செவ்வாய், 21 மே, 2019

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (”நான் பூர்வ பௌத்தன்” நூலை முன்வைத்து)


நூல்            : பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள் தமிழ்த் தேசியர்கள்

ஆசிரியர்     : அ. மார்க்ஸ்

வெளியீடு    : அடையாளம் பதிப்பகம்.

 

 

விலை: 160. பக்கங்கள்: 175

 

 

 

ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்ச் சூழலில் அயோத்திதாசரின் பெயர் மறைக்கப் பட்டிருந்ததற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ரா.தான் என்றொரு கருத்தை உடனடியான சில அதிகார நோக்கங் களுக்காகவும் பொருளியல் நலன்களுக்காகவும் சமீபகாலமாகச் சிலர் முன்வைத்து வருகின்றனர். இத்தகைய கருத்தை முன்வைப்பவர்கள் அயோத்திதாசரும் அம்பேத்கரும் பெரியாரும் தமது எழுத்துகளிலும் செயற்பாடுகளிலும் முன்வைத்த பார்ப்பன, இந்து மத எதிர்ப்புகளை உதட்டளவிலுங்கூட முன்வைக்காதவர் களாகவும், முன்வைக்க இயலாத இடங்களில் இருப்பவர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருத்தை அகில இந்திய அளவில் பரப்புகிற காரியத்தை ஆங்கில ‘மீடியா’வில் செயல்படுகிற தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் செய்து வருகின்றனர். இதுநாள்வரை அரசியல் களத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த முயற்சி இப்போது கல்வியியல் புலத்திலும் மேற்கொள்ளப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கதாக உள்ளது.

அயோத்திதாசரின் தமிழ் பௌத்தத்தை விளக்கும் முதல் நூல் என அறிமுகப்படுத்தப்படுகிற ‘நான் பூர்வ பௌத்தன்’ என்னும் இந்நூல் அறிவித்துக் கொண்டுள்ள இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதைக் காட்டிலும் பெரியாருக்கு எதிரான மேற்குறித்த அவதூறை ஆராய்ச்சி என்னும் போர்வையில் முன்வைக்கும் பணியையே நிறைவேற்றியுள்ளது.

சென்ற நூற்றாண்டு முழுமையிலும் அயோத்திதாசரின் பணியும் பங்களிப்பும் ஆய்வுத் தளத்தில், கல்விப் புலத்தில், அரசியல் களத்தில், சிறு பத்திரிகைச் சூழலில் எதிலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது உண்மை. ஆனால், இதற்கான பழியை பெரியாரின் மீது சுமத்துவது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதுங்கூட, சென்ற நூற்றாண்டுச் சாதனையாளர்களின் பெயர்களை முன்வைப்பது அல்லது மறைப்பது என்பதற்காக ஏதோ ஒரு நிறுவனம் இருந்தது போலவும், அதற்குத் தலைவராகப் பெரியார் இருந்தது, போலவும் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது நகைச்சுவையாக இருக்கிறது. இது போல வரலாற்றில் மறைந்துபோகிற அல்லது மறைக்கப்படுகிற செயல், வேறு பல சந்தர்ப்பங்களிலும் நிகழ்ந்துள்ளது. இதற்கான காரணங்களை வரலாற்றுச் சூழலில்தான் தேடவேண்டுமேயொழிய, தனியொருவர் மீது பழி சுமத்துவது அர்த்தமற்றது.

பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றுத் துறையில் பணியாற்றுபவரும் இந்நூலாசிரியருமான முனைவர் டி.தருமராஜனும் மற்றவர்களும் பெரியார் அயோத்திதாசரை மறைத்துவிட்டார் என்பதற்குச் சொல்லும் காரணம் அயோத்திதாசர் ஒரு பறையர் என்பது (பக்.90). இப்படியான கருத்தை முன்வைப்பவர்கள் இரு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

அவை:

1.            அயோத்திதாசர் பறையர் என்பதற்காகத்தான் பெரியார் புறக்கணித்தாரா? எனில் அவர் அம்பேத்கரை மட்டும் ஏன் கடைசிவரை உயர்த்திப் பிடித்துவந்தார்?

2.            பறையர் என்பதற்காகவே பெரியாரால் புறக்கணிக்கப்பட்டார் என வைத்துக் கொண்டாலும் ஏன் ஒரு நூற்றாண்டு காலப் பறையர் நல மேம்பாட்டு இயக்கங்களோ, இல்லை பவுத்த இயக்கங்களோ அவரையும் அவரது கொள்கைகளையும் முன்னிலைப்படுத்தவில்லை?

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் நிலவி வந்த நட்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அம்பேத்கரின் இரு முக்கிய அரசியல் நிலைப்பாடுகளையும் (இரட்டை வாக்குரிமை, மதமாற்றம்) அதாவது சென்ற நூற்றாண்டு தலித் அரசியல் கோரிக்கைகளில் முக்கியமான இரண்டையும் முழுமையாக ஆதரித்த ஒரே தமிழ்த் தலைவர் பெரியார் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த அன்றைய தலித் இயக்கத் தலைவர்கள் இவற்றை ஆதரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தலித் தலைவர்களோ அயோத்திதாசரின் தமிழ் பவுத்தம் என்கிற குரலையும் முன்வைப்பது இல்லை. அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் என்கிற நடைமுறையையும் கடைபிடிப்பதில்லை. சொல்லப்போனால் அயோத்திதாசர், அம்பேத்கர் என்கிற பெயர்களை உச்சரிப்பதைக் காட்டிலும் தமிழ்த் தேசியத் தலைவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் பெயர்களைத்தான் அதிகம் உச்சரிக்கின்றனர்.

அயோத்திதாசர் முன்வைத்த பவுத்தம் தனித்துவமானது. லட்சுமிநரசு முதலான பவுத்த அறிஞர்கள் முன்வைத்த பவுத்தம், அநகாரிக தர்மபாலா போன்ற சென்ற நூற்றாண்டின் பவுத்த விழிப்புணர்வு இயக்கத்து நாயகர்கள் முன் வைத்த பவுத்தம், பெரியார், சிங்காரவேலர், இராகுல சாங்கிருத்தியாயன் முதலானோர் முன்வைத்த பவுத்தம் ஆகியவற்றிலிருந்து அயோத்திதாசரின் பவுத்தம் வேறுபட்டது. பெரியாரின் பவுத்தமும் சரி, அவரது அரசியலும் சரி, முற்றிலும் அயோத்திதாசரின் பாதையிலிருந்து வேறுபட்டவை. எது சரி என்கிற கேள்விக்கு நான் இப்போது போகவில்லை. பெரியார் அயோத்திதாசரை மறைத்தாரா என்கிற கேள்விக்குப் பதில் தேட அது தேவையுமில்லை. பெரியாரின் அரசியல் எந்த வகையிலும் அயோத்திதாசரை முன் மாதிரியாகக் கொள்ள இயலாததாக இருந்தது என்பதே இங்கு முக்கியம்.

சென்ற இரு நூற்றாண்டுகளில் இங்கு மேற்கொள்ளப்பட்ட பவுத்தப் புத்துருவாக்க முயற்சிகளின் வரலாற்றைப் பரிசீலனை செய்வது அவசியம். மாமன்னர் அசோகரது காலத்தில் இந்தியத் துணைகண்டம் முழுவதும் பரவியிருந்த பவுத்தம் இந்தியாவில் முற்றாக ஒழிக்கப்பட்டது என்பதே வரலாறு. அதன் எச்ச சொச்சங்கள், தாக்கங்கள் பிற மதங்களிலும் மக்களின் பொது நினைவுகளிலும் பதிந்திருந்த போதிலும் ஒரு நிறுவனம் என்கிற வகையில் அது இந்தியாவிலிருந்து விரட்டப்பட்டது. தூபிகளும் விகாரைகளும் அழிக்கப்பட்டன. சைவ, வைணவக் கோயில்களாகவும் அய்யனார், தருமராசர், சாஸ்தா முதலிய தெய்வங்களாகவும் மாற்றப்பட்டன. பிக்குகள் கொல்லப்பட்டனர் அல்லது விரட்டப்பட்டனர். நூற்கள் பலவும் அழிக்கப்பட்டன. புத்த கயாவும் இதர பவுத்தத் தலங்களும் இந்து மதச் சாமியார்கள் (மகந்த்கள்) கையில் சீர்குலைந்து கிடந்தன.

இந்தத் தலங்களை, குறிப்பாக புத்த கயாவை மீட்பது என்கிற நோக்குடன் கொழும்பில் 1891 மே மாதத்தில் ‘மகாபோதி கழக’த்தை நிறுவியவர் அநகாரிக தர்மபாலா, மகந்த்களை எதிர்த்து வழக்குகளைத் தொடர்ந்து லண்டன்வரை சென்று இந்திய அமைச்சரை எல்லாம் சந்தித்து இறுதியில் புத்த கயா மீட்கப்பட்ட கதை தனியானது (இதற்கான முதல் உந்துதலை அளித்தவர் எட்வின் ஆர்னால்டு).

மகாபோதி கழகத்தின் முதல் தலைவர் மலிசா கந்த விகாரையின் தலைமைப் பிக்குவும் வித்யோதயா கல்லூரி முதல்வருமான சுமங்கல மகாதேரர். பொதுச் செயலாளர் தர்மபாலா. இந்தக் கழகம் உருவாவதற்கு பெரும் உதவிகளைச் செய்தவர் எனக் கழகத்தினர் நன்றியுடன் நினைவுகூர்வது சென்னை ‘அடையாறு தியாசபிகல் சொசைட்டி’யின் நிறுவனர்களில் ஒருவரான கர்னல் ஆல்காட் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் மேடம் ப்ளாவட்ஸ்கியும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தம்மைப் பவுத்தர்கள் என அறிவித்துக் கொண்டனர். தர்மபாலாவுக்கு முன்னரே ‘அய்க்யப் மகாபோதி கழக’த்தை நிறுவி, 1896 வரை அன்றைய இயக்குனராகவும் இருந்தவர் ஆல்காட்.

ஆல்காட்டின் செயற்பாடுகள் அடையாறுடன் முடிந்துவிடவில்லை. இலங்கையிலுள்ள பவுத்த அமைப்புகளுடன் அவர் நெருக்கமாகத் தொடர்பு கொண்டார். இலங்கையில் பவுத்த விழிப்புணர்வுக்கு காரணம் என இரு நிகழ்வுகளை தர்மபாலா சுட்டிக் காட்டுகிறார்.

ஒன்று: 1872ஆம் ஆண்டு இலங்கையில் பனாதூரில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் பவுத்த பிக்குகளுக்கும் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க சர்ச்சை.

இரண்டு: 1880இல் இலங்கையில் தியாசபிகல் சொசைட்டி தொடங்கப்பட்டது. ஆல்காட்டிற்கும், பிளாவட்ஸ்கி அம்மைக்கும் காலி வீதியில் மிகப் பெரிய  ‘Royal Welcome’ அளிக்கப்பட்டதாக தர்மபாலா எழுதுகிறார் Maha Bodhi Society Journal, Centenary Volume, 1991). கொழும்பில் ஆல்காட்டிற்கு ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறு வண்ணங்களில் பவுத்தக் கொடி ஒன்றையும் ஆல்காட்தான் அமைத்துத் தந்தார் (1884).

அன்னிபெசன்ட் ஜே. கிருஷ்ணமூர்த்தியைக் ‘கண்டுபிடித்தது’ போலப் பாரம்பரியப் பவுத்தக் குடும்பம் ஒன்றில் பிறந்திருந்த ஹெவவிதர்னே தர்மபாலாவைக் கண்டுபிடித்துப் பெற்றோரின் விருப்பையும் மீறி வற்புறுத்திச் சென்னைக்கு அழைத்து வந்து பவுத்த மீட்புப் பணியில் பிளாவாட்ஸ்கி அம்மை ஈடுபடுத்திய கதை விரிவானது.

தர்மபாலாவைப் போலவே அயோத்திதாசருக்கும் பவுத்த மீட்புப் பணியில் பேருதவியாக இருந்தது கர்னல் ஆல்காட் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்திதாசரே இதை நன்றியுடன் குறிப்பிடுகிறார். (பார்க்க அலாய்சியசின் தொகுப்பு). தனது சொந்த முயற்சியில் அவர் 1890இல் ஆல்காட்டைச் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பறையர்கள் பூர்வ பவுத்தர்கள் என்கிற தனது கருத்தை விளக்கி புத்த மதத்தை மீள் உருவாக்கம் செய்யவும் புத்தக்கோயில் ஒன்றைக் கட்டவும் உதவி கோருகிறார். சிங்கள பவுத்த அமைப்புகளுடன் அயோத்திதாசருக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த ஆல்காட் அவரை அதே ஆண்டில் இலங்கைக்கு அழைத்துச் செல்கிறார். சுமங்கல மகா தேரரிடம் பஞ்சசீல தீட்சை பெற்று பவுத்தராகத் திரும்புகிறார் அயோத்திதாசர்.

ஆல்காட்டின் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்த அநகாரிக தர்மபாலாவும் குணரத்னே என்கிற தமிழறிந்த பிக்கு ஒருவரும் ஆல்காட்டின் முயற்சியில், ‘டாக்டர் அயோத்திதாசர் மற்றும் சிலரின்’ உதவியோடு சென்னை ராயப்பேட்டையில் 1898 ஆகஸ்டு 8ஆம் தேதியன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டனர். அன்றுதான் ‘சாக்கைய புத்தகக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது (தொடக்கத்தில் அதன் பெயர் திராவிட புத்தக் கழகம்). கூட்டத்தில் அயோத்திதாசர் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியை தர்மபாலா வெகுவாகப் பாராட்டினார். சிகாகோவைச் சேர்ந்த பவுத்த அறிஞர் டாக்டர் பால் கேரஸ் சாக்கைய புத்தக் கழகத்திற்-குத் தலைவராக இருக்கச் சம்மதித்தார்.

மீண்டும் தமது 35ஆவது பிறந்த நாளன்று (செப். 17, 1899) சென்னை வந்த தர்மபாலா ஏராளமான பொதுக்கூட்டங்களில் பேசினார். ‘மெட்ராஸ் ஸ்டான்டர்ட்’ இதழ் அவரது விரிவான பேட்டியை வெளியிட்டது. 1899 செப்டம்பர் 28ஆம் தேதியன்று ‘மகாபோதிக் கழக’த்தின் சென்னைக் கிளையைத் தொடங்கி வைத்தார் தர்மபாலா. இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து எம்.சிங்காரவேலுச் செட்டி பி.ஏ. (மா.சிங்காரவேலனார்). முதல் செயலாளராகவும் அவரே பொறுப்பேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்டாரா என்பது தெரியவில்லை. லட்சுமி நரசுவும் சிங்காரவேலரும் தொடர்ந்து இதில் இயங்கினர். 1906இல் பிக்கு நந்தராமாவை வரவழைத்துப் பவுத்த பிரசாரத்தையும் இவர்கள் மேற்கொண்டனர். இதிலெல்லாம் அயோத்திதாசர் கலந்துகொண்டாரா என்பது தெரியவில்லை. இல்லை என்றே தோன்றுகிறது. எனினும் ‘மகாபோதிக் கழக’த்திற்கும் அயோத்திதாசருக்கும் இடையில் பிளவு அதிகமாகி 1911 வாக்கில் முற்றிலும் எதிர் எதிராக இரு அமைப்புகளும் (சாக்கைய புத்தக் கழகம் _ மகாபோதிக்கழகம்) நின்றன. அதற்கான காரணங்களை அயோத்திதாசர் விளக்குவதை அலாய்சியஸ் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் காண்க. இது குறித்து விரிவாக ஆய்ந்த பின்பும், மறுதரப்புக் கருத்துகளை அறிந்த பின்னுமே நாம் எந்த முடிவுக்கும் வர இயலும். (வெளியார் ஒருவர் அளித்த நன்கொடையைப் பயன்படுத்திக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது என்றொரு கருத்து நிலவுகிறது. தர்மபாலா புத்துயிரூட்டிய பவுத்தம் சற்றே மேட்டிமைத் தன்மை வாய்ந்ததாக இருந்தது என்பது இன்னொரு கருத்து.) தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பவுத்தப் புத்துயிர்ப்பு நடவடிக்கைகளில் குறைந்த பட்சம் இருவிதப் போக்குகள் இருந்தன என்பது கவனித்தக்கது. மூன்று போக்குகள் என்றும்கூடச் சொல்லலாம். தனது அமைப்பை நியாயப்படுத்தி உலகெங்கிலுமுள்ள பவுத்த கழகங்களுக்கு அயோத்திதாசர் கொடுத்த வேண்டுகோளையும் அலாய்சியஸ் தொகுப்பு இரண்டில் காணலாம்.

எனினும் அயோத்திதாசர் சுய முயற்சியுடன் இயக்கம், இதழ், புதிய கிளைகள் மற்றும் பள்ளிகள் துவக்கம் எனத் தனது நடவடிக்கைகளைத் தனித்துவத்துடன் தொடர்ந்தார். ஆல்காட் மற்றும் அடையாறு தியாசபிகல் சொசைட்டியுடன் அயோத்திதாசரின் தொடர்புகள் தொடர்ந்தன என்றே கருத இடமிருக்கிறது. அயோத்திதாசரின் இராய்பேட்டை அலுவலகத்திற்கு இறுதிவரை மாதவாடகை ரூ.10அய் ஆல்காட்தான் செலுத்திவந்தார். ஆல்காட்டுக்கும் தர்மபாலாவுக்கம் இடையில் கருத்து மாறுபாடுகள் இதே காலகட்டத்தில் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 1908இல் ஆல்காட் மரணமடைந்தபோது அனைத்து மதச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. பவுத்த மதச் சடங்குகளை நிறவேற்ற அன்னிபெசன்ட் அம்மையாரால் அழைக்கப்பட்டது அயோத்திதாசர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பவுத்தப் புத்துயிர்ப்பில் மட்டுமின்றிச் சென்ற நூற்றாண்டின் இந்துத்துவப் புத்துருவாக்க முன்னோடிப் பணிகளைச் செய்தவர்களில் ஒருவராகவும் ஆல்காட் மதிக்கப்பட்டதும் சிந்திக்கத்தக்கது.

அயோத்திதாசரின் பவுத்தமும் அவரது தோழர்களாக இருந்த லட்சுமி நரசு, அப்பாதுரையார் முதலியோரின் பவுத்தமும் வேறு வேறாக இருந்தன என்பதைத் தருமராஜனும் ஏற்றுக்கொள்கிறார் (இவர்களோடு சிங்காரவேலரையும் பின்னாளில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றிய பெரியாரையும் சேர்த்துக் கொள்ளுதல் பொருத்தம்). அதற்கான காரணத்தையும் தருமராஜன் சரியாகவே அடையாளம் காண்கிறார். ‘பகுத்தறிவு சார்ந்து, இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் பார்வையுடன் இவர்கள் பவுத்த சமயத்தைப் புரிந்துகொண்டு இருந்தார்கள்’ என்கிற அவரின் கூற்றை (பக்.91) நாமும் ஏற்-றுக் கொள்கிறோம். ஆனால் இவர்களது பௌத்தத்தின் மையப் பொருள் சாதி எதிர்ப்பு இல்லை என தருமராஜன் கூறுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. தமிழ் மரபிலிருந்து பவுத்தத்தைக் கட்டமைத்தல் என்ற உத்தியை இவர்கள் சிரத்தையுடன் எதிர் கொள்ளவில்லை என்கிற கூற்றை (பக.92) வேண்டுமானால் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தமிழ் மரபிலிருந்து கட்டப்படக்கூடிய பவுத்தம் ‘இயற்கையாகவே’ சாதி எதிர்ப்புத்தன்மை உடையதாக இருக்கும் என்கிற அவரது நம்பிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள இயலாது. பவுத்தமும் சமணமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வேத எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய பண்புகள் கொண்டவை. அந்தக் காரணத்தாலேயே அவை பார்ப்பன மதத்தால் அழிக்கப்பட்டன. அம்பேத்கர் உட்படப் பலரும் சொல்கிற காரணம் இது. ‘அழிக்கப்பட்டன’ எனச் சொல்லாவிட்டாலும் சைவ _ வைணவ மதங்கள் காட்டிய எதிர்ப்பின் அடிப்படை பவுத்தத்தின் சாதி எதிர்ப்புப் பண்பே என்பதை அயோத்திதாசரும் ஏற்றுக்கொள்கிறார்.

பெரியாரும் இடதுசாரி அறிஞர்களும் பவுத்தத்தின் கடவுள் மறுப்புக் கூறுகளை முதன்மைப்படுத்தினர். அந்த வகையில் இவர்களிடமும் ஒரு வகையில் ஆதி பவுத்தம் குறித்த தேடல் இருந்தது. இவர்கள் முதன்மைப்படுத்திய பவுத்தத்தின் முக்கிய கூறுகள்:

1.            கடவுளை ஒப்புக் கொள்ளாமலிருப்பது.

2.            ஆன்மாவை நிரந்தரமானது என ஒப்புக் கொள்ளாதது.

3.            எந்த ஒரு புனித நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாதது. வேதங்களின் பிரமாணத் தன்மையை ஏற்றுக் கொள்ளாதது.

4.            வாழ்க்கைப் பிரவாகத்தை ஒரு இடையறாத இயக்கமாக நம்புவது.

5.            பிராமண மதத்தின் ‘கர்மக் கோட்பாட்டை’ மறுப்பது, பிறப்பால் உயர்வு தாழ்வுகள் நிர்ணயிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாதது. பார்ப்பன மேலாண்மை, தீண்டாமை, சாதி ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றை மறுப்பது.

(பார்க்க: ராகுல் சாங்கிருத்யாயனின் ‘பௌத்த தத்துவ இயல்’, தேவிபிரசாத் சட்டோபத்யாயாவின் ‘லோகாயதா’, தர்மானந்த சோசாம்பியின் ‘பகவான் புத்தர்’ முதலிய நூல்கள்.)

மே, 15, 1957 அன்று சென்னை ‘மகா போதி’ கழகத்தில் நடந்த 2501ஆம் ஆண்டு புத்தர் விழாவில் பெரியார் ஆற்றிய தலைமை உரையைத் தருமராஜன் படிக்க வேண்டும். பவுத்தம் ஒரு மதமல்ல, புத்தர் ஒரு கடவுளல்ல என்கிற கருத்தை அவர் அந்த உரையில் வற்புறுத்துகிறார்.

“புத்தகர் மகானோ ரிஷியோ அல்லர். இந்தத் தன்மையை எதிர்த்தவர். அந்தக் காரணத்தினால்தான் நாம் இன்று புத்தரைக் கொண்டாடும்படியான நிலை இருக்கிறது. புத்தர் எப்படி மகானோ, ரிஷியோ இல்லையோ அதே போல் பவுத்தம் என்பதும் ஒரு மதமல்ல. ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும். மோட்சம், நரகம் வேண்டும். ஆத்மா, பாவ_புண்ணியம் அவற்றிற்கு ஏற்றற் போல் தண்டனை இவையெல்லாம் வேண்டும். இன்னும் சிறந்த மதம் என்பதற்கு ஒரு கடவுள் போதாது. பல கடவுள்கள் வேண்டும். அவற்றிற்குப் பொண்டாட்டி, பிள்ளைகுட்டி, வைப்பாட்டி இவை எல்லாம் வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும். ஆனால், புத்தர் முதலில் “கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்.’’ “மனிதனைப் பற்றிக் கவலைப்படு’’ என்று சொல்லிவிட்டார். மோட்சம், நரகம் இல்லை ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். இன்னும் அறிவுதான் முக்கியம் என்றார். ரிஷி சொன்னார், மகான் சொன்னார் என்று நம்பாதே, யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டார்’’.

என்றுகூறுகிற பெரியார் புத்தியைக் கொண்டு சிந்திப்பவன்தான் புத்தன் என்பதற்கும் குருட்டுத்தனமான மூடநம்பிக்கைகளை ஏற்காமையே பவுத்தம் என்கிற கருத்திற்கும் அழுத்தம் கொடுக்கிறார். கடவுளைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சாதியை ஏற்றுக் கொள்ளவே இயலாது என்பதாகப் பெரியாரின் அன்றைய நீண்ட உரை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

‘‘சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதியை ஒழிக்கக் கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற சொல்லத் தைரியமுள்ள ஆட்சியே தவிர, சாதியை ஒழிக்கத் தைரியமுள்ள ஆட்சியல்ல... சாதி ஒழிய வேண்டுமானால் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வேலை இல்லை. புராணங்களும் இதிகாசங்களும் ஒழிய வேண்டும். அப்போதுதான் சாதி இல்லாத சமுதாயம் ஆக முடியும்.’’ என்று முடிக்கிறார்.

ஆக பெரியாரின் அரசியல் என்பது கடவுள் மறுப்பு, புராண இதிகாச ஒழிப்பு ஆகியவற்றோடு, சாதி ஒழிப்பை இணைப்பதாக (articulate) உள்ளது. ஆனால், அயோத்திதாசரின் பவுத்தமோ புத்தரைக் கடவுளாக ஏற்றல், இந்துப் புராணங்களையும் தொல்கதைகளையும் மாற்ற மரபுகளிலிருந்து தேடிப்பிடிப்பது என்பதாக உள்ளது. இருவரின் நோக்கங்களும் ஒன்றென வைத்துக் கொண்டாலும் பாதைகள் முற்றிலும் வேறானதாகவும் உள்ளன (மறுபடியும் சொல்கிறேன்: எது சரி என்ற கேள்விக்குள் நாம் இப்போது போகவேண்டாம்). எனவே, பெரியாரால் எந்த வகையிலும் அயோத்திதாசரை முன்மாதிரியாகக் கொள்ளவே இயலாத நிலை இருந்ததை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். யோசித்துப் பாருங்கள். மேற்கண்ட உரையில் எந்த இடத்தில் அயோத்திதாசரைப் பெரியார் நுழைக்க இயலும்?

“நடைமுறையில்கூட இறை வணக்கங்களையும் பண்டிகைகளையும் ஒழிப்பதாகப் பெரியாரது பார்வை இருந்தது. அயோத்திதாசரின் பார்வையோ புதிய பெயர் சொல்லி, விளக்கம் கூறி எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதாகவும், கொண்டாடுவதாகவும் இருந்தது. கார்த்திகை தீபத்தை ‘கார்த்துலதீபம்’ எனவும், தீபாவளியை ‘தீபவதி’ப் பண்டிகை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அயோத்திதாசர் பரிந்துரை செய்வது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் பெரியாரின் பகுத்தறிவு சார்ந்த நவீனத்துவப் பார்வையும் அயோத்திதாசரின் தொன்ம மீட்புப் பார்வையும் சந்திக்க இயலாதவையாக இருந்தன என்பதே உண்மை.’’ தருமராஜனே இதை ஏற்றுக் கொள்கிறார்.

“பவுத்தம் தொடர்பான அயோத்திதாசரின் பார்வையை அவருக்குப் பின் முன்னெடுத்துச் செல்வதற்-கு வேறு யாரும் இருக்கவில்லை என்பது வேதனையான உண்மை. அயோத்திதாசரின் மறைவுக்குப் பின்னர் அய்ரோப்பிய மரபுவழி (இந்தப் பெயர் சூட்டல் விவாதத்திற்குரிய ஒன்று _ அ.மா.) வந்த பவுத்தத்திற்கு அதிக மரியாதையும் மேன்மையும் வழங்கப்பட்டன. அயோத்திதாசரின் தமிழ் பவுத்தம் என்ற சிந்தனை இதனால் ஏறக்குறைய மறைந்தே போயிற்று. அவரது வழித்தோன்றல்களே அதனைத் தேக்கமடையச் செய்தனர்.’’ என்று வாக்குமூலம் அளிக்கிற தர்மராஜன் தேவையின்றிப் பெரியாரின் மீது காழ்ப்பைக் கக்குவது ஆய்வு நேர்மையின் பாற்பட்ட செயலாகத் தெரியவில்லை.

-  உண்மை இதழ், 16-31.5.19

பண்டிமணி ஜி.அப்பாதுரையார்(1890-1962)

பண்டிமணி ஜி.அப்பாதுரையார்(1890-1962)

இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து,வரலாறு உணர்ந்து தர்க்க ரீதியில் ஆதரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக்குறைவு.அவர்களின் சிறந்தவர் பண்டிமணி  ஜி.அப்பாதுரையார்.அவர் வாதத்தில் அன்றைய காலத்து தமிழ்நாடு தூயத்தமிழ் இணைந்தோடும்,கருத்தில் தரம் தெரியும்,திறன் பேசும்,அறன் ஔிரும்,சிந்தனையிலே வீரத்தை காட்டி வாழ்ந்தவர் அப்புலவர் பெருமகனார்.

இவர் 1890 கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளரந்தவர். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார்.இளமையிலேயே கழைக்கூத்து,மாந்தரீகம்,பில்லி,சூனியம் போன்றவைகளில் நாட்டாங்கொண்டிருந்தார் என்பார்கள்.

1907ல் இவர் வாழ்க்கையில்  பெரும் மாறுதல் ஏற்பட்டது.இதற்க்கு சென்னை ராயபேட்டையிலிருந்து தமிழகத்து முதல் பகுத்தறிவுவாதியான அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் வெளியிடப்பட்டுவந்த தமிழன் பத்திரிக்கையும்,அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்க கூட்டங்களே காரணமாகும்.சமயம்,சமுதாயம்,இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றி காணுவது இவருக்கு கைவந்த கலையாக இருந்தது.1912லிருந்து திராவிடன்,நவசக்தி,விலாசினி,குடியரசு போன்ற பத்திரிகைகளில் சிறப்பான தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகையான அரிய கட்டுரைகளை எழுதி புகழ்பெற்றார்.

ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றிருந்த இவர் 1911ல் தமது 21வயதில் பௌத்தம் தழுவினார் . இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு  இளைஞர் பௌத்த சங்கத்தை கோலார்,வேலூர்,சென்னை,செங்கல்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார்.சிறுநூல்கள் பல எழுதினார்.எண்ணிலடங்கா அரியக்கூட்டங்களை நடத்தினார்.இவரது நீத்தார் நினைவு நாளில் எங்களுக்குகெல்லாம் முன்பே பகுத்தறிவு பிரச்சாரம் செய்து மக்களை திருத்தியவர் இவர் என்று பெரியார் ஈவெரா அவர்களால் புகழப்பட்டது இங்கு குறிப்பிடதக்கதாகும்.

1917 ல் மாண்டேகு -செம்ஸ்போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கியது.1924 ல் காந்தியோடு சமுதாயச் சீர்திருத்தத்தை பற்றி வாதிட்டது ஆகியவை இவரது தொண்டின் சிறப்புகாகும்.1926லிருந்து பள்ளி ஆசிரியராகவும்,கோலார்,தமிழன், பத்திரிக்கை ஆசிரியராகவும் பணியாற்றினார்.புத்தர் அருளறம் என்ற நூலினை படைத்துள்ளார்.1930லிருந்து 1955வரை அவர் செய்த தொண்டு மக்த்தானதாகும்.1962ல் உடல் நலங்குன்றி பஞ்சகந்த பிரிவினையடைந்தார்..

இந்த பெருமகனாரின் வரலாற்றை பதிவு செய்த ஐயா அன்புபொன்னோவியம் அவர்களுக்கு நன்றி..

ஏப்ரல் தலித் வரலாற்று மாதம்.

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (36) : பெரியாரைப் போற்றிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள்!



நேயன்


தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எதுவும் செய்யவில்லையென்று ஒரு சிலர் அக்காலத்திலிருந்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதால், தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தவற்றை இதுவரை ஆதாரங்களோடு விளக்கினோம்.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எந்த அளவிற்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு சூழல்களில் தந்தை பெரியாரைப் பாராட்டி, பெரியாருக்கு நன்றி தெரிவித்து கூறியுள்ளவற்றை தெரிந்துகொண்டாலே புரிந்து கொள்ளலாம்.

இதோ அவற்றுள் சில:

டெல்லியில் இருந்து பம்பாய் சென்றார் பெரியார். தாராவியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இங்கு பேசிய மராட்டியத் தோழர் மாருதி கன்சே, டாக்டர் அம்பேத்கர் சொல்லி வந்ததை பெரியார் சொல்லி வருகிறார். ‘அவர் வழியில் நடப்போம்’ என்று பேசினார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்கு பேசும்போது, “வடநாட்டில் அம்பேத்கர் செய்துவந்த பிரசாரத்தை தென்னாட்டில் பெரியார் செய்து வருகிறார். அம்பேத்கருக்குப் பிறகு நம் அனைவருக்கும் ஒரே தலைவர் அவர்தான்’’ என்று பேசினார்.

22.2.1959 பரேல் பகுதியிலுள்ள காம்கார் மைதானத்தில் நடந்த குடியரசு கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கட்சியின் பம்பாய் மாநில தலைவர் ஆர்.டி.பண்டாரே தலைமை வகித்தார். அக்கட்சியின் தொண்டர் படையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். மேடையில் இருபுறமும் குடியரசு கட்சியின் கொடியும் புத்தர், அம்பேத்கர் படமும் இருந்தது. வரவேற்றுப் பேசிய காம்ளே, இதற்கு முன் பெரியார் _ அம்பேத்கர் சந்திப்பு (1940) நடந்தபோது தானும் உடன் இருந்ததாகச் சொன்னார். அம்பேத்கர் படத்துக்கு பெரியார் மரியாதை செலுத்தினார்.

தலைமை தாங்கிய பண்டாரே பேசும்போது, ‘பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் ஒரே கொள்கைதான்’ என்றார். இறுதியாகப் பேசும்போது, “பெரியார் அவர்களது அறிவுரைப்படியும் அம்பேத்கர் காட்டிய வழியிலும் நிற்க வேண்டும்’’ என்று பேசினார் பண்டாரே. (‘விடுதலை’ 25.2.1959)

24.2.1959 அன்று பம்பாய் நகரின் சேம்பூர் டவுன்ஷிப் காலனி சர்ச்பிள் மைதானத்தில் சேம்பூர் பவுத்த ஜன் சாகித் மண்டல் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பம்பாய் சித்தார்த்தர் கல்லூரி மராத்திய பேராசிரியர் காஸ்டுருடே தலைமை வகித்தார். பெரியார் _ அம்பேத்கர் இருவருக்கும் இருந்த நட்பு, கொள்கை ஒற்றுமை பற்றி காஸ்டுருடே பேசினார். மேடையில் இருந்த புத்தர், அம்பேத்கர் படங்களுக்கு பெரியார் மலர் மாலை அணிவித்தார். (‘விடுதலை’ 3.3.1959)

ஜோதிபா ஃபூலேவின் அமைப்பான பகுஜன் சமாஜை தாய்க்கழகமாகக் கொண்ட கிளைக் கழகமான சத்திய சோதக் சமாஜ் கூட்ட-த்தில் பெரியார் கலந்து கொண்டார். 24.2.1959 அன்று ஃபூலே மைதானத்தில் இது நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகுதான் தனக்கு ஃபூலே பற்றி தெரிய வந்ததாக பெரியார் கூறுகிறார்.

100 வருடங்களுக்கு முன்பே மகாத்மா ஃபூலே என்பவர் இந்தக் கருத்தக்களை வைத்து தொண்டாற்றி வருகிறார்கள் என்று விச்சாரே சொன்னார்கள். அந்த விஷயம் இதே கருத்துக்களை பல்லாண்டுகளாகப் பிரச்சாரம் செய்துவரும் எனக்கு இப்பொழுதுதான் தெரிய வந்தது. நமது நிலைமை இப்படி இருக்கிறது. இந்தியாவில் முட்டாள்களையும் பைத்தியக்காரர்களையும் உலகத்திற்கெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், இது மாதிரி விஷயங்கள் எல்லாம் நமக்குள் ஒருவருக்கொருவர் இருட்டடித்து அடக்கி நம்மை ஆளுகிறார்கள்’’ என்று பேசினார்.

பம்பாய் வாழ் கொலாபா மக்கள் பெரியாருக்கு வரவேற்பு கொடுத்தார்கள். கொலாபா குடியரசு கட்சியின் கிளைத் தலைவரான எஸ்.டி.அகீர் பேசும்போது, “டாக்டர் அம்பேத்கருக்குப் பின் வேறு தலைவர் எங்களுக்கு இல்லை. நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.

உத்தரப் பிரதேச மாநில இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் சாடிலால் சாந்தி, ‘வடநாட்டில் பெரியார்’ என்று ஒரு கட்டுரை எழுதினார். வட இந்தியாவில் பெரியாருக்கு கிடைத்த வரவேற்பை அதில் அவர் விவரித்துள்ளார். படிக்கவே பிரமிப்பாக இருக்கிறது. அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை 1962 விடுதலை மலர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளது. சாடிலால் சாந்தி எழுதிய கட்டுரையின் வரிகள்:

“பெரியார் அவர்கள் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களின் நலத்தைப் பற்றிய கவலை கொண்டு அவர்களுக்கு தக்க சமயத்தில் ஏற்ற முறைகளைக் கையாண்டு நலம் தேடித் தருவதில் கருத்துக் கொண்டு உழைத்து வருவதை நான் அறிவேன். பெரியார் அவர்களது இயக்கமான திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வட இந்தியாவிலுள்ள நாங்கள் மிகவும் விரும்பி அறிவதுடன் அவ்வழியில் உந்தப்பட்டு ஊக்கமடைந்து வருகிறோம். இதனாலேயே பெரியாரவர்கள் தென்னாட்டுக்கு மட்டும் தலைவராகக் கருதப்படாமல் இந்நாட்டின் மற்றப் பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் தலைவராகவும் நாட்டின் தந்தையாகவே கருதப்படுபவராக விளங்குகிறார்.’’ என்று குறிப்பிட்ட சாடிலால் சாந்தி, அன்றைய தினம் பெரியாருக்கு தரப்பட்ட வரவேற்பையும் எதிரிகளின் எதிர்ப்பையும் எழுதி இருக்கிறார்.

1959ஆம் ஆண்டு பிப்ரவரி 8இல் பெரியார், கான்பூர் செல்கிறார். ரயில் நிலையத்தில் 20 ஆயிரம் பேர் வரவேற்பு தருகிறார்கள். சுமார் நான்கு மைல் நீளத்துக்கு மாபெரும் வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. இந்து மத பெரியவர்கள், பெரியாருக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள். ‘பெரியார் வந்தால் விபரீதம் நிகழும்’ என்று அதில் இருக்கிறது. “இதையறிந்த நமது மக்கள் (தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள்) கொதிப்புற்று பளபள ஒளி வீசும் பட்டாக் கத்திகளுடனும் துப்பாக்கிகளை ஏந்தியும் பெரியாரைப் புடைசூழ நின்று மிக அதிக ஊக்கத்துடனும் உத்வேக உணர்ச்சியுடனும் ஒளி முகத்துடனும் ஊர்வலத்தை நடத்தி முன்னேறிச் சென்றனர்’’ என்கிறார் சாடிலால் சாந்தி.

பெரியார் வருகை தரும் நாளன்று அந்தக் கூட்டத்தின் எழுச்சியை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் வேறு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார்கள்.

அன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பண்டித கோவிந்த வல்லபந்த், உ.பி. முதலமைச்சர் சம்பூரணானந்தர் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் பிசுபிசுத்துப் போய் தோல்வி கண்டது என்று எழுதுகிறார் சாடிலால் சாந்தி. பெரியார் பேசிய கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்கிறார் இவர்.

பெரியாரின் இரண்டு மணி நேர பேச்சைக் கேட்ட மக்கள், “பெரியார் அவர்களின் தலைமையையேற்று அவர் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் உயிரையும் கொடுத்து அவர் இட்ட பணிகளை நிறைவேற்றத் தயாரென்று உறுதி பூண்டனர்’’ என்கிறார் சாடிலால் சாந்தி.

நம் அனைவரையும் நடத்திச் செல்ல பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் நீண்ட காலம் சுகவாழ்வு எய்த வேண்டுமென்று மனதார விரும்புகிறோம். பெரியார் அவர்களைத் தலைவராகப் பெற்றமைக்கு நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்திய இயக்கங்களின் வரலாற்றில் பெரியார் மிகச் சிறந்த தலைவராகப் பொறிக்கப்படுபவராக இருப்பதுடன், இந்த எண்பத்து நான்கு வயதிலும் பெரியார் அவர்கள் புரட்சியின் சின்னமாக விளங்குகிறார்கள். தாழ்த்தப்பட்டுக் கிடப்பவர்களின் ஊக்கத்துக்கு ஊன்று கோலாகத் திகழும் தலைவர் அவரேயன்றி வேறெவர் தலைவர்?’’ என்று எழுதி இருக்கிறார் சாடிலால் சாந்தி. தமிழகத்தைத் தாண்டி பெரியாரின் தாக்கம் எப்படி இருந்தது, பெரியாரை வட இந்தியர்கள் கூட மிகச் சரியாக அடையாளம் கண்டார்கள் என்பதற்கான சான்று இது. பெரியாரை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, இந்தியக் குடியரசு கட்சித் தலைவர்களும் எப்படி எல்லாம் ஏற்றுக் கொண்டார்கள் என்பதே பெருமைக்குரியதாக இருக்கிறது.

                                                                  (தொடரும்)

 - உண்மை இதழ், 16-31.5.19

ஞாயிறு, 5 மே, 2019

பெரியார் எழுதிய - பதிப்பித்த நூல்கள்


(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை)
நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்.
தந்தை பெரியார் கருத்தாளர் என்பது அறியப்பட்ட உண்மை என்றாலும், அவர் எழுத்தாளர் அல்லர் என்று சொல்ல முடியாது; அன்னை நாகம்மையார் மறைந்த போதும், ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்தபோதும் அவர் எழுதிய எழுத்துகள் இரங்கல் இலக்கிய வரலாற்றில் என்றென்றுமே பேசப்படும்.
தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட குடிஅரசு இதழின் 16 ஆம் ஆண்டு தொடக்க இதழில் (18.8.1940, பக்கம் 10) எழுதும் அவர் சிங்க நடை இதோ:
பயங்கரமான பாதை!
பயமா அது என்னை என்ன செய்யும்?
சறுக்கு நிலம்! சந்திரனில்லா இரவு!!
காலை ஊன்றி நடப்பேன்!
கண்ணை அகலத் திறந்து பார்ப்பேன்!
பசியும், தாகமும் வாட்டும்
கிடைத்ததைப் புசிப்பேன் -
புதர்களிலிருந்து பலர் வெளிவந்து தாக்குவர்!
நான் கோழையல்ல!!
உனக்கு முன் பலர் இப்படித்தான் சென்று மாண்டனர்!!
நானும் அந்த வழியே செல்லுகிறேன் உயிர் வெல்லமல்ல!
நீ வெற்றி பெறுவது கஷ்டம்!
நான் என் கடமையைச் செய்கிறேன்!
உருவகமாக எழுதப்பட்ட தந்தை பெரியாரின் இந்த எழுத்துக்களில் துடிக்கும் துணிவை, வீரத்தை மனக்கண் முன் காண்கிறோமே!
எதைச் சொன்னாலும், எழுதினா லும் அவை பெரியாரின் தனித் தன்மையான சுய சிந்தனைகளாகும்.
தன்னைப்பற்றி பெரியார் சொல் கிறார்:
நான் எனது கொள்கைக்கு - பேச்சுக்கு எந்த மேற்கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமை ஆகாது. ஆனால், நான் கூறிய கருத்துக்கு ஆதரவாக இன்னாரும் கூறியுள்ளார் என்று எடுத்துக்காட்ட வேண்டுமே அல் லாது, இன்ன இன்னார் இன்ன இன்ன கூறியுள்ளார் - ஆகவே நான் கூறுகிறேன் என்று எடுத்துக்காட்டக் கூடாது. (விடுதலை, 26.2.1961)
என்று கூறும் தன்னிலை விளக் கத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.
தந்தை பெரியார் அவர்களை அறிந்தவர்களுக்கு இச்சொற்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.
சென்னை சட்டக் கல்லூரியின் இயக்குநரும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஏ.எஸ்.பி. அய்யர் - தந்தை பெரியார் கலந்துகொண்ட சென்னை சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவுக்குத் தலைமை ஏற்றபோது சொன்ன கருத்துக் கணிப்பு முக்கியமானது (10.2.1960).
கீழை நாடுகளைப்பற்றி பெர்ட் ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற் கோள்காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல் தன் அறிவையே முன்னி றுத்திப் பேசும் தனித்த சிந்தனை யாளர் பெரியார் ஒருவர்தான் என்று குறிப்பிட்டார் நீதிபதி ஏ.எஸ்.பி. அய்யர் அவர்கள்.
திருக்குறளைப்பற்றி சொல்லும் பொழுதுகூட நான் சொன்ன கருத்தை திருவள்ளுவர் சொன்னார் என்று சொல்வாரே தவிர திருவள்ளு வர் கருத்தைத்தான் நான் சொல்லு கிறேன் என்று சொல்லமாட்டார் சிந்தனைச் சிற்பியான பெரியார்.
பேச்சு என்று எடுத்துக் கொண் டாலும், பெரியாருக்கு நிகர் பெரி யார்தான்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர் கள் மிக நேர்த்தியாக தந்தை பெரி யார் அவர்களின் பேச்சை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டும்தான் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடிவுமென்று தயங்காமல் கூறுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்று முணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக் கின்றனவோ நானறியேன் என்று தந்தை பெரியார் அவர்களின் பேச்சுக் குறித்து கல்கி கூறியுள் ளார்.
பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவசாலி பெரி யார்; 1925 ஆம் ஆண்டி லேயே குடிஅரசு இதழைத் தொடங்கி நடத்தியவர்; ஒரு கட்டத்தில் அனைத்தையும் அவரே எழுதிக் குவித்த நிலைகள் உண்டு.
அவரால் தோற்றுவிக் கப்பட்ட ஏடுகளின், இதழ் களின் பெயர்கள் தனித் தமிழ் மட்டுமல்ல; தனித்தன்மையும் கொண்டவையாகும்.
குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, உண்மை என்ற பெயர்கள் அதனைப் பறைசாற்றும்.
வணிக நோக்குக்காக அவர் ஏடு நடத்தியது கிடையாது. கருத்துப் பிரச்சாரம்தான் அதன் முதன்மையான நோக்கமாகும்.
நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்?
படிப்பு என்பது அறிவு உண்டா வதற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் மடமை வளர்ப் புக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம் மக்கள் பகுத்தறிவற்று இருக்கிறார்கள்...
நீங்கள் குடிஅரசு பதிப்பகப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதி ஆகிவிடு வீர்கள்.
இந்தப் புத்தகம் மதம், ஜாதி, நாடு, அரசியல் துறைகளில், அவற்றில் உள்ள புரட்டுகளை விளக்கி, உங் களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்கும். விலை மிகமிக மலிவுக்கு பொது நலத்தை முன்னிட்டு, நட்டத்திற்குப் பதிப்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் பெரியார் (1962).
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள் இன்றுவரைகூட இந்த அடிப்படைத் தடத்தில்தான் பயணிக் கின்றன.
கருத்துப் பிரச்சார இலாபம்தான் இந்த வெளியீடு களைக் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமாகும்.
பெரியார் அவர்கள் பொதுக்கூட் டங்களில் பேசி முடித்து, வாகனத்தில் ஏறும்போது அவர் கேட்கும் முதல் கேள்வி, இன்றைக்கு எவ்வளவு ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றன? என்பதுதான் அந்தக் கேள்வி.
பெருங்கூட்டம் இருந்து நூல்கள் விற்பனை குறைவாக இருந்தால், அவர் கருத்து பிரயோசனமற்ற கூட்டம்; மக்கள் கூட்டம் குறைவாக இருந்து நூல்கள் விற்பனை அதிகமாக இருந்தால், பயனுள்ள கூட்டம் என்பது அய்யாவின் கணிப்பு!
நூல்கள் பரவுதல் மூலம்தான் மக்கள் மத்தியில் கருத்துப் போய்ச் சேரும் என்பது பெரியார் அவர்களின் கருத்துக் கணிப்பாகும்.
இலட்சியத்தை நிறைவேற்றுவதில் பெரியார் கண்ட இயக்கத்தின் அணுகுமுறைதான் இரண்டு.
ஒன்று பிரச்சாரம் - மற்றொன்று போராட்டம். சுவர் கடிகாரத்தின் நடுத்தண்டு அசைவது போன்றது அது.
பெரியார் பேசி, எழுதி வெளிவந்த நூல்கள் நீண்ட பட்டியலுக்கு உரிய வையாகும்.
அறிவு விருந்து
கடவுள் மறுப்புத் தத்துவம்
வைக்கம் வீரர் சொற்பொழிவு
இராமாயண ஆபாசம் (முதற்பதிப்பு)
கர்ப்ப ஆட்சி
ஈ.வெ.ரா. இலங்கை உபந்யாசம்
ஈ.வெ.ரா. சீர்திருத்த மாநாட்டு உபந்யாசம்
சமதர்ம உபந்யாசம்
சோஷியலிசம்
சோதிடப் புரட்டு
பொதுவுடைமைத் தத்துவங்கள்
பெண் ஏன் அடிமையானாள்?
தமிழர் - தமிழ்நாடு - தமிழர் பண்பாடு
பிரகிருதிவாதம்
மதம் என்றால் என்ன?
குடிஅரசுக் கலம்பகம் (முதற்பாகம்)
சோதிட ஆராய்ச்சி
தமிழ்நாடு தமிழருக்கே!
திருவாரூர் மாநாட்டுத் தலைமையுரை
இனிவரும் உலகம்
இராமாயணப் பாத்திரங்கள்
தமிழ் இசை நடிப்புக் கலைகள்
கிராமச் சீர்திருத்தம்
உண்மைத் தொழிலாளி யார்?
தொழிலாளியின் இலட்சியம் என்ன?
இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து
தத்துவ விளக்கம்
விழாவும் நாமும்
தில்லையில் பெரியார்
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தது - ஏன்?
திராவிடர் கழக இலட்சியம்
திராவிடர் ஆரியர் உண்மை
மொழி - எழுத்து
தூத்துக்குடி மாகாண மாநாட்டுத் தலைமை உரை
இந்திப் போர் முரசு (பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் தலைவர்கள்)
மொழியாராய்ச்சி
திருக்குறளும் திராவிடர் கழகமும்
மேல்நாடும் கீழ்நாடும்
புரட்டு, இமாலயப் புரட்டு!
புரட்சிக்கு அழைப்பு
முதலாளி தொழிலாளி ஒற்றுமைப் பிரச்சினை
சிந்தனைத் திரட்டு
கடவுள்
புராண ஆபாசங்கள்
அய்க்கோர்ட் அவதூறு வழக்கில் பெரியார் ஸ்டேட்மெண்ட்டும் தீர்ப்பும்
சித்திரபுத்திரன் எழுதுகிறார்
போர்ச் சங்கு
வெளியேறு!
நாடகமும், சினிமாவும் நாட்டை நாசமாக்குகின்றன
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
வாழ்க்கைத் துணைநலம்
நீதி கெட்டது யாரால்?
சித்திரபுத்திரன் கட்டுரைகள்
ஜனநாயகம்
அறிவுச் சுடர்
வாழ்க்கைத் துணைநலம்
தாய்ப் பால் பைத்தியம்
ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்
அய்க்கோர்ட்டின் நீதிப்போக்கு (இரு பாகங்கள்)
தமிழ்நாடா? திராவிட நாடா?
மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி
ஆச்சாரியார் ஆத்திரம்
தீண்டாமையை ஒழித்தது யார்?
மறுத்தலும் பகுத்தறிவும்
கழகமும் துரோகமும்
புராணம்
மதுவிலக்கின் இரகசியங்கள்
தமிழருக்குச் சோதனை காலம்
ஏன் இல்லை - எல்லோருக்கும் கல்வி, உணவு, உடை, வீடு?
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி
அறிவுச் சுடர்
மதச் சார்பின்மையும், நமது அரசும்
கடவுளும், மனிதனும்
கடவுள் குழப்பம்
நமது இன்றைய நிலையும் - பரிகாரமும்
புத்த நெறி
சுயநலம் பிற நலம்
கடவுள் ஒரு கற்பனையே!
பெரியார் பேசுகிறார்
கோயில் பகிஷ்காரம் ஏன்?
உயர் எண்ணங்கள்
பெரியாரின் மரண சாசனம் (இறுதிச் சொற்பொழிவு) - என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
பெரியார் பதிப்பித்த நூல்கள்
ஞானசூரியன்
இந்தியாவின் குறைபாடுகள் Temple Entry (English)
லெனினும் மதமும்
கடவுளும், பிரபஞ்சமும்
கைவல்யம் அல்லது கலைக்கியானம்
இராமாயண ஆராய்ச்சி
பாரத ஆராய்ச்சி
மேயோ கூற்று மெய்யா, பொய்யா?
இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு
சுயமரியாதைப் பாடல்
சுயமரியாதைத் தாலாட்டு
பர்னாட்ஷா உபந்யாசம்
போல்ஷ்விக் முறை
மதப் புரட்சி (ஜோசப் மெக்கேல் - மொழி பெயர்ப்பு)
முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை
மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன?
பாதிரியும், பெண்களும், பாவமன்னிப்பும்
மதமும் விஞ்ஞான சாஸ்திரமும்
பிரபஞ்ச உற்பத்தி
நான் ஏன் கிறிஸ்தவனல்ல? (ரசல் - மொழி பெயர்ப்பு)
நான் சம்சயவாதி ஆனதேன்? - இங்கர்சால்
பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்? (ப. ஜீவானந்தம் மொழி பெயர்ப்பு)
பகுத்தறிவு அல்லது கத்தோலிக்க குருவின் மரண சாசனம் (மூன்று பாகங்கள்)
கைவல்ய சுவாமியார் கட்டுரைகள் (இரண்டு பாகங்கள்)
தமிழர் தலைவர் (பெரியார் வரலாறு)
சாதிக் குறி (தமிழ்)
Caste Mark 111  (ஆங்கிலம்)
Periyar - A Pen Portait (English)
பிர்லா மாளிகை மர்மங்கள்
சாதியை ஒழிக்க வழி
அப்பரும் சம்பந்தரும்
லெனினும் மதமும்
மார்க்ஸ் - ஏஞ்சல்ஸ் அறிக்கை
பொதுவுடைமை வினா-விடை
பலசரக்கு மூட்டை (குத்தூசி தொகுப்பு நூல்கள் - இரு பாகங்கள்)
அகத்தியர் ஆராய்ச்சி
மெய்ஞானமுறையும் மூட நம்பிக்கையும் (2 பாகங்கள்)
பெரிய புராண ஆராய்ச்சி
கோயில்கள் தோன்றியது ஏன்?
திருக்குறளும் - பெரியாரும்
நரகம் எங்கே இருக்கிறது?
கடவுள் தோன்றியது எப்படி? (இரண்டு பாகங்கள்)
கடவுளர் கதைகள்
உண்மை இந்து மதம் எது?
பேய் - பூதம் - பிசாசு
இரண்டு வழிகள்
பெரியார் ராமசாமி அவர்களைப் பற்றி....
மதப் புரட்சி
ஊழல் எங்கே? (நகர்வாலா மோசடி)
பகுத்தறிவு மணம்
கலியுக சமாதானம்
நமது குறிக்கோள்
இங்கர்சாலின் ஜீவிய சரித்திரம்
இந்தி எதிர்ப்புப் பாடல்கள்
காரல் மார்க்ஸ்
பஞ்சமா பாதகங்கள்
இராவணப் பெரியார்
சமதர்மக் கீதங்கள்
வால்டையரின் வாழ்க்கைச் சரிதம்
விவாக விடுதலை
இந்திய மாதா
இங்கர்சால் பொன்மொழிகள்
புராண ஆபாசங்கள்
கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?
கோவில் பூனைகள் (கோவை கிழார்)
நமக்கு வேண்டியது எது? சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா? (மூன்று பாகங்கள்)
பெரியாரும் - இராமலிங்கரும்
பெரியார் ஒரு சகாப்தம்
கடவுள் தோன்றியது எப்படி?
(ஆங்கிலத்தில் கிராண்ட் ஆலன் தமிழில் பேராசிரியர் வெள்ளையன் மொழி பெயர்ப்பு)
இன்னும் ஏராளம் உண்டு.
ஓர் இயக்கத்தின் கொள்கையைப் பரப்புவதற்காக ஒரு நிறுவனத்தை நிறுவி அவற்றின் சார்பாக வெளியீடு களைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் பரப்பும் பணியைத் திட்ட மிட்டுச் செய்த ஏற்பாடு தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தான தாகும். அவர் செய்து வைத்த ஏற் பாடுகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றன - மேலும் செழுமைப்படுத்தப்பட்டும் உள்ளன.
தந்தை பெரியார் அவர்களின் வெளியீடுகள் இரண்டு வகை யானவை. உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக்கவிஞரால் போற்றப் பெற்ற பெரியார் அவர்களின் சுயசிந்தனைக் கருத்துக்களைக் கொண்டவை ஒருவகை.
எடுத்துக்காட்டாக, தத்துவ விளக்கம், மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதவாதம், இனிவரும் உலகம் போன்றவை.
சோதனைக் குழாய்க் குழந்தை யைப்பற்றி  விஞ்ஞானிகள்கூட கற் பனை செய்திராத காலகட்டத்தி லேயே 1938இல் சிந்தித்துச் சொன்ன சமூக விஞ்ஞானி - தொலைநோக் காளர் பெரியார்.
இன்னொரு வகை நூல்கள் - எதிரிகளின் ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆதாரங்களைக் கொண்ட நூற்கள்.
எடுத்துக்காட்டாக தந்தை பெரி யார் அவர்களின் இராமாயணப் பாத் திரங்கள் மற்றும் இராமாயணக் குறிப் புகள். இதுவரை 50-க்கும் மேற்பட்ட பதிப்புகளாக இலட்சக்கணக்கில் மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. இந்தியிலும், ஆங்கிலத்திலும், மராட் டியத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளன.
இந்த நூலில் காணப்படும் ஆதா ரங்களை மூல நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி கூட்டங்களில் பெரியார் பேசுவார். அதன் விளைவு என்ன தெரியுமா? அந்த மூல நூல்களி லிருந்து அடுத்த பதிப்பில் மாற்றம் செய்யப் பட்டதும் உண்டு. அந்த மாற்றம் செய்யப் பட்ட நூல்களையும் பொதுக்கூட்ட மேடை களில் எடுத்துக்காட்டுவார்.
லாகூரில் ஜாட்-பட் தோடக் என்னும் ஜாதி ஒழிப்புச் சங்கம் நடைபெற்றது. அவர்கள் நடத்த இருந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும்படி அண்ணல் அம்பேத்கர் கேட்டுக்கொள்ளப் பட்டார். தலைமை உரையை எழுதி அனுப் பினார் அம்பேத்கர். அதில் கண்டுள்ள சில பகுதிகளை நீக்கி விடுமாறு அச்சங்கத் தார் கேட்டுக் கொண்டனர். அம்பேத்கர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தத் தலைமை உரையை, அம்பேத்கர் அவர் களிடமிருந்து ஜாதியை ஒழிக்கும் வழி என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் பெரியார். முதல் பதிப்பு 1936. பதினாறாம் பதிப்பாக 2010 இல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
அம்பேத்கரின் கருத்துகள் தமிழ் நாட்டில் பெரும் அளவு பரவியதற்கு இந்நூல் முக்கிய காரணமாகும்.
இதழ் நடத்துவதில் பெரியார் கையாண்ட அறிவு  நாணயம் சாதாரணமானதல்ல.
திராவிடன் இதழுடன் குடிஅரசு இதழையும் தொய்வில்லாமல் கவனித்து வந்தார் பெரியார். குடிஅரசு விற்பனை வாரம்தோறும் பதினாயிரமாக உயர்ந்தது. அதனையும் அத்துடன் சேர்த்துத் திரா விடன் நாளிதழையும் அச்சிட வேண்டியி ருந்ததால், குடிஅரசு இதழின் பக்கங்கள் 16 ஆக குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. இதனால் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடுவது பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக விளம்பரங்களைப் பாதி அளவாகக் குறைத்துக் கொண்டு விளம்பரம் தந்தவர்களுக்குப் பெரியார் வருத்தம் தெரிவித்தார். பெரியாரின் தொழில் நேர்மைக்கு இது ஒரு சான்று. விஷயங்களை நிறைவாகத் தரவேண்டும் என்பதற்காக யார்தான் விளம்பரங்களின் மூலம் வரும் வருமானத்தை இழக்க முன் வருவார்கள் தந்தை பெரியாரைத் தவிர?
ஏடுகளை நடத்தும்போது எந்த வகை யிலும் கொள்கை சமரசத்துக்கு இடம் தந்தவரல்லர் பெரியார் -அதுபற்றி அவர் என்ன சொல்லுகிறார்?
தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக்கொள்ளா விட் டாலும், நாளை ஒரு நாள் ஏற்றுக்கொள் ளும் நிலை வரும். இக்கருத்துகளை சொல்லும் நிலையில், நான்தான் இருக் கிறேன். சொல்லவேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள் ளும் நிலைக்குப் போனாலும் குடிஅரசை வெளியிட்டு, என் கருத்துகளை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை (குடிஅரசு, 10.6.1929) என்று கூறும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இதழாளர் உலகிலும் - எவரும் நெருங்க முடியாத உயரத்தில் உயர் பண்புகளின் பெட்டகமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.
அவர்தம் 38 ஆம் ஆண்டு நினைவு நாளில் அம்மாபெரும் புரட்சியாளரின் சிந் தனைகளை வாசிப்போம் - சுவாசிப்போம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!








கவிஞர் கலி. பூங்குன்றன், 

பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்
- விடுதலை வலைபூ