வெள்ளி, 18 அக்டோபர், 2024

ஜப்பான் ‘பெரியார்’ மயம் (3) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்

 


விடுதலை நாளேடு

நெருக்கமான ஜப்பான்!

ஜப்பான் நிஷிகசாய் பகுதியில்தான் ஆசிரியருக்கான தங்கும் விடுதி இருந்தது. புதுக் கண்ணாடியைத் திரும்பத் திரும்பத் துடைத்து வைத்தது போன்ற சாலைகள், அழகான கட்டட அமைப்புகள், 24 மணி நேரமும் செயல்படும் வணிக நிறுவனங்கள், எங்கும், எதிலும் பரபரப்பு, எனினும் எப்போதும் நிலவும் பேரமைதி! அதனால் ஏற்படுகிற பேரானந்தம்! அதுதான் ஜப்பானை மனதிற்கு நெருக்கமாக வந்து அமரச் செய்கிறது!
ஜப்பானைச் சுற்றுலா தலங்கள் நிறைந்த நாடு என்று சொல்வதை விட, சுயமரியாதை மிக்க நாடு என்று சொல்லலாம். அதற்கான காரணங்களை ஆயிரமாயிரம் நாம் அடுக்கலாம்! பெரியார் காண விரும்பிய நாட்டில் வசிப்பதைப் போன்ற ஓர் உணர்வு!

தோழர்களின் திட்டமிடல்!

தங்கியிருந்த அறையில் இருந்து 10 நிமிடத் தூரத்திற்குள் சில தோழர்களின் வீடுகள் இருந்தன. விழா அரங்கமும் அவ்வாறே இருந்தது. ஆசிரியருக்கு ஏற்ற உணவை, தங்கள் உணர்வுகளால் பரிமாறினார்கள். தங்கியிருந்த நாள்களில் தினமும் ஒருவேளை உணவை, எங்கள் வீடுகளில் தான் என்கிற தோழமைகளின் அன்பை ஆசிரியர் மறுக்கவில்லை.

குறிப்பாகத் தோழர்களின் திட்டமிடல் கண்டு ஆசிரியர் வியந்து போனார். குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனம் வந்து நிற்கும். இந்த நாளில் இவர் வருவார்; அடுத்த நாளில் அவர் வருவார் என எல்லோருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். ஆசிரியரை அருகில் அமரச் செய்து, அழைத்துச் செல்லும் எண்ணம் எல்லோருக்கும் இருக்கும் தானே! எல்லோருக்கும் எல்லாம்! அனைவருக்கும் அனைத்தும்! என்கிற தத்துவத்தின் பிரதிபலிப்பு தானே இந்தத் திட்டமிடல்!

தமிழ்நாட்டுப் பெண்கள்!

இப்படியான நிலையில்தான் தோழர் திவ்யா வந்தார். ஆசிரியரின் நகைச்சுவை இழையோடிய பகுத்தறிவுப் பேச்சிலும், பெண்ணுரிமைப் பாடிய பெரியாரின் பேத்தியுமாய் ஆசிரியரிடம் வந்தார். “அய்யா! என் காரில் வாருங்கள்! நான் நன்றாகக் கார் ஓட்டுவேன்!”, என்றார். நாளும் பொழுதும் பெண்ணுரிமைக் கருத்துகளை வலியுறுத்தும் தலைவரின் மகிழ்ச்சிக்குத் தடுப்பணையும் இருந் திடுமோ! ஆசியாவிலேயே மகளிருக் கென்று தனிப் பொறியியல் கல்லூரியை உருவாக்கிய தலைவர் அல்லவா!
தோழர் திவ்யா பிரமாண்ட கார் ஒன்றை ஆசிரியர் முன் கொண்டு வந்து நிறுத்தினார். “அக்கிஹாபாரா” என்று சொல்லக்கூடிய உலகின் முதன்மையான “எலக்ட்ரானிக்” நகரம் அது! அந்த நகரத்துச் சாலைகளில் ஆசிரியரைக் கம்பீரமாக அமர வைத்து அழைத்துப் போனார் திவ்யா! படிப்பு வராது, பாதம் பார்த்து நட, அடக்கமாய் கிட, அடுப்படியே கதி என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன சாஸ்திரப் புராணங்கள்! அதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள்… என உலகம் முழுவதும் பறந்து சென்றுவிட்டார்கள் தமிழ்நாட்டு மகளிர்!

ஆகாயம் தொட்ட ஜப்பான்!

இப்படியான நிலையில் அருகில் இருந்த சுற்றுலா தலங்களுக்குத் தோழர்கள் அழைத்துச் சென்றனர். டோக்கியோ நகரத்தில் இருந்த “TOKYO SKYTREE TOWER” எனும் இடத்திற்குச் சென்றபோது வியப்பு மேலிட்டது. சற்றொப்ப 2080 அடி உயரத்தில் அது இருந்தது. உலகம் முழுவதும் உயரமான “டவர்” இருந்தாலும், இதில் எந்தக் கட்டடமும் இல்லாமல் மிக அதிக உயரம் கொண்டது எனக் கூறினார்கள். அவ்வளவு உயரத் தில் இருந்து பார்க்கும் போது, ஜப்பான் ஆகாயம் தொட்ட வரலாற்றை உணர முடிந்தது!
தொடர்ந்து கமாகுரா எனுமிடத்தில் 37 அடி உயரத்தில் இருந்த புத்தர் சிலையை ஆசிரியர் பார்வையிட்டார். அங்கிருந்த மூங்கில் காடுகள், கடற்கரைப் பகுதிகள் போன்றவை நேர்த்தியாகவும், நெஞ்சை அள்ளுவதாகவும் இருந்தன. டோக்கியோ நகரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்தில் இருந்த கிராமப் பகுதி அது. காரிலும், சற்று நடைப் பயணத்திலுமாக அந்த அனுபவமே மறக்க முடியாதது!

தோழர்களின் அன்பு மிகுதி!

ஆசிரியரை ஜப்பான் தோழர்கள் எவ்வளவு அன்பாகப் பார்த்துக் கொண்டார்கள் என்பதற்கு, இப்போது சொல்லப் போகும் நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு! கிராமப்பகுதி என்கிற போது அனைத்து உணவுகளும் கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எனினும் தோழர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். இணையம் மூலமாக உணவகம் தேடும் பணி தொடங்கியது. திடீரென அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி! ஆமாம்! சிறிய உணவகம் ஒன்று அவர்களின் கண்ணில் தென்பட்டது. வாகனங்கள் விரைந்தன! எனினும் அந்த உணவகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனினும் அங்கேதான் எங்கேயோ அந்த உணவகம் ஒளிந்திருந்தது. ஒரு வழியாய் கண்டுபிடித்து உள்ளே சென்றால், பத்துக்குப் பத்து சதுரடியில், பத்து பேர் மட்டும் சாப்பிடும் அளவு சிறிய இடம். அதில் ஒரு பகுதியில் அடுப்படியும் இருந்தது. எல்லோரும் அமர்ந்த பிறகு என்ன இருக்கிறது எனத் தோழர்கள் கேட்டார்கள். சுடு சோறு, பருப்பு சாம்பார், காய்கறி கூட்டு, ஊறுகாய் எனப் பட்டியல் வாசித்தார்கள். நம்மவர்கள் மாறி, மாறிப் பார்த்துக் கொண்ட போது, மத்தி மீன் குழம்பும் இருக்கிறது என அந்த ஜப்பானியர் மகிழ்ச்சியை அதிகப்படுத்தினார்.

ஜப்பான் கிராமத்தில் தமிழ்நாட்டு உணவு!

இருவர் மட்டுமே பணிபுரியும் அந்த உணவகத்தில் தமிழ்நாட்டுப் பருப்பு வகைகள், மசாலா பொடிகள், சிகப்பு குண்டு மிளகாய் என நம் நாட்டு “மெஸ்” தோற்றத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து விசாரித்த போது, உணவக உரிமையாளர் பெயர் “கெந்தரோ”. தமிழ்நாட்டிற்கு 5 முறை வந்துள்ளார். நம் உணவுகள் சிறப்பாக இருக்கிறது என மகிழ்ந்து, அதேபோன்று தயார் செய்து ஒரு சிறிய நகரப் பகுதியில் நடத்துகிறார். உணவகத்தின் பெயர் கமாகுரா பவன். ஆசிரியரை அறிமுகம் செய்தபோது, ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டார். அடுத்த முறை சென்னை வரும்போது, பெரியார் திடல் வாருங்கள் என ஆசிரியரும் அழைப்பு விடுத்தார். உரிமையாளர், உதவியாளர், ஆசிரியர் மூவரும் படம் எடுத்துக் கொண்டனர்.

மனித உரிமை ஆர்வலர்கள் சந்திப்பு!

தொடர்ந்து அன்றைய தினம் இரவு ஜப்பானின் மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை ஆசிரியர் அவர்கள் சந்தித்தார்கள். இந்நிகழ்வு “தொரானொமோன்” எனுமிடத்தில் உள்ள நந்தினி தென்னிந்திய உணவகத்தில் நடைபெற்றது. இந்த உணவகத்தைத் தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா மாநில இளைஞர்கள் இணைந்து நடத்துகிறார்கள். இட்லி, தோசை வகைகளை சூடாகவும், சுவையாகவும் தந்தனர். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, ஆசிரியருடன் படம் எடுத்துக் கொண்டனர்.

என் வயது 91 அல்ல; 19 தான்!

அடுத்த நாளில் “டீம்லேப்ஸ் ப்ளானட்” என்று சொல்லக்கூடிய, ஒளிவிளக்குகளால் ஆன புதிய உலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஆசிரியர் அவர்கள் அடிக்கடி, “என் வயது 91 அல்ல; 19 தான்’’ என்பார்கள். அதை நேரடியாகப் பார்த்த பல தருணங்களில், இது முக்கியமான தருணம்! நன்றி ஜப்பான்! உங்கள் நாட்டில் 100 வயது என்பதும், 125 வயது என்பதும் ஒரு பொருட்டே அல்ல! எங்கள் தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்பது போல, இந்த உலகத்திற்கே ஜப்பான் மாடல் என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தலாம்! இதைவிட சிறப்பாக வேறொரு நாடு வந்தால் அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடலாம்! அதுதான் பெரியார் வலியுறுத்திய பகுத்தறிவு!
இந்த “டீம்லேப்ஸ் ப்ளானட்” அமைப்பைப் பார்த்ததும் வியப்பின் உச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் சென்ற ஆசிரியர், இது எப்படி செயல்படுகிறது, இதன் சிறப்பு என்ன என்று சில நிமிடங்களிலே கணித்தது நாங்கள் பழைய தலைமுறை, ஆசிரியர் தான் இளம் தலைமுறை என எங்களுக்கு ஓங்கி உரைத்தது. ‘‘பிரின்சு, இங்க வாங்க… இப்படி படம் எடுங்க’’ என்று சொன்ன போது, எம்.எம்.அப்துல்லா அவர்கள் அசந்து போனார்கள். எதை விடுவது, எதை தொடர்வது என்று நமக்கும் தெரியவில்லை.

கடலுக்கு நடுவில் மதிய உணவு!

நிறைவு நாளில் “உமிஹொத்தாரு” எனும் இடத்தில் கடலுக்கு அடியில் இருந்த பாலத்தில் பயணம் செய்தோம். இந்தக் கரையில் தொடங்கும் சுரங்கப் பாதை 9.6 கிலோ மீட்டரும், அந்தக் கரையை அடையும் மேம்பாலம் கடலுக்கு மேலே 4.4 கிலோ மீட்டர் தூரமும் இருந்தன. இடையில் கடற்கரையை இரசிக்கும் வண்ணம் இட அமைப்புகளும், வணிக வளாகங்களில் ஏராளமான உணவகங்களும் இருந்தன. அதாவது 10 கிலோ மீட்டர் தூரத்தில் கடலின் நடுவில் சென்று உணவருந்தி, பொழுதைக் கழித்து வரலாம். அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள்! இந்த அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலும் ஆசிரியர் அவர்களுடன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மற்றும் அவர்களின் வாழ்விணையரும் பங்கேற்றனர்.
நாளை நாம் விழா அரங்கத்திற்குச் செல்லலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக