ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணம்

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (294)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 16-30 2022

கழகத்தின் சார்பில் இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் 20.3.1999 அன்று திருத்தணி முதல் திருச்சி வரையிலான பயணம் மேற்கொண்டோம். இந்தப் பிரச்சாரப் பயணத்தின் முதல் நாள் திருத்தணி பேரூராட்சி திடலில் எழுச்சியோடு துவங்கியது. மக்கள் நல உரிமைக் கழகப் பொதுச்செயலாளர் பண்ருட்டி இராமச்சந்திரன் கழகத்தின் கொடியினை அசைத்து துவக்கி வைத்தார்.



புத்தர் தோற்ற இடத்தில் பெரியாரின் வெற்றி! நிச்சயம் அமையும் என்று கூறி, எழுச்சியுரை ஆற்றினேன். நூற்றுக்கும் மேற்-பட்ட கழகத் தோழர்கள் பெரும் பயணத்தில் பங்கேற்றனர்.
இப்பயணத்தின் வழிநெடுக கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர். பல்வேறு கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்கள். சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்தும், கழகக் கொடியினை ஏற்றி வைத்தும் உரையாற்றினேன். மாலை நேரங்களில் பொதுக்கூட்டமும் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
திருநாகேசுவரத்தில் 25.3.1999அன்று கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அறிவாசான் பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினேன்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தின் நிறைவு விழா 29.3.1999 அன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிறைவு விழா மேடையில் அரியலூர் மாவட்டம் செந்துறை சிங்காரவேல் _ ராசலெட்சுமி ஆகியோரின் மகன் இளங்கோவனுக்கும், பெரம்பலூர் மாவட்டம் செந்துறை முகம்மது அன்சாரி _ சர்புன்னிஷா ஆகியோரின் மகள் ரெஜினாவிற்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை பொதுமக்களின் முன்னிலையில் நடத்திவைத்தேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.நல்லகண்ணு, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் மற்றும் பல்வேறு கட்சியினர், முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தோழர் நல்லகண்ணு அவர்கள் உரையாற்றுகையில், “உலகம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து நிலைக்க வேண்டுமானால், அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஆசிரியர் வீரமணி அவர்கள் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல், கடும் பகலிலும், இரவிலும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். அவருடைய பிரச்சாரப் பயணத்தை _ இலட்சியப் பயணமாக நாங்கள் கருதுகின்றோம். ஜாதியை ஒழிக்க திராவிடர் கழக முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்’’ என உரையாற்றினார்.

எனது நிறைவுரையில், ஜாதி ஒழிப்புக்கான பத்து அம்சத் திட்டத்தினை விளக்கியும், அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்புக்குப் பதிலாக ஜாதி ஒழிப்பு என்று திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உரையாற்றினேன். இப்பெரும் பிரச்சாரப் பயணத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்களுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக