திங்கள், 29 மே, 2023

தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே! ( பிள்ளையார் உடைப்பு)

 


கி.தளபதிராஜ்

3

1952ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை அபகரித்த இராஜாஜி 1953 மார்ச் மாதம் குலக்கல்வித்திட்டத்தை அறிவித்தார். அப்பன் தொழிலை பிள்ளை கற்கவேண்டும் என்று சொல்லி மனுதர்மத்திற்கு வக்காலத் துப்போட்ட இராஜாஜியை குல்லூகப்பட்டர் என்றே அழைத்தார் பெரியார்.

நம்முடைய இயக்கத்தின் முதல் கொள்கையும் முடிவான கொள்கையும் ஜாதி ஒழிப்பே என்ற பெரியார், அதற்காக எதையும் செய்யலாம்; பார்ப்பான் எப்படித் தன் தருமத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அதருமத்தையும் செய்யலாம் என்கிறானோ, அது போல நம்முடைய இழிவை, கீழ் ஜாதித் தன்மையை மாற்றிக் கொள்ள நாம் எந்த அதருமத்தையும் செய்வது தவறு கிடையாது. இந்த நாட்டில் மனிதன் பார்ப்பனருக்கு தாழ்ந்தவனாக, சூத்திரனாக எதனால் இருக்கிறான் என்றால், கடவுளால் மதத்தால் தான் இருக்கிறான். மத ஆதாரங்களைப் பார்த்தால் கடவுள் தான் சூத்திரனை உண்டாக்கியிருக்கிறான். தீண்டத்தகாதவனை உண்டாக்கி யிருக்கிறான். பார்ப்பானை உண்டாக்கி யிருக்கிறான் என்று சொல்லி மூல வேரில் கை வைத்தார்.

தஞ்சை மாவட்டம் வல்லம் படுகை அருகே வடக்குமாங்குடி என்ற ஊரில் 28.4.1953ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜாதி வேற்றுமைகளுக்கு காரணமாகவுள்ள கடவுள்கள் ஒழிக்கப்பட வேண்டும். கடவுள்களை உடைக்கும் இயக்கம் விரைவில் துவக்கப்படும் என்று அறிவித்தார்.

திராவிடர் கழக தோழர்களே தயாராக இருங்கள்! கடவுள் என்று சொல்லப்படுகிற இந்த பொம்மைகளை ரோட்டிலே போட்டு உடைப்பதற்கு விரைவில் நாள் தரப்போகிறேன். இப்போதே அட்வான்சாக அந்த உருவத்தைப் போல மண்ணிலே செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நான் தேதி கொடுத்தவுடன் பொம்மைகளை எடுத்துக் கொண்டு கூட்டம் சேர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு இடத்திலே, நடு ரோட்டிலே, முச்சந்தியிலே, பலர் கூடுகிற இடத்திலே கொண்டு போய் போட்டு, "இன்ன காரணத்திற்காக இந்த பொம்மையை உடைக்கிறேன். என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்காக உடைக்கிறேன்! என்னை சூத்திரன் வேசிமகன் என்று கற்பித்ததற்காக உடைக்கிறேன்!" என்பதாகச் சொல்லிக் கொண்டு உடைக்க வேண்டும். உடைப்பதற்கு முதல் கடவுளாக, எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்களே, அந்தப் பிள்ளையாரையே தேர்ந்தெடுக்கிறேன். தோழர்களே! தயாராய் இருங்கள் என்று அழைப்பு விடுத்தார். விக்ரகங்களை உடைக்கிறேன் என்றவுடன் கோயிலிலே இருக்கிற விக்ரகங்களை உடைப்போம் என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றார். (விடுதலை 4.5.1953)

மே 6 ஆம் தேதி விடுதலை இதழில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்ட தேதி அறிவிக்கப்பட்டது. 27.5.1953 மாலை கணபதி உருவ பொம்மையை தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய் கலக்கி விடுங்கள்! என அறிக்கை விடுத்தார் பெரியார்.

1.சூத்திரர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தில் இருந்த சூத்திர வகுப்பு உரிமை அரசியல் சட்டத்தின் மூலம் நீக்கப் பட்டு, அய்க்கோர்ட் தீர்ப்பு மூலம் அந்த நீக்கம் உறுதியாகி அமலுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து சூத்திரர்கள் (தமிழர்கள்) உத்யோக உரிமை அற்றவர்களாக ஆக்கப் பட்டு விட்டார்கள்.

 2. பெரிய கிளர்ச்சி செய்து சூத்திரர்களுக்கு கல்வித் துறையில் ஓர் அளவிற்கு சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டுவிட்டது.

3. கல்வித்துறையில் உத்தியோகத்திற்குத் தகுதியாகும் மேல்வகுப்பு படிப்புதான் சூத்திரன்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், பொதுக் கல்வி என்பது கூட சரிவரப் பெறுவதற்கு இல்லாமல் அடிப் படைக் கல்வி எனும் பெயரால் தகப்பன் தொழிலை, பரம்பரைத் தொழிலை படிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது.

2

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அதிசய முறையானது பார்ப்பன நலனுக்கும், சர்வ ஆதிக்க நலனுக்காகவுமே ஏற்படுத்தப்பட்டு இருந்து வருகிற வர்ணாசிரம தர்ம  புதுப்பிப்புக்காகவே இந்த ஜனநாயக ஆட்சி என்பதில் செய்யப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுவதற்காகவே ஆகும். ஆகவே என் சொந்த பொறுப்பில் முன்பு பல தடவை கூறியிருப்பது போல் வர்ணாசிரம வியாதியை ஒழிக்க கடைசி சிகிச்சையாக நாளது மாதம் 27ஆம் தேதி புதன் கிழமை புத்தர் விழா கொண்டாடி மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டத்தில் வர்ணாசிரமவாதிகள் பெரும்பாலோருக்கும் முதல் தெய்வம் என்று கருதப்படுகிறதற்கென்று உருவாக்கியிருக்கும் செயற்கை உருவ கணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்தில் அழித்துவிட வேண்டும் என்பதற்காக பொதுமக்களை அதாவது மனு, வர்ணாசிரம தர்மத்தை வெறுக்கிற பொதுமக்களை, திராவிடர் கழக தோழர்களை, சிறப்பாக இளைஞர்களை வேண்டிக் கொள்கிறேன்.

சர்க்கார் 144 தடை உத்தரவு போட்டால் உருவத்தை அழிப்பதை நிறுத்தி விடுங்கள். அவரவர் கழக காரியாலயத்தில் அல்லது அவரவர் வீட்டில் உடைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். நரகாசுரனை கொன்றதற்காகப் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அதுபோல் உருவத்தை உடைத்துக் கொண்டாடுங்கள். 

உண்மையில் விநாயகன் என்பதாக ஒரு கடவுள் வேதத்தில் சாஸ்திரங்களில் காணப்படவில்லை.வடநாட்டு ஆரியப் புராணங்களில்தான் காணப்படுகிறது. அதுவும் சமீப காலத்தில் தான் திராவிட நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறப்பு : வெகு ஆபாசம். நடப்பு : வெறும் சூது, கொலை, கூடா ஒழுக்கம். திராவிடர்களை அசுரர்களைக் கொன்றதே அதன் வீரம். இதை வைணவர்கள், சங்கர மதக்காரர்கள், ஆரிய சமாஜிகள் மற்றும் பலர் ஒப்புக் கொள்வதில்லை. ஆனதால் பிள்ளையாரை ஒழித்துவிட்டால் கடவுள் ஒழிந்ததாக ஆகாது. பயப்படாதீர்கள்! ஆத்திரப்படாதீர்கள்! கலவரத்திற்கு இடமில்லாமல் சாந்தமாய் சமாதானமாய் நடந்து கொள்ளுங்கள்! (விடுதலை 6.5.1953)

அதனைத் தொடர்ந்து ஒவ்வொருநாளும் பிள்ளையார் பிறப்பின் யோக்கியதையை தோலுரித்து விடுதலை செய்தி வெளியிட்டது. 7ஆம் தேதி விடுதலையில் ஆனைமுக தெய்வ உருவ பொம்மை வேண்டுமானால் கோயிலுக்குப் போகாதீர்கள். அரச மரம், வேப்ப மரம் அடியிலோ, கல்லுக்கட்டு மேடைக்கோ போகாதீர்கள். கண்டிப்பாய் போகாதீர்கள். கிட்ட நெருங்காதீர்கள். இது கண்டிப்பான வேண்டுகோள் உத்தரவாகும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அன்றைய தேதியில் பெரியார் விடுத்த அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. அந்த அறிக்கையில் திராவிடர் கழக தோழர்கள் மட்டுமின்றி கடவுள் தன்மை அறிந்த ஆத்திகர்களுக்கும் இந்த கடவுள் ஏற்புடையதல்ல என்றும் அவர்களும் உண்மை அறிந்து மனிதத் தன்மை பெற்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைத்தார்.  

"கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை. கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான். அதற்கு கோயில், பூஜை,நெய்வேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும், முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் பக்தி நாஸ்திகமாகிறது." 

"கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை. அறிவுள்ள, மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல. பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல. காட்டுமிராண்டி காலத்தில் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த உணர்ச்சியேதான் இந்த 1953 விஞ்ஞான ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?"

"ஆற்றங்கரையில் மூக்கைப்பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய பார்ப்பனர் இன்று சக்கரவர்த்தியாக அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருக்க உரிமை அடையும் படி தனது நிலையை மாற்றிக் கொண்டு இருக்கும் போது, கல்லை செம்பை மண்ணை அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளான நாம், மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் கண்டுபிடித்து மண் பொம்மைகளை அழிக்கப்படாதா?" என்று கேட்டார் 

9.5.1953 அன்று வெளிவந்த விடுதலையில், கடவுள் ஒழிப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 50 ஆண்டுகளாக இவைகளுக்கு எதிராக, ஒழிப்பாளராக இருந்து வந்திருக்கிறேன். என்னுடைய 30 ஆண்டுகால சொற்பொழிவுகளை எழுத்துகளை கவனித்தவர்களுக்குத் தெரியும். நான் இப்படிப்பட்டவன் என்பது காந்தியாருக்கும் தெரியும். இராஜாஜிக்கும் தெரியும். பல பிரபலஸ்தர்களுக்கும், முக்கியமானவர்களுக்கும் தெரியும்.

மதுரையில் 1922ல் தோழர்கள் வைத்தியநாத அய்யர், சீனிவாச அய்யங்கார், ஆச்சாரியார்  முதலியவர்கள் முன்னிலையில் மதுரை சொக்க நாதனையும்,மீனாட்சியையும் புரட்டிக் கழுவி குளத்துப் படிக்கட்டில் வேஷ்டி துவைக்கப் போடுங்கள் என்றேன். சீனிவாச அய்யங்கார் என்னை ராஜரிஷி என்றார்.மற்றவர்கள் கர்மவீரர் என்றனர். எனவே எனது கருத்தில் புதுமை என்ன? தவறு என்ன? என்று கேட்டார்.

சென்னையில் மே 10ஆம் தேதி நடைபெற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டை தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை அடுத்தநாள் விடுதலையில் தோழர் கே.வீரமணி உரை எனக்குறிப்பிட்டு வெளிவந்தது.

"தோழர்களே! மிக முக்கியமான நேரத்திலே நாம் கூடியிருக்கிறோம். பலமான மதப் பிரச்சாரம், வைதீகப் பிரச்சாரம், வேதப் பிரச்சாரம், வரலாற்றினை மாற்றியமைக்கும் பிரச்சாரம் முதலியவைகள் நாடுதோறும் பலமான முறையிலே நடைபெறுகிற நேரத்திலே கூடியிருக்கிறோம். அது மட்டுமல்ல. போர்க்களத்திலே இறங்க தேதி கொடுத்து தலைவர் அழைப்பு விடுத்திருக்கிற நேரத்திலேதான் நாம் கூடியிருக்கிறோம். களத்திலே இறங்கும் முன் பாசறையிலே திட்டம் வகுக்க கூடுவது போல. சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பேசாதவர்கள், அதன் கொள்கையை மறைத்தவர்கள், கேலியும் கிண்டலும் செய்தவர்கள், அலட்சியப்படுத்தியவர்கள் எல்லோரும் இன்று நம்மைக் கண்டு அலறுகிறார்கள்!" என்றார்.

பெரியார் தனது உரையில், "இந்தக் கடவுள்களை உடைக்க வேண்டும் என்று ஏன் சொல்லுகிறோம்? எங்களுக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? கணபதி, கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களால் தானே நாம் சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருக்கிறோம்? இந்தக் கடவுள்கள் இல்லாத நாட்டில் சூத்திரன் பஞ்சமன் இருக்கிறானா? சொல்லுங்களேன்! எங்களை சூத்திரனாக பஞ்சமனாக ஆக்கிய கடவுள்களை ஒழிக்க நாங்கள் கங்கணம் கட்டிக் கொண்டது எப்படித் தவறாகும்?"

"27ஆம் தேதி விநாயகர் லட்சக்கணக்கில் உடைபட வேண்டும்! வீதியிலே விற்கிற பொம்மைகளை வாங்குங்கள்; அங்கேயே போட்டு உடையுங்கள்! அடுத்த வீதிக்கு ஒரு பொம்மை, பக்கத்து வீதிக்கு ஒரு பொம்மை என்று வரிசையாக வாங்கி வைத்துகொள்ளுங்கள். லட்சக்கணக்கிலே உடைத்துத் தள்ளுங்கள். இப்போது விநாயகர்; இதைத் தொடர்ந்து ராமன், கிருஷ்ணன், சுப்பன் இத்யாதி! இத்யாதி...! கடவுள்கள் உடைக்கப்பட வேண்டும். இப்படியாக ஒரு வருஷத்திற்குள் இந்தக் கடவுள்கள் உடைப்பு வேலை தீர்ந்து விட வேண்டும். வரிசையாக பட்டியல் தருகிறேன். வருஷத்திற்குள் புராண பகவான்களை ஒழித்துக் கட்டுங்கள்!" என்று ஆணையிட்டார்.

27ஆம் தேதி மட்டும் விநாயகர் சரியாக உடைக்கப்பட்டு நாடெங்கும் நல்ல முறையில் இந்த உடைப்பு விழா நடைபெறட்டும். ஆச்சாரியார் கொண்டுவந்திருக்கிற புதுமுறை ஆரம்ப கல்வித் திட்டத்தை மாற்றுகிறாரா? இல்லையா? என்று பாருங்கள். தானாகவே மாற்றிக் கொள்வார். என்றார்.

மேலும் விநாயகக் கடவுளின் பிறப்பு ஆபாசங்களைப் புராணத்திலிருந்து எடுத்துக்கூறிய பெரியார், தான் கொண்டுவந்திருந்த பெரிதும் சிறிதுமான இரண்டு பிள்ளையார் பொம்மைகனை எடுத்துக்காட்டி இதைப்போன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, வேண்டுமானால் சாம்பிளாக, அட்வான்ஸாக இந்த சின்ன விநாயகரை தூளாக்குவோமா? என்று கழகத் தோழர்களைப் பார்த்துக் கேட்டார். கூடியிருந்த மக்கள் உற்சாகப் பெருகெடுத்து உடையுங்கள்! உடையுங்கள்! என்று ஆர்வத்தோடு ஆவேசக் குரல் எழுப்பினர். மேடையிலேயே பிள்ளையார் பெரியாரின் கைத்தடியில் உடைபட்டு தூள் தூளானார். 

"சின்ன விநாயகன், சித்தி விநாயகன், ஆனை முகத்தவன், நம்மை சூத்திரனாக்கிய கடவுள் உருவம் உடைக்கப்பட்டது மேடையில் மேசையின் மேல் புரட்சி வேந்தர் புத்துலகச் சிற்பிதன் கையால்!" என்று விடுதலை செய்தி போட்டது.

மாநாட்டை ஒட்டி 10,000 பேர் கலந்து கொண்ட மாபெரும் ஊர்வலத்தின் முன்னே நடிகவேள் எம்.ஆர்.ராதா குதிரை மீது அமர்ந்து சென்றதும் பெரியார் உருவம் பெரிதாக வரையப்பட்ட சித்திரத்தை கோச் வண்டியில் கொண்டு சென்றதும், பகுத்தறிவு இலட்சிய முழக்கங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை தாங்கி கருப்புடை வீரர்கள் அணிவகுத்ததும், தோழர்களின் கொள்கை முழக்கமும் கண்ணையும் கருத்தையும் கவருவதாக இருந்தது என விடுதலை வர்ணித்தது.

அதே நாள் விடுதலை தலையங்கத்தில், "இந்தக் கிளர்ச்சியானது, இன்று இந்த நாட்டில் தன்னை தமிழன், திராவிடனுக்கு தமிழனுக்குப் பிறந்த தமிழன் என்று கருதிக் கொண்டிருக்கும் எல்லா சூத்திரன் என்பவர்களுக்கும் உரிமையான கிளர்ச்சியாகும். சூத்திரத்தன்மை நமக்கு இருந்து வருவதற்கும் அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருவதற்கும் மதமும், அது காப்பாற்றப்படுவதற்கு வேத சாஸ்திரப் புராணங்களும், நமது எதிரிகளான பார்ப்பனர்கள் பிராமணர்களாகவும், ஆதிக்கக்காரர்களாகவும் வாழ்வதற்கு கடவுள்களும் கோவில்களுமல்லவா காரணம்? என்று கேட்கிறேன். ஆம் என்றால் இவைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டாமா? என்று தமிழர்களை, சூத்திரர்களைக் கேட்கிறேன்!"

"நான் இதுதான் சரியான வழி. சூத்திரத் தன்மை ஒழிவதற்கும், நம் ஏழை, தாழ்ந்த ஜாதி எனும் பாமர மக்கள் தங்கள் இழிவு நீங்கி, விகிதப்படி கல்வி பதவி பெற்று முன்னேறுவதற்கு இதுதான் அதாவது இந்த இந்து மதம், இந்து வேத சாஸ்திர புராண இதிகாசங்களுடன், இந்துக் கடவுள்கள் என்னும்உருவ வழிபாடுகள், கோயில், பூஜை, உற்சவம், முதலியவை ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்று கருதுகிறேன். திராவிடர் கழகமும் அப்படியே கருதுகிறது. திராவிடர்களில் பலரும் அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களில் அநேகரும் அப்படியே கருதுகிறார்கள். சித்தர்கள், தெய்வீகத் தன்மை பெற்ற பெரியவர்கள் பலரின் கருத்தும், ஆதாரமும், ஆதரவாய் வழிகாட்டியாய் இருக்கின்றன. வள்ளுவர் குரல் இருக்கிறது. புத்த தன்மம் இருக்கிறது." என்று குறிப்பிட்ட பெரியார் மேலும் அத்வைதம், வேதாந்த ஞானம் போன்றவைகளிலும் ஆதாரங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டி இது மூடர்களுக்கு அல்லாமல், சுயநல சூழ்ச்சிக்காரர்களுக்கு அல்லாமல் மற்ற எவருக்கும் குற்றமாகத் தோன்றாது என்று கூறி பிள்ளையார் சிலை உடைப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

தென்சென்னை மாநாட்டு மேடையிலேயே பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் தந்தை பெரியார் பிள்ளையார் உருவத்தை சுக்குநூறாக்கியதை சுட்டிக்காட்டி 13.5.1953 அன்று மீண்டும் விடுதலை தலையங்கம் வெளிவந்தது.

"பிள்ளையார் சிலை உடைப்பு - சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்பு இரண்டு விநாயக உருவங்களை மாநாட்டில் உடைத்தே காட்டிவிட்டார் தலைவர் பெரியார். சட்டம் அவரை என்ன செய்துவிட்டது? இதுவரையில் அவரை என்ன செய்தது? இனித்தான் அவரை என்ன செய்ய முடியும்? ஆதலால் 27ஆம் தேதி அன்று செத்த பாம்பை அடிப்பது போல் மற்றவர்களும் அடித்து ஆசையை தீர்த்துக் கொள்ளலாம். அதாவது சட்டம் என்ற பாம்பை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தலை நசுங்கும்படி நன்றாக அடித்துவிட்டார் பெரியார். தன்மானம் என்ற கைத்தடியால் அடித்துவிட்டார். இனி அது செத்த பாம்பு தான். இதைக் கூட 27 ஆம் தேதி அடிப்பதற்கு மற்ற தமிழர்கள் முன் வர வேண்டாமா? ஆரிய கற்பனைகள் ஒவ்வொன்றாக ஒழித்துக் கட்ட ஆரம்பித்தால் தான் அடுத்த கட்டம் பூணூல் அறுப்பு கிளர்ச்சியாக இருந்தாலும் இருக்குமோ? என்று அக்கிரகாரம் சிந்தித்துப் பார்க்கும்." என்று எழுதப்பட்டிருந்தது.

(தொடரும்....)


   

13

பிள்ளையார் சிலை உடைப்பு போராட் டத்தில் கலந்து கொள்ள மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அது பார்ப்பனர்களின் விஷமப்பிரச்சாரத்திற்கு தீனி போட்டதாகிவிடும் என்பதை உணர்ந்த பெரியார் அவர்களை நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 14.5.1953 அன்று வெளிவந்த விடுதலை தலையங்கம் அதை தெளிவு படுத்தியது.

14

"திராவிடர் கழகத்தில் ஏராளமான முஸ்லிம் கிறிஸ்தவ தோழர்கள் உறுப்பினர்களாகவும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் இத்தனை ஆயிரம் நபர்களும் பெரும்பாலும் நாஸ்திகர்கள் என்பதும் நமக்கு நன்கு தெரியும். மசூதிக்குச் செல்லாத முஸ்லிம் இளைஞர்களும், மாதா கோயிலுக்கு செல்லாத கிறிஸ்தவ இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றனர். திராவிடர் கழக உறுப்பினர்களாக இருப்பவர்களைத் தவிர அனுதாபிகளாக இருந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பகுத்தறிவாளர்களான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏராளமாய் இருக்கின்றனர்.

ஆனால் 27ஆம் தேதி அன்று நடைபெறப் போகும் கிளர்ச்சியில் மட்டும் இவர்கள் நேரடியாக பங்கு பெறாமல் இருப்பது தான் நல்லது என்பது நம் கருத்து. ஏனெனில் இத்தகையோர் ஆரிய மத ஆபாசங்களை உதறித் தள்ளி விட்டு வெளியேறியவர்களின் சந்ததிகளாவார்கள். குறிப்பாக கிருஷ்ணன், விநாயகர், ராமன், சிவன் போன்ற ஆபாச கடவுள்களின் லீலைகளை கேட்க சகிக்காமல் ஆரிய மதத்தை விட்டு வெளியேறியவர்களே பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆதலால் இத்தகையோர் விநாயகர் உருவ உடைப்பு கிளர்ச்சியில் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே நல்லதென்று தெரிவித்துக் கொள்கிறோம். இது அவசியம் இல்லாதது என்பதுடன், எதிரிகள், வைதீகர்கள், அக்கிரகாரவாசிகள் ஆகியோரின் விஷமப் பிரச்சாரத்திற்குப் பயன்பட்டு விடக் கூடும் என்றும் கருதுகிறோம். ஆதலால் பிற மதத்தவர்கள் என்று கூறப்படுகின்ற திராவிட கழகத் தோழர்கள் அனைவரும் கருத்து ஆதரவு கொடுத்தால் போதும். பொதுக்கூட்டங்களில் ஏராளமாக கலந்து கொள்வது மட்டும் போதும்." என்றது.

பிள்ளையார் உடைப்பு போராட்டத்திற்கு ஒரு வார கால இடை வெளியே இருக்க, மே 20ஆம் தேதி வெளிவந்த விடுதலையில், தஞ்சை தாலுக்கா சுயமரியாதை மாநாடு மே 24ஆம் தேதி நடைபெறும் என்றும் சாமி கைவல்யம் படத்தை தந்தை பெரியாரும், பட்டுக்கோட்டை அழகிரி படத்தை ஏ.பி.ஜனார்த்தனமும், சிங்காரவேலர் படத்தை ஜீவாவும் திறந்துவைக்க உள்ளதாகவும் செய்தி வெளியிட்டது. விநாயகர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வோரின் பட்டியல் ஊர் வாரியாக தினந்தோறும் விடுதலையில் வெளிவந்தது. 

"விநாயகர் உடைப்பு - ஆஸ்திக உலகின் பெரும் கலக்கம்! தங்கள் தெய்வத்தின் தெய்வீகத்தை நம்பாது சர்க்காரிடம் அபயம்!" என்று 21 ஆம் தேதி விடுதலை தலைப்பு செய்தியோடு வெளிவந்தது. ஆச்சாரியார் குட்டிக்கதைகள் கூறி மக்களை கண் துடைக்க முற்படலாம். ஆனால் ஆஸ்திக உலகமோ இந்த விநாயக உடைப்பு நடவடிக்கையை கண்டு தங்கள் ஆஸ்திக கோட்டையில் தீப்பற்றிக் கொண்டது போல் கலங்குகின்றனர்; பதறுகின்றனர். ஆனால் பிள்ளையாருக்கு ஏற்பட்ட ஆபத்தை தடுக்க அந்த விநாயக ரிடமும் அல்லது மற்ற பக்தவச்சலா தெய்வங் களிடமும் முறையிடாது ஆட்சியாளரிடமே அபயம் அடைகின்றனர் ஆத்திக சிகாமணிகள்! என்று கிண்டலடித்தது.

23ஆம்  தேதி விடுதலை தலையங் கத்தில், புத்தர் பிறப்பு மற்றும் பிள்ளையார் வருகை வரலாற்று ரீதியாக விளக்கி எழுதப்பட்டிருந்தது. 

"27ஆம் தேதி புதன் கிழமை அன்று ஆரிய எதிர்ப்பு வீரரான கவுதம புத்தர் பிறந்த நாள். இவர் சத்திரிய வகுப்பில் பிறந்தவர் என்று பார்ப்பனர் கூறுகின்றனர். புத்தர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 653 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். அதாவது 2576 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக வரலாறு கூறுகிறது. ஆரிய இந்து மதத்தை ஒழித்து ஜாதியையும் ஒழிப்பதற்காகவே இவர் தம் அரச பதவி, மனைவி, மக்கள் ஆகியோரைத் துறந்து 45 ஆண்டுகள் பிரச்சாரம் செய்து இந்தியாவெங்கும் தம் கொள்கையைப் பரப்பிவிட்டு எண்பதாவது வயதில் நேபாள பகுதியில் கூசிநாகரா என்ற இடத்தில் காலமானார்.

15

தமிழ்நாட்டில் இன்று காணப்படும் சைவ வைணவக் கோவில்கள் முழுவதும் முன்பு பவுத்தப் பள்ளிகளாக இருந்ததை எல்லா சைவ வைணவ பக்தர்களும் ஒப்புக் கொள்வது மட்டுமல்ல இன்றைக்கும் தஞ்சை காஞ்சிபுரம் போன்ற பல ஊர்களிலும் கோயில்களிலேயே காணலாம். இதற்கு ஏராளமான அகச்சான்று புறச்சான்றுகள் இருக்கின்றன.

ஆரியமதமான பார்ப்பனீயமும் அதன் பிள்ளைகளான சைவ வைணவ மதங்களும் புத்தக் கொள்கைக் காரர்களை எதிர்த்து ஒழிக்காதிருந்திருந்தால் இந்த நாட்டில் கிறிஸ்தவமும், இஸ்லாமும் மருந்துக்குக் கூடக் கண்டுபிடித்திருக்க முடியாது. ஓரளவேனும் முற்போக்கு கருத்துகளைக் கொண்ட மேற்கண்ட இரு மதங்களும் வேரூன்றியிருக்கின்ற சமுதாயத்திடையே ஆரிய மதம் பரவுவது எப்படி முடியாத காரியமோ அது போல், இவ்விரு மதங்களை விடப் பல மடங்கு முற்போக்குக் கருத்துகளை கொண்டிருப்பதான பவுத்த இயக்கம் பரவியிருக்கும் இடங்களில் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆரியம் ஆகிய மூன்று மதங்களும் பரவ முடியாது.

கிறிஸ்துவுக்கு 623 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கவுதம புத்தர் கூறாத நல் ஒழுக்கம் எதையும் கிறிஸ்து புதிதாகக் கூறவில்லை என்று பெர்ரண்ட் ரஸ்ஸல் என்ற பேரறிஞர் 1927 ஆம் ஆண்டிலேயே லண்டனில் ஆற்றிய சொற்பொழிவில் கூறியிருக்கிறார்.

இப்பேற்பட்ட அறிவு இயக்கத்தை அறவே ஒழித்துக் கட்டிவிட்டது இந்த நாட்டில் புகுந்த ஆரியம். இந்த ஆரியத்தை ஒழிப்பதற்கு கச்சையை வரிந்து கட்டி நிற்பது தான் திராவிடர் கழகம். ஆரியத்தைச் சுட்டுப் பொசுக்கிய சாம்பலில் அறிவு நீர் பாய்ச்சி, அதில் பொதுவுடைமை விதையை ஊன்றினால் தான் அது செடியாக மரமாக வளர்ந்து, ஏழை மக்களுக்கு பலன் தரும். இல்லாவிடில் ஆரிய வெப்பம் தாங்காது கருகிப்போகும். ஆதலால் தான் 27ஆம் தேதி என்று ஒரு சிறு ஒத்திகை நடக்கப்போகிறது பிள்ளையார் உருவ உடைப்பு கிளர்ச்சி மூலம்!

இந்த கிளர்ச்சியை கண்டு அறி வுள்ளோர் ஆத்திரப்பட மாட்டார்கள். ஏனெனில் பிள்ளையார் தமிழர்களின் கடவுள் அல்ல. சங்க இலக்கியங்களில் பிள்ளையார் இல்லை. குறிப்பாக தமிழரின் திருமறை என்று கூறப்படுகின்ற திருக்குறளில் விநாயகர் காப்போ, கணபதி வணக்கமோ கிடையாது. இந்தப் பிள்ளையார் தமிழ்நாட்டில் புகுந்த ஆண்டு கி.பி 650 ஆகும். அதாவது 1330 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி அய்ந்தாம் நூற்றாண்டில் விநாயக வழிபாடு வட இந்தியாவில் மட்டுமே இருந்தது. மராட்டிய நாட்டிலும் சிறிது பரவி இருந்தது.

பல்லவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திரவர்மன் என்ற பேரரசனின் மகன் நரசிம்மவர்மன் அவனுடைய தளபதி நரசிம்மன் இவனது ஆட்சி காலம் கிபி 630 முதல் 668 வரையில். பரஞ்சோதி என்ற சிறு தொண்டன் மலைச்சாமி மீது படையெடுத்து அவர்களது தலைநகரான வாதாபியை அழித்தது 642 ஆம் ஆண்டில். அக்காலத்து வழக்கப்படி தோல்வியுற்றோரின் நாட்டில் இருந்த கடவுள் உருவங்களில் ஒன்றாகிய யானை முகம் கொண்ட விநாயகரை கொண்டு வந்து தம் சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் (தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே எட்டுக்கல் தொலைவில் இருக்கின்ற சிற்றூர்) நாட்டினார் பரஞ்சோதி. இது நடந்தது 650 ஆம் ஆண்டு. இவர்தான் வாதாபி கணபதி என்று அழைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் என்ற கிராமத்தில் உள்ள குன்றின் குகைகள் ஒன்றில் காணப் படுகின்ற விநாயகர் உருவமும் அது பற்றிய கல்வெட்டும். மகேந்திரவர்மன் (615 - 630) காலத்தில்தான் முதன் முதல் விநாயகர் தமிழ்நாட்டில் புகுந்தார் என்பதை காட்டுவதாக வேறு சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

ஆகவே கி.பி.630 அல்லது 650ஆம் ஆண்டில் புகுந்த இந்த ஆபாச உருவத்தை காப்பாற்றுவதற்காக இத்தனை ரத கஜ துரக பதாதிகள் புறப்படுவானேன்? இதை உடைத்து நொறுக்குவதில் உண்மை தமிழர்கள் பின்வாங்கலாமா?

புத்தருக்குப் பின்னால் 1273 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நுழைந்தவர் விநாயகர். புத்தர் உலகம் போற்றும் உத்தமர்! விநாயகர் உலகத்தார் காரி உமிழ்கின்ற உருவத்தைக் கொண்டவர்! புத்தரைப் பின்பற்றும் மக்களிடையே ஜாதி கிடையாது!  விநாயகரை வழிபடுகின்ற மக்களிடையே பல்லாயிரம் ஜாதிகள்! புத்தர் ஒப்பற்ற தியாகி! விநாயகர் (புராணக் கதைகளின்படி) கோட்சே பார்ப்பனரைவிட படு மோசமான கொலைகாரன்! புத்தர் வரலாறு கண்ட கர்ம வீரர்! விநாயகர் காளிகள் கட்டிவிட்ட கற்பனையின் பிறப்பு! புத்தர் பார்ப்பனியத்தின் கோடரி! விநாயகர் பார்ப்பனியத்தின் பாதுகாப்பு அரண்!

இப்பேர்ப்பட்ட ஆபாச கற்பனை உருவத்தை உடைக்க வேண்டும் என்பது திராவிட கழகத்தார் முடிவு. போலித் தமிழர்கள் விநாயகர் வரலாறு தெரியாத தமிழர்கள் அக்கிரகார ஆரியர்கள் 27ஆம் தேதி அன்று எப்படியோ நடந்து கொள்ளட்டும்.  உண்மை தமிழர்களே 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறுகின்ற ஆஸ்திக தமிழர்களே! 27ஆம் தேதி அன்று உங்கள் கடமை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! செய்கையில் காட்டுங்கள்! என்று எழுதி சிந்திக்கத் தூண்டியது.

மே 24 ஆம் தேதி தஞ்சையில் சுயமரியாதை மாநாடு ஊர்வலத்தோடு தொடங்கியது. ஊர்வலத்தில் அக்னி சட்டி ஏந்தியும், தீமிதித்தும் தெய்வீக பித்தலாட்டத்தை கழக தோழர்கள் அம்பலப்படுத்தினர். மாநாடு தொடக்கத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கழகக் கொடியேற்றி உரையாற்றினார்,  

அவர் தனது உரையில், "இந்நாட்டில் கழக லட்சியம் வெற்றியடைய வேண்டுமானால், கழகக் கொள்கையில் தோழர்கள் உறுதியாக நின்று திராவிட தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஒன்றுபட்டு கட்டுப்பாடாக நின்று பணியாற்ற வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டார். "மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைக் குறித்து கவலைப்படாமல் கொள்கையில் உறுதியுடன் நின்று கருஞ்சட்டை அணிந்து கொள்கைப் பிடிப்பைக் காட்ட வேண்டும்!" என்று வற்புறுத்தினார். "பெரியார் ஆணையை என்றும் ஏற்று அதன்படி தான் நடக்கத் தயார்!" என்பதாக உறுதி கூறியதுடன் கழகத் தோழர்களும் இந்த படி உறுதியாக இருக்க வேண்டும் என்றார். மாநாட்டில் புத்தர் மாநாடு, உருவ வழிபாடு ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

விடுதலையில் வந்த மற்றோர் செய்தி, "பிள்ளையார் உடைப்பு போராட்டத்தினால் பொது ஜன அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்றும் ஆகவே இந்தப் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறி மதுரை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மதுரை திருவருள் தவநெறி மன்றத்தின் சார்பாக ஒரு மனு கொடுத்திருப்பதாக தெரிகிறது" என்றது. "பிள்ளையார் சிலை உடைப்பு போராட்ட நாளான 27 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஆஸ்திக அன்பர்கள் யாவரும் அவரவர்கள் வீடுகளிலும் ஆலயங்களிலும் விநாயகர் அகவலை பாராயணம் செய்ய வேண்டும்" என்று மாயூரம் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டியார் வேண்டுகோள் விடுத்திருந்ததை 'விநாயகரை வைதீகம் காப்பாற்றுகிறது" என தலைப்பிட்டு மற்றொரு செய்தியும் வெளியிட்டிருந்தது.

பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டத்தை எதிர்த்து சிலர் பெரியார் உருவத்தை உடைக்கப்போவதாக பத்திரிகைகளில் செய்தி வர அப்படி ஒரு வேளை நடந்தால் அதற்கு தோழர்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என திராவிடர் கழக செயலாளர் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை 24 ஆம் தேதி விடுதலையில் வெளியானது.

பிள்ளையார் சிலை உடைப்பைக் கண்டித்து சென்னை சிவனடியார் கூட்டம் சுதேசமித்திரனில் 21ஆம் தேதி எழுதியதற்கு விடுதலை மறுநாளே பதிலடி கொடுத்தது. 

"விநாயகர் உருவ உடைப்புக்கு எதிராக அன்று பெரியார் உருவம் உடைக்கப் போவதாக சில பத்திரிக்கை குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. சில பார்ப்பன பத்திரிகைகளும் பார்ப்பனர்களும் பார்ப்பன கூலிகளும் இந்தப் படி செய்யும்படி தூண்டி வருகிறதாகவும் தெரிய வருகிறது. அந்தப் படி 27 ஆம் தேதி எங்காவது பெரியார் உருவம் உடைக்கப்படுமானால் கழகத் தோழர்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதுடன் அதை மதிக்கவும் தேவையில்லை என்பதோடு அந்தக் காரியத்திற்கு எவ்வித சிறு தடை கூட செய்யக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

மற்றும் அந்த மாதிரியான கூட்டத்திற்கு கழகத் தோழர்கள் கண்டிப்பாக வெறும் காட்சியாளர்களாகக் கூட செல்லக்கூடாது என்பதோடு எவ்வித கலவரத்திற்கும் குழப்பத்திற்கும் காரணஸ்தர்களாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு சமயம் குழப்பத்திற்கும் கலவரத்திற்கும் கழகத் தோழர்கள் யாராவது காரணஸ்தர்களாக இருந்தார்கள் என்று தெரிய வருமானால் அப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!" என்று எச்சரித்தது.

'விடுதலை' 25.5.1953ஆம் நாள், "27ஆம் தேதி பற்றிய முக்கிய குறிப்புகள்!" என்ற தலைப்பில், "பிள்ளையார் உடைப்பு பிரச்சார கிளர்ச்சியை 27 ஆம் தேதியான புத்தர் பிறந்த நாள் தவிர மற்ற நாட்களில் கண்டிப்பாக நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இக் கிளர்ச்சியில் மட்டும் முஸ்லிம் கிறிஸ்தவ பகுத்தறிவு தோழர்கள், சுயமரியாதை தோழர்கள் ஒதுங்கி நிற்கும்படி வேண்டுகிறேன். ஆரிய மதத்தில் பிறந்த கழகத் தோழர்களும் பொதுமக்களும் மட்டுமே கலந்து கொள்வதுதான் எதிரிகளின் விஷமப் பிரச்சாரத்திற்கு இடம் தராமல் இருக்கும்!" என்ற ஒரு அறிவிப்பு மத்திய திராவிடர் கழக செயலாளர் பெயரில் வெளிவந்தது.

திருச்சியில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் 27ஆம் தேதி புதன் மாலை 6 மணிக்கு டவுன்ஹால் முன் நடைபெறும். தி.போ.வேதாச்சலம் தலைமையில் பெரியார் ஈவெரா அவர்கள் மற்றும் பலரும் பேசுவார்கள். மாலை 5 மணிக்கு மணிக்கூண்டில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு டவுன்ஹால் முன்பு பிள்ளையார் பொம்மை உடைப்பு நடைபெறும் என்ற செய்தியும் வெளியானது.

திட்டமிட்டபடி 27 ஆம் தேதி தமிழகத்தின் மய்யப் பகுதியில் புகழ் மிக்க உச்சிப்பிள்ளையார்  கோயில் என்றழைக்கப்படும் மலைக்கோயில் அமர்ந்துள்ள திருச்சி மாநகரில் படு  களேபரமாக நிகழ்ச்சி தொடங்கியது!  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்ட களம்காண தோழர்கள் கருஞ்சட்டையுடன் திருச்சி நோக்கித் திரண்டனர். 

புத்தர் நினைவுநாள்! அதோடு கூடிய வினாயகர் சிலை உடைப்பு! தோழர்களிடையே உற்சாகம் கரை புரண்டது. திருச்சி மணிக்கூண்டிலிருந்து மாபெரும் ஊர்வலம்! பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் அணிவகுக்க, ஆரியத்தின் வேரறுக்கப் பிறவி எடுத்து வந்த ஆரிய வைரி புத்தர் பெருமானின் உருவம் வரையப்பட்ட பெரும் பதாகை பொருத்திய வாகனம் முன்னே ஊர்ந்து சென்றது.  ஓர்வல வழி நெடுகிலும் புத்தர் வகுத்த வழிபாடுகள் ஓங்குக! புத்தர் கொள்கைகள் ஓங்குக! உருவ வழிபாடுகள் ஒழிக! சிலை வணக்கம் ஒழிக! பெரியார் வாழ்க! எனத் தோழர்கள் தொடர் முழக்கமிட்டனர். கழகத் தோழர்களைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் பேரணியில் அணிவகுத்தனர். தெருக்களின் இரு மருங்கிலும் பார்வையாளர்களாக திரண்டிருந்த மக்களும் ஊர்வலத்தைத் தொடர்ந்த படி மேடை நோக்கிக் குவிந்தனர். 

பேரணி டவுன்ஹாலை சென்ற டைந்தது. கணபதி ஒழிக! உருவ வழிபாடு ஒழிக! என லட்சம் குரல்கள் ஒரே நேரத்தில் விண்ணை முட்ட பல்லாயிரக் கணக்கான பிள்ளையார் சிலைகள் சுக்கு நூறாகி தெறித்தன. 

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தக் காட்சியை,  "பெரியார் பிள்ளையார் சிலை உடைத்த காட்சி - மக்கள் கடலின் மகிழ்ச்சி!" என விடுதலை மிகுந்த உற்சாகத்தோடு செய்தி வெளியிட்டது.

பிள்ளையார் சிலை உடைப்பைத் தொடர்ந்து பெரியார் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தோழர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த திருச்சி நீதிபதி, களிமண் கடவுள்களை உடைப்பது தவறல்ல! என்று சொல்லி தள்ளுபடி செய்தார்.  வழக்கு அப்பீல் போகவே, "சம்பந்தப்பட்ட பிள்ளையார் உருவம் வழிபாட்டில் உள்ள கடவுள் உருவமல்ல. அது அவருடைய சொந்த சொத்து ஆகிறது. அதை அவர் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்தவோ அல்லது அழிக்கவோ செய்யவும் உரிமை உண்டு" என்று அப்பீல் மனுவை விசாரித்த செசன்ஸ் நீதிபதி மீண்டும் வழக்கைத் தள்ளுபடி செய்தார். (விடுதலை 13.1.1954)

ஜாதி ஒழிய வேண்டுமானால் இந்த கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் ஒழிய வேண்டும்! ஒழிக்கப்பட வேண்டும்!! என்று சொல்லி பெரியார் தானே முன்னின்று நடத்திக் காட்டிய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல் கல். பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்ட நாளை (மே 27!) மனதில் நிறுத்துவோம்!

தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே

தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக