சனி, 15 ஏப்ரல், 2023

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழா!


கட்டுரையின் ஒரு பகுதி...

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழா!

கி.வீரமணி

டில்லியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்னையிலிருந்து 4.10.1998 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் புறப்பட்ட கழகத் தோழர்களை, 6.10.1998 அன்று காலை 7:00 மணிக்கு புதுடில்லி இரயில் நிலையத்தில், சந்திரஜித் யாதவ் அவர்களும் நானும் மகிழ்ச்சியுடன் வரவேற்றோம்.

84 தோழர்களையும் இரு பேருந்துகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தோம். மறுநாள் அடிக்கல் நாட்டு விழாவும் மாநாடும் நடக்கவிருப்பதால் தோழர்களுக்கு அன்று ஓய்வு அளிக்கப்பட்டது.

7.10.1998 விடியற்காலை 4:30 மணிக்கு தோழர்கள் எழுந்து பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டப்படும் பாம்னோலி (Bomnoli) இடத்திற்கு காலை 7:00 மணிக்கு வந்து சேர்ந்தனர்.

அடுத்து சந்திரஜித் யாதவ் அவர்கள் அங்கு வந்தார். அனைவரிடமும் கைகுலுக்கி அன்பொழுகப் பேசினார். நீலவானத்தின் கீழ் வெண் விதானமாய் விரிந்த துணிப்பந்தலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.

காலை 9:20 மணிக்கு சமூகநீதிக்காவலர் மாண்பமை வி.பி.சிங் அவர்கள் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். 9:25 மணிக்கு பெரியார் மய்யத்திற்கு அடிக்கல் நாட்டு விழாப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். அனைவரும் மகிழ்வு பொங்க கையொலித்து, ஆரவாரம் செய்தனர்.

சந்திரஜித் யாதவ் உரை

அடுத்து, விழாவிற்குத் தலைமையேற்ற சந்திரஜித் யாதவ் அவர்கள் தமது தலைமை உரையை ஆற்றினார். “இன்று பெரியார் மய்யத்திற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. பெரியாரோ சமூகநீதிக்கான அடிக்கல்லை என்றோ நாட்டிவிட்டுச் சென்றார்’’ என்று பெருமை பொங்கக் கூற, அனைவரும் கையொலித்து மகிழ்ந்தனர்.

இன்று தம்பித்துரை அமைச்சராக இருக்கின்றார் என்றால் அவர் பெரியாரின் உருவாக்கம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.

பெரியார் அறக்கட்டளை பல தொண்டு-களைச் செய்துவருகின்றது. பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்றார் பெரியார். தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்றார். விதவை மணம் வேண்டும் என்றார். பெரியார் சமூகநீதிக் கொள்கையை மக்களிடையே விதைத்தார். இந்த பெரியார் மய்யம் ஒரு பிரச்சார நிலையமாக விளங்கும். இந்த மய்யத்தில் அமைக்கப்படும் இன்டர்நெட் வசதி பெரியாரை உலகெங்கும் அழைத்துச் செல்லும்.

தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்துள்ள பெரியார் தொண்டர்களே, நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். உலகம் எங்கும் பெரியாரின் சீடர்கள் இருக்கின்றார்கள். உலகெங்கும் பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை வீரமணி பரப்பி வருகிறார். அடுத்து, வீரமணி அவர்களை வரவேற்புரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்’’ என்றார்.

9:45 மணியளவில் நான் வரவேற்புரை நிகழ்த்தினேன்.

இன்று பத்திரிகைகள் எல்லாம், “பெரியார் டில்லி செல்கிறார்’’ என்று எழுதுகின்றன. செய்திகளில் எல்லாம் இன்று பெரியார் இடம் பெறுகின்றார். அவர் ஏற்றிய சுடரை நாங்கள் ஏற்றிச் சென்றுகொண்டே இருக்கிறோம். இதைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியாலும் முடியாது.

இந்தப் ‘பெரியார் மய்யம்’ அமைந்துள்ள நிலத்தை, சந்திரஜித் யாதவ் அவர்களின் உதவி கிடைத்திராவிட்டால் நாங்கள் வாங்கியிருக்க முடியாது. அவருக்கும் நன்றி உரியது. நம் அழைப்பின் பேரில் வந்துள்ள மத்தியப் பிரதேசத் துணை முதல்வர் சுபாஷ் யாதவ் அவர்களையும், அமைச்சர்கள் தம்பிதுரை, கடம்பூர் ஜனார்த்தனம் ஆகியோரையும் வரவேற்கின்றேன் மற்றும் இங்கு வந்துள்ள பெருமக்களையும் வரவேற்கின்றேன்.

பெரியார் மய்யம் அமைந்துள்ள இடம் ஒரு கிராமமாகும். கிராம மக்கள் வாழ்கின்ற பகுதியில் இம்மய்யம் அமைக்கப்படுகின்றது. இந்தப் பெரியார் மய்யத்தில் கட்டப்படும் கட்டடம் மூன்று மாடிகளைக் கொண்டதாக இருக்கும். இது மட்டுமல்ல, பெரியார் கணினி மய்யம் ஒன்றும் இப்பெரியார் மய்யத்தில் அமைக்கப்படும். இதனால், இப்பகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

இன்று இங்கு வந்திருக்கும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இன்று மருத்துவமனை சென்று மருத்துவம் பெற வேண்டிய நாள். மருத்துவர் கட்டளைகளையும் மீறி இன்று இந்த விழாவிற்கு வந்துள்ளார். அவரை வரவேற்கின்றேன்’’ என்று எனது உரையில் கூறினேன்.

அமைச்சர் தம்பிதுரை

மத்திய சட்டத்துறை அமைச்சர் தம்பிதுரை பேசும்போது, பெரியார் சமூகநீதிக்காகப் பாடுபட்டவர் என்றும், ஜாதிப் பட்டங்களை விட்டொழிக்க வேண்டும் என்று சொன்னவர் என்றும், ஜாதியற்ற சமுதாயம் அமைக்கப் பாடுபட்டவர் என்றும், இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் என்றும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மக்களின் உயர்வுக்குப் பாடுபட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

சுபாஷ் யாதவ்

மத்தியப் பிரதேச துணை முதல்வர் சுபாஷ் யாதவ் உரையாற்றுகையில், பெரியார் மய்யம் வளர்ந்தோங்கத் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார்.

கடம்பூர் ஜனார்த்தனம்

மத்திய அரசின் நிதித்துறை இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் அவர்கள் உரையாற்றும்போது, 1939இல் பள்ளி மாணவனாக இருந்தபோது, தாம் தந்தை பெரியாரைத் தம் ஊரில் சந்தித்ததையும் 1948இல், தாம் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டமையையும் 1998இல் அமைச்சராக இருப்பதையும் எடுத்துக் கூறினார். மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் இம்மய்யத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இம்மய்யம் அரும்பணி ஆற்றும் என்றார்.

ஜெகவீரபாண்டியன்

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தமிழ்நாடு தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் அவர்கள் பெரியாரின் பெருஞ் சாதனைகளால் தான் நாம் உயர்வு பெற்றோம். சமூகநீதியை நிலைநாட்டிய பெருமை அவரையே சாரும் என்றார்.

வி.பி.சிங் உரை

சரியாகக் காலை 10:22 மணிக்கு கொள்கைக்காகப் பிரதமர் பதவியையே உதறித் தள்ளிய ஒப்பற்ற வரலாற்று நாயகர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் உரையாற்றினார்.  உடல்நலக் குறைவால் சக்கர நாற்காலியில் அமர்ந்து பேசினார். தனக்குச் சிறுநீரகம் வழங்க முன்வந்த 15 பேரில் தேர்வு செய்யப்பட்ட, ஒரத்தநாடு இராமகிருஷ்ணன், தஞ்சை காளிதாஸ், சிதம்பரம் சித்தார்த்தன் ஆகிய மூவரையும் அமர்ந்தபடியே கட்டித்தழுவி தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்.

“நண்பர் வீரமணி அவர்கள், நான் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்று பலமுறை என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார். என் உடல்நிலை பயணம் மேற்கொள்ள இடம் தரவில்லை. அடுத்த பிறவியில் நான் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். இது என்னுடைய ஆசையாகும். பெரியார் கருத்துகள் மனித சமுதாயத்துக்கே உரியவை, அவர் கொள்கைகள், கருத்துகள் வடபுலத்தில் கிராமங்களிலும் பரவ வகை செய்ய வேண்டும். அவர் நாட்டு விடுதலைக்காகச் சுதந்திரப் போரில் ஈடுபட்டவர். அதன் பின்னர் சமுதாயத்தின் மாபெரும் விடுதலைக்காகப் போரிட்டார். நம் நாடு ஒரு வறிய நாடு, நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெரியார் மய்யத்தில் கணினி மய்யம் திறக்கப்பட இருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பெரியாரின் கருத்துகள் வடபுலத்திலுள்ள கிராமங்களிலும் பரவ வேண்டும்.

நாம் சார்ந்திருக்கிற அரசியல் கட்சிகள் நம்மைப் பிரிக்கலாம். ஆனால், இயக்கம் நம்மை ஒன்றுபடுத்துகின்றது. இந்த மேடையிலேயே பல அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்கள் வீற்றிருக்கின்றார்கள். ஆனால், நாம் இங்கு மனித நேயக் கொள்கைக்காக ஒன்றுபட்டிருக்கின்றோம்.

மனிதனுக்கும், இயந்திரத்திற்கும் வேறுபாடு உண்டு. ஒரு ரோடு ரோலர் என்ஜின் இருக்கிறது. அதன்மீது எச்சிலைத் துப்பினால் அது ஆத்திரப்படாது. மனிதன் மீது துப்பினால்  அவனிடமிருந்து மான உணர்வு கோபமாய் வெளிப்படும்.

என்ஜினுக்குச் சுயமரியாதை இல்லை. மனிதனுக்கு உண்டு. நமது சுயமரியாதை உணர்வுகள் எல்லாம் எதிரிகளால் கவரப்பட்டுவிட்டதால் நம் மக்கள் என்ஜின்களாக மாறிவிட்டார்கள். நம் மக்களுக்குள் பகைமை உணர்ச்சி மேலோங்குகின்றது. காரணம், ஜாதி முறை. நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் ஒரு பக்கம் குவியும்போது, சிக்கல்களும் போராட்டங்களும் எழுகின்றன.

வீரமணியைக் கேளுங்கள்!

கல்வி நிலையங்களை எப்படிச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் தூதுக் குழுக்களை வீரமணி அவர்களிடம் அனுப்பித் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனக்குச் சீறுநீரகம் வழங்கத் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் முன்வந்திருப்பதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் என் சிறுநீரகத்தை யாருக்கும் அன்பளிப்பாக நான் வழங்க முடியாது. ஆனால், இச்சிறுநீரகம் தவிர்த்த என் உடல் உறுப்பு ஒவ்வொன்றையும் அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்ற என் விருப்பத்தை என் வீட்டாரிடமும் சொல்லிவிட்டேன். இம்மாதிரி உடல் உறுப்புகளை அன்பளிப்பாக வழங்கும் முறையையும் திராவிடர் கழகம் நடைமுறைத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

உங்களுக்காக உயிரையே கொடுப்போம்!

வி.பி.சிங் அவர்கள் பேசி முடித்ததும், உரையாற்றிய நான், மேன்மைமிகு வி.பி.சிங் அவர்களே, உங்கள் உரை எங்களை நெகிழச் செய்துவிட்டது. இந்த இளைஞர்கள் செய்தது குறைவு! மண்டல் குழு அறிக்கையைச் செயலாக்கம் பெறச் செய்த தங்களுக்காக எங்கள் உயிரையே நாங்கள் கொடுப்போம் என்று நான் கூறியபோது, கூட்டத்தினர் கண்ணில் நீர்ப்பெருகி வழிந்தது!

சமூகநீதியைக் காக்க வி.பி.சிங் அவர்கள் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று  வாழ்த்தினோம்.

உடல் உறுப்புகளை அன்பளிப்பாக வழங்குவதற்கான திட்டத்தைத் திராவிடர் கழகம் ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது என்று எடுத்துக் கூறினேன்.

சந்திரஜித் யாதவ் அவர்கள் இந்த மூன்று இளைஞர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தாரையும் வாழ்த்த வேண்டும் என்றார்.

விழா சிறக்கப் பேருதவி புரிந்த பலரும் மேடையில் சால்வைகள் அணிவிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர். நன்றி உரையுடன் முற்பகல் 11:00 மணிக்கு விழா இனிது முடிவடைந்தது.

விழா முடிந்ததும், தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கழகக்  குடும்பத்தினர் 84 பேரும் “மாவ்லங்கர்’’ அரங்கில் நடைபெறும் தேசிய சமூகநீதி மாநாட்டிலும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிலும் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர்.

7.10.1998 அன்று மாலை, சமூகநீதியின் தேசிய மாநாடு மாவ்லங்கர் மாளிகையில் தொடங்கியது.

பெரியார் பெருந்தொண்டர் சந்திரஜித் யாதவ் தலைமை தாங்கினார். நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மேடையிலே குழுமியிருந்தார்கள். சமூகநீதியில் பற்றுடையோர் அய்யாயிரம் பேருக்கு மேல் குழுமியிருந்தனர்.

பெரியார் மய்யம் விழா முடிந்து, புறப்பட்ட கழகத் தோழர்கள், அங்கிருந்து நேரே உந்து வண்டிகளில் மாவ்லங்கர் மாளிகை வந்தடைந்தனர். அப்போது மேடையிலிருந்து பெரியார் பெருந்தொண்டர் சந்திரஜித் யாதவ், தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் _ வந்து நுழைந்து கொண்டிருக்கும் பெரியார் தொண்டர்களை வருக, வருக என வரவேற்கிறேன் என எழுந்து நின்று கைகூப்பி வரவேற்றார்.

யாதவ் மீண்டும் கூறினார்: தமிழ்நாட்டுப் பெருமக்களே, மண்டபம் நிரம்பி வழிகிறது. உங்களுக்கு அங்கு உட்கார இடம் இல்லை. இங்கு வந்திருக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவரும் தலைவர்கள் வீற்றிருக்கும் மேடைக்கு வந்து எங்களுடன் அமர்க என்றார்.

வீரநடை போட்ட நம் மகளிர்

பெரியார் தர்பாரில் கொலு மண்டபத்தின் படியில், நமது மகளிர் உரிமையோடும், பெருமையோடும், பெருமிதத்துடனும் ஏறி, ராணுவ வீராங்கனைகளின் மிடுக்குடன் மேடைக்குச் சென்று அமர்ந்தனர்.

அந்த மாநாட்டிலே பதினைந்து பேர் உரையாற்றினர். தலைவராக வீற்றிருந்தவர் சந்திரஜித்யாதவ். முதன்மை விருந்தினராக  டில்லி நாடாளுமன்றத்தின் மேனாள் அவைத் தலைவர் பி.ஏ.சங்மாவும், நானும். தவிர மேற்கு வங்க டாக்டர் மாயாகோஷ், டில்லியைச் சேர்ந்த சோனி, மாநிலங்களவை உறுப்பினர் டி.பி.யாதவ், இராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாக்டர் கரன்சிங், சையது சகாபுதீன், ஆஸ்கார் பெர்னாண்டஸ் எம்.பி., ராஜேஸ் பைலட், பிரசாத் வெராலா, கல்கத்தாவைச் சேர்ந்த கே.சி.காபாஸ், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ரெட்டி ஆகிய பதினைந்து பேர் உரையாற்றினார்கள்.

சங்மாவின் கர்ஜனை

“இடஒதுக்கீடு கேட்கிறோம் நாம். இடஒதுக்கீடு அளிக்கும்போது போதிய படித்தவர்கள் வேலைகளை ஏற்கக் கிடைக்கவில்லையே என் செய்வது? பீகாருக்குச் சென்றேன், உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றேன். அங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பள்ளிகளே இல்லை. என்னைச் சந்திக்க வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளிடம் நான் இதைச் சுட்டிக்காட்டி வற்புறுத்தினேன். பள்ளிகளைத் திறக்கச் செய்யுங்கள்; பள்ளிகளை திறக்குமாறு போராடுங்கள் என்றேன்’’ என்றார் சங்மா. பெரியார் கட்டளையை ஏற்றுப் பள்ளிகளைத்  திறக்கப் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் காமராசர்கள் இன்னும் தோன்றவில்லை. சங்மாவின் அறைகூவல் பள்ளிகளைத் திறக்கச்செய்யும் போர் அழைப்பாக அமைந்தது.

பெரியாரின் வைக்கம் போரை நினைவூட்டி பெரியாரின் தொண்டுகளைக் குறிப்பிட்டார்.

கே.சி.யாதவ் முழக்கம்

“வீரமணி அவர்கள் சமூகநீதிக்கு ஆற்றும் பணி குறிப்பிடத்தக்கது. அவர் என் சகோதரர். நாங்கள் இருவரும் ஒரே கருத்துடையவர்கள். நாங்கள் சகோதரர்கள். நாங்கள் ஒரே கருத்தை ஒரே குறிக்கோளைக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சகோதரர்கள் மட்டுமல்ல, தோழர்கள், ஒருங்கிணைந்து உழைப்பவர்கள் போர் முனையில் ஓரணியில் உள்ள போர் வீரர்கள்’’ என்று உணர்வுபொங்கக் குறிப்பிட்டார்.

நாம் பெரியார் மய்யத்தை புதுடில்லியில் அமைத்திட வேண்டும். புத்தரும் கபீரும் காந்தியாரும் ஜோதிபா பூலேயும் உற்சாக மூட்டியது போல் பெரியார் கருத்துகளும் உற்சாக மூட்டவல்லன.

பெரியார் என்றும் வாழ்வார்; எல்லாருடைய உள்ளங்களிலும் வாழ்வார்; எல்லா நூற்றாண்டுகளிலும் வாழ்வார் என்றார்.

சந்திரஜித் யாதவ்

சந்திரஜித் யாதவ் அவர்கள், “ஒரு கோடி ரூபாயில் பெரியார் மய்யம் கட்டப்பட இருக்கிறது என்றார். வீரமணி உறுதியாக இந்த ஒரு கோடி ரூபாயும் மக்களிடமிருந்து திரட்டப்படும் என்ற அறிவித்தார்.

தமிழ்நாட்டு மக்கள் வீரமணியின் எடைக்கு எடை தங்கம் வழங்கினார்கள். அந்தத் தங்கம் முழுமையும் பெரியார் அறக்கட்டளையில் சேர்ந்துள்ளது. இந்த அறக்கட்டளை பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்தி வருகின்றனது. டில்லியில் இன்று உருவாகும் பெரியார் மய்யம் இரண்டாம் விடுதலைப் போரை நடத்தும். பெரியார் மய்யத்தில் கணினி மய்யம் வரும் என்று வீரமணி அறிவிக்கிறார். டில்லியைச் சுற்றியுள்ள சிற்றூர் மக்களுக்கு இது பேருதவி நல்கும்’’ என்று தனது உரையை நிறைவு செய்து, என்னை உரையாற்ற அழைத்தார்.

சரியாக மாலை 4:00 மணிக்கு நான் உரையாற்றினேன். “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்; நாம் அலாரம் டைம்பீஸ் வாங்குகிறோம். ஒருமுறை மட்டும் அலாரம் அடிக்கும் டைம்பீஸ் உண்டு. ஆனால், தூக்கத்திலிருந்து விரைந்து விடுபட முடியாதவர்களுக்கு என்று புதுவகையான அலாரம் டைம்பீஸ் உண்டு. அது திரும்பத் திரும்ப அலாரம் அடித்துக் கொண்டே இருக்கும். தூங்குகிறவன் எழுகின்றவரை அது அடித்துக் கொண்டே இருக்கும். இந்த இரண்டாம் வகை அலாரம் டைம்பீஸாக நாம் செயல்படுகிறோம்.

இன்று நாட்டின் நிலை என்ன? சமூக நீதியில் விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ இன்று எல்லோரும் சமூகநீதி வேண்டும் எனப் பேசுகின்றோம். பாரதீய ஜனதா கட்சிக்காரர்-கள்கூட சமூகநீதிக்காக மாநாடுகள் நடத்து-கின்றார்கள். ஆகவே, நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் யாரிடமும் சமூகநீதியைப் பிச்சையாகக் கேட்கவில்லை. சமநிலைமை வேண்டுமென்றுதான் வாதாடுகிறோம். (We do not want charity but we want parity) மண்டல் குழு அறிக்கை, நீதிமன்றத்தின் தீர்ப்பு, கிரீமிலேயர் போன்ற விவரங்களையெல்லாம் மக்களுக்கு விளக்குகிறோம். இத்துறைகளில் நாம் ஆற்றிய பணிகள் மிகக் குறைவு. இன்னும் செய்ய வேண்டியவை மிகப் பல. தனியார் நிறுவனங்களிலும், இடஒதுக்கீடு வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் எப்பொழுது செய்ய வேண்டும் என்றால், எனது பதில் இப்போதே செய்ய வேண்டும் என்பதே!

எனக்கு முந்திப் பேசியவர் கடவுளின் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் என்றார். நான் பெரியாரியலைக் கொண்டவன். எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், இது எங்களைப் பிரிக்க வேண்டியதில்லை. சமூகநீதிக்காக அவரும் நானும் ஒன்றுபடுகிறோம்.

தமிழ்நாட்டில் அரசு வரலாம்; போகலாம். ஆனால், சமூகநீதியின் இடஒதுக்கீட்டைக் கைவிடும் அரசு தமிழ்நாட்டில் ஒரு விநாடிகூட அரசுக்கட்டிலில் இருக்க முடியாது என்று உரையாற்றினேன்.

தலைநகர் டில்லியில் சமூகநீதி மாநாடு எதிர்பார்த்ததற்கும் மேல், சிறப்போடும், எழுச்சியோடும், மிகுந்த பயனளிக்கும் வகையிலும் நிறைவு பெற்றது.

(நினைவுகள் நீளும்…)

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (291)

ஏப்ரல் 16-31,2022

    

சனி, 8 ஏப்ரல், 2023

எனக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட தஞ்சை மாநாடு - கி.வீரமணி (மனிதநேய மாநாடு)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (285)

ஜனவரி 16-31,2022

மனிதநேய மாநாட்டுக்கு இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சேனல் இடமருகு (டில்லி), இங்கிலாந்து நாத்திகர் மால்கம் ஒவன்ரீஸ், சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் முருகு.சீனிவாசன் எஸ்.டி.-மூர்த்தி, தி.நாகரத்தினம், தமிழ்மறையான், மலேசிய தி.க. தேசியத் தலைவர் ரெ.சு.முத்தய்யா, திராவிடமணி நல்லதம்பி, டத்தோ பாலகிருஷ்ணன், திருச்சுடர் கே.ஆர்.-ராமசாமியின் குடும்பத்தினர், கருநாடக மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவின் உறுப்பினர் என்.வி.நரசிம்மையா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான பேராசிரியர் டாக்டர் இலட்சுமண் எஸ்.தமிழ் (இலக்குவன்தமிழ்), சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், இங்கிலாந்து நாட்டின் இணையற்ற பெரியார் பெருந்தொண்டர் செல்வநாயகம், பி.பி.சி. தமிழோசை புகழ் சங்கரமூர்த்தி இன்னும் பல வெளிநாட்டு தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு கழகத்தின் செயல்பாடுகளையும், கழகம் செய்துவரும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் வாழ்த்திப் பேசினார்கள்.

கழகப் பொறுப்பாளர்களின் அன்புக்கிணங்க மேடையிலே ஒரு பெரிய தராசினைக் கொண்டுவந்து ஒரு தட்டில் என்னையும், மற்றொரு தட்டில் ரூபாய் நோட்டுகளும், தங்கமும் வைக்கப்பட்டன. தராசு முள் நடுவில் நேராக நின்றதும், நான் இறக்கி விடப்பட்டேன்.  அவ்வாறு கொடுக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.9 கோடி ரூபாயாகும். முதன்முதலில் எடைக்கு எடை தங்கம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை அறிவித்தவர் பொருளாளர் கா.மா.குப்புசாமி ஆவார். அவருக்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் கேட்டுக்கொள்ள வைரக்கல் பொறித்த தங்க மோதிரத்தை அணிவித்தேன். மாநாட்டில் நிறைவுரையில், “இந்த நிதி எனக்காக அளிக்கப்பட்டதல்ல! தந்தை பெரியாருக்கு நன்றிகாட்ட என் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மதவாத எதிர்ப்பு இளைஞர்களுக்குப் பயிற்சிப் பட்டறை, 100 புத்தக விற்பனை நிலையம், பல மொழிகளில் தந்தை பெரியாரின் நூல்கள், புதுடில்லியில் நமது இயக்கம் பற்றிய உலகத் தகவல் மய்யம் போன்ற ஆக்கரீதியான பணிகளுக்குப் பயன்படுத்துவோம் என்றேன். நாங்கள் ஏதோ தன்னந்தனியராக இல்லை. உலகக் குடும்பமே எங்களுக்குத் துணையாக இருக்கிறது என்பதைத்தான் இந்த மனிதநேய மாநாடு காட்டியிருக்கிறது’’ எனப் பல கருத்துகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.

மாநாட்டு மேடையில் நான்கு சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. ஊற்றங்கரை திருவாளர்கள் அப்பாவு _ பச்சியம்மாள் ஆகியோரின் செல்வன் இராசேந்திரன், சின்னக்கண்ணன் _ சந்திரா ஆகியோரின் செல்வி வேல்விழி; கோவில்தேவராயன் பேட்டை திருவாளர்கள் சங்கரலிங்கம் _ சகுந்தலா ஆகியோரின் செல்வன் சந்துரு, வல்லம் பிள்ளையார்பட்டி சிதம்பரநாதன் _ கலைமணி ஆகியோரின் செல்வி அஞ்சுகம்; தஞ்சாவூர் மாவட்டம் சாமிமுத்து _ அந்தோணியம்மாள் ஆகியோரின் செல்வன் லூர்துசாமி, அந்தோணிசாமி _ சவுரியம்மாள் ஆகியோரின் செல்வி தங்கமணி; கோவை மாவட்டம் சுந்தராபுரம் கே.எம்.சண்முகம் _ ருக்மணி ஆகியோரின் செல்வன் கதிரவன், கே.பழனிச்சாமி _ கவுசல்யா ஆகியோரின் செல்வி லாவண்யா ஆகிய நான்கு இணையரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.

பூதனூர் திராவிடர் கழகத் தலைவர் இரா.இலக்குமணன் அவர்களின் பேரக் குழந்தையும், கவுதமன் _ சுமதி ஆகியோரின் மகளுமான பெண் குழந்தைக்கு ‘தங்கமணி’ எனப் பெயர் சூட்டினேன்.

மாநாட்டில் நான் எழுதிய Why I do not believe in God?” என்னும் ஆங்கில நூலை பார்பரா சுமோக்கர் வெளியிட, ஜெர்மானிய நாத்திக அறிஞர் டாக்டர் வால்கர் முல்லா பெற்றுக் கொண்டு _ தமிழ்நாட்டில் உள்ள இதுபோன்ற இயக்கத்தை ஜெர்மனியில் மட்டுமல்ல _ உலகில் வேறு எங்குமே காண முடியாது என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு தஞ்சையில் அனைத்து தரப்பு மக்களையும் பகுத்தறிவுப் பாதையில் கொண்டுசெல்லும் வகையில், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு கழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றது.

ஜெர்மனி நாத்திகக் குழுவினர் சென்னை பெரியார் திடலுக்கு 6.2.1998 அன்று இரவு ஏழு மணிக்கு வால்கர் முல்லருடன் இணைந்து நாத்திகச் சங்கத்தைச் சார்ந்த பத்து பேருடன் வருகை புரிந்தனர். அவர்களை பகுத்தறிவுக் கழகச் செயலாளர் கோ.அண்ணாவி வரவேற்றார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மந்திரமா? தந்திரமா? நிகழ்வை ஜெர்மன் குழுவினருக்கு மெருல்கம்தார் ஆங்கிலத்தில் விளக்கிக் கூறினார். இந்த நிகழ்ச்சி அவர்களை மிகுந்த வியப்புக்குள்ளாக்கியது. மலேசிய செல்வம் விழாக்குழு சார்பில் அனைவருக்கும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.

ஜெர்மனிய நாத்திகச் சங்க பிரதிநிதி வால்கர் முல்லருக்கு சால்வை அணிவித்து தந்தை பெரியார் உருவம் பொறித்த நினைவுச் சின்னத்தை வழங்கினேன். அந்த நிகழ்வில் உரையாற்றுகையில், “தந்தை பெரியார் அவர்கள் 1932ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார். இன்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாத்திகவாதிகள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு வந்திருக்-கின்றார்கள். ஜெர்மனி நாட்டைச் சார்ந்த மேக்ஸ் முல்லர் அவர்கள் சமஸ்கிருதத்தைப் பரப்ப இங்கு வந்தார். இன்றைக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் வால்கர் முல்லரும் நாத்திகப் பிரதிநிதிகளும் தந்தை பெரியார் அவர்களது கருத்தை ஜெர்மனியில் பரப்ப இங்கு வந்திருக்கின்றனர். காலச் சக்கரம் சுழலுகின்றது! ஜாதி, மதம், கடவுள் ஒருபோதும் மக்களை இவை ஒன்றிணைக்காது. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையான மனிதநேயம் மட்டுமே மனித குலத்தை ஒன்றிணைக்கும்’’ என பல்வேறு கருத்துகளைக் கூறினேன். இந்த நிகழ்வுக்கு கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

சனி, 18 மார்ச், 2023

கடந்த ஓராண்டில் (2022-2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயண நாட்களும், நிகழ்ச்சிகளும்!


90 ஆம் வயதில் 1.1.2022 முதல் சுற்றுப்பயண நாள்கள்

1. பொதுக்கூட்டங்கள் - 75

2. மாநாடு -  9

3. ஆர்ப்பாட்டங்கள் - 4

4. காணொலி நிகழ்ச்சி - 19

5. அறிக்கைகள் - 514

6. சுயமரியாதை திருமணங்கள் - 15

7. கலந்துரையாடல் கூட்டம் - 17

8. பொது நிகழ்ச்சிகள் - 46

பரப்புரை தொடர் பயணங்கள்

1. நாகர்கோவில்முதல் சென்னை வரை

(3.4.2022 முதல் 25.4.2022 வரை)

நோக்கம்: 

1. மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம்

2. நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு

21 நாட்கள்

38 பொதுக்கூட்டங்கள்.

2. ஈரோடு முதல் கடலூர் வரை

(3.2.2023 முதல் 10.3.2023)

நோக்கம்: 

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை

தொடர் பயணம்

30 நாட்கள்

55 பொதுக்கூட்டங்கள்

ஞாயிறு, 12 மார்ச், 2023

முதல் பெரியார் சமூகநீதி விருது


திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தமிழர் தலைவர் கிவீரமணி அவர்களுக்கு தமிழக அரசின் - தந்தை பெரியார் சமூகநீதி விருது வழங்கும் விழா - (26.2.1996) கலை வாணர் அரங்கில் எழுச்சியுடனும்உணர்ச்சி யுடனும் நடந்தது.

மாலை 4:00 மணியிலிருந்து - அரங்கத் துக்குள் பார்வையாளர்கள் வரத் துவங்கினர்தமிழ்நாடு முழுவதுமிருந்தும் கழகப் பொறுப் பாளர்களும் தோழர்களும் நிகழ்ச்சியில் பங் கேற்க வந்திருந்தனர்மாலை 5:30 மணிக்கு அரங்கம் முழுவதும் இருக்கைகள் நிரம்பி வழிந்துதரையிலும் பார்வையாளர்கள் அமர்ந்துவிட்டனர்.

ஊசிபோட்டால் கேட்கக் கூடிய அள வுக்கு அமைதியான சூழலில் காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்த நாதஸ்வர இசை நிகழ்ச் சியின் துவக்கத்துக்காக பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட விழா மேடையில் - தந்தை பெரியார்தமிழக முதல்வர் படத்துடன் ‘தந்தை பெரியார் சமூகநீதி விருது’ 1995 விருது வழங்கும் விழா என்ற வாசகங்கள் பொறிக்கப் பட்டிருந்தனமேடையின் இரு பக்கச் சுவர் களிலும் தந்தை பெரியாரின் ஒளிச்சுடர் வடி வமைக்கப்பட்டிருந்தது.

தலைவர்கள் மேடைக்கு வந்து அமர்வதற்கு முன்பு - பெண் அறிவிப்பாளர் அனைவரையும் வரவேற்றார்தமிழக அரசின் பெரியார் சமூகநீதி விருதை - முதன் முதலாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி பெறுகிறார் என்று அறிவித்த போது - கைதட்டலில் அரங்கமே அதிர்ந்ததுதாழ்த்தப்பட்டோர்பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு - அரசு செய்துள்ள சாதனைகளை அறிவிப்பாளர் பட்டியலிட்டுக் கூறினார். 6:10 மணிக்கு தமிழக முதல்வர்கழகப் பொதுச் செயலாளர்அமைச்சர்கள் எஸ்டிசோமசுந் தரம்லாரன்ஸ்பேரவைத் தலைவர் சேடப் பட்டி முத்தையாபிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளர் எம்.தங்கதுரை ஆகியோர் பலத்த கரவொலிக்கிடையே மேடைக்கு வந்து அமர்ந்தனர்

கழகப் பொதுச்செயலாளர் நன்றி தெரி விக்கும் வகையில் மலர்க் கொத்துக்களை முதலில் முதல்வருக்கு வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் லாரன்ஸ் வரவேற்புரையாற்றதொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் வாழ்த் துரை வழங்கிய பின் விருதுவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுச்செயலாளருக்கு தமிழக முதல் வர் பொன்னாடை போர்த்தி 5 பவுன் மதிப் புள்ள மெடலை அணிவித்தார். ‘பெரியார் சமூகநீதி விருது’ என்ற வாசகம் பொறிக்கப் பட்ட பட்டயக் கேடயத்தையும் தந்தை பெரியார்தமிழக முதல்வர் படம் பொறிக் கப்பட்ட வெள்ளித் தட்டை நினைவுப் பரிசாகவும் - பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.  அப்போது சரியாக நேரம் 6:45 மணிவிருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து முதலமைச்சர் பேசினார்பொதுச் செயலாளரின் லட்சியப் பிடிப்பை யும் விளம்பரம் விரும்பாத தொண்டையும் முதலில் மனம் திறந்து தனது உரையில் குறிப்பிட்டபோது அரங்கமே கரவொலி யால் அதிர்ந்தது.

ஏற்புரை நிகழ்த்த வந்த பொதுச் செயலா ளர் உரையைத் துவக்குவதற்கு முன் - முதல்வருக்கு பிறந்த நாள் பரிசு ஒன்றை வழங்கினார். 4000 அறிவியல் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்களைக் கொண்ட தமிழ் அறிவியல் அகராதியைக் கொண்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒன்றை பொதுச் செயலாளர் வழங்கினார்சென்னையில் உள்ள பெரியார் கணினி ஆய்வுக் கல்விய கமும் - வல்லத்தில் உள்ள பெரியார்” நூற் றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கும் இணைந்து இதைத் தயாரித்திருந்தது.

முதலமைச்சர் தனது பிறந்த நாள் விழா வில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு விடுத்த வேண்டுகோளைப் பாராட்டி பொதுச்செயலாளர் - இந்தப் பரிசை வழங்கி தனது ஏற்புரையைத் தொடங்கினார்.

சமூக நீதிக் கொள்கையில் பெரியார் இயக்கம் செய்துவரும் தொண்டைப் பாராட்டி - இந்த விருதை முதல்வர் வழங்கி யிருப்பதைக் குறிப்பிட்ட பொதுச் செயலா ளர் - முதல்வர் இயக்கத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்ததுடன் ஒருபோதும் சமூகநீதிக் கொள்கைக்குத் துரோகம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துப் பேசினார்.

எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் - கருப்பு மெழுகுவத்திகளாகச் செயல்பட்டு வரும் லட்சோப லட்சம் கருஞ்சட்டைத் தோழர்களின் தொண்டுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமே இந்த விருது என்று பொதுச் செயலாளர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத் தியாகி களுக்கு சுதந்திரப் போராட்டத் தியாகிக ளுக்கு வழங்குவது போல் ஓய்வூதியம் தொகையை உயர்த்த வேண்டும்ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற வர்களை அரசாங்கம் அங்கீகரித்து கவுர விக்கவேண்டும் என்கிற இரண்டு கோரிக் கையையும் முதலமைச்சரிடம் பொதுச் செயலாளர் வைத்தார்.

காவல்துறையில் தகுதியான விண்ணப் பதாரர்கள் இல்லை என்று கூறி - தாழ்த்தப் பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கக் கூடாது என்று கூறி விதிகளை மாற்றி தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இடங் களை வழங்க வேண்டும் என ஆணை யிட்ட முதல்வரை பொதுச்செயலாளர் பாராட்டினார்.

பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அவை நிகழ்ச்சியில் முதல்வர் வெளியிட்ட இத்தகவலை சுட்டிக்காட்டிய போது மேடையிலிருந்த பொதுச்செயலா ளரிடம் முதல்வர் - இது பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினார்.

1938இல் தந்தை பெரியாருக்கு பெண் கள்தாம் பெரியார் பட்டத்தை அளித்தனர்இப்போது பெண் முதலமைச்சர் மூலமா கவே - பெரியார் விருது தரப்படுகிறது என் பதைச் சுட்டிக்காட்டிய பொதுச்செயலாளர். ‘முன்னோக்கிச் சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெண்களுக்குத்தான் உண்டு’ என்று குறிப்பிட்டபோது முதலமைச்சர் கைதட்டி வரவேற்றார்.

- ‘உண்மை ‘ - மார்ச் 16-31, 1996

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

 

கழகத் துணைத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோஅன்பரசன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் (அரசு விழா, சென்னை வள்ளுவர் கோட்டம், - 16.1.2023)

 பெரியார் விருதினைப் பெற்றுக்கொண்டவுடன், அடையாறு சென்று ஆசிரியர் அவர்களைச் சந்தித்தார் கழகத் துணைத் தலைவர்.  ஆசிரியர் அவர்கள் கழகத் துணைத் தலைவருக்கும், அவரது வாழ்விணையர் சி.வெற்றிச்செல்விக்கும் இணைந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா வீரமணி, தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி ராமஜெயம் ஆகியோர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது, தங்கப்பதக்கம், காசோலை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார்!

சென்னை. ஜன. 17 திராவிடர் கழக துணைத் தலைவருக்கு தந்தை பெரியார் விருதை தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 16-01-2023 அன்று காலை 8:30 மணிக்கு நடைபெற்றது. குறித்த நேரத்தில் முதலமைச்சர் வருகை தந்தார். இந்நிகழ்வில் 2022 ஆம் ஆண்டுக்கான 10 ஆன்றோர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இவ்விருதானது தகுதி உரை, பொன்னாடை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றைக் கொண்டது. 

தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. நிகழ்வில் மாண்புமிகுவாளர்களான இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை பெருநகர மேயர் ஆர். பிரியா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னதாக இவர்களுக்கு நிகழ்ச்சியின் சார்பில் வள்ளுவர் சிலை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழறிஞர்கள் பதின்மருக்கு விருதுகள்!

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தந்தை பெரியார் விருது, இரணியன் நா.கு. பொன்னுசாமி அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது, எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது உபயதுல்லா அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது, ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு பெருந் தலைவர் காமராஜர் விருது, ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது, வாலாசா வல்லவன் அவர்களுக்கு பாரதிதாசன் விருது, நாமக்கல் பொ.வேல்சாமி அவர்களுக்கு திரு.வி.க. விருது, கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, முனைவர் இரா.மதிவாணன் அவர்களுக்கு தேவநேயப் பாவாணர் விருது உள்ளிட்ட 10 விருதுகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

தந்தை பெரியார் விருது!

”2022 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பாடுபடுகிறவர்களை சிறப்பிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கவிமாமணி பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்; தந்தை பெரியார் தன்மானப் பேரவையை உருவாக்கியவர்; தந்தை பெரியாரின் கொள்கைகான சமூக நீதி, ஜாதி மறுப்பு, சுயமரியாதை, பெண் உரிமைகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் 60 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறார்கள். இந்த அரிய பணிகளைப் பாராட்டி சிறப்பிக்கிறது தமிழ்நாடு அரசு” என்ற தகுதியுரை வாசிக்கப்பட, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மேடையேறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களால் பொன்னாடை, தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு, தகுதியுரை ரூ.5 லட்சத்துக்கான காசோலை ஆகியவை வழங்கப்பட்டன.

தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி!

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் 5 தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி சிறப்பிக்கப் பட்டது. நீலகிரியைச் சேர்ந்த இண்டியா பிராஜக்ட் பார் அனிமல் அண்ட் ரிசர்ச் தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த அனிமல் கேர் ஃபர்ஸ்ட் தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் அனிமல் ரெஸ்கியூ சொசைட்டி தொண்டு நிறுவனம், பிரித்திவி அனிமல் வெல்பேர் சொசைட்டி தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த வைரவா பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் என கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக முதல் முறையாக மொத்தம் 5 தொண்டு நிறுவனங்களுக்கு முதல் தவணையாக 2, 13, 77,250 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை இயக்குநர் அரசு இணைச் செயலாளர் நன்றி கூறினார்.

இறுதியில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விருது பெற்ற அறிஞர் பெருமக்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.

 கவிஞரை உச்சி முகர்ந்த ஆசிரியர்!

தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் திட்டத்தில் ஒரு மாறுதல் செய்து தனது வீட்டில் விடுவதற்கு  முன் அடையாறு சென்று தமிழர் தலைவரை காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் உடனே சம்மதித்தனர். அவ்வாறே அடையாறு ஆசிரியர் இல்லம் சென்று தான் பெற்ற விருதைக்காட்டி நெகிழ்ந்தார் கவிஞர். ஆசிரியர் தானே பெற்றது போல மகிழ்ந்து, துணைத் தலைவர், வெற்றிச்செல்வி இருவருக்கும் ஒருசேர ஆடையணிவித்து மரியாதை செய்தார். பின்னர் வழங்கப்பட்ட தகுதியுரையை ஊன்றிப்படித்து மகிழ்ந்தார். அப்போது ஆசிரியரை சந்திக்க வருகை தந்திருந்த வி.ஜி.பி சந்தோசம் அவர்கள், கவிஞ ருக்கும், வெற்றிச் செல்விக்கும் ஒருசேர ஆடையணிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். உடன்: கி. ராகுலன், முனைவர் சுடரொளி, காரல் ஆகியோர் இருந்தனர்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, மாணவரணியின் மாநிலப் பொறுப்பாளர் செ.பெ.தொண்டறம், தென்சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, சரவண ராஜேந்திரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், வை. கலையரசன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன், பெரியார் மாணாக்கன், ஆவடி தோழர்கள் வஜ்ரவேல், ஆ.வெ.நடராஜன், பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் கோபால், பார்த்திபன், வெற்றி, துணைத் தலைவர் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விருதாளர்கள், அன்னார்களது குடும்பத்தினர் ஆகி யோருக்கு காலைச் சிற்றுண்டியாக பொங்கல், வடை வழங்கப்பட்டது.

தமிழர் தலைவருக்கு ''சமூகநீதிப் போராளி'' விருது!

 

சென்னை, ஜன.9 யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் சங்கத்தின் தலைவர் கோ. கருணாநிதி உட்பட, சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.

30 ஆம் ஆண்டு தொடக்க விழா!

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆண்டு தொடக்க நாள் விழா தியாகராயர் நகரில், தியாகராயர் சாலையில் உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதி யின் முதல் மாடியில், 8.1.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.  

சிறப்பிக்கப்பட்ட தலைவர்கள்!

முன்னதாக குழல் (புல்லாங்குழல்) குமரனின் இன்னிசை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் தொடங்கியது. தொடக்கத்தில் ஆசிரியருக்கு சிறப்பு செய்யப் பட்டது. அதைத்தொடர்ந்து மேனாள் மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.எஸ். இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பின ரும் மூத்த வழக்குரைஞருமான வில்சன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன், துணைப் பொது மேலாளர்  ஜி.முருகன் (சென்னை மண்டலம்), சென்னை தெற்கு மண்டலத் தலைவர் செழியன், சென்னை வடக்கு பிராந்திய தலைவர் பிரபு,  ஆகியோருக்கு பயனாடை போர்த்தி, மரக்கன்று, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 

சமூகநீதிப் பயணத்தின் அடுத்த கட்டம்!

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசும் படலம் தொடங்கியது. சென்னை வடக்குப்பிராந்தியத் தலைவர் பிரபு, யூனியன் வங்கி தெற்கு பிராந்தியத் தலைவர் செழியன், சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் முருகன், மூத்த வழக்குரைஞர் வில்சன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி சங்கத்தின் வரலாற்றை தந்தை பெரியார், ஆசிரியர் ஆகியோரின் சமூகநீதிப் போராட்டங்களையும் இணைத்து விவரித்தார். தொடர்ந்து சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வாழ்த்துரையோடு சமூகநீதிப் பயணம் செல்ல வேண்டிய பாதை குறித்தும் பேசினார். நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ், இளங்கோவன் நாடாளு மன்றத்தில் சமூகநீதி தொடர்பாக தான் பேசியதை சுட்டிக் காட்டி பேசி, எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் எடுத்துரைத்து அமர்ந்தார்.

தமிழர் தலைவருக்கு, 

''சமூக நீதிப் போராளி விருது”

நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் ஆசிரியருக்கு சிறப்பு விருதை அமைப்பின் தலைவர் கோ. கருணாநிதி அறிவித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று முன்னதாக சங்கத்தின் துவக்க கால உறுப்பினர்கள் இணைந்து ஆசிரி யருக்கு பூங்கொத்து வழங்கினர். அத்தோடு மண்டல செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் இணைந்து பயனாடையணிவித்து சிறப்பித்தனர். அதன்பிறகு தந்தை பெரியாருக்கு 1938 இல் பெண்கள் இணைந்து மேடையில் “பெரியார்” என்ற பட்டத்தை வழங்கியது போல என்று குறிப்பிட்ட கோ. கருணாநிதி பெண் நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார். அதேபோலவே பெண்கள் இணைந்து ”சமூகநீதிப் போராளி” எனும் விருதை, பலத்த கைதட்டல் களுக்கிடையே தமிழர் தலைவருக்கு வழங்கினர். விருதுக் கான குறிப்பை பலத்த கரவொலிக்கிடையே சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி வாசித்தார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை!

விழா நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில், எதிர்பாராமல் வழங்கப்பட்ட விருதுக்கு நன்றி தெரிவித்தார். தான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியதை இந்த விருது சுட்டிக் காட்டுவதாக கூறிவிட்டு, நிகழ்ச்சியில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களில் சமூகம் சார்ந்த தீர்மானங்களை குறிப்பிட்டு பேசினார். அதையொட்டி, பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க உத்தரவிட்டதை நினைவுபடுத்தினார். கிரிமிலேயரை அமல்படுத்தியது அர சமைப்புச் சட்டவிரோதம் என்பதை காரணத்தோடு எடுத்துரைத்து தனது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் சற்றும் சளைக்காமல் பயனாடையணிவித்து மரியாதை செய்தார்.

கலந்து கொண்டு சிறப்பித்தோர்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞர் சு. குமார தேவன் கழகத் தோழர் திருச்சி ராஜூ, ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சோ. சுரேஷ், கமலேஷ், சமூகநீதி கண்காணிப்புக் குழு மற்றும் யூனியன் வங்கி  அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, அய்.சி.எப்., மக்கள் கணக்கெடுப்பு துறை, சி.பி.சி.எல்., கனரக தொழிற்சாலை, ஆவடி ஆகிய நிறுவன ஓபிசி நல சங்க நிர்வாகிகள்,  வங்கி யின் அதிகாரிகள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நல சங்க உறுப்பினர்கள், குறிப்பாக பெண்கள், நல சங்கத்தை 1994 இல் துவக்கிய தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.