வியாழன், 22 டிசம்பர், 2016

நீதிக் கட்சியின் 100 ஆண்டு நிறைவு நாள்’ சிறப்புக்கூட்டம்


நீதிக் கட்சியின் சாதனைகளைப் பாரீர்!
’பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை - 
100 ஆண்டு நிறைவு நாள்’ சிறப்புக்கூட்டம்

சென்னை, டிச.22 திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் "பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை" - 100 ஆண்டு நிறைவு நாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏ.டி. பன்னீர்செல்வம் குறித்த நூல் வெளியிடப்பட்டது.-

பார்ப்பனர் அல்லாதாரின் நலனுக்காக பாடுபட்டுவந்த தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் சார்பில் சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் 20.12.1916 அன்று பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார் உள்ளிட்ட தலைவர்களால் ’பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை’ வெளியிடப்பட்டது. அதன் நூற்றாண்டு நிறை வையொட்டி, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில்  20.12.2016 அன்று மாலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நடத்திய ’பார்ப்பனர் அல்லதார் கொள்கை அறிக்கை நூற்றாண்டு நிறைவு நாள்’ சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.

நூல் வெளியீடு

சிறப்புக்கூட்டத்தில் ஏ.டி.பன்னீர்செல்வம் குறித்த நூல் வெளியிடப்பட்டது. பேராசிரியர் அ.இராமசாமி வெளியிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்துணைத் தலைவர் பேராசிரியர் ஜானகி பெற்றுக் கொண்டார்.

’பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை இன் றைக்கும் தேவைப்படுகிறது’ என்கிற தலைப்பில் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொருளாளர் வீ.குமரேசன் அறிமுக உரையாற்றி னார். பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை இன் றைக்கும் பல மடங்கு தேவைப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டும் வண்ணம், தி இந்து ஆங்கில இதழில் வெளி யான கட்டுரையில் நீதிக்கட்சித் தலைவர் களை ஜாதி இந்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி யும், அதை மறுத்தும் விளக்கமாக அறிமுக உரையில் குறிப்பிட்டார்.

பேரா.அ.இராமசாமி

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரு மாகிய பேராசிரியர் அ.இராமசாமி தலைமை வகித்து அனுபவரீதியில் பல்வேறு தகவல்களை  எடுத்துரைத்தார்.

பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையை டாக்டர் டி.எம்.நாயர், பிட்டி தியாகராயர் இணைந்து வெளியிட் டார்கள். பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று பத்திரிகை, கட்சி, கல்வி, வேலைவாய்ப்பு வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

பார்ப்பனர் அல்லாதார் பத்திரிகை ஆங்கிலம், தமிழ் தெலுங்கு மொழிகளில் தொடங்கப்பட்டன. பார்ப்பனர் அல்லாதார் கட்சியாக நீதிக்கட்சி உருவானது. மாநிலக் கல்லூரியில் அப்போது 80 விழுக்காடு பார்ப்பனர்களாக இருந்தார்கள். 50 விழுக்காடு பார்ப்பனர் அல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டது. பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்தையும் செய்தது நீதிக்கட்சி அரசு. பார்ப்பன நாகம் படம் எடுத்துக்கொண்டு இருக்கும்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தபோது, ஆளுநர் பார்ப்பனர். அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு  டாக்டர் பட்டம் அளிக்க முடிவு செய்தபோது, பார்ப்பனர்களின் எதிர்ப்பை சந்தித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதில்  உறுதியாக இருந்தேன். சிண்டிகேட் தீர்மானம் போட்டு ஷீலா நாயரிடம் கண்டிப்பாக டாக்டர் பட்டம் அளித்தே தீரு வோம் என்றேன். அதன்படியே அளித்தோம். எப் போதும் பார்ப்பனர்கள் எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். திமுக தேசியக்கட்சிகளுடன் கூட்டு சேரக் கூடாது என்பது என் கருத்து.

1967இல் பெரியார் திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். ராஜாஜியை வைத்துக்கொண்டு திமுகவால் என்ன செய்ய முடியும்? என்று பெரியார் எதிர்த்தார்.

அண்ணா வெற்றி பெற்றதும் பெரியாரை சந்தித்தார்.    சட்டமன்றத்தில் பெரியாருக்கு பென்சன் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, அண்ணா கூறும்போது, இந்த அரசே பெரியாருக்குக் காணிக்கை என்றார். அதன்பிறகு ராஜாஜி தேனிலவு முடிந்தது என்றார்.

அண்ணா வாழ்க்கை தொடர்கிறது என்றார். அண்ணாவுக்குப்பிறகு வந்த கலைஞர் கல்விக்கூடங்களில் கடவுள் வாழ்த்து இனி இல்லை என்றார். பெரியார் போராட்டம் அறிவித்த போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டுவந்தார்.

மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்த பார்ப்பனர் கேதன் தேசாய் என்பவர் வீட்டில் தங்கம் மூட்டை மூட்டையாக எடுத்தார்கள். ஆ.ராசா வீட்டில் 10 காசாவது எடுத்தார்களா? பார்ப்பனர் என்றால் ஒரு நீதி, பார்ப்பனர் அல்லாதார் என்றால் வேறு நீதிதான். இன்றைக்கும் பார்ப்பனர் அல்லதார் கொள்கை அறிக்கை அதிகம் தேவைப்படுகிறது-. இவ்வாறு தலைமையுரையில் பேரா சிரியர் அ.இராமசாமி குறிப்பிட்டார்.

பேரா.அ.கருணானந்தன்

விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர் அ.கருணானந்தன் வரவேற்புரையில் பல் வேறு தகவல்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார். 1946ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த விவேகானந்தா கல்லூரியில் சமூக நீதிக்கு எதிரான பார்ப்பனர்களின்  சூழ்ச்சிகள் குறித்து அனுபவ உரையாக எடுத்துக்காட்டிப் பேசினார்.

கல்லூரி தொடக்கத்தின்போது மதக்கருத்துகள் என்கிற பெயரால் ரிக் வேதம் குறிப்பிடும் ’புருஷசுத்தம்’ என்கிற பெயரில் வருணாசிரமத் திணிப்பு நடைபெற்றதை தடுத்து நிறுத் தியதையும் குறிப்பிட்டார். 3000 ஆண்டு கால பிரச்சினை பார்ப்பனர்களின் ஆதிக்கப்பிரச்சினை. பார்ப்பனர்களைக் கடுமையாக எதிர்த்த பவுத்தம் சுமார் 800 ஆண்டுகாலத்துக்கு பார்ப்பனியத்தை ஒதுக்கியது.

பார்ப்பனிய எதிர்ப்புகளைத் தாண்டி, அவ்வப்போது பார்ப்பனியம் தலை தூக்கி வருகிறது. வரலாறு இந்துத்துவா நோக்கில் திருத்தப்பட்டு எழுதப்படுவதை  தடுத்து நிறுத்தவேண்டும். முகலாயர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் ஆட்சியாளர்களுக்கு அடுத்த நிலையில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் பார்ப்பனர்கள்.

ஆரியர் இனம் என்பது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தாலும், இந்தியாவில் பார்ப்பனியமாக ஆதிக்க மனப்பான்மையுடன் இருந்து வருகிறது.

பார்ப்பனர்களை எதிர்த்த சித்தர்களின் பாடல்களை திரித்துள்ளார்கள். பார்ப்பனர்களை தோலுரித்த சித்தர் இலக்கியங்களை சோழ, பாண்டிய அரசர்கள் ஆதரிக்க வில்லை. பார்ப்பனர்களையே ஆதரித்து வந்தனர்.

1890ஆம் ஆண்டில் நிலமற்றவர்களுக்கு நிலம் பங் களிப்பு சட்டம் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை இருந்தபோது, பஞ்சமர்களுக்கு நிலம் வழங்கும் அச்சட்டத்தை  பார்ப் பனர்கள் நடைமுறைப்படுத்த மறுத்தார்கள். இந்தியா விலேயே  சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியால் மட்டும்தான் அச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

விவேகானந்தா கல்லூரியில் 40 ஆண்டுகளில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட முதல்வராக வர முடியாத நிலை யில் 1986ஆம் ஆண்டில்தான் வரமுடிந்தது. அதற்கும் பார்ப்பனர்கள் கடுமையாக முட்டுக்கட்டைகளைப் போட்டார்கள். கல்லூரி அலுவலகத்துக்குள் செருப்புடன் செல்ல முடியாத நிலை இருந்தது மாற்றப்பட்டது. விவேகானந்தா கல்லூரிக்கு இடம் கொடுத்தவர் ஒரு குயவர். கட்டடத்தை வழங்கியவர்கள் நகரத்தார். ஆனால், பார்ப்பனர்களின் கல்லூரிபோல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

1991இல்தான் மதவழிபாடு என்கிற பெய ரில் ரிக் வேதம் Ôபுருஷ சுத்தம்Õ என்பது நிறுத்தப்பட்டது. விவேகானந்தர் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள், விவே கானந்தா 60ஆம் ஆண்டு விழாவின்போது,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்   விவேகானந்தரின் பார்ப்பன எதிர்ப்பு குறித்த கட்டுரை விடுதலையில் வெளியிடப்பட்டது என்று பேராசிரியர் அ.கருணானந்தம் வரவேற்புரையில் பேசும்போது குறிப்பிட்டார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

நூறாண்டுகள் நிறைவை எட்டியுள்ள ’பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை’ இன்றைக்கும் தேவைப் படுகிறது என்பதை விளக்கி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றினார்.

அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

கேதன் தேசாய் என்கிற பார்ப்பனர் முறைகேடுகள் செய்தார் என்று டன் டன் ஆக தங்கம் எடுக்கப்பட்ட நிலையில், அகில இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தலைவராக இருந்த அவர் தற்போது உலக மெடிக்கல் கவுன்சில் தலைவராக ஆகிவிட்டார்.

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை அளித்தார். அவர் அளித்த பல்வேறு கோரிக்கைகளில் நுழைவுத் தேர்வு நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி யுள்ளார் என்பது விடுதலையில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. தமிழக முதல்வர் பிரதமரிடம்  முன்வைத்த கோரிக்கைகள் குறித்து தினமணியும் வெளியிட்டது. ஆனால், ’நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படவேண்டும்’ என்பதை விட்டுவிட்டு  நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கோரியுள்ளதாக போட்டுள்ளது.

19.12.1973 அன்று தந்தை பெரியார் கடைசியாகப் பேசினார். அன்று அவர் பேசிய பேச்சு மரண சாசனமாக ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பேச்சில் உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகப்போகிறேனே என்று சொல்லிவிட்டு, பூணூல் போட்ட பார்ப்பான் எதிரே வந்தால், வாடா என் தேவடியாள் மகனே என்று நீ கூறு. அவன் கேட்பான் இப்படிப்பேசுகிறாயே என்று. நீதானடா பூணூல் போட்டு எங்களைச் சூத்திரன் என்று சொல்கிறாய் என்று பதில் சொல்’’ என்றார். இது மரண சாசனம்.

இன்றைக்கு எதில் பார்ப்பனர்கள் பார்ப்பனர்களாக இல்லை என்று சொல்லுங்கள்? இந்துக்களே ஒன்று சேர் என்று சொல்கிறான். சரி. நீயும்¢ இந்து, நானும் இந்து. நீ ஏன் கபாலீசுவரர் கோயிலில் அர்ச்சகன்? நான் ஏன் வெளியில் நிற்கவேண்டும்?

தந்தை பெரியார் கடைசியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கான போராட்டம்தான். கலைஞர் இரண்டு முறை சட்டம் கொண்டுவந்தார். எதிர்ப்பவர்கள் பார்ப் பனர்கள்தான். தீர்ப்பு எழுதியவர்கள் யார்?   அத்துணை பேரும் பார்ப்பனர்கள். அரசு வழக்கரைஞர் யார்? அவரும் பார்ப்பனர். இன்றைக்கும் சட்டப்படி, சாத்திரப் படி நாம் அனைவரும் சூத்திரர்கள்தான். பார்ப்பனர்களின் வைப்பாட்டிப் பிள்ளைகள்தான். இந்த நாளில் அது குறித்து நாம் சிந்திக்கவேண்டும்.

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் டபிள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டியனார். இரண்டு துணைத்தலைவர்களில் ஒருவர் ஏ.டி.பன்னீர் செல்வம். மற்றொருவர் தந்தை பெரியார். இன்றைக்கெல் லாம் பதவிக்காக எப்படி எல்லாம் இருக்கிறார்கள்? ஆனால்,  பெரியார் அப்படி இருக்கவில்லை.

திருவையாறில் சரபோஜி ராஜா கொண்டுவந்த கல்லூரி, சமஸ்கிருதக் கல்லூரி என்று பார்ப்பனர்கள் ஆக்கிக் கொண்டார்கள்.

சரபோஜி ராஜாவின் உயில் சமஸ்கிருதத்தில் இருந்தது. தந்தை பெரியார் தொடங்கிய போது குடிஅரசு ஏட்டை தொடங்கி வைத்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சாமிகள் சமஸ்கிருதம் அறிந்தவர். அவரிடம் உமாமகேஸ்வரன் உயிலைக் காண் பித்து விவரம் கேட்டபோது, சமஸ்கிருதத்துக்கு என்று குறிப்பிடப்படவில்லையே. கல்விக்கு என்றுதானே குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது டிஸ்டிரிக்ட் போர்டு சேர்மேனாக பன்னீர்செல்வம் இருந்தார். பார்ப் பனர்கள் அதுகுறித்து கூறும்போது, கல்வி என்றாலே சமஸ்கிருதம்தானே என்றார்கள்.

நீதிக்கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் துணைவேந்தர் பேசியபோது 95 விழுக்காடு பார்ப்பனர் அல்லதாரே படிக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்களை கொடுத்தார்.

தலைநகர் சென்னையில் உணவு விடுதிகளில் நாய்கள், குஷ்டரோகிகள், பறையர்களுக்கு அனுமதி இல்லை என்று அந்தக்காலத்தில் போர்டு போட்டிருந்தது. ரயில்வேயில் பார்ப்பனர்களுக்கு தனியே பிராமணர்கள் சாப்பிடுமிடம், பிராமணர் அல்லாதவர்கள் சாப்பிடுமிடம் என்று இருந்தது. இதையெல்லாம் மாற்றியது யார்? தந்தை பெரியார். நீதிக்கட்சித் தலைவர்கள்.

மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டுமானால் சமஸ்கிருதம் கட்டாயம் என்று இருந்தது. அதை மாற்றி யவர் பானகல் அரசர். கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கு அதற்கு முன்பு   முதல்வரே என்று இருந்த நிலையை மாற்றி, பார்ப்பனர் அல்லாதாரும் படிப்பதற்காக தனியே மாணவர் சேர்க்கைக்கு கமிட்டி போடப்பட்டது.

மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதம் பண்டிதர் ஊதியம் ரூ.300, தமிழ்த் துறை  தலைவருக்கு ஊதியம் ரூ.81 என்று இருந்தது. தந்தை பெரியாரால் அந்நிலை மாறியது.

இன்று ஆர்எஸ்எஸ் கூலிப்படைகள் யார்? பார்ப் பனர்களா? இல்லை. நம்முடைய ஆட்கள்தான். பார்ப் பனர்களின் பலமே நம்முடைய இனத்தவர்கள்தான்.

மருத்துவக் கல்லூரியில் திறந்த போட்டியில் 884 இடங்களில், பிற்படுத்தப்பட்டவர்கள் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 159, கலைஞர் ஆணையின்படி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட வகையில் முசுலீம்கள் 32, தாழ்த்தப்பட்டவர்கள் 23, பழங்குடியினத்தவர்கள்

1 மற்றவர்கள் பார்ப்பனர் மட்டுமல்லாமல் முன்னேறிய வகுப்பினர் 68. அந்த 68லும் அத்துணை பேரும் பார்ப் பனர்கள் அல்லர். 884 இடங்களில் பொதுப்போட்டி நிலை யில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சி வேறு எங்கு நடக்கிறது?

தகுதி, திறமைகுறித்து காமராசர் பேசியபோது, நான் ஒரு பறையனை படிக்கவைத்தேன் டாக்டர் ஆனான். ஊசி போட்டு யார் செத்துப்போனார்கள் சொல்லு? பறை யனை  படிக்கவைத்தேன் எஞ்சினியரானான். பாலம் கட்டினான். எந்த பாலம் இடிந்து விட்டது சொல்லு? உன் தகுதியும் தெரியும், திறமையும் தெரியும். என்னை அழிக்க நினைத்தால் உன் அஸ்திவாரத்தை கழற்றிவிடுவேன். பேசியவர் பெரியாரா? காமராசரா? என்று விடுதலையில் தலைப்பு செய்தியாக வந்தது.

234 சட்டமன்ற உறுப்பினர்களில் 2 பேர் மட்டுமே பார்ப்பனர்கள். அதில் ஒரு பெண் இறந்துவிட்டார். ஒருவர் மட்டுமே உள்ளார். அதிமுக அமைச்சரவை பார்ப்பனர் அல்லாத அமைச்சரவையாக உள்ளது.

1967இல் காங்கிரசு கட்சி தோல்வி அடைந்தபின்னர் தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சியின் தலைவர் பொறுப்புக்கு யாரைப்போடுவது என்று டில்லியில் இந்திரா காந்தி வீட்டில் கூடினார்கள். அப்போது வெங்கட்ராமனைப் போடலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டபோது, மெட்ராஸ் ஸ்டேட்டில் பார்ப்பனரா? என்று கேட்டு பார்ப்பனர் சென்னை ஸ்டேட்டில் தலைவராக முடியாது என்று என்று இந்திரா காந்தியே கூறிவிட்டார். இத் தகவலை பின்னாளில் மூப்பனார் தெரிவித்தார்.

எந்த காலத்திலாவது துக்ளக் பத்திரிகைக்கு ஒரு பார்ப்பனர் அல்லாதவர் ஆசிரியர் ஆக முடியுமா? ஒரு முறை கலைஞரை நோக்கி சட்டமன்றத்தில் இந்த ஆட்சி மூன்றந்தர அரசு என்று எச்.வி.ஹண்டே சொன்னபோது, கலைஞர் உடனே சொன்னார் இது மூன்றாந்தர அரசல்ல. தந்தைபெரியார் வழியில் சொல்கின்றேன் இது நாலாந்தர சூத்திர அரசு என்று கலைஞர் கூறினார்.

அண்ணா அரசுப் பொறுப்பேற்றதும் அரசே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்றார். இன்னொரு இடத்தில் கொள்கை அடிப்படையில் இது சூத்திர அரசு என்று வறினார். 1967 தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் நல்லுறவு இல்லாதநிலையில் பெரியார் சொன்னார், இனி வருங் காலத்தில் திமுக நடமாட வேண்டும் என்றால், பார்ப் பனர் எதிர்ப்பு என்ற கொள்கையை ஸ்தாபனத்தில் கைக் கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் என்னை அவர்கள் அணுகக்கூடும். நானும் உதவலாம் என்று கூறினார்.

1967முதல் திராவிட இயக்க ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமூக நீதி குறித்த பாடத்திட்டத்தில் வைக்கவில்லையே. சமூகநீதி சட்டவிரோதம் அல்ல. அரசமைப்புச்சட்டத்தில் உள்ளதுதானே. இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் சமூகநீதி, இடஒதுக்கீடு வரலாறுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். வௌ¢ளுடை வேந்தர், டி.எம்.நாயர், நடேசனார் உள் ளிட்ட நீதிக்கட்சித் தலைவர்கள் செய்த பணிகள் குறித்து பாடத்திட்டத்தில் வைக்கப்படவேண்டும்.

திருவாரூரில் நடைபெற்ற கழக மகளிர் மாநாட்டில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் பெருந்திரளாக திரண்டிருந்தார்கள். திருச்சியில் புதிய கல்வித்திட்டத்துக்கு, நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு மாநாட்டில் ஏராளமான ஆசிரியர்கள் வந்திருந்தார்கள்.

ஆசிரியர்கள் அனைவரை யும் ஓரிடத்தில் ஒன்றுசேர்த்த பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்தான் உள்ளது. அவரால்தான் முடிகிறது என்றார்கள். நம்முடைய வரலாற்றினைத் தெரிந்து கொள்ளும் வகையில் இளைஞர்கள், மாணவர் களைத் தயார் செய்யவேண்டும். இல்லையென்றால், எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும்.

இவ்வாறு திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையில் குறிப்பிட்டார்.

கூட்ட முடிவில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய இணை செயலாளர் ஏ.தானப்பன் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய இணை செயலாளர் ப.இரா.அரங்கசாமி, மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,  பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், பொருளாளர் கு.மனோகரன், புலவர் வெற்றியழகன், பேராசிரியர் திருக்குறள் க.பாசுகரன், திருக்குறள் இளங்கோவன், வடசென்னை  மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ஆ.வெங்கடேசன்,  கு.சோமசுந்தரம், இராவணன், செஞ்சி ந.கதிரவன், பார்த்திபன், க.தமிழினியன், கும் மிடிப்பூண்டி செ.உதயக்குமார், பெரியார் மாணாக்கன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
-விடுதலை,22.12.16

திராவிடர் செம்மல் பானகல் அரசர்:

டிசம்பர் 16: (1928)

தஞ்சை ராஜராஜ சோழ அரசன் திணித்த சமஸ்கிருதத்தை அப்புறப்படுத்திய திராவிடர் செம்மல் பானகல் அரசர்:

பானகல் அரசர் என அனைவராலும் மதிக்கப்பெறும் பானகண்டி ராமராய நிங்கார், நீதிக்கட்சி ஆட்சியில் 11.7.1921 முதல் 3.12.1926 வரை தமிழகத்தின் (அன்றைய சென்னை மாகாணம்) முதல்வராக பதவி வகித்தவர். இவரது ஆட்சிக் காலம், திராவிடர்களின் பொற்காலம் என சொல்லப்பட வேண்டும்.

இவரது ஆட்சியில் தான்,

1.  1921-ல் வகுப்புவாரி உரிமைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. அது உடன் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1928 முதல் நடைமுறைக்கு வருவதற்கு வித்தூன்றியது இந்த 1921 வருடத்திய ஆணைதான்.

2.  கல்லூரிகளில், பார்ப்பனரல்லாத மாணவர்கள் சேர்ந்து படித்திட, குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் காரணமாக, இம்மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திட வழிவகுத்தார்.

3.  தாழ்த்தப்பட்டோரை, ஜாதி அடையாளத்துடன் அழைக்கக்கூடாது; ஆதிதிராவிடர் என அழைக்க வேண்டும் என்பதற்கான ஆணையை 25.3.1922-ல் பிறப்பித்தார்.

4.  புதிய பல்கலைக்கழகம் அமைக்க சட்டம் நிறைவேற்றி, இதன் அடிப்படையில் உருவானதுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

5.  பார்ப்பனர்களின் கொள்ளைக் கூடாரமாக இருந்த கோயில்களை, அரசே ஏற்று நடத்திட வகை செய்யும் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றினார்.

6.  மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்கிற முறையை ரத்து செய்தார். இதனால், நம்மவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திட வழிவகுத்தார்.

7.  முதன் முதலாக சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி, அதற்காக தனது சொந்த நிலமான கீழ்ப்பாக்கத்தில் இருந்த ஹைட் பார்க் தோட்டத்தை இலவசமாக தந்தார். இன்று நாம் காணும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள வளாகம் முழுவதும், பானகல் அரசர் இலவசமாக தந்ததுதான்.

இத்தகைய சிறப்பான சாதனைகளை திராவிடர் பெருமக்களுக்கு செய்த அந்த தியாகச் செம்மல் மறைந்த நாள் டிசம்பர் 16 (1928)

அவரது மறைவு குறித்து தந்தை பெரியார், மிக ஆழமான நெடியதொரு இரங்கலை தனது குடியரசுப் பத்திரிக்கையில் 23.12.1928 என்று எழுதி வெளியிட்டுள்ளதை அனைவரும் படிக்க வேண்டும். அது இரங்கல் உரை மட்டுமல்ல; அக்காலத்திய நீதிக்கட்சி அரசியல் செய்திகள் அடங்கிய வரலாற்றுப் பெட்டகமாகும்.

“இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற அரசியல் இயக்கத்திற்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கும் விரோதி, இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான பாமர மக்களுக்கும் விரோதி என்று சொல்லும்படியான நிலையில், நெருப்பின் மேல் நின்றுகொண்டு வேலை செய்வதுபோல் வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர்; இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஓர் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார் நமது தலைவர் பானகல் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகது என்றே எண்ணுகிறோம்.” என்று தந்தை பெரியார் இரங்கல் உரையில் தெரிவித்துள்ளது, பானகல் அரசரின் நேர்மையான தொண்டினை, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு உழைத்த மாண்பினை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

வாழ்க பானகல் அரசர்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

பார்ப்பனர் அல்லாத இயக்கத்துக்குத் தோல்வியா?

தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச் சென்றது என்ன?’ என்ற தலைப்பில் தி இந்து (தமிழ்) ஏட்டில் கட்டுரை ஒன்று வெளிவந்தது (11.12.2016). அதில் காணப்பட்ட சில கருத்துகளுக்கும், தகவல்களுக்கும் மறுப்புத் தெரிவித்து கழகத் தலைவர் அனுப்பிய கட்டுரை - அந்த இதழில் வெளிவந்துள்ளது (19.12.2016).

கழகத் தலைவரின் கட்டுரை முழுமையான அளவு வெளியிடப்படாததால், அந்த முழுக் கட்டுரையும் இங்கே வெளியிடப்படுகிறது.

குறிப்பு: இந்து (தமிழ்) ஏட்டில் நீக்கப்பட்ட பகுதிகள் தடித்த எழுத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

- கி.வீரமணி - தலைவர், திராவிடர் கழகம்

‘தி இந்து’ (தமிழ்) ஏட்டின் டிசம்பர் 11 கட்டுரையின் தலைப்பு - “தமிழ் நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச் சென்றது என்ன?” என்பதாகும்.

பல்வேறு தகவல்களையும், கருத்துக்களையும் தன் மனம்போன வாக்கில் வாரி இறைக்கப்பட்ட அந்தக் கட்டுரையின் கடைசிப் பகுதி குழப்பத்தின் கைப் பிள்ளையாகக் கதறுகிறது.

“திமுக தலைவர் முதுமைக்கு ஆளாகியுள்ளார்; ஜெயலலிதா மறைந்து விட்டார், இனிமேல் சித்தாந்தத் துக்கு இடம் இல்லை; சாதிய, மதவாத சக்திகள் முழு ஆதிக்கம் பெற வழி கோலும்; தமிழகத்தில் இதுவரை முதல்வர் பதவியைக் குறி வைக்கும் நிலையில் சாதிய சக்திகள் இல்லை; இப்போது எண்ணிக்கைப் பெரும் பான்மையும், பொருளாதார வலுமிக்க சாதிய சக்திகள் அதிமுகவுக்குள் அணி திரள ஆரம்பித்திருப்பதன் விளைவு ஏனைய கட்சிகளையும் இது பிடிக்கும்; முக் குலத்தோர், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், நாயுடுகள் எனத் தனித்தனியே அணி திரள்களும் பேரங்களும் நடக்கும், கூடவே மதவாதமும் தலை தூக்கும். இவற்றினூடாக டெல்லியின் கை ஓங்கும்.”

என்று ‘ஆருடம்’ சொல்லுகிறது கட்டுரை. இதனை  ‘தமிழ்நாட்டின் தட்ப வெப்பத்தை’ நுணுக்கமாக அறிந்த கருத்தாக இதைக்கொள்ள முடியாது.

ஜாதிக் கட்சிகளும், ஜாதியத் தலைவர்களும் அவ் வப்போது வெளிப்படையாக நடைபோட்டதுண்டு. ‘வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை’ என்கிற அளவுக்குக் கூட இருந்ததுண்டு. அவை எல்லாம் எடுபடவில்லை. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட ஜாதி சங்கங்களை ஒருங் கிணைத்து அரசியல் கட்சிகளை மிரட்டிப் பார்த்த காட்சிகளைத் தான் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? அவை எல்லாம் தேர்தல் களத்திலேகூட காலடி எடுத்து வைக்க முடியாமல் தன்னளவிலேயே கரைந்து உரு தெரியாமல் போய் விட்டன.

ஜாதிப் பிரச்சினை அவ்வப்பொழுது தலை காட்டினாலும் வெளிப்படையாக தம் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடும் கலாச்சாரம் ஒழிந்து போயிற்று; அப்படிப் போட்டுக் கொள்வது அவ மானகரம் என்ற மனநிலை - திராவிட இயக்கத்தால் குறிப்பாக தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைப் புரட்சியால் உருவாக்கப்பட்டது.

பிற மாநிலங்களில் இடதுசாரித் தலைவர்கள் கூட பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைத் துறக்க முடியாதநிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கான வரலாறை அலட்சியப்படுத்திட முடியாது.

குறிப்பிட்ட சில வட்டாரங்களில், மாவட்டங்களில் குறிப்பிட்ட ஜாதியினர் அதிகமிருந்தால், அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களா கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந் தெடுக்கப்படுவதில் பெரிய தத்துவார்த்தம் இருப்பதாகக் கூற முடியாது.

ஜாதி கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் கட்டிய பணத்தை மீட்டுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். ஜாதி யைச் சொல்லி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற முடியாத காரணத்தால் அரசியல் முகப்படாமுடன் காட்சியளிப்பவர்களை அடையாளம் கண்டு வாக் காளர்கள் கழித்தல் கணக்கைப் போட்டுத் தள்ளினர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் மறைந்த நிலையில்  அடிப் படையே இல்லாத ஜாதிய மதவாதம் தலை தூக்குவ தற்கு எங்கே இடம் இருக்கிறது?

திருமதி சசிகலா அவர்கள் பொதுச் செயலாளராக  இருக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள்கூட அவரின் ஜாதியை முன்னிறுத்தவில்லை. அம்மாவுக்கு வாழ்விலும் தாழ்விலும் பக்கத்திலிருந்து பணிவிடை செய்தவர் என்றுதானே பல்வேறு ஜாதிகளைச் சார்ந்த அதிமுகவினர், முன்னணியினர், சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் சொல்லுகின்ற னர்.

இந்த நிலையில் ஜாதியைத் தூண்டும் தன்மையில் ஒரு ‘தேசிய’ நாளேடு கருத்துகள் கூறுவது  நாகரிகம் தானா?

டில்லியின் கை ஓங்கும் என்று சொல்லும்போது மதவாதம் ஓங்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. டில்லியில் தமிழக அரசியலில் மீன் பிடிக்க எத்தனிக்கும் பிஜேபியின் வியூகமும் தெரிகிறது. இதனை நானே விடுதலை அறிக்கையில் குறிப்பிட்டும் உள்ளேன்.

வடக்கே சில மாநிலங்களில் மத்திய பிஜேபி ஆடிய அரசியல் சித்து விளையாடல் தமிழ்நாட்டில் எடுபடாது!

தமிழ்நாட்டில் தேர்தலில் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கட்டிய பணத்தைத் திருப்பி வாங்கினாலே பெரிய சாதனைதான். சில தொகுதிகளில் பிஜேபியை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து விடுகின்றன.

தமிழ்நாட்டில் பிரதானமாக இருக்கக் கூடிய கட்சி களைத் தாண்டி ஜாதி, மதவாதம் தலை தூக்கும் என்பதெல்லாம் ஒரு வகை ‘மாயாவாதம்’ தான்

கட்டுரையின் கடைசிப் பகுதியோ - ஒரே குழப்பம்! குழப்பம்!

“திராவிட இயக்கம் தன்னுடைய நூற்றாண்டில் அதன் வரலாற்றிலேயே மிகச் சவாலான கால கட்டத் துக்குள் நுழைவதாகவே கருதுகிறேன். பிராமணர் எதிர்ப்பு இயக்கமாகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கத் தின் எதிர்காலம் இக்கட்டுக்குள்ளாவதை இன்று ஒரு பிராமணத் தலைவரின் மறைவு உந்தியிருப்பதை வெறுமனே வரலாற்று முரண் என்று கடப்பதற்கு இல்லை. அதைத் தாண்டிய ஒரு சமூக உளவியல் இங்கு வெளிப்படுகிறது. பிராமணரைப் பார்த்தொழுகும் இந்திய சாதி கலாச்சாரத்திலிருந்து பிராமண எதிர்ப்பு இயக்கங்களாலும் வெளிப்பட இயலாததன் தோல் வியே அது; தன்னுடைய கட்சியைத் தாண்டி எதிரிகள் மீதும்கூட ஜெயலலிதாயிஸத்தைப் படர விட்டுச் சென் றிருப்பதையே ஜெயலலிதா வாழ்வின் எச்சம் எனக் கருதுகிறேன்” என்று கட்டுரையை முடித்துள்ளார் தோழர் சமஸ்.

இதைப் படிக்கின்றவர்களுக்கு ஏதாவது தெளி வாகப் புரிகிறதா? சொல்ல வந்ததை எளிமையாகப் புரிய வைக்க முடிகிறதா? கருத்தில் குழப்பம் இருந் தால் வார்த்தைகளிலும் அதன் எதிரொலியைக் காணத்தானே முடியும். அதுதான் இங்கு நடந்திருக் கிறது.

‘பிராமண’ எதிர்ப்பு என்பது ஒரு வரலாற்றின் கட்டாயம். அந்த இயக்கம் தமிழ் மண்ணைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அடித்தட்டு மக்கள் மத்தியிலே ஒரு தன்மான உணர்வை, சிந்திக்கும் கூர்மையைத் தட்டி எழுப்பி இருக்கிறது.

அந்த எதிர்ப்புக்கான காரணம்  துவேஷமல்ல; துவேஷம் செய்யும் தத்துவத்தையும், சமூகத்தின் சகல பரப்பிலும் ஆதிக்கம் செய்த அதன் வேர்களையும் அதாவது மூல பலத்தையும் நொறுக்கித் தள்ளியுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித் திருக்க வேண்டும் என்கிற அளவுக்குச் சூழ்ச்சித் திறன் மிக்க பார்ப்பனீயத்தை மக்களுக்கு அடையாளம் காட்டி, பெரும்பாலான மக்கள் மத்தியில் பார்ப்பனீ யத்தை அடையாளம் காட்டிய இயக்கத்தின் மீது - அதன் தத்துவத் தலைவர்மீது கட்சிகளையெல்லாம் கடந்து வணக்கத்தையும், நன்றியையும் செலுத்தும் ஒரு மனப்போக்கும் தமிழ்நாட்டில் உண்டு.

காங்கிரசிலிருந்து பார்ப்பன ஆதிக்கப் போக்கை எதிர்த்து பார்ப்பனர் அல்லாத மக்களுக்கான பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை வலியுறுத்தியும், காங்கிரசுக் குள்ளே போர்க் கொடி தூக்கி, ஒரு கட்டத்தில், அதற்கு காங்கிரஸ் பயன்படாது என்று திண்மையாகக் கருதி வெளியேறி, பார்ப்பனர் அல்லாத இயக்கத்தை “சுயமரியாதை இயக்கம்” என்ற  பெயரில் நிர்மாணித்த தந்தை பெரியார் தோற்றா போய் விட்டார்?

இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப் பாதுகாப்புடன் வீறு நடை போடவில்லையா? அன்றைக்கு வெறும் 50 சதவீதம் பார்ப்பனர் அல்லா தாருக்குக் கோரினார் பெரியார்; அதற்கு இணங்க மறுத்த பார்ப்பனர்கள் இப்பொழுது மாநாடு கூட்டி எங்களுக்கு இடஒதுக்கீடு தந்திடுக என்று தீர்மானம் போட்டது நம் கண்முன் நடக்கவில்லையா?

இந்த சட்டப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்பட்டவர் - கட்டுரையாளர் அடையாளம் காட்டும் பிராமணப் பெண்மணியான முதல் அமைச்சர் ஜெயலலிதா தானே! அவர் கூட திராவிடப் போர்வையோடு அதன் சமூக நீதிக் கொள்கையை ஏற்ற நிகழ்வு காரணத்தால் தான் நிலைக்க முடிந்தது! இதன்மீது யாராவது கை வைக்க முடியுமா? இதில் ‘பிராமண’த் தன்மை எங்கே எதிலே உந்தியிருக்கிறதாம்?

சங்கராச்சாரியாரைக் கைது செய்யும் துணிவுக் குள் ஜெயலலிதாயிஸம் இல்லை. பெரியாரிஸம்தான் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம், சொல்லப் போனால் ஜெயலலிதாயிஸம் என்று சொல்ல என்ன இருக்கிறது?

எந்த தத்துவத்தின் அடிப்படையிலும் அவர் நிலை கொண்டவர் இல்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மாநில கட்சியாக இருந்தாலும், தேசிய கட்சியாக இருந்தாலும் பார்ப்பனர் ஒருவர் தலைமைதாங்க முடிகிறதா - பாரதிய ஜனதா கட்சி உட்பட? இது எதைக் காட்டுகிறது?

தமிழ்நாட்டில் 234 சட்டப் பேரவை உறுப்பினர் களுள் இரண்டே இரண்டு பேர்கள்தான் பார்ப்பனர்கள்; அதிலும் ஒருவர் மரணம் அடைந்து விட்டார். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு?

ஜெயலலிதா ஒரு கட்சிக்குத் தலைமை வகிக்க வில்லையா என்று கேட்கலாம். அவரும் திராவிட இயக்கத்தின் படிக்கட்டுகளில் ஏறி - எம்.ஜி.ஆர். என்ற ஈர்ப்பு மிக்க திராவிட இயக்க சினிமா கலைஞரால் தூக்கி நிறுத்தப்பட்டதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு மேலே வந்தவர்தான்.

பொருளாதார மேதை அசோக் மேத்தா சொன்னது போல திராவிட இயக்கம் தென்னகத்திலே குறிப்பாக சென்னை மாநிலத்திலே ஏற்படுத்திய உணர்ச்சி - பார்ப் பனர் அல்லாத எழுச்சியை உண்டாக்கி இருக்கிறது. வட மாநிலங்களில் இப்பொழுதுதான் அதற்கான அலை தொடங்கியுள்ளது என்று கூறியது மேலோட் டமான கருத்தல்ல.

பாரதீய ஜனதா இன்னமும் தமிழ்நாட்டில் ஏன் வேர்ப்பிடிக்க முடியவில்லை? அதன் மீதான பார்ப் பனீய இந்துத்துவா எதிர்ப்பு என்பது இங்கு வேரூன்றி இருப்பது காரணம் அல்லவா?

புதிய தேசியக் கல்வி திட்டம் என்பது - இந்தியா விலேயே தமிழ்நாட்டில் மட்டுமே கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?  இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இங்கு ஏன் நிலை நிறுத்த முடிய வில்லை?

இன்னும் சொல்லப் போனால் பிஜேபி என்ற மதவாத பார்ப்பனீய இந்துத்துவா எதிர்ப்புக்குப் பெரியார் அலை தமிழ்நாட்டையும் கடந்து இந்தியா முழுவதும் தேவைப்படும் கால கட்டம் இது.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தமிழ் நாட்டையும் தாண்டி, டில்லி ஜவகர்லால் நேரு பல் கலைக் கழகத்திலும், அய்தராபாத் பல்கலைக் கழ கத்திலும் கொண்டாடப்படுவதன் அர்த்தம் என்ன? அங்கெல்லாம் பெரியார் - அம்பேத்கர் வாசகர்வட்டம் தோற்றுவிக்கப்பட்டதே - எந்த அடிப்படையில்?

ஜெயலலிதா மறைந்து விட்டதால் இந்தக் கொள்கை எப்படி மறைந்து போகும்? ஒரு ஜெய லலிதாவை வைத்தா இந்தக் கொள்கை உருவாக் கப்பட்டது? ஜெயலலிதா திராவிட இயக்க சமூகநீதிக் கொள்கையைப் பயன்படுத்தியதால்தான் தொடர முடிந்தது.

உண்மையைச் சொல்லப் போனால் பார்ப்பனர்கள் எதிர்ப்பு இயக்கத்தை பார்ப்பன சக்திகள்தான் பல திசைகளுக்கும் கொண்டு செல்லுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ்) நாடாளுமன்ற மக்களவையில்  மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள் பற்றி ஆவேசமாகப் பேசியதெல்லாம் தோழர் சமஸ் அறிந்திருக்கவில்லையா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதுகூட எதிலிருந்து வெடித்துக் கிளம்புகிறது? பார்ப்பன அர்ச்சக ஏகபோக எதிர்ப்பிலிருந்து வெடித் துக் கிளம்பிடவில்லையா?

இதற்கு முட்டுக்கட்டை போடப்போட, பார்ப்பனர் எதிர்ப்பு வீரியம் என்பது வீறு கொண்டு எழத்தானே செய்யும்? தமிழ்நாட்டோடு இது முடிந்துவிடக் கூடியதல்ல - இந்தவுணர்வு இந்தியா முழுவதும் பரவித் தீர வேண்டியது கட்டாயம்!

ஆதிக்கத்தை  இருத்திக் கொள்ள ஒரு சக்தி - அதனை எதிர்க்கும் இன்னொரு சக்தி, இதில் எது வெற்றி பெறும் என்பதை வரலாறு தெரிந்தவர்கள் உணரவே செய்வார்கள்.

தங்கள் உயர்ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத் தவும், காட்டிக் கொள்ளவும் இன்னும் பார்ப்பனர் ‘ஆவணி அவிட்டங்களை’ நடத்திக் கொண்டுதானே இருக்கின்றனர்! திராவிட இயக்கம் வேண்டாம் என்று நினைத்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பு உணர்வைப் பார்ப்பனர்கள் ஊதி ஊதி நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்வார்கள் என்பதே நிதர்சனம்.

குழப்பமான கருத்தை குழப்பமான சொற்களால் அவதானித்திருக்கிறார் ‘சமஸ்’ என்பது மட்டும் உண்மை.

-விடுதலை,20.12.16

திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு

திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டிற்கு 
துரை.சக்கரவர்த்தி நினைவுச் சுடர் தொடர் ஓட்டம்

மயிலாடுதுறை, டிச.17 திருவாரூரில் நடைபெறும் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட மாணவர்க கழகத்தின் சார்பில் மாணவரணி தலைவர் மூ.முகில்வேந்தன் தலைமை யில் மயிலாடுதுறையிலிருந்து துரை.சக்கரவர்த்தி நினைவுச் சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெற்றது.

தொடக்க விழா நிழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன் தலைமையேற்க மாவட்ட செயலாளர் கி.தளபதி ராஜ், நகர கழகத் தலைவர் என்.தியாகராஜன், செயலாளர்  அரங்க.நாகரெத்தினம், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வேலு.குண வேந்தன் சுடர் ஏற்றி தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ப.க.தலைவர் அ.சாமிதுரை,

மாவட்ட இளை ஞரணி செயலாளர் கா.அருள் தாஸ், மணிவேல், செல்வ குமார், ஆசிரியர் காமராஜ், திலீபன், விடுதலை வேந்தன், ஆனந்தராஜ், அனீஸ் அருண் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிடப்பட்டது. பிரச்சார ஊர்தியில் கொள்கை முழங்க தோழர்கள் மாவட்ட மாணவரணி செயலாளர் மதிய ழகன், மாவட்ட இளைஞரணி தலைவர் சி.அறிவுடைநம்பி, ஆர்.சிவபாலன், நெ.சூர்யா, அ.சிறீதர், கா,செல்வகுமார், சி.பிரசாந்த், வா.பாலஅரங்க நாதன், ரா.பிரவீன், ச.சதீஷ் குமார், மற்றும் தோழர்கள் இந்த தொடர் ஓட்டத்தில் பங்கெடுத்து செல்கின்றனர்.

தமிழர் தலைவர் அவர்களுக்கு திருவாரூர் இரயில் நிலையத்தில் மகளிரணியினர் சார்பில் உற்சாக வரவேற்பு

திருவாரூர், டிச.17 திருவாரூரில் (இன்று 17.12.20160 நடைபெற உள்ள மாநில மகளிரணி எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கம்பன் விரைவு வண்டியில் அதிகாலை திருவாரூர் வந்தடைந்தார்.

தமிழர் தலைவர் அவர்களை மண்டல மகளிரணி செயலாளர் கோ. செந்தமிழ்செல்வி தலைமையில், திருவாரூர் மாவட்ட தலைவர் சவு. சுரேஷ், மாவட்ட செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கணக்கான மகளிரணி தோழியர்கள் அதிகாலையிலும் வின் அதிர உற்சாக முழக்கமிட்டு தமிழர் தலைவர் அய்யா அவர்களையும் உடன் வந்த கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களையும் வரவேற்றனர்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில மகளிரணி செயலாளர் வீ. கலைச்செல்வி, கொரடாச்சேரி ஒன்றிய மகளிரணி செயலாளர் அமுதா, கிடாரங்கொண்டான் மரகதம், சூரனூர் அஞ்சம்மாள், நகர ப.க. செயலாளர் அரங்க ஈ.வே.ரா., மாநில மாணவரணி செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், காரைக்குடி மாவட்ட செயலாளர் தி. என்னாரெசு பிராட்லா, மாநில விவசாய தொழிலாளரணி  செயலாளர் வீ. மோகன்,

மண்டல தலைவர் இரா. கோபால், மண்டல செயலாளர்  க. முனியாண்டி, துணைத் தலைவர் கி. அருண்காந்தி, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்  ரெத்தினசாமி, பொதுக் குழு உறுப்பினர் நா. கமலம்,  மாவட்ட மகளிரணி தலைவர்கள் திருவாரூர் இரா. மகேஸ்வரி, நாகை இரா. பேபி, குடந்தை ஜெயமணி திருத்துறைபூண்டி சி. கலைவாணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சி.சரசு, நகர மகளிரணி தலைவர் பிரியா சுரேஷ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சாந்தி அருண்காந்தி, மாவட்ட ப.க. செயலாளர் சிவக்குமார், நகர தலைவர் மனோகரன்,

செயலாளர் காமராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வகுமார், செயலாளர் இராஜமணிகண்டன், பெல் வரதராஜன், அகமது, நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் சிவானந்தம், மாவட்ட மாணவரணி செயலாளளர் குமரேசன், கீழையூர் ஒன்றிய தலைவர் ரெங்கநாதன், மாவட்ட அமைப்பாளர் தங்க. கலியபெருமாள், பொன்ராமையா, பகுத்தறிவு ஆசிரியரணி ஆறுமுகம், திருவாரூர் ஒன்றிய மகளிரணி தலைவர் அன்னதானம், செயலாளர் சைனம்பு மற்றும் ஏராளமான மகளிரணி, இளைஞரணி, மாணவரணி தோழர்களும், தோழியர்களும் வரவேற்றனர். கழக தோழியர்கள் தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு சால்வைகளும், நன்கொடைகளும் வழங்கி மகிழ்ந்தனர். 

- தொகுப்பு ; மின்சாரம்

அன்னை மணியம்மையார் பிறந்தநாளான மார்ச் 10 ஆம் தேதி

பெண்களை இழிவுபடுத்தும் சாஸ்திரங்களைக் கொளுத்துவோம்!

திருவாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு!

திருவாரூர், டிச.18 அன்னை மணியம்மையார் அவர் களின் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதியன்று பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் சாத்திரம் முதலிய நூல்களைக் கொளுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

திருவாரூரில் நேற்று (17.12.2016) மாலை நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட மாநாடுகளிலேயே சிறப்பு

அண்மைக் காலத்தில் கழகம் நடத்திய மாநாடு களிலேயே சிறப்பான மாநாடு இது. தங்களுக்கும் ஆற்றல் உண்டு என்று கழக மகளிரணியினர், பாசறையினர் நிரூபித்துக் காட்டியுள்ளனர், அவர்களுக்குப் பாராட்டு.

தோழர் என்று சொன்னால் ஆண் - பெண் இரு பாலரையும்தான் குறிக்கும்.  ‘குடிஅரசு’ இதழில் தோழர் என்று பெண்களைக் குறிப்பிட்டுள்ளார் தந்தை பெரியார். அதனை மீண்டும் இம்மாநாட்டின்மூலம் புதுப்பிப்போம்! (கைதட்டல்).

36 முத்தான தீர்மானங்கள்

நேரம் குறைவாக இருக்கிறது. உங்கள் உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது  இரவு முழுவதும் பேசலாம் என்று தோன்றுகிறது.

இங்கு நிறைவேற்றப்பட்ட முப்பத்தாறு தீர்மானங் களும் முத்து முத்தானவை. இதைப்பற்றி விரித்துப் பேச ஆரம்பித்தால் பல நாள்கள் பேசலாம்.

வறட்சிப் பகுதியாக அறிவித்திடுக!

குறிப்பாக திருவாரூர் பகுதிக்கு நாங்கள் வந்தால் மக்களிடம் மலர்ந்த முகங்களைப் பார்க்கலாம். இப் பொழுது வரும்போது சோகத்துடன் காணப்படுகிறது - காரணம் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்கள் பெரும் இழப்புக்கு ஆளானதன் அடையாளமே அது.

நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பது உண்மை. இந்த நேரத்தில், தமிழக அரசுக்கு நமது கனிவான வேண்டுகோள். விவசாயம் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் - இழப்பீடுகளையும் செய்யவேண்டும் என்று இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். (பலத்த கரவொலி).

பெண்ணுரிமைப்பற்றி தந்தை பெரியார் அளவு சிந்தித்தவர்கள் யார்?

பெண்கள் உரிமை என்று வரும்போது தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்ததுபோல, வேறு யாரும் சிந்தித்து இருக்க முடியாது. சிந்தனையின் எல்லைக்கே சென்று சிந்தித்தார். பாடுபட்டார்; அதனால்தான் நன்றி உணர்வுடன் பெண்கள் மாநாடு கூட்டி அவருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந்தனர்.

மகளிர் உரிமை என்றால், அதன் பொருள் மனித உரிமையே! இந்துத்துவா என்பது பெண்களை அடிமைப்படுத்தக் கூடியது. சிறுமைப்படுத்தக் கூடியது என்பதால், அதிலிருந்து பெண்கள் விலகி நிற்கவேண்டும் என்று ஒரு தீர்மானம் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்ற மற்ற நாடுகளிலும்கூட பெண்ணடிமை இருந்தது உண்டு. ஆனால், படிப்படியாக அங்கெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஏற்படவில்லை - நாம் சிந்திக்கவேண்டும்.

சமுதாய விஞ்ஞானி பெரியார்

சென்னை வானொலியில் பணியாற்றிய லீலா என்ற அம்மையார் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

‘ஆண்களால் பெண்களுக்கு உரிமைகள் கிடைக்காது என்று பெரியார் சொல்லுகிறார். அப்படிப் பார்த்தால் பெரியாரும் ஓர் ஆண்தானே?’ என்பது அவரின் நியாயமான கேள்வி.

நான் சொன்ன பதில்: ‘நல்ல கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். பெரியாரை அந்தப் பார்வையில் பார்க்கக் கூடாது; பெரியாரை ஒரு சமுதாய விஞ்ஞானியாகப் பார்க்கவேண்டும்‘ என்று கூறினேன். அதையேதான் இங்கும் நான் கூற விரும்புகிறேன்.

பெண்ணை இழிவுபடுத்தும் மனுதர்மம்!

நம் நாட்டு சாத்திரங்களும், இதிகாசங்களும், வேதங்களும் பெண்களை ஒரு மானுடக் கூறாகவே பார்ப்பதில்லை. அடிமையாக மட்டுமல்ல; இழிவான பிறவிகளாக, கேவலமாகப் பேசுகின்றன.

என் கையில் இருப்பது அசல் மனுதர்மம். அதன் ஒன்பதாவது அத்தியாயம் 14 ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?

‘‘மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரமும் முக்கியமானதாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள்.’’

15 ஆம் சுலோகம் என்ன கூறுகிறது?

‘‘மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக யுடையவராதலால் கணவனால் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கிறார்கள்.’’

16 ஆம் சுலோகம் அதைவிட மோசம்.

‘‘மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதே யுண்டானது என்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்யவேண்டியது’’ என்கிறது மனு. இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இதிகாசங்களும், உபநிஷத்துகளும், வேதங்களும் இந்த வகையில்தான் எழுதப்பட்டுள்ளன.

திருவாரூரில் நடக்கும் இந்த எழுச்சிமிக்க திராவிடர் மகளிர் மாநாட்டில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.

அன்னை மணியம்மையார் பிறந்த நாளான வரும் மார்ச் 10 ஆம் தேதியன்று பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய நூல்களைக் கொளுத்துவோம்! இந்தப் போராட்டத்துக்குப் பெண்களே எங்கும் தலைமை தாங்குவார்கள் என்றார். (கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று!)

(முழு உரை பின்னர்).

-வி டுதலை,17.12.16&18.12.16