வியாழன், 6 ஜூன், 2024

விடுதலை – விழுமிய தகவல்கள்

Published June 1, 2024

“விடுதலை” 14.11.1936

மித்திரன், மெயில், ஹிந்து, பத்திரிகைகளுக்கு சவால்; சத்தியமூர்த்தி சலசலப்பை கேட்டீர்களா!
சுடச்சுட சுயராஜ்யம் கொண்டு வரப் போகிறாராம்!
வரட்டுமே! வந்தால் நமக்குப் பங்குண்டல்லவா!
வருமா? என்பதுதான் கேள்வி!

“விடுதலை” 28.4.1939

பேரன்புடையீர்!

வேண்டுகோள்
நமது பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் சிறைபுகுந்துள்ள இச்சமயத்தில் தமிழர் முன்னேற்றத்திற்கு உழைக்கும் தமிழ் தினசரி விடுதலை பத்திரிகையை தமிழ் மக்கள் ஆதரித்தும், பொருளுதவி செய்தும். நன்கொடை வசூலித்தும், சந்தாக்கள் சேர்த்து அனுப்பியும் விடுதலை பத்திரிகை வளர்ச்சியடைச் செய்யுமாறு நமது தோழர்களை வேண்டுகிறோம்.

தங்களன்புள்ள
ஈரோடு                                                                                                                                                                                                                                                                                                 அ.பொன்னம்பலம்
28.4.1939                                                                                                                                                                                                                                                                                               ஆசிரியர் விடுதலை

“விடுதலை” 11.8.1939

1939-ஆம் ஆண்டிலேயே

ஈழத் தமிழர் பிரச்சினை

இன்று நேற்றல்ல, 1939ஆம் ஆண்டிலேயே ஈழத் தமிழர் பற்றி கழகம் அக்கறை செலுத்தியுள்ளது. இதோ ஆதாரம்:

தீர்மானம்:
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகக் கமிட்டிக் கூட்டம் 10.8.1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும். அவர்களை நாட்டைவிட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வே. ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார். சர்.ஏ.டி பன்னீர்செல்வம், ஊபுஅ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“விடுதலை” 16.8.1943

முகம்மதலி ஜின்னாவின் கடிதம்

அன்புள்ள இராமசுவாமி.
தங்கள் அனுதாபத்துக்கும் வாழ்த்துக்கும் அநேக நன்றி செலுத்துகிறேன். நல்ல வேளையாக எனக்கு அபாயகரமான காயம் ஒன்றும் ஏற்படவில்லை. மேலும், அதி சீக்கிரமாகக் குணமாகிக் கொண்டும் வருகிறேன்.

தங்கள் அன்புள்ள
எம்.ஏ. ஜின்னா

“விடுதலை” 30.7.1947

“விடுதலை” வெளியிட்ட வ.உ.சி.யின் கருத்து

இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டுகளையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லாதாரின் பொருள்கள்
கொள்ளையிடப்படுவதையும், பிராமணரல்லாதார், தாழ்த்தப்படுவதையும், அக்கொள்கையினின்றும். தாழ்வினின்றும் பிராமணரல்லாதார் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் எல்லோருக்கும் விளங்க வைக்க வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

– வ.உ. சிதம்பரனார்

“விடுதலை” 6.8.1947

ஆகஸ்ட் 15இல் பச்சை வர்ணாசிரம ஆட்சி ஆரம்பம் காங்கிரசின் எதேச்சாதிகாரமே பாகிஸ்தானை உருவாக்கியது. திராவிடர் அனைவரும் ஒன்றுபட்டுத் தனி ஆட்சியைப் பெற்றே தீருவோம் இந்துஸ்தான் அ.நி. (அரசியல் நிர்ணய சபை) பற்றி பெரியார் அறிக்கை:

“விடுதலை” 5.8.-1948

பள்ளியில் விடுதலை

வைத்திருந்ததற்காக…

மாணவர்களுக்கு அபராதம்!

திருப்பாப்புலியூர், ஆக. 3 இவ்வூர் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் (பாரம்) படிக்கும் மாணவத் தோழர்களான சந்தானம், இராசரத்தினம் இருவரும் வகுப்பில் விடுதலைப் பத்திரிகை வைத்திருந்ததற்காக பார்ப்பன ஆசிரியரொருவரால் முறையே தலைக்கு நான்கணா விழுக்காடு தண்டம் விதிக்கப்பட்டது.

“விடுதலை” 8.2.1949,

குடந்தையில் காங்கிரஸ் வீரர்களின்

அஹிம்சாப் போர்!

விடுதலை விநியோகஸ்தர் மீது
பாய்ச்சலும் பிடுங்கலும்!
(ட்ரங்க் டெலிபோன் மூலம்)

கும்பகோணம், பிப்.8 இவ்வூரில் நாள்தோறும் விடுதலை விநியோகிக்கும் பையன் இன்று கருப்புச் சட்டையணிந்து விடுதலை இதழ்களுடன் கர்ண கொல்லைத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருக்கையில் காங்கிரஸ் காலிகள் சிலர், பையனை வழிமறித்து கண்டபடி திட்டி, அணிந்திருந்த கருஞ்சட்டையை இழுத்துப் பிடுங்கி, எறிந்திருக்கின்றனர். அன்றியும் பையன் வசமிருந்த பத்திரிகைகளையும் கொளுத்தியிருக்கின்றனர்.
உள்ளூர் கழகத் தோழர்கட்கு இச்செய்தி எட்டியதும், ஆத்திரம் மிகுந்து பரபரப்பு ஏற்பட்டது. எனினும், கழக முக்கியஸ்தர்களின் தலையீட்டின்பேரில் பொறுமை மேற்கொள்ளப்பட்டது.

“விடுதலை” 1.3.1949

“விடுதலை” மீது இன்னும் வஞ்சமா?

சட்ட விரோதமான விஷயங்கள் அதில் எழுதப்படவில்லை
சட்டசபையில் சர்க்கார் பதில்
சென்னை, பெப்.28
விடுதலை போன்ற பத்திரிகைகள்மீது வந்த புகார்களை சர்க்கார் தீவிரபரிசீலனை செய்து பார்த்தனர். அப்பத்திரிகைகளில் காணப்படும் கட்டுரைகளும் பிறவும் சட்டப்படி ஆட்சேபிக்கப்பட முடியாதவையென்று கண்டறியப்பட்டதால் அவைகள்மீது நடவடிக்கை எடுக்க இயலாததென்று முடிவுக்கு சர்க்கார் வந்து விட்டனர். நடவடிக்கை எடுக்கக்கூடியதாயிருந்தால் எடுக்கப்பட்டிருக்கும். இன்று சென்னை சட்டசபையில் பிரதமர் சார்பில் தோழர் கோபால்ரெட்டி, கேள்வியொன்றுக்குப் பதில் கூறுகையில் குறிப்பிட்டார்.
விடுதலைப் பத்திரிகை பார்ப்பனர்களை மோசமாக தாக்கி வரவில்லையென்று டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் என்பவர் கேட்ட கேள்விக்கு மந்திரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தோழர் ரஸாகான் இந்தியத் துணைப் பிரதமர் இங்கு வந்திருந்த ஞான்று இம்மாகாணப் பத்திரிகைகளில் காணப்படும் எழுத்துக்கள் பற்றி குறிப்பிட்டார். அவர் எப்பத்திரிகைகளைக் குறிப்பிட்டாரென்று கூற முடியுமா?
மந்திரி: தேவையானால் துணைப் பிரதமரையே கேட்டுச் சொல்லுகிறோம்.
தோழர் என்.எம். அன்வர்: எல்லாப் பத்திரிகைகள் எனப்படுபவை களனைத்துமே கருஞ்சட்டையினரால் நடத்தப்படுகின்றனவா?
மந்திரி: எல்லாம் அல்ல.

“விடுதலை” 14.6.1949

விடுதலைக்கு 10,000 ரூ. ஜாமீன், சுயராஜ்ய சர்க்கார் விடுதலைக்கு 2000 ரூ. பறி முதல் செய்து 10,000 ரூ. புது ஜாமீன் கேட்டிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?
100க் கணக்கில் உங்கள் பணம் வந்து குவிய வேண்டும்!

“விடுதலை” 12.6.1949

விடுதலைமீது சர்க்கார் நடவடிக்கை

சண்டே அப்சர்வர் ஆசிரியர் கண்டனம்
பத்திரிகையாசிரியர்கள் கூட வேண்டும்
சென்னை, ஜூன் 13
சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பால சுப்பிரமணியம் பத்திரிகைகட்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடுவதாவது:
சர்க்காருக்கு எதிர்தரப்புக் கருத்துக்களை எடுத்துக் கூறி வரும் விடுதலை திராவிட நாடு ஆகிய இரு தமிழ்ப் பத்திரிகைகள் மீதும் சென்னை சர்க்கார் நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிகிறேன்.
இது சம்பந்தமாகப் பத்திரிகை ஆலோசனைக் கமிட்டியைக் கலந்து பேசி, சர்க்கார் முடிவு செய்தனரா என்பது எனக்குத் தெரியவில்லை. கலந்திருக்கும் பட்சத்தில், பத்திரிகைகளின் சுதந்திரத்திற்குப் பாடுபடுபவராகக் கருதப்படும் அகில இந்திய பத்திரிகாசிரியர் மாநாட்டுத் தலைவர் தோழர் சி.ஆர். சீனிவாசன், சர்க்காரின் இவ்விரைவான புத்திசாலித்தன மற்ற நடவடிக்கையை ஆமோதித்திருப்பாரென நான் நம்பவில்லை.
எனது மதிப்பிற்குரிய நண்பர் தோழர் சி.ஆர். சீனிவாசனை நான் கேட்டுக் கொள்வது யாதெனில், அவர் சர்க்காரிடம் இப்பிரச்சினையை யெழுப்பி நியாயங்காண வேண்டும்; அன்றியும் நகரப் பத்திரிகைகளனைத்தினுடையவும் ஆசிரியர்கள் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து, இவ்விஷயத்தைப் பற்றி ஆலோசித்து தக்க முடிவு செய்ய வேண்டும்.

“விடுதலை” 29.6.1949

காங்கிரஸ் ஏடே கண்டனம் விடுதலைக்கு 10,000 ரூபாய் ஜாமீன் கேட்டிருப்பதுபற்றி எழுதுகிற காங்கிரஸ் பத்திரிகையான காண்டிடம் கூறுவதிலிருந்து சில வாக்கியங்களைக் கீழே தருகிறோம்:
சென்னை மாகாணத்தில் எத்தனையோ கெடுபிடி கவர்னர்கள் ஆட்சி இருந்தபோதுகூட இவ்வளவு அதிகமான தொகையை யாரிடமும் கேட்டதில்லை. சென்னை சர்க்காரில் யாரோ துக்ளக் வர்க்கத்தவர் இருந்து கொண்டு இந்த ஹிட்லர் தர்பார் நடத்த வேண்டுமென்பது உறுதியாகிறது
வகுப்புவாத பூச்சாண்டி காட்டுகிற இந்தப் பேர் வழிகளே உள்ளும் புறமும் வகுப்பு வாதத்தை இரும்புப்பூண் போட்டுக் காப்பவர்கள்
விடுதலை எவ்வளவு வேகத்தில் வகுப்பு வாதப் பிரசாரம் செய்து வருகிறதோ அதே அளவு வேகத்தில் எதிர் சார்புப் பத்திரிகைகளும் செய்துவருகின்றன
ராமசாமி நாயக்கர் காங்கிரசிலிருந்து வெளிவந்த நாளிலிருந்து என்ன பிரசாரத்தை செய்து வந்தாரோ அதே பிரசாரத்தைத் தான் இன்றும் செய்து வருகிறார். அப்பிரசாரத்தைத்தான் விடுதலை செய்து வருகிறது இதில் புதிதாக ஒன்றுமேயில்லை.

“விடுதலை” 29.1.1951

பார்ப்பனர்களைப் பாருங்கள்!

தமிழ்ப் பெரு மக்களே!
புலவர்களே!
மாணாக்கர்களே!
தமிழில் பாடவேண்டும் என்று கிளர்ச்சி செய்ததற்காகப் பார்ப்பனர்கள் தெலுங்கில் பாடவேண்டும் – பாடினால்தான் மோட்சம், பாடாவிட்டால் பஞ்சமும் பட்டினியும் ஏற்படும் என்று மாநாடு கூட்டி அரசாங்க மந்திரியைக் கொண்டு வந்து சொல்லும்படி செய்துவிட்டார்கள். அய்க்கோர்ட் சீப் ஜட்ஜியைக் கொண்டு தாளம்போடச் செய்துவிட்டார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? குறளுக்கு கபிலர் அகவலுக்கு அல்லது வள்ளுவர், கபிலர், அவ்வைக்கு ஒரு மாநாடு கூட்டவேண்டாமா?
இதுவும் திராவிட கழகத்தார்தான் செய்ய வேண்டுமா? தியாகய்யர் விழாவிற்கு நமது வரிப்பணம் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாம்! அடிக்கொரு போலீசு, ஆகாயக்கப்பல், தனி வண்டி, மற்றும் சர்க்கார் சலுகை ஏராளம். வெட்கங்கெட்ட தமிழர், தாசி மக்கள் பலர் காசுங்கொடுத்து விழுந்தும் கும்பிட்டுத் திரும்பி இருக்கிறோம்.
நமக்குத் தனி நாடாம்!
சுதந்தரமாம்!!
சுயமரியாதையாம்!!
இதைப் பார்த்து பார்ப்பான் பின்பக்கம் சிரிக்க மாட்டானா?

“விடுதலை” 26.7.1953

ஆகஸ்டு கிளர்ச்சி இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டம்.

“விடுதலை” 7.3.1954

ஈழத் தமிழர் பிரச்சினை
இலங்கையிலுள்ள தமிழகத்தாரை விரட்ட அவசரச் சட்டம்! நேரு கொத்தலவாலா பேரம்.
இதன்படி இலங்கைக் குடியாக மனு செய்து கொண்டவர்களில் இதுவரை அங்கீகரிக்கப்படாத மனுதாரர்கள் இலங்கையர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவர். இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் நிலைதான் இது.

“விடுதலை” 30.3.1954

ஆச்சாரியார் (குலக்) கல்வித் திட்ட எதிர்ப்புப் பெரியார் படை அறிக்கை.

“விடுதலை” 11.5.1954

ஒழிந்தது குலக்கல்வி திட்டம் ஆச்சாரியார் புதிய கல்வித் திட்டத்தைக் கைவிட முடிவு. காங்கிரசு கட்சி சப் கமிட்டியின் தீர்மானம்.

“விடுதலை” 14.5.1954

ஒழிந்தது ஆச்சாரியாரால் ஏற்பட்ட தொல்லை!
சட்டசபை காங்கிரஸ் கட்சியில் ஆச்சாரியார் குலக் கல்வித் திட்டத்திற்கு தனி முழக்கம்.
சனியன் ஒழிந்தது என்ற மகிழ்ச்சி முழக்கம்.

“விடுதலை” 15.5.1954

ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்புப் படைக்கு சென்னையில் குதூகல வரவேற்பு ஆச்சாரியாரின் ஆணவ ஆட்சி ஒழிந்தது மகிழ்ச்சி காமராசர் மந்திரி சபையை ஆதரிக்க வேண்டியதேன்? பெரியார் விளக்கம்,

“விடுதலை” 17.9.1954

குப்பைத் தொட்டியில் இராமன்

நடிகவேள் எம்.ஆர். ராதாவின் நாடகத்தின் கதை வசனத்தைப் படித்துவிட்டு சென்னைக் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. அதன் விளைவாக தந்தை பெரியார் நான்கு நாள்கள் சென்னையில் இராமாயணம்பற்றி சொற்பொழிவாற்றினார். இதன் விளைவு நடிகவேள் எம்.ஆர். இராதாவின் நாடகத்துக்கு அனுமதி கிடைத்து விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தந்தை பெரியார் உரையையும், நடிகவேள் இராதாவின் நாடகத்தையும் கண்டு களித்தனர் – குலுங்கக் குலுக்கச் சிரித்து மகிழ்ந்தனர்.
இதன் விளைவு என்ன தெரியுமா? வீட்டில் மாட்டியிருந்த ராமன் படங்கள் வீடுகளை விட்டு வெளியேறி குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிட்டன.

“விடுதலை” 4.11.1957

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டம் – தஞ்சாவூரில் அறிவிப்பு.

“விடுதலை” 7.7.1959

ஆண்டாள் கோயிலைப் பார்

பெரியார் அடைந்த வேதனை!

25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார்கள். கோயில் சன்னதித் தூண்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களில் ஒன்றில் தமிழர் சமுதாயத்தை இழிவு படுத்தும் புராண வரலாற்றைக் கண்டு மனம் வருந்தினார்கள்.
இராவணன் தங்கை சூர்ப்பனகையை இராமன் தம்பியாகிய இலட்சுமணன் அவள் கொங்கையை வாளால் துண்டிக்கும் செயல் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருந்தது. இது கண்டு வெட்கமும், வேதனையும், ஆத்திரமும் படாத தமிழர் சமுதாயத்தின் நிலை கண்டு வருந்தினார்கள்.

“விடுதலை” 20.4.1960

கெடுவான் கேடு நினைப்பான்

இராமன் செத்த பின்பு நாட்டை இராவணன் பிள்ளைகள் தான் ஆண்டார்கள். ஆதலால் கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு வால்மீகி இராமாயணக் கதைப்படி தசரனும், இராமனுமே பொருத்தமான எடுத்துக்காட்டு ஆவார்கள்.

“விடுதலை” 29.3.1964

நீதிமன்ற நீதிக்கும்

நீதி சொல்லும் விடுதலை

சென்னை சட்டப் பேரவையில் உயர்ந்தபட்சம் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் ஒரு குடும்பம் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து சில நிலச்சுவான்தார்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
இதுகுறித்து தந்தை பெரியார் விடுதலையில் சுப்ரீம்கோர்ட் நீதிப் போக்கு கண்டன நாள் 29.3.1964 என்று தலைப்பிட்டு விடுதலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (14.3.1964)
அவ்வறிக்கையில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
முக்கியமான மூன்று கடமைகள்:
(1) பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தாக வேண்டும்.
(2) பத்திரிகைகளின் செல்வாக்கை அழிக்க வேண்டும்.
(3) நீதித்துறையில் நீதித் தீர்ப்புகளுக்கு உள்ள மரியாதையைக் கெடுத்தாக வேண்டும்.
இந்த மூன்று காரியங்களும் எந்த அளவுக்குச் செய்வதானாலும் அது நம்மால்தான் முடியக் கூடும்.
29.3.1964 ஞாயிற்றுக்கிழமை சுப்ரீம் கோர்ட் நீதிப் போக்குக் கண்டன நாள் என்று பெயரிட்டு விளம்பரம் செய்து அன்று நாடெங்கும் பொதுக் கூட்டங்கள் கூட்டி இந்த விஷயங்களைக் கொண்ட தீர்மானங்களை நிறைவேற்றி
(1) பிரதம நீதிபதி, சுப்ரீம் கோர்ட், புதுடில்லி.
(2) இந்தியக் குடியரசுத் தலைவர், புதுடில்லி
(3) இந்தியப் பிரதமர், புதுடில்லி
(4) விடுதலை காரியாலயம், சென்னை-2
ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்.
– ஈ.வெ. ராமசாமி
குறிப்பு: 29.3.1964 தேதிக்குப் பதிலாக 19.4.1964 ஞாயிற்றுக்கிழமையன்று சுப்ரீம் கோர்ட் கண்ட நாள் பொதுக் கூட்டம் மாற்றியமைப்பதாக தந்தை பெரியார் அறிவித்தார். (விடுதலை 27.3.1964)
குறிப்பு: பிற்காலத்தில் சட்டம் திருத்தப்பட்டது.

“விடுதலை” 6.4.1964

சர்.சி.பி.-க்குச் சவுக்கடி!

கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக வரும் பிள்ளைகள் எஸ்எஸ்எல்சி சர்கார் பரிட்சை தேறியிருந்தால் மட்டும் போதாது அவர்கள் கல்லூரித் தலைவர்கள் குறிப்பிடும் மார்க்கு பெற்று இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாத பிள்ைளகளைச் சேர்க்கக்் கூடாது என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சர் சிபி. இராமசாமி சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதனைக் கண்டித்து விடுதலையில் (6.4.1964 பக்கம் 2) தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
ஷெட்யூல்டு மக்களுக்கு இருப்பதுபோல சூத்திரர்கள் என்று சொல்லப்படும் மக்களுக்கும் விகிதாசார உரிமை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் தந்தை பெரியார்.

“விடுதலை” 20.4.1964

ஓடினார்! ஓடினார் நீதிபதி ஓடினார்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் இராமச்சந்திர அய்யர் என்பவர் தமது வயதைத் திருத்தி பதவியில் இருந்தார். கல்வி சம்பந்தமான ரிக்கார்டுகளில் கொடுத்துள்ள பிறந்த தேதி 2.1.1904. ஆனால் நீதித்துறையில் இவர் கொடுத்துள்ள தேதியோ 1.10.1904
இதுகுறித்து “விடுதலை” (20.4.1964) கண்டித்து தலையங்கம் தீட்டியது.
– 15ஆம் பக்கம் பார்க்க
யாராவது ஒரு அனாமதேயமான நபர் பிறந்த தேதியை மாற்றி விட்டால் உடனே தனது சி.அய்.டி. இலாகா உதவி கொண்டு, துப்புத் துலக்கி வழக்குப் போடுகின்றதே. இம்மாதிரி விஷயங்கள் வரும்போதும் அவசரமான அதிகக் கவலையும், கவனமும் செலுத்த வேண்டாமா?
பிரதம நீதிபதியாக இருக்கும் பெரிய அதிகாரி மீதே இப்படி புகார்கள் கிளம்பினால் அதுபற்றி அரசாங்கம் ஆராயாமல் இருந்தால் அந்நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே தோன்றுமா? என்று விடுதலை எழுதியது. அதன்பின் ராஜினாமா செய்து பதவியை விட்டு ஓடினார் அந்த நீதிபதி.

“விடுதலை” 23.5.1964

அம்பகரத்தூர் கிடா வெட்டுக்குக் கல்தா

புதுச்சேரி மாநிலம் அம்பகரத்தூரில் (காரைக்கால் வட்டம்) பத்திரகாளியம்மன் கோயில் பண்டிகையில் ஆண்டுதோறும் மகிஷாசுர சம்ஹாரம் என்னும் பெயரில் எருமைக்கிடா வெட்டப்பட்டு வருவது வாடிக்கை.
இந்தக் காட்டுமிராண்டித்தன்மையான நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டியது முக்கிய கடமை என்றாலும் அது சம்பந்தமான புராணக் கதை மிக மிகக் காட்டுமிராண்டித்தனமானது புராணங்களில் அசுரன் என்று குறிப்பிடப்படுவதெல்லாம் ஆரியர் அல்லாத திராவிடர்களையாகும் என்று எழுதினார் தந்தை பெரியார். விடுதலையில் அறிக்கையாவது: இதனை எதிர்த்துக் கிளர்ச்சியினை நடத்திட விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டங்களில் பேசவும், நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொள்ளவும் அங்கு சென்று கலந்து கொள்வார் என்று தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை விடுதலையில் வெளியிட்டார் (23.5.1964 பக்கம் 3)
அதன்படி 26.5.1964 அம்பகரத்தூரில் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது. அடுத்த ஆண்டு முதல் இது நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்து, அதன்படியே கிடா வெட்டு நிறுத்தப்பட்டது.
இது கழகத்திற்கும் விடுதலைக்கும் மகத்தான வெற்றியாகும்.

“விடுதலை” 2.8.1965

முதலமைச்சர் பக்தவத்சலத்துக்கு

ஒரு சாட்டை

எஸ்.எஸ்.எல்.சி., தேறியவர்கள் எல்லோருக்கும் கல்லூரிகளில் உயர்தரப் படிப்பு வசதி கொடுக்க வேண்டுமென்பது முடியாத காரியம்; இது எந்த நாட்டிலுமே இல்லாத காரியம் என்று சொன்னதைக் கண்டித்து விடுதலையில் (2.8.1965) தந்தை பெரியார் நமது முதல்வர் என்ற தலைப்பில் தலையங்க அறிக்கையினை வெளியிட்டார். இதுகுறித்து தந்தை பெரியார் தம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த காட்டுமிராண்டி நாடு தவிர, வேறு எந்த நாட்டிலும் மேல்ஜாதி (பார்ப்பன ஜாதி), கீழ் ஜாதி (அடிமை ஜாதி) என்கின்ற வகுப்பு (ஜாதி), இல்லையென்பதையும் மந்திரியார் உணர்ந்திருந்தால் அல்லது ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தால் எல்லோருக்கும் கொடுக்க இயலாது. எந்த நாட்டிலும் இயலாது என்ற சொற்களை உச்சரித்திருக்கவே மாட்டார் என்று எழுதிய தந்தை பெரியார் முதல் அமைச்சரைப் பார்த்து ஒரு வினாவை எழுப்பினார்.
இன்று எந்த எஸ்.எஸ்.எல்.சி., படித்த பார்ப்பன பையனுக்கு மேல் படிப்பு படிக்க இடமில்லை? நமக்கு மாத்திரம் ஏன் இயலாது? என்றார் – ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்களைத் திறந்த தந்தை பெரியார்.
சர்டிபிகேட்களில் மார்க் போடக் கூடாது. பாஸ் ஃபெயில் என்றுதான் போட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.

“விடுதலை” 12.5.1970

பாராளுமன்றத்தில் விடுதலை

பாராளுமன்ற மக்களவையில் விடுதலை கட்டுரைத் தொடர் இந்தியன் பாங்கா அக்கிரகாரமா கட்டுரையை மத்திய அரசு பார்த்தது. திமுக உறுப்பினர் கிருட்டிணன் கேள்விக்கு அமைச்சர் பதில்.

“விடுதலை” 10.4.1972

இரகசியக் குறிப்பேடு ஒழிப்பு

ஊழியர்க்கான ரகசியக் குறிப்பை எதிர்த்த ஒரே தலைவர் பெரியார். இதன் மூலம் அரசு ஊழியர்க்கும் சுயமரியாதையைத் தந்துவிட்டார்.
தமிழக என்.ஜி.ஜி.ஓ விழாவில் தந்தை பெரியாருக்குப் புகழாரம்!

6.4.1972 மாலை சென்னை ராஜாஜி ஹாலில் சென்னை மாநில என்.ஜிஜிஓக்கள் சங்க சார்பாக திமுக ஆட்சியானது அதற்கு முன்பு வரை இருந்து வந்த என்.ஜி.ஜி.ஓ.க்களுக்கு ரகசியக் குறிப்பு என்னும் பழி வாங்கும் திட்டத்தை ஒழித்தமைக்காக திமுக ஆட்சிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. மாநில சங்கத் தலைவர் சிவ. இளங்கோ தலைமை வகித்தார். விழாவில் முதல் அமைச்சர் கலைஞர், தந்தை பெரியார் ஆகியோர் பங்கேற்றனர்.

“விடுதலை” 14.2.1973

112 வருட வரலாற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பு உயர்நீதிமன்ற நீதிபதி!

விடுதலை செய்தி வருமாறு:
தந்தை பெரியார் அவர்களின் பல ஆண்டு காலப் போராட்டத்தின் விளைவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கனவே தமிழர்கள் பெரும் அளவில் நீதிபதி பதவியில் அமர்ந்து வருகிறார்கள். உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதி பதவி தரப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் இடைவிடாது வற்புறுத்தியிருக்கிறார்.
சில காலத்துக்கு முன் அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து முன்னிலையில் சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் மாநாடு ஒன்றில் தந்தை பெரியார் இந்தக் கோரிக்கையை மிகவும் வற்புறுத்தியது நினைவு இருக்கலாம் என்று விடுதலை குறிப்பிட்டு இருந்தது.

“விடுதலை” 14.4.1977

நுழைவுத் தேர்வு ரத்து

விடுதலை கோரிக்கைக்கு கைமேல் பலன். மெடிக் கல் என்ஜினியரிங் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. நேர்முகப் பேட்டி நீடிக்கும் தமிழக அரசு முடிவு இன்று அறிவிப்பு.

“விடுதலை” 25.1.1980

ஒழிந்தது வருமான வரம்பு

வெற்றி! வெற்றி! கழகக் கோரிக்கை மகத்தான வெற்றி. ஒன்பதாயிரம் ரூபாய் வரம்பாணை ரத்து! பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடும் 50 சதவீதம்!

“விடுதலை” 3.1.1986

ஈழத் தமிழர் வாழ்வுரிமை

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் அமெரிக்கா போயிருந்தபோது தெரிவித்த விருப்பத்தின்படி இலங்கைத் தமிழர் மீதான திட்டமிட்ட அழிப்பு முயற்சி தடுப்புக் குழு (Committee to stop systematic elimination of tamils in srilanka) என்ற பெயரில் குழு ஒன்று அமைக்கப்பட்ட செய்தியை (அமெரிக்கா) டாக்டர் சோம். இளங்கோவன் கடிதம் மூலம் அனுப்பிய தகவல் இன்றைய விடுதலையில் இடம் பெற்றது. விடுதலை 1.4.1986
டில்லி அரசை ஈர்க்க 4ஆம் தேதி மதுரையில் டெசோ மாநாடு ஈழத் தமிழர் பிரச்சினையில் புதிய திருப்பம்.

“விடுதலை” 23.11.1986

புலித் தலைவர் பிரபாகரனுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் தமிழர் தலைவர் வீரமணி.

“விடுதலை” 26.7.1987

கொழும்பு ஒப்பந்தம் எரிந்தது!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான ராஜீவ் ஜெயவர்த் தனா கொழும்பு ஒப்பந்தத நகல் தமிழகமெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் தீக்கிரையானது. இந்தச் சாம்பல் அடங்கிய உறைகள் டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் குவிந்தன.
சென்னையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கைதானார். மதுரையில் பழ. நெடுமாறன் கைதானார். திராவிடர் கழகமும் காமராஜர் காங்கிரசும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின.

“விடுதலை” 10.10.1987

31(சி) சட்டம் தேவை!

9.10.1987 அன்று புதுக்கோட்டையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31சி பிரிவின்படி இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை மாநில அரசுகளே இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதலைப் பெற்றுவிட்டால் அதற்குமேல் எந்தத் தடையும் ஏற்பட சட்ட ரீதியாக வழியில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகச் சட்டப் பேரவையில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது (31.12.1993) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“விடுதலை” 29.4.1989

கழகப் பொதுச்செயலாளரின் தேவைபற்றி சட்டமன்றத்தில்

குமரி மாவட்டத்து அழகப்பபுரத்தில் வானத்திலிருந்து பெய்த ரத்தத் துளி புரளிபற்றிய பேச்சு சட்டப் பேரவையில் இன்று எழுந்தது.
இந்திரா காங்கிரஸ் உறுப்பினர் குமரி அனந்தன் குறிப்பிடுகையில், பகுத்தறிவு ரீதியாக இதுபற்றி ஆராயத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி சேவையைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ளுமா? எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் வீரமணியின் சேவை தேவையெனில், அதைப் பயன்படுத்திக் கொள்ளும்படி நானே அரசுக்குப் பரிந்துரைப்பேன் என்றார்.

“விடுதலை” 28.9.1990

உண்ணாவிரதத்தை எதிர்த்து

உண்ணும் விரதம்

மண்டல்குழுப் பரிந்துரைகள் அமலாக்கத்தை எதிர்த்து நடத்தவிருந்த உண்ணாவிரதத்தை கை விடுவதாகப் பார்ப்பனர் சங்கம் அறிவித்ததை அடுத்து உண்ணும் விரதத்தையும் ரத்து செய்தது திராவிடர் கழகம்.

“விடுதலை” 13.10.1990

உச்சநீதிமன்ற நீதிபதிக்குக் கறுப்புக்கொடி!

மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கத்திற்குத் தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா சங்கராச்சாரிகள் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் வருவதாக இருந்தது. அப்படி வரும்போது காஞ்சிபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அறிவித்ததையடுத்து காஞ்சிபுரம் பயணத்தை ரத்து செய்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

“விடுதலை” 15.4.1991

பேய் பயத்தை விரட்டியது கழகம்

காஞ்சிபுரம் மாவட்டம் பேரம்பாக்கத்தில் பேய் குடி கொண்டிருப்பதாக நிலவிய பீதியை கருஞ்சட்டை படை அகற்றியது. கொளுத்தும் வெயிலில் 22 கிராமங்களில் கருஞ்சட்டைப் படை மின்னல் வேகப் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடத்தியது. பேய் இருந்ததாகக் கூறப்பட்ட கருவேல மரம் திராவிடர் கழக மகளிர் அணியினரால் மக்கள் முன்னிலையில் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டது; அத்தோடு அங்கு பேய் பயம் ஒழிந்தது.

“விடுதலை” 22.6.1992

தாழ்த்தப்பட்டவர் குடியரசுத் தலைவராக வேண்டும்

குடியரசுத் தலைவராக தாழ்த்தப்பட்டவரையே நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக பேரணியும் நடத்தப்பட்டடது. சென்னையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை ரிசர்வ் வங்கியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

“விடுதலை” 28.9.1992

யாகத்தை எதிர்த்து ‘விடுதலை’யின் வெற்றி

சென்னை ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் பார்ப்பன அலுவலர்கள் தீட்டுக் கழிப்பது என்ற பெயரால் நடத்தவிருந்த யாகத்தை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது விடுதலை எச்சரித்து செய்தி வெளியிட்டது.
வங்கி மேலாளர் ராமச்சந்திர ராஜூ வங்கியில் யாகம் நடத்துவதற்கு அனுமதியில்லை என்று அறிவித்து விட்டார்.

“விடுதலை” 17.11.1993

சமூகநீதியில் வெற்றி! வெற்றி!!

இந்திய அரசியல் கூட்டம் 31(சி) பிரிவின்கீழ் மாதிரி சட்டத்தை உருவாக்கி செய்தியாளர்களிடம் கொடுத்து. உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு முதலமைச்சருக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளரின் வேண்டுகோள் 17.11.1993.
அவ்வாறே 26.11.1993 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதனை தமிழக சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார் கழகப் பொதுச் செயலாளர். அனைத்துக் கட்சியினரும் ஒரு மனதாக ஏற்றனர். அதன்படி 30.12.1993 அன்று தமிழக சட்டப் பேரவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு மறுநாள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் கால தாமதம் ஆகும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரையும் பிரதமரையும் சந்தித்து வற்புறுத்த வேண்டும் என்று 14.6.1994 அன்று வேண்டுகோள் விடுத்தார் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி. அவ்வாறே அன்று மாலையே அ.இ.அ.தி.மு.க.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினர்.
குடியரசுத் தலைவரையும் பிரதமரையும் தூதுக்குழுவாகச் சென்று சந்திக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கழகப் பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டது 15.6.1994
25.6.1994 அன்று முதலமைச்சர் தலைமையில் தூதுக்குழு சென்று பிரதமரைச் சந்தித்தது!
கழகம் சொன்னதெல்லாம் நடந்தது! சமூகநீதியில் அக்கறை உள்ள அமைப்புகள், மக்கள் எல்லாம் ஆதரவு காட்டினார்கள். தமிழ்நாட்டு மண் தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண் என்று மீண்டும் வரலாற்றுக்கு நிரூபிக்கப்பட்டு விட்டது! காரிருள் அகன்றது. களிப்புற்றது தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல; இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும்தான்! இப்பொழுது 69 சதவீதம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது.

“விடுதலை” 4.1.2006

சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

“விடுதலை”- 13.3.2006

விடுதலை தலையங்கத்துக்குக் கிடைத்த வெற்றி

கிருட்டிணகிரி மாவட்டம் ஏ.மோட்டூரியில் உள்ள தொடக்கப் பள்ளி சத்துணவுக் கூடத்துக்கு சமையல் பணியாளராக நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மகேசுவரிக்கு ஊர் பொது மக்களின் நிர்ப்பந்தத்தினால் வழங்கப்பட்ட மாறுதல் ஆணையைக் கண்டித்து, திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம். விடுதலை தலையங்கம் (13.3.2006) ஆகியவற்றைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அப்பிரச்சினையில் தலையிட்டு, மாறுதல் உத்தரவை ரத்து செய்து, அதே ஊரில் அந்தப் பள்ளியிலேயே பணியாற்ற ஆணை பிறப்பித்தார்.

“விடுதலை” 10.10.1996

செயின்ட் கிட்ஸ் வழக்கு விடுதலையில் தொடர் கட்டுரை

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. வட அமெரிக்காவில் உள்ள செயின்ட் கிட்ஸ் தீவில் உள்ள ஒரு வங்கியில் வி.பி.சிங் அவர்கள் மகன் அஜேய்சிங் பெயரில் ஏராளம் பணம் போட்டுள்ளார் என்ற பொய்யான ஆவணங்களை ஒரு கும்பல் தயாரித்தது. அதன் பின்னணியில் சந்திராசாமியார், மேனாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். மாமாஜி, கல்பனாத்ராய், கே.கே. திவாரி என்ற ஒரு நீண்ட பார்ப்பனர் பட்டியல் உண்டு.
இது தொடர்பான வழக்கு மோசடிகள்பற்றி ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் தொடர் கட்டுரைகளை எழுதிப் பின்னர் நூலாகவும் வெளிவந்தது.

“விடுதலை” 18.7.1997

குடியரசுத் தலைவராக கே.ஆர். நாராயணன் வெற்றி பெற்றார். கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி.

“விடுதலை” 25.11.1998

சங்கராச்சாரியாருக்குக் கறுப்புக்கொடி

காஞ்சிபுரத்தில் இரயில்வே விழாவில் சங்கராச்சாரிகள் கலந்து கொள்வதாக வந்த அறிவிப்பையொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக உதவிப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். இதன் காரணமாக விழாவில் சங்கராச்சாரியார் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர்கள் மட்டுமே பங்கு கொண்டனர்.

“விடுதலை” 21.8.2006

அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகும் மசோதா சென்னை சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

“விடுதலை” 20.1.2006

பெரியாரும் பிரதமரும்

மக்கள் தொகையைக் குறைப்பதில் கட்டாயப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சீனா போன்ற நாடுகளிலேயே குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைக் கட்டாயப்படுத்தியும் பலன் ஏற்படவில்லை. பெண் குழந்தைகளுக்குக் கல்வியளித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிப்பதன் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியும். இதைச் செய்தால் பெண்கள் வெறும் குழந்தை பெறும் எந்திரமாக இருக்க மாட்டார்கள். (சமூகப் பிரச்சினைகள்பற்றிய பத்திரிகை. ஆசிரியர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங்) தந்தை பெரியார் அவர்களின் கருத்தை ஒரு வகையில் பிரதமர் எதிரொலிக்கிறார் அல்லவா?

“விடுதலை” 31.1.2006

காந்தியார் ஹேராம் சொன்னாரா?

காந்தியார் இறக்குமுன் ஹேராம் கூறினாரா?

காந்தியார் சுடப்பட்ட பொழுது நான் பாபுவுக்கு (காந்தியார்) பின்னால் இருந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை. உடனே அவர் இறந்து விட்டார்.
(காந்தியாரின் தனி உதவியாளர் வெங்கிட கல்யாணம் 30.12006 அன்று கொல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியது.)

“விடுதலை” 28.2.2007

தந்தை பெரியார் இறுதி முழக்கம் நனவாகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது.

“விடுதலை” 29.9.2007

வல்லம் பல்கலைக் கழகம் தொடக்க விழா

பெரியார் மணியம்மை மகளிர் பல்கலைக் கழகத் தொடக்க விழா தஞ்சாவூர் வல்லத்தில் பல்கலைக் கழக வேந்தர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் தொடங்கி வைத்தார்.

“விடுதலை” 31.1.1948

உத்தமர் உயிர் துறந்தார்!

காந்தியார் உயிரைக் குடித்த வெறியன் ஓர் மராத்தி ஹிந்து இந்திய வரலாற்றில் இரத்தக்கறை படிந்தது. அகிலம் அனைத்தும் துயரக் கடலில் ஆழ்ந்தியது!

“விடுதலை” 22.4.1964

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைவு!

இருதய நோயினால் அவதியுற்று சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இன்று காலை இயற்கை எய்தினார், சுயமரியாதை கருத்துக்களை கவிதைகள் மூலம் பரப்பிய சுடரொளி அணைந்தது! சடலம் புதுவையில் நாளை அடக்கம்.

விடுதலை” 3.2.1969

அண்ணா மறைவு

அந்தோ, பேரிடி! பெரும் அதிர்ச்சி!

அய்யாவின் தலைமகன்

அண்ணா மறைந்தார்

துயரக்கடலில் தவிக்கிறது தமிழ்நாடு! கடும் பனியில் நடுநிசியில் தனயனுக்கு தந்தை இறுதி மரியாதை செலுத்திய நெஞ்சுறுக்கும் காட்சி

“நடக்கக் கூடாதது நடந்து விட்டது”

தந்தை பெரியார் துயரச் செய்தி

நடக்கக் கூடாதது நடந்து விட்டது. எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது. நாலு கோடி மக்களையும் பொறுத்த, பெரிய பரிகாரம் செய்ய முடியாத துக்க சம்பவம் ஆகும்.

“விடுதலை” 24.12.1973

தந்தை பெரியார் மறைந்தார்.

பெரியார் பல்லாண்டு வாழ்க

கலைஞர் இரங்கல் செய்தி!

காமராஜர் இரங்கல்

நாவலர் இரங்கல்

“விடுதலை” 26.12.1974

“இராவண லீலா”

ஆரியராமன் கும்பல் எரிகிறது

புதிய வரலாறு படைத்துவிட்டது ராவண லீலா ராமன், சீதை, லட்சுமணன் உருவங்கட்குத் தீ எரிதணலில் கருகியது ஆரியக் கும்பல் அன்னையார் மூட்டிய தீ நாடெங்கும் எரிகிறது. எரிகிறது (25.12.1974)

“விடுதலை” 16.3.1978

அந்தோ, இயக்கத்துக்கு மாபெரும் பேரிடி! அன்னையார் மறைவு!

கழகத் தலைவர் அம்மா மறைந்தார்கள். பகல் 1.5 மணிக்கு மருத்துவமனையில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. தந்தை பெரியார் நினைவிடம் அருகே நாளை மாலை உடல் அடக்கம்!

“விடுதலை” 14.11.1936

மித்திரன், மெயில், ஹிந்து, பத்திரிகைகளுக்கு சவால்; சத்தியமூர்த்தி சலசலப்பை கேட்டீர்களா!

சுடச்சுட சுயராஜ்யம் கொண்டு வரப் போகிறாராம்!
வரட்டுமே! வந்தால் நமக்குப் பங்குண்டல்லவா!
வருமா? என்பதுதான் கேள்வி!

“விடுதலை” 28.4.1939

பேரன்புடையீர்!

வேண்டுகோள்
நமது பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் சிறைபுகுந்துள்ள இச்சமயத்தில் தமிழர் முன்னேற்றத்திற்கு உழைக்கும் தமிழ் தினசரி விடுதலை பத்திரிகையை தமிழ் மக்கள் ஆதரித்தும், பொருளுதவி செய்தும். நன்கொடை வசூலித்தும், சந்தாக்கள் சேர்த்து அனுப்பியும் விடுதலை பத்திரிகை வளர்ச்சியடைச் செய்யுமாறு நமது தோழர்களை வேண்டுகிறோம்.
தங்களன்புள்ள
ஈரோடு அ.பொன்னம்பலம்
28.4.1939 ஆசிரியர் விடுதலை

“விடுதலை” 11.8.1939

1939-ஆம் ஆண்டிலேயே

ஈழத் தமிழர் பிரச்சினை

இன்று நேற்றல்ல, 1939ஆம் ஆண்டிலேயே ஈழத் தமிழர் பற்றி கழகம் அக்கறை செலுத்தியுள்ளது. இதோ ஆதாரம்:
தீர்மானம்:
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகக் கமிட்டிக் கூட்டம் 10.8.1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும். அவர்களை நாட்டைவிட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வே. ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார். சர்.ஏ.டி பன்னீர்செல்வம், ஊபுஅ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“விடுதலை” 16.8.1943

முகம்மதலி ஜின்னாவின் கடிதம்

அன்புள்ள இராமசுவாமி.

தங்கள் அனுதாபத்துக்கும் வாழ்த்துக்கும் அநேக நன்றி செலுத்துகிறேன். நல்ல வேளையாக எனக்கு அபாயகரமான காயம் ஒன்றும் ஏற்படவில்லை. மேலும், அதி சீக்கிரமாகக் குணமாகிக் கொண்டும் வருகிறேன்.
தங்கள் அன்புள்ள
எம்.ஏ. ஜின்னா

“விடுதலை” 30.7.1947

“விடுதலை” வெளியிட்ட வ.உ.சி.யின் கருத்து

இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டுகளையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லாதாரின் பொருள்கள்
கொள்ளையிடப்படுவதையும், பிராமணரல்லாதார், தாழ்த்தப்படுவதையும், அக்கொள்கையினின்றும். தாழ்வினின்றும் பிராமணரல்லாதார் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் எல்லோருக்கும் விளங்க வைக்க வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

– வ.உ. சிதம்பரனார்

“விடுதலை” 6.8.1947

ஆகஸ்ட் 15இல் பச்சை வர்ணாசிரம ஆட்சி ஆரம்பம் காங்கிரசின் எதேச்சாதிகாரமே பாகிஸ்தானை உருவாக்கியது. திராவிடர் அனைவரும் ஒன்றுபட்டுத் தனி ஆட்சியைப் பெற்றே தீருவோம் இந்துஸ்தான் அ.நி. (அரசியல் நிர்ணய சபை) பற்றி பெரியார் அறிக்கை.

“விடுதலை” 5.8.-1948

பள்ளியில் விடுதலை வைத்திருந்ததற்காக…

மாணவர்களுக்கு அபராதம்!

திருப்பாப்புலியூர், ஆக. 3 இவ்வூர் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் (பாரம்) படிக்கும் மாணவத் தோழர்களான சந்தானம், இராசரத்தினம் இருவரும் வகுப்பில் விடுதலைப் பத்திரிகை வைத்திருந்ததற்காக பார்ப்பன ஆசிரியரொருவரால் முறையே தலைக்கு நான்கணா விழுக்காடு தண்டம் விதிக்கப்பட்டது.

“விடுதலை” 8.2.1949,

குடந்தையில் காங்கிரஸ் வீரர்களின்

அஹிம்சாப் போர்!

விடுதலை விநியோகஸ்தர் மீது

பாய்ச்சலும் பிடுங்கலும்!
(ட்ரங்க் டெலிபோன் மூலம்)
கும்பகோணம், பிப்.8 இவ்வூரில் நாள்தோறும் விடுதலை விநியோகிக்கும் பையன் இன்று கருப்புச் சட்டையணிந்து விடுதலை இதழ்களுடன் கர்ண கொல்லைத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருக்கையில் காங்கிரஸ் காலிகள் சிலர், பையனை வழிமறித்து கண்டபடி திட்டி, அணிந்திருந்த கருஞ்சட்டையை இழுத்துப் பிடுங்கி, எறிந்திருக்கின்றனர். அன்றியும் பையன் வசமிருந்த பத்திரிகைகளையும் கொளுத்தியிருக்கின்றனர்.
உள்ளூர் கழகத் தோழர்கட்கு இச்செய்தி எட்டியதும், ஆத்திரம் மிகுந்து பரபரப்பு ஏற்பட்டது. எனினும், கழக முக்கியஸ்தர்களின் தலையீட்டின்பேரில் பொறுமை மேற்கொள்ளப்பட்டது.

“விடுதலை” 1.3.1949

“விடுதலை” மீது இன்னும் வஞ்சமா?

சட்ட விரோதமான விஷயங்கள் அதில் எழுதப்படவில்லை

சட்டசபையில் சர்க்கார் பதில்

சென்னை, பெப்.28
விடுதலை போன்ற பத்திரிகைகள்மீது வந்த புகார்களை சர்க்கார் தீவிரபரிசீலனை செய்து பார்த்தனர். அப்பத்திரிகைகளில் காணப்படும் கட்டுரைகளும் பிறவும் சட்டப்படி ஆட்சேபிக்கப்பட முடியாதவையென்று கண்டறியப்பட்டதால் அவைகள்மீது நடவடிக்கை எடுக்க இயலாததென்று முடிவுக்கு சர்க்கார் வந்து விட்டனர். நடவடிக்கை எடுக்கக்கூடியதாயிருந்தால் எடுக்கப்பட்டிருக்கும். இன்று சென்னை சட்டசபையில் பிரதமர் சார்பில் தோழர் கோபால்ரெட்டி, கேள்வியொன்றுக்குப் பதில் கூறுகையில் குறிப்பிட்டார்.
விடுதலைப் பத்திரிகை பார்ப்பனர்களை மோசமாக தாக்கி வரவில்லையென்று டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் என்பவர் கேட்ட கேள்விக்கு மந்திரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தோழர் ரஸாகான் இந்தியத் துணைப் பிரதமர் இங்கு வந்திருந்த ஞான்று இம்மாகாணப் பத்திரிகைகளில் காணப்படும் எழுத்துக்கள் பற்றி குறிப்பிட்டார். அவர் எப்பத்திரிகைகளைக் குறிப்பிட்டாரென்று கூற முடியுமா?
மந்திரி: தேவையானால் துணைப் பிரதமரையே கேட்டுச் சொல்லுகிறோம்.
தோழர் என்.எம். அன்வர்: எல்லாப் பத்திரிகைகள் எனப்படுபவை களனைத்துமே கருஞ்சட்டையினரால் நடத்தப்படுகின்றனவா?
மந்திரி: எல்லாம் அல்ல.

“விடுதலை” 14.6.1949

விடுதலைக்கு 10,000 ரூ. ஜாமீன், சுயராஜ்ய சர்க்கார் விடுதலைக்கு 2000 ரூ. பறி முதல் செய்து 10,000 ரூ. புது ஜாமீன் கேட்டிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?
100க் கணக்கில் உங்கள் பணம் வந்து குவிய வேண்டும்!

“விடுதலை” 12.6.1949

விடுதலைமீது சர்க்கார் நடவடிக்கை

சண்டே அப்சர்வர் ஆசிரியர் கண்டனம்

பத்திரிகையாசிரியர்கள் கூட வேண்டும்
சென்னை, ஜூன் 13
சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பால சுப்பிரமணியம் பத்திரிகைகட்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடுவதாவது:
சர்க்காருக்கு எதிர்தரப்புக் கருத்துக்களை எடுத்துக் கூறி வரும் விடுதலை திராவிட நாடு ஆகிய இரு தமிழ்ப் பத்திரிகைகள் மீதும் சென்னை சர்க்கார் நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிகிறேன்.
இது சம்பந்தமாகப் பத்திரிகை ஆலோசனைக் கமிட்டியைக் கலந்து பேசி, சர்க்கார் முடிவு செய்தனரா என்பது எனக்குத் தெரியவில்லை. கலந்திருக்கும் பட்சத்தில், பத்திரிகைகளின் சுதந்திரத்திற்குப் பாடுபடுபவராகக் கருதப்படும் அகில இந்திய பத்திரிகாசிரியர் மாநாட்டுத் தலைவர் தோழர் சி.ஆர். சீனிவாசன், சர்க்காரின் இவ்விரைவான புத்திசாலித்தன மற்ற நடவடிக்கையை ஆமோதித்திருப்பாரென நான் நம்பவில்லை.
எனது மதிப்பிற்குரிய நண்பர் தோழர் சி.ஆர். சீனிவாசனை நான் கேட்டுக் கொள்வது யாதெனில், அவர் சர்க்காரிடம் இப்பிரச்சினையை யெழுப்பி நியாயங்காண வேண்டும்; அன்றியும் நகரப் பத்திரிகைகளனைத்தினுடையவும் ஆசிரியர்கள் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து, இவ்விஷயத்தைப் பற்றி ஆலோசித்து தக்க முடிவு செய்ய வேண்டும்.

“விடுதலை” 29.6.1949

காங்கிரஸ் ஏடே கண்டனம் விடுதலைக்கு 10,000 ரூபாய் ஜாமீன் கேட்டிருப்பதுபற்றி எழுதுகிற காங்கிரஸ் பத்திரிகையான காண்டிடம் கூறுவதிலிருந்து சில வாக்கியங்களைக் கீழே தருகிறோம்:
சென்னை மாகாணத்தில் எத்தனையோ கெடுபிடி கவர்னர்கள் ஆட்சி இருந்தபோதுகூட இவ்வளவு அதிகமான தொகையை யாரிடமும் கேட்டதில்லை. சென்னை சர்க்காரில் யாரோ துக்ளக் வர்க்கத்தவர் இருந்து கொண்டு இந்த ஹிட்லர் தர்பார் நடத்த வேண்டுமென்பது உறுதியாகிறது
வகுப்புவாத பூச்சாண்டி காட்டுகிற இந்தப் பேர் வழிகளே உள்ளும் புறமும் வகுப்பு வாதத்தை இரும்புப்பூண் போட்டுக் காப்பவர்கள்
விடுதலை எவ்வளவு வேகத்தில் வகுப்பு வாதப் பிரசாரம் செய்து வருகிறதோ அதே அளவு வேகத்தில் எதிர் சார்புப் பத்திரிகைகளும் செய்துவருகின்றன
ராமசாமி நாயக்கர் காங்கிரசிலிருந்து வெளிவந்த நாளிலிருந்து என்ன பிரசாரத்தை செய்து வந்தாரோ அதே பிரசாரத்தைத் தான் இன்றும் செய்து வருகிறார். அப்பிரசாரத்தைத்தான் விடுதலை செய்து வருகிறது இதில் புதிதாக ஒன்றுமேயில்லை.

“விடுதலை” 29.1.1951

பார்ப்பனர்களைப் பாருங்கள்!

தமிழ்ப் பெரு மக்களே!

புலவர்களே!

மாணாக்கர்களே!
தமிழில் பாடவேண்டும் என்று கிளர்ச்சி செய்ததற்காகப் பார்ப்பனர்கள் தெலுங்கில் பாடவேண்டும் – பாடினால்தான் மோட்சம், பாடாவிட்டால் பஞ்சமும் பட்டினியும் ஏற்படும் என்று மாநாடு கூட்டி அரசாங்க மந்திரியைக் கொண்டு வந்து சொல்லும்படி செய்துவிட்டார்கள். அய்க்கோர்ட் சீப் ஜட்ஜியைக் கொண்டு தாளம்போடச் செய்துவிட்டார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? குறளுக்கு கபிலர் அகவலுக்கு அல்லது வள்ளுவர், கபிலர், அவ்வைக்கு ஒரு மாநாடு கூட்டவேண்டாமா?
இதுவும் திராவிட கழகத்தார்தான் செய்ய வேண்டுமா? தியாகய்யர் விழாவிற்கு நமது வரிப்பணம் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாம்! அடிக்கொரு போலீசு, ஆகாயக்கப்பல், தனி வண்டி, மற்றும் சர்க்கார் சலுகை ஏராளம். வெட்கங்கெட்ட தமிழர், தாசி மக்கள் பலர் காசுங்கொடுத்து விழுந்தும் கும்பிட்டுத் திரும்பி இருக்கிறோம்.
நமக்குத் தனி நாடாம்!
சுதந்தரமாம்!!
சுயமரியாதையாம்!!
இதைப் பார்த்து பார்ப்பான் பின்பக்கம் சிரிக்க மாட்டானா?

“விடுதலை” 26.7.1953

ஆகஸ்டு கிளர்ச்சி இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டம்.

“விடுதலை” 7.3.1954

ஈழத் தமிழர் பிரச்சினை

இலங்கையிலுள்ள தமிழகத்தாரை விரட்ட அவசரச் சட்டம்! நேரு கொத்தலவாலா பேரம்.
இதன்படி இலங்கைக் குடியாக மனு செய்து கொண்டவர்களில் இதுவரை அங்கீகரிக்கப்படாத மனுதாரர்கள் இலங்கையர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவர். இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் நிலைதான் இது.

“விடுதலை” 30.3.1954

ஆச்சாரியார் (குலக்) கல்வித் திட்ட எதிர்ப்புப் பெரியார் படை அறிக்கை.

“விடுதலை” 11.5.1954

ஒழிந்தது குலக்கல்வி திட்டம் ஆச்சாரியார் புதிய கல்வித் திட்டத்தைக் கைவிட முடிவு. காங்கிரசு கட்சி சப் கமிட்டியின் தீர்மானம்.

“விடுதலை” 14.5.1954

ஒழிந்தது ஆச்சாரியாரால் ஏற்பட்ட தொல்லை!

சட்டசபை காங்கிரஸ் கட்சியில் ஆச்சாரியார் குலக் கல்வித் திட்டத்திற்கு தனி முழக்கம்.
சனியன் ஒழிந்தது என்ற மகிழ்ச்சி முழக்கம்.

“விடுதலை” 15.5.1954

ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்புப் படைக்கு சென்னையில் குதூகல வரவேற்பு ஆச்சாரியாரின் ஆணவ ஆட்சி ஒழிந்தது மகிழ்ச்சி காமராசர் மந்திரி சபையை ஆதரிக்க வேண்டியதேன்? பெரியார் விளக்கம்.

“விடுதலை” 17.9.1954

குப்பைத் தொட்டியில் இராமன்

நடிகவேள் எம்.ஆர். ராதாவின் நாடகத்தின் கதை வசனத்தைப் படித்துவிட்டு சென்னைக் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. அதன் விளைவாக தந்தை பெரியார் நான்கு நாள்கள் சென்னையில் இராமாயணம்பற்றி சொற்பொழிவாற்றினார். இதன் விளைவு நடிகவேள் எம்.ஆர். இராதாவின் நாடகத்துக்கு அனுமதி கிடைத்து விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தந்தை பெரியார் உரையையும், நடிகவேள் இராதாவின் நாடகத்தையும் கண்டு களித்தனர் – குலுங்கக் குலுக்கச் சிரித்து மகிழ்ந்தனர்.
இதன் விளைவு என்ன தெரியுமா? வீட்டில் மாட்டியிருந்த ராமன் படங்கள் வீடுகளை விட்டு வெளியேறி குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிட்டன.

“விடுதலை” 4.11.1957

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டம் – தஞ்சாவூரில் அறிவிப்பு.

“விடுதலை” 7.7.1959

ஆண்டாள் கோயிலைப் பார்

பெரியார் அடைந்த வேதனை!

25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார்கள். கோயில் சன்னதித் தூண்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களில் ஒன்றில் தமிழர் சமுதாயத்தை இழிவு படுத்தும் புராண வரலாற்றைக் கண்டு மனம் வருந்தினார்கள்.
இராவணன் தங்கை சூர்ப்பனகையை இராமன் தம்பியாகிய இலட்சுமணன் அவள் கொங்கையை வாளால் துண்டிக்கும் செயல் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருந்தது. இது கண்டு வெட்கமும், வேதனையும், ஆத்திரமும் படாத தமிழர் சமுதாயத்தின் நிலை கண்டு வருந்தினார்கள்.

“விடுதலை” 20.4.1960

கெடுவான் கேடு நினைப்பான்

இராமன் செத்த பின்பு நாட்டை இராவணன் பிள்ளைகள் தான் ஆண்டார்கள். ஆதலால் கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு வால்மீகி இராமாயணக் கதைப்படி தசரனும், இராமனுமே பொருத்தமான எடுத்துக்காட்டு ஆவார்கள்.

“விடுதலை” 29.3.1964

நீதிமன்ற நீதிக்கும்

நீதி சொல்லும் விடுதலை

சென்னை சட்டப் பேரவையில் உயர்ந்தபட்சம் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் ஒரு குடும்பம் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து சில நிலச்சுவான்தார்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
இதுகுறித்து தந்தை பெரியார் விடுதலையில் சுப்ரீம்கோர்ட் நீதிப் போக்கு கண்டன நாள் 29.3.1964 என்று தலைப்பிட்டு விடுதலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (14.3.1964)
அவ்வறிக்கையில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
முக்கியமான மூன்று கடமைகள்:
(1) பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தாக வேண்டும்.
(2) பத்திரிகைகளின் செல்வாக்கை அழிக்க வேண்டும்.
(3) நீதித்துறையில் நீதித் தீர்ப்புகளுக்கு உள்ள மரியாதையைக் கெடுத்தாக வேண்டும்.
இந்த மூன்று காரியங்களும் எந்த அளவுக்குச் செய்வதானாலும் அது நம்மால்தான் முடியக் கூடும்.
29.3.1964 ஞாயிற்றுக்கிழமை சுப்ரீம் கோர்ட் நீதிப் போக்குக் கண்டன நாள் என்று பெயரிட்டு விளம்பரம் செய்து அன்று நாடெங்கும் பொதுக் கூட்டங்கள் கூட்டி இந்த விஷயங்களைக் கொண்ட தீர்மானங்களை நிறைவேற்றி
(1) பிரதம நீதிபதி, சுப்ரீம் கோர்ட், புதுடில்லி.
(2) இந்தியக் குடியரசுத் தலைவர், புதுடில்லி
(3) இந்தியப் பிரதமர், புதுடில்லி
(4) விடுதலை காரியாலயம், சென்னை-2
ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்.
– ஈ.வெ. ராமசாமி
குறிப்பு: 29.3.1964 தேதிக்குப் பதிலாக 19.4.1964 ஞாயிற்றுக்கிழமையன்று சுப்ரீம் கோர்ட் கண்ட நாள் பொதுக் கூட்டம் மாற்றியமைப்பதாக தந்தை பெரியார் அறிவித்தார். (விடுதலை 27.3.1964)
குறிப்பு: பிற்காலத்தில் சட்டம் திருத்தப்பட்டது.

“விடுதலை” 6.4.1964

சர்.சி.பி.-க்குச் சவுக்கடி!

கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக வரும் பிள்ளைகள் எஸ்எஸ்எல்சி சர்கார் பரிட்சை தேறியிருந்தால் மட்டும் போதாது அவர்கள் கல்லூரித் தலைவர்கள் குறிப்பிடும் மார்க்கு பெற்று இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாத பிள்ைளகளைச் சேர்க்கக்் கூடாது என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சர் சிபி. இராமசாமி சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதனைக் கண்டித்து விடுதலையில் (6.4.1964 பக்கம் 2) தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
ஷெட்யூல்டு மக்களுக்கு இருப்பதுபோல சூத்திரர்கள் என்று சொல்லப்படும் மக்களுக்கும் விகிதாசார உரிமை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் தந்தை பெரியார்.

“விடுதலை” 20.4.1964

ஓடினார்! ஓடினார் நீதிபதி ஓடினார்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் இராமச்சந்திர அய்யர் என்பவர் தமது வயதைத் திருத்தி பதவியில் இருந்தார். கல்வி சம்பந்தமான ரிக்கார்டுகளில் கொடுத்துள்ள பிறந்த தேதி 2.1.1904. ஆனால் நீதித்துறையில் இவர் கொடுத்துள்ள தேதியோ 1.10.1904
இதுகுறித்து “விடுதலை” (20.4.1964) கண்டித்து தலையங்கம் தீட்டியது.

யாராவது ஒரு அனாமதேயமான நபர் பிறந்த தேதியை மாற்றி விட்டால் உடனே தனது சி.அய்.டி. இலாகா உதவி கொண்டு, துப்புத் துலக்கி வழக்குப் போடுகின்றதே. இம்மாதிரி விஷயங்கள் வரும்போதும் அவசரமான அதிகக் கவலையும், கவனமும் செலுத்த வேண்டாமா?
பிரதம நீதிபதியாக இருக்கும் பெரிய அதிகாரி மீதே இப்படி புகார்கள் கிளம்பினால் அதுபற்றி அரசாங்கம் ஆராயாமல் இருந்தால் அந்நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே தோன்றுமா? என்று விடுதலை எழுதியது. அதன்பின் ராஜினாமா செய்து பதவியை விட்டு ஓடினார் அந்த நீதிபதி.

“விடுதலை” 23.5.1964

அம்பகரத்தூர் கிடா வெட்டுக்குக் கல்தா

புதுச்சேரி மாநிலம் அம்பகரத்தூரில் (காரைக்கால் வட்டம்) பத்திரகாளியம்மன் கோயில் பண்டிகையில் ஆண்டுதோறும் மகிஷாசுர சம்ஹாரம் என்னும் பெயரில் எருமைக்கிடா வெட்டப்பட்டு வருவது வாடிக்கை.
இந்தக் காட்டுமிராண்டித்தன்மையான நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டியது முக்கிய கடமை என்றாலும் அது சம்பந்தமான புராணக் கதை மிக மிகக் காட்டுமிராண்டித்தனமானது புராணங்களில் அசுரன் என்று குறிப்பிடப்படுவதெல்லாம் ஆரியர் அல்லாத திராவிடர்களையாகும் என்று எழுதினார் தந்தை பெரியார். விடுதலையில் அறிக்கையாவது: இதனை எதிர்த்துக் கிளர்ச்சியினை நடத்திட விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டங்களில் பேசவும், நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொள்ளவும் அங்கு சென்று கலந்து கொள்வார் என்று தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை விடுதலையில் வெளியிட்டார் (23.5.1964 பக்கம் 3)
அதன்படி 26.5.1964 அம்பகரத்தூரில் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது. அடுத்த ஆண்டு முதல் இது நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்து, அதன்படியே கிடா வெட்டு நிறுத்தப்பட்டது.
இது கழகத்திற்கும் விடுதலைக்கும் மகத்தான வெற்றியாகும்.

“விடுதலை” 2.8.1965

முதலமைச்சர் பக்தவத்சலத்துக்கு

ஒரு சாட்டை

எஸ்.எஸ்.எல்.சி., தேறியவர்கள் எல்லோருக்கும் கல்லூரிகளில் உயர்தரப் படிப்பு வசதி கொடுக்க வேண்டுமென்பது முடியாத காரியம்; இது எந்த நாட்டிலுமே இல்லாத காரியம் என்று சொன்னதைக் கண்டித்து விடுதலையில் (2.8.1965) தந்தை பெரியார் நமது முதல்வர் என்ற தலைப்பில் தலையங்க அறிக்கையினை வெளியிட்டார். இதுகுறித்து தந்தை பெரியார் தம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த காட்டுமிராண்டி நாடு தவிர, வேறு எந்த நாட்டிலும் மேல்ஜாதி (பார்ப்பன ஜாதி), கீழ் ஜாதி (அடிமை ஜாதி) என்கின்ற வகுப்பு (ஜாதி), இல்லையென்பதையும் மந்திரியார் உணர்ந்திருந்தால் அல்லது ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தால் எல்லோருக்கும் கொடுக்க இயலாது. எந்த நாட்டிலும் இயலாது என்ற சொற்களை உச்சரித்திருக்கவே மாட்டார் என்று எழுதிய தந்தை பெரியார் முதல் அமைச்சரைப் பார்த்து ஒரு வினாவை எழுப்பினார்.
இன்று எந்த எஸ்.எஸ்.எல்.சி., படித்த பார்ப்பன பையனுக்கு மேல் படிப்பு படிக்க இடமில்லை? நமக்கு மாத்திரம் ஏன் இயலாது? என்றார் – ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்களைத் திறந்த தந்தை பெரியார்.
சர்டிபிகேட்களில் மார்க் போடக் கூடாது. பாஸ் ஃபெயில் என்றுதான் போட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.

“விடுதலை” 12.5.1970

பாராளுமன்றத்தில் விடுதலை

பாராளுமன்ற மக்களவையில் விடுதலை கட்டுரைத் தொடர் இந்தியன் பாங்கா அக்கிரகாரமா கட்டுரையை மத்திய அரசு பார்த்தது. திமுக உறுப்பினர் கிருட்டிணன் கேள்விக்கு அமைச்சர் பதில்.

“விடுதலை” 10.4.1972

இரகசியக் குறிப்பேடு ஒழிப்பு

ஊழியர்க்கான ரகசியக் குறிப்பை எதிர்த்த ஒரே தலைவர் பெரியார். இதன் மூலம் அரசு ஊழியர்க்கும் சுயமரியாதையைத் தந்துவிட்டார்.
தமிழக என்.ஜி.ஜி.ஓ விழாவில் தந்தை பெரியாருக்குப் புகழாரம்!
6.4.1972 மாலை சென்னை ராஜாஜி ஹாலில் சென்னை மாநில என்.ஜிஜிஓக்கள் சங்க சார்பாக திமுக ஆட்சியானது அதற்கு முன்பு வரை இருந்து வந்த என்.ஜி.ஜி.ஓ.க்களுக்கு ரகசியக் குறிப்பு என்னும் பழி வாங்கும் திட்டத்தை ஒழித்தமைக்காக திமுக ஆட்சிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. மாநில சங்கத் தலைவர் சிவ. இளங்கோ தலைமை வகித்தார். விழாவில் முதல் அமைச்சர் கலைஞர், தந்தை பெரியார் ஆகியோர் பங்கேற்றனர்.

“விடுதலை” 14.2.1973

112 வருட வரலாற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பு உயர்நீதிமன்ற நீதிபதி!

விடுதலை செய்தி வருமாறு:
தந்தை பெரியார் அவர்களின் பல ஆண்டு காலப் போராட்டத்தின் விளைவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கனவே தமிழர்கள் பெரும் அளவில் நீதிபதி பதவியில் அமர்ந்து வருகிறார்கள். உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதி பதவி தரப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் இடைவிடாது வற்புறுத்தியிருக்கிறார்.
சில காலத்துக்கு முன் அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து முன்னிலையில் சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் மாநாடு ஒன்றில் தந்தை பெரியார் இந்தக் கோரிக்கையை மிகவும் வற்புறுத்தியது நினைவு இருக்கலாம் என்று விடுதலை குறிப்பிட்டு இருந்தது.

“விடுதலை” 14.4.1977

நுழைவுத் தேர்வு ரத்து

விடுதலை கோரிக்கைக்கு கைமேல் பலன். மெடிக் கல் என்ஜினியரிங் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. நேர்முகப் பேட்டி நீடிக்கும் தமிழக அரசு முடிவு இன்று அறிவிப்பு.

“விடுதலை” 25.1.1980

ஒழிந்தது வருமான வரம்பு

வெற்றி! வெற்றி! கழகக் கோரிக்கை மகத்தான வெற்றி. ஒன்பதாயிரம் ரூபாய் வரம்பாணை ரத்து! பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடும் 50 சதவீதம்!

“விடுதலை” 3.1.1986

ஈழத் தமிழர் வாழ்வுரிமை

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் அமெரிக்கா போயிருந்தபோது தெரிவித்த விருப்பத்தின்படி இலங்கைத் தமிழர் மீதான திட்டமிட்ட அழிப்பு முயற்சி தடுப்புக் குழு (Committee to stop systematic elimination of tamils in srilanka) என்ற பெயரில் குழு ஒன்று அமைக்கப்பட்ட செய்தியை (அமெரிக்கா) டாக்டர் சோம். இளங்கோவன் கடிதம் மூலம் அனுப்பிய தகவல் இன்றைய விடுதலையில் இடம் பெற்றது. விடுதலை 1.4.1986
டில்லி அரசை ஈர்க்க 4ஆம் தேதி மதுரையில் டெசோ மாநாடு ஈழத் தமிழர் பிரச்சினையில் புதிய திருப்பம்.

“விடுதலை” 23.11.1986

புலித் தலைவர் பிரபாகரனுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் தமிழர் தலைவர் வீரமணி.

“விடுதலை” 26.7.1987

கொழும்பு ஒப்பந்தம் எரிந்தது!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான ராஜீவ் ஜெயவர்த் தனா கொழும்பு ஒப்பந்தத நகல் தமிழகமெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் தீக்கிரையானது. இந்தச் சாம்பல் அடங்கிய உறைகள் டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் குவிந்தன.
சென்னையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கைதானார். மதுரையில் பழ. நெடுமாறன் கைதானார். திராவிடர் கழகமும் காமராஜர் காங்கிரசும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின.

“விடுதலை” 10.10.1987

31(சி) சட்டம் தேவை!

9.10.1987 அன்று புதுக்கோட்டையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31சி பிரிவின்படி இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை மாநில அரசுகளே இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதலைப் பெற்றுவிட்டால் அதற்குமேல் எந்தத் தடையும் ஏற்பட சட்ட ரீதியாக வழியில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகச் சட்டப் பேரவையில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது (31.12.1993) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“விடுதலை” 29.4.1989

கழகப் பொதுச்செயலாளரின் தேவைபற்றி சட்டமன்றத்தில்

குமரி மாவட்டத்து அழகப்பபுரத்தில் வானத்திலிருந்து பெய்த ரத்தத் துளி புரளிபற்றிய பேச்சு சட்டப் பேரவையில் இன்று எழுந்தது.
இந்திரா காங்கிரஸ் உறுப்பினர் குமரி அனந்தன் குறிப்பிடுகையில், பகுத்தறிவு ரீதியாக இதுபற்றி ஆராயத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி சேவையைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ளுமா? எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் வீரமணியின் சேவை தேவையெனில், அதைப் பயன்படுத்திக் கொள்ளும்படி நானே அரசுக்குப் பரிந்துரைப்பேன் என்றார்.

“விடுதலை” 28.9.1990

உண்ணாவிரதத்தை எதிர்த்து

உண்ணும் விரதம்

மண்டல்குழுப் பரிந்துரைகள் அமலாக்கத்தை எதிர்த்து நடத்தவிருந்த உண்ணாவிரதத்தை கை விடுவதாகப் பார்ப்பனர் சங்கம் அறிவித்ததை அடுத்து உண்ணும் விரதத்தையும் ரத்து செய்தது திராவிடர் கழகம்.

“விடுதலை” 13.10.1990

உச்சநீதிமன்ற நீதிபதிக்குக் கறுப்புக்கொடி!

மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கத்திற்குத் தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா சங்கராச்சாரிகள் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் வருவதாக இருந்தது. அப்படி வரும்போது காஞ்சிபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அறிவித்ததையடுத்து காஞ்சிபுரம் பயணத்தை ரத்து செய்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

“விடுதலை” 15.4.1991

பேய் பயத்தை விரட்டியது கழகம்

காஞ்சிபுரம் மாவட்டம் பேரம்பாக்கத்தில் பேய் குடி கொண்டிருப்பதாக நிலவிய பீதியை கருஞ்சட்டை படை அகற்றியது. கொளுத்தும் வெயிலில் 22 கிராமங்களில் கருஞ்சட்டைப் படை மின்னல் வேகப் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடத்தியது. பேய் இருந்ததாகக் கூறப்பட்ட கருவேல மரம் திராவிடர் கழக மகளிர் அணியினரால் மக்கள் முன்னிலையில் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டது; அத்தோடு அங்கு பேய் பயம் ஒழிந்தது.

“விடுதலை” 22.6.1992

தாழ்த்தப்பட்டவர் குடியரசுத் தலைவராக வேண்டும்
குடியரசுத் தலைவராக தாழ்த்தப்பட்டவரையே நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக பேரணியும் நடத்தப்பட்டடது. சென்னையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை ரிசர்வ் வங்கியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

“விடுதலை” 28.9.1992

யாகத்தை எதிர்த்து ‘விடுதலை’யின் வெற்றி

சென்னை ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் பார்ப்பன அலுவலர்கள் தீட்டுக் கழிப்பது என்ற பெயரால் நடத்தவிருந்த யாகத்தை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது விடுதலை எச்சரித்து செய்தி வெளியிட்டது.
வங்கி மேலாளர் ராமச்சந்திர ராஜூ வங்கியில் யாகம் நடத்துவதற்கு அனுமதியில்லை என்று அறிவித்து விட்டார்.

“விடுதலை” 17.11.1993

சமூகநீதியில் வெற்றி! வெற்றி!!

இந்திய அரசியல் கூட்டம் 31(சி) பிரிவின்கீழ் மாதிரி சட்டத்தை உருவாக்கி செய்தியாளர்களிடம் கொடுத்து. உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு முதலமைச்சருக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளரின் வேண்டுகோள் 17.11.1993.
அவ்வாறே 26.11.1993 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதனை தமிழக சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார் கழகப் பொதுச் செயலாளர். அனைத்துக் கட்சியினரும் ஒரு மனதாக ஏற்றனர். அதன்படி 30.12.1993 அன்று தமிழக சட்டப் பேரவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு மறுநாள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் கால தாமதம் ஆகும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரையும் பிரதமரையும் சந்தித்து வற்புறுத்த வேண்டும் என்று 14.6.1994 அன்று வேண்டுகோள் விடுத்தார் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி. அவ்வாறே அன்று மாலையே அ.இ.அ.தி.மு.க.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினர்.
குடியரசுத் தலைவரையும் பிரதமரையும் தூதுக்குழுவாகச் சென்று சந்திக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கழகப் பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டது 15.6.1994
25.6.1994 அன்று முதலமைச்சர் தலைமையில் தூதுக்குழு சென்று பிரதமரைச் சந்தித்தது!
கழகம் சொன்னதெல்லாம் நடந்தது! சமூகநீதியில் அக்கறை உள்ள அமைப்புகள், மக்கள் எல்லாம் ஆதரவு காட்டினார்கள். தமிழ்நாட்டு மண் தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண் என்று மீண்டும் வரலாற்றுக்கு நிரூபிக்கப்பட்டு விட்டது! காரிருள் அகன்றது. களிப்புற்றது தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல; இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும்தான்! இப்பொழுது 69 சதவீதம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது.

“விடுதலை” 4.1.2006

சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

“விடுதலை”- 13.3.2006

விடுதலை தலையங்கத்துக்குக் கிடைத்த வெற்றி

கிருட்டிணகிரி மாவட்டம் ஏ.மோட்டூரியில் உள்ள தொடக்கப் பள்ளி சத்துணவுக் கூடத்துக்கு சமையல் பணியாளராக நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மகேசுவரிக்கு ஊர் பொது மக்களின் நிர்ப்பந்தத்தினால் வழங்கப்பட்ட மாறுதல் ஆணையைக் கண்டித்து, திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம். விடுதலை தலையங்கம் (13.3.2006) ஆகியவற்றைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அப்பிரச்சினையில் தலையிட்டு, மாறுதல் உத்தரவை ரத்து செய்து, அதே ஊரில் அந்தப் பள்ளியிலேயே பணியாற்ற ஆணை பிறப்பித்தார்.

“விடுதலை” 10.10.1996

செயின்ட் கிட்ஸ் வழக்கு விடுதலையில் தொடர் கட்டுரை

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. வட அமெரிக்காவில் உள்ள செயின்ட் கிட்ஸ் தீவில் உள்ள ஒரு வங்கியில் வி.பி.சிங் அவர்கள் மகன் அஜேய்சிங் பெயரில் ஏராளம் பணம் போட்டுள்ளார் என்ற பொய்யான ஆவணங்களை ஒரு கும்பல் தயாரித்தது. அதன் பின்னணியில் சந்திராசாமியார், மேனாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். மாமாஜி, கல்பனாத்ராய், கே.கே. திவாரி என்ற ஒரு நீண்ட பார்ப்பனர் பட்டியல் உண்டு.
இது தொடர்பான வழக்கு மோசடிகள்பற்றி ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் தொடர் கட்டுரைகளை எழுதிப் பின்னர் நூலாகவும் வெளிவந்தது.

“விடுதலை” 18.7.1997

குடியரசுத் தலைவராக கே.ஆர். நாராயணன் வெற்றி பெற்றார். கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி.

“விடுதலை” 25.11.1998

சங்கராச்சாரியாருக்குக் கறுப்புக்கொடி

காஞ்சிபுரத்தில் இரயில்வே விழாவில் சங்கராச்சாரிகள் கலந்து கொள்வதாக வந்த அறிவிப்பையொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக உதவிப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். இதன் காரணமாக விழாவில் சங்கராச்சாரியார் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர்கள் மட்டுமே பங்கு கொண்டனர்.

“விடுதலை” 21.8.2006

அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகும் மசோதா சென்னை சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

“விடுதலை” 20.1.2006

பெரியாரும் பிரதமரும்

மக்கள் தொகையைக் குறைப்பதில் கட்டாயப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சீனா போன்ற நாடுகளிலேயே குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைக் கட்டாயப்படுத்தியும் பலன் ஏற்படவில்லை. பெண் குழந்தைகளுக்குக் கல்வியளித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிப்பதன் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியும். இதைச் செய்தால் பெண்கள் வெறும் குழந்தை பெறும் எந்திரமாக இருக்க மாட்டார்கள். (சமூகப் பிரச்சினைகள்பற்றிய பத்திரிகை. ஆசிரியர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங்) தந்தை பெரியார் அவர்களின் கருத்தை ஒரு வகையில் பிரதமர் எதிரொலிக்கிறார் அல்லவா?

“விடுதலை” 31.1.2006

காந்தியார் ஹேராம் சொன்னாரா?

காந்தியார் இறக்குமுன் ஹேராம் கூறினாரா?

காந்தியார் சுடப்பட்ட பொழுது நான் பாபுவுக்கு (காந்தியார்) பின்னால் இருந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை. உடனே அவர் இறந்து விட்டார்.
(காந்தியாரின் தனி உதவியாளர் வெங்கிட கல்யாணம் 30.12006 அன்று கொல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியது.)

“விடுதலை” 28.2.2007

தந்தை பெரியார் இறுதி முழக்கம் நனவாகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது.

“விடுதலை” 29.9.2007

வல்லம் பல்கலைக் கழகம் தொடக்க விழா
பெரியார் மணியம்மை மகளிர் பல்கலைக் கழகத் தொடக்க விழா தஞ்சாவூர் வல்லத்தில் பல்கலைக் கழக வேந்தர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் தொடங்கி வைத்தார்.

“விடுதலை” 31.1.1948

உத்தமர் உயிர் துறந்தார்!

காந்தியார் உயிரைக் குடித்த வெறியன் ஓர் மராத்தி ஹிந்து இந்திய வரலாற்றில் இரத்தக்கறை படிந்தது. அகிலம் அனைத்தும் துயரக் கடலில் ஆழ்ந்தியது!

“விடுதலை” 22.4.1964

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைவு!

இருதய நோயினால் அவதியுற்று சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இன்று காலை இயற்கை எய்தினார், சுயமரியாதை கருத்துக்களை கவிதைகள் மூலம் பரப்பிய சுடரொளி அணைந்தது! சடலம் புதுவையில் நாளை அடக்கம்.

“விடுதலை” 3.2.1969

அண்ணா மறைவு

அந்தோ, பேரிடி! பெரும் அதிர்ச்சி!
அய்யாவின் தலைமகன்
அண்ணா மறைந்தார்
துயரக்கடலில் தவிக்கிறது தமிழ்நாடு! கடும் பனியில் நடுநிசியில் தனயனுக்கு தந்தை இறுதி மரியாதை செலுத்திய நெஞ்சுறுக்கும் காட்சி

“நடக்கக் கூடாதது நடந்து விட்டது”
தந்தை பெரியார் துயரச் செய்தி
நடக்கக் கூடாதது நடந்து விட்டது. எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது. நாலு கோடி மக்களையும் பொறுத்த, பெரிய பரிகாரம் செய்ய முடியாத துக்க சம்பவம் ஆகும்.

“விடுதலை” 24.12.1973

தந்தை பெரியார் மறைந்தார்.
பெரியார் பல்லாண்டு வாழ்க
கலைஞர் இரங்கல் செய்தி!
காமராஜர் இரங்கல்
நாவலர் இரங்கல்.

“விடுதலை” 26.12.1974

“இராவண லீலா”

ஆரியராமன் கும்பல் எரிகிறது
புதிய வரலாறு படைத்துவிட்டது ராவண லீலா ராமன், சீதை, லட்சுமணன் உருவங்கட்குத் தீ எரிதணலில் கருகியது ஆரியக் கும்பல் அன்னையார் மூட்டிய தீ நாடெங்கும் எரிகிறது. எரிகிறது (25.12.1974)

“விடுதலை” 16.3.1978

அந்தோ, இயக்கத்துக்கு மாபெரும் பேரிடி! அன்னையார் மறைவு!

கழகத் தலைவர் அம்மா மறைந்தார்கள். பகல் 1.5 மணிக்கு மருத்துவமனையில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. தந்தை பெரியார் நினைவிடம் அருகே நாளை மாலை உடல் அடக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக