செவ்வாய், 21 ஏப்ரல், 2020

பெரியார் மணியம்மை திருமணத்தில்...

*பெரியார் மணியம்மை திருமணத்தில் மொத்தம் அய்ந்து தரப்புகளுக்கு நேரடித் தொடர்பு உண்டு. அவை...*

1.மணியம்மையார் மற்றும் அவரது குடும்பத்தினர்
2. பெரியார் மற்றும் அவரது குடும்பத்தினர்.
3. இயக்கத் தோழர்கள்.
4. சட்டம்
5. மக்கள்

*மணியம்மையார் அவரது உறவினர்கள்*

மணியம்மையாரை பொறுத்தவரை இயக்கத் தொண்டிற்காக சிறுவயது முதல் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்.
பவுத்த சமண சங்கங்கள்,  சைவ, வைணவ சமயங்கள், கிறித்துவ சமய ஊழியங்கள் போன்றவற்றில் தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு பெண்கள் தங்கள் வாழ்வை ஒப்படைத்துக் கொள்வது வழமை.
இந்திய விடுதலைப் போராட்ட அரசியல் வரலாற்றிலும் இதுபோன்ற நிகழ்வுகள் உண்டு.ஆனால் உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்கு தன் வாழ்நாளை பணயம் வைத்தவர் அன்னை மணியம்மையார் ஒருவரே! 

அவரது தந்தையார் மணியம்மையை பெரியாரின் பிரச்சாரப் பயணத்திற்கு உதவி செய்ய முழுநேர ஊழியராக மனமுவந்து அனுப்பி வைத்தவர். 
எனவே மணியம்மையாரின் முழு விருப்பத்துடன் நடைபெற்ற இத்திருமண ஏற்பாட்டை அவரது குடும்ப உறவுகள் எதிர்த்ததாக எந்த தகவலுமில்லை.

பெரியார் சொத்துகளுக்காக அமைதியாக இருந்தனர் என்று சொல்வதற்கும் வழியில்லை. ஏனெனில் பெரியார் இருந்தபோதும் சரி, இறந்த பின்னும் சரி மணியம்மையார் தனது குடும்ப உறவினர்களுக்கு இயக்கச் சொத்துகளை கொடுத்துவிடவில்லை.

தனக்கு பிறகு மணியம்மைக்கு வாழ்வாதாரத்திற்கு இருக்கட்டுமென்று நினைத்து இயக்க சொத்துக்களைத் தவிர வேறு சில சொத்துக்களை மணியம்மையார் பெயரில் தந்தைபெரியார் எழுதி வைத்தும்கூட அதையும் இயக்கத்திற்கே ஒப்படைத்தவர் மணியம்மையார்.

*பெரியார் அவரது குடும்பத்தினர்*

தனது பூர்வீக சொத்துக்களையும், தன்னிடம் மக்கள் வழங்கிய நன்கொடைகளையும் தனக்கு பிறகு தனது கொள்கை பிரச்சாரத்திற்கு பயன்படும் வகையில் தந்தைபெரியார் அவர்களால் செய்யப்பட்ட இந்த திருமண ஏற்பாட்டை  அவரது குடும்பத்தினர் எவரும் எதிர்த்ததாகத் தெரியவில்லை.

பெரியாரின் அண்ணன் மகன் ஈ.வே.கி.சம்பத் அவர்கள் கூட  மணியம்மையார் இயக்கத் தலைமை ஏற்ககூடாதென்றுதான் அண்ணாவோடு பிரிந்தார். இது அரசியல் எதிர்ப்பேயன்றி சொத்துக்களுக்காகவோ, பெரியார் திருமணமே செய்துகொள்ளக் கூடாதென்றோ அல்ல!
இதையன்றி பெரியார் குடும்பத்தினர் எதிர்ப்புகள் எதுவுமில்லை.

*இயக்கத்தோழர்கள்*

பெரியார் மணியம்மை திருமண ஏற்பாடு குறித்த செய்திகள் வந்த நாளிலிருந்து இயக்கத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது உண்மை.
இந்த திருமணத்தின் உட்பொருளை  புரிந்து கொண்டவர்கள் அமைதியாக பெரியாரைப் பின்தொடர்ந்தார்கள்.

புரியாதவர்கள் அல்லது புரிந்தும் அன்றைய சூழலில் பெரியாரிடமிருந்து விலகி நிற்க விரும்பியவர்கள் அண்ணாவின் தலைமையில் அணிதிரண்டனர். இந்த திருமணத்தின் மூலம் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு மணியம்மையார் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம்.

இதைப்போன்ற பிளவுகள் அதனால் எழும் சர்ச்சைகள் உலகில் பல்வேறு அமைப்புகளுக்கு நேர்ந்திருக்கிறது. சிக்கலின் வடிவம் வேறாயிருக்கலாம்.
ஆனால் அடிப்படை "சீனியர்"  "ஜூனியர்" என்ற முரண்பாடுகள்தான்.

இதில் அதிசயம் என்னவென்றால் பெரியாரை விட்டு விலகியவர்களில் குறிப்பிடத் தக்கவர்களான அண்ணா, நாவலர், கலைஞர், பேராசிரியர், ஈ.வி.கே.சம்பத் போன்றவர்கள் பின்னாட்களில் மணியம்மையாரின் தொண்டறத்தால்தான் பெரியாரின் வாழ்நாள் நீண்டிருக்கிறது என்பதையும், இயக்கப் பிரச்சாரம் பெரியாருக்கு பின்பு தடையின்றி நடைபெறுவதற்கு மணியம்மையாரை மணம் புரிந்தது சரியானது என்பதையும் உணர்ந்தார்கள்.
உணர்ந்த உண்மையை பொதுவெளியில் பதிவு செய்திடவும் செய்தார்கள்.

*சட்டம்*

பெரியார் மணியம்மையார் திருமணம் எவரும் அறியாத வண்ணம் நடைபெற்ற இரகசிய திருமணம் அல்ல.
சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திருமணம். எனவே சட்டத்தின் அடிப்படையில் எதிர்ப்புகளுக்கு வழியில்லை.

*மக்கள்*

1938 இல் பெண்கள் மாநாட்டில் தந்தைபெரியார் என்று பெருமைபெற்று பத்தாண்டுகளுக்கு பிறகு மணியம்மையாரைத் திருமணம் செய்கிறார் பெரியார்.

அதன்பிறகு கால்நூற்றாண்டு காலம் இந்த மண்ணில் பெரும்பணியாற்றிய பெரியாரை மக்கள் கொண்டாடினார்கள்,
அவரது எடைக்கு எடை பொருட்களை வாரி வழங்கினார்கள். இளைஞர்களை ஈர்க்கும் தலைவராக பெரியார் எப்போதும் விளங்கினார்.
அவரது பகுத்தறிவு சுயமரியாதை பிரச்சாரம் தடையின்றி நடைபெற மக்கள் தங்கள் உடமைகளையும்,உழைப்பையும் நல்கினார்கள்.இன்று வரை இது தொடர்கிறது.

எனவே *அந்தக் கால சூழலில் வாழ்ந்த மேற்கண்டவர்களைத் தவிர அறுபது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்வை அறிந்தும் அறியாமல் அரைகுறையாக தெரிந்துகொண்டு குரைப்பதற்கு எந்தக் குக்கலுக்கும் அருகதை இல்லை.*

- செந்தில் குமார் கதிர்,  முகநூல் பதிவு, 21.4.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக