வெள்ளி, 31 மே, 2024

முதல் சுயமரியாதைத் திருமணம் நடந்த நாள் – இன்று (28.5.1928)Published May 28, 2024, விடுதலை நாளேடு

இந்து உரிமையியல் சட்டத்தின்படி தான் – ஓர் இந்து திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிற ஓர் ஒழுங்குமுறைச் சட்டத்தை – 1772இல் வாரன் ஹேஸ் டிங்க்ஸ் என்கிற வைஸ்ராய் அமல்படுத்தினார். சாஸ்திரப் படியான சடங்குடன் தான், ஓர் இந்து திருமணம் செய்து கொள்ள முடியும்.

அதன் அடிப்படையில்தான், 1806 முதல் 1860 வரையில் கீழ்நீதிமன்றங்களில் வெள்ளைக்கார நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்.

அந்தத் தீர்ப்புகளின் அடிப்படையை வைத்து 1861இல் “இந்துச் சட்டம்” (Hindu Law) உருவாக்கப்பட்டது.

அச்சட்டம் விதித்த திருமண வடிவங்கள் யாவை?

1. ஒரு கற்சிலையின் முன்னால் தாலி கட்டிக் கொள்ள வேண்டும்;

2. ஓர் பார்ப்பனப் புரோகிதரை வைத்து, தீக்குண்டம் வளர்த்து, மந்திரங்கள் ஓதித் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; தீக்குழியைச் சுற்றி மணமக்கள் ஏழு தப்படி மூன்று சுற்று நடக்க வேண்டும்;

3. அவரவர் வருண ஜாதி வழக்கப்படி அல்லது உள் ஜாதி வழக்கப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும்;

4. அவரவர் வாழும் பிராந்திய வழக்கப்படித் திரு மணம் செய்துகொள்ள வேண்டும்.

இப்படிச் செய்துகொள்ளும் திருமணங்கள்தான் செல்லுபடி ஆகும். அதாவது – இப்படித் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகள் தான் தந்தையின் சொத்தில் பங்குபெற முடியும். இதைமீறித் திருமணம் நடத்த உரிமை இல்லை.

இது, பார்ப்பனர் அல்லாதாருக்கு இழிவைச் சேர்ப் பது அல்லவா?

1890இல் வித்தூன்றி, 1912இல் முளைவிட்டு, 1916இல் செடியாக வளர்ந்த, “பார்ப் பனரல்லாதார் கட்சி (எ) நீதிக்கட்சி”, 17-12-1920 இல் சென்னை மாகாண ஆட்சியைக் கைப்பற்றி, 1926 வரை தொடர்ச்சியாக ஆட்சி செய்தது. அக் கட்சியின் தலைவர்கள், இதை மாற்ற வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அவர்கள் எல்லோரும் பெரிய படிப்பாளிகள்; மிகப்பெரிய பணக்காரர்கள்; பலரும் பொது வாழ்வில் தூய்மையானவர்கள்.

பார்ப்பனர் பெற்றிருந்த சட்டமன்றப் பதவிகள் மற்றும் அரசாங்க வேலைகள் இவற்றைக் கைப்பற்றுவதில் மட்டுமே அவர்கள் நாட்டம் கொண்டார்கள்.

தீண்டப்படாதாருக்கு இருந்த இயலாமைகள் சில வற்றை நீக்கினார்கள்; தமிழச்சிகள், தேவதாசிகள் என்று ஆக்கப்பட்டதை நீக்கினார்கள்.

ஆனால் வீட்டுச் சடங்குகள், கோவில் வழிபாடு முதலானவற்றில் பார்ப்பனப் புரோகிதத்தை – பார்ப்பனர் அர்ச்சகர் என்பதை நீக்க வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கவில்லை. அதாவது பார்ப்பனரல் லாதாரின் சுயமரியாதைக்கு இருக்கிற அந்த இழிவை நீக்க அவர்கள் முன்வரவில்லை.

“பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைச் சங்கம் அமைக்க வேண்டும்” என்கிற எண்ணம் 1926 செப்டம்பரில் தந்தை பெரியாரின் சிந்தனையில் தோன்றியது.

பனகால் அரசர், ஏ. இராமசாமி முதலியார், எம்.டி. சுப்பிரமணிய முதலியார் போன்றவர்களை உடன் வைத்துக் கொண்டு, 26-12-1926இல் மதுரையில், “மாகாணப் பார்ப்பனர் அல்லாதார் மாநாடு” கூட்டச் செய்து, அங்கே, “பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைச் சங்கம்” நிறுவப்பட எல்லாம் செய்தார், தந்தை பெரியார்
அதுமுதல் அங்கொன்றும் இங்கொன்றுமாக, “பிராமணீயம் ஒழிந்த திருமணம், கருமாதி, திதி” முதலான சடங்குகளைப் பார்ப்பனர் அல்லாதார் சிலர் செய்தனர்.

வரலாற்றில், முதலாவது சுயமரியாதைத் திருமணம் எனப் பதிவு செய்யப்பட்டிருப்பது, 28-5-1928இல் அருப்புக்கோட்டைக்கு அருகி லுள்ள சுக்கில நத்தம் என்ற ஊரில் ரெங்கசாமி ரெட்டியார் அவர்களின் திருமணமாகும். இரத்தி னம்மாள், நாகம்மாள் இருவரையும் சுயமரியாதைத் திருமண முறைப்படி மணந்தார். தந்தை பெரியார், திருச்சி கே.ஏ.பி. விசுவநாதன், பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி இவர்களால் நடத்தி வைக்கப்பட்ட திருமணமே ஆகும்.

இந்துச் சட்டப்படி அது செல்லாது.

“சட்டப்படி செல்லாவிட்டாலும் போகிறது. பார்ப்பனப் புரோகிதத்தை விலக்கித்தான் திருமணம், இறுதிக் கடன் முதலானவற்றைச் செய்ய வேண்டும்” என்று துணிந்து, ஆயிரக்கணக்கான பார்ப்பனர் அல்லாதார், பார்ப்பனப் புரோகிதத்தை விலக்கிவிட்டனர்.

அப்படித் துணிந்து, 14-7-1934 மாலை 5 மணிக்கு, திருச்சியில், கோட்டையூர் ஏ.எல். சிதம்பரம் (செட்டியார்) – டி. ரெங்கம்மாள் (ரெட்டியார்) இருவரும், தந்தை பெரியார் தலைமையில், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் செல்லாது என்று 26.8.1853 அன்று சென்னை உயர்நீதி மன்றப் பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்புக் கூறினர்.

இப்படி ஒரு தீர்ப்பு வந்த பிறகும் பல ஆயிரம் பேர் பார்ப்பனப் புரோகிதத்தை விலக்கி ஆர்வத்துடன் திரு மணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்க தொடர் முயற்சிகள் நடந்தன.

6-3-1967இல். தமிழ்நாட்டில், தி.மு.க. அமைச்ச ரவை, அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் அமைந்தது. திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில், மறைந்த ப. ஜீவானந்தம் மகள் உஷாதேவி – பெருவளப்பூர் இரா.அருணாசலம் திருமணத்தை, பெரியார் முன்னின்று நடத்தினார். அதில் பங்கேற்ற முதலமைச்சர் அறிஞர் அண்ணா, “சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் படியான சட்டத்தைச் செய்வோம்” என, முதன்முதலாக அறிவித்தார்.

அப்படிச் சட்டம் செய்வதற்கான சட்ட வரைவை (Draft) தந்தை பெரியாரின் பார்வைக்கு, முதலமைச் சர் அனுப்பினார்.

“மாலை மாற்றுவதையும் மோதிரம் அணி வதையும் மற்றும் தாலி கட்டுவதையும் செய்து, திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு” என்று அரசின் சட்ட வாசகம் இருந்தது. அதில் திருத்தம் செய்த பெரியார், “மாலை மாற்றிக் கொள்ளுவது மோதிரம் அணிந்து கொள்ளுவது (அல்லது) தாலி கட்டுவதைச் செய்து” என்று இருந்தால் போதும் என்று கூறி, எளிமைப்படுத்தினார்.பின்னும் ஒரு ஆதாரத் தடையை, வழக்கம் என்கிற வடிவில் இந்திய அரசினர் எழுப்பினர்.

உடனே, “தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்தத் திருமண முறை ஒரு வழக்கமாக இருக்கிறது” என்று இந்திய அரசுக்கு எழுதும்படி, ஆலோசனை கூறி அனுப்பினார், பெரியார்.திராவிட முன்னேற்றக் கழக அரசு 1968இல், “சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டத்தை” நிறைவேற்றியது. அதாவது, “1926 முதல் 1967 வரை செய்யப்பட்ட சுயமரியாதை முறைத் திருமணங்களும், 1967க்குப் பிறகு நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படி செல்லும்” என்பதே அச்சட்டத்தில் உள்ள பெரிய பாதுகாப்பு.  இது இந்து திருமணச் சட்டத்தின் 7ஏ உள்பிரிவாக உள்ளது. இது தி.மு.க. ஆட்சியின் மாபெரும் செயல்.இந்தச் சட்டம் செல்லாது என்று கூறிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு வழக்குரைஞர் தொடுத்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் தள்ளுபடி செய்துவிட்டது. இது, இச்சட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக