வியாழன், 4 மே, 2023

இதோ பெரியாரில் பெரியார்!

  

பட்டுக்கோட்டைஅழகிரிசாமி

4

13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

 அன்புமிக்க தலைவர் அவர்களே, தோழர்களே, தாய்மார்களே! பெரியார் அவர்கள் படத்தைத் திறந்து வைப்பதென்றால் அது லேசான வேலை அல்ல என்பதான எண்ணங் கொண்டு அப்படிப்பட்ட கஷ்டமான வேலையை எனக்கு அளிக்க வேண்டு மென்று கருதியே, எனக்குப் பெரியார் அவர்களின் படத்தைத் திறந்துவைக்கும் பணியை, வரவேற்புக் கமிட்டியினர் அளித்திருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன். அதெப்படிக் கஷ்டமென்று நீங்கள் நினைக்கக் கூடும்.

நான் பெரியாரை நன்கு அறிவேன்

சாதாரணமாக நாம் சிற்றுண்டிச் சாலைக்குச் செல்வோமானால் அங்குள்ள நம் தோழர், இது சூர்யகலா, இது சந்திரகலா, இது பாதுஷா, இவை இனிக்கும். இது சவ் சவ், இது கவ் கவ் இவை புளிக்கு மென்றால், நமக்கு முன்னாடியே இவை அறிமுகமாகாத பண்டங்களாயிருப்பதால் புளிக்குமோ தித்திக்குமோ என்று சந்தேகிக்க இடமிருக்கலாம். ஆனால், இது லட்டு, இது ஜிலேபி, இவை கசக்கும் என்று கூறினால் நாம் சும்மா இருப்போமா? “அட போடா போ, எனக்குத் தெரியும் லட்டு தித்திக்குமென்று" என உடனே சந்தேக மின்றி கூறி விடுவோம். காரணம் இப்பண்டங்களை நாம் நன்கு அறிந்திருப்பதால், அதே போல் பெரியாரைப் பற்றி நான் நன்றாய் அறிந்தவனாதலால் 30 ஆண்டு களாக நான் நெருங்கி அறிந்திருக்கும்போது அவரைப் பற்றி நானென்ன கஷ்டப்பட்டுக் கூறவேண்டியிருக்கும்? அன்றியும் அவரைப்பற்றி உங்களிடம் பேசுவதென்றால் அது கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதையாகத்தான் முடியும்.

அறிவை அளக்க அறிவுமானி உண்டா?

நவமணிகள் என்று கூறப்படும் மரகதம், மாணிக்கம், வைடூரியம், பச்சை, நீலம் கெம்பு, புஷ்பராகம், கோமேதகம் முதலியவற்றிற்கும், பவளம், முத்து இவைகளுக்கும், அவற்றின் ஒளி, நிறை இவற்றைக் கொண்டு ஓரளவுக்கு மதிப்புக் கூறிவிடலாம். ஆனால் அறிவின் உச்சியையோ, சிந்தனையின் சிகரத்தையோ, பகுத்தறிவின் எல்லையையோ ஒருவனால் அள விட்டுக் கூறமுடியுமா? அதற்கு ஒரு அளவுகோலோ துலாக்கோலோ உண்டா? ஏதாவது மீட்டர் தான் உண்டா? தோழர்களே சிந்தித்துப் பாருங்கள்! ஆலோ சித்துக் கூறுங்கள்! அறிவை அளக்க எங்காவது அறிவு மானி உண்டா? அப்படி இருக்க அறிவின் ஜ்வாலையா கவும், சிந்தனையின் பெட்டகமாகவும், ஆற்றலின் சிகரமாகவும், எல்லை காணமுடியாத பகுத்தறிவின் இருப்பிடமாகவும் இருந்துவரும் பெரியாரை நாம் எந்தக் கோல் கொண்டு மதிப்பிட்டுப் பார்ப்பது? வயது ஏற, ஏற திறனும் ஏறிக் கொண்டேதான் போகிறது. கோகலே ஹாலில் ஒரு சாண் நீண்டதென்றால் சேலத் தில் ஒரு முழம் நீளுகிறது. சேலத்தில்தான் ஒரு முழம் என்றால், திருவண்ணாமலையில் ஒரு கெஜம் நீளு கிறது. இப்படியாக இவரது பகுத்தறிவும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டேதான் வருகிறது.

பகுத்தறிவும் அன்பும் வகுத்த வழி 

இத்தகைய ஒரு பகுத்தறிவின் காரணமாகத்தான் என்னைப் போன்ற அடங்காப்பிடாரிகளும்கூட, அவரை நாடி வரவேண்டியிருக்கிறது. அவரது தெளிந்த பகுத்தறிவுத் தேனின் ருசியை ஏற்கெனவே அனுபவித்ததன் காரணமாகத்தான், அந்த ருசியில் மயங்கித்தான், இன்று மதுதேடி அலையும் வண்டு களைப்போல், நாம் இங்கு கூடியுள்ளோம். ஒளி கண்டு மயங்கிக் கிடக்கும் விட்டில் பூச்சிகளைப்போல், நாமும் அவரது கருத்துக்கள் என்னும் பிரசங்கத்தேனையுண்டு இன்று திளைத்திருக்கிறோம். அவரது பகுத்தறிவு, நுண்ணிய நுண்ணறிவுக்கும் மிக நுண்மையானது. ஆகவேதான் நம்மைப் பிற நாட்டவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நம்மை விட "அதிர்ஷ்டசாலிகள்?" இவ்வுலகில் வேறொரு மக்கள் கூட்டம் இருக்கமுடியாது உண்மையாகத்தான் கூறுகிறேன். 

பொல்லாத கொடிய விரியன் என்று கூறத் தோன்றுகிறது.. பாம்புகள் நம்மை ஆட்சிபுரிந்து வரும் போது, ஒரு பக்கம் இவ்வற்பர்களின் அடக்குமுறைத் தொல்லையும், மற்றொரு பக்கம் அன்பர்களின் பட்டி னிக் கூப்பாடும் நம்மை வாட்டிவரும் போது. பெரியா ரைப் போன்ற உருவங்கள் நம்மிடையே இருந்து சற்று ஆறுதல் ஊட்டி வருவதால்தான் நாம் உயிரோடு இந்நாட்டில் வாழ முடிகிறது. இன்றேல் நாம் என்றோ இறந்திருப்போம் அல்லது இந்நாட்டை விட்டேனும் எங்காவது ஓடிவிட்டிருப்போம். ஆம். பெரியார் ஒரு வர்தான் நம்மை இந்நாட்டோடு இணைத்து வைத் திருக்கிறார். அவரது பகுத்தறிவும் அன்பும் தான். நம்மை அவர்பால் இழுத்து அவர்வழிச் செல்லத் தூண்டுகிறது. அன்னாரையோ அல்லது, அன்னாரது இயக்கத்தின் வளர்ச்சியையோ சரிவர அறிந்திருக்க மாட்டார்கள். இந்தப் பதவி வேட்டை உருவாரங்கள். ஆகவேதான் சில சந்தர்ப்பங்களில் அவரை எதிர்த்து விஷமம் செய்து பார்க்கிறார்கள்.

எண்ணினார் பனகல், 

இயற்றினார் பெரியார்

இவர் தமது இயக்கத்தை ஆரம்பித்த காலம் 1925 அல்லது 1926 ஆக இருக்கவேண்டுமென்று நினைக்கி றேன். அந்தக் காலத்தில் நம் மாகாண அமைச்சராக இருந்தவர், நமது மதிப்பிற்குரிய பனகல் அரசர் ஆவார்கள். அவர் தலைசிறந்த அறிவாளி, கைதேர்ந்த ராஜதந்திரியும்கூட, அவர் “பொதுப்பணம் ஏராளமாகக் கோவில்களில் வீணாக்கப்படுகிறது, அனைத்தும் பார்ப்பனின் வாழ்வுக்கே உபயோகப்பட்டு வருவதோடு, நம் மக்கள் வேறு-மடையர்களாக்கப்பட்டு வருகிறார்கள்; அதைக் கட்டுப்படுத்த கோவில்கள் தம் வரவு செலவுக் கணக்குகளைச் சர்க்காருக்குக் காட்ட வேண்டும் என்று சட்டம் செய்யத் தீர்மானித்தார். அப்படிப்பட்ட ஒரு சட்டம் செய்வதற்கு அவசியம் பொதுமக்கள் ஆதரவு வேண்டும். அவருடைய அன்றைய ஜஸ்டிஸ் கட் சியோ, மிட்டாதார், மிராஸ்தார், ஜமீன்தார் இவர்களின் கூட்டமாக இருந்ததால் தன் கட்சித் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைப்பது கஷ்டமென்று கண்டு கொண்டார். அத்திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவை யாராவது திரட்டிக் கொடுத்தால் நலமாக இருக்குமென்று கருதி, அப்பணியை யாரிடம் ஒப்புவிப்பதென்று யோசிக்கலா னார். அவருடைய யோசனைக்குப் பெரியார் ஒருவர் தான் பிடிபட்டார். பெரியாரிடம் வந்து இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பெரியார்அவர்களுடன் கலந்து பேசினார். காங்கிரசிலிருந்த போதே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும். சமுதாயச் சீர்திருத்தத்திற்கா கவும் பாடுபட்டு, அதன் காரணமாக அதைவிட்டு வெளியேறி விலகியிருந்த பெரியார் அவர்களும் அவரது வேண்டுகோளுக்கு இணங்கித் தமிழ்நாடெங் கனும் இப்பொல்லாத பிராமணியத்தை எதிர்த்துப் பிரச் சாரம் செய்யத் துவங்கினார். "சாமிக்கு அரிசி பருப்பு ஏன் படைக்க வேண்டும்? அந்தச் சாமி சாப்பிடுவதாக எந்த டாக்டராவது சர்டிபிகேட் எழுதிக் கொடுப்பாரா? அப்படியிருக்க சாமிக்கென்று கூறிச் சோம்பேறிப் பார்ப்பனர்கள்தானே அதை உண்டு வயிறு வளர்க் கிறார்கள். பாடுபட்டு பட்டினி கிடக்கும் நீங்கள்தானே அதற்கும் படி அளந்து வருகிறீர்கள்” என்கின்ற பல்லவி யைத் துவக்கி, "சாப்பிடட்டும்! தொலைந்து போகிறார் கள். அதற்குக் கணக்காவது காட்டி தொலைக்கட்டுமே! கணக்கில்லாவிட்டால் அவர்கள் பொது சொத்துக் களையெல்லாம் நாளா வட்டத்தில் தமது சொந்தச் சொத்தாக்கிக் கொள்வார்களே! நீங்கள் அழ, அழ, அவர்கள் உங்களைக் கொள்ளையடிப்பதா?” என்பதாக இன்னும் இப்படிப் பல விஷயங்களைக் கிளப்பி ஆங்காங்கு கர்ஜித்து வந்தார். அந்தச் சமயம் பார்ப்பனர் “ஜஸ்டிஸ் கட்சி சாமிகள் தலையில் கைவைத்துவிட்டது” என்று விஷமம் செய்து, மக்களை ஜஸ்டிஸ்கட்சி மீது வெறுப்படையச் செய்து இருந்தனர் என்றாலும் பெரியார், பேச்சைக் கேட்ட பிறகு சட்டம் அவசியம் தான்; கணக்கு வழக்கு கவனிக்க வேண்டியதுதான் என்று கருதிக் கொண்டார்கள். பனகல் அரசருக்கும் இந்து மத பரிபாலனச் சட்டம் இயற்றுவது சுலபமாக முடிந்தது.

எதிர்ப்பின் விளைவு சுயமரியாதை இயக்கம்

அந்த இந்து மத எதிர்ப்புப் பிரசாரத்தில் சேர்ந்த வர்கள் தான், நாங்கள் ஏழெட்டுப் பேர்கள். சட்டமியற்று வதற்கு ஆதரவு தேடித் தந்ததும், பெரியார் அவர்கள் சிந்திக்கலானார். அவர் பெரிய தூரதிருஷ்டியுடையவர். ஆதலால் யோசித்துப் பார்த்தார். இந்த 'ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களோ பணக்காரர்கள்: பணத்தைக் காப் பாற்ற தம் பதவியை நீடிக்க எதையும் செய்ய இவர்கள் துணிவார்கள். இவர்களை நம்பி நம்மால் என்ன செய்ய முடியும்? இவர்களது வேலை முடிந்ததும் நம்மை இவர்கள் கைவிட்டு விடுவார்களானால் நாம் என்ன செய்வது; நாம் மக்களிடையே செய்த இவ்வளவு பிரச் சாரத்தையும் வீணாக்குவதா? கூடாது! கூடாது! தனி இயக்கம் ஒன்று கண்டே தீரவேண்டும். அவ்வியக்கத் திற்கு என்ன பெயர் கொடுப்பது' என்று சிந்தித்தார். தம் ஆபீஸ் அகராதிகளையெல்லாம் புரட்டிப் பார்த் தார். அப்போது கண்டெடுத்த வார்த்தைதான், 'சுயமரி யாதை' என்பது. அப்போது தோற்றுவித்ததுதான் சுய மரியாதை இயக்கமும் ஆகும்.

சுயமரியதை வளர்ப்பினால் 

தோன்றிய பேருண்மைகள் 

அவ்வியக்கத்தின் மூலம் பிராமணியத்தை தாக்க ஆரம்பித்தோம். அவர்கள் சாஸ்திரத்தை ஆதாரமாக காட்டினார்கள். அதை ஆராய்ந்து பார்த்து, அதை ஆரியம் தமக்காக எழுதி வைத்துக் கொண்டதென் றோம்! பரசாரார் வாக்கு மனுவாக்கு என்று கூற ஆரம் பித்தார்கள். அவற்றிற்கும் தக்க மறுப்புகள் கூறினோம். புராணங்களையும் உபநிஷத்துக்களையும் காட்ட ஆரம்பித்தார்கள். அவற்றையும் ஆராய்ந்து பார்த்து அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்துக்கூற ஆரம்பித் தோம். முடிவில் கடவுளை ஆதாரமாகக் காட்ட ஆரம்பித்ததும், “நிறுத்து! தம்பி அதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது; எமக்கும் ஒன்றும் தெரியாது" என்று பதில் கூறினோம்! இவற்றையெல்லாம் எங்களுக்குக் கூறித்தந்தவர் பெரியார்தான். சுயமரியாதைத் தத்துவத் தையே நமக்கும் நமது இவ்வுலகத்திற்கும் அளித்தவர் பெரியார் தான். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்ததும் அவரேதான். அந்தப் பெருமையில் பங்கு கொள்ள வேறு யாருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது.

அவர் தமது சுயமரியாதைத் தத்துவத்தின் மூலம், நமக்கு எதையும் எளிதாக்கித் தந்தார். நமது அறியா மையை அகற்றி நமக்குப் பகுத்தறிவு ஊட்டினார். நமது ஏழ்மையையும் தாழ்மையையும்கூட மறக்கச் செய்தார். ஏழை பணக்காரன் என்பதில்லை. தொழிலாளி முதலாளி என்பதில்லை! அனைவரும் தோழனுக்குத் தோழன்தான் என்ற மனப்பான்மையை ஊட்டினார்; அதை வளர்த்தார். ஜமீன்தாரர்களை முரட்டுப் பணக் காரர்கள் என்றார். கடவுள் வெறும் உருளைக்கல் என்றார். பிராமணியம் அந்தக் கடவுளுக்குத் தூண். அத்தூணைச் சுக்கு நூறாக்கினால்தான் நாம் இன்ப வாழ்வு வாழ முடியும் என்றார். இவற்றைக்கூறிட ஒரு சிறிதும் அஞ்சினாரில்லை. யாரோ ஒரு அன்பர் சற்று முன் அஞ்சா நெஞ்சம் படைத்த அழகிரிசாமி என்று என்னைப் பாராட்டினார். எனக்கு அஞ்சா நெஞ்சத்தை அளித்தவர் பெரியார்தான். அவர் எனது அறிவிலிட்ட வித்துத்தான் என்னை அஞ்சா நெஞ்சமுடையவனாக் கியது. அவரது அஞ்சா நெஞ்சத்துக்கு ஒரு சான்று கூறுகிறேன் கேளுங்கள்.

பெருந்தன்மைக்கு எல்லை பெரியார்!

ஒரு சமயம் விருது நகரில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத்தையும், ஆரியத்தின் சிஷ்ய கோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் மேடை மீதிருந்தேன். பெரியாரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த தோழர் ஒருவர், கனல் கக்கும் கண்களோடு தம் கத்தியை உருவிக் கொண்டு பெரியா ரைக் குத்திவிட ஓடிடோடி வந்தார். வந்தவரைக் கண்டு அஞ்சி ஆடாமல், அவரது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பெரியார். அவரை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஆத்திரம் அடங்கச் செய்தார். அதன்பின் என்ன செய்தார்? அவரைப் போலீசினிடம் ஒப்புவித்தாரா? அதுதான், இல்லை. அவரை வெளியில் விட்டால் கூட்டம் அவரைக் கொன்றுவிடும் என்பதைப் பெரியார் அறிவார். ஆகவே அவரைத் தக்க பாது காப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவ்வளவு பெருந்தன்மை படைத்திருப்பதால்தான் அவரைப் பெரியார் என்று நாம் அழைக்கிறோம்.

அச்சத்தை ஓட்டி 

அறிவை வளர்த்தவர் பெரியார்!

கடவுளென்றால் அதெல்லாம் “வெறும் புருடா" என்று கூறினார். "மதம் மடமையின் விருந்தென்று" புகன்றார். “புராணம் ஒரு ஏமாற்றுவித்தை” என்றார். “பிராமணியம் ஒரு படுமோசப் பாதகம்' என்றார். “சாஸ்திரங்களைக் குப்பை" என்று குறித்தார். எதைக் கண்டு நாமெல்லாம் அஞ்சினோமோ. எதற்கு நாமெல் லாம் அடிபணிந்திருந்தோமோ, எதை நம்மவர்கள் சிலர் பெருமை என்றுகூட நினைத்து வந்தார்களோ, அவற்றையெல்லாம் அறிவு கொண்டு விளக்கி நமது வாழ்க்கையை ரொம்ப இலகுவாக்கினார்.

படித்தவர் - படியாதவர்கள், ஜமீன்தாரர்கள் - குடியானவர்கள், உத்யோகஸ்தர்கள் - குமாஸ்தாக்கள், பணக்காரர்கள் - ஏழைகள் ஆகிய சகலரையும் காணும் நமது கண்களையும் ஒரே மட்டமாக்கினார். எம்.பி. பி.எஸ். டாக்டரையும் நமது அம்பஷ்ட வைத்தியரையும் அவர்களது படிப்பைக் கொண்டல்ல. அவர்களது அனுபவத்தைக் கொண்டு, அவர்களது செயலாற்றும் திறனைக்கொண்டு கணக்கிடும்படி செய்தவர் அவர் தான். “எப்படி பெரிய ரோட்டு உருளையானது. ரோட் டில் பரப்பப்பட்டுள்ள சிறுகல். பெருங்கல் அனைத் தையும் தன் பளுவால் சரிமட்டமாக்குகிறதோ, அப்படித் தம் அறிவுருளையால் அனைத்தையும் சமமாக்கித் தந்தார்" நமது அறிவின் தந்தை பெரியார். முகத்து ரோமத்தை நீக்க உதவுவது கூரிய கத்தி, அதைக் கூர்மைப்படுத்தித் தருவது சாணைக்கல். அதே போல் பகுத்தறிவுதான் நமது மடைமையைப் போக்கும் கத்தி. அப்பகுத்தறிவுக்குச் சாணைக்கல் போல் உதவி செய்வதுதான் கல்வி. ஆகவே கல்வியைக் கல்லடா தம்பி! அது அறிவைக் கூர்மைப்படுத்தும் தம்பி என்று நமக்குக் கூறினார். நெடுங்காலமாகவே நாம் நமது அறிவை உபயோகப்படுத்தாததால் அது மழுங்கி விட்டது. ஆதலால் அதைக் கல்வியென்னும் சாணைக் கல்லால் தீட்டுடா தம்பி! என்று கூறினார்.

நலிவை ஒழித்து நமக்கு 

வாழ்வளித்தவர் பெரியார்! 

படித்தவர் என்றால் ஒன்றும் பிரமாதம் இல்லை. படித்து விட்டால் மட்டும் ஒருவன் அறிவாளியாகிவிட மாட்டான். அறிவாளிகள் எல்லாம் படித்துத்தான் அறிவாளிகள் ஆனார்கள் என்று கூறுவதற்கும் இல்லை. அல்லது படித்திருப்பதினாலேயே ஒருவன் சகல காரியங்களிலும் நிபுணன் ஆகிவிடமுடியாது. நன்றாகப் படித்துள்ள ஒரு நீதிபதி, ஒரு நல்ல நாற்காலி மேஜையைச் செய்துவிட முடியாது. அது தச்சன் தொழில், ஆகவே அவன்தான் அதைத்திறம்படச் செய்வான். அந்த நாற்காலி செய்ய முடியாததால், அந்த நீதிபதியை அறிவற்றவன் என்று கூறிவிடமுடியுமா? அந்தத் தச்சனையே நாம் ஒரு உளியடித்துக் கொடு என்றால், அதைத் திறம்பட அவனால் செய்து தர முடியுமா? அவனால் செய்து தர முடியாது? உளி செய்பவன் கருமான். அவனுக்குத் தான் உளி செய்யும் பக்குவம் தெரியும். ஆகவே அவனவனுக்கு அந்தந்தத் தொழிலில் தேர்ச்சியுண்டு என்று கூறலாமே தவிர, ஒருவன் மற்றவனைவிட அறிவில் உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நம்மால் கூற முடியாது. வேண்டுமானால் கவனித்துப் பாருங்கள்.

நமது எத்திராஜும் வக்கீல் படிப்புப் படித்தவர்தான். நமது வெங்கடரத்தினமும் வக்கீல் படிப்புப் படித்தவர் தான் ஆனால், அவர் நாளொன்றுக்கு ரூ 2000, 3000 வாங்குகிறார். இவர் ஒரு பெட்டீஷனுக்கு ரூ 0-8-0 பீசுக்குக் கோர்ட்டில் லாட்டரி அடிக்கிறாரே, படிப்புத் தான் அறிவானால், இவர்களிருவரும் சரிவிகிதத்தி லன்றோ பணம் சம்பாதிக்க வேண்டும். இதற்கெல்லாம் அவர்களின் படிப்பல்ல, அறிவுதான் மூலக்காரணம் என்பதை அறிய முடிகிறதா? இல்லையா? இப்படி எல் லாம் விளக்கிக்கூறி, பகுத்தறிவுதான் உலகை ஆளும் என்று காட்டி நமக்கு வாழ்வளித்தவர் பெரியார்தான்.

தேவையை எண்ணு! 

செலவையும் சிக்கனமாக்கு!

செழுமையில் ஆசைப்படாதே! உன்னுடைய தேவையை அனாவசியமாக அதிகரித்துக் கொள் ளாதே! மற்றவர்களின் ஆடம்பரத்தைக் கண்டு. அவ்வாடம்பரத்தில் மோகம் கொள்ளாதே! இன்று வெறும் ஆசைக்கென்று விருப்பப்படும் பொருளானது நாளைக்கு அடைய முடியாமற் போனால் நமக்குத் துன் பத்தையே விளைவிக்கும்! ஆனதால் அவசியமில்லாத பொருளைத் தேவையென்று கருதிவிடாதே! எளிய வாழ்க்கை நடத்து! ஏமாந்து போகாதே! என்று எச்சரிக்கை செய்து நம் வறுமையை மறக்க வழிசெய்து தந்தவரும் பெரியார்தான்.

அவரது பொருளாதார சிக்கனமும் சற்று அலாதி யானதுதான். முழுக்கைச் சட்டையில் மோகம் கொள் ளாதே! நாலு முழுக்கைச் சட்டைகளுக்கு வேண்டிய துணியில், 5 அரைக்கைச் சட்டைகள் தைத்துக் கொள் ளலாமே! வேலை செய்யவும் சவுகரியமாயிருக்குமே! என்று கூறிச் சட்டை தைத்துக் கொள்வதில்கூடச் சிக்கனத்தை அனுஷ்டிக்கும்படி செய்வார். அதனால் தான் அவர் எப்போதும் அரைக்கைச் சட்டைகளை அணிந்து வருகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

அவரது சிக்கனத்திற்கு மற்றோர் உதாரணம் கூறுகிறேன் கவனித்துக் கேளுங்கள். அவர் ஒரு சமயம் கும்பகோணம் சென்றிருந்தபோது தோழர் சின்னத் தம்பி வீட்டிற்கு விருந்துண்ணச் சென்றிருந்தாராம். அவர் வீட்டில் ஒரு ரேடியோ இருக்கக் கண்டு என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்று கேட்டாராம். அவர் ரூபாய் எண்ணூறுக்கு வாங்கியதாகச் சொன்னாராம். அதைக் கேட்தும் அவர் பாத்தீங்களா, இந்த திருட்டுப் பசங்க செய்கிற வேலையை! சாதாரண நாட்டுக் கள்ளிப் பலகையில் இந்தப் பெட்டியைச் செய்தால், இன்னும் 200 ரூபாய் குறைய விற்கலாமே! இந்தப் பளபளப்புக்காக நாமும் 200, 300 அதிகம் தர வேண்டியிருக்கிறதே! விலை சரசமாயிருந்தால் இன்னும் அதிகம் பேர்கூட வாங்கச் சவுகரியமாக இருக்குமே! என்று கூறினாராம். மலர் மாலை அணிவதும் வாழை இலையிலுண்பதும் மக்கள் உழைப்பை மதிக்கும் செயலன்று.

இப்படி எதற்கெடுத்தாலும் சிக்கனந்தான். ஆம்! மண்ணும் விண்ணும்கூட இவருக்குச் சிக்கனம் செய்யப்பட வேண்டியவை தான். காரணமின்றி அவர் நமக்குச் சிக்கனம் போதிக்கவில்லை. சிக்கனம் அனைவருக்கும் அவசியமானது; அதுவும் நம்மைப் போன்ற ஊதாரி மக்களுக்குச் சிக்கனக் கருத்து மகா மகா அவசியமானது. எதையும் வேஸ்ட் செய்வதுதான், வீண்செய்வதுதான் நமது பழக்கம். பாருங்கள்! இந்த மேஜைமீது குவிந்து கிடக்கும் இம்மலர் மாலைகளால் யாருக்கு என்ன லாபம்? இம்மாதிரி எத்தனை மாலைகள் அன்றாடம் பழாகின்றன? நம் நாட்டில் மாலை அணிவித்தல் என்ற அர்த்தமற்ற சடங்கால், தினம் எத்தனை ஆயிரம் ரூபாய்கள் பாழாகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்காக எத்தனை பேருடைய உழைப்பு, எத்தனை ஏக்கர் பூமிகள் வீணாக்கப்படுகின்றன என்பதுபற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

அடுத்த அதிசயம் என்னவென்றால், வேறெந்த நாட்டிலும் இல்லாத வாழை இலையில் உண்பதென்ற பழக்கம் நம் நாட்டில் இருந்து வருகிறது. கோப்பையில் சாப்பிடுவது அநாசாரம். வாழை இலையில் உண்பது நமக்குப் பெருமை. இப்பெருமைக்காக லட்சக்கணக் கான ரூபாய் பெறுமான இலைகள், அன்றாடம் வீதியில் எறியப்பட்டு வீதியை அசிங்கப்படுத்தி வர வேண்டி யதா? பகுத்தறிவுக் கொண்டு சிந்திக்க வேண்டாமா நீங்கள்? வாழைத் தோட்டங்கள் இல்லையானால், அவ்விடங்களில் எவ்வளவு அவசியமான உணவுப் பொருள்கள் பயிரிடக்கூடும்? வாழைக்காயென்ன அத்யாவசியப் பொருளா? வாழையிலை அறுப்பதால், வாழைக்காய் அதிகம் காய்க்கப்படுவதில்லை. ஆகவே இலைக்கென்று தனித்தோட்டங்கள் சிலர் வைத்து வருகிறார்கள். வாழையுற்பத்தி குறைக்கப்பட வேண் டும். மலர்கள் உற்பத்தியும் குறைக்கப்பட வேண்டும். மக்களும் வாழையிலையில் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுத் தட்டுகளில் உண்ண வேண்டும். மலர் மாலை அணிவித்தலை விட்டுத் துணி மாலையாவது நூல் மாலையாவது அணிவித்தல் வேண்டும். மற்றவர் கள் செய்யாவிட்டாலும், பகுத்தறிவுப் பாதை வழிச் செல்லும் நாமாவது, நாசகரமான இப்பழக்கங்களைக் கைவிடல் வேண்டுவது முக்கியம். இவற்றையெல் லாம்கூட நமக்கு விளக்கிக்காட்டியவர் பெரியார்தான்.

இதை நான் கூறாவிட்டாலும் நமது சரித்திர ஆசிரியர்கள் கூறுவார்கள். நமது தற்கால ஆசிரியர்கள் கூறாவிட்டாலும் பிற்கால ஆசியர்களாவது, இந்நாட்டில் பகுத்தறிவொளியை வீசியவர் பெரியார் என்பதை மறக்காமல் பொறிப்பார்கள். அவர்கள் பொறிக்க மறந்து விடுவார்களானால், அவர்களைச் சரித்திர ஆசிரியர்கள் என்று உலகம் மதிக்காது.

(தொடரும்)

18

13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

நேற்றைய (27.3.2023) தொடர்ச்சி...

பெரியார் வேறு! 

ஈ.வெ.இராமசாமி வேறு!

இவரைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று நமது மக்கள் சாதாரணமாக அழைக்கின்றார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பெரியார் வேறு - ஈ.வெ.ராமசாமி வேறுதான். ஈ.வெ.ராவுக்கு மாட மாளிகைகள் உண்டு. நூற்றுக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நஞ்சை புஞ்சைகளும் உண்டு. ஓரளவு ரொக்க ரூபாயும் பாங்கியில் உண்டு. ஆனால், பெரியாருக்கு அதெல்லாம் இல்லை. அவ ருக்கு உலகெல்லாம் சொந்த ஊர்தான். உலக மக்க ளெல்லாம் அவருக்குச் சகோதர சகோதரிகள்தான்.

நம் நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் எத்தனையோ பணக்காரர்கள் உண்டு. அவர்களில் சிலர் தனக்குப் பண மிருக்கிறது என்று மற்றவர் பாராட்ட வேண்டுமென்பதற் காகவே சம்பாதிப்பார்கள். சிலர் பணமூட்டைகளை அடுக்கி அழகு பார்ப்பதற்காகச் சம்பாதிப்பார்கள். இன்னும் சிலர் தமது வாழ்வை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பதற் காகப் பணம் சம்பாதிப்பார்கள். ஆனால், எந்தப் பணக் காரனும், அவன் எந்நாட்டவனாயினும் சரியே, அவன் தன் சுயநலத்திற்காக, சுய பெருமைக்காகப் பொதுவாழ்வில் ஈடுபடுவானே அல்லாது, தன்னலமற்ற எவனும் பொது வாழ்வில் ஈடுபடமாட்டான். ஆயுள் முடிந்து ஓய்வு பெற வேண்டிய காலத்தில்கூட, தான் சம்பாதித்த பொருளின் முழுப்பயனையும் அடைய முயற்சிப்பானே அல்லாது. தன் எஞ்சிய காலத்தைப் பொது வாழ்வுக்குச் செலவழிக்க இசையான். ஆனால், இவர்களுக்கெல்லாம் மாறுபட்டவர் பெரியார். இவரும் சம்பாதிக்கவேண்டுமென்ற ஆசையோடு தான் ஒரு மனிதனுடைய டாம்பீக வாழ்வுக்குப் போதுமான அளவுக்குப் பணம் சம்பாதித்துவிட்டார். இவருக்கு மனைவி யில்லை. மக்களில்லை. தான் சம்பாதித்த பொருளைக் கொண்டு எடுபிடி ஆள் நாலைந்து பேரை வைத்துக் கொண்டு எவ்வளவோ சுகமாக வாழலாம். எப்படித் தன் பணத்தை வாரி இறைத்தாலும் ஏனென்று கேட்க ஆளில்லை. அப்படி இருந்தும் பெரியார் என்ன செய்கிறார்? அவர் இப்படி சுகவாழ்க்கை அனுபவிப்பதைவிட்டு இத் தள்ளாத வயதில்கூட, தனது நேரம் பூராவையும் பொதுநல ஊழியத்திலேயே செலவழித்து வருகிறார். ஆகவே தான் பெரியாரில் ஒரு பெரியார் என்று இவரை அழைக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பெரியார் இருந்ததாக உலக சரித்திரம் கூறக் காணோம். நாமும் இவரைத் தவிர வேறோர் பெரியாரைக் கண்டோமில்லை. இனியும் காணப்போவ தில்லை என்பது தான் எனது அபிப்பிராயம் - ஆகவேதான் நான் முதலிலேயே திராவிட நாடு 'அதிர்ஷ்டம்' பொருந்திய நாடு; நாம் அதில் பிறந்திருப்பதால் 'அதிஷ்டசாலி'கள் ஆனோம் என்றேன். ஏனெனில் இத்தகைய ஒரு பெரியாரின் வாழ்நாளில் பிறந்திருக்கும் பேறு பெற்றுள்ளோம். ஆத லினால்.

பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் யார் என்ன தீங்கு செய்தாலும், செய்திருந்தாலும் அதை, மனித சுபாவமே அப்படித்தான் என்று கூறிப் பொறுத்துக் கொண்டுவிடுவார். ஆனால் இயக்கத்தை பொறுத்தமட்டில் சிறிது தவறு செய்து விட்டாலும் உளம் பொறார்.

சுலபத்தில் ஆத்திரம் கொள்வார். தயைதாட்சண்யமின்றிச் சற்றும் பொறுப்பில்லாதவன், முட்டாள், போக்கிரி, சோம் பேறிப் பயல் என்றெல்லாம் கூட சமய சந்தர்ப்பம் பாராமல் ஏசிவிடுவார். இயக்கத்தின்மீது அவ்வளவு பற்றுதல் உள்ளவர். அவரது தன்னலமற்ற இந்த இயக்கப்பற்றுதல் தான் இந்த ஏசல் மொழிகளைக் கேட்டுக் கொண்டு நமது இளைஞர்களை “பெரியார் வாழ்க வாழ்க" என வாழ்த்தொலி கூறிப் பின்பற்றிச் செல்லும்படி தூண்டுகிறது.

இன்னும் அனுபவம் பெற வேண்டும்-இதுவே இளைஞர்க்கு உணர்த்தும் ஒரு பொருள்

வாலிபர்கள் என்றாலே பெரியாரின் அகராதியில் அனுபவம் அற்றவர்கள் என்றுதான் பொருள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் அகராதியிலோ, அவர்கள்தான் நிகழ் காலச் சிற்பிகள், எதிர்கால மன்னர்கள், தமது இஷ்டப்படி தண்டவாளத்தைப் பெயர்த்துத் தம்மைப் பதவியில் உட்கார வைக்கக் கூடியவர்களும் அவர்கள் தான் என்பார்கள். ஆனால் இதைப் பெரியார் ஒப்புக் கொள்ளமாட்டார். ஒப்புக்கொள்ளாமலிருக்கக் காரணமும் உண்டு. எனது அனுபவமும் அதுதான். நான் ஒரு சமயம், தோழர் அய்யப்பன் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் நடந்த ஒரு மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதற்குச் செல்லும்போது ரயிலில் நன்றாகத் தூங்கிவிட்டேன். வண்டி ஈரோட்டைத் தாண்டிச் சென்ற பிறகுதான் விழித்துக் கொண்டேன். ஆகவே அடுத்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்பிவர மணி 11 ஆகிவிட்டது. நான் பேச வேண்டிய கட்டமும் வந்துவிடவே, நானும் எனது பேச்சைத் துவங்கி விட்டேன். தலைவர் ஏதோ அவசர வேலையாக 1 மணி வண்டிக்கே போகவேண்டியிருந் ததால், பெரியார் அவர்கள் 12.30 மணிக்கே கூட்டத்தை முடித்துவிட விரும்பி 12.15 க்கே எச்சரிக்கை செய்தார். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே தலைவரை எழுப்பி அழைத்துச் சென்று விட்டால், நான் எங்கே கோபித்துக் கொள்வேனோ என்ற பயம் ஒரு புறம் தன்னை வாட்ட, அவரைக் காலா காலத்தில் அனுப்பி வைக்கவேண்டிய தமது பொறுப்பு ஒருபுறம் வேதனை செய்ய, என்னை நிறுத்திக் கொள்ளும்படி ஜாடையாகக் கேட்டார். எனக்கு அப்போது மண்டைக் கர்வம் ரொம்ப அதிகம். ஆகவே. இவரென்ன நம்மைத் தடை செய்வது என்று நினைத்து 'இது என்ன சர்வாதிகாரமா' என்று கேட்டு விட்டு எதிரிலிருந்த தோழர்களைப் பார்த்தேன். அவர்கள் மட்டுமென்ன சளைத்தவர்களா? “நிஷீ ஷீஸீ” என்று, அதாவது, "நிறுத்தாதீர்கள், தொடர்ந்து பேசுங்கள்” என்று கூறிவிட்டார்கள்.

நானும் விடாப்பிடியாகப் பேசிக்கொண்டே இருந்தேன். குறிப்பிட்ட நேரம் வரவும் பெரியார், தோழர் அய்யப்பன் அவர்களை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். நான் பேசி முடிந்ததும், ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்து விட்டதுபோல நினைத்துக் கொண்டு, மாநாட்டு உணவைக் கூடச் சட்டை செய்யாமல் கோபத்தோடு ஓட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டேன். தோழரை வழியனுப்பிவிட்டு வந்த பெரியார் அவர்கள், திருட்டுப்பூனை கருவாட்டுத் துண்டுக்காக மோப்பம் பிடித்துத் திரிவதுபோல், கடைத் தெருவில் திரிந்துகொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்து விட்டார். நான் பாராததுபோல் கொஞ்சம் “ரப் அண்ட் டப்" ஆக, சற்று அசட்டையாக நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அவரா விடுகிறார். “என்னங்க, சாப்பிட்டீங்களா?” என்று உரக்கக் கேட்டுவிட்டார். எனது சப்த நாடிகளும் தளர்ந்து விட்டன. அதைக் கேட்டதும், எனக்கு ரொம்ப அவமானமாகி விட்டது. நாம்தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே தான் வாலிபத் தோழர் களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

'ஏமாற்றலாம்!' 

- இதனை எண்ணாதீர்!

17

பெரியார் உங்களை நன்கு அறிந்துள்ளார். ஆகவே, அவரை உங்களால் ஏமாற்ற முடியாது. அவரும் உங்கள் நன்மைக்காகத்தான் பாடுபட்டு வருகிறார். ஆதலால், அவர் வழி நடவுங்கள்; நடந்தால் இன்புற்று வாழலாம். இன்றேல் 'வெங்கட ரமண கோவிந்தா' வென்று கூவிக்கொண்டு தெருவில் உருளவேண்டியதுதான்.

பெரியார்தன்னில், தானொரு வீரர், தான் மட்டும் வீரராக இருக்க விரும்புபவரில்லை. தன்னைச் சூழ்ந்துள்ள அத் தனை பேரையும் வீரராக்க வேண்டுமென்ற விருப்பமும் அதற்கேற்ற ஆற்றலும் படைத்தவர் பெரியார் ஆவார். அவர் ஒரு வீர புருஷர் மட்டுமல்ல. எளிய வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் அநேகமாக மூன்றாவது வகுப்பில்தான் பிரயாணம் செய்வார். அதுவும் அந்த வண்டியில் ஒரு 4 ஆவது வகுப்பு இல்லாத குறையால்தான்.

இலட்சிய நோக்கு! 

இடையறா உழைப்பு!

அவரது குற்றச்சாட்டுக்கு ஆத்திரப்படும் தோழர்கள் அறிவு கொண்டு சிந்திக்கவேண்டும். அனுபவிக்க வேண்டிய பொருள் இருக்கும்போது. இவர் ஏன் இப்படி ஓய்வு ஒழிச்ச லின்றிச் சுற்றித் திரிகிறார் என்பதை?

இன்றும் நாளையும் திருவண்ணாமலை, மறுநாள் 15ஆம் தேதி பனமலை, 16ஆம் தேதி காட்டுமன்னார் கோயில் 17ஆம் தேதி விழுப்புரம், 13ஆம் தேதி அரசூர் இப்படி எல்லாம் இவர் ஏன் சுற்றியலைகிறார் என்பதில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும். அவரது குறிக்கோளின் தன்மை அத்தகையது. அதில் அவருக்குள்ள விருப்பம் அவ்வளவும் அதிகமானது. அந்த லட்சியம் நிறைவேற அவர் அல்லும் பகலும் உழைக்கத் தயங்கார். உனக்கொரு கொள்கை கிடையாது. கொள்கையிருக்குமானால் அதில் போதிய பற்றுதல் இருக்காது. போதிய பற்றும் இருந்தாலும் அதற்காக உழைக்க உன் மனம் ஒப்புக் கொள்ளாது. உன் மனம் இன்பத்தையே நாடும்.

அவர் மனமோ இலட்சியத்தை நாடும் அவருக்குக் கறுப்பைக் கண்டால் திராவிட இனத்தின் இழிவு ஞாபகத் திற்கு வரும். உனக்கோ கறுப்பைக் கண்டால் காரிகையரின் கருங்கூந்தல் ஞாபகத்திற்கு வரும். சிவப்பைக் கண்டால் அவருக்கு இழிவு நீக்க முயற்சி ஞாபகத்திற்கு வரும். ஆனால், உனக்கோ உன் காதலியின் பவளச் செவ்வாய் ஞாபகத்திற்கு வரும். அதற்கு யாரென்ன செய்தல் கூடும்?

ஏற்பட்ட விரோதம்! 

எதிர்ப்படும் குரோதம்!

அன்பர்களே, அன்னாரின் இடையறாத் தொண்டின் சிறப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா? உணரும் நிலையிலாயினும் இருக்கிறோமா? இல்லை, இல்லை, இல்லை என்றுதான் கூறத் துணிகிறது என் மனது ஆம்! அன்னவர் சுமார் 30 வருட காலமாக நம்மை மனிதராக்க எடுத்துக் கொண்டுள்ள முயற்சியை இன்றும் உணர்ந்தோமில்லை. அவ்வளவு மடையர்கள்; மிருக வாழ்வு வாழ்பவர்கள் நாம். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டைக் கொடிய நெடுங்கடல்தான் பொங்கி அழித்தாலென்ன? அல்லது ஒரு பெரிய பூகம்பம்தான் ஏற்பட்டு. அத்தனை பேரும் அழிந்து போனால் என்ன? அப்படி நாசமடைந்தாலும் ஒரு அறிவுள்ள சமூகமாவது பின்னர் தோன்ற வழி பிறக்குமே இப்பெரியாரின் உழைப்பை யாரே மறக்க முடியும்? தம் உழைப்பின் பலனை இவர் காண்பதெப்போது என்று நீங்கள் துடிக்க வேண்டாமா? உங்கள் சக்திகளையெல்லாம் இப்பெரியாருக்கு நீங்கள் அடிமைப்படுத்த வேண்டாமா? அப்படித்தான் செய்யாவிட்டாலும். இவரது உழைப்பின் சிறப்பை உணருமளவுக்கு உன் அறிவு மாற்றானுக்கு அடிமைப்பட்டிருந்தாலும், அல்லது அறிவு மடமையிருளில் மழுங்கிக் கிடந்தாலும் சற்று ஒதுங்கியாவது இருக்க வேண் டாமா? இவரை ஏசுபவர் எத்தனை பேர்! இவரைப் பழிப்ப வரும் தூற்றுபவரும் எத்தனைப்பேர்? நமக்குள்ளாகவே “கக்கிரி புக்கிரி” என்று பூசல் விளைவிப்பவர்கள் எத்தனை பேர்? இத்தனையையும் சகித்துக் கொண்டு இவர் இன்னும் உயிரோடும் இருக்கிறார் என்றால் அதன் பொருளென்ன? இதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! இவற்றை எல்லாம் சட்டை செய்யாது வாழ இவரென்ன சிங்கமா? கரடியா? அல்லது நகராது கொத்தும் பாம்பா? என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

எதற்கும் தளராத 

இவரின் கருத்தெழுச்சி!

உடல் இவ்வளவு தளர்ந்திருந்தாலும், இத்தளர்வு, இவரது பேச்சில் காணமுடியவில்லையே! கூட்டம் முடிந்ததும், இன்று கூட்டம் மிக அருமை என்று கூறிவிடுங்களேன்! எவ்வளவு உற்சாகத்தோடு எவ்வளவு பெருமிதத்தோடு சற்றுக் கனைக்கிறார் பாருங்கள்! தோள் தட்டி, தொடை தட்டித் தொண்டாற்ற வாருங்கள் என்றழைக்கும் இளங் குமரனைவிடச் சற்று அதிகமாகவே கர்ஜிக்கிறாரே இவ்வீர புருஷர். இதற்குக் காரணம் என்ன! இவரது உணர்ச்சி, உணர்ச்சியின் வேகம் இவைதான் காரணம். இவரது உணர்ச்சியின் வேகத்தை, கருத்தெழுச்சியின் ஆழத்தை, அவற்றின் அறிவை நம்மால் என்றுமே சரியாக அளக்க முடியவில்லையே. நாம் எவ்வளவுதான் ஆழத்துக்குச் சென்று துளாவினாலும், ஆழமறியாத முத்துக் குளிக்கும் தோழன் ஏதோ ரொம்ப ஆழத்தில் சென்றுவிட்டோம் என்று கருதித் தன் வலையை வீசிக் கிடைத்தவற்றைப் பிடித்து அதை மேலிழுக்க, அதன் பளுவைக் கண்டு ஏதோ நிறைய கொணர்ந்துவிட்டதாகக் கருதி மகிழ, கடைசியில் அவை அத்தனையும் முத்துச்சிப்பிகள் பாம்பும், நண்டுமாக இருக்குமானால், அவன் எப்படி அவதியுறுவானோ -தன் அறியாமைக்கு வருந்தி, அதே போல் நாமும் பெரியாரின் ஆழத்தை நம்மால் உணர முடியவில்லையே வருந்தியழுவ தோடு, அவரது ஆழ்ந்த கருத்துக்களை அப்படியே என்று பின்பற்ற வேண்டியது அவசியம் என்ற முடிவுக்குத் தானே வர வேண்டியிருக்கிறது. அவரது கருத்துக்கள் கடலினுள் முத்துச் சிப்பி போன்றன. நம்முடைய கருத்துக்களோ கடலினுள் நண்டு நத்தை போல்வனவே ஆகும்.

பெரியார் அவர்களை நான் ஏறக்குறைய 30 வருடங் களாக அறிந்திருக்கிறேன். நெருங்கிப் பழகி இருக்கிறேன். என்றாலும், அவரது நம்பிக்கைக்கு இன்றுவரை நான் பாத்திரம் ஆனேனில்லை. கொள்கையைப் பொறுத்தா? இல்லை. இயக்கத்தைப் பொறுத்தா? இல்லை. பின் எதைப் பொறுத்து என்னிடம் அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை? என்னுடைய சொந்த நிலையைப் பொறுத்துத் தான். அவர் போடும் காகிதத்துக்குக்கூடச் சரியாகப் அனுப்பியிருக்க மாட்டேன். அப்படியிருந்தும் அவர் என்னை வெறுத்து விட்டாரா? இல்லை. அதுதான் அவரிடமுள்ள சிறப்பான பண்பு. தனிமையில் எதையும் பொறுத்துக் கொள்வார்.

ஆயிரம் கரிபால்டியாயினும் 

அழித்திருக்குமே ஆரியம்! 

இத்தாலி ஒரு மாஜினியையும், ஒரு கரிபால்டியையும் பெற்றதுண்டு. ஜெர்மனி ஒரு மார்க்ஸையும், பிரான்ஸ் ஒரு ரூஸோவையும், ரஷியா ஒரு லெனினையும், அமெரிக்கா ஒரு லிங்கனையும் பெற்றதுண்டு. ஆனால் அவர்களது சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் வேறு. அவர்களைப்போல் நம் திராவிட நாட்டில் ஆயிரம் கரிபால்டிகள் தோன்றியிருந்தாலும்கூட, இந்த ஆரியம் அவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கும். காந்தியாரின் வர்ணாஸ்ரமப் பிரச்சாரத்தை எதிர்த்தோ, ஆரிய நயவஞ்சக சூழ்ச்சிகளை எதிர்த்தோ, அல்லது நம்மவரின் உடைமையிலுள்ள விருப்பத்தையும் மடமையிலுள்ள பிரீதியையும் எதிர்த்தோ, அவர்களால் ஒருநாள்கூட ஜீவித்திருக்க முடியாது. பகுத் தறிதல் பாவம் என்று நினைத்திருந்த மக்களிடையே, அவர்கள் பிறந்தார்களில்லை. மோட்ச நரகத்தைக் காட்டி மோசடி செய்யும் மக்களிடையே அவர்கள் பிறந்தார் களில்லை.

ஆகவேதான் அவர்கள் விரைவில் வெற்றி கண்டார்கள். ஆனால், நம் பெரியார் பிறந்த இடமோ அப்படிப்பட்டதல்ல. "அவனன்றி ஓரணுவும் அசையாது காண்" என்ற நம்பிக்கையோடு வாழ்ந்த மக்களிடையே பிறந்தார் இவர். கடவுளை வணங்காமலிருந்தால் கயமை; சாஸ்திரங்களைத் தகர்த்தால் நாத்திகம்; புராணங்களை நம்பாமல் இருத்தல்; நரகத்திற்கு வழிசெய்து கொள்ளல், அயோக்கிய அன்னக்கா வடிப் பார்ப்பனர்கள் தான் இந்நாட்டில் பூதேவர்கள் என்று நம்பியிருந்த மக்களிடையே பிறந்தார் நம் பெரியார். அப்படி வாழ்ந்த நம்மைப் பகுத்தறிவுகொண்டு சிந்திக்கும்படிச் செய்து, ஆதாரங்கள் பல காட்டி நம்மை தலைநிமிர்ந்து நடக்கும்படி செய்தார் நம் பெரியார். இத்தகைய பெரிய வேலையை இதே சூழ்நிலையில் இந்நாட்டிலோ. அன்றி வேறு நாட்டிலோ யாரேனும் சாதித்திருக்கிறார்களா என்ப தைச் சிந்தித்துப் பாருங்கள். நம்மவர் தலைநிமிர்ந்து வாழ வழிவகுத்துக் கொடுத்த பெரியார் வாழுங்காலத்தில், வாழ்கின்றோம் என்பதற்காகத்தான் நம்மைப் பாக்கியசாலி களாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று முன்னரே குறிப்பிட்டேன். நம் முயற்சியின் முழுவெற்றியை நாம் இன்னும் காணவில்லையானாலும், வெற்றியின் நிச்சயத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலாவது நாம் இன்று இருப்பதால்தான் நாம் பாக்கியசாலிகள் ஆகிறோம்.

நாளொரு மேனி 

பொழுதொரு வண்ணமாய் வளர்ச்சி 

பெரியார் நம் இயக்கத்தை எப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் சிறுக சிறுக வளர்த்து வந்தார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். சுயமரியாதை இயக்கம் கண்டு அதற்கோர் திட்டத்தை ஏற்படுத்திய பெரியார், அத்திட்டத்தை நடைமுறையில் கொண்டுவரத் தம்முடன் ஒத்துழைக்க முன்வரும் கட்சி எது என்று கேட்டார். காந்தியார் தலைமையைப் பெற்ற காங்கிரசு சுயமரியாதைத் திட்டத்தை ஏற்க மறுத்தது. ஜஸ்டிஸ் கட்சி ஏற்றுக் கொண்டது. ஆகவே, அத்துடன் சேர்ந்தார். அதன் மூலம் தாழ்த்தப்பட் டோரும் உத்தியோகம் பெறுவதற்கான வகுப்புவாரி உத்தியோக நியமன உரிமையை வாங்கிக் கொடுத்தார். உத்தியோகம் பெறுவதால் மட்டும் தம் திட்டம் வெற்றிபெற முடியாதென்பதைக் கண்டார்.

ஆகவே, இனப்பெயரால் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தார். அதன்மூலம் ஆரியர் வேறு, திராவிடர் வேறு என்ற பிரச்சினையைக் கிளப்பினார். ஆரிய நாகரிகம் வேறு, திராவிடர் நாகரிகம் வேறு, ஆரியக் கலை வேறு, திராவிடக் கலை வேறு, ஆரியப் பண்புகள் வேறு, திராவிடப் பண்புகள் வேறு என்றெல்லாம் ஆதாரங்களோடு விளக்கிக் கூறினார். இவ்விளக்கம் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வலுத்துவிடவும், திராவிடர்கள் தம் கலைகளையும் தம் நாகரிகத்தையும் வளர்த்துக் கொண்டு ஏனைய நாட்டினருடன் சரி சமானமாக வாழ்வதற்காக திராவிட நாட்டுப் பிரிவினை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அவரது பிரச்சாரத்தின் வெற்றி காரணமாகத்தான், இன்று மாதந்தோறும் கழக மாநாடுகளும், பிரிவினை மாநாடுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அவரது பிரச்சாரத்தின் காரணமாகத்தான் இன்று ஆயிரக் கணக்கான இளைஞர்கள் நாடு பிரிவினைக்காகத் தூக்கு மேடை ஏறவும் தயாராக இருந்து வருகிறார்கள்.

மோட்சமும் நரகமும் -

முடிச்சுமாறிகளின் கற்பனை ஏன்?

கடவுளை சந்தேகித்தால் பாபம், சாஸ்திரங்களை நிந்தித்தால் நரகம் என்று நம்பி, சிந்தனையற்ற ஏமாளிகளாயிருந்த நம்மை எப்படி இந்நிலைக்கு அழைத்து வந்தார் தெரியும்? முதலில் கடவுளின் உற்பத்தி மார்க்கத்தையே அவர் விளக்கிக் காட்டினார். எப்படி? ஆதியில் மக்களி டையே ஒழுக்கம் கற்பிக்கப் புகுந்த பெரியார்கள் ஒழுக்கத் தின் பலனாக மோட்சத்தையும், ஒழுக்க ஈனத்தின் பயனாக நரகத்தையும் அடைவோம் என்று மக்களுக்குச் சொன்னார் கள். மோட்சமென்றால், அங்கு உழைக்காமலே உண்டு களித்து, ஊர்வசி, ரம்பை போன்ற அழகிய மங்கைகளைக் கூடிக்காலங் கழிக்கலாமென்றும், நரகத்திற்குச் செல்வோமா னால், நாம் இங்கு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக அங்கு கொதிக்கும் எண்ணெய்யிலிட்டுப் பொரிக்கப்படுவோ மென்றும், செந்தணலின்மீது போட்டு எரிக்கப்படுவோமென் றும், கொடிய பாம்புகளும், விலங்குகளும் நம்மைக் கடித்துத் துன்புறுத்துமென்றும் கற்பனை செய்து காட்டினார்கள். மோட்ச இன்பத்திற்காகச் சிலர் ஒழுக்கமாக நடந்து கொண் டார்கள் என்றாலும், இயற்கை இச்சையின் காரணமாகச் சிலர் பிரத்தியட்ச இன்பத்தை விடமுடியாதவர்களாய், பிறர் காரணமின்றி ஒழுங்கீனமென்று கருதிவந்த காரியங்களில் தாராளமாக ஈடுபட்டனர். ஆனாலும், அவர்களுக்கு நரகத் திற்குப் போக நேர்ந்து விட்டால், என்ன செய்வதென்பது புரியவில்லை. அங்குள்ள கொடுமைகள் அவர்களை மேலும் பயமுறுத்தவே, அவர்கள் கோழைகளாகி அதி லிருந்து ஏதாவது தப்பித்துக் கொள்ள மார்க்க முண்டா என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் கோழைத்தனத்தை வாழ்க்கை வசதியாகச் செய்து கொள்ளலாம் என்று நினைத்த ஒரு கூட்டம், "அதற்கென்ன, கடவுளைத் தொழுதால் பாவமன்னிப்புப் பெறலாம். அவர் பாவிகளை மன்னித்து மோட்சத்திற்கு அனுப்பி வைப்பார்" என்று கூறியது. அவர்களும் எப்படி யாவது நரகத்திலிருந்து கடவுளை நம்பி அவரைத் தொழ ஆரம்பித்தனர். பாவிகளே எப்பொழுதும் அதிகமாதலால், அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், கோழைத்தனம்தான் கடவுளின் உற்பத்திக்குக் காரணம் என்றும், கடவுளும், மோட்சமும், நரகமும் யாவும் கற்பனைதான் என்றும் விளக்கிக் கூறினார் பெரியார்.

பாழான சூனியம் 

நம்மைப் பாழ்படுத்த வேண்டுமா?

இதை அறிவுள்ள மக்கள் ஒப்புக்கொண்டு இவரைப் பின்பற்றினார்கள். அண்ட பிண்ட சராசரம் அத்தனையும் உற்பத்தி செய்த அக்கடவுள் இருக்குமிடம் எங்கென்று பார்த்தால், அவர் முப்பாழுக்கும் அப்பாலாய் இருப்பவர் என்று கூறப்படுகிறது. "அப்பால்தான் என்னப்பா இருக் கிறது?” என்று கேட்டால், "அதுவும் பாழடா” என்று தான் என்று கூறப்படுகிறது. வெறும் சூனிய வெளிதான் கடவுள் அதாவது "முப்பாழும் பாழாய் முடிவில் ஒரு சூனியமாய்" இருக்கும் என்று கூறப்படுகிறது. பாழான இந்தச் சூனிய வெளி ஏன் இப்படி நம்மைப் பாழாக்க வேண்டுமென்பதுதான் நமக்குப் புரியவில்லை!

(தொடரும்)

பட்டுக்கோட்டைஅழகிரிசாமி

6

13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

நேற்றைய (28.3.2023) தொடர்ச்சி...

நாசமாய் போகும் நம்பிக்கைக்கும் 

ஒரு எல்லை இல்லையா?

இதைவிட்டு நம் புராணங்களுக்கு வருவோமானால், கடவுள் எத்தனை என்றால், 33 கோடி தேவர்கள், 48,000 ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் என்று இன்னும் எத்தனை எத்தனை தெய்வங்கள் கூறப்படுகின்றன. இந்தத் தெய்வங்கள் ஒரு தேசம் போதாது போல் இருக்கிறது.

இப்படியிருந்தும் இவர்கள் தொழும் தெய்வங்களின் உருவ லட்சணங்களைப் பாருங்கள். "பல்லோ ஒரு காதம், பல்லிடுக்கோ முக்காதம்" - ஒரு பல்லின் அகலம் 10 மைல், ஒரு பல்லுக்கும் மற்றொரு பல்லுக்கும் இடையேயுள்ள வெளி 30 மைல். அப்படியானால் அவனுடைய வாயின் அகலம் மட்டும் 610 மைல். அதாவது 16 பல் இடம் 160 மைல் 15 இடைவெளியின் இடம் 450 மைல். ஆக 610 மைல் ஆகியது. அவன் வாய் மட்டும் இவ்வளவு அகலமானால் அவனுடைய கை எவ்வளவு? அவனுடைய கால் எவ்வளவு நீளம்? அவனுடைய உடல் எவ்வளவு பருமன் என்று சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய வாயில் மட்டும் எத்தனை நகரங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். இவ்வளவும் எழுதியிருந்தால்கூட நமக்குக் கவலை இருக்காது. ஏதோ கதையென்று தள்ளி விடலாம். ஆனால், அதை நம்பித்தான் ஆகவேண்டும். அதை நம்பாவிட்டால் நரகம் என்றல்லவோ கூறிவிடுகிறார்கள் இந்த ஆஸ்திக கோடிகள். இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்றால், கேட்டால் - இதற்கா நரகத்திற்குப் போக வேண்டும்?

சரி, இதுதான் போகட்டும் என்று தள்ளிவிட்டு மலை எப்படியப்பா உண்டாயிற்றென்றால், மலையெல்லாம் ஒரு காலத்தில் இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தனவாம். அவை தேவேந்திரனை ரொம்பவும் துன்புறுத்தவே, அவன் சிவபெருமானிடம் முறையிட்டுக் கொள்ள அவர் அந்த இறக்கைகளை அறுத்துவிட்டாராம். இறக்கை அறுந்துபடவே அவை பூமியின் மீது விழுந்து மலைகளாயிருக்கின்றனவாம்.

சரி சமுத்திரம் எப்படியப்பா ஏற்பட்டதென்றால், அவை எல்லாம் தோண்டப்பட்டனவாம். இவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தோண்டியவர்கள் யாரோ. அவர்கள் எங்குதான் அந்த மண்ணை எல்லாம் போட்டார்களோ தெரியவில்லை. இப்படியெல்லாம் அண்டப் புளுகு, ஆகாயப் புளுகெல்லாம் எழுதிவைத்துவிட்டு, இப்படி சாஸ்திரம் கூறுகிறது; இதை நம்பித்தான் ஆக வேண்டு மென்று கூறினால், "நீ நாசமாகப் போக! இப்படிப்பட்ட சாஸ்திரங்களைக் கொளுத்தித் தொலை" என்றுதானே கூறத்தோன்றும். இப்படிக் கூறுவதா மதத்துவேஷம்? பகுத்தறிவுள்ள மனிதன் ஒப்புக் கொள்வானா இதை?

நான் ஓர் ஊரில் கடைத்தெருப்பக்கம் போயிருந்த போது கணபதி விலாஸ் சைக்கிள் ஷாப் என்ற போர்டைப் பார்த்தேன். அதன் கீழ் வேகமாகப் போகும் புது சைக்கிள் இங்கு வாடகைக்குத் தரப்படும் என்று எழுதியிருந்தது. பேர் வைப்பதில் கொஞ்சமாவது அறிவை உபயோகப்படுத்த வேண்டாமா இவர்? கணபதி விலாஸ் சைக்கிள் என்றால் அது எதற்கு? நகரவா? டயர் தேயவா? டியூப் வெடிக்கவா? அல்லது பார் நொறுங்கவா? கணபதி விலாஸ் சைக்கிள் எங்காவது வேகமாய்ப் போகுமா? உன் சைக்கிள் வேகமாகப் போகும் என்றால், அதற்குப் பறக்கும் சைக்கிள் வண்டி என்று பேர் கொடேன்! கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா பெயருக்கு? இந்த 1947ஆம் ஆண்டிலா இப்படி ஒரு பெயர் வைப்பது?

எருமை மாட்டு வாகனக் கவர்மெண்டுக்கு 

எப்படித் தம்பி பிடிக்கும்?

புராணத்தில் கூறப்படும் உலகங்கள் எத்தனை தெரி யுமா? ஈரேழு பதினாலு லோகங்கள், அதாவது மேலேழு, கீழேழு; அவற்றின் பெயர்களே அதல, விதல, சுதல, தராதல பாதாள, கேதாள என்று போகும். எல்லாம் தலதளா தான். இந்த 14 லோகங்களிலுமுள்ள ஈ. எறும்பு, பொட்டு, புழு ஆகிய சகல ஜீவராசிகளுக்கும் எஜமானன் எமன் ஒருவன் தான். ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கும் அநேக கோடி ஜீவராசிகளின் உயிர்களைச் சித்திர புத்திரன் கணக்குப்படி காலா காலத்தில் கொண்டு செல்லக்கூடியவனும் அவன்தான். அவ்வுயிர்களை எப்படிக் கொண்டு செல்கிறான் என்றால், தன் சூலத்தால் குத்தித் தன் பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்துச் செல்கிறானாம் பாசக் கயிற்றால் இழுக்க உயிரென்ன மரக்கட்டை போன்ற ஒரு வஸ்தா? இத்தனை கோடி ஜீவன்களை அந்தந்த இடத்திற்கு வெகு வேகமாகச் சென்று இழுத்துவர உபயோகப்படுத்தும் வாகனமென்ன தெரியுமா? மார்கழி மாதக் குளிரில் குளத்தங்கரைச் சேற்றில் புரண்டு கொண்டிருக்கும் எருமைக் கிடாவாம். எங்காவது எருமைக்கிடா மீதேறிச் சென்று இவ்வளவு ஜீவன்களை இழுத்துக் கொண்டுவர முடியுமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். 

இதையெல்லாம் கேட்பது மதத்திற்கு விரோதமென்றால், அப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத மதத்தைத் தயவுசெய்து நீயே வைத்துக் கொள்ளேன். வீணாக எங்கள் மீது சுமத்தி ஏன் எங்கள் உயிரையும் வாங்குகிறாய் என்றுதான் கேட்கி றோம். இப்படி எல்லாம் பேசுவது நமது அரசாங்கத்திற்கும் பிடிக்கவில்லையாம். பின் எப்படிப் பிடிக்கும் ஒரு எருமை மாட்டு வாகனக் கவர்மெண்டுக்கு இச்சீர்திருத்தக் கருத் துக்கள்?

அறிக்கை அனுப்புகிறார்களாம் பள்ளி ஆசிரியர்களுக்கு, புராணங்களிலுள்ள ஆபாசங்களைப் பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறாதே! மதத்தைப் பழிக்காதே என்று! அத்து மீறினால் தண்டிப்பார்களாம் இவர்கள், “அத்துமீறினால்" என்றால் என்னப்பா அர்த்தம்? அத்து என்பதற்கு அள வென்ன? அதற்கு அளவு ஏற்படுத்துவது நீயா! நானா? ஏனப்பா அரைகுறை சுயராஜ்யத்தை வைத்துக் கொண்டே ஆனமட்டும் பதைக்கிறாய்?

உஷாராய் இருங்கள்! இல்லாவிட்டால் என்ன செய் வோம் தெரியுமா? பத்திரம். ஆட்சி எங்களிடம் இருக்கிறது எச்சரிக்கிறார்களாம். ஏம்பா எங்களை இப்படிப் பயமுறுத்து கிறாய்? என்று நாங்களென்ன சின்னப் பொடிப்பசங்களா, உன் பயமுறுத்தலுக்கு அஞ்சி ஓட? இல்லையானால் எங்களை என்ன முட்டாள்கள் என்று கருதிக் கொண்டு பேசுகிறாயா? உங்கள் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இவ்வளவு ஆணவமாக உளறிவருகிறீர்கள்? ஏதோ பதவிபெற்றுவிட்டதால் கொஞ்சம் பணக்காரர்களாகி வருகிறீர்கள் என்றால், தாராளமாய், பணக்காரர்களாகுங்க ளேன்! நாங்களொன்றும் அப்படி உங்களிடம் பங்கு கேட்க வரவில்லையே! கொஞ்சம் ஜாக்கிரதையோடு அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பிழையுங்கள். கோவிலுக்கும் குளத்திற்கும் கொடுத்துக் குட்டிச் சுவராகாதீர்கள் என்று தானே உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். இதுவா பாபம்! உங்கள் சிந்தனைக்கு விண்ணப்பம் செய்து கொள்வதா பாபம்? நீங்களே சிந்தித்து விடைதாருங்கள்.

மதம், கடவுளை, 

பணமே படைத்தது 

மதம் என்றால் என்ன? அது மனிதத் தன்மைக்கு மாறு பட்டுத்தானா இருக்கவேண்டும்? மதத்தின் கொடுங்கோன் மையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது முகம், நமது உடலிலேயே மிகப் பிரதானமான ஓர் அங்கம். அதன் தோல் மிக மென்னையானது அதன்மீது வளரும் ரோமமோ அதைவிட மென்மையானது. அந்த ரோமத்தை அப்படியே வளரவிட்டால் நாம் ஏதோ கரடி மாதிரி அல்லது குரங்கு மாதிரிக் காட்சியளிப்போம். நம்மை அப்படி இருக்க விடாமல், ஒரு பளபளப்பான கண்ணாடி முன் உட்கார வைத்து, நமது தோலுக்கு யாதொரு தீங்கும் நேரிடாதபடி, மகா கூர்மையான கத்தி கொண்டு நமது ரோமத்தை வழித்து, தமது தலையை எண்ணெயிட்டு சீவி, நம் முகத்துக்கு ஸ்நோவும் பவுடரும் போட்டு, நம்மை அழகுற அலங்கரித்து ஒரு மாப்பிள்ளை மாதிரி அனுப்பு கின்றான் நமது தோழன். அவனோர் அம்பட்டப் பய.

நமது அழுக்குப் படிந்த, நாற்றமடைந்த துணிகளைத் துவைத்து அவற்றிற்கு நீலமும் கஞ்சியும் போட்டுச் சலவை செய்து, கண்ணாடி போல் பெட்டி போட்டு, நாமும் நம் மக்களும் உடுத்துக்கொண்டு, மெல்லிய தென்றல் காற்று வாங்க உல்லாசமாய்ச் செல்ல உதவும் தோழன், நமக்கோர் வண்ணாரப் பய.

பங்குனி வெயிலில் பாதம் எங்கு கொப்பளித்து விடுமோ, அல்லது கல்முள் குத்திக் காலைக் கெடுத்து விடுமோ என்று நாம் பயப்படாமல் இருக்க, நமது காலுக்கேற்ற செருப்பைத் தைத்துக் கொடுக்கும் தோழன், நமக்கோர் சக்கிலிப் பய.

நமது வீடு மலஜல மூத்திரத்தால் நாற்றமெடுக்காமல் இருக்கும் படி, நமது தெருக்கள் நாற்றமெடுக்காமல் இருக்கும்படி, நமது கக்கூசைக் கழுவி நமது சாக்கடையைச் சுத்தம் செய்து, நமது தெருக்களிலுள்ள குப்பைகளை அகற்றி நமக்கு அசுத்தத்தால் நோய்கள் முதலியன வராமல் இருக்க நமக்கு உதவுபவனும், நமது வீட்டில் ஒருவர் இறந்தால் அவரது பிணம் அழுகிப் புழுக்கள் ஏற்படாமல் இருக்க, அதைச் சுட்டெரிக்க நமக்கு உதவுபவனுமாகிய தோழன் நமக்கோர் தோட்டிப் பய.

உண்மை உழைப்பாளிகளுக்கு இழி பட்டம் அளிப்பது தான் மத தர்மம்.

அதேபோல் பணம் ஏற ஏற அதனுடைய பட்டமும் சற்று உயர்ந்து கொண்டே போகும்; ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்துடையவன், மதக்குருக்களுக்கு ஒரு சாதாரண பணக்காரன். லட்சக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்துடையவன் அவனுக்குப் பிரபு. கோடிக்கணக்கு பெறுமான சொத்துடையவன் அவனுக்கு மதசம்பிரதாயப்படி, ஈஸ்வரன். ஆகவே பணம்தான் கடவுள். கடவுளையும் மதத்தையும் உற்பத்தி செய்ததே அந்தப் பணம்தான்!

ஏ மதமே! உனது ஈனத் தன்மை வெளியாகிவிட்டது. இனி உன்னால் இந்நாட்டில் வாழ இயலாது. உனக்கோர் எச்சரிக்கை விடுகிறோம். நாம் மேலே கூறியவற்றிற்கு நேர்மையான சமாதானங் கூற முடியுமானால் கூறுக! இன்றேல் "ஏ மதமே! மதவாதிகளே! நீங்கள் அழிந்துபடுங்கள்” என்று எக்காளமிட்டு வருபவரும் பெரியார்தான். திராவிடர் நாடு பிரிந்து திராவிடர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒழுக்கமான நாகரிக வாழ்வு வாழ நமக்கு வழிவகுத்துத் தந்து வருபவரும் பெரியார்தான்.

அப்படிப்பட்ட பேரும் புகழும் மிக்க பெரியாரின் படத்தை நான் உங்கள் முன் திறந்து வைக்குமுன் உங்களுக் கோர் விண்ணப்பம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். இப்படத்திலுள்ள ஓவியத்தின் நிறம் இன்று பளபளப்பாக இருக்கும். ஆனால் நாளையோ மறுநாளோ கொஞ்சம் மங்கித்தான் போகும். ஆகவே பெரியாரை உங்கள் நெஞ்சத்தில் ஓவியமாகத் தீட்டுங்கள்! நெஞ்சகச் சித்திரத்திற்கு என்றுமே தேய்விருக்காது. மேலும் நீங்கள் உயிருள்ள வரை, அவரது கருத்துகள், கருத்துகளினூடே பொதிந்து கிடக்கும் தனியான சிறப்புகள் ஆகியவைகள் உங்களை மேன்மைப் படுத்திக் கொண்டே வரும். ஆகவே உங்கள் இருதயத்தில் அவரைச் சித்தரித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டு, உங்கள் சார்பாக நான், இப்பெரியார் படத்தை மூடியிருக்கும் திரையை விலக்குகின்றேன். அதே போல் நீங்களும் உங்கள் மடமைத் திரையை விலக்கிப் பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள்.

(முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக