

17 நவம்பர்

தீண்டாமை விலக்குக் குழு தீர்மானம்

23 நவம்பர்

பல மாதங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளையடுத்து அரசாங்கம் கோயிலைச் சுற்றியிருந்த மூன்று பாதைகளை அனைவருக்குமெனத் திறந்துவிட்டது. ஒரு துணைப் பாதையையும் உருவாக்கிக்கொண்டது. இது தீர்வு எனப்பட்டது (தேதி ஆதாரம்: மேரி எலிசபெத் நூல்)

29 நவம்பர்

பெரியார் தலைமையில் கேளப்பன் ஏற்பாட்டில் வைக்கத்தில் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக