வியாழன், 21 டிசம்பர், 2017

ஈரோடு ஆலயப் பிரவேசம் விசாரணை

28.4.1929- குடிஅரசிலிருந்து...
வழக்கு விசாரணை

22.4.29 தேதியில் ஈரோடு, ஸ்டேஷனிரி சப் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பகல் 12.30 மணிக்கு ஆலயப் பிரவேச வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாதிகள் சார்பில் பிராஸிகியூட்டிங் இன்ஸ்பெக்டரும், பிரதிவாதிகள் சார்பில் நாகை பாரிஸ்டர் கே.சி.சுப்பிரமணியம் அவர்களும் ஆஜராயிருந்தனர். கோர்ட்டினுள்ளும் வெளியிலும் ஏராளமான பொது ஜனங்கள் கூடியிருந்தனர்.

முதல் சாட்சியாக முத்துசாமிக் குருக்கள் கூறியதாவது:

நான் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு எல்லாச் சாமிகளுக்கும் கட்டளை பூஜை செய்துவிட்டு இரண்டாவது அதாவது துவரா பாலகர் கதவுக்குச் சமீபம் நின்று கொண்டிருந்தேன். முதல் பிரதி வாதியான ஈஸ்வரன் என்பவர் தம்முடன் வந்திருப்பவர்களுடன் கோயிலுக்குள் சென்று தாங்களே பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னார். அப்படிச் செய்வது வழக்கமில்லை என்று சொல்லி தத்தாத்திரி குருக்களை அழைத்து கதவைப்பூட்டச் சொல்லி விட்டு நான் அம்மன் கோவில் கதவைப் பூட்டச் சென்றேன் பின்பு இருவரும் கதவுகளைப் பூட்டி விட்டு இந்த விஷயம் தெரிவிக்க தருமகர்த்தா வீட்டுக்குப் போனோம். அவர் ஊத்துக்குளிக்குப் போயிருந்தார். பறையர் சக்கிலியர், வள்ளுவர், பள்ளர் முதலியோர் கோவிலுக்குள் வரக் கூடாது. நவக்கிரகத்துக்குக் குருக்கள் தவிர வேறு யாரும் தொட்டுப் பூஜை செய்யக்கூடாது. பஞ்சமர் கோவி லுக்குள் வந்தால் அசுத்தமாகும். அவர்கள் வரக் கூடாதென்பதற்கு சட்டமில்லை ஆனால் வரும் வழக்கமில்லை. எதிரிகளைத் தெரியும் அவர்கள் தேங்காய் பழம் கொண்டு வந்திருந்தார்கள் இவர்கள் அசுத்தம் ஒன்றும் செய்யவில்லை.

6.4.29 இரவு 7 மணிக்கு தர்மகர்த்தாவிடம் மூவரும் விஷயத்தைச் சொல்லி கும்பாபிஷேகம் செய்தால்தான் பூஜைசெய்வோம் என்று சொன்னோம்.

இரண்டாவது குருக்கள் மேற்சொன்னபடியே சொல்லி விட்டு கூறியதாவது: கோவில் ஈரோடு, தேவஸ்தானக் கமிட்டிக்கு உட்பட்டது. தர்மகர்த்தா அதன் உத்திரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக என்னுடைய அபிப்பிராயம் - விவரமாகத் தெரியாது. கோவில் பிரவேச விஷயமாக உத்திரவு ஏதும் வந்திருப்பதாகத் தெரியாது. கோவிலில் யாரும் இலைப்போட்டு சாப்பிட்டது கிடையாது. எதிரிகள் பூஜை செய்தது அபிஷேகம் செய்தது, சாப்பிட்டது எங்கள் இருவருக்கும் தெரியாது.

குட்டமேனன் கூறியதாவது: நான் கோவில் வேலைக் காரன், அன்றைய தினம் 10, 12 பேர் கோவிலுக்குள் வந்தனர். தேங்காய் பழம் வைத்திருந்தனர். இரண்டாங்கதவு  பூட்டப்பட்டிருந்தபடியால் கதவின் முன் பக்கம் இரண்டு வரிசையாக உட்கார்ந்து புத்தகம் பார்த்துப்பாட்டுப் படித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 10 மணிக்கு மேல் பசுபதி என்பவர் நவக்கிரகமுள்ளவிடத்தில் புகுந்து சாமிக்குத் தண்ணீர் விட்டு தேங்காய் உடைத்து அங்கு பாடிக்கொண்டிருந்தவர் களுக்கு பிரசாதம் கொடுத்தார். பிறகு 7, 8 பேருக்குப் போதிய சாதம் வந்தது. அவர்கள் அவ்விடத்தி லேயே இலைபோட்டுச் சாப்பிட்டார்கள். அங்கேயே கை அலம்பி னார்கள், சிகரெட்டு, பீடிகளை அங்கேயே பிடித்தார்கள். பிறகு விடியற்காலம் 4 மணிக்கு காவேரிக்கு ஸ்நானம் செய்யப் போய்விட்டார்கள்.

தருமகர்த்தா ப.முத்து நாயக்கர் கூறியதாவது: நான் இருபது வருடமாக தருமகர்த்தா வேலை பார்க்கிறேன். இந்தச் செய்கை நடந்த 4ஆம் தேதி ஊத்துக்குளி போயிருந் தேன். 6ஆம் தேதி இரவு 8 மணிக்கு வந்தேன். தத்தாத்திரி குருக்கள் முத்துசாமி ஆகிய இருவரும் வந்து விஷயந்தெரிவித்தார்கள். நான் போலீசாருக்கு ரிப்போர்ட்டுச் செய்தேன். வழக்கு 1..5.29 ஆம் தேதி வாய்தா போடப்பட்டிருக்கிறது.

- ஒரு நிருபர் 

இந்துக்களின் கோவில் பிரவேசம்

7.4.1929- குடிஅரசிலிருந்து...

ஈரோடு தேவஸ்தான கமிட்டியாரின் 30.3.1929 தேதி தீர்மானப்படி ஈரோடு டவுனிலுள்ள சிவன் கோவிலுக்குள் சில இந்துக்கள் (அதாவது வள்ளுவப் பண்டாரம் என்பவர்கள்) 4.4.1929 தேதியில் சுத்தமாகவும் மதச்சின்னங் களுடனும் கற்பூரம், தேங்காய் பழத்துடனும், கடவுளை வணங்கசென்றபோது குருக்கள் மூலவிக்கிரக அறைக் கதவைப் பூட்டிவிட்டுப் போய் விட்டாராம், வணங்கப் போனவர்கள் வெகுநேரம் காத்திருந்தும் வராததால் வெளியில் உள்ள சாமிகளை பூஜைசெய்து கும்பிட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

பிறகு குருக்கள்கள் சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கோவில்களுடைய வெளிக்கதவுகளையும் பூட்டி விட் டார்கள்.

உள்ளூர்ப் பொது ஜனங்கள் கமிட்டியார் தீர்மானத் திற்கு ஆதரவாய் இருக்கின்றார்கள் கோவில் நிருவாகிகள் நியாயமாய் நடந்து கொள்ளாவிட்டால் வணங்கப் பிரிய முள்ளவர்கள் பலாத்காரமில்லாதாக சத்தியாக்கிரகம் செய் வதைத்தவிர வேறுவழியில்லை என்று கருதி இருக்கின் றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.

ஆதலால் கோவில் நிருவாகிக சத்தியாக்கிரகம் செய்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்திற்குக் கொண்டுவந்து விடாமல் தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுமாறு வேண்டு கிறோம்.

ஆலயப் பிரவேச உரிமை
ஈ.வெ.ராமசாமி சொற்பொழிவு
1936- குடிஅரசிலிருந்து...



என்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க்காரர்களை விட உள்ளுர்க்காரர்களாகிய உங் களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.

எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும் அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவது மில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. அத னாலேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடையாது. சுமார் 15 - 20 வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அனேக வீடுகளுக்கு நான் வராவிட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட  காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளி யேறாமல் காத்திருக்கும். அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்தவனாகிய நான் இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும். இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்மந்தமான நட்பு தவிர மற்றபடி உலக வழக்கமான பொதுஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அநேக துறைகளில் பொது ஜன அபிப் பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக் கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர் களுக்கும் இந்தக் கதிதான். ஆனால் இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனே கருக்கு இதுகூட சாத்தியப்படாமல் அடிக்கடி கரணம் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள் என்று சொல்லுவேன்.

ஜாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லுவதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா? நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத ஜாதியா? என்றால் அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ்தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர்களும் செய்திருக்கிறார்கள். இதே எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில் நான் முன்னின்று கட்டி வைத்ததல்லவா? மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக் கிறதல்லவா? அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்.

கோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தான கமிட்டியில் நான்தான் என் தலைமையில் தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமுலுக்கு கொண்டு வந்ததில் கோயில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும் தோழர் ஈஸ்வரன் அவர் களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை ஆயிற்று என்றாலும் அந்த தீர்மானம் கேன்சல் செய்ய வேண்டிய தாகவும் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் ராஜினாமா செய்தேன். அதற்கப் புறமே சாமியையும் கோவிலையும் மதத்தையும் அடியோடு அழிக்க துணிந்தேன் (31.3.1929). காரியம் வெற்றி பெற்றதோ இல்லையோ அது வேறு விஷயம். அதன் பயனாய் பல கோவில்களுக்கு வரும்படி குறைந்தது. சில சாமிகளுக்கு மதிப்பும் குறைந்தது. திருப்பதி ராமேஸ்வரம் டிரஸ்டிகள் வரும்படி குறைந்து விட்டதாக ரிபோர்டு செய்தார்கள். கொச்சி திருவாங்கூரில் 10 லக்ஷக்கணக்கான மக்கள் தாங்கள் நாஸ்திகர்கள் என்றும் சகல மதத்தையும் சிறப்பாக இந்து மதத்தை விட்டுவிட வேண்டுமென்றும் தீர்மானம் செய் தார்கள். பதினாயிரக்கணக்கான பேர் கிறிஸ்து முஸ்லீம் சீக்கிய ஆரிய சமாஜம் முதலிய மதங்களுக்கு பாய்ந்தார்கள்.  திருவாங்கூர் பிரஜைகளில் ஏறக்குறைய பகுதிக்கு மேற்பட்ட வர்கள் ஏற்கனவே கிறிஸ்துவர் களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கிறார்கள் என்பதோடு இப்போதும் கும்பல் கும்பலாய் மதம் மாற ஆரம்பித்தார்கள். எனது பிரசாரத்தின் பலனாய் நான் ஜாதிமத ஜனங்களிடையே செல்வாக்கு இழந்து மதிப்பு இழந்து வர நேருகிறது என்றாலும் மேல் கண்ட பலன்கள் இந்நாட்டில் இதற்கு முன் என்றும் இருந்ததை விட அதிக மாக ஏற்பட ஆரம்பித்து விட்டதால் பொது ஜனங்களிடையே என் மீது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் நாஸ்திகத் தையும் கோவில் குள வெறுப்பையும் மாற்றி இந்துக்கள் மதம் மாறுவதையும் நிறுத்தித் தீரவேண்டிய அவசியம் மகா ராஜாக்கள் முதல் சாதாரண பார்ப்பனர்கள் வரை ஏற்பட்டு விட்டது. நானோ அல்லது என்னைப் போன்ற யாராவது ஒருவரோ தனது சுயநலத்தையும் தனது செல்வாக் கையும் இழந்து பொதுஜன வெறுப்பையும் ஏற்க தயாராய் இருந்திருக்காத வரையில் இந்த மாறுதல் அதுவும் புரட்சி போன்றது ஒன்று ஏற்பட்டிருக்க முடியவே முடியாது என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். 
- விடுதலை நாளேடு, 16.12.17

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

ஜாதிக் கொடுமைகளை ஒழிக்கவே சுயமரியாதை இயக்கம்

-8-1929, குடிஅரசிலிருந்து...

ஆதி திராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக் கூடாதென் கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப் பட்டபோதிலும் அவர்களை இழிவு படுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவ தில்லை. இந்து வென்று சொல்லப்படும் திரு.முனுசாமி என்னும் ஆதிதிராவிடரும் மனிதர்தான். அவர் ஆலயத்தருகில் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டு சாமி செத்துப் போகுமாம். ஆனால், பிறவியில் மிருகமாய்ப் பிறந்ததும் ஜாதியில் நாய் என்று அழைக்கப்படுவதுமான மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டுவிடும்போது ஆறறிவுள்ள மனித னாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் முனுசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும் விட மறுக்கப்படுவது என்ன கொடுமை? இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய் பிறந்துவிட்டார்கள், அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரத்தில் இப்படிச் சொல்லுகிறது. வேதத் தின் கர்ம காண்டத்தில் அப்படிச் சொல்லுகின்றது என்று சாஸ்திரக் குப்பைகளின்மீது பழியைப் போடுவ தோடு, மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதர வாக்கிக் கொள்ளுகின்றார்கள். இவ்வாறு மதத்தின் பேராலும் சமயநூல்கள், சாஸ்திரங்கள், புராணங் களின் பேராலும் செய்யப்படும் கொடுமை களுக்கு அளவில்லை. மற்றும் பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்; கடவுளால் வேதங் களிலும் சாஸ்திரங்களிலும் எழுதி வைக்கப்பட்டு விட்டது. அதைப்பற்றி அதிகமாகக் கேட்காதீர்கள் என்று கொடுமைகளுக்குச் சாக்குச் சொல்லிக் கொண்டு, ஆயி ரக்கணக்கான வருடங்களாய் மக்களில் சில சார்பாரைப் பெரும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றது.

ஆயிரக்கணக்கான வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமுகம் கொடுமைக் குட்படுத்தப்பட்டு வரு கின்றது. ஆதிதிராவிடர் களாகிய உங்களை விட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப் படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை. எங்களை விட உயர்ந்த ஜாதியார் என்பவர்கள் போகுமிடத்திற்கு எங்களை விடக்கூடாதென்ற ஏற்பாடில்லாமல் போக வில்லை. உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டும் என்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென் கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப்பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்கள் என்று இழி பெயர்களு மிட்டழைக்கிறார்கள். இக்கேவலச் செயலுக்குக் கடவு ளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென் கிறார்கள். நம் மக்களுள் அநேகர் எவர் எப்படிச் செய்தா லென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும் வித்தியாசங்களையும் ஒழிக்கப்பாடுபட்ட போதிலும் அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கித் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றனர். ஒவ்வொருவரும் நமக்கென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்போமென்று இழிவுக்கிடங்கொடுத்துக் கொண்டு போகும்வரை சமுகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்க மேற்படாது என்பது திண்ணம்கேளுங்கள்!

ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலை நாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சுயமரியாதை .இயக்கத்தைக் குறித்து அந்த விரோதிகள் என்ன சொல்லு கின்றார்கள் என்பதைக் குறித்து நமது நண்பர் பால குருசிவம் சிறிது நேரத்திற்குமுன் தெளிவாய் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அவர் இவ்வியக்கத்தில் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மையாவது வந்திருக்கின்றதெனக் கூறியது முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதைக்காரர்கள் கோயில் குளம், சாமி இல்லை என்கிறார்கள்; மதமில்லை என்கின்றார்கள்;  இவர்கள் நாஸ்திகர்கள்; இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய்விடும் போலிருக்கிறது, சுவாமி போய்விடும் போலிருக்கிறது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூக்குரலிடு கின்றார்கள். பலர் கிளம்பி கூலிகளுக்கும் காலி களுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப் பிரச்சாரம் செய்வதற்காகத் தூண்டி விட்டு மிருக்கிறார்கள்.

அவர்கள் சூழ்ச்சிகளையும் கூலிப் பிரச்சார மோசத்தை யுமுணராது அவர்கள் பிதற்றல் களை நம்பி நமது பாமர மக்கள் ஏமாறி அவர்கள் சொல்லுவது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லு கிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கமென்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்துகின்றேன்.

உண்மையில் ஆஸ்தீக, நாஸ்தீகம் என்பவைகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. உலகத்தில் அவன் உயர்ந் தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமுக முன்னேற்றத்திற்கும் விடு தலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் தயாராயிருக் கிறோம், மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால் அது எந்த மதமாய் இருந்தாலும் அதனை ஒழித்துத்தானாகவேண்டும் (கேளுங்கள்) கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்? அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமை களுக்கு ஆதரவாயும் அக்கிர மங்களுக்கு அனுகூலமாயுமிருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம். சும்மா கிடக்கும் கடவு ளையும் மதத்தையும், சாஸ்திரத்தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.

கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கடவுளையும் ஒழிப்பதற்கு பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்த வனாயும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கேவலமாகத் தானிருந்தாக வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்த கடவுளும் மதமும் போகவேண்டியதுதான்.

உதிர்ந்த மலர்கள்
18.05.1930 - குடிஅரசிலிருந்து....

1. கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.

2. கடவுள் ஒருவர் உண்டு, அவர் உலகத் தையும் அதிலுள்ள வஸ்த்துக்களையும் உண் டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத் தையும்தான் இச்சையால், புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங் களில் பிறரைத் தூஷித்துக்கொண்டு திரிபவன் அயோக் கியன்.

பார்ப்பனப் பிரச்சாரம்

3. ஆழ்வார்கள் கதைகளும், நாயன் மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரசாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப் பட்டதாகும்.

4. புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சி யென்று அறிந்து கொள்ளாமல் அவை களையெல்லாம் உண் மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர் களாவார்கள்.

5. வயிறுவளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மதஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே, பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதி களாவார்கள்.

6. எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.

7. நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள்போல் வேஷம் போட்டுக்கொண்டு நம்மிடம் வந்து நானும் சுயமரியாதைக்காரன்தான் என்னிடம் மூடப் பழக்கவழக்கம் கிடையாது, புராணங் களெல்லாம் பொய் என்றும், சமயங்களெல்லாம் ஆபாசம் என்றும் பேசி மேடையில் இடம் சம் பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப் புக்கு புராண பிரசாரத்தையே செய்பவர்களாகிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால் பண்டிதர்களை கிட்டசேர்க்கும் விஷ யத்தில் வெகு ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும்.

நமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்

02.09.1934 - பகுத்தறிவிலிருந்து..

நமது நாட்டில் பெண்கள் சமையலுக்கும், படுக் கைக்கும் மாத்திரம் பயன்படக் கூடியவர்கள் என்கின்ற எண்ணம் வைதிகர்களுக்குள்ளும், வயோதிகர்களுக் குள்ளும் இருந்து வருவதோடு பலப் பெண்களும் அப்படியே நினைத்துக் கொண்டு மிருக்கிறார்கள். சில பெண்கள் இந்த இரண்டு வேலைகளுக்கும் இடையூறு இல்லாமல்  ஏதாவது வேலை கிடைத்தால் மாத்திரம் செய்யலாமே தவிர மற்றபடி பெண்கள் ஆண்களைப் போல் வேலை பார்ப்பது பாவமென்றும் கருதி இருக்கிறார்கள்.

சில பெண்கள் சட்டசபையில் இருந்தவர்களும், இருக்க பாக்கியம் பெற்றவர்களும் கூட பெண்களுக்கு கும்மி, கோலாட்டம், கோலம், தையலில் பூப்போடுதல் ஆகிய வேலைகள் சம்பந்தமான கல்வி கற்றால் போதும் என்றும் சொல்லிக்கொண்டு இருக் கிறார்கள்.

நம்முடைய தேசத்து தேசியத்தலைவர்களும், மகாத்மாக்கள் என்போர்களுக்கும், பெண்கள் சந்திரமதி போலும், சீதை போலும், நளாயினி போலும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தகுந்த பிரசாரமும் செய்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட கஷ்ட மான நிலையில் நம் தென்இந்தியாவில் சென்னையில் பெண்கள் பி.ஏ., பி.எல்., படித்து வக்கீல்களாகி, அட்வகேட்டுகளும் ஆகி இருக்கின்றார்கள் என்றால் பெண்களை எல்லாத் துறையிலும் ஆண்களைப் போலவே பார்க்கவேண்டும் என்கிற ஆசை உள்ளவர் களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் என்பதை நாம் எழுதிக் காட்ட வேண்டியதில்லை. அப்பெண் வக்கீல்களில் இருவர்கள் தோழர் எம்.எ. கிருஷ்ணம்மாள் எம்.ஏ., எதுகிரியம்மாள் ஆகியவர் களாவார்கள்.

இவர்களது மூத்த சகோதரியாரும் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் பரிட்சையில் தேறி அட்வ கேட்டாகி இருக்கிறார்கள்.

சில வருஷங்களுக்கு முன் மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜி தோழர் தேவதாஸ் அவர்கள் குமார்த்தியும் வக்கீல் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி கோயமுத்தூரில் தொழில் நடத்தி வருகிறார்கள். தங்களைப் பெண்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு வெட்க மில்லாமல் கும்மியும், கோலாட்டமும், கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களே அப்படிப்பட்ட பெண்களுக்கு இனியாவது புத்திவருமா? என்று நினைக்கின்றோம்.
- விடுதலை நாளேடு,9.12.17

செவ்வாய், 5 டிசம்பர், 2017

அம்பேத்கரின் அந்த 22 உறுதிமொழிகள்தான் என்ன?

டாக்டர் அம்பேத்கர் 1956ம் அக்டோபர் 15ம் நாள் நாகபுரி நகருக்கருகில் தீட்சா பூமியில் 5 லட்சம் தொண்டர்களுடன் புத்தமதத்தை தழுவியதை நாமறிவோம். மதமாற்ற நிகழ்ச்சியின்போது அம்பேத்கர் தன் கைப்பட எழுதித் தயாரித்த 22 உறுதிமொழிகளை மேடையில் ஒவ்வொன்றாக படிக்கப் படிக்க, 5 லட்சம் தொண்டர்களும் வானமதிர திருப்பிச் சொல்லி புத்தமதத்தில் சேர்ந்தார்கள் என்பது வரலாறு.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அஞ்சி நடுங்கிய அம்பேத்கரின் அந்த 22 உறுதிமொழிகள்தான் என்ன?

1. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை கடவுள்களாக நம்பி நான் வணங்கமாட்டேன்.

2. ராமனையும், கிருஷ்ணனையும் கடவுள்களாக நம்பி நான் வணங்கமாட்டேன்.

3. பார்வதி, கணபதி என்ற கடவுள் உருவங்களையும் நான் வணங்கமாட்டேன்.

4. இந்த பூமியில் ஆண்டவன் என்றொருவன் பிறக்கமுடியும் என்பதையும், அவதாரமாக வருவார் என்பதையும் நான் நம்பவில்லை

5. “புத்தர் விஷ்ணு கடவுளின் அவதாரம்” என்ற பொய்யான கட்டுக் கதையை நான் நம்பவில்லை.

6. இறந்த முன்னோர்களுக்கு பிண்டங்கள் வைத்து சிரார்த்தம் செய்யும் சடங்கை நான் இனிமேல் செய்யமாட்டேன்.

7. புத்தமதத்தின் அடிப்படை கோட்பாடுகள், கொள்கைகளுக்கு எதிராக நான் செயல்படமாட்டேன்.

8. பார்ப்பனர்கள் மூலம் எந்த விதமான மதச்சடங்குகளையும் (சமஸ்கார்) செய்யமாட்டேன்.

9. மக்கள் அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் ஏற்று நடப்பேன்.

10. மக்களிடையே ஒற்றுமையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்த நான் பாடுபடுவேன்.

11. புத்தர் போதித்த எட்டு தர்மநெறிகளை நான் ஏற்று நடப்பேன்.

12. புத்தர் போதித்த பத்து அறவழிகளைப் பின்பற்றி நடப்பேன்.

13. உயிர்வாழ் இனங்கள் அனைத்தின் மீதும் அன்பு செலுத்துவேன்.

14. பொய் சொல்லமாட்டேன்.

15. அடுத்தவர்களுக்கு சொந்தமான பொருளைத் திருடமாட்டேன்.

16. ஒழுக்கக்கேடான பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன்.

17. மது மற்றும் போதையூட்டும் பொருட்கள் எதையும் தீண்டமாட்டேன்.

18. புத்தர் போதித்த கருணை, அன்பு மற்றும் பகுத்தறிவு வழிகளில் எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன்.

19. பார்ப்பனர்களே உயர்ந்த முதல் சாதி என்று வலியுறுத்தும், மனிதர்களுக்கிடையே சமத்துவமின்மையைப் போதிக்கும் மற்றும் மனிதகுல விடுதலைக்கு எதிரான இந்துமதத்தை இன்றோடு கைகழுவி, நான் புத்தமதத்தில் என்னை இணைத்துக் கொள்கிறேன்.

20. புத்த மதமும், தர்மமும் இந்த மண்ணில் சிறந்தது என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்.

21. இன்றுதான் நான் புதியபிறவி எடுத்திருப்பதாக உணர்கிறேன்.

22. இன்று முதல் புத்தர் காட்டிய வழியில் நான் உறுதியாக நடப்பேன்.

22 உறுதிமொழிகளைப் படித்து முடித்ததும் அம்பேத்கர் உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே கண்ணீர் வடித்தார் என்று அவரைப்பற்றி 60 ஆய்வுக் கட்டுரைகளையும் மூன்று புத்தகங்களையும் எழுதியிருக்கும் அமெரிக்காவின் மினிசோட்டா பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியை டாக்டர் எலினார் ஜெல்லியாட் பதிவு செய்திருக்கிறார்.

சமூகப் புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கையில் உச்ச கட்ட இறுதிச்சம்பவம் அவர் புத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சிதான். இந்து மதத்தின் மீது அவருக்கிருந்த கண்ணோட்டத்தையும், கடுமையான விமர்சனத்தையும் யாராலும் மறைக்க முடியாது – மாற்ற முடியாது.

குஜராத் ஆரம்பப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டதிலிருந்து மேற்சொன்ன அம்பேத்கரின் உறுதிமொழிகள் நீக்கப்பட்டிருக்கலாம். ராமர் இல்லாமல் ராமாயணம் ஏது? பஞ்சபாண்டவர்கள் இல்லாமல் மகாபாரதக் கதை ஏது? அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறும்போது அவர் முழங்கிய 22 உறுதிமொழிப் பிரகடனமில்லாமல் அவரது வாழ்க்கை வரலாறு ஏது?
- தாம்பரம் மாவட்டத் குழு கட்செவி