சனி, 8 ஏப்ரல், 2023

எனக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட தஞ்சை மாநாடு - கி.வீரமணி (மனிதநேய மாநாடு)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (285)

ஜனவரி 16-31,2022

மனிதநேய மாநாட்டுக்கு இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சேனல் இடமருகு (டில்லி), இங்கிலாந்து நாத்திகர் மால்கம் ஒவன்ரீஸ், சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் முருகு.சீனிவாசன் எஸ்.டி.-மூர்த்தி, தி.நாகரத்தினம், தமிழ்மறையான், மலேசிய தி.க. தேசியத் தலைவர் ரெ.சு.முத்தய்யா, திராவிடமணி நல்லதம்பி, டத்தோ பாலகிருஷ்ணன், திருச்சுடர் கே.ஆர்.-ராமசாமியின் குடும்பத்தினர், கருநாடக மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவின் உறுப்பினர் என்.வி.நரசிம்மையா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான பேராசிரியர் டாக்டர் இலட்சுமண் எஸ்.தமிழ் (இலக்குவன்தமிழ்), சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், இங்கிலாந்து நாட்டின் இணையற்ற பெரியார் பெருந்தொண்டர் செல்வநாயகம், பி.பி.சி. தமிழோசை புகழ் சங்கரமூர்த்தி இன்னும் பல வெளிநாட்டு தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு கழகத்தின் செயல்பாடுகளையும், கழகம் செய்துவரும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் வாழ்த்திப் பேசினார்கள்.

கழகப் பொறுப்பாளர்களின் அன்புக்கிணங்க மேடையிலே ஒரு பெரிய தராசினைக் கொண்டுவந்து ஒரு தட்டில் என்னையும், மற்றொரு தட்டில் ரூபாய் நோட்டுகளும், தங்கமும் வைக்கப்பட்டன. தராசு முள் நடுவில் நேராக நின்றதும், நான் இறக்கி விடப்பட்டேன்.  அவ்வாறு கொடுக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.9 கோடி ரூபாயாகும். முதன்முதலில் எடைக்கு எடை தங்கம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை அறிவித்தவர் பொருளாளர் கா.மா.குப்புசாமி ஆவார். அவருக்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் கேட்டுக்கொள்ள வைரக்கல் பொறித்த தங்க மோதிரத்தை அணிவித்தேன். மாநாட்டில் நிறைவுரையில், “இந்த நிதி எனக்காக அளிக்கப்பட்டதல்ல! தந்தை பெரியாருக்கு நன்றிகாட்ட என் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மதவாத எதிர்ப்பு இளைஞர்களுக்குப் பயிற்சிப் பட்டறை, 100 புத்தக விற்பனை நிலையம், பல மொழிகளில் தந்தை பெரியாரின் நூல்கள், புதுடில்லியில் நமது இயக்கம் பற்றிய உலகத் தகவல் மய்யம் போன்ற ஆக்கரீதியான பணிகளுக்குப் பயன்படுத்துவோம் என்றேன். நாங்கள் ஏதோ தன்னந்தனியராக இல்லை. உலகக் குடும்பமே எங்களுக்குத் துணையாக இருக்கிறது என்பதைத்தான் இந்த மனிதநேய மாநாடு காட்டியிருக்கிறது’’ எனப் பல கருத்துகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.

மாநாட்டு மேடையில் நான்கு சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. ஊற்றங்கரை திருவாளர்கள் அப்பாவு _ பச்சியம்மாள் ஆகியோரின் செல்வன் இராசேந்திரன், சின்னக்கண்ணன் _ சந்திரா ஆகியோரின் செல்வி வேல்விழி; கோவில்தேவராயன் பேட்டை திருவாளர்கள் சங்கரலிங்கம் _ சகுந்தலா ஆகியோரின் செல்வன் சந்துரு, வல்லம் பிள்ளையார்பட்டி சிதம்பரநாதன் _ கலைமணி ஆகியோரின் செல்வி அஞ்சுகம்; தஞ்சாவூர் மாவட்டம் சாமிமுத்து _ அந்தோணியம்மாள் ஆகியோரின் செல்வன் லூர்துசாமி, அந்தோணிசாமி _ சவுரியம்மாள் ஆகியோரின் செல்வி தங்கமணி; கோவை மாவட்டம் சுந்தராபுரம் கே.எம்.சண்முகம் _ ருக்மணி ஆகியோரின் செல்வன் கதிரவன், கே.பழனிச்சாமி _ கவுசல்யா ஆகியோரின் செல்வி லாவண்யா ஆகிய நான்கு இணையரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.

பூதனூர் திராவிடர் கழகத் தலைவர் இரா.இலக்குமணன் அவர்களின் பேரக் குழந்தையும், கவுதமன் _ சுமதி ஆகியோரின் மகளுமான பெண் குழந்தைக்கு ‘தங்கமணி’ எனப் பெயர் சூட்டினேன்.

மாநாட்டில் நான் எழுதிய Why I do not believe in God?” என்னும் ஆங்கில நூலை பார்பரா சுமோக்கர் வெளியிட, ஜெர்மானிய நாத்திக அறிஞர் டாக்டர் வால்கர் முல்லா பெற்றுக் கொண்டு _ தமிழ்நாட்டில் உள்ள இதுபோன்ற இயக்கத்தை ஜெர்மனியில் மட்டுமல்ல _ உலகில் வேறு எங்குமே காண முடியாது என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு தஞ்சையில் அனைத்து தரப்பு மக்களையும் பகுத்தறிவுப் பாதையில் கொண்டுசெல்லும் வகையில், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு கழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றது.

ஜெர்மனி நாத்திகக் குழுவினர் சென்னை பெரியார் திடலுக்கு 6.2.1998 அன்று இரவு ஏழு மணிக்கு வால்கர் முல்லருடன் இணைந்து நாத்திகச் சங்கத்தைச் சார்ந்த பத்து பேருடன் வருகை புரிந்தனர். அவர்களை பகுத்தறிவுக் கழகச் செயலாளர் கோ.அண்ணாவி வரவேற்றார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மந்திரமா? தந்திரமா? நிகழ்வை ஜெர்மன் குழுவினருக்கு மெருல்கம்தார் ஆங்கிலத்தில் விளக்கிக் கூறினார். இந்த நிகழ்ச்சி அவர்களை மிகுந்த வியப்புக்குள்ளாக்கியது. மலேசிய செல்வம் விழாக்குழு சார்பில் அனைவருக்கும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.

ஜெர்மனிய நாத்திகச் சங்க பிரதிநிதி வால்கர் முல்லருக்கு சால்வை அணிவித்து தந்தை பெரியார் உருவம் பொறித்த நினைவுச் சின்னத்தை வழங்கினேன். அந்த நிகழ்வில் உரையாற்றுகையில், “தந்தை பெரியார் அவர்கள் 1932ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார். இன்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாத்திகவாதிகள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு வந்திருக்-கின்றார்கள். ஜெர்மனி நாட்டைச் சார்ந்த மேக்ஸ் முல்லர் அவர்கள் சமஸ்கிருதத்தைப் பரப்ப இங்கு வந்தார். இன்றைக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் வால்கர் முல்லரும் நாத்திகப் பிரதிநிதிகளும் தந்தை பெரியார் அவர்களது கருத்தை ஜெர்மனியில் பரப்ப இங்கு வந்திருக்கின்றனர். காலச் சக்கரம் சுழலுகின்றது! ஜாதி, மதம், கடவுள் ஒருபோதும் மக்களை இவை ஒன்றிணைக்காது. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையான மனிதநேயம் மட்டுமே மனித குலத்தை ஒன்றிணைக்கும்’’ என பல்வேறு கருத்துகளைக் கூறினேன். இந்த நிகழ்வுக்கு கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக