ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

தஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா !

பெரியாரின் சாதனை கண்ணெதிரே பலன் தருவதைக் காண்கிறேன்!

அய்யாவின் அடிச்சுவட்டில் 162

கடந்த செப். 15, 16, 17 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா - இயக்க வரலாற்றில் புதிய எழுச்சிக் காவியத்தை உருவாக்கிவிட்டது!
கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாய் நிகழ்ச்சியில் குவிந்திருந்தனர். தஞ்சை நகரம் முழுதும் திரும்புமிடமெல்லாம் கருஞ்சட்டைக் கடலாகவே காட்சி அளித்தது. தஞ்சை நகரமே கருப்பு அலையில் மூழ்கித் திளைத்தது.

முதல்நாள் நிகழ்ச்சியிலேயே பந்தல் முழுதும் மக்கள் திரள் நிரம்பி வழிந்தது.
நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு நிறைவு விழாவினை தஞ்சைத் தலைநகரில் நடத்திட திட்டமிட்டு பணிகள் துவங்கிவிட்டன என்பதின் துவக்கமாக ‘வழிநடைப் பிரச்சாரத் திட்டம்’ வகுக்கப்பட்டு, தந்தை பெரியார் தம் நூற்றாண்டில் அவர்களது உயிர்க் கொள்கைகளான ஜாதி ஒழிப்பு, வகுப்புரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றிய கொள்கைப் பிரச்சாரத்தினை நாடு முழுவதும் தழுவியதாக செய்திட, நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி கன்னியாகுமரி (தென்எல்லை) யிலிருந்தும், சென்னை-யிலிருந்தும், திருத்தணி வட்டத்திலிருந்தும் முப்பெரும், “வழிநடைப் பிரச்சாரப் பெரும்படைகள்’’ புறப்பட்டு, நடந்தே வழியெங்கும் பிரச்சாரம் செய்துகொண்டே விழா நிறைவில் தஞ்சையில் வந்து கலந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு படையிலும் தலைவர், தளபதி தவிர மற்றும் சுமார் 20 முதல் 25 பேர் கருஞ்சட்டை வீரர்கள் அணிவகுத்து கொள்கைப் பிரச்சாரத்தினை நிகழ்த்திக்கொண்டு வந்தார்கள். முதன்மையான இடங்களில் கழகத் தோழர்கள் மேடையமைத்து பிரச்சாரப் படையினரை பிரச்சாரம் செய்யச் செய்தனர்.
தந்தை பெரியார் தம் கொள்கைகளை, நாடெங்கும் பரப்பும் பணியிலும், திரிபுவாதத் திசை திருப்பல்கள் அக்கொள்கைகளைக் குழிதோண்ட தற்போது ஏற்பட்டுள்ள புதிய சவால்கள் ஆகியவற்றுக்கிடையில் இப்பிரசாரப் படைகளின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
மூன்று முனையிலிருந்து கருஞ்சட்டை வீரர்களின் வழிநடை பிரச்சாரப் படை நடைப் பிரச்சாரத்தை, திருத்தணி வட்டம் பொதட்டூர்-பேட்டையிலிருந்து ஒரு படையும், இந்த படைக்கு, வடஆற்காடு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆம்பூர் பெருமாள் அவர்கள் தலைவராகவும், வடஆற்காடு மாவட்ட திராவிடர் கழகத் துணைத்தலைவர் திருவத்திபுரம் கோமகள், வடஆற்காடு மாவட்ட மாணவரணி செயலாளர் கே.சி.அழகிரி, சேலம் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆத்தூர் வானவில் ஆகியோர் படை முன்னவர்களாகவும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, படையை துவக்கிவைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில துணைப் பொதுச்செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் பொதட்டூர் பேட்டையிலிருந்து இப்படையை எனது தலைமையில் துவக்கி வைத்தார்.
சென்னையிலிருந்து புறப்படும் படையை வண்ணாரப்பேட்டையில் கலைஞர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்தப் படை தஞ்சையிலே அய்யா விழாத் துவங்கும் செப்படம்பர் 15ஆம் தேதி வந்து சங்கமமானது.
“மாநிலம் முழுவதும் உள்ள கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்’’ என்று ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா தஞ்சை மாநகரிலே, அனைத்துச் சிறப்புகளுடனும், சுயமரியாதை இயக்கத்தின் குடும்ப விழாவாக, பகுத்தறிவுக் கொள்கை குடும்பங்களின் சங்கமமாக, மிகப் பெரிய அளவில் திட்டமிட்டுச் சிறப்புடன் நடக்க இருப்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.  விழாவில், அய்யா அவர்களின் நூற்றாண்டைக் கணக்கிட்டு, எனக்கு நூறு பவுன் அன்பளிப்பாக வழங்கிட முடிவு செய்து இருந்தார்கள். அளிக்கப்படும் அன்பளிப்பு எனக்காக இல்லை. நமது நிறுவனத்திற்கு, அதன் வழியாகச் செய்யப்பட இருக்கும் அரும்-பணிகளுக்கு ஆகும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
நூறு பவுன் எனக்கு வழங்க தஞ்சை மாவட்ட தோழர்களின் பெரும்பங்கோடு, மற்ற மாவட்டங்களில் உள்ள இயக்கப் பெரியோர்-களும், இன உணர்வு கொண்டவர்களும், பகுத்தறிவு இலட்சியம் கொண்டவர்களும், அன்புடனும், உரிமையுடனும்  தங்களது நிதியை வழங்கினார்கள்.
இந்த நற்பணியில் ஈடுபடுவதற்கு என்றே பொருளாளர் திரு.கா.மா.குப்புசாமி அவர்கள் தலைமையில் குழு அமைத்துச் செயல்பட்டனர்.
தஞ்சை மாநகரில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழா செப்டம்பர் 15, 16, 17 நாள்களில் நடந்தது. 15.9.1979 முதல் நாள் முதல் நிகழ்வாக வழிநடைப்படை வீரர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா தொடங்கியது.
மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.ராமசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
மலேசியாவில் அமைச்சராக இருக்கும் டத்தோ பத்மநாபன் அவர்களும், சாமிவேலு அவர்களும் மலேசிய திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் உதவி ஆற்றி வருவதை நன்றியுடன் குறிப்பிட்டு, மலேசிய அமைச்சர் பத்மநாபன் அவர்கள் தஞ்சை விழாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியை விளக்கிக் குறிப்பிட்டார். “தந்தை பெரியார் லட்சியங்கள் பரவாமல் இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் அமைச்சர்களாகவே வந்திருக்க முடியாது’’ என்று வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் பத்மநாபன் குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பகுத்தறிவு கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சை பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரத்தினகிரி வரவேற்புரையாற்ற, சென்னை பகுத்தறிவாளர் கழக தலைவர் பகீரதன் தலைமையில் அன்பில் தர்மலிங்கம் கண்காட்சியைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து பட்டிமன்ற நிகழ்ச்சிகள் துவங்கின! கீழத் தஞ்சை மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி சுப்புலட்சுமிபதி வரவேற்புரையாற்றினார். பெண் ஏன் அடிமையானாள்? பொருளாதாரத்தினாலா? கட்டுப்பாட்டினாலா? என்ற கருத்தாழமிக்க பட்டிமன்றத்துக்கு பேராசிரியர் திருமதி சக்திபெருமாள் நடுவராக இருந்தார். சமுதாயக் கட்டுப்பாடே என்ற அணியில் பேராசிரியர் சக்குபாய், க.சுசிலா, புலவர் ஜெயலட்சுமி ஆகியோரும் பொருளாதாரக் கட்டுப்பாடே என்ற அணியில் புலவர் கண்மணி, ராசம் துரைபாண்டியன், ஜெயா கோபால் ஆகியோரும், சிறப்பாக வாதிட்டனர். இறுதியில் பொருளாதாரக் ‘கட்டுப்பாடே’ என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார். மேலத் தஞ்சை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி சரசுவதி பழனி நன்றி கூறினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு ஜனதா கட்சி செயலாளர் ரமணிபாய் சிறப்புரையாற்றினார். தனது உணர்ச்சிமிக்க உரையில் பெண்கள் அடிமைத் தனத்தை வலியுறுத்தும் சகல அமைப்புகளையும் தகர்த்து எறிவோம் என்று முழக்கமிட்டார்.
தொடர்ந்து நான் பேசுகையில், பல்வேறு பகுதியினருக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் பெண்களுக்கு என்று தனியாக இங்கே இடம் ஒதுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட ஒதுக்கீட்டிற்கு இங்கே தேவை இல்லை; இனிமேல் ஆண்களுக்கு தனி இடம் உண்டு என்று சொல்லப்படும் காலம் வரத்தான் போகிறது என்று குறிப்பிட்டேன்!
கோயிலுக்குள்ளே இருக்கும் ஆபாசங்களை எதிர்த்து பெண்கள் போராட வேண்டும் என்று ரமணிபாய் குறிப்பிட்டது பற்றி நான் குறிப்பிடுகையில், வரும் ஆண்டு கழகத்தின் செயல்திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றும், பெண்கள் சமுதாயம் இத்தகைய கிளர்ச்சியில் ஈடுபட்டால், திராவிடர் கழகம் அதற்கான உதவிகளை முன்னின்று செய்யும் என்ற அறிவிப்பை பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தேன். தொடர்ந்து கே.ஆர்-.குமார் அவர்களின் மந்திரமா -_ தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.
கழக இளைஞரணியைச் சார்ந்தவரும் சென்னையிலிருந்து கிளம்பிய வழிநடை பிரச்சாரப்படை வீரர்களில் ஒருவராக இருந்தவருமான மஞ்சைவசந்தன் எம்-.ஏ. அவர்கள் எழுதிய “அர்த்தமற்ற இந்து மதம்’’ நூலை மாநாட்டில் வெளியிட்டேன்.
முதல் படியை, இளைஞரணிச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து கவியரங்கம் துவங்கியது. தஞ்சை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பசு.கவுதமன் தனது வரவேற்புரையை கவிதையாக வடித்தார். பெரியார் பெரும் தொண்டர் கவிஞர் கருணானந்தம் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து தனது உணர்ச்சிக் கவிதைகளைப் படித்தார். உவமைக் கவிஞரும், நாத்திகக் கவிஞருமான சுரதா, கவியரங்கத்திற்கு தலைமை ஏற்றார். தந்தை பெரியார் தமிழருக்கு... என்ற பொதுத் தலைப்பில், உயிர் போன்றார் என்ற தலைப்பில் கவிஞர் கலி.பூங்குன்றன், பால் போன்றார் என்ற தலைப்பில் புலவர் பழம் நீ, தாய் போன்றார் என்ற தலைப்பில் புலவர் தொல்காப்பியனார், பயிர் போன்றார் என்ற தலைப்பில் அரிமதி தென்னகன் ஆகியோரும், தந்தை பெரியாரும் தமிழும் என்ற தலைப்பில் கவிஞர் தஞ்சைவாணன் அவர்களும் தங்கள் உணர்ச்சிக் கவிதைகளைப் படித்து அரங்கத்தைக் களைகட்டச் செய்தனர்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை ஒரு அறக்கட்டளை நிறுவனமாகவே வருமான வரித்துறை அங்கீகரிக்க மறுத்து, பல லட்சம் ரூபாய் வருமான வரியை விதித்து இடைவிடாது தரப்பட்ட தொல்லைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, பிரச்சார நிறுவனத்துக்காக மிகவும் அரும்பாடுபட்ட, வழக்கறிஞர் உத்தம் ரெட்டி, ஆடிட்டர் சுரேந்திரன் ஆகியோருக்கு இயக்கத்தின் சார்பில் நன்றி பாராட்டு   தெரிவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
உத்தம்ரெட்டி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கிற்காக கட்டாயம் அவசரமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. ஆடிட்டர் சுரேந்திரன் அவர்களுக்கு நான், கூடியிருந்த நன்றி உணர்ச்சிமிக்க ஆயிரமாயிரம் கழகத் தோழர்களின் பலத்த கரவொலிக்கிடையே பொன்னாடை போர்த்தி கவுரவித்தேன்.
ஆடிட்டர் சுரேந்திரன் அவர்கள் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆங்கிலத்தில் சில நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து கருத்தரங்கம். பெரியார் தொண்டர்கள் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் துவங்கின.
அன்று கழக அமைப்புச் செயலாளராக இருந்த வழக்குரைஞர் கோ.சாமிதுரை வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கம், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு, கல்விக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.
கருத்தரங்கத்தில் பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் தி.வை. சொக்கப்பா, பேராசிரியர் கு.வெ.கி.ஆசான், பேராசிரியர் கோ.கவியராஜூலு ஆகிய அறிஞர் பெருமக்கள் அறிவுமழை பொழிந்தனர்.
தொடர்ந்து பொறியாளர் அரங்கம் _ முன்னாள் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சி.வி.பத்மநாபன் அவர்கள் தலைமையிலே துவங்கியது. பொறியாளர்கள் எஸ்.பி.நமச்சிவாயம் (முன்னாள் பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர்), விஞ்ஞானி பி.குமாரசாமி (இயக்குனர், நீரியல் ஆய்வு நிலையம், பூண்டி) ஆகியோர் பொறியாளர்களின் விஞ்ஞானக் கண்ணோட்டத்திலே தந்தை பெரியார் அவர்களை மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் நான் சட்டக் கல்லூரியிலே தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையை நினைவு கூர்ந்து, குறிப்பிட்டு சில செய்திகளைக் காட்டினேன். இனி எதிர்காலத்தில் மனிதன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலை மாறி, ஊட்டச்சத்து மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு சாப்பாட்டையே நிறுத்தி விடும் காலம் வரத்தான் போகிறது என்று தந்தை பெரியார் அவர்கள் பேசியக் கருத்தை நான் சுட்டிக் காட்டினேன்.
தொடர்ந்து ஆந்திர நாத்திகத் தலைவர் மறைந்த கோரா அவர்களின் மகனார் லவணம் தனது அருமையான ஆங்கில உரையை நிகழ்த்தினார். அவரது உரையை பேராசிரியர் வீரபாண்டியன் தமிழில் மொழிபெயர்த்தார்.
70 ஆண்டுகளுக்கு முன் பெரியார் செய்த சாதனையின் மறுமலர்ச்சியை, இதோ என் கண்ணெதிரே கண்டுகொண்டிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கில் இங்கே கூடியிருக்கும் நாத்திகக் குடும்பத்தைப் பார்க்கும்போது எனக்கு புதிய உற்சாகம் பிறக்கிறது. புதிய உத்வேகத்துடன் நான் எங்கள் மாநிலத்துக்கு புறப்பட்டுச் செல்கிற«ன்’’ என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.
இறுதியாக, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினார்.
வழிநடைப் படை வீரர்களுக்கு பேராசிரியர் க.அன்பழகன் சான்றிதழ்களை வழங்கினார். பெரியார் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு சொரக்குடி வாசுதேவன் வரவேற்புரை யாற்றினார்.
நாகை என்.பி.காளியப்பன் தலைமை வகித்தார். நான் விருதுகளை வழங்கினேன்.
இறுதியாக நூற்றாண்டு விழா நாயகர் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை தர்மலிங்கம் தலைமை வகித்தார். திருநள்ளாறு ராசரத்தினம் நன்றியுரையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவுற்றன.
சரித்திரம் படைத்த தஞ்சை நிறைவு விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் கொட்டும் மழையிலே துவங்கியது.
புலவர் நெறி முடியாரின் இன்னிசையைத் தொடர்ந்து பேராசிரியர் அறிவரசு அவர்கள் நடத்திய வினாடி வினா நிகழ்ச்சி அரங்கை களைகட்டச் செய்தது.
தொடர்ந்து உலகத் தமிழர்களின் கருத்தரங்கம் குவைத் செல்லபெருமாள் தலைமை ஏற்க, ஆர்.பண்டரிநாதன் அய்.ஏ.எஸ். அவர்கள் வரவேற்புரையாற்ற உலகத் தமிழர்கள், தந்தை பெரியார் நிறைவு விழாவில் மாபெரும் மக்கள் சமுதாயத்தின் முன் மிகுந்த பெருமையோடும் பூரிப்போடும் தங்கள் உரைகளைத் துவக்கினர். சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவர் தி.நாகரெத்தினம், கெடா மாநில செயலாளர் தங்கமணி, கல்விக் குழு உறுப்பினர் தீனதயாளன், மலேசியா தி.க. இளைஞர் பிரிவு செயலாளர், கா.கோபால், மலேசியா தி.க. துணைப் பொதுச் செயலாளர் க.பாலசுப்ரமணியம், இலங்கைப் பெரியார் பகுத்தறிவுக் கழக செயலாளர் எஸ்.டி. பாண்டியன், இலங்கை கலைஞர் கருணாநிதி பொதுப்பணி மன்றத் தலைவர் நவசோதி ஆகியோர் உணர்ச்சிபூர்வமான உரை நிகழ்த்தினர்.
ஆராய்ச்சியாளர் அரங்கம் தொடர்ந்தது. தந்தை பெரியார் பற்றியும் திராவிட இயக்கம் பற்றியும், ஆராய்ச்சி நடத்தும் ஆராய்ச்சியாளர் பெருமக்கள் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்திலே அய்யாவைப் பற்றி ஆழமான கருத்துக்களை எடுத்து வைத்தார்கள்.
பி.எஸ்.சந்திரபாபு, திருமதி ஹெல்மன், ஏ.தங்கராஜ், எஸ்.ராஜேந்திரன், நாகநாதன் ஆகிய ஆராய்ச்சியாளர் பெருமக்கள் தங்கள் ஆய்வுகளை எடுத்து வைத்தனர். தொடர்ந்தது டாக்டர்கள் அரங்கம். - டாக்டர் சுப்ரமணியம், டாக்டர் மாறன் ஆகியோர் கருத்துரையாற்றினர். வழக்கறிஞர்கள் அரங்கத்தில் வழக்கறிஞர் கோ.சாமிதுரை தலைமையில் அரங்கம் தொடர்ந்தது.
வழக்கறிஞர்கள் தஞ்சை ஜெயராமன் வரவேற்புரையாற்ற திண்டுக்கல் சுப்ரமணியம், மாயூரம் ராமதாஸ், கரூர் பி.ஆர்.குப்புசாமி ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து பெரியார் பிஞ்சுகள் நிகழ்ச்சி தொடர்ந்தவுடன் மழை இடைவிடாது பெய்துகொண்டே இருந்தது! மாலையில்  நாகரசம்பட்டி என்.வி.விசாலாட்சி அம்மையார் தலைமையில் பார்வதி கணேசன் முன்னிலையில் துவங்கிய பெரியார் பிஞ்சுகள் நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை டி.கே.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். கோட்டூர் சித்தார்த்தன், புதுக்கோட்டை தேன்மொழி, சேலம் அருள்மொழி, சிவகெங்கை பெரியார், லெனின், காரைக்குடி என்.ஆர்.எஸ்.பிராட்லா, வடசேரி சுமதி, புலிவலம் அன்பு கீதா, தஞ்சை அறிவுக்கண்ணு, காஞ்சிபுரம் கலைச்செல்வி, ஆலங்குடி மேகநாதன், காஞ்சி புனிதன், திருவாரூர் வெண்ணிலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் மழலை மொழிகளால் அய்யாவின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்போதே கருநாடக அமைச்சர் பசவலிங்கப்பா பலத்த ஆரவாரத்திற்கிடையே மேடைக்கு வந்தார்.

(நினைவுகள் நீளும்)
- உண்மை இதழ், 16-30.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக