சனி, 15 ஏப்ரல், 2023

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழா!


கட்டுரையின் ஒரு பகுதி...

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழா!

கி.வீரமணி

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்னையிலிருந்து 4.10.1998 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் புறப்பட்ட கழகத் தோழர்களை, 6.10.1998 அன்று காலை 7:00 மணிக்கு புதுடில்லி இரயில் நிலையத்தில், சந்திரஜித் யாதவ் அவர்களும் நானும் மகிழ்ச்சியுடன் வரவேற்றோம்.

84 தோழர்களையும் இரு பேருந்துகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தோம். மறுநாள் அடிக்கல் நாட்டு விழாவும் மாநாடும் நடக்கவிருப்பதால் தோழர்களுக்கு அன்று ஓய்வு அளிக்கப்பட்டது.

7.10.1998 விடியற்காலை 4:30 மணிக்கு தோழர்கள் எழுந்து பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டப்படும் பாம்னோலி (Bomnoli) இடத்திற்கு காலை 7:00 மணிக்கு வந்து சேர்ந்தனர்.

அடுத்து சந்திரஜித் யாதவ் அவர்கள் அங்கு வந்தார். அனைவரிடமும் கைகுலுக்கி அன்பொழுகப் பேசினார். நீலவானத்தின் கீழ் வெண் விதானமாய் விரிந்த துணிப்பந்தலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.

காலை 9:20 மணிக்கு சமூகநீதிக்காவலர் மாண்பமை வி.பி.சிங் அவர்கள் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். 9:25 மணிக்கு பெரியார் மய்யத்திற்கு அடிக்கல் நாட்டு விழாப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். அனைவரும் மகிழ்வு பொங்க கையொலித்து, ஆரவாரம் செய்தனர்.

சந்திரஜித் யாதவ் உரை

அடுத்து, விழாவிற்குத் தலைமையேற்ற சந்திரஜித் யாதவ் அவர்கள் தமது தலைமை உரையை ஆற்றினார். “இன்று பெரியார் மய்யத்திற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. பெரியாரோ சமூகநீதிக்கான அடிக்கல்லை என்றோ நாட்டிவிட்டுச் சென்றார்’’ என்று பெருமை பொங்கக் கூற, அனைவரும் கையொலித்து மகிழ்ந்தனர்.

இன்று தம்பித்துரை அமைச்சராக இருக்கின்றார் என்றால் அவர் பெரியாரின் உருவாக்கம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.

பெரியார் அறக்கட்டளை பல தொண்டு-களைச் செய்துவருகின்றது. பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்றார் பெரியார். தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்றார். விதவை மணம் வேண்டும் என்றார். பெரியார் சமூகநீதிக் கொள்கையை மக்களிடையே விதைத்தார். இந்த பெரியார் மய்யம் ஒரு பிரச்சார நிலையமாக விளங்கும். இந்த மய்யத்தில் அமைக்கப்படும் இன்டர்நெட் வசதி பெரியாரை உலகெங்கும் அழைத்துச் செல்லும்.

தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்துள்ள பெரியார் தொண்டர்களே, நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். உலகம் எங்கும் பெரியாரின் சீடர்கள் இருக்கின்றார்கள். உலகெங்கும் பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை வீரமணி பரப்பி வருகிறார். அடுத்து, வீரமணி அவர்களை வரவேற்புரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்’’ என்றார்.

9:45 மணியளவில் நான் வரவேற்புரை நிகழ்த்தினேன்.

இன்று பத்திரிகைகள் எல்லாம், “பெரியார் டில்லி செல்கிறார்’’ என்று எழுதுகின்றன. செய்திகளில் எல்லாம் இன்று பெரியார் இடம் பெறுகின்றார். அவர் ஏற்றிய சுடரை நாங்கள் ஏற்றிச் சென்றுகொண்டே இருக்கிறோம். இதைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியாலும் முடியாது.

இந்தப் ‘பெரியார் மய்யம்’ அமைந்துள்ள நிலத்தை, சந்திரஜித் யாதவ் அவர்களின் உதவி கிடைத்திராவிட்டால் நாங்கள் வாங்கியிருக்க முடியாது. அவருக்கும் நன்றி உரியது. நம் அழைப்பின் பேரில் வந்துள்ள மத்தியப் பிரதேசத் துணை முதல்வர் சுபாஷ் யாதவ் அவர்களையும், அமைச்சர்கள் தம்பிதுரை, கடம்பூர் ஜனார்த்தனம் ஆகியோரையும் வரவேற்கின்றேன் மற்றும் இங்கு வந்துள்ள பெருமக்களையும் வரவேற்கின்றேன்.

பெரியார் மய்யம் அமைந்துள்ள இடம் ஒரு கிராமமாகும். கிராம மக்கள் வாழ்கின்ற பகுதியில் இம்மய்யம் அமைக்கப்படுகின்றது. இந்தப் பெரியார் மய்யத்தில் கட்டப்படும் கட்டடம் மூன்று மாடிகளைக் கொண்டதாக இருக்கும். இது மட்டுமல்ல, பெரியார் கணினி மய்யம் ஒன்றும் இப்பெரியார் மய்யத்தில் அமைக்கப்படும். இதனால், இப்பகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

இன்று இங்கு வந்திருக்கும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இன்று மருத்துவமனை சென்று மருத்துவம் பெற வேண்டிய நாள். மருத்துவர் கட்டளைகளையும் மீறி இன்று இந்த விழாவிற்கு வந்துள்ளார். அவரை வரவேற்கின்றேன்’’ என்று எனது உரையில் கூறினேன்.

அமைச்சர் தம்பிதுரை

மத்திய சட்டத்துறை அமைச்சர் தம்பிதுரை பேசும்போது, பெரியார் சமூகநீதிக்காகப் பாடுபட்டவர் என்றும், ஜாதிப் பட்டங்களை விட்டொழிக்க வேண்டும் என்று சொன்னவர் என்றும், ஜாதியற்ற சமுதாயம் அமைக்கப் பாடுபட்டவர் என்றும், இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் என்றும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மக்களின் உயர்வுக்குப் பாடுபட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

சுபாஷ் யாதவ்

மத்தியப் பிரதேச துணை முதல்வர் சுபாஷ் யாதவ் உரையாற்றுகையில், பெரியார் மய்யம் வளர்ந்தோங்கத் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார்.

கடம்பூர் ஜனார்த்தனம்

மத்திய அரசின் நிதித்துறை இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் அவர்கள் உரையாற்றும்போது, 1939இல் பள்ளி மாணவனாக இருந்தபோது, தாம் தந்தை பெரியாரைத் தம் ஊரில் சந்தித்ததையும் 1948இல், தாம் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டமையையும் 1998இல் அமைச்சராக இருப்பதையும் எடுத்துக் கூறினார். மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் இம்மய்யத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இம்மய்யம் அரும்பணி ஆற்றும் என்றார்.

ஜெகவீரபாண்டியன்

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தமிழ்நாடு தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் அவர்கள் பெரியாரின் பெருஞ் சாதனைகளால் தான் நாம் உயர்வு பெற்றோம். சமூகநீதியை நிலைநாட்டிய பெருமை அவரையே சாரும் என்றார்.

வி.பி.சிங் உரை

சரியாகக் காலை 10:22 மணிக்கு கொள்கைக்காகப் பிரதமர் பதவியையே உதறித் தள்ளிய ஒப்பற்ற வரலாற்று நாயகர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் உரையாற்றினார்.  உடல்நலக் குறைவால் சக்கர நாற்காலியில் அமர்ந்து பேசினார். தனக்குச் சிறுநீரகம் வழங்க முன்வந்த 15 பேரில் தேர்வு செய்யப்பட்ட, ஒரத்தநாடு இராமகிருஷ்ணன், தஞ்சை காளிதாஸ், சிதம்பரம் சித்தார்த்தன் ஆகிய மூவரையும் அமர்ந்தபடியே கட்டித்தழுவி தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்.

“நண்பர் வீரமணி அவர்கள், நான் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்று பலமுறை என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார். என் உடல்நிலை பயணம் மேற்கொள்ள இடம் தரவில்லை. அடுத்த பிறவியில் நான் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். இது என்னுடைய ஆசையாகும். பெரியார் கருத்துகள் மனித சமுதாயத்துக்கே உரியவை, அவர் கொள்கைகள், கருத்துகள் வடபுலத்தில் கிராமங்களிலும் பரவ வகை செய்ய வேண்டும். அவர் நாட்டு விடுதலைக்காகச் சுதந்திரப் போரில் ஈடுபட்டவர். அதன் பின்னர் சமுதாயத்தின் மாபெரும் விடுதலைக்காகப் போரிட்டார். நம் நாடு ஒரு வறிய நாடு, நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெரியார் மய்யத்தில் கணினி மய்யம் திறக்கப்பட இருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பெரியாரின் கருத்துகள் வடபுலத்திலுள்ள கிராமங்களிலும் பரவ வேண்டும்.

நாம் சார்ந்திருக்கிற அரசியல் கட்சிகள் நம்மைப் பிரிக்கலாம். ஆனால், இயக்கம் நம்மை ஒன்றுபடுத்துகின்றது. இந்த மேடையிலேயே பல அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்கள் வீற்றிருக்கின்றார்கள். ஆனால், நாம் இங்கு மனித நேயக் கொள்கைக்காக ஒன்றுபட்டிருக்கின்றோம்.

மனிதனுக்கும், இயந்திரத்திற்கும் வேறுபாடு உண்டு. ஒரு ரோடு ரோலர் என்ஜின் இருக்கிறது. அதன்மீது எச்சிலைத் துப்பினால் அது ஆத்திரப்படாது. மனிதன் மீது துப்பினால்  அவனிடமிருந்து மான உணர்வு கோபமாய் வெளிப்படும்.

என்ஜினுக்குச் சுயமரியாதை இல்லை. மனிதனுக்கு உண்டு. நமது சுயமரியாதை உணர்வுகள் எல்லாம் எதிரிகளால் கவரப்பட்டுவிட்டதால் நம் மக்கள் என்ஜின்களாக மாறிவிட்டார்கள். நம் மக்களுக்குள் பகைமை உணர்ச்சி மேலோங்குகின்றது. காரணம், ஜாதி முறை. நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் ஒரு பக்கம் குவியும்போது, சிக்கல்களும் போராட்டங்களும் எழுகின்றன.

வீரமணியைக் கேளுங்கள்!

கல்வி நிலையங்களை எப்படிச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் தூதுக் குழுக்களை வீரமணி அவர்களிடம் அனுப்பித் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனக்குச் சீறுநீரகம் வழங்கத் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் முன்வந்திருப்பதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் என் சிறுநீரகத்தை யாருக்கும் அன்பளிப்பாக நான் வழங்க முடியாது. ஆனால், இச்சிறுநீரகம் தவிர்த்த என் உடல் உறுப்பு ஒவ்வொன்றையும் அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்ற என் விருப்பத்தை என் வீட்டாரிடமும் சொல்லிவிட்டேன். இம்மாதிரி உடல் உறுப்புகளை அன்பளிப்பாக வழங்கும் முறையையும் திராவிடர் கழகம் நடைமுறைத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

உங்களுக்காக உயிரையே கொடுப்போம்!

வி.பி.சிங் அவர்கள் பேசி முடித்ததும், உரையாற்றிய நான், மேன்மைமிகு வி.பி.சிங் அவர்களே, உங்கள் உரை எங்களை நெகிழச் செய்துவிட்டது. இந்த இளைஞர்கள் செய்தது குறைவு! மண்டல் குழு அறிக்கையைச் செயலாக்கம் பெறச் செய்த தங்களுக்காக எங்கள் உயிரையே நாங்கள் கொடுப்போம் என்று நான் கூறியபோது, கூட்டத்தினர் கண்ணில் நீர்ப்பெருகி வழிந்தது!

சமூகநீதியைக் காக்க வி.பி.சிங் அவர்கள் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று  வாழ்த்தினோம்.

உடல் உறுப்புகளை அன்பளிப்பாக வழங்குவதற்கான திட்டத்தைத் திராவிடர் கழகம் ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது என்று எடுத்துக் கூறினேன்.

சந்திரஜித் யாதவ் அவர்கள் இந்த மூன்று இளைஞர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தாரையும் வாழ்த்த வேண்டும் என்றார்.

விழா சிறக்கப் பேருதவி புரிந்த பலரும் மேடையில் சால்வைகள் அணிவிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர். நன்றி உரையுடன் முற்பகல் 11:00 மணிக்கு விழா இனிது முடிவடைந்தது.

விழா முடிந்ததும், தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கழகக்  குடும்பத்தினர் 84 பேரும் “மாவ்லங்கர்’’ அரங்கில் நடைபெறும் தேசிய சமூகநீதி மாநாட்டிலும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிலும் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர்.

7.10.1998 அன்று மாலை, சமூகநீதியின் தேசிய மாநாடு மாவ்லங்கர் மாளிகையில் தொடங்கியது.

பெரியார் பெருந்தொண்டர் சந்திரஜித் யாதவ் தலைமை தாங்கினார். நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மேடையிலே குழுமியிருந்தார்கள். சமூகநீதியில் பற்றுடையோர் அய்யாயிரம் பேருக்கு மேல் குழுமியிருந்தனர்.

பெரியார் மய்யம் விழா முடிந்து, புறப்பட்ட கழகத் தோழர்கள், அங்கிருந்து நேரே உந்து வண்டிகளில் மாவ்லங்கர் மாளிகை வந்தடைந்தனர். அப்போது மேடையிலிருந்து பெரியார் பெருந்தொண்டர் சந்திரஜித் யாதவ், தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் _ வந்து நுழைந்து கொண்டிருக்கும் பெரியார் தொண்டர்களை வருக, வருக என வரவேற்கிறேன் என எழுந்து நின்று கைகூப்பி வரவேற்றார்.

யாதவ் மீண்டும் கூறினார்: தமிழ்நாட்டுப் பெருமக்களே, மண்டபம் நிரம்பி வழிகிறது. உங்களுக்கு அங்கு உட்கார இடம் இல்லை. இங்கு வந்திருக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவரும் தலைவர்கள் வீற்றிருக்கும் மேடைக்கு வந்து எங்களுடன் அமர்க என்றார்.

வீரநடை போட்ட நம் மகளிர்

பெரியார் தர்பாரில் கொலு மண்டபத்தின் படியில், நமது மகளிர் உரிமையோடும், பெருமையோடும், பெருமிதத்துடனும் ஏறி, ராணுவ வீராங்கனைகளின் மிடுக்குடன் மேடைக்குச் சென்று அமர்ந்தனர்.

அந்த மாநாட்டிலே பதினைந்து பேர் உரையாற்றினர். தலைவராக வீற்றிருந்தவர் சந்திரஜித்யாதவ். முதன்மை விருந்தினராக  டில்லி நாடாளுமன்றத்தின் மேனாள் அவைத் தலைவர் பி.ஏ.சங்மாவும், நானும். தவிர மேற்கு வங்க டாக்டர் மாயாகோஷ், டில்லியைச் சேர்ந்த சோனி, மாநிலங்களவை உறுப்பினர் டி.பி.யாதவ், இராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாக்டர் கரன்சிங், சையது சகாபுதீன், ஆஸ்கார் பெர்னாண்டஸ் எம்.பி., ராஜேஸ் பைலட், பிரசாத் வெராலா, கல்கத்தாவைச் சேர்ந்த கே.சி.காபாஸ், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ரெட்டி ஆகிய பதினைந்து பேர் உரையாற்றினார்கள்.

சங்மாவின் கர்ஜனை

“இடஒதுக்கீடு கேட்கிறோம் நாம். இடஒதுக்கீடு அளிக்கும்போது போதிய படித்தவர்கள் வேலைகளை ஏற்கக் கிடைக்கவில்லையே என் செய்வது? பீகாருக்குச் சென்றேன், உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றேன். அங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பள்ளிகளே இல்லை. என்னைச் சந்திக்க வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளிடம் நான் இதைச் சுட்டிக்காட்டி வற்புறுத்தினேன். பள்ளிகளைத் திறக்கச் செய்யுங்கள்; பள்ளிகளை திறக்குமாறு போராடுங்கள் என்றேன்’’ என்றார் சங்மா. பெரியார் கட்டளையை ஏற்றுப் பள்ளிகளைத்  திறக்கப் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் காமராசர்கள் இன்னும் தோன்றவில்லை. சங்மாவின் அறைகூவல் பள்ளிகளைத் திறக்கச்செய்யும் போர் அழைப்பாக அமைந்தது.

பெரியாரின் வைக்கம் போரை நினைவூட்டி பெரியாரின் தொண்டுகளைக் குறிப்பிட்டார்.

கே.சி.யாதவ் முழக்கம்

“வீரமணி அவர்கள் சமூகநீதிக்கு ஆற்றும் பணி குறிப்பிடத்தக்கது. அவர் என் சகோதரர். நாங்கள் இருவரும் ஒரே கருத்துடையவர்கள். நாங்கள் சகோதரர்கள். நாங்கள் ஒரே கருத்தை ஒரே குறிக்கோளைக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சகோதரர்கள் மட்டுமல்ல, தோழர்கள், ஒருங்கிணைந்து உழைப்பவர்கள் போர் முனையில் ஓரணியில் உள்ள போர் வீரர்கள்’’ என்று உணர்வுபொங்கக் குறிப்பிட்டார்.

நாம் பெரியார் மய்யத்தை புதுடில்லியில் அமைத்திட வேண்டும். புத்தரும் கபீரும் காந்தியாரும் ஜோதிபா பூலேயும் உற்சாக மூட்டியது போல் பெரியார் கருத்துகளும் உற்சாக மூட்டவல்லன.

பெரியார் என்றும் வாழ்வார்; எல்லாருடைய உள்ளங்களிலும் வாழ்வார்; எல்லா நூற்றாண்டுகளிலும் வாழ்வார் என்றார்.

சந்திரஜித் யாதவ்

சந்திரஜித் யாதவ் அவர்கள், “ஒரு கோடி ரூபாயில் பெரியார் மய்யம் கட்டப்பட இருக்கிறது என்றார். வீரமணி உறுதியாக இந்த ஒரு கோடி ரூபாயும் மக்களிடமிருந்து திரட்டப்படும் என்ற அறிவித்தார்.

தமிழ்நாட்டு மக்கள் வீரமணியின் எடைக்கு எடை தங்கம் வழங்கினார்கள். அந்தத் தங்கம் முழுமையும் பெரியார் அறக்கட்டளையில் சேர்ந்துள்ளது. இந்த அறக்கட்டளை பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்தி வருகின்றனது. டில்லியில் இன்று உருவாகும் பெரியார் மய்யம் இரண்டாம் விடுதலைப் போரை நடத்தும். பெரியார் மய்யத்தில் கணினி மய்யம் வரும் என்று வீரமணி அறிவிக்கிறார். டில்லியைச் சுற்றியுள்ள சிற்றூர் மக்களுக்கு இது பேருதவி நல்கும்’’ என்று தனது உரையை நிறைவு செய்து, என்னை உரையாற்ற அழைத்தார்.

சரியாக மாலை 4:00 மணிக்கு நான் உரையாற்றினேன். “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்; நாம் அலாரம் டைம்பீஸ் வாங்குகிறோம். ஒருமுறை மட்டும் அலாரம் அடிக்கும் டைம்பீஸ் உண்டு. ஆனால், தூக்கத்திலிருந்து விரைந்து விடுபட முடியாதவர்களுக்கு என்று புதுவகையான அலாரம் டைம்பீஸ் உண்டு. அது திரும்பத் திரும்ப அலாரம் அடித்துக் கொண்டே இருக்கும். தூங்குகிறவன் எழுகின்றவரை அது அடித்துக் கொண்டே இருக்கும். இந்த இரண்டாம் வகை அலாரம் டைம்பீஸாக நாம் செயல்படுகிறோம்.

இன்று நாட்டின் நிலை என்ன? சமூக நீதியில் விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ இன்று எல்லோரும் சமூகநீதி வேண்டும் எனப் பேசுகின்றோம். பாரதீய ஜனதா கட்சிக்காரர்-கள்கூட சமூகநீதிக்காக மாநாடுகள் நடத்து-கின்றார்கள். ஆகவே, நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் யாரிடமும் சமூகநீதியைப் பிச்சையாகக் கேட்கவில்லை. சமநிலைமை வேண்டுமென்றுதான் வாதாடுகிறோம். (We do not want charity but we want parity) மண்டல் குழு அறிக்கை, நீதிமன்றத்தின் தீர்ப்பு, கிரீமிலேயர் போன்ற விவரங்களையெல்லாம் மக்களுக்கு விளக்குகிறோம். இத்துறைகளில் நாம் ஆற்றிய பணிகள் மிகக் குறைவு. இன்னும் செய்ய வேண்டியவை மிகப் பல. தனியார் நிறுவனங்களிலும், இடஒதுக்கீடு வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் எப்பொழுது செய்ய வேண்டும் என்றால், எனது பதில் இப்போதே செய்ய வேண்டும் என்பதே!

எனக்கு முந்திப் பேசியவர் கடவுளின் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் என்றார். நான் பெரியாரியலைக் கொண்டவன். எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், இது எங்களைப் பிரிக்க வேண்டியதில்லை. சமூகநீதிக்காக அவரும் நானும் ஒன்றுபடுகிறோம்.

தமிழ்நாட்டில் அரசு வரலாம்; போகலாம். ஆனால், சமூகநீதியின் இடஒதுக்கீட்டைக் கைவிடும் அரசு தமிழ்நாட்டில் ஒரு விநாடிகூட அரசுக்கட்டிலில் இருக்க முடியாது என்று உரையாற்றினேன்.

தலைநகர் டில்லியில் சமூகநீதி மாநாடு எதிர்பார்த்ததற்கும் மேல், சிறப்போடும், எழுச்சியோடும், மிகுந்த பயனளிக்கும் வகையிலும் நிறைவு பெற்றது.

(நினைவுகள் நீளும்…)

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (291)

ஏப்ரல் 16-31,2022

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக