திங்கள், 13 ஏப்ரல், 2020

ஏப்ரல் 13 (1924) வைக்கம் வீரர் பெரியார் - வந்தார்; வென்றார்

இந்தியாவில் நடைபெற்ற முதல் மனித உரிமைப் போராட்டம், வைக்கத்தில் தான் துவங்கியது

வைக்கம் என்றதும் தமிழ் நாட்டினர்க்கு நினைவுக்கு வரும் முதல் உருவமும், பெயரும் தந்தை பெரியார் தான். 1924 முதல் இன்று வரை இதே நிலைமை தான்.

சேரன்மாதேவி, வைக்கம் போராட்டங்களின் ஊடா கவே, தந்தை பெரியார் சமூக சீர்திருத்த வீரர் என்று உணரப்பட்டு வரலாற்றில் நிலைத்தார்.

போராட்டம் நடந்தது வைக்கத்தில்! ஆனால், அந்தப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது திருவனந்தபுரத் தில் நடந்த ஒரு நிகழ்வே! திருவனந்தபுரம் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நீதிமன்றம் அமைந்திருந்தது. திருவாங்கூர் ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நீதிமன்றம் செல்லும் பொது இடம் பந்தல் போட்டு தடுக்கப் பட்டதால், வழக்கறிஞர் மாதவன் நீதிமன்றத்துக்கு செல்ல முடியவில்லை.

இதன் காரணமாய் ஈழவ வகுப்பு பிரமுகர்கள் ஒன்று கூடி சத்தியாகிரகம் செய்வது என தீர்மானித்து, திருவனந்த புரத்தில் நடந்தால், ராஜாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், வைக்கத்தில் நடத்திட முடிவு செய்தனர். வைக்கம் கோயிலின் நாலுபுற வாசற்படிக்கு எதிரில் உள்ள நான்கு தெருக்களிலும் ஈழவ மக்கள் நடக்க அனுமதியில்லை. ஆகவே, அதை மீறி நடப்பது என்று முடிவு செய்து சத்தியாகிரகம் தொடங்கி விட்டார்கள். இதுதான் வைக்கம் எனும் ஊர், போராட்டக் களமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் வரலாறு.

கேரளப்பகுதி காங்கிரசின் ஆதரவில் 1924 மார்ச் 30-ஆம் தேதி வரலாற்றுப் புகழ்பெற்ற வைக்கம் சத்தியாகிரகம் டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், மன்னத்து பத்மாநாபன், கே.கேளப்பன் உள்ளிட்ட தலைவர் கள் துவங்கினார்கள்.

துவங்கிய நிலையிலேயே, அரசால் கைது செய்யப் பட்டதால், போராட்டத்தை நடத்தத் தலைவர்கள் தேவை என்ற ஜார்ஜ் ஜோசப்பின் கோரிக்கை, காந்தியார், பெரியார் ஆகியோருக்கு மட்டுமல்ல; இராஜாஜிக்கும் வந்தது. அவ் வேண்டுகோளை இராஜாஜி நிராகரித்தார்.

13 ஏப்ரல் 1924 அன்று தந்தை பெரியார் வைக்கம் வந்து சேர்ந்தார். அது போராட்டம் தொடங்கி பதினைந்தாவது நாள்.

“தமிழ் நாட்டுத் தலைவரான ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வைக்கத்திற்குச் சென்றிருக்கிறார். நாயக்கர் கர்ம வீரர். வீண் பேச்சுக்காரர் அல்லர். ஆடம்பரத்தை வெறுப்பவர். அதை யும் செய்கையில் காட்டும் ஆற்றல் பெற்ற பெரியார். ஆத லின் அவர் சத்தியாகிரகப் போர்க்களத்தின் பாசறையில் இதுகாலை சேனாதிபதிகளுடன் யோசித்து வருகிறார்” என பெரியாரின் வைக்கம் போராட்டச் செயல்பாட்டைப் பாராட்டி நவசக்தி (நவசக்தி 18 ஏப்ரல் 1924) எழுதியது.

”முகமதியரும், கிறித்துவர்களும் வைக்கம் கோயில் அருகில் உள்ள பொதுத்தெருவின் வழியே நடக்க அனுமதிக் கப்படுகிறார்கள். ஆனால், ஈழவர்கள் அனுமதிக்கப்படுவ தில்லை. இந்துவான புலையர்களும், பறையர்களும் அந்தச் சாலை வழியே நடக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த மனிதர்களே கிறித்துவர்களாகவோ, முகமதியர்களாகவோ மாறினால், திருவாங்கூர் அரசாங்கம் அவர்களை அத்தெரு வழியே நடக்க அனுமதிக்கிறார்கள்” என்று தந்தை பெரியார் 26 ஏப்ரல் 1924 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற சத்தி யாக்கிரக ஆதரவு கூட்டத்தில் பேசினார்.

”வைக்கம் சத்தியாகிரகம் என்ற போர் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல; மதச் சண்டையும் அல்ல; வகுப்புச் சண்டையும் அல்ல. இது பொது நலனுக்கான செயல். சமத்துவத்தை நிறுவும் நோக்கம் கொண்டது.” இது தந்தை பெரியார் திருவனந்தபுரத்தில் 1 மே 1924இல் பேசியது.

பெரியார் ஆற்றிய உரைகள் முழுவ தையும் படித்த அரசாங்கம் அவை ஏற் படுத்திய தாக்கத்தைக் கண்டு அரண்டு போயிருக்கக் கூடும். அதனால் திருவாங் கூர் அரசாங்கம் பெரியார் பேசுவதற்குத் தடை பிறப்பித்தது.

தடையை மீறி தந்தை பெரியார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். ஒரு முறை அல்ல. இரு முறை.

தந்தை பெரியார் சிறையில் கொடு மையாக நடத்தப்படுவதைக் கண்டித்து இராஜாஜி அறிக்கை 27 ஆகஸ்டு 1924இல் வெளியிட்டார். அதில், “தற்போது திருவனந்தபுரம் மத்திய சிறையில் சத்தியாகிரகக் கைதியாக இருக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார். இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரக சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இவ்வளவுக்குப் பிறகும், நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையை தேர்ந்தெடுத்து வந்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல் அல்ல. உண்மையிலேயே தம்மைத் தூய் மைப்படுத்தும் இந்தச் செயல்களை அவர் வரவேற்கிறவர். சிறையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தைரிய மிக்க தலைவருக்கு என் பாராட்டுகள்”. (தி இந்து 27 ஆகஸ்டு 1924).

”விடுதலையாகி வெளியே வந்ததும், வைக்கம் உட்பட எல்லா இடங்களிலும் பொதுரஸ்தாக்களில் எல்லோரும் நடமாடலாம் என்று அரசாங்கத்தார் அனுமதிப்பதற்கு அறிகுறியாகவே எங்கள் விடுதலையைக் கொள்ள நாங்கள் ஆவலாயிருக்கிறோம். அப்படி இல்லாவிடில் வைக்கம் போராட்டத்தை இனியும் நடத்துவோம்” என தந்தை பெரியார், கே.பி.கேசவ மேனன் முதலியவர்கள் கையெழுத் திட்டு அறிக்கை வெளியிட்டனர்.

வைக்கம் வீரர் தந்தை பெரியார் மீது அரசாங்கத்தார் தொடுத்திருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர் (2 ஜனவரி 1925). வைக்கம் வீரர் என்ற சொல்லாட்சி போராட்டம் முடிவதற்கு முன்பே பத்திரிக்கை வழக்காகி விட்டது.

சத்தியாகிரக ஆசிரம தலைமைப் பொறுப்பு, பிரச்சாரம், ஆலோசனை, சத்தியாகிரக ஊர்வலத் தலைமை, பண வசூல் எனப் பலவிதத்திலும் செயலாற்றிச் சத்தியாகிரகம் தொய்வடையாமல் பார்த்துக் கொண்டார் தந்தை பெரியார்.

கேரள வரலாற்றுப் பேராசிரியரான டி.கே.ரவீந்திரன் தனது (Eight furlongs of Freedom) ஆங்கில நூலில் ’ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்துக்குப் புதிய உயிர் கொடுத்தது’ என்கிறார்.

வைக்கம் சத்தியாகிரகம் தொடர்பாக காந்தியார் வைக் கம் உள்ளிட்ட இடங்களுக்கு வருகை தந்தார். திருவனந்த புரத்தில் இராணியாரோடு பிரச்சினை குறித்துப் பேசுகிறார்.  அரசியார் அவரிடம், “நாங்கள் சாலையைத் திறந்து கொடுக் கின்றோம். ஆனால் அடுத்ததாக கோயி லுக்குள் நுழைவதாக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அதைச் செய்யாமல் இருக்க உறுதி அளித்தால், தடையை நீக்கி விடு கிறேன்" என இராணியார் சொன்னதும், காந்தியார் தந்தை பெரியாரை அழைத்து, அவரது கருத்தை கேட்கிறார். "நமது இலட்சியம் கோயில் நுழைவுதானே. ஆனால் இப்போது அதைப் பற்றி அழுத்தம் கொடுக்கப்போவது இல்லை" என்று சொல்லி விடுங்கள் என காந்தியா ரிடம் சொன்னதும், அதையே இராணியா ரிடம் தெரிவித்தார். உடன் வைக்கத்தில் நான்கு தெருக்களில் கிழக்கு தவிர ஏனைய மூன்று தெருக்களையும் அனைவரும் நடக்க அரசாங்கம் உத்தரவிடுகிறது.

இந்த நிகழ்வு, தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் எத்தகைய முக்கியஸ்தராக இருந்தார் என்பதை தெளிவாக்கு கிறது.

சத்தியாகிரக ஆசிரமத்தின் செயலாளர் கேளப்பன் ஏற்பாட்டில் வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டம் 29 நவம்பர் 1925 அன்று தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. நாகம்மையார், டி.கே.மாதவன், மன்னத்து பத்மாநாபன் ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியார் பேசுகையில், “சத்தியாகிரகத்தின் உத்தேசம் கேவலம் நாய், பன்றி நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டும் என்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக்கூடாது என்பது தான். அந்தத் தத்துவம் இந்த தெருவில் நடப்பதோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தைக் கோவிலுக் குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை” எனப் பேசினார்.

வைக்கம் போராட்டம் காந்தியார் தொடங்கியது அல்ல; அவர் நேரடியாகக் கலந்து கொண்ட போராட்டமும் அல்ல. வைக்கம் போராட்டம் என்பது காந்தியாரைப் பொறுத்தவரை ஜாதியை ஒழிக்காமல், வருணாசிரமத்தைத் தக்க வைத்துக் கொண்டே, இந்து மதத்திலிருந்து தீண்டாமை, நெருங்காமை ஆகிய பாவங்களை ஒழிக்க முயல அவருக்குக் கிடைத்த வாய்ப்பு.

வைக்கம் போராட்டத்தை இந்துக்களுக்கானது எனச் சுட்டி, இந்து அல்லாதவர்களைப் போராட்டத்திலிருந்து வெளியேற்ற முயன்றார் காந்தி. இதனால், ஜார்ஜ் ஜோசப் மற்றும் சீக்கியத் தலைவர்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கினர்.

கேரள அழைப்பை ஏற்று பெரியார் வைக்கம் சென்ற தற்குக் காரணம், அடிப்படையில் தீண்டாமை ஒழிப்பு நோக்கம் தான். அடுத்து அவருக்கே உரிய போராட்ட குணம். மூன்றாவது, அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தது.

வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் - மனைவி நாகம்மையார், தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் உள்ளிட்டவர்கள் பங்கு பெற்றனர். இந்தக் கிளர்ச்சியில் முதலில் பங்கு பெற்றவர்கள் பெரியாரின் குடும்பத்துப் பெண்கள் என எழுத்தாளர் வளர்மதி தனது நூலில் குறிப்பிடுகிறார்.

போராட்டக் காலத்திலேயே தந்தை பெரியாரை, தமிழ்த் தென்றல் திரு.வி.க., ’வைக்கம் வீரர்’ எனப் புகழ்ந்தார். நவசக்தி இதழும் பலமுறை அவ்வாறே குறிப்பிட்டது. இது மட்டுமல்ல, அய்.வி.பீட்டர் என்பவர் ‘ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது’ என்ற நூலில் தந்தை பெரியாரை வைக்கம் வீரர் என குறிப்பிடுகிறார்.

அமெரிக்க ஆய்வாளர் மேரி எலிசெபத் கிங் எழுதிய Gandhian non-violent struggle and untouchability in South India (2015) என்ற நூலில்  ”The 1924-25 Vykom Satyagraha and the mechanisms of change” என்ற துணைத் தலைப்பில் தந்தை பெரியாரைப் பற்றிய குறிப்புகள் 18 இடங்களில் வருகின்றன.

1924 மார்ச் 30-ல் வைக்கம் போராட்டம் தொடங்கியது. 610 நாட்கள் நடந்தது. நவம்பர் 1925-ல் முடிவுற்றது. தந்தை பெரியார் 13 ஏப்ரல் 1924-ல் வைக்கம் சென்றார். நவம்பர் 1925-க்குள் ஏழு முறை அந்த போராட்டத்திற்காக அங்கே பயணம் மேற்கொண்டுள்ளார்.

வைக்கம் போராட்டத்திற்காக, தந்தை பெரியார் அவர்கள் திருவாங்கூர் பகுதியில் வெளியில் 67 நாட்களும், சிறையில் 74 நாட்களும் (மொத்தம் 141 நாட்கள்) தங்கியிருந்து போராட்டத்தில் பங்கேற்றார்.

வெளிமாநிலத்திலிருந்து சென்று ஏறத்தாழ 140 நாள்கள் வைக்கம் போராட்டத்திற்காக செலவிட்ட தலைவர் தந்தை பெரியார் ஒருவரே.

இருமுறை சிறை சென்றவரும், கடுங்காவல் தண்டனை அனுபவித்தவரும் தந்தை பெரியார்  ஒருவர்தான்.

சத்தியாகிரக வெற்றி விழாவிற்குத் தலைமை ஏற்க அழைக்கப்பட்டவர் தந்தை பெரியார் மட்டுமே (அயலகத் தலைவரும் என்றபோதிலும்).

வைக்கம் சத்தியாகிரகப் போரைத் தொடங்கியவர்கள் கேரள காங்கிரஸ் கமிட்டியாரானாலும், அப் போரின் பின் நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டவர் பெரும்பங்கு எடுத்துக் கொண்டார்கள். இதில் கோவை அய்யாமுத்து, பெருந் தலைவர் காமராசர் உள்ளிட்டோர் அடங்குவர். இதுகுறித்த ஒரு பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆண் டறிக்கை (1924) வெளியிட்டது.

அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர், அண்ணல் அம்பேத்கர் மகத் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுத்திடும் போராட் டத்தை நடத்திட தூண்டுகோலாக வைக்கம் போராட்டம் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

வைக்கத்தில் இரு அரசுகளின் சார்பில் (தமிழ்நாடு, கேரளம்) ’தந்தை பெரியார் நினைவகம்’ அமைக்கப்பட்டு உள்ளது.

வைக்கம் பேராட்டம் 96 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற பேராட்டம். இந்தியாவில் மனித உரிமைக் களத்தில் முதல் போராட்டம். உலகில் எங்கும் கேள்விப்படாத சமூகக் கொடுமையான தெருவில் நடக்கக்கூட தாழ்த்தப் பட்டோருக்கு உரிமை இல்லாத நிலையில் வைக்கம் பேராட்டம் நடைபெற்றது.  அது சமூகப்புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி, ரத்தம் சிந்தாப் புரட்சி, தந்தை பெரியாரின் தீவிரப் பங்களிப்பால் வெற்றி பெற்றது எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், வைக்கம் போராட்டம் நூலாசிரியர் பழ.அதியமான் அவர்களுக்கு 27 பிப்ரவரி 2020 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பாக தெரிவித்தார்.

இத்தகைய மனித உரிமைக்கான முதல் வரலாற்றைப் படைத்த வைக்கம் சத்தியாகிரகம் எனும் போரில், தந்தை பெரியாரின் மகத்தானப் பங்களிப்பை மறைத்திட, சில கைகள் உயர்ந்தாலும், ஒரு போதும் உண்மை எனும் ஆதவனை மறைத்திட இயலாது என்பதை அரசின் ஆவ ணங்கள், பல்வேறு ஆய்வாளர்களின் நூல்கள் தெளிவாகப் பறைசாற்றுகின்றன. இதனை நல்ல வண்ணம் தொகுத்து ஆவணப்படுத்திய பழ.அதியமானுக்கு திராவிடர்களின் சார்பில் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

- குடந்தை கருணா

(பழ.அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ நூலில் இருந்து தொகுக்கப்பட்டது.)

- விடுதலை நாளேடு, 13.4.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக