திங்கள், 27 ஏப்ரல், 2020

திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto)

"உலகமே ஒரு குடும்பம்'' என்னும்  தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் திராவிடத் தத்துவம்

சென்னை பெரியார் திடலில் மானுட சமத்துவப் பொன் மழை!

நமது சிறப்புச் செய்தியாளர்

தஞ்சையில் 23.2.2019 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto) ஒன்றினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையொப்பத்துடன் வெளியிட்டார்.

33 அம்சங்களைக் கொண்ட அந்த அறிக்கைதான் இரு நாள் மாநாடுகளின் கதாநாயகன் என்று சொல்லவேண்டும்.

மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர் கள் அந்த அறிக்கையைப் பெரிதும் பாராட்டினர். காலத் தால் வெளியிடப்பட்ட ஆவணம் - கருவூலம் என்று ஒருமனதாக அனைவரும் பாராட்டினர்.

அந்த அறிக்கையை விளக்கி நேற்று (5.2.2019) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது!

சிறப்புக் கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார்.

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி வரவேற்புரையாற்றினார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை யாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்க உரையாற்றினார். திராவிடர் கழக மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.

இந்தச் சிறப்புக் கூட்டத்திற்கு ஏராளமான இளைஞர் கள், புதுமுகங்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பேராசிரியர் சுப.வீ. குறிப்பிட்டதுபோல, 19 ஆம் நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப் பட் டது. 20 ஆம் நூற்றாண்டில் நீதிக்கட்சியின் சார்பில் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை வெளியிடப் பட்டது.

21 ஆம் நூற்றாண்டில் கடந்த 23 ஆம் தேதி திரா விடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையொப்பமிட்ட இந்த அறிக்கையினை வெளியிட்டார்.

இது தேர்தல் நேரம், அரசியல் கட்சிகள் இன்னும் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. ஆனால், தேர் தலில் போட்டியிடாத திராவிடர் கழகம் வெளியிட்ட இந்த அறிக்கையை முதல் தேர்தல் அறிக்கையாகக் கொள்ளவேண்டும் என்றார் பேராசிரியர் சுப.வீ.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் இரு அணிகள் பிரிந்து நிற்கின்றன. ஒரு அணியில் ஜாதி, மதவாத பிற்போக்குக் கட்சிகள் அணி சேர்ந்துள்ளன. (கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்று அந்த அணியின் செய்தித் தொடர்பாளர் மனந்திறந்து ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொட்டி விட்டார்).

இன்னொரு அணி - தி.மு.க. தலைமையில் அணி வகுத்து நிற்கிறது. இந்த அணியில் சமுகநீதி, மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலன், ஒடுக்கப் பட்டோருக்குக் குரல் கொடுக்கும்  சக்திகள், மாநில உரிமை களுக்காகப் போராடும் சக்திகள் எல்லாம் ஓரணியாய் நிற்கின்றன.

பாரதீய ஜனதா கட்சி தலைமையில் பல கட்சிகள் இணைந்திருந்தாலும், தமிழ்நாட்டில் அதிக இடங்களில் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டாலும் கூட்டணிக்குப் பெயர் தேசிய ஜனநாயகக் கூட்டணியே! (National Democratic Alliance). (இது பி.ஜே.பி. கட்டளை - அடிபணிந்துதானே ஆகவேண்டும்).

பி.ஜே.பி.யைப் பொறுத்தவரையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை உடையதாகும். இவற்றை விமர்சிக்கும் திராணி அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் யாருக்கும் கிடையாது.

தி.மு.க. தலைமையில் அங்கம் வகிக்கும் கட்சிகளி டையே அடிப்படை ஒற்றுமை உண்டு. பி.ஜே.பி. சொல்லும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பவற்றை ஏற்காத கட்சிகள் அவை.

திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையில், 17 ஆவது அம்சமாகக் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:

ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கிடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை  நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல்.''

திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் இந்தக் கருத்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கான வாசகம் என்றே கருதப்படவேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கூறியது மிகவும் சரியானதே!

திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் விளக்கவுரை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 65 மணித்துளிகள் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கைக்கான விளக்க உரையாக தனது சொற் பொழிவை அமைத்துக் கொண்டார்.

எடுத்த எடுப்பிலேயே இந்த அறிக்கையை யாரும் விவாதிக்கலாம்; மாறுபாடான கருத்து ஏதும் இருந்தால் தெரிவிக்கவும் செய்யலாம் என்று திறந்த மனத்தோடு தன் உரையைத் தொடங்கினார்.

இந்த அறிக்கைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது என்பதை விளக்க வந்த ஆசிரியர் அவர்கள் பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத் தத்துவமே இதன் மூலம் என்று குறிப்பிட்டார்.

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் இந்துத்துவாவிற்கு நேர் எதிரானதே இந்தத் திராவிடத் தத்துவம் என்று தன் உரையின் முகப்பாகவே இதனை எடுத்துக் கூறினார்.

இந்துத்துவா என்பது மனிதர்களிடையே பேதம் கற்பிப்பது. திராவிடம் என்பதோ பிறப்பில் அனைவரும் சமம் என்பதாகும்.

திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை இதனை எடுத்த எடுப்பிலேயே தெளிவுபடுத்துகிறது.

ஈரோட்டில் கிராம அதிகாரிகள் மத்தியிலே உரை யாற்றிய தந்தை பெரியார் (31.10.1944) தனது உரையின் முடிவில் முத்தாய்ப்பாக கூறிய அமுத வரிகள்தான் "பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்'' என்பது. (நூல்: கிராம சீர்திருத்தம்'').

பக்கத்து வீட்டில் ஒருவன் இருக்கிறான், என்னைத் தொடக்கூடாது என்கிறான் - தீண்டாதே என்கிறான். இன்னொருவன் அயல் நாட்டுக்காரன் - ஆயிரம் மைல் களுக்கு அப்பால் இருந்து வருகிறான். என்னோடு கைகுலுக்குகிறான்; என்னைக் கட்டிப் பிடித்துத் தழுவு கிறான். இவர்களில் எனக்கு யார் அந்நியன்?'' என்ற தந்தை பெரியாரின் கூற்றை கழகத் தலைவர் எடுத்துச் சொன்னபொழுது, அரங்கமே அதிர கரவொலி!

என்னை அந்நியன் என்கிறது இந்துத்துவா - இதனைத் திராவிடத்துவா எதிர்க்கிறது. அதனைத்தான் இந்தக் கொள்கை விளக்க அறிக்கை வலியுறுத்துகிறது.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை ஒரு கட்சியை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் அளவுகோலே சமுகநீதிதான்.

தந்தை பெரியார் காங்கிரசை ஒரு காலகட்டத்தில் எதிர்த்ததற்கும், இன்னொரு கட்டத்தில் ஆதரித்ததற்கும் அதுவேதான் காரணம்.

இந்தக் கொள்கை விளக்க அறிக்கையின் ஒன்பதாவது அம்சம் என்ன கூறுகிறது?

ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத் துறை, அரசுத் துறை அனைத்திலும்.''

என்று இந்தக் கொள்கை அறிக்கை கூறுவது தந்தை பெரியார் அவர்களின் சமுகநீதிச் சிந்தனையின் அடிப்படையில்தான் என்றார் தமிழர் தலைவர்.

ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்று கூறுகிறார் பெரியார்; ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கப்படுவது ஏன் என்ற வினாவை நம்மை நோக்கி அன்றும் கேட்டனர்; இன்றும் கேட்கக்கூடியவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இந்த திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையின் 19 ஆவது அம்சம் இதுகுறித்து விளக்கம் அளிக்கிறது.

ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.''

இதற்குத் தந்தை பெரியார் 76 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய பதிலைத்தான் தமிழர் தலைவர் எடுத்து விளக் கினார்.

சட்டத்தின்மூலம் ஜாதிகள் ஒழிகின்றபோது, சட்டத் தின்மூலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடுவது சிரமமான காரியமல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டத்தினால் ஜாதிகள் இல்லாமல் போகுமானால், பிறகு யாருக்கு நாம் பிரதிநிதித்துவம் கொடுக்கப் போகி றோம்? ஆகவே, அது தானாகவே மறைந்துவிடும். ஆதலால், ஜாதி வகுப்புகள் உள்ளவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பதும், குற்றமாகவோ, ஜாதியைக் காப்பாற்றியதாகவோ ஆகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று 1943 இல் தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டினார் கழகத் தலைவர்.

முடிவாக திராவிடக் கொள்கைத் தத்துவம் என்பது - மதம், ஜாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், திருமணம், குடும்பம், பொருளாதாரம் இவற்றின் தற்போதைய அடிக்கட்டுமானத்தை மாற்றி எல்லார்க்கும் எல்லாமுமான சம நிலைமை உருவாக்குவதாகும். இதனைத்தான் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை கூறுகிறது. இதுதான் திராவிடத் தத்துவமாகும்.

இந்தத் திராவிடத் தத்துவக் கொள்கை என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல. உலகுக்கே - மானுடத்திற்கே சொந்தமானது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்; உலகமே ஒரு குடும்பம்'' எனும் நோக்கினைக் கொண்டது என் பதை இந்தக் கொள்கை அறிக்கையின் முடிவுரை முத்தாய்ப் பாகக் கூறுகிறதே!


திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை

திராவிடக் கொள்கை - கோட்பாடு என்பவை -

1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே!

2. பாலின சமத்துவம்

3. சமுகநீதி

4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந்தாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம்,  மூடத்தன நெடியேறும் முன்னோர்க் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது.

5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற்பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம்.

6. பேதம் பேசும் இந்துத்துவா கோட்பாட்டை எதிர்ப்பது.

7. அறிவியலை ஏற்பதுடன், அது மனித குலத்தின் நலனுக்கு - வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர, கேடாக அமையக்கூடாது.

8. தீண்டாமை - அதற்கு மூல வேரான ஜாதி - ஜாதிக்கு அரணான கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களை - பழைமைவாத குலப்பெருமைகளை எதிர்த்து அழிப்பது.

9. ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத் துறை, அரசுத் துறை அனைத்திலும்.

10. ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற தற்போதைய நிலைக்கு மாறாக பாலின சமத்துவம், எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராக கல்வி, உத்தியோகம், அரசியல், பொருளாதார நிலைக்கு உத்தரவாதம்.

11. தற்போதைய நிலையில் வழிபாட்டில், அர்ச்சகத் தன்மையில் ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே!

12.. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள்  எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின்  நுகர்வுக்கும் உரியவர்களே!

13. கிராம - நகர பேதம் கூடாது.

14. மதங்களைக் காரணம் காட்டி ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்தும் போக்கு முற்றாக மாற்றி அமைக்கப்படுதல். எந்தக் காலத்திலோ, யாரோ சூழ்ச்சியாக ஆதிக்கத்தை நிலை நிறுத்த எழுதிக் குவித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தல்.

15. ஒவ்வொரு இனத்துக்குமான மொழிக்குரிய மதிப்புப் பேணப்படுதல் - இதில் ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதற்கு அறவே இடம் தராமை. கால வளர்ச்சிக்கு ஏற்ப மொழியில்

விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு மாற்றம் கொணர்தல். பன்மொழிகள் கொண்ட இந்தியாவில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் இடம்பெற்ற மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழி என்பது உறுதிப்படுத்தப்படுதல். அகில இந்திய அளவில் தொடர்பு மொழி என்பது ஆங்கிலமே!

16. பொருளாதார நிலையில் மனிதனுக்குத் தேவையான அடிப்படைகள் பூர்த்தி செய்யப்படல்; இதற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்றல்; பணக்காரன், ஏழை என்ற  பேதத்தைக் குறிக்கும் சொல்லாடலுக்கே இடமில்லாது செய்தல். தொழிலாளி - முதலாளி என்ற பேதமின்றி ‘பங்காளி’ எனும் தன்மை நிலைநிறுத்தப்படுதல்; சுருக்கமாக சொல்லப்போனால், வருண பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதமற்ற ஒப்புரவு சமுதாயம் உருவாக்கப்படுதல்.

17. ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கிடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை  நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல்.

18. அரசுக்கும், மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத உண்மையான மதச்சார்பின்மை நிலைப்பாடு.

19. ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.

20. கல்வி என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமான எதுவும் கல்வியில் இடம்பெறாமை, வளர்ச்சித் தத்துவம், சிந்தனையூற்றம் - விடாமுயற்சி, ஊக்கம் தரும் தன்மை இவற்றோடு உலகப் போட்டிக்குத் தயாரிப்பான கல்வி முறை, ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற வார்ப்பு, பாடத் திட்டங்கள்; தகுதி திறமையை அளவிட மனப்பாட மதிப்பெண் முறைக்குப் பதிலாக செய்முறை, வினையூக்கத்தை உள்ளடக்கிய அறிவியல் அடிப்படையில் அமைந்த தொழில்நுட்பம் உள்ள கல்வி முறை.

21. கடவுள் நம்பிக்கைக் கொண்டோர், கடவுள் நம்பிக்கையற்றோர் - இரு நிலையில் உள்ளவர்களுக்கும் பிரச்சார உரிமையுடன் கூடிய சமநிலைச் சட்டங்கள் உருவாக்கப் பாடுபடுதல்.

22. குழந்தை வளர்ப்பில் முழுக்கவனம், உடல், மூளை வளர்ச்சிக்கான உணவு, சூழல், தூய்மை, அறிவுத் தூண்டல், நற்பழக்கம் பேணப்படுதல்.

23. முதியவர்களை அக்கறையுடன் உரிய மதிப்புடன் பாதுகாத்தல்.

24. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு.

25. ஆணோ, பெண்ணோ 20 வயதுக்குமேல் எந்த வயதில் திருமணம் செய்துகொள்வது என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுதல்.

திருமணம் என்பதில் வேறு யாருடைய தலையீடோ, குறுக்கீடோ கூடாத நிலை.

வயது அடைந்த ஓர் ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தலில் மூன்றாவது மனிதனுக்கு இடம் என்பது அத்துமீறிய நடவடிக்கையே!

குழந்தைப்பேறு குறித்த முடிவில் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேக உரிமை.

26. மரண தண்டனையை ரத்து செய்தல்.

27. கருத்துரிமை, பிரச்சார உரிமைக்கு தடையற்ற நிலை.

28. கலை கலைக்காக என்பதை ஏற்க இயலாது - மனிதத்தையும், சுயமரியாதைக் கருத்துருவையும் கொண்டதாக ஆக்கப்பூர்வமாக அமைதல் வேண்டும்.

29. ‘அனைவருக்கும் அனைத்தும்’ அமைந்து, சமுகத்தின் நுகர்வுக்கான விரிந்த இலக்கு நோக்கி நடக்கட்டும் இந்த வையம்.

30. மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்ற சமுக நோக்கு - தொண்டறப் பண்பு!

31. ஆடம்பரம் தவிர்ப்பு - சிக்கனப் பெருவாழ்வு!

32. குருதி உறவு என்பதையும் கடந்து மனிதனுக்கு மனிதன் நேச உறவு - சகோதரத்துவம், சமத்துவம் பேணலே மனிதனுக்குப் பகுத்தறிவு இருப்பதின் பலனாகும்.

33. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு

கடவுளை மற - மனிதனை நினை என்னும் சுயமரியாதை சமத்துவ உலகம் மலரட்டும்! மலரட்டும்!!

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’, ‘உலகமே ஒரு குடும்பம்’ என்னும் பரிணாம நிலை வளரட்டும்!

பகைமை, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற கொடிய நோய்களற்ற, ஆரோக்கியமான புத்துலகம் புரட்சியுகமாக பூத்துமலர நமது பயணங்களும், திட்டங்களும் அமையட்டும்!

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

விடுதலை நாளேடு, 6.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக