ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பெண்குல விளக்கு நீலாவதியார்


நூல்: பெண்குல விளக்கு நீலாவதியார்
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
சுயமரியாதை இயக்கம் கடந்த கரடுமுரடான பாதை!
(அக்காலத்தில் சுயமரியாதை இயக்கம் பட்ட துன்பங்கள் பற்றி விவரிக்கும் ஒரு நூலிலிருந்து)
இராம சுப்பிரமணியமும் அவர் துணைவியார் நீலாவதி அம்மையாரும் நடத்தி வந்த சங்கங்களில் குறிப்பிடத்தக்கவை, கலப்பு மணச் சங்கம். விதவை மறுமணச் சங்கம் ஆகியவை ஆகும்.
இந்த சங்கங்களின் பணிபற்றி அப்போது குடிஅரசு, பகுத்தறிவு பத்திரிகைகளில் நிறையச் செய்திகள் வரும்.
திருவண்ணாமலையை அடுத்த பேராயம்-பட்டு என்ற ஊரைச் சேர்ந்த ரெங்கம்மாள் இந்தப் பத்திரிகைகள் வாயிலாக அந்தச் சங்கங்களின் அரிய சேவைகளை அறிந்து வந்தார். ரெங்கம்மாள் ஓர் இளம் விதவை. ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். ஆசிரியைக்காக படித்தவர்.
இவர் தன் வாழ்க்கை நிரந்தர இருளில் மூழ்குவதற்குப் பதிலாக, இந்தச்  சங்கங்களின் உதவியால் தகுந்த மணாளனை தேர்ந்தெடுத்து புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்க விரும்பினார். ஆனால், அவருடைய உற்றார் உறவினரும் சுற்றத்தாரும் பழைய மரபுகளில் ஊறிப் போனவர்களாய் இருந்தார்கள்.
எனவே, தனது கருத்தை சொந்த வீட்டுக்குள்ளேயே வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்த ரெங்கம்மாள். தனது படிப்பறிவின் துணை கொண்டு, இராம.சுப்பிரமணியம் தம்பதிகளுடன் கடிதத் தொடர்பு கொள்ளலானார்.
ரெங்கம்மாளின் மனநிலையை தெளிவாகப் புரிந்துகொண்ட நிலையில் இவர்களும், அவரைத் தைரியமாக இருக்கும்படியாகவும், அவருக்குப் புனர் வாழ்வு தேடித் தருவதாகவும் பதில் அனுப்பி வந்தார்கள்.
ஒரு நாள் குடும்பத்தினருக்கு ரெங்கம்மாளின் இந்தக் கடிதப் போக்குவரத்து தெரியவந்தது. அவ்வளவுதான் கடும் வார்த்தைகளினாலும் நடவடிக்கைகளினாலும் அவரை இம்சிக்கத் துவங்கினார்கள்.
இந்நிலையில் ஒருநாள் இராம சுப்பிரமணியம் தம்பதிகள் அந்தப் பெண்ணை நேரில் சந்தித்துப் பேசவிரும்பி, அவருடைய சொந்த ஊரான பேராயம்பட்டுக்கே புறப்பட்டுப் போனார்கள். ரெங்கம்மாள் வீட்டில் அவருடைய மறுமணத்திற்கு கடுமை-யான எதிர்ப்பு இருப்பதை அறிந்திருந்த அவர்கள், திருச்சி அருகே ஒரு ஆசிரியை வேலைக்காகவே ரெங்கம்மாளைப் பார்க்க வந்ததாக அவருடைய இல்லத்தாரிடம் கூறினார்கள்.

ஆனால் ரெங்கம்மாள் நடவடிக்கையில் ஏற்கனவே சந்தேகப்பட்டிருந்த அந்த வீட்டார் இவர்களை நம்பவில்லை! சந்தேகமாகவே துருவித் துருவிப் பேசி கடைசியில் உண்மையையும் அறிந்து கொண்டுவிட்டார்கள்.
அவ்வளவுதான் இராம சுப்பிரமணியம் தம்பதிகளை அடித்து உதைத்து அவமானப்-படுத்த முஸ்தீபு செய்துவிட்டார்கள்.
நல்லகாலமாக இந்தத் தம்பதிகள் சாதுர்யமாக அங்கிருந்து நழுவி வெளியேறி-விட்டார்கள். ஆனாலும், அப்படியே அந்த ஊரைவிட்டு வந்துவிட இந்தத் தம்பதியருக்கு மனமில்லை.
ஒரு அபலைப் பெண்ணை மீட்டு அவளுக்கு வாழ்வு தரும் கடமைதங்களுக்கு இருக்க அதை மறந்து ஓடுவதா என்று அந்நிலையிலும் எண்ணினார்கள்.
எனவே அந்த ஊரில் ரெங்கம்மாள் உறவினர் அல்லாத வேறு யாருக்காவது அந்த அம்மாளைப் பற்றி தெரிந்திருக்குமா என்று யோசித்து அங்கே இங்கே சிலரை சந்தித்தார்கள். கடைசியாக ஒரு பெட்டிக் கடைக்காரர் இவர்களுக்கு உதவியாக அமைந்தார். அவர் கிட்டத்தட்ட ரெங்கம்மாள் வீட்டு விவரங்களை அறிந்திருந்தார்.
நீங்க ரெண்டு பேரும் அந்த வீட்டுக்கு நேரிலே போனதே தப்பு! அவங்க முரட்டு ஆளுங்க. ஏதோ நீங்க தப்பிச்சு வந்தது பெரிய விஷயம் என்று கூறிய அந்தப் பெட்டிக் கடைக்காரர் இன்னொரு முக்கியத் தகவலையும் தந்தார்.
வீட்டார் கொடுமை தாங்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்ட ரெங்கம்மாள் சென்னை போய்விட்டதாகவும், அங்கே ஏதோ அனாதை ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டதாகவும் தனக்கு நம்பகமான இடத்துத் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
அதைக் கேட்ட இராம சுப்பிரமணியம் தம்பதிகள் உடனே சென்னை பயணமானார்கள். அங்கே இங்கே என்று பல அனாதை ஆசிரமங்களை அணுகிவிட்டு, கடைசியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் சிஸ்டர் சுப்புலட்சுமி அம்மாள் நடத்தி வந்த ஆசிரமத்தில் ரெங்கம்மாள் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.
அங்கே சுப்புலட்சுமி அம்மாள் உதவியுடன் ரெங்கம்மாளை சந்தித்து எல்லா விஷயங்களையும் பேசினார்கள்.
ஏற்கனவே இராம சுப்பிரமணியம் தம்பதிகள் ரெங்கம்மாளின் மறுமணத்திற்காக செட்டிநாட்டைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரை மணமகனாகப் பார்த்து முடிவு செய்திருந்தார்கள்.
சிதம்பரம் ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்தவர்.
கிட்டதட்ட நாற்பது வயது ஆனவர். அவர் முதல் மணத்தில் பிறந்த மகனுக்கு திருமணம் ஆகி, சிறிது காலத்தில் அந்த மகன் காலமாகிவிட்டதால், மருமகள் விதவையாகப் பிறந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
வேறு யாரும் துணை இல்லாத சிதம்பரம் மறுமணத்திற்குத் தயாராக இருந்ததால், ரெங்கம்மாளின் நிலைமை, வயது எல்லாம் அவருக்குப் பொருத்தமே என்று இவர்கள் முடிவு செய்திருந்தார்கள்.
எனவே அந்த மாப்பிள்ளை பற்றி எல்லா விவரங்களையும் ரெங்கம்மாளிடம் எடுத்துக் கூறி அவருடைய சம்மதத்தைப் பெற்றார்கள். அத்துடன் ரெங்கம்மாளை அந்த விடுதியிலிருந்து அழைத்துச் சென்று குஞ்சிதம் குருசாமி (குத்தூசி குருசாமி துணைவியார்) இல்லத்தில் சிலநாள் வைத்திருந்தார்கள்.
பிறகு ரெங்கம்மாளை திருச்சிக்கு அழைத்து வந்து அங்கே அவருக்கும், சிதம்பரத்திற்கும் பெரியார் தலைமையில் சீர்திருத்த மணத்தையும் இராம சுப்பிரமணியம் தம்பதிகள் முன்னின்று நடத்தி வைத்தார்கள்.
சிதம்பரம் ரெங்கம்மாள் வாழ்க்கை இனிது நடந்து வந்தபோது, எதிர்பாராமல் ஒரு வழக்கு வந்து சேர்ந்தது.
சிதம்பரத்தின் மருமகள் தன் மாமனாரின் சொத்து முழுவதும் தனக்கே சேர வேண்டும் என்றும், தன் மாமனார் செய்துகொண்ட திருமணம் சட்டப்படி செல்லாதென்றும் வழக்கு கொடுத்திருந்தார்.
இந்த வழக்குக்கு சிதம்பரம் தம்பதிகள் சார்பான முக்கிய சாட்சிகளாக இராம. சுப்பிரமணியமும் நீலாவதி அம்மாளும் ஆஜர் ஆனார்கள்...
செட்டியார் வகுப்பைச் சேர்ந்த சிதம்பரம் யாரோ இன்னொரு வகுப்பைச் சேர்ந்த விதவையான ரெங்கம்மாளை மணந்தது சட்டப்படி செல்லாது என்று இவர்களுக்கு எதிராக வழக்காடப்பட்டது.
எனவே வழக்கு மன்றத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் இராம. சுப்பிரமணியம் தம்பதிகளை இந்தக் கோணத்திலேயே கேள்விகள் கேட்டு மடக்க முயன்றார்.
செட்டிநாட்டில் விதவா மணம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றா? இது வழக்கறிஞர் கேள்வி.
விதவா மறுமணத்தை சட்டம் அங்கீகரிக்கிறது. அதுதான் எங்களுக்குத் தெரியும். இது இராம சுப்பிரமணியம் தம்பதியர் பதில்...
சிதம்பரம், ரெங்கம்மாள் திருமணத்தில் தாலி கட்டப்பட்டதா? வழக்கறிஞர் கேள்வி!
இல்லை! இது இவர்கள் பதில்!
ஏன்?
கோவலன் திருமணத்தில் அவனும் கண்ணகியும் மாலை மாற்றி மணம் செய்த கொண்டதாகத்தான் கூறப்பட்டிருக்கிறது. அவன் தாலி கட்டியதாக தகவல் இல்லை. அந்த மணத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா? இது வழக்கறிஞரை மடக்க இந்தத் தம்பதியரின் எதிர் கேள்வி!
கோவலன் கதையை விடுங்கள். இப்போது நடைமுறையில் யாரேனும் தாலிகட்டாமல் மணம் செய்து கொண்டிருக்கிறார்களா?
இந்தக் கேள்விக்கு இவர்கள் ஏன் நாங்களே செய்துகொண்டிருக்கிறோமே என்றார்கள்.
அத்துடன் தங்கள் மணம் தாலி கட்டாமல் நடந்தது மட்டுமல்ல... கலப்பு மணமும்கூட... என்பதையும் இந்தத் தம்பதியர் எடுத்துக் கூறினார்கள்...
செட்டி நாட்டவர் கலப்பு மணத்தை ஏற்கிறார்களா? என்று வழக்கறிஞர் கேட்டார்...
இப்போதைய செட்டிநாட்டவரின் மூதாதையர் கலப்பு மணத்தால் வம்சவிருத்தி செய்து கொண்டவர்கள்தான்... 500 ஆண்டுகளுக்கு முன் சோழநாட்டிலிருந்து வெளியேறிய 150 வணிகச் செட்டியார் பாண்டியனிடம் வந்து தாங்கள் குடியேற இடம் கேட்டபோதுதான் அவர் இன்றைய செட்டிநாட்டுப் பகுதிகளை அவர்களுக்காக ஒதுக்கித் தந்தார்... பெண்டு பிள்ளைகள் இல்லாமல் அந்த 150 பேரும் ஆடவர்களாகவே பாண்டி நாட்டில் வந்து குடியேறியதால், அன்று அந்தப் பகுதியில் வாழ்ந்த வேளாள குலப்பெண்களை மணந்துகொண்டார்கள். அதன் காரணமாகவே வெகுகாலம் செட்டியார் குலம் சைவ உணவை மட்டும் உட்கொள்பவர்களாக இருந்து வந்துள்ளது...
என்று இந்தத் தம்பதியர் பழைய வரலாற்று ஆதாரங்களை எடுத்துப் பேசவே எதிர்தரப்பு வழக்கறிஞர் திணறிப்போனார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் வரை வந்து முடிவில் சிதம்பரம் ரெங்கம்மாள் தம்பதிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.
அதன் பலனாய் அவர்கள் மணம் ஒப்புக் கொள்ளப்பட்டதுடன் சிதம்பரத்திற்கு மலேசியாவில் இருந்து பல இலட்ச ரூபாய் சொத்துக்களும் சேதாரமின்றி அவருக்கே கிடைத்தன.
இந்தத் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள். இவர்களில் மூத்தவரான மோகனா அம்மையாரைத்தான் பிற்காலம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டார்.

-உண்மை இதழ்,16-30.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக