சனி, 11 ஆகஸ்ட், 2018

சுயமரியாதை உதயம்

பெண்கள் சுதந்திரம்


21.06.1931 - குடிஅரசிலிருந்து...

சொத்து உரிமை

மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்.

கல்யாண ரத்து: பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்டமில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமையின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ளவர் களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப்படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப் படாதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம்.  இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது. செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமுகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது  என்று சொல்லிக் கொண்டிருப் பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம்.

திராவிடச் சமுதாயத்திற்குச் சிறப்பாகத் தமிழ் மக்களுக்கு இன்று சமயம் இல்லை; வேத சாத்திரங்கள் இல்லை. அவை மாத்திரம் அல்லாமல் கடவுளும் இல்லை. கண்டிப்பாக இல்லை. அப்படி இருந்தும் திராவிடன் சமயத்துறையில் மேற்கண்டவைகள் பேரால் கீழ்மகன், - சூத்திரன், சூத்திரச்சியாக இருந்துகொண்டு பெருந் தொல்லைகளையும் ஏழ்மையையும் அனுபவித்துக் கொண்டு காட்டுமிராண்டியாய் இருந்து வருகிறான். பூசைக்கும் பூச்சுக்கும் அளவில்லை; கோவில் குளத்திற்கும் கணக்கு இல்லை; அவை களுக்காகச் செலவாகும் பணம், நேரம், ஊக்கம் ஆகியவைகளுக்கும் எல்லை இல்லை.


- தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 11.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக