வியாழன், 28 நவம்பர், 2024

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்! இந்துக்கள் தெருவில் நடப்பது கூட இந்து மத விரோதம் எனப்பட்ட விசித்திரம்

 

சுயமரியாதை இயக்கச் சுவடுகள்! சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்!

விடுதலை நாளேடு
கட்டுரை

இந்துக்கள் தெருவில் நடப்பது கூட

இந்து மத விரோதம் எனப்பட்ட விசித்திரம்


சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு “சேத்திர” ஸ்தலமாகும். அது திருநெல் வேலிக்கு 40-வது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜ்ஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபசுவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள். மற்றபடி, அந்த சாமியின் பக்தர்களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது.

இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமுகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வஸ்துவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம். அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20வது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

வைக்கம் போராட்டம் போன்று சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது. அதற்கேற்றாப்போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சியிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிஸ்ட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

பார்ப்பன போலீசு சுப்பிரண்டின் அடக்குமுறை வெறியாட்டம்
இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடுவதாகச் சொல்லி அரசாங்கத் தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர். இவர் காலத்தில்தான் தொண்டர்களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப் படுத்தினவர். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

நிற்க, எது எப்படி ஆனபோதிலும் சத்தியாக்கிரகம் வெற்றி யான போதிலும், தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத்தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை. ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.
தவிரவும், ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து, அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும்.

அக்கமிட்டியும் அதேசமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது, கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டுமென்றும், அதுவும் முதலில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளிலேயே தொடங்க வேண்டுமென்றும் தீர்மானித்திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். ஏனெனில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசரமானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக்கிரகமானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண்ணத்தை நீக்குவதற்குத்தான் செய்யக் கூடியதே தவிர, மற்றபடி கோயிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும், எல்லோரும் கோயிலுக்குப் போகலாம் என்றும் ஏற்பட்டுவிட்டால் கோயில் பிரவேசத்தைத் தடுக்க மறியல்கூட செய்ய வேண்டிவருமென்றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தேதான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதை அனுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடாமல் உபயோகப் படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இதிலும் வெள்ளைக் கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக்கிரகத்தைவிட ஒரு இந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில், நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சமுக சீர்திருத்தத்திற்கும், மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக் காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கிவிடுவ துடன் அரசியல் மூடநம்பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கிவிடும். ஆகையால் இதைச் சத்தியாக்கிரக கமிட்டியார் தயவுசெய்து ஆதரித்து அதை மேல்போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த மனிதனும் பொறுத்துக் கொள்வானா?
இன்றைய தினம் “சுசீந்திரத்தில்” தெருவில் நடக்கத் தடைப் படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு, அந்த நாட்டில் பெரும் ஜனத் தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரிகம் முதலியவைகளில் முன்னணியில் நிற்கின்றவர் களுமான ஈழவ சமுதாய மக்களுமாவார்கள். அவர்களோடு ஆசாரிகள், நாடார்கள் முதலிய பலவகைத் தொழில் வியாபார மக்களுமாவார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரும் செல்வாக்கும், நாகரிகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத்தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆட்சேபணை செய்ய அதைச் சுயமரியாதையுள்ள எந்த மனிதன்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதை, இந்த இழிவை நிவர்த்தித்து இந்தக் கொடுமையிலிருந்து இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின் சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்பதென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டு பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும், கருத்துமுள்ள பேச்சாகாது.

முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி எது?
ஆகையால், சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டியார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர் கோவிலிலாவது, திருநெல்வேலியிலாவது கூட்டி சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால், வழி நடை சுதந்திரம் ஒன்று, பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றிபெற்றவர்களாவோம்.
இந்த சத்தியாக்கிரகமானது 1925-வது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப் பட்டதாகும். அவ்வாக் குறுதி ஏமாற்றப்பட்டதின் பயனாக இப்போது ஆரம்பிக்கப்படு கின்றதாதலால் இதற்கு முன்னையவிட இரட்டிப்பு பலம் இருக்க நியாய மிருக்கின்றது. அன்றியும், பொதுஜன ஆதரவும், அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்டசபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரஸ்தாக்களிலும், பொதுசத்திரங்களிலும் பொது நீர்த்துறைகளிலும் சமஸ்தானத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது. ஆதலால் இவைகளுக்கு விரோதமாக திருவாங்கூர் சர்க்கார் நடப்பார்களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி இந்திய ஆட்சியா? பிரிட்டிஷ் ஆட்சியா? என்பதும் விளங்கிவிடும்.
ஆகையால் சுயமரியாதைத் தொண்டர்களே! சமதர்ம தேசியவாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவைத் தயவுசெய்து எதிர்பாருங்கள் எதிர்பாருங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 01.06.1930

ஞாயிறு, 24 நவம்பர், 2024

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

 

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் நவம்பர் 16-30

இயக்க வரலாறான தன் வரலாறு (351)

டி.கே.கைலாசம் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் ஆசிரியர்

அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அருப்புக்கோட்டை டி.கே. கைலாசம் நினைவு அறக்கட்டளை (நிறுவனர்: கைலாசம் அவர்களின் மகன் டி.கே.சுப்பிரமணியம்- ஓய்வு பெற்ற ஆசிரியர்)யின் சார்பில் ‘பெரியார் பேருரையாளர்’க்கான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் வரவேற்று உரையாற்றினார்.
திருச்சி- கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் ஆர்.இராசேந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புரையை நிகழ்த்தினார்.
திருச்சி பெரியார் மாளிகை வளாகம் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ டி.டி.வீரப்பா மன்றத்தில் இரண்டாவது சொற்பொழிவுக் கூட்டம் 17.1.2006 செவ்வாய் காலை 10.30 மணியளவில் எமது தலைமையில் நடைபெற்றது.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு (திருச்சி)

 

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் அறிமுகவுரை ஆற்றினார். லால்குடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ஆல்பர்ட் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு நாம் தலைமை வகித்தோம்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ‘‘தந்தை பெரியார் காணும் உலகம் – நெறிகளும் – தீர்வுகளும்’’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நாம் தந்தை பெரியார் அவர்களின் உயர் எண்ணங்களை ஆய்வுரையாக நிகழ்த்தினோம்.

எமது தலைமை நிறைவுரைக்கு முன்பாக அருப்புக்கோட்டை டி.கே.கைலாசம் நினைவு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ என்கிற சிறப்புத் தகுதியை அறிவித்துப் பாராட்டி பொன்னாடை போர்த்தி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் ரூ.1,000 வழங்கினோம். இந்தச் சிறப்புக்கு முழு தகுதியுள்ள கலி.பூங்குன்றன் அவர்கள் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிறந்த பெரியாரின் மாணவர் என்று பாராட்டினோம். அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழாவில் மூத்தபெரியார் பெருந்தொண்டர்களுக்கு நினைவுப் பரிசளித்துப் பாராட்டினோம்.

-கட்டுரையின் ஒருபகுதி....

வியாழன், 21 நவம்பர், 2024

அஞ்சாநெஞ்சன் அழகிரியின் அனல் வீச்சு!

 

ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்!

விடுதலை நாளேடு

அஞ்சாநெஞ்சன் அழகிரியின் அனல் வீச்சு!

செவ்வாய், 12 நவம்பர், 2024

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்கள்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்கள் மொத்தம் 73.

அவர்களோடு சிறைக்குச் சென்ற குழந்தைகள் 32.

போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தவர் தந்தை பெரியார்.

இந்த வீர வரலாறு தொடங்குவதற்கு வித்திட்ட நாள் நவம்பர் 13.

#தமிழ்நாட்டுப்_பெண்கள்_மாநாடு
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையேகிய டாக்டர் தருமாம்பாள் அவர்களும், அவரது இரண்டு மருமகள்களும்...!

ஞாயிறு, 10 நவம்பர், 2024

சுவரெழுத்தாளர் சுப்பையா!'' - கி.வீரமணி

                    

                         விளம்பரமில்லா வியக்கத்தக்க                                               பெரியார் தொண்டர்கள்!

                       '' சுவரெழுத்தாளர் சுப்பையா!''

                              - கி.வீரமணி  


                                   ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜகம்பீர,

ஈரோட்டு வேந்தர் பராக்! பராக்!!

விநாயகனை வீதியிலே போட்டுடைத்த, வீராதி வீரர்!

சூராதி சூரர் சுப்ரமணியனை சுக்குநூறாக்கிய சூரர்!

தீராதி தீரர் தீங்கான அரசியல் சட்டத்தை எரித்த தீரர்!

பராக்! பராக்!

என கட்டியம் கூறும் கம்பிரக் குரல் மாநாட்டுப் பேரணிகளில் பெரியார் அமர்ந்து வரும் அலங்கார ஊர்திக்கு முன்னால் ஒலிக்கின்றதென்றால் அது சுவரெழுத்தாளர் சுப்பையாவின் குரலாகத்தான் இருக்கும். காரைக்குடி அருகில் சூரக்குடி எனும் கிராமத்தில் பிறந்து இளமைப்பருவத்தில் 1940களின் மத்தியில் வேலைதேடி மயிலாடுதுறைக்கு வந்தவர். சுயமரியாதைக் கோட்டையாக விளங்கிய மயிலாடுதுறையில் பெரியார் தொண்டர்களின் தொடர்பு ஏற்பட பெரியார் கொள்கை மீதும் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. மயிலாடுதுறை கோ.அரங்கசாமி அவர்களின் மளிகைக்கடைதான் பெரும்பாலும் அவரின் பாசறை

1950 வாக்கில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிச் சுவர்களில் பெரியாரின் கொள்கைகளை எழுத ஆரம்பித்த அவரது சுவரெழுத்துப் பணி தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தொடர்ந்தது. சுவரில் அவரால் எழுதப்பட்ட வாசகங்கள் இருபால் இளைஞர்களையும் ஈர்த்து அவர்கள் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. சுப்பையா சுவரெழுத்திற்கென எந்தவித பிரத்யோக எழுதுபொருளையும் பயன்படுத்தியதில்லை. சாலை போட பயன்படும் தாரை எடுத்து காய்ச்சி மண்ணெண்ணெய் கலந்து அதில் துணி சுற்றப்பட்ட மூங்கில் குச்சியை தோய்த்துதான் எழுதுவார். கடைசிவரை அவருக்குப் பயன்பட்டது இரண்டு பழைய தகர டப்பாக்களும் அழுக்குத்துணியும் மூங்கில் குச்சியும்தான். இரவு முழுதும்
எழுத்துப் பணி, பகல் வேளையில் மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம். இதுவே அவரது வாழ்க்கையாகி இருந்தது. யாருக்கும் கட்டுப்படமாட்டார். முன்கோபக்காரர். மயிலாடுதுறை காவிரி ஆற்றில் காங்கிரஸ் கூட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அதில் விபூதி வீரமுத்து எனும் காங்கிரஸ் பேச்சாளர் பேசயிருந்தார். இவர் போகுமிடங்களிலெல்லாம் தந்தை பெரியார் அவர்களை விமர்சித்து பேசிவந்தார். விபூதி வீரமுத்து மயிலாடுதுறை வருவதை அறிந்த சுப்பையா "கருப்புக்கு மறுப்பு! மறுப்புக்கு செருப்பு!" என கொட்டை எழுத்துக்களில் கூறைநாடு பகுதியில் எழுதிவிட்டார். இது இயக்கத் தோழர்களை உசுப்பிவிட்டது. வழக்கம்போல் விபூதி வீரமுத்து பெரியார் அவர்களைப்பற்றி பேச ஆரம்பிக்க கூட்டத்தில் கலந்திருந்த இயக்கத் தோழர்களும் சுப்பையாவும் மேடை முன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட அடிதடி ரகளையாகி கூட்டம் அத்தோடு ரத்தாகிப் போனது. விபூதி வீரமுத்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி அருகில் இருந்த காங்கிரஸ் தோழர் பூட்டுக்கடை தங்கராசுவின் கடையில் ஒளிந்துகொண்டார். பின்னாளில் அந்தத் தங்கராக கருப்புச்சட்டை போடாத பெரியாரின் தொண்டராகவும், என்பால் மிகுந்த பற்று கொண்டவராகவும் விளங்கினார். நான் மயிலாடுதுறைப் பொதுக்கூட்டங்களுக்கு செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு என்னை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார்.

காங்கிரசை நமது இயக்கம் கடுமையாக எதிர்த்த நேரத்தில் மயிலாடுதுறைக்கு வருகைதந்த காமராஜரிடம் சுப்பையாவின் சுவரெழுத்தைப் பற்றி காங்கிரஸ் தொண்டர்கள் முறையிட அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காமராஜரே ஆத்திரப்பட்டு 'கட்டை விரலை வெட்ட வேண்டும்" என்று பேசிவிட்டுப் போனார்.
-
-உண்மை இதழ், 16-30.09.2015

வெள்ளி, 25 அக்டோபர், 2024

டிரஸ்ட் வழக்கு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…. 120 ஆம் தொடர்

டிசம்பர் 16-31

டிரஸ்ட் வழக்கு

அம்மா அவர்களால் கழகத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் நான் பொதுச்செயலாளர் என்ற முறையில் தாக்கல் செய்த எதிர் மனுவின் முக்கிய சாரங்களை 03.05.1978 விடுதலையில் வெளியிட்டோம். அதனை அப்படியே இங்கு தருகிறேன். ஏன் எனில் கழகத் தோழர்கள், கழகத்திற்கு எதிரான துரோக வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் அது பயன்படும் என்பதால்.

(திருவாளர்கள் டி.எம்.சண்முகம், சிதம்பரம் கிருஷ்ணசாமி, கே.தங்கராசு ஆகியவர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு, செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த எதிர்மனுவின் விவரம்.)

அடையாறு கஸ்தூரிபாய் நகர், 1ஆவது மெயின் சாலையிலுள்ள 13ஆம் எண் வீட்டில் வசிக்கும், கி.வீரமணியாகிய நான் கீழ்க்கண்டவாறு, உறுதிமொழி மூலம் கூறுவதாவது:

என்னுடைய தகப்பனார் பெயர் சி.எஸ்.கிருஷ்ணசாமி எனக்கு வயது 44 ஆகிறது.

(1)    நான் இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி. இந்த உறுதிமொழிப் பத்திரத்தை என் சார்பிலும் முதல் எதிர்வழக்காளர் (நிறுவனம்) சார்பிலும் நான் சமர்ப்பிக்கிறேன்.

(2)    தாவா மனுவிற்கு ஆதாரமாக சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டவைகளுள் குறிப்பாக இங்கே ஒப்புக்கொள்ளப்படுபவைகளைத் தவிர, மற்றவற்றை நான் மறுக்கிறேன். பிராதில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்குப் பதில்கூற முழு விவரமான தனி ஒரு எழுத்தறிக்கை Written statement  தர எனக்குள்ள உரிமையைப் பிறகு பயன்படுத்துவேன் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

(3)    நான் மிகவும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் 1860ஆம் ஆண்டு சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டப்படிப் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன சட்ட விதிகளின் 21ஆவது பிரிவுப்படி, திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களால் நான் எழுத்து மூலமாக ஆயுள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இந்த நியமனப் பத்திரம் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களினால் 2.1.1978இல் ஏழு நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் எழுதி, கையெழுத்திடப்பட்டதாகும். (இதில் இனி நான் நிறுவனம் (ஸ்தாபனம்) என்று குறிப்பிடுவது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தையே சாரும்).

(வழக்குத் தலைப்பில் மனுதாரர்கள் என்னை செயலாளர் என்று அழைக்கப்படுகிறவர் _என்று  குறிப்பிட்டுள்ளார்கள். நான் செயலாளராக இருக்க உரிமை உடையவன் அல்ல என்பது போன்று அவர்கள் கொண்டுள்ள கருத்து தவறான அடிப்படையில் அவர்களால் எடுக்கப்பட்டதொரு நிலையாகும்.)

அமலுக்கு வராத சட்டம்

(4) வாதிகளின் மனு ஒரு தவறான அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 1975ஆவது ஆண்டு தமிழ்நாடு சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டம் (சென்னை-_27 1975 என்கிற சட்டம்) தான் 1860ஆவது ஆண்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சொசைட்டிகளுக்குப் பொருந்தும். நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் சில 27/1975 சட்டத்துக்குப் புறம்பான விதிகளைக் கொண்டதாக இருப்பதாலும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் 21ஆவது விதியானது தமிழ்நாடு சட்டம் 27/1975இல் உள்ள 15ஆவது விதிக்கு முரணானதாலும் இந்த 21ஆவது விதியின் அடிப்படையில் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை என்னை ஆயுள் செயலாளராக நியமித்துள்ளது செல்லத்தக்கதல்ல என்றும் இந்த அடிப்படையில் இந்த நிறுவனத்தை நடத்திச் செல்வதற்கு ஒரு தனிச் செயல் திட்டத்திற்கு (A Scheme) உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் கோரியுள்ளார்கள்.

27/1975 என்ற இந்தத் தமிழ்நாடு சட்டம் அமலுக்கு வரும் தேதியை மாநில அரசு இதுவரையில் (வாதி மனுபோட்டு அதற்குப் பதில் தரும் இதுநாள் வரை) பிறப்பிக்கவில்லை என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு 1975 சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டம் இதுவரை அமலில் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே 1860ஆம் ஆண்டு சொசைட்டி ரிஜிஸ்திரேஷன் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் விதிமுறைகள் செல்லத்தக்கவைகளே. அந்த விதிமுறைகளுக்கு இணங்க நான் அந்த நிறுவனத்தின ஆயுள் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டப்படி சரியானதே ஆகும். வாதிகள் தங்களது மனுவில் கூறியுள்ள காரணங்கள் சட்டப்படி செல்லத் தக்கவையல்ல. எனவே மனுவும் தாவாவும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியவையாகும். ஏனென்றால், அமலுக்கு வராத 27/1975ஆவது தமிழ்நாடு சட்டத்தின் அடிப்படையில்தான் இந்த தாவா மனு போடப்பட்டுள்ளது. சட்டமே அமலுக்கு  வராத நிலையில் இந்த மனுதாரர் வாதம் செல்லாதவைகளாகின்றன. மேலும் சட்டப்படி இந்த மனு செல்லத்தக்கதல்ல. காரணம், நிறுவனத்தின் மற்ற நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

உறுப்பினர்கள் அல்ல

(5)    இந்த மனுதாரர்கள் தாங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்றும், அந்த நிறுவனம் நிலைத்து நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்பதில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் அவர்கள் மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். அதனடிப்படையில்தான் பெரியார் அவர்கள் 1968இல் அவர்களை நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தார் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் இவர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினர்களே அல்ல. அவர்கள் மனுவில் கூறியுள்ளவைகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாததாகும். நிறுவனத்தின் சட்டதிட்டங்களின் 5ஆவது விதிப்படி, ஒரு குறிப்பிட்ட வயதடைந்தவர்களும் நிறுவனத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதோடு நிர்வாகக் கமிட்டியின் ஒப்புதலையும் பெற்றவர்கள்தான் உறுப்பினராக முடியும். மனுதாரர்களை நிறுவனத்தின் சாதாரண உறுப்பினர்களாகக்கூட நிர்வாகக் குழு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சாதாரண உறுப்பினர்களாகவே இல்லாத நிலையில், எப்படி நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருக்கத் தகுதி படைத்தவர்களாக முடியும்? அவர்கள் 1968ஆவது ஆண்டில் நிர்வாகக் குழு உறுப்பினர்களானார்கள் என்பதை நான் மறுக்கிறேன். நிறுவனத்தின் கடந்தகால ஆதாரங்கள் மூலமே இது உரிய முறையில் நிரூபிக்கப்படும்.

(6)    மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் என்ற மனுதாரர்களின் கூற்று பொய்யானது என்பதே மனுதாரர்கட்கே தெரியும். சமுதாயத்தில் நிலவிய ஜாதி, மூடநம்பிக்கைகளின் அடிப்படையில், ஒரு பிரிவினர் கொண்டிருந்த ஆதிக்கத்தை எதிர்த்து 1925இல் மறைந்த பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்திலிருந்து முளைத்ததே இந்த நிறுவனமாகும். 1925இல் ஏற்படுத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்துக்கு 1944இல் திராவிடர் கழகம் என்று புதிய பெயரிடப்பட்டது. அந்த நிறுவனமானது அரசியலுக்கு அப்பாற்பட்டது ஆகும். சமுதாய சம்பந்தமான பணிகளுடன் அறநிலையப் பணிகளையும் இணைத்து நடத்தும் ஒரு நிறுவனமாகும். மறைந்த பெரியார் அவர்கள், இந்த நிறுவனத்தைத் தொடங்கி நீண்டகாலம் நடத்தி வந்தார்கள். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், இவற்றின் லட்சியங்களைப் பரப்புவதே இந்த நிறுவனத்தின் செயல் திட்டமாகும். இவைதான் இந்த நிறுவனத்தின் நோக்கங்களாகும். இது இந்த நிறுவனத்தின் சட்ட விதிகளில் தெளிவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலையில் பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் ஒரேவிதமான சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துக்களைக் கொண்ட அடிப்படையால் ஒன்றான இரு அமைப்புகளாகும். மறைந்த பெரியார் அவர்கள் ஆயுள் காலத்தில் இந்த இரண்டு ஸ்தாபனங்களும் (சுயமரியாதை இயக்கம் _ திராவிடர் கழகம் ஒரு அமைப்பு; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றொரு அமைப்பு) அவருடைய அறிவுரை, மேற்பார்வையின் கீழ் நிர்வகித்து, நடத்தி வரப்பட்டன. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கோ அல்லது பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகக் கொள்கைக்கோ உடன்பாடு இல்லாத யாரும் இந்த நிறுவனத்தின் லட்சியங்களையும் கொள்கைத் திட்டங்களையும் நடைமுறைப்-படுத்த முடியாது.

பெரியார் தந்த மறுப்பு

(7) மனுவில் கண்டுள்ள மூன்றாவது வாதியாகிய திருவாரூர் கே.தங்கராசு தன்னை ஆசிரியராகக் கொண்ட பகுத்தறிவு என்னும் ஏட்டில் 1963 ஆகஸ்டில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதில் அவர் மறைந்த காமராசரால் தீர்மானிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கவர் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் அந்தக் கருத்து பெரியார் அவர்களுடைய கருத்துக்கு உடன்பாடு உடையதாக அமையவில்லை. எனவே பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வமான ஏடான விடுதலையில் 17.8.1963 அன்று தங்கராசின் கருத்தை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது:-_ தங்கராசால் பகுத்தறிவு ஏட்டில் வெளியிடப்பட்ட கருத்து தனக்கோ திராவிடர் கழகத்துக்கோ உடன்பாடானது அல்ல என்று பெரியார் தெளிவுபடுத்தினார். மேலே குறிப்பிடப்பட்ட பெரியாரின் அந்த அறிக்கையானது மூன்றாவது வாதி (தங்கராசு) மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவரல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மூன்றாவது வாதியுடன் இணைந்துள்ள மற்ற வாதிகளும் தங்கராசு போன்றே பெரியாருடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் அல்ல.

(8)    (நான் மேலும் கூறுவது என்ன-வென்றால்) முதல் வாதியை (டி.எம்.சண்முகம்) 27.12.1974இல் கழகத்தின் தலைவராகிய ஈ.வெ.ரா.மணியம்மை திராவிடர் கழகத்திலிருந்து விலக்கிவிட்டார். ஏனென்றால் அந்த முதல்வாதி கழக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு கழக சம்பந்தமான முக்கிய நடவடிக்கைகளுக்குத் தன்னுடைய ஒத்துழைப்பைத் தராததுமே ஆகும். 27.12.1974இல் தன்னால் கையெழுத்திட்டு விடுதலையில் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் மேற்கண்ட தனது முடிவை கழகத் தலைவர் மணியம்மையார் வெளிப்படுத்தினார். இரண்டாவது வாதியும் (சிதம்பரம் கிருஷ்ணசாமி) மற்றும் சிலரும் கழகத்திலிருந்து, கழக எதிர்ப்பு நடவடிக்கைக்காக விலக்கப்பட்டார்கள். அவர்களை விலக்கிய செய்தி 17.10.1975 விடுதலையில் வெளியிடப்-பட்டுள்ளது. மூன்றாவது வாதியும் (தங்கராசு) அதுபோலவே அந்த விதமான கழக எதிர்ப்பு நடவடிக்கைக்காக 23.9.1975இல் கழகத்திலிருந்து விலக்கப்பட்டார் இவரை விலக்கிய செய்தி கழகத் தலைவர் கையெழுத்தோடு 23.9.1975 விடுதலையில் வெளியிடப்பட்டுள்ளது.

16.11.1975இல் திருச்சியில் கூடிய திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாக கமிட்டி திராவிடர் கழகத்திலிருந்து வாதிகளையும் மற்றும் சிலரையும் ஏற்கெனவே விலக்கியிருந்ததை ஒரு தீர்மானம் மூலம் தலைவரின் முடிவை ஒப்புக்கொண்டும் இருக்கிறது. (Ratified).

வாதிகள் தங்களைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டவுடன் வேறு ஒரு எதிர்ப்பு ஸ்தாபனத்தைத் தொடங்கினார்கள் என்று தெரிய வருகிறது. அந்த ஸ்தாபனத்திற்குக் குறிப்பிடத்தக்க ஆதரவாளர்களும் இல்லை. அந்த ஸ்தாபனத்திற்கு திராவிடர் கழகம் என்று அவர்களே பெயர் சூட்டிக் கொண்டார்கள். மூன்றாவது வாதியால் வெளியிடப்பட்ட பகுத்தறிவு என்னும் ஏட்டில் 4-.11.1975இல் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில் தங்களைத் திராவிடர் கழகத்தார் என்று கூறிக்கொள்ளும் அவர்கள் 26.10.1975இல் திருச்சியில் கூடி மறைந்த திருமதி ஈ.வெ.ரா. மணியம்மை மீதும் என் மீதும் நம்பிக்கை இல்லை என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்கள். மற்றும், இரண்டாவது வாதி, திருமதி ஈ.வெ.ரா. மணியம்மையாருக்குப் பதிலாக திராவிடர் கழகத் தலைவராகவும், மூன்றாவது வாதி எனக்குப் பதிலாக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தீர்மானமும், மற்றொரு தீர்மானத்தில் திராவிடர் கழகத்தினுடைய சொத்துக்கள், அது சம்பந்தமான தஸ்தாவேஜுகள், கணக்குகள், திராவிடர் கழக டெபாசிட்டுகள் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்தப் பகுத்தறிவு ஏட்டில் செய்தி வந்துள்ளது.

மேலே கூறப்பட்டவை எதைப் புலப்படுத்துகின்றன? வாதிகள் பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் அல்ல என்பதோடு திராவிடர் கழகத்துடன் எல்லாவிதமான தொடர்பையும் மேற்கூறியவாறு அறுத்துக் கொண்டவர்கள் ஆவார்கள் என்பதும் புலனாகிறது. அது மாத்திரமல்லாது அவர்கள் திராவிடர் கழகத்தின்பாலும் நிறுவனத்தின்பாலும் விரோத மனப்பான்மை உடையவர்களும் ஆவார்கள்.

– நினைவுகள் நீளும்

வியாழன், 24 அக்டோபர், 2024

சுயமரியாதைத் திருமணம்-நாகரிமடைந்த மனிதர்களின் திருமணம் – திராவிடப் புரட்சி

 


ஜனவரி 16-31

குடும்பம், அரசு, பொருளாதாரம், சட்டம், வழக்கம், ஒழுக்கம், சமயம்,கல்வி போன்ற நிறுவனங்களே ஒரு மனித சமூகத்தை ஒருங்கிணைக்கும் காரணிகள். இவற்றில் குடும்பம் என்ற நிறுவனமே சமூகத்தின் அடித்தளமாக, ஆணிவேராக இருக்கின்றது.

தமிழைப் பொறுத்தவரை கூடி இருக்கும் இடம் என்ற அடிப்படையில் குடும்பம் என்ற சொல் உருவாகியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, பேமிலி (family) என்ற சொல் பேமுலஸ் (famulus) என்ற சொல்லில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். பேமுலஸ் என்றால், வீட்டு அடிமை என்று பொருள். அதாவது, ஒரு தலைவனின்கீழ் இருக்கும் அடிமைகள் முறை என்று ஏங்கல்ஸ் தெரிவிக்கிறார்.

பொதுவாக, குடும்பம் என்பது திருமணத்தால் பிணைக்கப்பட்ட மனிதர்களின் குழு. இந்த குழுவில் உள்ள மனிதர்கள், ஒரே வீட்டில் இருப்பவர் களாகவும், உறவுத்தொடர்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். குடும்பம் என்பது சமூக அமைப்பிற்கு அடிப்படையாக இருப்பதோடு அல்லாமல், ஒருவருடைய காம உணர்விற்கு வடிகாலாகவும், அதனால் பிறக்கும் குழந்தைகள் மூலமாக ஒரு இனம் அழியாமல் நிலைக்கச் செய்யும் எற்பாடாகவும் இருக்கின்றது.

குடும்பம் என்ற நிறுவனத்திற்கு, அதாவது கணவன் மனைவி என்ற அமைப்பிற்குக் காரணமாக இருப்பது திருமணம். திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது.  திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு  குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். திருமண வாழ்க்கை முறை என்பது வரைமுறையற்ற பாலுறவில் தொடக்கி ஒருவன் ஒருத்தி பாலுறவு முறைவரை வந்துள்ளது. இன்னார் இன்னாரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நெறிமுறைகள் சமூக அமைப்புகளால் காலப்போக்கில் உருவாக்கப்பட்டன. தொடக்கத்தில் வரன்முறையற்ற பாலுறவு இருந்த காலத்தில், ஆண்களும் பெண்களும் யார் யாருடன் வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம் என்ற நிலை இருந்துள்ளது. இதுபோன்ற முறைகள் இருந்ததைப் பல்வேறு இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன.

மேற்சொன்ன நிலை பிறகு மாறி, பெற்றோருடன் அவர்களது பிள்ளைகள் கொண்ட பாலுறவு முறை தடை செய்யப்பட்டு அல்லது மாறி, சகோதர சகோதரிகளுக்கு இடையே திருமண உறவு ஏற்பட்டது. இது இரத்த உறவு குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.

அடுத்து, சகோதர சகோதரிகள் திருமண உறவு தடை செய்யப்பட்டு அல்லது மாற்றமடைந்து, ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரிகளையும் திருமணம் செய்துகொள்ளும் முறை வந்துள்ளது. இந்த முறை அந்தப் பொதுவான கணவர்கள், அந்தப் பெண்களின் சகோதரனாக இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

தற்காலக் கண்ணோட்டத்தின்படி, வரன்முறையற்ற பாலுறவாகக் கருதப்படும் இந்த முறை மாறியதே, பின்னாளில், திருமண உறவு முறைகள் ஏற்பட வழிகோலியுள்ளன. இந்தத் தடைகளுக்கு பல காரணங்களை அறிஞர்கள் முன்வைக்கின்றனர். அவை,

வேட்டை மனிதர்களாக இருந்தவர்களுக்கு இடையே, அதாவது ஒரே குடும்பமாக இருந்தவர்களுக்கு இடையே, தந்தை மகன் மற்றும் சகோதரர்களுக்கு இடையே ஒரே பெண்ணிற்காக போட்டியும் சண்டையும் ஏற்பட்ட காரணங்களால், அதனால் ஏற்படும் பிளவைத் தவிர்க்க இப்படிப்பட்ட தடை வந்திருக்கக்கூடும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, சிறுவயதில் இருந்தே ஒன்றாய்ப் பழகும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உளவியல் ரீதியாக பாலுணர்வு ஏற்படாத சூழலில் இப்படிப்பட்ட தடைகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது மாறியிருக்கக்கூடும்.

பல்வேறு அழிவுகள் காரணமாக, தேவையான வயதொத்த ஆண் பெண்கள் இல்லாத சூழலில், வேறு குடும்பத்தைச் சேர்ந்தவரோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் தடை வந்திருக்கக்கூடும் அல்லது மாறியிருக்கக்கூடும்.

தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ளும் சூழல் வந்திருக்கக்கூடும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்பின் தெரியாதவரைத் திருமணம் செய்யும் களவு முறையும், தனது இனத்தில் திருமணம் செய்யும் பெற்றோர் இசைவு மணமுறையும், ஜாதியில் நெருக்கமாக உள்ளவரோடு மட்டும் திருமணம் செய்யும் மணமுறையுமாக மூன்று வகைத் திருமண முறைகள் ஆதியில் இருந்துள்ளன. தம் இனத்தில் திருமணம் செய்வதை அகமணம் என்றும் வேறு இனத்தவரோடு திருமணம் செய்வதைப் புறமணம் என்றும் அழைக்கப்படுகிறது. குடும்பத் தலைமை உரிமை , தொழிலுரிமை, சொத்துரிமை ஆகிய மூன்றையும் காப்பாற்றிக் கொள்ள புறமணமுறை தடை செய்யப்பட்டு ஒரே இனக்குழுவுக்குள் மட்டும் திருமணம் செய்வதும், பெற்றோர் இசைவோடு மட்டும் திருமணம் செய்யும் முறையும் சமூகக் கட்டுப்பாடாக ஏற்படுத்தப்பட்டு, அது ஒரு மரபாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த மரபு தொடர்ந்து மீறப்பட்டதை அதாவது, பெற்றோரை மீறி காதலர்கள் உடன்போக்கு மேற்கொண்டதையும், உடன்போக்கு நடைபெறு வதைத் தடுக்க பெண்களை வீட்டிலே வெளியில் விடாமல் வைத்திருக்கும் இச்செறித்தல் என்றும் இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன.

தொடக்கத்தில் தாய்வழித் தலைமை இருந்தது. அப்போது குடும்ப அமைப்பில் பெண்கள் சொத்துக்கு உரிமை உடையவராக இருந்தனர். ஆண்கள் மனைவியின் வீட்டில் தங்கி இருக்க வேண்டியிருந்தது. குழந்தை பெறுவதற்கு ஆணும் ஒரு காரணம் என்று அறியாமல் இருந்தகாலமாக அது இருந்திருக்கக்கூடும். காலப்போக்கில், பெண்கள் குழந்தை பெறுவதும், மாதவிடாயினால் பணி செய்யமுடியாமல் போவதாலும், குழந்தையைக் கவனித்துக்கொண்டு இல்லத்தைப் பராமரிப்பவளாகவும் மாற, ஆண்கள் உழைக்கும் மற்றும் அதிகாரவர்க்கமாக மாறியபோது, குடும்பத்தின் தலைமை தாய்வழியில் இருந்து தந்தை வழிக்கு மாறுகின்றது. தந்தைவழித் தலைமை, திருமண உறவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. தலைமையைக் காப்பாற்ற புறமணத்தடை ஏற்படுகிறது. ஆணின் வாரிசுரிமையைச் சாத்தியமாக்கக்கூடிய பெண்ணின் கற்புநெறி குறைந்தபட்சத் தேவையாகிவிடுகிறது. பெண் கற்பு நெறியைக் கடைப்பிடிக்காவிடின், ஆணின் வாரிசுரிமைக்கு உத்தரவாதமில் லாமல் போய்விடும். இது தனியுடைமை சமூக அமைப்பை முற்றிலும் சீர்குலைத்துவிடும். எனவேதான், பண்டைய எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்தும் பெண்ணின் கற்பு நெறிக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன. இச்சமூகங்கள் கற்பு தவறிய பெண்களுக்குக் கடுமையான தண்டனைகளை வகுத்ததுடன், கற்பு தவறாமைக்கு மிகக் கடுமையான வழிமுறைகளையும் கைக்கொண்டன. இந்தச் சமூகக் கட்டமைப்பை யாரும் மாற்றிவிடாமல் இருப்பதற்காக, ஜாதிய அமைப்புகளை ஏற்படுத்தினர், ஜாதகம் பொருத்தம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதை, கடவுள் புராணக் கதைகள் மூலமாகப் பலப்படுத்தினர்.

இதனால், மனிதர்களின் சமூக வளர்ச்சி சிந்தனை முழுவதுமாக முடக்கப்பட்டது, பெண்கள் அடிமையானர்கள். மனிதர்களுக்கு இடையே பிறப்பால் சமூக ஏற்றத்தாழ்வும், பிறப்பால் தொழில் ஏற்றத்தாழ்வும், அதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு, பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் கல்வி மறுக்கப்பட்டது, அதனால் அறிவுடையோர் குறைந்தனர். புராண இதிகாச கடவுள் கதைகள் மற்றும் மூடநம்பிக்கைகளினால், இந்திய சமூகம் பின்தங்கிய அதாவது தேக்கநிலை அடைந்த ஒரு சமூகமாக மாறியது.   ஒரு சமூகத்தின் திருமண உறவுமுறை என்பது அந்தச் சமூகம் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகவும் இருக்கிறது. உலகின் முன்னேறியுள்ள பல நாடுகளில் உள்ள நாகரிகமடைந்துள்ள சமூகங்கள், பழைய திருமண முறைகளான, அகமணமுறை மற்றும் பெற்றோர் இசைவு மணமுறை இரண்டையும் விட்டுவிட்டன. திருமணம் செய்ய விரும்பும் ஆடவரும் பெண்டிரும் தங்களுக்குப் பிடித்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து மணந்துகொள்ளும் வழக்கமே இப்போது உள்ளது. மனித சமூகம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துவருகிறது. மனிதர்களின் அறிவியல் சிந்தனை, அவர்களைத் தொடர்ந்து அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. அதன் விளைவாக, தங்களின் அனைத்துப் பணிகளையும் எளிதாக்கி வருகின்றனர், அவர்கள் அச்சப்பட்ட அனைத்தையும் ஆராய்ந்து அச்சம் விலகுகின்றனர், தொடர் தேடலினால் தொடர் முன்னேற்றத்தில் மனித சமூகம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், மணமக்களில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே மணமக்களின் பெற்றோர்களால் மட்டும் முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வந்தது மற்றும் வருகிறது. இத்திருமணம் புரோகிதர்களைக் கொண்டு பல சடங்குகளைச் செய்து நடத்தி வைக்கப்பட்டது மற்றும் வைக்கப்படுகிறது.

இப்படிச் செய்யப்படும் திருமணத்தில் பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவராகவும், கணவனுக்கு உடலில், மனதில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் கடைசி வரை கணவனைக் காப்பாற்றும் விதமாக மனைவி கணவனுடனேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது மற்றும் இருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகளை முதன் முதலில் தகர்த்து புதிய சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டின் பகுத்தறிவுத் தந்தை பெரியா அவர்களால் 1929ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தந்தை பெரியாரும் அவரது கொள்கைவழி வந்தவர்களும் சுயமரியாதைத் திருமண முறையையே கடைப்பிடிக்கின்றனர்.

1955 ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பெரியாரின் முதன்மை மாணவர்களில் ஒருவரான அறிஞர் அண்ணா இதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இது சட்டமன்ற விவாதத்திற்குப் பின்பு அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு 17.-01.-1968இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று 20.01.-1968இல் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமாக்கப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் 08.06.1934 இல் சென்னை தோழர்கள், கற்பகம் அம்மாள் கே.கல்யாணசுந்திரம் ஆகியோருக்கு சென்னை சவுகார்பேட்டையில் நடத்திய சுயமரியாதைத் திருமணத்தில் ஆற்றிய உரையில், சுயமரியாதைத் திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமென்றும் அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும், ஆணையும் மாத்திரமே பொறுத்ததே ஒழிய வேறு எவ்விதத் தெய்வீகத்துக்கோ அல்லது எவ்விதக் கட்டுப்பாட்டுக்கோ சம்மந்தப்பட்டதல்ல என்பதே சுயமரியாதைக் கல்யாணத்தின் தத்துவமாகும் வாழ்க்கைக்கும் மனதுக்கும் ஏற்ற தம்பதிகளானால் கூடி வாழலாம். அவைகளுக்கு ஒவ்வாத வாழ்க்கையே நரகம் போன்றதான தம்பதிகளானால் பிரிந்து மனதிற்கு ஏற்றவர்களை மணந்து இன்பசுக வாழ்வு வாழ உரிமை உண்டு என்பதோடு புருஷனோ மனைவியோ யார் இறந்துபோனாலும் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறது

இங்கு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் கல்யாணம் செய்துகொண்டார்களே ஒழிய ஆணும் ஆணும் சேர்ந்தோ, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ கல்யாணம் செய்துகொள்ளவில்லை. ஆதலால் இவ்விதத் திருமணத்தைப் பற்றி யாரும் கவலையோ ஆத்திரமோ படவேண்டியதில்லை என்கிறார்.

எனவே, சுயமரியாதைத் திருமணம் என்பது நாகரிகம் அடைந்த மனிதர்களின் திருமண முறை என்பது தெளிவாக விளங்குகிறது.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், சுயமரியாதைத் திருமணமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே தங்களை நாகரிகமடைந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காட்டிக் கொள்ள முடியும்.