தமிழர்கள் செழித்தோங்க! உயர்ந்தோங்க!!
பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், “உலகம் முழுவதும் தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும், உழைப்புமே அடித்தளம்!”, என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க வரியைப் பதிவு செய்திருக்கிறார்கள்!
ஆம்! தொடக்கக் கல்வி தொடங்கி, அதிகபட்ச உயர்கல்வி வரை தமிழர்கள் செழித்தோங்க, உலகம் முழுவதும் உயர்ந்தோங்க திராவிட இயக்கங்களின் ஈடுஇணையற்ற அர்ப்பணிப்பு தான் இதற்குக் காரணம்!
ஜப்பானில் தமிழர்கள்!
மலேசியா, சிங்கப்பூர், அய்ரோப்பா மற்றும் அரபுநாடுகளில் தமிழர்கள் வசித்தாலும், ஜப்பான் நாட்டில் வசிப்பதை மட்டும் பலரும் வியப்புடன் பார்க்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக, தாங்கள் மட்டுமே படிக்கும் வாய்ப்பைப் பெற்ற பார்ப்பனர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்னரே ஜப்பானுக்குச் சென்றுவிட்டனர். எனினும் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக காலடி எடுத்த வைத்த தமிழர்கள், இன்றைக்குத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகிறார்கள் என்றால் இதன் வளர்ச்சி,
பரிணாமம் சாதாரணமானது அல்ல!
அந்தக் காலத்தில் பெரிய செல்வந்தராகக் கூட இருக்கலாம். ஆனால் எழுதப் படிக்கத் தெரியாது. அந்த வாய்ப்புகள் இல்லை. ஆக அனைவருக்குமான உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவை திராவிட இயக்கங்கள்! இந்த வரலாற்றை அறிந்த காரணத்தால் எந்த நாட்டில், எந்த பதவியில், எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அடித்தளமாகப் பெரியார் இருக்கிறார், அவரை நினைக்க வேண்டும், நன்றி பாராட்ட வேண்டும் என இளம் தலைமுறையினர் எண்ணுகிறார்கள்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவர்!
அந்த வகையில் “வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம்” (NRTIA) தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளை யும், அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாளையும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தனர். அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து யாரை அழைப்பது என்கிற போது, ஒருமித்தக் குரலாகத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைப்பது என முடிவானது. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவராக, சாதனைகளின் உருவமாக, 10 ஆண்டுகளை வீட்டிற்கும், 80 ஆண்டுகளை நாட்டிற்கும் கொடுத்த ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவராகத் திகழ்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!
பெரியார் ஜப்பான் மயம்!
விழா ஒருங்கிணைப்பாளர்கள் “ஜப்பான் வாழ் திராவி டர்கள்” எனும் வாட்சப் குழு உருவாக்கி உறுதியோடும், தீர்க்கத்தோடும் செயல்படுபவர்கள். அந்தப் பக்கம் ஒரு கால், இந்தப் பக்கம் ஒரு கால் என்றல்ல; தாங்கள் யார்? தங்கள் கொள்கை என்ன? தங்கள் தலைவர்கள் யார்? என்பதைத் தெளிவோடு அறிவித்து, தீரத்தோடு செயல்படும் இலட்சிய வீரர்கள்! அப்படியான கொள்கைப் பிரகடனம் செய்து, டோக்கியோ நகரில் இவர்கள் நடத்திய விழாவிற்குத் தான் ஜப்பான் வாழ் தமிழர்கள் குவிந்துவிட்டனர்; அதுவும் குடும்பம், குடும்பமாகக் குழுமிவிட்டனர்!
பெரியாரை ஏதோ கடவுள் மறுப்பாளர், ஜாதி, மத வெறுப்பாளர், அதனைத் தவிர்த்து வேறொன்றுமில்லை என ஆதிக்கக் கூட்டம் நிலை நிறுத்தப் பார்த்தது. பலப்பல ஆண்டுகளாய், அந்தப் பணியை அவர்கள் செய்தார்கள். அதில் 100 விழுக்காடு அவர்கள் தோல்வியை எட்டினார்கள் என்பதற்கு நாம் நூறு உதாரணங்களைக் கூற முடியும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல; டோக்கியோ சென்று கூட அந்தச் சான்றுகளை நாம் நிரூபிக்க முடியும்!
ஜப்பான் தோழர்களின் சமூக உணர்வு!
நமது கொள்கை என்பது சமத்துவமானது; உண்மை யானது; நேர்மையானது; எதிரிக்கும் தீங்கு விளைவிக்காதது! அதனால்தான் நாம் வெற்றி பெறுகிறோம்! இந்த வெற்றியில் பெரியாருக்கு எதிராக இருப்பவர்களும், ஏன்… பார்ப்பனர்களும் கூட பயன்பெறுவார்கள் என்பதுதான்
உச்சபட்ச சிறப்பம்சம்!
இப்படியான மனிதநேயக் கொள்கைகளை உள்வாங்கிய தோழர்கள், தங்கள் அழைப்பிதழைத் தயார் செய்திருந்தனர். பெரியார் தொண்டர்கள் என்பவர்கள் எதையும் உணர்ச்சி வசப்பட்டு செய்பவர்கள் அல்லர்; மாறாகப் பொறுப்பு ணர்ச்சியும், சமூகக் கவலையும் கொண்டவர்கள்! இதோ… அவர்களின் அழைப்பிதழ் வாசகங்களைப் பார்ப்போம்!
ஜப்பான் வாழ்
தமிழ்ச் சொந்தங்களே….
‘ஜப்பான் வாழ் தமிழ்ச் சொந்தங்களே வணக்கம்!
ஒரு சமுதாயம் வளர்ச்சி அடைந்த சமுதாயமாகக் கருதப் பட முக்கியமான காரணங்களில் ஒன்று சுயமரியாதை! ஒரு சமுதாயத்தில் வாழும் தனி மனிதர்களில் பெரும்பாலானோர் தன்மானத்தைப் போற்றினால் மட்டுமே அச்சமுதாயம் மானமும், அறிவும் மிக்கதாக உலகத்தால் பாராட்டப்படும்! அதுவே மனிதகுல வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, தொழில்களையும் அதன் வழி வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி, முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உலகையே வழிநடத்திச் செல்லும்!
கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக நம் தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கி வெற்றிநடை போடுவதற்குக் காரணமாக அமைந்தது, ஒரு நூற்றாண்டு காலமாக திராவிடர் இயக்கத் தலைவர்கள் நம் முன்னோர்களுக்கு ஊட்டி வரும் சுயமரியாதை உணர்வே!
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற தன்னிகரற்ற தத்துவத்தைப் போதித்த நம் தமிழ்ச் சமுதாயம், வரலாற்றில் ஒரு கட்டத்தில் அந்நிய ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு தம் அடையாளங்களை இழக்கத் தொடங்கிய போது, நம் இனத்தை வீறு கொண்டு எழச் செய்தது தான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!
சுயமரியாதையின் விரிந்த வடிவமான இம்மூன்று குணங்களையும் வாழ்வியலாக கொண்டு, நமக்காக வாழ்ந்து மடிந்த எண்ணற்ற திராவிடர் இயக்கத் தலைவர்களில் தலையானவர்களான தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் நாம் இன்று இருக்கும் உயர்ந்த நிலைக்காக நன்றியுடன் நினைவு கூர வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை! அதை நிறைவேற்றவே ஜப்பானில் உள்ள வெளிநாடு வாழ் தமிழ்
இந்தியர்கள் சங்கம் தங்களை அன்புடன் அழைக்கிறது!
தமிழனின் முன்னேற்றத்திற்கு எது முட்டுக்கட்டையாக வந்தாலும் “பகுத்தறிவு” என்னும் தடி கொண்டு நொறுக்கிய தந்தையையும், அவரது முற்போக்கு சிந்தனைகளுக்கு எல்லாம் அரசாணை வழி செயல் வடிவம் கொடுக்கத் துணிந்த தனயனையும் போற்றுவோம் வாரீர்! வாரீர்!!’’
என முரசு கொட்டி, சங்கே முழங்கிய ஜப்பான் வாழ் இளம் தலைமுறையை நாம் நெஞ்சில் ஏற்றாமல் இருக்க முடியுமா!
அப்படியான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்குத் தான் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்திருந்தார்கள்! வாருங்கள்… அடுத்த தொடரில் நாமும் ஜப்பான் சென்று வருவோம்!
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக