2022 சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் டிசம்பர் 1-15 2022 உண்மை இதழ்

இடது ஆகஸ்டு – அக்டோபர் 2022 சமூக அரசியல் கலை இலக்கியக் காலாண்டிதழ்
பெரியாரின் சுயமரியாதையும் வ.உ.சி.யின் தன் விடுதலையும்!
ப. திருமாவேலன்

‘ஈ.வெ.ரா.விடத்தில் உள்ள சிறப்புக் குணம் என்னவென்றால் மனதில் படும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமக் குணம் தான். அவரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்த்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு அவர் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் என்னால் ஆன உதவியை அவ்வியக்கத்திற்குச் செய்து வருகிறேன். அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் தமிழ்நாட்டில் எல்லாத் தலைவர்களைவிட பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையினால் அவருடைய திருவுருவப் படத்தை ஒவ்வொருவரும் வைத்து காலை, மாலை, பகல் முதலிய வேளைகளில் வணங்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்’ (நாகப்பட்டினத்தில் பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசியது – “குடிஅரசு” 10.6.1928) என்று சொன்னவர் பெருந்தமிழர் -பேரறிஞர் -_ தியாகிகளுக்கெல்லாம் பெரிய தியாகியான
வ.உ. சிதம்பரனார்.

அதே விழாவில் பெரியார் படத்தை நோக்கி விழுந்து வணங்கினார் வ.உ.சி. “இப்படி நீங்கள் பேசலாமா? இப்படி எனது படத்தை விழுந்து வணங்கலாமா? என்று கேட்டிருக்கிறார் பெரியார். “அதில் என்ன தவறு?” என்று திருப்பிக் கேட்டுள்ளார் வ.உ.சி.
தலைவர்களுக்கெல்லாம் தலைவர்களான பெரியாருக்கும் வ.உ.சி.க்கும் இடையில் இருந்த தலைமைப் பண்புக்கு உதாரணமான காட்சிகள் இவை.
வ.உ.சி.யைப் பார்த்து அரசியலுக்கு வந்தவர்தான் பெரியார். இதனைக் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் வெளிப்படையாகவே பெரியார் சொல்லி இருக்கிறார். “அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய கிளர்ச்சியின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன்’ என்று பேசியவர் பெரியார். “குடிஅரசு” 26.6.1927) இத்தகைய காவிய நட்பு அவர்கள் இருவருக்குள்ளும் இருந்துள்ளது.

அரசியல் விடுதலையுடன்
சமூக விடுதலையும்!
வ.உ.சி.யின் வாழ்க்கையை இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். 1904–_1912 அரசியல் விடுதலைக் காலம், 1918–_1936 சமூக விடுதலைக் காலம்- என்பதாகப் பிரித்துக் காண வேண்டும். இதில் சமூக விடுதலைக் கால வ.உ.சி. குறித்து சில பதிவுகளை மய்யமாக வைத்து இக்கட்டுரை விரிகிறது.
வ.உ.சி. அவர்கள் 1908ஆம் ஆண்டு கைதாகி 1912 வரை சிறையில் இருக்கிறார். இது பெரியார் அவர்கள் தீவிர அரசியலில் இறங்காத காலம் ஆகும். சுதேசிக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சி. தொடங்கிய காலத்தில் ஈரோட்டில் நிதி திரட்டித் தந்ததாக பெரியார் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். (7.11.1948) சேத்துப்
பட்டு வ.உ.சி. இளைஞர் கழக இலவச நூல் நிலையத் திறப்பு விழா) சிறையில் இருந்த வெளியில் வந்த வ.உ.சி. தீவிர அரசியலில்
இருந்து விலகி நிற்கிறார். அப்போது காங்கிரஸ் கட்சிக்குள் சென்னை மாகாண சங்கம் என்ற அமைப்பு உதயமானது. நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கமானது பார்ப்பனரல்லாதார் நலனுக்காகப் பேசத் தொடங்கிய (1916–_17) காலம் அது- இது காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. காங்கிரசுக்குள் இருக்கும் பார்ப்பனரல்லாத தலைவர்கள் இணைந்து – ஓர் அமைப்பைத் தொடங்குகிறார்கள். அதற்கு ‘சென்னை மாகாண சங்கம்’ என்று பெயர். இதில் முக்கியப் பங்கு வகித்தவர் வ.உ.சி. அவருடன் இணைந்து திரு.வி.க., பெரியார், டாக்டர் வரதராஜுலு ஆகியோர் இயங்கினார்கள். இந்த சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா (1919) ஈரோட்டில் நடந்துள்ளது. அதன் தீர்மானத்தை வடிவமைத்ததில் வ.உ.சி. முன்னின்றதாக பிற்காலத்தில் பெரியார் பேசி இருக்கிறார். (குடிஅரசு 20.12.1925) அந்த வகையில் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க ஊக்கியாக இருந்தவர் வ.உ.சி. அவர்கள்.

வ.உ.சி.யின் இரண்டு தீர்மானங்கள்!
1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியாமல் பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினார். ஆனாலும், இதன் தொடக்கம் என்பது 1920 திருநெல்வேலி மாநாடு ஆகும். இங்கு அடித்தளமாக இருந்தவர் வ.உ.சி. 1920 ஆம் ஆண்டு நடந்த 26ஆவது சென்னை மாநில அரசியல் மாநாட்டில் வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை வ.உ.சி. அவர்கள் கொண்டு வந்தார்கள். அப்போதுதான் காங்கிரசில் இருந்து பார்ப்பனரல்லாத தலைவர்கள் அனைவரும் வஞ்சமாக ஏமாற்றப்பட்டார்கள்.
பெரியார் தலைமையில் அந்த மாநாட்டுப் பந்தலில் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. வகுப்புரிமைத் தீர்மானத்தை இம்மாநாட்டில் நிறைவேற்றவேண்டும் என்று அதில் கலந்துகொண்ட பலரும் வலியுறுத்
தினார்கள். இதில் மிக முக்கியமானவர்கள் நாவலர் சோமசுந்தரபாரதி, வ.உ.சி., தண்டபாணி(பிள்ளை) உள்ளிட்டவர்கள். மாநாட்டுத் தீர்மானங்களை வடிவமைக்கும் கமிட்டிக்கு அன்றைய பெயர் விஷயாலோசனைக் கமிட்டி என்பதாகு¢ம். அக்கூட்டத்தில் இத்தீர்மானத்தைப் பெரியார் முன்மொழிகிறார். வ.உ.சி.யும் தண்டபாணியும் வழிமொழிகிறார்கள்.
அப்போது என்ன நடந்தது என்பதை இதோ ‘குடிஅரசு’ சொல்கிறது:
‘காலஞ்சென்ற திரு.எஸ். கஸ்தூரி ரெங்கய்யங்கார் எழுந்து வீதாசாரம் (Percentage) என்கிற வார்த்தைக்குப் பதிலாக ‘போதுமான’ என்னும் அர்த்தத்தைக் கொடுக்கத் தகுந்த (Adequately) ‘அடிகுவேட்லி’ என்கிற பதத்தைப் போட்டுக் கொள்ளும்படி ஒரு திருத்தப் பிரேரேபணை கொண்டு வந்தார்.
இந்த ‘அடிகுவேட்லி’ என்ற பதத்திற்கு என்ன பொருள் என்று திரு. ராமசாமி நாயக்கர் அம்மாநாட்டுக்கு அக்ராசனாதிபதியாக இருந்த திரு. சீனிவாசய்யங்கார் அவர்களைக் கேட்க, அவர் இரண்டும் ஒரே அர்த்தந்தான்; ஆனால், பர்சன்டேஜ் என்பதைவிட அடிகுவேட்லி என்பது நல்ல வார்த்தையென்று சொல்லி. தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டார்.

இது சமயம் திரு. ராஜகோபாலாச்சாரியார் முதலியோர்களும் இக்கூட்டத்தில் ஆஜராகித் தானிருந்தார்கள். அதோடு ராஜாங்கக் கல்வித்துறைகளில் சமஸ்கிருதக் கல்விப்பயிற்சிக்கு உள்ள யோக்கியதையும் செய்முறையும் தமிழ்க் கல்விக்கும் இருக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் திரு. ராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு திரு. வி.ஓ. சிதம்பரம் பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. (ஆனால், விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வெளியில் வந்து திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் சில ஆங்கிலம் படித்தவர்களைக் கண்டு ‘அடிகுவேட்லி’ என்பதற்கும் ‘பர்சென்டேஜ்’ என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டபோது அவர்கள், அடிகுவேட்லி என்பது இருபொருள் கொண்டதென்றும், அதாவது யோக்கியதைக்குத் தகுந்த என்கிற பொருள்கூட கொள்ளலாமென்றும், பர்சன்டேஜ் என்கிற வார்த்தைதான் மிகத் தெளிவானது என்றும் சொன்னார்கள்.)
பிறகு மாநாட்டில் இத்தீர்மானம் வரும்போது ‘பர்சன்டேஜ்’ என்கிற வார்த்தையையே போட்டுக்கொள்ள வேண்டும் என்று திரு. நாயக்கரும், திரு. தண்டபாணிப் பிள்ளையும் அக்ராசனர், திரு. சீனிவாசய்யங்காரிடம் சொன்னார்கள். அவரும் அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக்கொண்டார்.

கடைசியாக மாநாட்டில் இது தவிர மற்ற தீர்மானங்கள் முடிந்தவுடன்அக்ராசனாதிபதி எழுந்து திடீரென்று தமது முடிவுரையை ஆரம்பித்துவிட்டார். திரு.தண்டபாணிப் பிள்ளை தன்னுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் என்ன ஆயிற்றென்று அக்ராசனரைக் கூட்டத்தில் கேட்டார்.
அக்ராசனர் திரு. சீனிவாசய்யங்கார், அது பொது நன்மைக்கு விரோதமான தீர்மானமானதால் அவற்றை ஒழுங்குத் தவறானதென்று தீர்மானித்துவிட்டதாகச் சொல்லிவிட்டார். உடனே திரு. தண்டபாணிப்பிள்ளை எழுந்து, விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டதான தீர்மானம் இங்கு எப்படி ஒழுங்குத்தவறு என்று கேட்டார். அப்போது அங்கிருந்து பிராமணர்கள் திரு. பிள்ளையை உட்காரும்படி கூச்சல்போட்டு அடக்கி விட்டார்கள்.’
கடைசியாக முடிவுரையில் திரு.அய்யங்கார், காஞ்சி மாநாட்டில் திரு.முதலியாரைக் கொண்டு சமாதானம் சொல்லச் சொன்னது போல் வருத்தப்படுவதாகப் பொய் வேஷம் போட்டு மறைத்துவிட்டார். (“குடிஅரசு’’ 6.12.1925)

-இதுதான் உண்மை வரலாறு. இதில் வ.உ.சி.யின் பங்களிப்பை முழுமையாக அறியலாம். வகுப்புவாரி உரிமையை மட்டுமல்ல; தமிழ்க் கல்விக்காக பெரியாரும் வ.உ.சி.யும் இணைந்து கொடுத்த குரலையும் நாம் அறியலாம். சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்த்தேசிய வரலாற்றிலும் கவனிக்கத் தக்கவராக
வ.உ.சி. இருந்துள்ளார். நெல்லையில் தோற்ற தீர்மானத்தை தஞ்சை, திருப்பூர், மதுரை, திருச்சி,
சேலம், திருவண்ணாமலை ஆகிய மாநாடுகளுக்கும் கொண்டு சென்று அங்கும் தோற்ற பிறகுதான் காஞ்சிபுரத்திலும் கொண்டு வந்தார் பெரியார். அங்கும் காங்கிரசில் நுழைக்க முடியவில்லை. காங்கிரசை உடைத்து வெளியேறினார் பெரியார். அந்த வகையில் திருநெல்வேலி மாநாடு (1920) தொடக்கமாக அமைந்தது. வ.உ.சி. முக்கியக் காரணமாகவும் அமைந்திருந்தார்.

சீர்திருத்தச் சைவர்!
பெரியாரின் வாழ்வில் பெரும் மாறுதலை ஏற்படுத்திய நூல், ‘ஞானசூரியன்’. இதனை எழுதியவர் சுவாமி தயானந்தசரஸ்வதி. இந்நூலை முதலில் வெளியிட்டவர் கானாடுகாத்தான் வை.சு. சண்முகம். இந்நூலைப் பெரியாருக்குக் கொடுத்தவரும் அவரே. இதனை 1928ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்து பெரியார் வெளியிட்டார். இந்நூலுக்கு மூன்று பேரிடம் சிறப்புரை பெற்றுள்ளார் பெரியார். வ.உ.சி., மறைமலையடிகள், கா. சுப்பிரமணியனார் ஆகியோரே அந்த மூவர். இந்தச் சிறப்புரையை 7.10.1927 அன்று கோயிற்பட்டியில் இருந்து எழுதியதாக வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். சுயமரியாதை இயக்கக் கொள்கைகள், பார்ப்பனர் எதிர்ப்பில் மட்டுமல்ல, எத்தகைய சீர்திருத்தச் சைவராகவும் வ.உ.சி. இருந்துள்ளார் என்பதை இதன் சிறப்புரை மூலமாக அறியலாம்.

‘பிராமணப் புரோகிதர்களும் பூசாரிகளும் பிராமணரல்லாதாருடைய பொருள்களைக் கவருவதற்குத் தொன்றுதொட்டுச் செய்துவரும்
சூழ்ச்சிகளையும் மோசங்களையும் கொலைகளையும் எடுத்துக்கூறி, பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர்களையும் பூசாரிகளையும் விரும்புகிறார்களா என ஞானசூரியன் வினவுகிறான். இந்து சமயம் என்பதன் பொய்களையும் புரட்டுகளையும் ஆபாசங்களையும் அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகவும் பிராமணரல்லாதாரின் பொருள்கள் கொள்ளையிடப்படுவதையும் பிராமணரல்லாதார் தப்புவதற்குரிய அவசியத்தையும் வழிகளையும் ஞானசூரியன் நன்கு விளக்குகின்றான்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி.
“…வடமொழி யாகங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு பிறப்பால் ஜாதிவேற்றுமைகள் கற்பித்தும் சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற சைவர்களும் ‘ஞானசூரியன்’ கிரணங்களினின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு ஜாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின் அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமவெனக் கொள்ளும் தவற்றை ஒழித்தலும், சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை” என்று எழுதியுள்ளதன் மூலம் வ.உ.சி.யின் தீவிரத்தன்மையை அறியலாம்.
(ஞானசூரியன், பக்கம் 8)

15.3.1928 அன்று காரைக்குடியில் சிவஞான யோகிகள் தலைமையில் வ.உ.சி. ஆற்றிய உரையில், பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டைக்குக் காரணம் உத்தியோகமென்றே கூறலாம் என்று பேசி உள்ளார். ஆதிதிராவிடர் கல்வி குறித்தும், பெண்களைச் சமைக்கும் இயந்திரமாக்கிவிட்டார்கள் என்றும், பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்றும், கணவனின் எச்சில் இலையில் மனைவி சாப்பிடக்கூடாது என்று உரிமைகள் பெறப் பெண்கள் போராட வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். (‘திராவிடன்’ இதழில் அது வெளியாகி உள்ளது. இந்திய வரலாற்றில் வ.உ.சி., பக்கம் 365–_369)
சைவர்கள் மத்தியில் வ.உ.சி.க்கு இருந்த எதிர்ப்பை ஆ.இரா. வேங்கடாசலபதி விரிவாக எழுதியுள்ளார். செட்டிநாட்டில் ஆற்றிய உரைக்காகக் கடுஞ்சைவர்கள் வ.உ.சி.யை கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்று ‘சிவநேசன்’ இதழில் நடந்த கருத்து விவாதங்களை வெளியிட்டுள்ளார். 1929 மார்ச் மாதம் நெல்லையில் நடந்த சைவர் கூட்டத்தில் கலந்துகொண்ட வ.உ.சி. சீர்திருத்தச் சைவர் அணியையே சார்ந்திருந்தார் என்றும் சலபதி சொல்கிறார். சைவ சமயத்தைச் சீர்திருத்த வேண்டிய முறைகளைப் பற்றி வ.உ.சி. கூறியது ஏற்கப்படாததால் அதில் இருந்து வெளியேறியதாக ‘குமரன்’, ‘குடிஅரசு’ இதழ்களை மேற்கோள் காட்டிச் சலபதி எழுதுகிறார்.

வ.உ.சி.யின் திராவிடவியல்
பெருஞ்சொல்!
1927 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது அரசியல் மாநாட்டில் (5.11.1927) அவர் ஆற்றிய உரை என்பது வ.உ.சி.யின் முழு முகத்தைக் காட்டும் உரையாகும். அந்தக் காலக்கட்டத்தில் தன்மீது என்ன மாதிரியான விமர்சனங்கள் எல்லாம் வைக்கப்படுகின்றன என்பதை வ.உ.சி. பட்டியலிடுகிறார்.
தேசாபிமானமும் என்பால் உளதோ- என்று சிலர் அய்யப்படுகிறார்கள்.
ராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு தேசத்துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம் பிள்ளை- என்று பத்திரிகை அதிபர் ஒருவர் சொல்லி இருக்கிறார். பிராமண அபிமானி- என்று பிராமணரல்லாத சிறுவர்கள் சிலர் சொல்கிறார்கள். வஞ்சக சொரூபி- என்று பிராமணர்களாலும், தான் அநியாயமாகப் பழிக்கப்படுவதாக அந்த உரையில் சொல்கிறார். இந்த மாநாட்டில் குழுமியிருப்போரில் பெரும்பாலும் பிராமணரல்லாதார்தாம். யானும் ஒரு பிராமணரல்லாதான்தான்.
இந்த ஜில்லா சிறந்த ஓர் தமிழ்நாடு. யானும் ஒரு சிறந்த தமிழன்’ -என்ற தனது இரட்டை அடையாளத்தைச் சொல்கிறார். தமிழன் – பிராமணரல்லாதான் என்று தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். ஜாதியால் வேளாளன் ஆனாலும் அனைவரையும் சமமாகக் கருதுவதால் ஜாதியார்களால் விமர்சிக்கப்படுவன் என்றும் சொல்லிக் கொள்கிறார்.

சுய அரசாட்சி இந்தியாவில் உருவாக வேண்டும் என்று சொல்லும் அவர். பல ஜாதி, மதத்தலைவர்கள் ஒன்றுபட்டு ரத்தம் சிந்தினால் தான் அதனைப் பெற முடியும் என்கிறார். இந்து -முஸ்லிம் மதக் கோட்பாடுகளுக்குள் இருக்கும் வேற்றுமையைக் களைய வேண்டும் என்றும், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி பாகுபாடு என்ற எதுவும் இல்லை என்றும் சொல்கிறார். மத, ஜாதிகளில் இருக்கும் இதனைக் களைந்தபிறகுதான் போராட முடியும் என்கிறார். சுயஅரசாட்சி உருவாகிவிட்டால், மக்களுக்குள் இருக்கும் வேறுபாடு தானாக நீங்கிவிடும் என்று சிலர் சொல்லியதை அவர் ஏற்கவில்லை. பொதுவானவை அனைத்தும் அனைவர்க்கும் பொதுவானவை என்று சொன்னார்.
இது நீதிக்கட்சி ஆட்சி அமைந்திருந்த காலம் என்பதால் வகுப்புவாரி உரிமை தொடர்பாக வ.உ.சி. விரிவாகப் பேசுகிறார். ‘வகுப்புவாரி
உரிமையானது நாட்டில் உள்ள ஒற்றுமையின்மையையும் பகைமையையும் குறைக்கவல்லது’ என்கிறார் வ.உ.சி. ‘நமது தேசத்தில் நிலவும் பிறப்பை ஆதாரமாகக் கொண்ட அநியாயமான ஜாதி வேற்றுமைகளையும் உயர்வு தாழ்வுகளையும் கடுமையாக நான் எதிர்க்கிறேன்’ என்றார்.
நம் நாட்டு மக்களிடம் ஒற்றுமை ஏற்படாமல் போனதற்குக் காரணம் அரசுப் பணிகளிலும், சட்டசபையிலும், பொது நிறுவனங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்படாததுதான் என்றும், வகுப்புவாரி உரிமை வழங்குவதே உண்மைத் தேசாபிமானி ஒவ்வொருவரது கடமையாகும் என்றார்.
இதே உரையில்தான் பிராமணர். பிராமணரல்லாதார் குறித்தும் விரிவாகப் பேசினார். பிராமணரல்லாதார் யார் என்பதற்கு வ.உ.சி. கொடுத்த அடைமொழிகள் அழுத்தமானவை.

‘பிராமணரல்லாதார்’ என்னும்போது முகமதியர்கள். இந்தியக் கிறிஸ்துவர்கள். தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், தாழ்த்துகின்ற ஹிந்துக்கள் என்னும் நான்கு வகுப்பினர்களையும் குறிக்கின்றேன்- என்பது வ.உ.சி.யின் வரையறை
யாகும். பிராமணர்- பிராமணரல்லாதார் வேற்றுமையை உருவாக்கியவர்கள் ஆங்கில ஆட்சியாளர்கள் என்று அப்போதும் சிலர் சொல்லி இருக்கிறார்கள். (தமிழ்நாட்டின் இப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வதைப் போல!) இதனையும் மறுத்து வ.உ.சி. பேசி இருக்கிறார். ‘இது முழுமையாகப் பொய்’ என்கிறார்
வ.உ.சி. பிரிட்டிஷார் ஆளாத சுதேச மன்னர்கள் ஆட்சியில் பிராமணர் – அல்லாதார் வேறுபாடு இல்லையா என்றும் கேட்கிறார் அவர்.
பிராமணர்கள்தான் மேல், மற்றவர்கள் கீழ் என்று சொல்வதால்தான் இது ஏற்படுகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான பிராமணரல்லாதார் சடங்குகள் அனைத்திலும் புகுந்து பிராமணர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.
அரசுப் பணிகள் அனைத்தையும் தாங்களே அபகரித்துக் கொள்கிறார்கள் பிராமணர்கள்.
-இந்த மூன்றும் தான் பிராமணர் – பிராமணரல்லாதார் மோதலுக்கு முக்கிய காரணம். இதனை ஒழிக்க வேண்டும் என்கிறார் வ.உ.சி. இதற்கு தீர்வும் சொல்கிறார் வ.உ.சி.

பிராமணர்கள் உங்களை எப்படி இழிவாக நடத்துகிறார்களோ அதேபோல் நீங்கள் அவர்களை நடத்துங்கள்.
பிராமணர்களை வைத்து சடங்கு செய்யாதே என்று திருவாளர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் சொல்லி வருகிறார்கள். அதைக் கடைப் பிடியுங்கள்.
அனைத்து அரசுப் பணிகளும் ஒவ்வொரு சமூகமும் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறதோ அதற்கு ஏற்ற விகிதப்படி தர வேண்டும்.
-இவைதான் வ.உ.சி. சொல்லும் தீர்வுகள். (வ.உ.சி.யின் சேலம் மாநாட்டு உரையை முழுமையாக வாசிக்க வ.உ.சி. பன்னூல் திரட்டு பக்கம் 199–_236. தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விக்கழகம்)
வ.உ.சி.யும் பெரியாரும் ஒரே குரலில் பேசி வந்த காலம் இது.
1926-இல் மதுரையில் நடந்த பார்ப்பனரல்
லாதார் மாநாடு. அதே ஆண்டு நவம்பரில் சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கிரஸ் அரசியல் மாநாடு ஆகிய அனைத்திலும் வ.உ.சி. ஆற்றிய உரைகள் அவரது நாட்டு விடுதலையுடன் கூடிய தன் விடுதலை உரைகளாக அமைந்திருந்தன.

இலக்கிய நூல்களிலும் தெறித்தன!
திருக்குறள்- மணக்குடவர் உரையைப் பதிப்பித்தவர் வ.உ.சி.
திருக்குறளில் நான்காவது அதிகாரம்தான் அறன் வலியுறுத்தல், முதல் மூன்று அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை ஆகும். இந்த மூன்று அதிகாரமும் வள்ளுவர் எழுதியது அல்ல. உரையாசிரியர்கள் சிலர் எழுதிச் சேர்த்தது என்பது வ.உ.சி. அவர்களின் கருத்து. சிறப்புப் பாயிரமாக அவர்கள் எழுதியதை வள்ளுவர் எழுதியதாக பிற்காலத்தில் சேர்த்துவிட்டார்கள் என்றும் மொத்தமே 130 அதிகாரங்கள் தானே தவிர 133 அதிகாரங்கள் அல்ல என்றும் வ.உ.சி. சொல்கிறார். ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற அந்தணருக்கும் பிறந்தவர் வள்ளுவர் என்பது கட்டுக்கதை என்கிறார் வ.உ.சி.
தொல்காப்பியத்தில் இளம்பூரணார் உரையை
1928ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி. அதில் அரிய
இடைச்செருகல் உள்ளதாக எழுதுகிறார். ‘இவ்வகைத் தனிச்சிறப்பு பொருந்திய இத்தமிழ் இலக்கணத்துள்ளும் ஆரியமொழிகள் சிலவற்றை
யும் ஆரியர் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் ஆரியர் கொள்கைகள் சிலவற்றையும் இந்நூலின் கண் நுழைத்திருத்தலை ஆங்காங்கு காணலாம்’ என்று எழுதுகிறார் வ.உ.சி.
வ.உ.சி.யின் சிவஞானபோதம் உரை 1935 ஆம் ஆண்டு வெளியானது. அவர் மறைவுக்கு முந்தைய ஆண்டு இது.
ஏனைய உரைகளில் காணப்படும் பல்வேறு மதக்கோட்பாடுகள் இந்த உரையில் இருக்காது என்று சொல்லும் வ.உ.சி., அனைத்து மதங்களும் ஒரே இறைவனைப் பற்றியே பேசுகின்றன என்கிறார். மத, ஜாதி உள்ளிட்ட மற்ற அனைத்து வேற்றுமைகளையும் பேசுபவர்கள் தேசத்துக்குத் தீங்கிழைப்பவர்கள் என்றும் சொல்கிறார்.
அரசியல் மேடைகளில் மட்டுமல்ல இலக்கிய உரைகளிலும் தனது சிந்தனைகளை முழுமையாகப் பதிவு செய்துள்ளார் வ.உ.சி.

அனைத்துக் கட்சிப் பார்ப்பனரல்லாதாருக்கும்…!
1936 நவம்பர் 18 ஆம் நாள் வ.உ.சி. மறைகிறார். அதே ஆண்டு மே 3 ஆம் நாள் அன்று திருச்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடக்கிறது. அது தொடர்பாக அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்புகிறார் வ.உ.சி. நமது சென்னை மாகாணத்தில் – அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டில் என்று அந்தக் கடிதத்தைத் தொடங்குகிறார். அதாவது 1936 ஆம் ஆண்டே ‘தமிழ்நாடு’ என்று சொல்லத் தொடங்கிவிட்டார் அவர். பார்ப்பனரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு பார்ப்பனரல்லாதார் பின்னிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும், பார்ப்பனருடைய ஆதிக்கத்தை உதறித் தள்ளிவிட்டுப் பார்ப்பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும்
நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்றும், அதற்கு அனைத்துக் கட்சியிலும் இருக்கும் பார்ப்பனரல்லாதார் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார் வ.உ.சி. இதைச் செய்தால் உங்களைத் தேசத்துரோகிகள் என்பார்கள் என்கிறார் வ.உ.சி. (இன்று வரை இது தான் நடக்கிறது!) அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.

பார்ப்பனரல்லாச் சகோதரர்களே! ஜாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாடு வேற்றுமை முதலியவற்றையெல்லாம் விடுத்து நீங்களெல்லாம் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும் தன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக! உங்கள் அன்புள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை’ என்பதுதான் வ.உ.சி. விடுத்த வெளிப்படையான குரல். இதுதான் கப்பலோட்டிய தமிழனின் இறுதிக் குரல். (குடிஅரசு 17.5.1936)
இந்த அறிக்கை குறித்து வ.உ.சி.க்குப் பெரியார் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. அதற்கு வ.உ.சி. ஒரு பதிலைப் பெரியாருக்கு எழுதுகிறார். மே மாதம் 11 ஆம் நாள் பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் வ.உ.சி. அக்கடிதம் இதுதான்.
கடவுள் துணை. ஈரோடு “குடிஅரசு” ஆசிரியர் ஸ்ரீமான் ஈ.வெ. இராமசுவாமி நாயக்கரவர்களுக்கு. தோழரவர்களே, காஞ்சிபுரம் தமிழர் மகாநாட்டுக்கு ஈ.வெ.ரா. வேண்டுகோளையும் தாங்கள் 10.5.1936இல் எனக்கு எழுதியனுப்பிய கடிதத்தையும் படித்தேன்.

சர்வக ஜாதிப் பார்ப்பனரல்லாதார்களும் ஒன்று கூடுவதற்குத் தாங்கள் சொல்வதே சரியான உபாயம். அவ்வாறு சர்வக ஜாதிப் பார்ப்பனரல்லாதார்களின் மாநாடு ஒன்று காஞ்சிபுரத்தில் வருகிற சூன் மாதத்தில் நடக்கப்போகும் தமிழர் மாநாட்டுப் பந்தலி
லேயே கூட்டுவிக்கும்படியாக நமது நண்பர் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்களுக்கு நான் இதனுடன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர்கள் பதிலை எதிர்பார்ப்போம். கடவுள் துணை, தங்களன்புள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை” -என்கிறது அந்தக் கடிதம். மரணமடைவதற்கு ஆறு மாதத்துக்கு முன் எழுதிய கடிதம் இது. அனைத்துக் கட்சியிலும் இருக்கும் பார்ப்பனரல்லாதாரை ஒன்று சேர்த்து பார்ப்பனரல்லாதாரை முன்னிலைக்கும் தன்னிலைக்கும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவரின் இறுதி விருப்பமாக அமைந்து இருந்தது.

வ.உ.சி.யின் மரணம் நிகழாமல் போயிருந்தால் வ.உ.சி. திரு.வி.க. பெரியார், டாக்டர் வரதராஜுலு ஆகிய தலைவர்கள் ஒரே மேடையில் நின்று பார்ப்பனரல்லாதார் உரிமைக் குரலைக் கொடுக்கும் காட்சியைத் தமிழ்நாடு கண்டிருக்கும்!
காங்கிரசைத் திருத்த முடியாது என்று வெளியேறினார் பெரியார்; காங்கிரசைத் திருத்த முடியும் என்று நினைத்தார் வ.உ.சி.
சமூக விடுதலைக் கொள்கையைக் காங்கிரசுக்குள் புகுத்த நினைத்தார் வ.உ.சி; அது பயன்தராது என்று நினைத்தார் பெரியார். காங்கிரசுக் கட்சியில் இருக்கும் பார்ப்பனரல்லாதாரையும் சேர்த்துக்கொள்ள நினைத்தார் வ.உ.சி; காங்கிரசுக் கட்சியில் அப்படி ஒருவர் இருப்பதாக (காமராசருக்கு முன்பு வரை) பெரியாருக்கு யாரும் அகப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி வெளியேறுவதோடு பார்ப்பனர் ஆதிக்கமும் ஒழிய வேண்டும்
என்று நினைத்தார் வ.உ.சி; பிரிட்டிஷார் போனபிறகு இது முழுக்க பார்ப்பன நாயகமாகவே ஆகும் என்று பயந்தார் பெரியார். இத்தகைய நடைமுறை வேறுபாடுகள் தவிர வ.உ.சி.க்கும் பெரியாருக்கும் கொள்கை வேறுபாடுகள் இல்லை. அவரின் சுயமரியாதையும் இவரின் தன்னிலை, தன் விடுதலையும் ஒன்றே!
(இடது, ஆகஸ்ட்-அக்டோபர் 2022)