செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சினையும் - கழகத்தின் செயல்பாடுகளும் - 2


"காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது"  தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்

"அய்ப்பசி மாத வாக்கில் 'சூத்திரன்' என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சித் துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்" என்று தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை.

தோழர்களே, காலம் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது! நம் நாட்டில்  நடைபெற வேண்டிய முக்கிய காரியங்கள் சிந்திக்கப் படாமல் இருக்கின்றன. நம் நாட்டு இன்றைய ஆட்சி, சிந்தனையாளர் ஆட்சியென்ற பெயரைக் கொண்டிருந்தாலும், ஆட்சி நிலைக்கவேண்டுமே என்பதற்காகச் சிந்தனையாளருக்கும், மூடநம்பிக்கைக்காரர்களுக்கும் தன்மையைக் கொள்கையாக கொண்டே  நடைபெற்று வருகிறது.

ஆட்சி சமுதாயத்துறையில் கைவைக்கப் பயப்படுகிறது. என்றாலும், அது நிலைக்க வேண்டுமே என்பதற்காக நான் அதற்கு  ஆதரவாளனாக இருக்கத்தான் பாடுபடுகிறேனே ஒழிய,  எந்தத் துறையிலும் அதற்கு அசவுகரியம் கொடுக்க நினைப்பதில்லை. என்றாலும், நாம் சமுதாயத்துறையில் ஒன்றும் செய்யாமல் பார்ப்பனியத்தைக் கண்டித்துக் கொண்டேயிருந்தால் போதுமா? காரியத்தில் ஏதாவது செய்ய வேண்டாமா? என்ற கவலை என்னை வாட்டுகிறது.

சமுதாயத் துறையில் பத்தாண்டு காலமாக நம் நாட்டில் ஒரு கிளர்ச்சியும் நடக்கவில்லை. 1954 முதல் 1967 வரை காங்கிரசை ஆதரித்து வந்தோம். அதனால் உத்தியோகத்துறையில் முன்னேற்ற மடைந்து வருகிறோம். இவற்றின் பயனாய் நாம் சமுதாய அமைப்பில் ஒரு காரியமும் செய்ய முடியாமல் இருக்கிறோம். இது மிக்க அவமானகரமான காரியம் என்றே நினைக்கிறேன்.

இன்றைய நிலையில் சமுதாயத் துறையில் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

நம் மக்கள் தீபாவளி கொண்டாடுவதும், பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாடுவதுமான, காரியத்தில் சிறிதும் மானாவ மானம் இல்லாமல்  ஈடுபடுகிறார்கள். அரசாங்கமும் இதற்கு ஒத்துழைக்கின்றது.

மக்கள் ஏராளமாகக் கோவில்களுக்கும், உற்சவங்களுக்கும் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். திதி,- தெவசம்,- புரோகிதம்,- அர்ச்சனை முதலியன செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மானாவமானத்தைப் பற்றிச் சிந்தனை இல்லை. படித்த பெரும் பதவியில் உள்ள முட்டாள்களே இதில் பெரிதும் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத் தடுக்க நம்மால் முடியவில்லை. இவை இப்படியே நடந்து கொண்டிருந்தால், சமுதாயத் துறையில் எப்படி மாறுதல் ஏற்பட முடியும்? சமுதாயத் துறையில் மாறுதல் ஏற்படாவிட்டால் நம் இழிவு, சூத்திரத்தன்மை எப்படி மாற்றம் அடையும்?

ஆகையால் சமுதாயத்துறை மாற்றத்திற்கு ஏதாவது கிளர்ச்சித் துவக்கலாம் என்று கருதியே இதை எழுதுகின்றேன்.

எனக்கு உடல்நிலை சரியில்லை; மன உறுதி இருக்கிறதே தவிர முன்போன்ற உடல் சக்தி, வசதியில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சர்க்கார் காரியாலயங்களிலும், சர்க்கார் உணவு விடுதிகளிலேயும் "பிராமணன் - சூத்திரன்" என்று பிரிக்கப்பட்டிருந்த பாகுபாடுகளைக் கிளர்ச்சி- அறிக்கை மூலம் ஒழித்தேன்.

தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடமாடக்கூடாது என்றிருந்ததைக்  கிளர்ச்சி மூலம் ஒழித்தேன். கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது என்றிருந்த தடையை ஒழித்தேன். இவற்றிற்கு எல்லாம் நானே காரணஸ்தனாகவும், முக்கியஸ்தனாகவும்  இருந்திருக்கிறேன்.

இப்போது கோவிலுக்குள் சிலை இருக்கும் இடத்திற்குப் பார்ப்பான் தவிர வேறு யாரும் போகக்கூடாது என்ற தடை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. மேலும் அந்தச் சிலைக்குப் பார்ப்பான் தான் பூசை செய்யவேண்டுமென்கின்ற நிபந்தனையும் இருந்து வருகிறது. அதுமாத்திரம் அல்லாமல் பூசைக்குச் சொல்லும் வார்த்தைகள் வடமொழியா (சமஸ்கிருதமா) கத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கட்டாயமும் இருந்து வருகிறது. இந்த மூன்றும் ஜாதி பேதத்தையும், நம் இழிவையும், பார்ப்பான் உயர்வையும் நிலைநிறுத்தவே இருந்து வருகின்றன. அதுவும் இந்தியாவில் சில நாடுகளில் தான் இருக்கின்றன.

இவை உள்ளவரை "சூத்திரன், - பிராமணன்" என்கின்ற தன்மையும், கீழ்ஜாதி (பிறவி), மேல் ஜாதி (பிறவி), என்கின்ற தன்மையும் இருந்தே தீரும்.  அதற்காகவேதான் இவை இருத்தி வைக்கப் பட்டு இருக்கின்றன.

கோவில்கள், சிலைகள் என்பவை "இந்துக்கள்" என்பவர்களுக்குப் பொதுவான இடங்களே தவிர, எந்த ஜாதிக்கும் தனி உரிமை உடையவையல்ல; ஆதலால் இந்தத் தடைகள், நிபந்தனைகள் இருப்பது 'இந்துக்கள்' என்பவர்களில் பெரும்பாலான 100க்கு 97 பேர்களான மக்கள் சமுதாயத்திற்கு அவமானமும், இழிவுமேயாகும். சாப்பிடும் இடபேதம் ஒழிக்கப்பட்டபின், தொழுகை இடபேதம் மட்டும் எதற்காக  இருக்க அனுமதிக்கப் படவேண்டும்?

இந்தியாவில் மற்ற நாடுகள் சிலவற்றில் முடிதிருத்தும் மருத்துவர்கள், முடிதிருத்தும் தொழிலைச் செய்து கொண்டே அர்ச்சகர்களாக இருந்து பூசை செய்கிறார்கள். காசி ஜெகனாதம், பண்டரிபுரம் முதலிய பல பிரபல ஸ்தலங்கள் என்னும் இடங்களில் கோவில்களில் எல்லா ஜாதியாரும் சிலையைத் தொட்டுப் பிராத்திக்கிறார்கள்.

எனவே இங்கு மாத்திரம் பேதம் இருக்க அனுமதிப்பது பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெரும் இழிவும்- தாழ்மையும் ஆகும்.

எனவே இந்த இழிவை ஒழிக்க, பார்ப்பானர் அல்லாத எல்லா (இந்து) மக்களும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

இதற்காகக் கிளர்ச்சி துவக்க வேண்டியது- சிறப்பாகத் தமிழர்களுக்கு, நமக்கு இன்றியமையாத கடமையாகும். இதை வெகுநாளாகச் சொல்லியும்,  எழுதியும் வருகிறேன்; இனி காலம் தாழ்த்த எனக்கு இஷ்டமில்லை.

எனவே, இன்று முதல் சுமார் ஒரு மாத காலத்திற்குள் இதற்கான கிளர்ச்சி துவக்குவது என்று உறுதி செய்து கொண்டிருக்கிறேன்; அவசியம் துவக்குவதென்றே முடிவு செய்து கொண்டு இருக்கிறேன்.

தேதியும், இடமும், முறையும் சீக்கிரமாகத் தெரிவிக்க இருக்கிறேன்.

அதற்குள் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட- கலந்துகொள்ள இஷ்டமுள்ளவர்கள், முன் வருபவர்கள் தங்களுடைய பெயர்களை முழு விலாசத்துடன் எனக்கு எழுதி அனுப்ப வேண்டிக் கொள்கிறேன். பெண்களும் கணிசமாக முன்வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அனேகமாக என் உடல்நிலையைப் பொறுத்து இதுவே என் கடைசிக் கிளர்ச்சியாக இருக்கலாம். தனித்தனியாகக் கடிதம் எழுதுவது ஒருபுறமிருந்தாலும், சிலர் ஆங்காங்கு ஒரு சம்மத அறிக்கை- விண்ணப்பம் தயாரித்து, அதில் கிளர்ச்சியில் ஈடுபடச் சம்மதிப்பவர்களின் கையொப்பங்களை வாங்கி நமக்கு அனுப்பவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இதை விளையாட்டாகக் கருதாமல் உணர்ச்சியோடு கருதிச் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

பி.கு:- கிளர்ச்சியில் ஈடுபடப் பெயர் கொடுப் பவர்கள் தங்களின் முழு முகவரியைத் தெளிவாக எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரகசியம் என்று குறிப்பிட்டால் அந்தப் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது.

ஈ.வெ.ராமசாமி,

கிளர்ச்சிக் காரியாலயம்,

பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி - 17.

குறிப்பு: கையொப்பம் வாங்கப்படும் பாரத்தில் - கர்ப்பக்கிரகப் பிரவேச, கிளர்ச்சியில் ஈடுபட்டு, தலைவர் கருத்துப்படி நடக்கத் தயாராய் இருக்கிறேன் என்பதாக எழுதி, கையொப்பம் வாங்கவும்.

9-10-1969, 'விடுதலை'யில்

பெரியார் ஈ.வெ.ரா. தலையங்கம்

18.10.1969 முதல் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பட்டியல் வர ஆரம்பித்தது. சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கர்ப்பக்கிரகப் போர்ப்படையில் அணிவகுத்து நின்று தங்கள் பெயர்களை 'நுழைவுக் கிளர்ச்சி'ப் பட்டியலில் பதிவு செய்து கொண்டார்கள்.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக