ஞாயிறு, 3 டிசம்பர், 2023

வைக்கம் போராட்ட வெற்றி விழாக்கள்!

  

 12

வைக்கம் போராட்ட பொன்விழா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25,26 தேதிகளில் வைக் கம் சத்தியாகிரக ஆசிரமப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டு பொன்விழா நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்தார். 

வைக்கத்தில் சத்தியாகிரகத் தலைவர் களை நினைவு கூர்ந்திடும் வகையில் அலங் கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்ததன. பெரியார் மறைந்து 14 மாதங்கள் ஆன நிலை யில் பெரியார் இல்லாத ஒரு விழா! வைக்கம் வீரரை மறக்க முடியுமா? நன்றி யுணர்ச்சியோடு திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம் மையாரை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத் திருந்தார்கள் கேரளத் தலைவர்கள்! அன்னை யார் அவர்கள் முதல் நாளே வைக்கம் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று, இரண்டாம் நாள் மாலை நடைபெற்ற பெண்கள் மாநாட்டைத் தொடங்கி வைத் தார்கள். அன்னையாருடன் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீர மணி அவர்க ளும் மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை 1979 இல் தமிழ்நாடு அரசு கொண்டாடியது. நூற்றாண்டு விழாக் குழுவின் பரிந்துரையின்பேரில் வைக்கத்தில் பெரியாருக்கு நினைவு மண்டபம் எழுப்ப எம்.ஜி.ஆர் அரசு முடிவு செய்தது. அதன்படி 1985 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி வைக்கத்தில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தமிழ் நாடு அரசின் சார்பில் மாண்புமிகு நிதிய மைச்சர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும், கேரள அரசின் சார்பில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச் சர் பி.ஜே.ஜோசப் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் நினைவகம் மற்றும் சிலை திறப்பு விழா வைக்கத்தில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்றது. நினை வகத்திற்கு அடிக்கல் நாட்டிய நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே இந்த விழாவி லும் கலந்து கொண்டு பெரியார் நினைவி டத்தையும், சிலையையும் திறந்து வைத்தார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். தமிழ்நாடு செய்தி - விளம்பரத் துறை அமைச்சர் மு.தென்னவன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், நிருவாக இயக்குநருமான ஈ.வெ.கி. சுலோசனா சம்பத் மற்றும் பலர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத் தோழர் கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

13
வைக்கம் போராட்ட 85 ஆம் ஆண்டு விழா, தந்தை பெரியார் 132 ஆவது பிறந்த நாள் விழா, மற்றும் ஜாதி ஒழிப்பு மாநாடு 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி வைக்கம் என்.எஸ்.எஸ் அரங்கத்தில் சிறப் பாக நடைபெற்றது. தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, கேரள அமைச்சர் இராமச்சந்திரன், வைக்கம் சட்டமன்ற உறுப்பினர் கே.அஜீத், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன், மற்றும் பலர் பங்கேற்றனர். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரா விடர் கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் கார், வேன், பேருந்து மற்றும், ரயில்கள் மூலம் திரளாக வருகைதந்து கலந்து கொண்டனர்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழா கேரள அரசு சார்பில் வைக்கத்தில் 1.4.2023 அன்று நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டிருந் தனர். வைக் கத்தில் அமைக்கப்பட்டிருந்த சத்தியாகிரகி களின் நினைவுப் பதாகைகளும் ஓவியங்களும் சிற்பங்களும் பார்வையாளர் களை உணர்ச்சிப் பிழம்பில் உறைய வைத் தன. காணும் இடமெல் லாம் வரவேற்பு வளைவுகளும் தோரணங்களும் கண்கொள்ளா காட்சியாய் இருந்தன. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களும், தமிழ்நாடு  முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் மற்றும் பல்வேறு அமைச்சர் பெரு மக்களும் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினர்.

வைக்கம் வீரர் வாழ்க! 'முரசொலி' தலையங்கம் - 1.4.2023

பிற இதழிலிருந்து...

  

வைக்கம் வீரர் வாழ்க! 

'முரசொலி' தலையங்கம் - 1.4.2023

வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம் தான் 'வைக்கம் போராட்டம்' ஆகும். 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் இது தொடங்கியது.

அந்த வெற்றிப் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. வரிசையாக கேரளத் தலைவர்கள் அனைவரும் கைதான நிலையில் ஏப்ரல் 13 ஆம் நாள் தந்தை பெரியார் அவர்கள் அங்கு செல்கிறார். இறுதிவரையில் போராடுகிறார். வெற்றி பெறுகிறார். 'வைக்கம் வீரர்' என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர் களால் அப்போதே போற்றப்பட்டார். உண்மை யான பட்டமாக இருந்தால் அது 100 ஆண்டுகள் நிலைக்கும் என்பதன் அடையாளமாக இருக் கிறது ‘வைக்கம் வீரர்' என்ற பட்டம்!

கேரளாவில் 74 நாட்கள் சிறை வைக்கப் பட்டார் பெரியார். அரசியல் கைதிகளுக்குஉரிய மரியாதை தரப்படாமல் கொடுமைப்படுத்தப் பட்டார். இந்தப் போராட்டம் நடந்தபோதே பெரியாரின் தியாகம் போற்றப்பட்டது. "சிறை உடையை அவர் அணிகிறார். இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரக சிறைவாசிகளி லிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டி ருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் ஈ.வெ.ராமசாமி மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவ ருடன் நன்றாகப் பழகியிருக்கிறேன். அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சியையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையை அவர் தேர்ந் தெடுத்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல. உண்மையிலேயே” என்று ‘சுதேச மித்திரன்' இதழில் எழுதி இருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி அவர்கள்.

கேரளத் தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் அவர்கள், "ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக் கூடிய நாட்டுப்பற்று இந்த நாட்டில் இன்னொருவருக்கு இருக்க முடியுமா? இந்த கேரள நாட்டு மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு துன்பத்தையும் அனுப விக்கலாம் என்று ஒரு தலைவர் வந்தாரே, அதைப் பார்த்து இந்த மாநிலத்து மக்களுக்கு வெட்கம் ஏற்படவில்லையா? கேரளாவின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது முன் வர வேண்டாமா?” என்று எழுதினார்.

இந்த வீரமிகு போரில் பெரியாருடன் அவர் மனைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் சேர்ந்து போய் போராடினார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்களை அழைத்துக் கொண்டு அந்தச் சாலையில் நடந்துபோனார் நாகம்மாள். அவரையும் அவருடன் சென்ற அய்ந்து பெண்களையும் தடுத்து நிறுத்திய காவலர்கள், "நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஜாதி என்ன என்று சொல்லுங்கள்” என்று கேட்டனர்.

"நாங்கள் ஜாதியைச் சொன்னால் தாழ்த்தப் பட்ட சமூகத்தவர்களை மட்டும் உள்ளே விடாமல் தடுத்து விடுவீர்கள். அதனால் நாங்கள் சொல்ல மாட்டோம்” என்றார் நாகம்மையார். யாரையும் உள்ளே விட மாட்டோம் என்று தடுத்தார்கள் காவலர்கள். “எங்களைக் கைது செய்யுங்கள்” என்றார் நாகம்மாள்.

“உங்களைக் கைது செய்ய ஆட்சியாளர்கள் உத்தரவிடவில்லை, அதனால் கைது செய்ய மாட்டோம்” என்று காவலர்கள் சொன்னார்கள். எனவே சீர்திருத்தக் கருத்துகளை ஊர் ஊராகப் போய் பரப்புரை செய்தார்கள் நாகம்மையாரும் கண்ணம்மாளும். "பலத்த மழை பெய்த போதும் நாகம்மாள் அந்த இடத்தை விட்டுப் போகாமல் நின்று போராடினார்” என்று 'சுதேசமித்திரன்' நாளிதழ் எழுதுகிறது.

“வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார், தீண்டாமை எனும் பேயரை வெட்டி வீழ்த்துவான்வேண்டி வைக்கம் சத்தியாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூடினார்” - என்று நாகம்மையாரின் தியாகத்தை எழுதினார் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்.

கேரள பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் டி.கே.இரவீந்திரன் வைக்கம் போராட்ட ஆவணங்களை மய்யமாக வைத்து மிகப்பெரிய ஆய்வு நூலை எழுதினார். Eight Furlongs of Freedom - என்பது அந்த நூலின் தலைப்பு ஆகும். அதில், “ஈ.வெ.ராமசாமியின் தலைமை இந்த இயக் கத்துக்கு புத்துயிர் ஊட்டியது” என்று எழுதி இருக்கிறார்.

இத்தகைய தியாகத்தால் கிடைத்தது வைக்கம் வெற்றி. கேரளாவைச் சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் பங்கெடுக்கக் கூடாது, மாற்று மதத்தவர்கள் இதில் பங்கேற்கக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை காந்தியார் போட் டாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பெரியார் பரப்புரை செய்தது அதன் வெற்றியை உறுதி செய்தது. 'சேர்த்தலை' என்ற இடத்தில் பெரியார் பேசி முடித்ததும், 'நாங்களும் பங்கேற்கிறோம்' என்று 100 பெண்கள் பெயர் கொடுத்தார்கள். அத்தகைய எழுச்சியை உரு வாக்கினார் பெரியார்.

வைக்கம் போராட்ட வெற்றி விழா 29.11.1925இல் நடந்த போது அதில் கலந்து கொள்ள பெரியாருக்கும் நாகம்மையாருக்கும் அழைப்பு வந்திருந்தது. பெரியாரைத் தலைமை வகிக்கச் சொன்னார்கள். ஆனால், தலைமை வகிக்க மறுத்து, வாழ்த்திப் பேசினார் பெரியார். “உரிமையை மறுத்த அரசாங்கமே இப்போது நம்மை கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது. இதுதான் சத்தியாகிரகத்துக்கு ஏற்பட்ட மகிமை. பலாத்காரப் போராட்டம் நடத்தியிருந்தால் கூட இந்த வெற்றியை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க மாட்டோம்' என்று பேசினார் பெரியார். இத்தகைய வெற்றியின் 100ஆம் ஆண்டுத் தொடக்கம் இது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் இணைந்து இந்த விழாவை நடத்துவது சிறப்பிலும் பெரும் சிறப்பு. இணைந்து போராடினோம். இணைந்து கொண் டாடுவோம்!

நன்றி: 'முரசொலி'  

வைக்கம் போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து வெல்ல வேண்டும்!

 

 வைக்கம் விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

2

திருவனந்தபுரம்,ஏப்.3- வைக்கம் சத்யா கிரக போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து போராடி வெல்ல வேண்டும் என்று கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் பேசினார். 

வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவில் (1.4.2023) கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசிய தாவது: 

தமிழ்நாட்டில் சட்டமன்றம் நடை பெறும் நேரமாக இருந்த போதிலும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தது வைக்கம் சத்யாகிரகப் போராட் டத்திற்கு அவரும், தமிழ்நாடு அரசும் கொடுக்கும் முக்கியத்துவம் தான் கார ணமாகும். அதற்காக நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்னுடைய நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   வைக்கம் சத்யாகிரகம்  ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த ஒரு போராட்டமாகும். அனைவரும் ஒன் றாக இணைந்து போராடினால் அதற்கு வலிமை அதிகம் என்பதை வைக்கம் சத்யாகிரக போராட்டம் உணர்த்துகிறது. இந்திய வரலாற்றில் இது ஒரு ஈடு இணை இல்லாத போராட்டமாகும்.  இது சமூக மாற்றங்களுடன், தேசியமும் இணைந்த ஒரு போராட்டமாகும்.

பெரியார் - அண்ணாவைப்  பின்பற்றும் தமிழ்நாடு அரசு

சுதந்திரமாக நடமாடுவது என்பது ஒரு குடிமகனின் உரிமையாகும். ஆனால், இதைத் தடுக்கும் நிலை தான் நம்முடைய நாட்டில் அப்போது இருந் தது.  அதனால்தான் இந்த நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வது மிக வும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. 

தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் ஒரே போராட்ட குணம் கொண்டவர்கள். சில வாரங்களுக்கு முன்புதான் தமிழ் நாட்டில் நடந்த தோள் சீலை போராட்ட நிகழ்வில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டோம். அங்கு வைத்துத் தான் வைக்கம் சத்யாகிரக நூற்றாண்டு விழாவை இணைந்து கொண்டாடலாம் என தீர்மானித்தோம். இணைந்து போராட வேண்டும் என்ற ஒரு எண் ணத்தை வைக்கம் சத்யாகிரக போராட் டம் வலியுறுத்துகிறது. 

இனி அனைத்து விடயங்களிலும், இரு மாநிலங்களும் சகோதரத்துவத் துடன் செயல்படுவோம். இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்வோம்.

இரு மாநில அரசுகளும் சமூகநீதி யைப் பாதுகாப்பதுடன், தீண்டாமைக்கு எதிராகவும் செயல்படுகின்றன. தமிழ் நாடு அரசு பெரியார், அண்ணாவைப் பின்பற்றி செயல்படுகிறது. கேரளாவிலும் மதச் சார்பற்ற அரசு நடக்கிறது. 

இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் இதுபோல இணைந்து போராடி வெல்ல வேண்டும். வரும் காலத்திலும் இதுபோன்ற நிலை தொடர வேண்டும். 

-இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார்.

வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்

 

 .com/


பெரியார் தன் வாழ்வின் நடுப்பகுதியில் வைக்கத்தில் 


74 நாள் சிறையிலும், 67 நாள் வெளியிலுமாக


141 நாட்களை வைக்கம் போராட்டத்துக்காகச் செலவிட்டார்.


இன்னொரு முக்கியமான செய்தி, களத்தில் தனியாக அல்ல;


மனைவி நாகம்மையுடன் நின்றார்.


எப்படித் தொடங்கியது போராட்டம்?


அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை இருந்தது. இத்தகைய தடை கேரளம் முழுவதும் அளாவியது. இத்தடையை நீக்கி அவ்வீதியில் நடக்க உரிமை வேண்டி நிகழ்ந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம். ஈழவர் தலைவர் டி.கே.மாதவன் பல்லாண்டு முன்முயற்சியில் கிளர்ந்த இந்த வைக்கம் போராட்டத்தை உற்சவ மூர்த்தியா கவும் மூளையாகவும் முறையே கேரள காங்கிரஸ் தலை வர்கள் கே.பி.கேசவ மேனனும் ஜார்ஜ் ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டுப் பெரியார், கேளப்பன், குரூர் நீல கண்டன் நம்பூதிரி போன்றோர் நடத்துநராகப் போராட்டத் தைச் செயல்படுத்த, ஆலோசகரான காந்தி நிறைவில் வந்து முடித்து வைத்தார் எனச் சுருக்கமாக வைக்கம் போராட்டச் சித்திரத்தை வரையலாம். இடையில் மன்னத்து பத்மநாபன் போன்றோர் பெரும் துணைவலியாக அமைந்தனர்.


1924 மார்ச் 30 அன்று கேரள காங்கிரஸ் ஆதரவில் தொடங்கிய போராட்டம் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தன் போராளிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டுத் தலைவர்களின்றி தத்தளித்து நின்றது. வழிநடத்தும் தலைவர் களைக் கேட்டு காந்தி, ராஜாஜிக்கும், அவரையே வரும்படி வேண்டி பெரியாருக்கும் ஜார்ஜ் ஜோசப் எழுதினார். முதல் இருவரும் கோரிக்கையை நிராகரித்தனர். தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி தலைவரான பெரியாரோ கேரள அழைப்பை ஏற்று வைக்கம் சென்றார். தான் கட்டாயம் வந்தே தீர வேண்டுமா என்று இரு முறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே பெரியார் கிளம்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற தகுதியிலேயே சென்றமையால், தலைமைப் பொறுப்பைத் தற்காலிகமாக ராஜாஜியைப் பார்க்கச் சொல்லி கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றார். வைக்கம் சென்ற 13 ஏப்ரல் 1924 முதல் அவர் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழா நிகழ்ந்த 29 நவம்பர் 1925 வரையான காலத்தில் பெரியார் போராட்டத்துக்குப் பங்களித்தார்.


எப்படி நடந்தது போராட்டம்?


தடைசெய்யப்பட்ட சாலைகளின் தடுக்கப்பட்ட இடங் களில் தினமும் குறைந்தது மூன்று பேர் சத்தியாகிரகம் செய் வர். 604 நாள் போராட்டம் நிகழ்ந்தது. பல நாள் பெரியார் தலைமை தாங்கினார். காவல்துறையினரின் தடியடியும் வாயடியும் குறைவின்றி நிகழ்ந்தன. வைதிகர் ஏற்பாடு செய்த அடியாட் களின் அக்கிரமங்களுக்கும் குறைவில்லை. சத்தியாகிரகிகளின் கண்ணில் சுண்ணாம்பைப் பூசிய சம்பவங்களும் நிகழ்ந்தன. மக்கள் ஆதரவைத் திரட்ட வைக்கத்தைச் சுற்றிலும் கிராமங் களிலும் சேர்த்தலை, வர்க்கலை, கோட்டயம் போன்ற நகரங் களிலெல்லாம் ஓயாமல் பிரச்சாரம் செய்தார் பெரியார். தெற்கே திருவனந்தபுரம், நாகர்கோவில் வரை அவரது பிரச் சாரப் பயணம் நீண்டது. மக்களிடமும் வியாபாரிகளிடமும் நிதி வசூலித்தார்.


வைக்கம் சத்தியாகிரகத்தை அகில இந்திய இயக்கமாக்கக் கேரளத் தலைவர்கள் கோரியபோது காந்தி இணங்கவில்லை. இயக்கம் பலவீனமாகிறதே என்று அவர்கள் வற்புறுத்திய போது அதைச் சாகவிடாமல் சென்னை மாகாணத்தவர் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லிவிட்டார். எனவே, பெரியார் உட்பட தமிழ்நாட்டுத் தலைவர், தொண்டர்களின் பங்களிப்புக்கு காந்தியின் பொது அனுமதி இருந்தது எனக் கருதலாம். இத்தகைய வெளியார் உதவியின் இன்றியமை யாமையை காந்தியை விடவும் சமஸ்தான ரெசிடெண்ட் சி.டபிள்யூ.இ. காட்டன் சரியாக உணர்ந்திருந்தார்: “சாலையை அனைவருக்குமாகத் திறப்பது என்ற பிரச்சினை உள்ளுர் சம்பந்தப்பட்டதாகவே இருப்பினும், வெளியிலிருந்து மட்டும் இதற்கு உதவி வராதிருந்தால் உண்மையில் இந்த இயக்கம் எப்போதோ பிசுபிசுத்துப்போயிருக்கும்” என்று 21 ஏப்ரல் 1924 அன்றைய குறிப்பில் அவர் சொல்கிறார்.


பிந்நாளில் 1980-களில் வைக்கம் போராட்டத்தைப் பற்றிய முதல் ஆய்வு நூலை எழுதிய கேரள வரலாற்றுப் பேராசிரியர் டி.கே.ரவீந்திரன் “பெரியாரின் வரவினால் இயக்கத்திற்குப் புதிய உயிர் கிடைத்தது” என்று பதிந்துள்ளார். மிகச் சமீபத்தில், காந்தியின் அகிம்சை தொடர்பில் வைக்கம் போராட்டத்தை ஆய்வுசெய்து அமெரிக்க ஆய்வாளர் மேரி எலிசபெத் கிங் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு கேரளப் பேராசிரியர் கே.கே.குசுமான் அளித்த நேர்முகத்தில் “ஒடுக்கப்பட்டவர் களின் தலைவராக இந்தியா முழுவதும் அறிமுகமாகியிருந்த பெரியார் தன் வெடிப்புறப் பேசும் திறனால் இக்கட்டான நேரத்தில் போராட்டத்தை வளர்த்தெடுத்தார்” என்று விவரித் துள்ளார்.


என்ன செய்தார் பெரியார்?


அரசினரும் கேரளரும் மெச்சும்படியாக வைக்கத்தில் பெரியார் என்னதான் செய்தார்? மக்கள் ஆதரவைத் திரட்டும் பிரச்சாரமே அவரது முதன்மையான பணி. “நாடு என்ன உங்கப்பன் வீட்டுச் சொத்தா? நாட்டை பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்துவிட்ட பிறகு, நாடே கோயில் சொத்துதானே!” என்று மன்னரைப் பார்த்துப் பேசினார் பெரியார். மன்னர் திருமனசைப் பாராட்டலாமே தவிர எதிர்த்து பேசுவது கூடாது என்பது திருவாங்கூர் சமஸ்தான சம்பிரதாயம்.


கிறிஸ்தவரும் முஸ்லிம்களும் அந்தத் தெருவில் நடக்கலாம். இந்துவான ஈழவர் நடக்க அனுமதி இல்லை. இந்த முரண் ஏன் என்பது சத்தியாகிரகிகளின் வாதங்களுள் ஒன்று. அதற்குப் பதில் அளித்த அதிகாரிகள், அவர்களையும் வேண்டுமானால் தடுத்துவிடுகிறோம் என்று கூறினர். இதைக் கிண்டல் செய்தார் பெரியார். “நாங்கள் பசியாக இருக்கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்றால், மற்றவர் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சாப்பிடும் உணவைப் பறித்துவிடுகிறோம் என்கிறது” என்றார்.


ஈழவரின் மீதான தீண்டாமையை மறுத்துப் பேசும்போது பெரியார் பின்வருமாறு பேசினார். “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா? இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா?” என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசினார் பெரியார்.


தீண்டாமையைக் கண்டித்து இவ்வளவு வேகமாகப் பேசியோர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தலைவர்களான பெரியாரும் கோவை அய்யாமுத்துவும்தான். கிளர்ச்சிக்காரர் அனைவரையும் சிறைப்படுத்த அரசாங்கம் முயன்றது. வைக்கம் வந்த பதினைந்து நாட்களுக்குள் பெரியார் பேசுவ தற்குத் தடை விதிக்கப்பட்டது. கோட்டயம் மாவட்டத்துக்குள் பிரவேசிக்கவும் தடை போடப்பட்டது. பின்னர், அந்தத் தடை கொல்லம் மாவட்டத்துக்கும் நீண்டது. எந்தத் தடையையும் மதிக்காமல் பெரியார் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார், சமஸ்தானம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். அரசாங்கம் பொறுக்க முடியாமல் ஒருகட்டத்தில் அவரைக் கைதுசெய்தது. நீதிமன்ற விசாரணையும் வைக்கத்தில் நிகழ்ந்தது. “இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்ற நம் பிக்கை இல்லை. விசாரணை வெறும் வேஷம். நீதிமன்றத் துடன் ஒத்துழைக்க முடியாது” என்று அறிவித்ததோடு, “சமா தானம் உண்டுபண்ணவே நான் வைக்கத்துக்கு வந்தேன், எவ்விதமான தண்டனை விதித்தாலும் ஏற்கத் தயார்” என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார் பெரியார். இதையடுத்து நீதி மன்றம் 22 மே 1924இல் ஒரு மாத வெறுங்காவல் தண்டனை அளித்தது. ஆறுக்குட்டியில் பெரியார் அத்தண்டனையை அனுபவித்தார்.


அடுத்தடுத்த சிறைத் தண்டனைகள்


சிறையிலிருந்து விடுதலை அடைந்த பெரியார் மீண்டும் நேராக வைக்கம் போனார். ஈரோட்டுக்குச் செல்வார் என்று எதிர்பார்த்த அரசாங்கம், ஏமாற்றமும் கோபமும் அடைந்தது. “கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைவதற்குத் தடை அமலில் இருக்கும்போது அவரை வைக்கத்திற்குள் நுழைய ஏன் அனுமதித்தீர்கள்?” என்று மாவட்டக் காவல் துறைக் கண் காணிப்பாளரை மாவட்ட நீதிபதி கடிந்துகொண்டார். ஆனால், அரசாங்கம் உடனே கைதுசெய்யவில்லை.


அரசாங்கத்தின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் பெரியார் தொடர்ந்து பிரச்சாரத்திலும் போராட்டத்திலும் ஈடு பட்டுக்கொண்டிருந்தார். ராட்டையைப் போராட்டக் களத்தில் கொண்டுசெல்வதில் காவல் துறைக்கும் சத்தியாகிரகிகளுக்கும் பிரச்சினை எழுந்தபோது பெரியார் அதைத் தீர்த்துவைத்தார். தொடர்ந்து அவரை அரசாங்கம் வெளியில் விட்டுவைக்க வில்லை. முதல் சிறைவாசம் முடிந்து விடுதலையான 27ஆவது நாள் (18 ஜுலை 1924) மீண்டும் கைதுசெய்தது. இந்த முறையும் பெரியார் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க மறுத்தார். முதல் முறை உபாயமான தண்டனை விதித்தும் 'எதிரி' திருந்த வில்லை என்பதாலும், இரண்டாம் தடவையாக அரசு உத்தரவை மீறி நடந்திருப்பதாலும் நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதித்தார்.


இம்முறை ஆறுக்குட்டி சிறையில் பெரியாரை அடைக்க வில்லை. மற்ற சத்தியாகிரகிகள் இருந்த திருவனந்தபுரத்துக்கும் அனுப்ப அரசாங்கம் விரும்பவில்லை. கோட்டயம் மாவட்டச் சிறையில் அடைக்க விரும்பியது. அதற்காக வைக்கத்திலி ருந்து புறப்பட்ட படகு, 20 மைல் தூரத்துக்குப் பிறகு பெரு மழை, புயல் காரணமாக மேலும் போக முடியாமல் திரும்பி விட்டது. வைக்கம் காவல் நிலையச் சிறையில் சில நாள் வைத் திருந்து பின் திருவனந்தபுரம் மத்தியச் சிறைக்கே அனுப்பி வைத்தது அரசாங்கம்.


திருவனந்தபுரம் மத்தியச் சிறையிலிருந்த கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட சத்தியாகிரகிகள் அனை வரும் அரசியல் கைதிகளாகக் கருதப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால், பெரியார் அவ்வாறு நடத்தப்பட வில்லை. 'கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகிற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட மரப்பட்டை. இவற்றுடன் ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும் கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்துகொண்டிருந்தார். தண்டனை அடைந்த ஒரு சாதாரண கைதி ஒரு நாளைக்கு எவ்வளவு வேலை செய்வானோ அதைவிட இருமடங்கு வேலை செய்கிறார்.” இது பெரியாருடன் சிறையிருந்த கே.பி. கேசவ மேனனின் நேரடி சாட்சியம்.


பெரியாருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையைப் பொறுத்துக்கொள்ள இயலாத கேசவ மேனன், பெரியாருக்கு அரசியல் கைதி தகுதி அளிக்குமாறு சிறையிலிருந்தே அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார். எனினும், விடுதலை அடையும் வரை அதற்குப் பதில் வரவில்லை என்று தன் வாழ்க்கை வரலாறான 'கடந்த கால'த்தில் குறித்துள்ளார்.


பெரியாருக்கு ஆதரவாக ராஜாஜி


பெரியாரின் நிலை ராஜாஜியையும் வருத்திற்று. பெரி யாருக்கு ஆதரவாக அரசாங்கத்தைக் கண்டித்துப் பத்திரிகை யில் எழுதினார் அவர். ஈ.வெ.ராமசாமி நாயக்கரைக் கடுங் காவல் தண்டனையில் வைத்திருப்பதும், இரும்பு விலங்கிட் டிருப்பதும், அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாகிரகிகள் சரியாகப் பெற்றுள்ளவற்றை அவருக்கு மறுப்பதும் நியாயப்படுத்தவே முடியாதவை என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழில் எழுதியிருந்தார் ராஜாஜி (27 ஆகஸ்ட் 1924). இந்தச் சமயத்தில் பெரியாருக்கு ராஜாஜி சூட்டிய புகழாரம் முக்கியமானது. “ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல; உண்மையிலேயே!”


திரு.வி.க.வும் இக்கொடுமையைச் சாடினார். “திருவாங்கூர் அரசாங்கம் ஒரு சத்தியாகிரகியை இவ்வாறு துன்புறுத்துவது தருமமோ என்று கேட்கிறோம்” என்று மனம் நொந்தார் திரு.வி.க.


சிறை தளர்த்த முடியாத வீரர்


இரண்டாம் முறையாகச் சட்டத்தை மீறியிருப்பதால் தனிச்சலுகை எதுவும் அவருக்கு வழங்க வேண்டாம் என்ற மாவட்ட நீதிபதியின் கருத்துக்குள் அரசாங்கம் ஒளிந்து கொண்டு விடுதலை வரை துன்புறுத்தியது. புதிய மன்னர் பொறுப்பேற்றதையடுத்து 30 ஆகஸ்ட் 1924 அன்று பெரியார் உட்பட 19 சத்தியாகிரகிகள் விடுவிக்கப்பட்டனர். விதிக்கப்பட் டிருந்த கடுந்தண்டனைக்காக கேரளமும் தமிழகமும் வருந்த, விடுதலையான பெரியாரோ, நாகர்கோவிலில் பேசும்போது, “நான் சிறையில் பட்ட கஷ்டத்திற்காக யாரும் வருந்த வேண்டாம். விடுதலைதான் என்னை வருத்தப்பட வைத்து விட்டது” என்று வேதனையையும் வேடிக்கையாக எதிர் கொண்டார்.


அடுத்து பெரியார், கே.பி.கேசவ மேனன் உள்ளிட்டோர் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். “பொதுச்சாலைகளில் எல்லோரும் நடமாடலாம் என்பதை அனுமதிப்பதற்குரிய அறிகுறியாகவே எங்கள் விடுதலையைக் கொள்கிறோம். அப்படி நடக்காவிடில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்து வோம்” என்று அவ்வறிக்கையில் தெரிவித்தனர். இவ்வறிக்கை மூலம் அரசின் விடுதலையைச் சலுகையாக ஏற்காமல் அதையும் ஒரு நிபந்தனையாக மாற்றினர் சத்தியாகிரகிகள். கேட்டிலும் துணிந்து நின்றார் பெரியார்.


ஒன்றரை மாதங்களுக்கு மேல் சிறையிருந்த பெரியார், இந்த விடுதலைக்குப் பிறகும் வீட்டுக்குத் திரும்பவில்லை. வைக்கத்துக்கே சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார். நெடுங்கணா, நாகர்கோவில் போன்ற ஊர்களில் பத்து நாள் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, ஈரோட்டுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி திரும்பினார். காத்திருந்ததுபோல் சென்னை மாகாணக் காவல் துறை 11ஆம் தேதி பெரியாரைக் கைது செய்தது. இந்தக் கைது ஆறு மாதம் முன்பு மயிலாப்பூரில் பேசிய அரசு விரோத பேச்சு ஒன்றுக்கானது. வேறு அரசாங்கத்தால், வேறு காரணத்துக்காக, வேறிடத்தில் கைது நிகழ்ந்திருப்பினும் அவரை மீண்டும் வைக்கத்துக்குச் செல்ல ஒட்டாமல் தடுப்பதே நோக்கம் என்று ஊகிக்கலாம். எது எப்படியோ வைக்கத்துக்கு உடனடியாகச் செல்லவிடாமல் இந்தக் கைதும் வழக்கும் அவரைத் தடுத்துவிட்டன.


பெரியார் வைக்கத்தில் இருந்த காலத்திலும் சரி பிறகும் சரி, போராட்டம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. பண நெருக்கடி அதில் முதலாவது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பெரியார் வழியாக ரூ.1000 கொடுத்தது. மற்ற பிரச்சினைகளை ஆலோசித்து முடிவெடுக்க பல ஆலோசனைக் கூட்டங்கள், சமாதானத் தூதுகள், பிரச்சாரக் குழுக்கள், மகளிர் அணிகள் அவ்வப்போது உருவாயின. அவை பலவற்றில் பெரியாரும் நாகம்மையாரும் இடம்பெற்றிருந்தனர். இவ்வகையில் திவானைச் சந்தித்து சமாதானம் பேச ஏற்பட்ட எட்டுப் பேர் கொண்ட குழுவில் பெரியாரும் ஒருவர்.


பெரியார் வைக்கத்தில் போராடிக்கொண்டிருந்த காலத் தில் அங்கு வந்த தலைவர்கள் அனைவரும் அவரைக் கலந் தாலோசித்தனர். ஆரிய சமாஜத் தலைவர் சிரத்தானந்தர் போராட்டம் நலிவுற்றிருந்த ஒரு கட்டத்தில் அதை எடுத்து நடத்தவும் ஒப்புக்கொண்டார். ராஜாஜி வைக்கம் வந்தபோது காவல் நிலைய சிறையில் இருந்த பெரியாரைச் சந்தித்த பிறகே ஆசிரமம் சென்றார். வரதராஜுலு நாயுடு, எஸ்.சீனிவாச அய்யங்கார், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோர் சத்தியாகிரக ஆசிரமத்தில் அவரைச் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சி.வி.வேங்கட ரமண அய்யங்கார் பெரியாருடன் பிரச்சினைக் குரிய சாலைகளைப் பார்வையிட்டார். ஆக இந்திய, தமிழகத் தலைவர்கள் பலரும் பெரியாருடன் போராட்டம் குறித்து விவாதித்தனர்.


காந்தி - பெரியார் சந்திப்பு


போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் வைக்கம் வந்த காந்தியுடனும் பெரியார் தொடர்பில் இருந்தார். டில்லியிலி ருந்து சென்னை வழியாக வந்த காந்தியை ஈரோட்டில் (8 மார்ச் 1925) வரவேற்றுவிட்டு, வர்க்கலையில் (12 மார்ச் 1925) அவரோடு இணைந்துகொண்டார். அதேபோல், நாராயண குருவைச் சந்தித்த காந்தியுடனான சிறு குழுவில் அவர் இருந்ததையும் காவல் ஆணையர் பதிவுசெய்துள்ளார். பெரியாரைக் கலந்தாலோசித்த பிறகே ராணியாரை காந்தி சந்தித்துப் பேசியதாகப் பலவிடங்களில் பிற்காலத்தில் தெரிவித்துள்ளார் பெரியார்.


வைக்கம் வருகையின்போது காவல் துறை ஆணைய ருடன் காந்தி மேற்கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் விளைபயனாய், ஓராண்டுக்கு முன்னால் பெரியாருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. 'ஈ.வெ.ராமசாமி நாயக்க ருக்கு விரோதமாகப் பிறப்பித்த தடை உத்தரவைத் திருவாங் கூர் கவர்ன்மென்டார் வாபஸ் வாங்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதைக் கேட்க வாசகர்கள் சந்தோஷமடைவார்கள்” என்று காந்தி 'யங் இந்தியா'வில் (23 ஏப்ரல் 1925) தன் மகிழ்ச் சியைப் பகிர்ந்தார்.


மனைவியுடன் களம் சென்றார்


காங்கிரஸின் தமிழ்நாட்டுத் தலைவராகவே பெரியார் போராட்டத்தில் கலந்துகொண்டார். தனிப்பட்ட முறையில் அல்ல; அவர் வழியாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆயிரம் ரூபாயைப் போராட்டத்துக்கு அனுப்பியது. கிடைக்கும் பெயர் விவரப்படி, 50 பேர் அளவிலான தொண்டர்களு டன் சென்று அவர் அங்கு போராடினார். தன் குடும்பத்தையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். 15 மே 1924இல் வைக்கம் வந்த நாகம்மையார், தொடர்ந்து நான்கு மாதம் சுற்றுப்பயணம் செய்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. நாகர்கோவில் தலைவர்கள் சிலரும் குடும்பத்துடன் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மிக முக்கியமான செய்தி, பெரியார் தன் வாழ்வின் நடுப்பகுதியில் வைக்கத்தில் 74 நாட்கள் சிறையிலும், 67 நாட்கள் வெளியிலுமாக 141 நாட்களைப் போராட்டத்துக் காகச் செலவிட்டார் என்பதாகும்.


ஆலோசகர் காந்தி கொள்கை அடிப்படையில் போராட் டத்தில் ஈடுபட்ட அயல் மதத்தவரை வெளியேற்றினார், சத்தியாகிரகிகள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை நிறுத் தினார், அகாலியர் நிறுவியிருந்த தரும உணவுச்சாலையை மறுத்தார், அயலிலிருந்து தொண்டர்களோ நிதியோ வருவ தைத் தடைசெய்தார். இப்படியான காந்தியின் அறிவுறுத் தல்களால் போராட்டம் பல இன்னல்களைச் சந்தித்தது, இரு முறை சத்தியாகிரகிகள் நேரடியாகச் சென்று அவரிடம் முறையிட்டனர். இயக்கமும் பலவீனப்பட்டுவந்தது. எனினும், ஜார்ஜ் ஜோசப் தவிர, பொதுவெளியில் காங்கிரஸ்காரர் எவரும் எதிர்ப்பேச்சு பேசவில்லை, பெரியாரும் பேசவில்லை. ஒரு உண்மை சத்தியாகிரகியாகவே களத்தில் அவர் விளங் கினார். பின்னாளில் கருத்து வளர்ச்சியும், அதனால் பார்வை மாற்றமும் நேர்ந்த நிலையில் பெரியார் காந்தியின் அறிவுறுத் தல்களை விமர்சித்தார். சத்தியாகிரகத்தை நிறுத்திவிடவே காந்தியும் இராஜாஜியும் விரும்பினர் என்று இதே அறிவுறுத் தல்களையே காட்டி விமர்சித்தார்.


தீர்வு தந்த போராட்டம்


எப்படியோ நவம்பர் 1925இல் போராட்டம் - பெரியாருக்கு ஏன் காந்திக்கும்தான் - முழு மகிழ்ச்சியைத் தராத, நான்கில் மூன்று தெருக்களில் மட்டும் அனுமதி என்ற ஒருவகை சமாதானத்துடன் முடிவுக்குவந்தது. சத்தியாகிரகத்தின் வெற்றி விழாவுக்குத் தலைமை தாங்க பெரியாரைக் கேரளர் அழைத் தனர். அயலிலிருந்து கலந்துகொண்ட ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. சத்தியாகிரகத்தின் வெற்றியைப் பற்றியும் தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்துவிடவில்லை. தெருவில் நடக்க உரிமை கேட்டவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது கையைப் பிடித்து அழைத்துச் செல்ல முன்வந் திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்துக்கும் மகாத்மாவுக்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது விளங்குகிறது என்று பெரியார் வியந்தார் (குடிஅரசு, 6 டிசம்பர் 1925). போராட்டத்தின் வெற்றிவிழாவை பெரியாரின் தலைமையில் கொண்டாடியது மிக முக்கியத்துவமுடைய செய்தியாகும். கேரளர்கள் நன்றி மறக்காதவர்கள். இன்றும் வைக்கத்தில் கேரளர்கள் நன்றி யைத் தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது பெரியார் சிலை. தமிழ்நாட்டில்தான் சிலர் கேட்கிறார்கள், பேசுகிறார்கள், “பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்துக்கும் என்ன சம் பந்தம்?” என!


நன்றி: "இந்து தமிழ் திசை", 24.12.2019

பழ.அதியமான் எழுதிய ''வைக்கம் போராட்டம்'' நூலின் கன்னட மொழி பெயர்ப்பு வெளியீடு

  

 'திராவிட மாடல்' அரசிற்கு இருக்கின்ற அக்கறையும், கவலையும் தெளிவாக இருக்கிறது!

தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

3

சென்னை, நவ.29 பழ.அதியமான் அவர்கள் எழுதிய ''வைக்கம் போராட்டம்'' நூலின் கன்னட மொழி பெயர்ப்பு நூலினை இன்று (29.11.2023) காலை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி மகிழ்ந்தார்.

இந்நிகழ்விற்குப் பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேசியபோது,

''வைக்கம் வரலாறு'' என்ற வைக்கம் போராட்ட வரலாற் றைத் தமிழில் எழுதி, மலையாளத்தில் மொழி பெயர்த்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழாவில் வெளியிட்டார்.

இந்த சூழ்நிலையில், அந்த வரலாறு பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்படவேண்டும் என்ற முயற்சி தமிழ்நாடு அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கன்னடத்திலே மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகம் இன்று (29.11.2023) வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்து தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, மற்ற மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படவிருக்கிறது.

4
வைக்கம் போராட்ட வெற்றி நாளாகக் கொண்டாடப் பட்ட இதே நாளில், சென்னை தலைமைச் செயலகத்தில், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, அதனை நான் பெற்றுக்கொண்டேன். இது ஒரு பெரிய மகிழ்ச்சியான ஒரு வாய்ப்பு.

காரணம். இந்தியாவினுடைய முதல் மனித உரிமைப் போர் - மிகப்பெரிய போராட்டம் - அறப் போராட்டம் - சத்தி யாகிரகம் என்ற முறையில் இடம்பெற்ற வரலாறு என்பது அதன் சிறப்பாகும். இன்றைக்கும் ஜாதீய ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், அப்போராட் டம் எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப் பெற்றதோ, அது ஒரு தொடர் போராட்டமாகவே இருந்து கொண்டுள்ளது.

அன்றைக்குத் தொடக்கம்- இன்றைக்கும்அது முடி வில்லாமல் நடந்துகொண்டிருக்கக் கூடிய அளவிற்குப் பல பகுதிகளிலும் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்பது தொடர் கிறது என்பதற்கு அடையாள மாகத்தான் இந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன.

ஜாதி ஒழிப்பில் 'திராவிட மாடல்' அரசிற்கு இருக்கின்ற அக்கறையும், கவலையும் மிகத் தெளிவாக இருக்கிறது என்பதற்காகத்தான், இதுபோன்ற நல்ல நூல்களை, அதி காரப்பூர்வமான வரலாற்றை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூல் வெளியீடு.  ஆகவே, அதை நான் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வைக்கம் கன்னட மொழி பெயர்ப்பு நூலை முதலமைச்சர் வெளியிட, தமிழர் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்

2

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) தலைமைச் செயலகத்தில், பழ. அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன்,  வைக்கம் போராட்டம் நூல் ஆசிரியர் எழுத்தாளர்பழ.அதியமான், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் இரா. கஜலட்சுமி, மொழிபெயர்ப்புப் பிரிவு இணை இயக்குநர் டாக்டர். சங்கர சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 1 டிசம்பர், 2023

வைக்கம் போராட்ட வெற்றி என்பது ஏற்றத் தாழ்வுகள் எங்கு தலைதூக்கினாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும் ஒப்பற்ற இலட்சியத் திருநாள்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


 தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழா- வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் (1925) இந்நாள்!

வைக்கம் போராட்ட வெற்றி விழாவை எல்லா வகையிலும் சிறப்பாக நடத்திவரும் நமது முதலமைச்சருக்குப் பாராட்டுகள்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

1

வைக்கத்தில் தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு, அதன் வெற்றி விழா நடத்தப்பட்ட நாள் இந்நாள் (1925). ஏற்றத் தாழ்வுகள் எந்த வடிவத்தில் தலை தூக்கினாலும், அதனைத் தரைமட்டமாக்க உறுதி ஏற்கும் உன்னத வரலாற்றுத் திருநாள் இந்நாள் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத் திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில்  தந்தை பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை  ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துகள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 1923 மார்ச் மாதம் தொடங்கிய வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றன.

“வைக்கம் போராட்டம் தொடங்கி நூறாண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியை யும் பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் 30.3.2023 அன்று விதி 110-இன் கீழ் 11 அறிவிப்புகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த  ஏப்ரல் ஒன்றாம் நாள் கேரளாவில் உள்ள வைக்கத்தில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கேரளா மாநில முதல மைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்ட வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில்,  எழுத்தாளர் பழ.அதியமான் எழுதிய ‘‘வைக்கம் போராட்டம்'' நூலின் மலையாள மொழிப் பெயர்ப்பு வெளியிடப்பட்டது. 

இன்றைய தினமான நவம்பர் 29 ஆம் நாள், 1925 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தின் வெற்றிவிழா வைக்கத்தில் கொண்டாடப்பட்ட நாளாகும். அந்த விழாவிற்குத் தந்தை பெரியார் தலைமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  அன்னை நாகம்மையாரும் அந்த வெற்றி விழாவில் பங்கேற்றார். 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நாளினை நினைவு கூரும் வகையில் இன்றையதினம் எழுத்தாளர் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை முதலமைச்சர் வெளி யிட,  நான் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற் கான மகிழ்ச்சியையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சிறீதரா மேற்பார்வையில் செல்வகுமார் இந்நூலினை  மொழிபெயர்த்துள்ளார்.  கவுரி மீடியா டிரஸ்ட் நிறுவனத்தோடு இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செய லாளர் சிவ் தாஸ் மீனா,  பள்ளிக்கல்வித் துறை செயலா ளர் ஜெ. குமரகுருபரன்,  வைக்கம் போராட்டம் நூல் ஆசிரியர் பழ.அதியமான், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி. இரா. கஜலட்சுமி,  மொழிபெயர்ப்புப் பிரிவு இணை இயக்குநர் டாக்டர். சங்கர சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் திருப்புமுனைக் கானது. ‘மகத்' என்ற இடத்தில் பொதுக் குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்கும் உரிமைப் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் நடத்தியது என்பது தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட் டத்தின் தாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டம், குருவாயூர் கோவில் தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக அமைந்த தனிப்பெரும் உரிமைக் குரல் செயலி ஆகும்!

வைக்கம் போராட்டத்துக்கும், பெரியாருக்கும் சம் பந்தமில்லை என்று கொஞ்சம்கூட அறிவு நாணயமின்றி எழுதும், பேசும் பேர்வழிகள் - வரலாற்றைத் திரிக்கும் திரிபுவாதிகள் இதற்குப் பிறகாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்.

வைக்கம் போராட்டம் என்பது ஏற்றத்தாழ்வுகள் எந்த வடிவத்தில் தலை எடுத்தாலும், அவை ஒழிக்கப் படவேண்டும் என்ற இலட்சியத்தைப் பறைசாற்றும். அதற்காக எந்த விலையையும் கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும் வெற்றிக்கான உந்து சக்தியாகும்!

வைக்கம் நூற்றாண்டு விழாவை எல்லா வகையிலும் வரலாற்றுச் சிறப்போடு நடத்தும் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீண்டாமை - அதற்கு ஆணிவேரான ஜாதியை ஒழிக்க நம்மை நாமே ஒப்படைத்துக் கொள்ள இந்நாளில் உறுதியேற்போம்!

வாழ்க வைக்கம் வீரர் பெரியார்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.11.2023