வெள்ளி, 18 அக்டோபர், 2024

ஜப்பான் ‘பெரியார்’ மயம் (2) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்


விடுதலை நாளேடு

 21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!

வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA) என்பது இந்தியத் தூதரகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்! அதில்தான் நமது தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இதில் ஓரளவு கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். தமது குடும்பத்தார் நம்பிக்கைக்காகத் தமது இல்லத்தில் கடவுள் படம் வைத்திருப்போரும் உண்டு!

நாங்கள் திராவிடர்கள்!

“எனினும் நாங்கள் திராவிடர்கள்! எங்கள் தலைவர் பெரியார்! எங்கள் நாடு தமிழ்நாடு! சமூகநீதியும், இட ஒதுக்கீடும் எங்களிரு கண்கள்! எங்களையும், தந்தை பெரியாரையும் பிரிக்க முடியாது”, என்கிற தெளிந்த சிந்தனை கொண்டவர்கள்!இல்லாவிட்டால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்று தலைப்பிட்டு, ஜப்பானில் இப்பெரு விழாவை எடுக்க முடியுமா?

இதற்கு முன்னாலும் “டோக்கியோ தமிழ்ச் சங்கம்” எனும் பெயரில் அமைப்பு இருந்தது. ஆனால் அவை தமிழர் களுக்கும், தமிழர் தம் பிள்ளைகளுக்கும் பயன்படவில்லை. அதில் பெண்களுக்கு மதிப்பே இருந்திருக்காது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை! இப்படியான நிலையில் தான் நம்மவர்கள் தோன்றினர்!

தோழர்களின் அணிவகுப்பு!

தொடக்கத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை பொதுவான தலைப்புகளிலும், இலக்கியம் கலந்தும் கொண்டாடினர். ஒரு கட்டத்தில் நம் அரசியலை, நம் கொள்கைகளை வெளிப்படையாகப் பேச வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தனர். அப்படியான சூழலில் தான் பெரியார், அண்ணா, கலைஞர் தொண்டர்கள் ஒன்று கூடினர். இவர்கள் தான் இன்றைக்கு “ஜப்பான் வாழ் திராவிடர்கள்” என மிளிர்கிறார்கள்.

இவர்கள் “NRTIA Japan” என்கிற வாட்சப் குழு ஒன்றையும் இயக்கி வருகிறார்கள். இதில் ஜப்பான் வாழ் தமிழர்கள் மட்டும் இருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் திராவிட உணர்வு கொண்ட தமிழர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் வி.குன்றாளன், இரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம், க.சரவணன், வெ.சீனிவாசன், கு.பிரதிக், மோ.விஜய், ஜெ.ஆண்ட்ரூ, ஏ.கணேஷ், வி.ராஜா, இரா.அய்ஸ்வர்யாதேவி உள்ளிட்ட தோழர்கள் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர்!

கொள்கைத் தங்கங்கள்!

சென்னையில் இருந்து ஜப்பான் செல்ல சற்றொப்ப 11 மணி நேர விமானப் பயணம். இரண்டு விமானங்கள் மாற வேண்டும். ஒரு நாள் நிகழ்ச்சிக்காக இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டுமா என்கிற கேள்விகள் இருந்தாலும், கடல் கடந்து வாழும் நம் கொள்கைத் தங்கங்களுக்குப் பெருமைச் சேர்க்க வேண்டாமா? அந்த வகையில் தான் 13.09.2024 அன்று ஜப்பான் நரிட்டா விமான நிலையத்திற்கு காலை 8 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்றடைகிறார்.

இதற்கிடையில் “ஜப்பானில் பெரியார் பிறந்தநாள் விழாவா?”, என்கிற வினாக்கள் வியப்போடும், மகிழ்வோடும் வந்த வண்ணம் இருந்தன. அதேநேரம் செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள் விழாவை தமிழ்நாட்டிலும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஆக இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளுக்கு ஆசிரியர் தமிழ்நாட்டில் இல்லையா என்கிற ஆச்சர்யங்களும் மலர்ந்து கொண்டிருந்தன.

தனி முத்திரைப் பதித்த ஆசிரியர்!

25.10.1997ஆம் ஆண்டு பழனியில் நடைபெற்ற மத்தியக் கமிட்டி கூட்டத்தில் ஆசிரியர் அவர்கள் ஒரு முழக்கத்தை வைக்கிறார்கள். அதாவது ‘‘வரும் 21 ஆம்நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே! பெரியாரை உலகமயம் ஆக்குவோம்‌’’ என்று அறிவித்தார்கள். ‘‘சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதும்’’ நமது திராவிடர் இயக்கங்களுக்கே உரிய சிறப்பல்லவா! அந்த வகையில் அனைவரும் வியக்கும் வண்ணம் ஜப்பானுக்கே சென்று பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடி, வரலாற்றுச் சிறப்புமிக்க தனி முத்திரையைப் பதித்து வந்துவிட்டார் நமது தலைவர் அவர்கள்!

விமான நிலையத்தில் மலர்ந்த முகங்களோடும், மணம் வீசும் மலர்களோடும் காத்திருந்தனர் தோழர்கள்! மூன்று வாகனங்களில் அணிவகுத்து, உலகப் புகழ்பெற்ற டோக்கியோ நகரத்திற்கு அழைத்துச் சென்றார்கள் ஆசிரியரை! ஒரு காலத்தில் ஜப்பான் செய்யாத போர்கள் இல்லை. கால மாற்றத்தில் முற்றிலும் மாறிப் போனார்கள். இன்றைக்கு உலகிற்கே எடுத்துக்காட்டாய் உச்சத்தில் இருக்கிறார்கள். மனிதர்களை மதிக்கும் விதத்தை, அந்த நாட்டில் கற்காமல் போனால், வேறு எங்குமே அதை நாம் அடைய முடியாது என்று சொல்லுமளவு உயர் ரக பண்பாடு அவர்களுடையது!

திராவிடர் இயக்கப் புரட்சி!

அந்த மக்களைப் போலவே, அந்த நாடும் அவ்வளவு அழகானது! மக்கள் திரளும், வாகனப் போக்குவரத்தும் கலந்த அந்தப் பரபரப்பில், ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவு அமைதி நிறைந்த நாடு! அப்படியான நாட்டில்தான் கிராமங்களிலும், சிற்றூர்களிலும் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்று, இன்றைக்கு மிக உயர்ந்த நிலையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

ஜப்பான் எப்படி அமைதிப் புரட்சி செய்ததோ, அதேபோல தமிழ்நாட்டிலும் திராவிடர் இயக்கங்கள் பெரும் புரட்சி செய்தன. இந்தியாவின் வட மாநில மக்கள் தமிழ்நாட்டிற்கு வருவதையே, வெளிநாட்டிற்குச் செல்வதைப் போன்ற உணர்வைப் பெறுகிறார்கள். அப்பேற்பட்ட கட்டமைப்பைத் தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு! அந்த வகையில் கல்விக்காகத் திராவிடர் இயக்கங்கள் செய்த சாதனை தான், இன்றைக்குத் தோழர்கள் ஜப்பானில் நிகழ்த்திக் காட்டும் அற்புதங்கள்!

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி!

நூறாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கும் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்துச் செல்வது என்பது எவ்வளவு மகிழ்ச்சியோ, அந்தளவு வரலாற்றுப் பெருமையும் உண்டு! நாம் நான்கு படிகள் மேலே ஏறினால், இரண்டு படிகள் கீழே இறக்கிப் போடும் வேலைகளைச் செய்வது ஆரியம். அப்பேற்பட்ட தொடர் போரில், நாளும் பொழுதும், 365 நாளும் கல்விச் சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்டு 91 ஆண்டுகளை நிறைவு செய்தவர் தலைவர் வீரமணி அவர்கள்!

9 ஆயிரம் வருமான உச்சவரம்பு பிரச்சினை, ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு ஒதுக்கீடு, தமிழ்நாட்டின் 69 விழுக்காடு ஒதுக்கீடு போன்ற பெரும் போராட்டங்களில் சளைக்காமல் போர் செய்து, இன்றைக்கு இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனச் சொல்லுமளவு வந்ததற்குத் திராவிடர் கழகத் தலைவரும் மிக முக்கியக் காரணம் அல்லவா! நீதிக்கட்சி தலைவர்கள், பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என அனைவரின் உழைப்பிலும் உருவான இந்த கல்வி வரலாற்றை, பன்மடங்கு உயர்த்தி வைத்திருப்பவர் ஆசிரியர் அவர்கள்! அப்பேற்பட்ட திராவிட இயக்கத் தலைவரை அன்போடு வரவேற்று “நிஷி கசாய்” எனும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

தொடர்ந்து பயணம் செல்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக