ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்!

அஞ்சாநெஞ்சன் அழகிரியின் அனல் வீச்சு!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (14)
– கி.வீரமணி –
தளபதி அழகிரிசாமி மேலும் பேசுகிறார்; கேட்போம்!
“அவ்வியக்கத்தின் (சுயமரியாதை இயக்கத்தின்) மூலம் பிராமணியத்தை தாக்க ஆரம்பித்தோம். அவர்கள் சாஸ்திரத்தை ஆதாரமாக காட்டினார்கள்.
அதை ஆராய்ந்து பார்த்து அதை ஆரியம் தமக்காக எழுதி வைத்துக் கொண்டதென்றோம்! பரசாரார் வாக்கு மனுவாக்கு என்று கூற ஆரம்பித்தார்கள். அவற்றிற்கும் தக்க மறுப்புகள் கூறினோம். புராணங்களையும் உபநிஷத்துக்களையும் காட்ட ஆரம்பித்தார்கள். அவற்றையும் ஆராய்ந்து பார்த்து அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்துக்கூற ஆரம்பித்தோம். முடிவில் கடவுளை ஆதாரமாகக் காட்ட ஆரம்பித்ததும், “நிறுத்து! தம்பி அதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது; எமக்கும் ஒன்றும் தெரியாது” என்று பதில் கூறினோம்! இவற்றையெல்லாம் எங்களுக்குக் கூறித்தந்தவர் பெரியார்தான். சுயமரியாதைத் தத்துவத்தையே நமக்கும் நமது இவ்வுலகத்திற்கும் அளித்தவர் பெரியார் தான். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததும் அவரேதான். அந்தப் பெருமையில் பங்குகொள்ள வேறு யாருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது.
அவர் தமது சுயமரியாதைத் தத்துவத்தின் மூலம், நமக்கு எதையும் எளிதாக்கித் தந்தார். நமது அறியாமையை அகற்றி நமக்குப் பகுத்தறிவு ஊட்டினார். நமது ஏழ்மையையும் தாழ்மையையும்கூட மறக்கச் செய்தார். ஏழை பணக்காரன் என்பதில்லை. தொழிலாளி முதலாளி என்பதில்லை! அனைவரும் தோழனுக்குத் தோழன்தான் என்ற மனப்பான்மையை ஊட்டினார்: அதை வளர்த்தார். ஜமீன்தாரர்களை முரட்டுப் பணக்காரர்கள் என்றார். கடவுள் வெறும் உருளைக்கல் என்றார். பிராமணியம் அந்தக் கடவுளுக்குத் தூண். அத்தூணைச் சுக்கு நூறாக்கினால்தான் நாம் இன்ப வாழ்வு வாழ முடியும் என்றார். இவற்றைக்கூறி ஒரு சிறிதும் அஞ்சினாரில்லை. யாரோ ஒரு அன்பர் சற்று முன் அஞ்சா நெஞ்சம் படைத்த அழகிரிசாமி ஏன்று என்னைப் பாராட்டினார். எனக்கு அஞ்சா நெஞ்சத்தை அளித்தவர் பெரியார்தான். அவர் எனது அறிவிலிட்ட வித்துத்தான் என்னை அஞ்சா நெஞ்சமுடையவனாக்கியது. அவரது அஞ்சா நெஞ்சத்துக்கு ஒரு சான்று கூறிகிறேன் கேளுங்கள்.
பெருந்தன்மைக்கு எல்லை பெரியார்!
ஒரு சமயம் விருது நகரில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத்தையும், ஆரியத்தின் சிஷ்ய கோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் மேடை மீதிருந்தேன். பெரியாரின் பேச்சைக்கேட்டு ஆத்திரமடைந்த தோழர் ஒருவர். கனல் கக்கும் கண்களோடு தம் கத்தியை உருவிக் கொண்டு பெரியாரைக் குத்திவிட ஓடிடோடி வந்தார். வந்தவரைக் கண்டு அஞ்சி ஆடாமல், அவரது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பெரியார் – அவரை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஆத்திரம் அடங்கச் செய்தார் அதன்பின் என்ன செய்தார்? அவரைப் போலிசினிடம் ஒப்புவித்தாரா? அதுதான். இல்லை அவரை வெளியில் விட்டால் கூட்டம் அவரைக் கொன்றுவிடும் என்பதைப் பெரியார் அறிவார். ஆகவே அவரைத் தக்க பாதுகாப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவ்வளவு பெருந்தன்மை படைத்திருப்பதால்தான் அவரைப் பெரியார் என்று நாம் அழைக்கிறோம்.
அச்சத்தை ஓட்டி அறிவை வளர்த்தவர் பெரியார்!
கடவுளென்றால் அதெல்லாம் “வெறும் புருடா” என்று கூறினார். “மதம் மடமையின் விருந்தென்று” புகன்றார். “புராணம் ஒரு ஏமாற்றுவித்தை” என்றார். “பிராமணியம் ஒரு படுமோசப் பாதகம்’ என்றார். “சாஸ்திரங்களைக் குப்பை” என்று குறித்தார். எதைக் கண்டு நாமெல்லாம் அஞ்சினோமோ. எதற்கு நாமெல்லாம் அடிபணிந்திருந்தோமோ. எதை நம்மவர்கள் சிலார் பெருமை என்றுகூட நினைத்து வந்தார்களோ, அவற்றையெல்லாம் அறிவு கொண்டு விளக்கி நமது வாழ்க்கையை ரொம்ப இலகுவாக்கினார்.
படித்தவர் – படியாதவர்கள். ஜமீன்தாரர்கள் – குடியானவர்கள். உத்யோகஸ்தர்கள் – குமாஸ்தாக்கள், பணக்காரர்கள் – ஏழைகள் ஆகிய சகலரையும் காணும் நமது கண்களையும் ஒரே மட்டமாக்கினார். எம்.பி.பி.எஸ் டாக்டரையும் நமது அம்பஷ்ட வைத்தியரையும் அவர்களது படிப்பைக் கொண்டல்ல. அவர்களது அனுபவத்தைக் கொண்டு அவர்களது செயலாற்றும் திறனைக்கொண்டு கணக்கிடும்படி செய்தவர் அவர்தான். “எப்படி பெரிய ரோட்டு உருளையானது. ரோட்டில் பரப்பப்பட்டுள்ள சிறுகல், பெருங்கல் அனைத்தையும் தன் பளுவால் சரிமட்டமாக்குகிறதோ, அப்படித் தம் அறிவுருளையால் அனைத்தையும் சமமாக்கித் தந்தார்” நமது அறிவின் தந்தை பெரியார். முகத்து ரோமத்தை நீக்க உதவுவது கூரிய கத்தி, அதைக் கூர்மைப்படுத்தித் தருவது சாணைக்கல். அதே போல் பகுத்தறிவுதான் நமது மடைமையைப் போக்கும் கத்தி. அப்பகுத்தறிவுக்குச் சாணைக்கல் போல் உதவி செய்வதுதான் கல்வி ஆகவே கல்வியைக் கல்லடா தம்பி! அது அறிவைக் கூர்மைப்படுத்தும் தம்பி! என்று நமக்குக் கூறினார். நெடுங்காலமாகவே நாம் நமது அறிவை உபயோகப்படுத்தாததால் அது மழுங்கிவிட்டது. ஆதலால் அதைக் கல்வியென்னும் சாணைக் கல்லால் தீட்டுடா தம்பி! என்று கூறினார்.
நலிவை ஒழித்து நமக்கு வாழ்வளித்தவர் பெரியார்!
படித்தவர் என்றால் ஒன்றும் பிரமாதம் இல்லை. படித்துவிட்டால் மட்டும் ஒருவன் அறிவாளியாகிவிட மாட்டான். அறிவாளிகள் எல்லாம் படித்துத்தான் அறிவாளிகள் ஆனார்கள் என்று கூறுவதற்கும் இல்லை. அல்லது படித்திருப்பதினாலேயே ஒருவன் சகல காரியங்களிலும் நிபுணன் ஆகிவிடமுடியாது. நன்றாகப் படித்துள்ள ஒரு நீதிபதி. ஒரு நல்ல நாற்காலி மேஜையைச் செய்துவிட முடியாது. அது தச்சன் தொழில், ஆகவே அவன்தான் அதைத்திறம்படச் செய்வான். அந்த நாற்காலி செய்ய முடியாததால், அந்த நீதிபதியை அறிவற்றவன் என்று கூறிவிடமுடியுமா? அந்தத் தச்சனையே நாம் ஒரு உளியடித்துக் கொடு என்றால், அதைத் திறம்பட அவனால் செய்து தர முடியுமா? அவனால் செய்து தர முடியாது? உளி செய்பவன் கருமான். அவனுக்குத் தான் உளி செய்யும் பக்குவம் தெரியும். ஆகவே அவனவனுக்கு அந்தந்தத் தொழிலில் தேர்ச்சியுண்டு என்று கூறலாமே தவிர, ஒருவன் மற்றவனைவிட அறிவில் உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நம்மால் கூற முடியாது. வேண்டுமானால் கவனித்துப் பாருங்கள்.
நமது எத்திராஜும் வக்கீல் படிப்புப் படித்தவர்தான். நமது வெங்கடரத்தினமும் வக்கீல் படிப்புப் படித்தவர்தான் ஆனால், அவர் நாளொன்றுக்கு ரூ 2000, 3000 வாங்குகிறார். இவர் ஒரு பெட்டீஷனுக்கு ரூ 0-8-0 பீசுக்குக் கோர்ட்டில் லாட்டரி அடிக்கிறாரே, படிப்புத்தான் அறிவானால், இவரிருவரும் சரிவிகிதத்திலன்றோ பணம் சம்பாதிக்க வேண்டும். இதற்கெல்லாம் அவர்களின் படிப்பல்ல. அறிவுதான் மூலக்காரணம் என்பதை அறிய முடிகிறதா? இல்லையா? இப்படி எல்லாம் விளக்கிக்கூறி, பகுத்தறிவுதான் உலகை ஆளும் என்று காட்டி நமக்கு வாழ்வளித்தவர் பெரியார்தான்.”
இந்த சுயமரியாதை இயக்கத்தை நிறுவியதோடு, அதன் வளர்ச்சியை கண்ணை இமை காப்பதுபோல் கவனச்சிதறலுக்குச் சிறிதும் இடம் தராமல் அடிநாள் தொட்டு, அவர் தமது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட இறுதி நாள் வரை – காத்து இயக்க உறவுகளான நம்மிடம் அந்தச் சுடரைத் தந்தார்!
அதுபற்றி தளபதி அஞ்சாநெஞ்சனின் அழகிய படப்பிடிப்பு இதோ – படியுங்கள்:
“பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் யார் என்ன தீங்கு செய்திருந்தாலும், அதை, மனித சுபாவமே அப்படித்தான் என்று கூறிப் பொறுத்துக் கொண்டு விடுவார்.
ஆனால் இயக்கத்தைப் பொறுத்தமட்டில் சிறு தவறு செய்துவிட்டாலும் உளம் பொறார். சுலபத்தில் ஆத்திரம் கொள்வார். தயை, தாட்சண்யமின்றி, “சற்றும் பொறுப்பில்லாதவன்”, “முட்டாள்”, “போக்கிரி”, “சோம்பேறிப்பயல்” என்றெல்லாம் கூட சமய சந்தர்ப்பம் பாராமல் ஏசி விடுவார்! இயக்கத்தின்மீது அவ்வளவு பற்றுதல் உள்ளவர் – அவரது தன்னலமற்ற இந்த இயக்கப் பற்றுதல்தான், இந்த ஏசல் மொழிகளைக் கேட்டுக்கொண்டு, நமது இளைஞர்களை “பெரியார் வாழ்க – வாழ்க” என வாழ்த்தொலி கூறிப் பின்பற்றிச் செல்லும் படி தூண்டுகிறது.”
– – – – –
“பெரியார் அவர்களை ஏறக்குறைய 30 வருடங்களாக அறிந்திருக்கிறேன் (1947இல் பேசுகிறார் தளபதி அழகிரி, அதாவது 1917 முதல் என்று கொள்க), நெருங்கிப் பழகியிருக்கிறேன் என்றாலும் அவரது நம்பிக்கைக்கு இன்று வரை (1947) நான் பாத்திரம் ஆனேனில்லை.
கொள்கையைப் பொறுத்ததா? இல்லை.
இயக்கத்தைப் பொறுத்ததா? இல்லை.
பின் எதைப் பொறுத்து என்னிடம் நம்பிக்கை
பிறக்கவில்லை?
என்னுடைய சொந்த நிலையைப்
பொறுத்துத்தான்.
அவர் போடும் காகிதத்துக்குக்கூட சரியாகப்
பதில் அனுப்பியிருக்க மாட்டேன்.
அப்படியிருந்தும் அவர் என்னை
வெறுத்துவிட்டாரா? இல்லை. அதுதான்
அவரிடமுள்ள சிறப்பான பண்பு.
தனிமையில் எதையும் பொறுத்துக் கொள்வார்.”
(அடுத்த கட்டுரையில் தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக