சனி, 19 ஆகஸ்ட், 2017

நாவலர் பாரதியார் பிறந்த நாள் ஜூலை 27



நாவலர் சோமசுந்தர பாரதியார் பன்மொழிப் புலவர் _ 1938இல் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் வளர்ந்தெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தளபதிகளாகத் திகழ்ந்தவர்களுள் இப்புலவரும் முக்கியமானவர்.

“இந்தி வேண்டாம் வேண்டாம் என்று நான் அறைகூவிச் சொல்கிறேன். வேண்டாம் என்பதற்கு ஆயிரம் காரணமுண்டு. வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாவது உண்டா? எந்த அமைச்சருடனும் நான் வாதாடத் தயார்! யாரேனும் வருவார்களா?’’ என்று சூளுரைத்த தீரர் அவர்.

கட்டாய இந்தி வேண்டும் என்பதற்கு அமைச்சர்கள் கூறிய போலிக் காரணங்கள் எல்லாவற்றையும் மறுத்து, இந்தி ஏன் வேண்டாம்? என்பதற்குரிய பல்வேறு காரணங்களையும் தொகுத்து 24 பக்கங்களைக் கொண்ட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட திறந்த மடல் ஒன்றை பிரதம அமைச்சர் ஆச்சாரியாருக்கு (ராஜாஜிக்கு) அவர் எழுதியது _ அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்றாகும். ஒரு வார காலம் தொடர்ந்து சென்னையில் சொற்பொழிவாற்றி (13.8.1939 _ 20.8.1939) இந்தி எதிர்ப்பின் சூட்டைக் கிளப்பினார்.

திருச்சியில் இந்திப் போர் மந்திராலோசனைக் கூட்டத்தில், (28.5.1938) “சத்தியாக்கிரகம் அதில் வெற்றியில்லையேல், சட்ட மறுப்புதான்’’ என்று சங்கநாதம் செய்த வீரத்திருமகன் அவர். அன்றுமுதல் 1939 முடிய சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியத்தின் (High Command) தலைவராக விருந்தார்.

குறிப்பு: நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மகள்தான் மறைந்த டாக்டர் லலிதா காமேசுவரன் _பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரன் அவர்களின் தாத்தாவும் ஆவார்.

-உண்மை இதழ்,16-31.7.17

 


டாக்டர் முத்துலட்சுமி நினைவு நாள் ஜூலை 22


இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகிய  (Doctor) முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் ஜூலை 22. இன்னொரு சிறப்பும் இவருக்கு உண்டு. உலகளவில் சட்டமன்ற துணைத் தலைவராக வந்த முதல் பெண்மணியும் இவரே.

பெண்கள் அந்தக் காலத்தில் அதுவும் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால், அது சாதாரணமான ஒன்று அன்று. புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதி பெற்று கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் தன்னந்தனியான பெண்ணாகப் படித்துத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக லண்டன் சென்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

அம்மையார் -ஏடு ஒன்றினை நடத்தினார். அதன் பெயர் “ஸ்த்ரி தர்மா’’ என்பதாகும். பெண்கள் பிரச்சினை, சமூக அவலங்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்தார். அரசின் நல்ல திட்டங்களை ஆதரித்தும், கேடு பயப்பவைகளை எதிர்த்தும் கட்டுரைகளைத் தீட்டினார்.

நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அம்மையார் ஒருமனதாக சென்னை மாநில மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் அதன் துணைத் தலைவராகவும் ஒளி வீசினார். தேவதாசி ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயது உயர்த்தும் சட்டம் இவற்றிற்காகப் பெரும் குரல் கொடுத்தார். குறிப்பாக தேவதாசி ஒழிப்புச் சட்டம் (பெண்களுக்கு பொட்டுக்கட்டி கோவிலுக்கு விடுவதை ஒழித்த சட்டம்) அம்மையாரை என்றென்றும் நினைவு கூரச் செய்வதாகும்.

இந்தச் சட்டத்தை அம்மையார் கொண்டு வந்தபோது, இது தெய்வ காரியத்தில் தலையிடுவதாகும் _ இந்த ஜென்மத்தில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சத்தியமூர்த்தி அய்யர் வாய் நீளமாகப் பேசினார். ‘அப்படியா? இதுவரை எங்கள் ஜாதியினர் மோட்சம் அடைந்தது போதும்; வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஜென்மத்தில்  தேவதாசிகளாக இருந்து அடுத்த ஜென்மத்தில் மோட்சத்தை அடையட்டுமே!’ என்று போட்டாரே ஒரு வெடிகுண்டு. சத்தியமூர்த்தி அய்யர்கள் சப்தநாடியும் அடங்கிப் போனார்கள்.
-உண்மை இதழ்,16-31.7.17

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மாயவரம் சி. நடராசன் நினைவு நாள் 10.07.1937


“பணம், காசைப்பற்றியோ தண்டனைகளைப் பற்றியோ, துன்பம் தொல்லைகளைப்-பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்-படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி’’ என்று ‘குடிஅரசு’ இதழால் பாராட்டு வழங்கப்பட்டவர் மாயவரம் சி.நடராசன். பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்னையில் ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். 

ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து கட்டுரைகளை குடிஅரசுக்குத் தந்தவர்.
அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல கலவரங்களில் ஈடுபடுவார்கள்; அந்த நேரத்தில் எல்லாம் மாயவரம் சி.நடராசன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்தாடுவார். நாகைமணி, திருவாரூர் தண்டவாளம் அரங்கராசு என்ற ஒரு படையே அவ்வாறு இருந்ததுண்டு.

சர்க்கஸ் கம்பெனியில் ஓராண்டுகாலம் சாகசங்கள் புரிந்து, பின் இராணுவத்துக்குச் சென்று, நாடு திரும்பி, காங்கிரசிலும் சேர்ந்து, தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை விட்டு வெளியேறியதையொட்டி தந்தை பெரியாருடன் நடந்தவர் மாயவரம் நடராசன்.

‘வெற்றி முரசு’ என்ற ஏட்டையும் நடத்தியுள்ளார். மாயவரத்தில் இம்பீரியல் பிரஸ் இவருக்குச் சொந்தமானது.

தந்தை பெரியார் அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அன்னை நாகம்மையார் உடல் நலிவுற்ற நிலையில், அவர்களை மாயவரம் அழைத்து வந்து தம் வீட்டில் தங்க வைத்து வைத்திய உதவிகளைச் செய்தவர்.

குறிப்பு: மயிலாடுதுறையில் (9.3.2002), மாயவரம் நடராசன் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் தலைமையில் வெகுசிறப்பாக திராவிடர் கழகத்-தின் சார்பில் கொண்டாடப்பட்டது.
-உண்மை இதழ்,1-15.7.17

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் 07.07.1859


அன்றைய செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகத்தை அடுத்த கோழியானூர் கிராமத்தில் இரட்டை மலை என்னும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் இரட்டை மலை சீனிவாசன் (1860 ஜூலை 7).

தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பெம்மான் இவர்.
1893இல் பறையன் என்ற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். மூன்று மாதம் மாத இதழாகவும், அதன்பின் வார இதழாகவும் 7 ஆண்டு காலம் தொடர்ந்து அவரால் நடத்தப்பட்டது. தன் சமுதாயம் வெளிப்படையாக அடையாளம் காட்டப்பட்டு இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டார்.

1891 இல் ஆதிதிராவிட மகாசபையில் சேர்ந்து செயல்பட்டு, பின்னர் அந்த அமைப்பின் செயலாளராக இருந்து அரும்பணியாற்றினார். 1923 இல் சட்ட சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு நீதிக் கட்சி ஆட்சியைப் பயன்படுத்தி பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள் ஆகியவற்றில் தாராளமாக தாழ்த்தப்பட்டவர்கள் புழங்கிட வழிவகை செய்தார். ஒரு முக்கியமான தகவலைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.

1895 ஆம் ஆண்டில் லண்டனில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. அத் தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் வெள்ளைக்காரர்களே! அவர்களில் இருந்துதான் மாவட்ட ஆட்சியர், நீதிபதிகள் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு வந்தனர். 

அத்தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று லண்டன் பார்லிமெண்டுக்குக் காங்கிரஸ் சார்பில் மனு ஒன்றை அனுப்பினர்.

இதற்கு அதிகாரப் பூர்வமான எதிர்ப்பைத் தெரிவிக்கக் காரணமாக விருந்தார் இரட்டை மலை சீனிவாசன். 112 அடிநீளமுள்ள ஒரு மனுவைத் தயாரித்து அதில் 3412 பேர்களின் கையொப்பங் களைப் பெற்றார்.

இந்தத் தேர்வு இந்தியாவில் நடந்தால் உயர்ஜாதி இந்துக்களான பார்ப்பனர்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து, ஏழை ஜாதியினரை, தாழ்த்தப்பட்டோரை இம்சை செய்வார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜெனரல் சர் சார்ஜ் செஸ்னி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் இந்த மனுவை அனுப்பி வைத்தார்.
-உண்மை இதழ்,1-15.7.17

வியாழன், 20 ஜூலை, 2017

" திராவிட லெனின் " டாக்டர் டி.எம். நாயர்



*  நீதிக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் டாக்டர் நடேசனார், சர். பிட்டி தியாகராயருக்குப் பின் மூன்றாவது பெரிய தலைவர் தாரவார்ட் மாதவன் நாயர் ஆவார்.

* கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள திரூருக்குப் பக்கம் உள்ள தாரவார்ட்டில் சங்கரன் நாயரின் மகனாகப் பிறந்தார்.

* எல்லாப் பாடங்களிலும், எல்லாத் தேர்வுகளிலும் முதலிடத்தில் தேறிய நாயர், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், பின்பு இங்கிலாந்திலும் மருத்துவம் பயின்று  விறிசிவி என்ற உயர்ந்த பட்டம் பெற்றார். பின்பு பிரான்சிலும் பயின்று  ENT மருத்துவத்தில் பட்டமும், எடின்பரோ பல்கலையில் வி.ஞி.யும் படித்து மருத்துவத்தில் சாதனை படைத்தார்.

* சென்னை திரும்பி  "Anti Septic" என்ற சென்னை ராஜதானியின் முதல் மருத்துவ இதழை நடத்தினார்.  "விணீபீக்ஷீணீs ஷிtணீஸீபீணீக்ஷீபீ" என்ற ஆங்கில நாளேட்டிற்கும் ஆசிரி யராக இருந்தார்.

* பொது வாழ்வில் தீவிர ஈடுபாடு கொண்டு காங்கிரசில் பணியாற்றிய டாக்டர் நாயர் 1904 முதல் 1916 ஆவது ஆண்டு வரை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் காலத்தில்   Madras Medical Registration Act எனும் சட்டத்தைக் கொண்டு வந்து மருத்துவத் தொழில் செய்வதை ஒழுங்குபடுத்த வகை செய்தார்.

* ஆறரை அடி உயரமும், கம்பீரத் தோற்றமும் கொண்ட  டாக்டர் நாயரின் பொது வாழ்வில் சந்தேகம் இல்லாமலும், சுயமரியாதையோடும் பணியாற்றினார். 1908ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதிக் கோவில் குளத்திற்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டுமென்ற அன்றைய மாநகரத் தந்தை தியாக ராயர் தீர்மானத்தை எதிர்த்த நாயர் அப்படி செய்தால் மிகுந்த வருமான இழப்பும், தவறான முன்னுதாரண மாகவும் ஆகிவிடும் என்றார். சிலர் இதற்காக அவரைக் கடுமையாக விமர்சித்தும், பதவி விலக வேண்டும் என்றும் எழுதியும், பேசியும் வந்ததை அறிந்த டாக்டர் நாயர் நேர்மையாகவும், நாணயமாகவும் பாடுபடுவர் களுக்கு சென்னை மாநகராட்சியில் இடமில்லை என்று கூறி பதவி விலகினார்.

* காங்கிரசில் இருந்த  டாக்டர் நாயர் 1915இல் டில்லி இம்பீரியல் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் தோல்வியுற்றதே அவரது பொது வாழ்வில் அவரை நீதிக் கட்சியின் பக்கம் திரும்ப வைத்தது.

* அப்போது  டாக்டர் நடேசன், சர்.பிட்டி தியாகராயர் ஆகியோர் டாக்டர் நாயரைச் சந்தித்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் சேரவற்புறுத்தி அவரை இயக்கத்தில் சேர்த்தனர்.

* டாக்டர் அன்னிபெசன்ட் பற்றியும், அவரின் நோக்கம் பற்றியும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை பற்றியும் "Madam Besant" 
என்ற நூலை எழுதி Higgin Bothams  நிறுவனத்தால் வெளியிடச் செய்தார். இதனால் கோப முற்ற பெசன்ட் தாக்கல் செய்த வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.

*  10-11-1917 அன்று மாண்டேகு - செம்ஸ் போர்டு சென்னை வந்து புதிய ஆட்சி அமைப்பது பற்றி பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்திக்க வந்த போது  டாக்டர் நாயர், நடேசனார், சர். பிட்டி தியாகராயர் ஆகியோரைச் சந்தித்து Non Brahmin Reservation பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் அதைப் பற்றி பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதன் பின்னணியில் சர்.சி.பி.ராமசாமி அய்யரும்,பெசன்ட் அம்மையாரும்இருந்தார்கள்.

* டாக்டர்  நாயர் இது பற்றி வலியுறுத்த இங்கிலாந்து சென்றார். ஆனால் அவர்  எந்தப் பொதுக் கூட்டத்திலும் லண்டனில் பேசக்கூடாது என்று காங்கிரசாரும், சுயராஜ்யக் கட்சியினரும் நெருக்கடி தந்ததை முறியடித்து வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.

* சுயராஜ்யம் பெறுவதே நம் லட்சியம் என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னபோது, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக  ஆட்சியில் பங்கு பெற்று சரிசமாக வாழ்வதே உண்மை யான சுயராஜ்ஜியம் என்று தன் கம்பீரக் குரலால் கர்ஜனை புரிந்தவர்  டாக்டர் நாயர்.

* ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பங்களிப் பில்லாமல் நீதிக்கட்சி வேரூன்ற முடியாது என்ற நாயர் 7-10-1917இல் சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் ஆற்றிய வீர உரையால் சென்னை வாழ் தாழ்த்தப்பட்ட இயக்க நிர்வாகிகள் பெருவாரியாக நீதிக் கட்சியை ஆதரிக்க முன் வந்தனர். "நீதிக்கட்சி வரலாறு" புத்தகத்தில் ஆய்வாளர் 
க.திருநாவுக்கரசு இந்த உரையினை முழுவதுமாகப் பதிவு செய்துள்ளார்.

* 1910இல் அயோத்திதாசர் நாயரின் பணிகளைப் பாராட்டி எழுதியுள்ளார் எம்.சி. ராஜா குறை கூறாத ஒரே நீதிக் கட்சித் தலைவர் நம் நாயரே.
* நீதிக்கட்சி 1920இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு நாயரின் பணி அடித்தளமிட்டது.

* காங்கிரசிலிருந்து விலகி தீவிரமாக நீதிக் கட்சியை ஆதரித்து வந்ததற்காக  டாக்டர் நாயரை திரு.வி.க. தன் தேசபக்தனில் திட்டித்தீர்த்தார். "தேசிய கவி" பாரதியும் நாயரை சகட்டுமேனிக்கு விமர்சித்து அவரை வகுப்பு வாதி என்றார். இதன் மூலம் நாயரின் இயக்கப்பற்று வெளிப்படும்.

* 1918இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தன்னந்தனியாக பார்ப்பனரல்லாதார் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியாகவும் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பது பற்றி விரிவாக விளக்கினார்.

* 1919இல் மீண்டும் தன் நியாயமான வகுப்புரிமைக் கொள்கையை வலியுறுத்த லண்டன்  நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் உரையாற்றச் சென்றார். 18-07-1919 அன்று அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் (17-07-1919)  டாக்டர் நாயர் முடிவெய்தினார்.   நிஷீறீபீமீக்ஷீs நிக்ஷீமீமீஸீ  என்ற இடத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.
* தான் வாழ்ந்த 51 ஆண்டுக் காலத்தில் திருமணம் என்ற எண்ணம்கூட எழாமல் படிப்பு, பொது வாழ்வு என்று திறந்த புத்தகமாய் வாழ்ந்தார் டாக்டர் நாயர்.

* பல்வேறு இதழ்கள், சங்கங்கள், அய்ரோப்பிய தலைவர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாலும் காங்கிரசின் எந்தப் பிரிவு தலைவர்களும்  டாக்டர் நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதே அவரது கொள்கை உறுதியைப் பறைசாற்றும்.

* டாக்டர்  நாயரின் மறைவுக்குப் பின் அவர் எதிர்பார்த்த நீதிக்கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு சாதனைகளை சமூகத்திலும், அரசியலிலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தில் செய்து சாதனை படைத்தது.
வாழ்க டாக்டர் டி.எம். நாயர்.

-விடுதலை,17.7.17
.

சனி, 1 ஜூலை, 2017

இராவண காவியம் படைத்த "புலவர் குழந்தை''

வரலாற்றில் இன்று
    ஜூலை 1
அறிவுலகம் ஒப்புமாறு இராவண காவியம் படைத்த "புலவர் குழந்தை "யின் பிறந்த நாள்.
அவர் பற்றிய சில தகவல்கள்
   _ சு.குமாரதேவன் -
*இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று திராவிட இயக்கத்தவர் கூறும் முன்பே பல ஆய்வறிஞர்கள் நன்கு ஆராய்ந்து சொன்னார்கள்.14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் என்ற பெயர் கொண்ட புலவர் முதல் நேரு முதல் பல்வேறு தாப்பட்ட அறிஞர்கள் உறுதியாகத் தெரிவித்தார்கள்.
* தீ பரவட்டும், நீதி தேவன் மயக்கம், கம்ப ரசம், ராமாயணப் பாத்திரங்கள், இராமாயணம் நடந்ததா? என்று பல்வேறு நூல்கள் வெளிவந்தாலும், கம்பன் கவிநயம் பற்றியும் கம்பராமா யணம் பற்றியும் புகழ்ந்த நூல்கள் ஏராளம்.
* திராவிட இயக்கத்தவர் காவியச் சுவையறியாதவர்கள், இலக்கிய இன்பம் பற்றி தெரியாதவர்கள் என்று இகழ்ந்தவர்கள் முகத்தில் "இராவண காவியம் " என்ற அரிய நூலைப் படைத்துக் கரி பூசியவர் புலவர் குழந்தை.
* 1906ல் ஓலவலசு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இயல்பிலேயே கவிபுனையும் ஆற்றல் பெற்ற குழந்தை திராவிட இயக்கத்தில் ஈடுபட்டுப் பணியாற்றியவர்.
* 39 ஆண்டுகள் தமிழாசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
* எழுத்தாற்றலுடன் பேச்சாற்றலும் கொண்ட புலவர் 1930ல் ஞானசூரியன் எழுதிய சிவானந்த சரஸ்வதியுடன் பொதுவில் 4 நாட்கள்வாதிட்டு கடவுள் இல்லை என்று  நிலை நாட்டினார்.
* 1946ல் மிகக் குறுகிய காலத்தில் இயற்றிய இராவண காவியம் 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள் கொண்ட அரிய காவியமாகும். தமிழின் சுவையை அறிய வேண்டுமாயின் இராவண காவியம் படித்தால் போதும்.
* பழமைக்குப் பயணச்சீட்டு புதுமைக்கு நுழைவுச் சீட்டு என்று அண்ணா தனது அணிந்துரையில் கூறுவார். கலைஞர் ஆராய்ச்சி முன்னுரை ஒரு சீரிய ஆய்வாளரின் நோக்கில் அமைந்துள்ள ஒன்று.
* இனியொரு கம்பன் வருவானா இப்படியும் கவி தருவானா என்றிருந்தேன். கம்பனே வந்தான் கவிதையும் தந்தான், ஆனால் கருத்து தான் மாறுபட்டது என்று பெரும் புலவர் அய்யம் பெருமாள், இராவண காவியம்பாடிய குழந்தை பற்றி போற்றிப் பாராட்டினார்.
* திருக்குறள், கம்பராமாயணம், பெரிய புராணம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள் "உலகு" என்று தொடங்குவது போல் இராவண காவியமும் "உலகம் ஊமையா உள்ள அக்காலையே" என்று தொடங்கினார்.
* 1946ல் எழுதிய இராவண காவியம் 1948ல் ஓமந்தூரார் தலைமையிலான காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பின் கலைஞர்17-05-1971
அன்று தடையை நீக்கினார். பின்பு புலவர் குழந்தையின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமையாக்கினார்.
* முதல் முதலில் புரட்சிக் கவிஞரின் "இரணியன் அல்லது இணையற்ற வீரன்" என்ற நூல் தான் அரசினரால் தடை செய்யப்பட்டது. பின்னர் இராவண காவியம், ஆரிய மாயை, காந்தியார் சாந்தி யடைய என்று பல நூல்களும், M.R.ராதாவின் நாடகங்களும் தடை செய்யப்பட்டன.
* கருத்துரிமைக்கு அதிக விலை கொடுத்தது திராவிடர் இயக்கத்தவரே.
* 1948ல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு அரிய ஆய்வுரை நிகழ்த்தியதோடல்லாமல் திருக்குறளுக்கு உரையெழுதினார். திருக்குறள் குழந்தையுரை ஆய்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படுவதாகும்.
* திருக்குறளும் பரிமேலழகரும் என்ற இவரது ஆய்வு நூல் போல் இன்னொரு ஆய்வு நூல் வருமா என்பது கேள்விக்குறியே.
* இராவண காவியம் தடை நீங்கிய பிறகு பல இடங்களில் இராவண காவிய மாநாடுகள் நடந்தது. அதில் பெரியார், கலைஞர், நாவலர், பேராசிரியர், மணியம்மையார் ஆசிரியர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு புலவரின் புகழ் பரப்பினர்.
* அரசியலரங்கம், யாப்பருங்கலக்காரிகை, உலகப் பெரியோன் கென்னடி என்று 60 நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிய புலவர் இறுதி வரை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத திராவிடர் இயக்கப் பெருமகன்.
* சென்னை, திருச்சி . காரைக்குடி, தஞ்சை என்று பல்வேறு ஊர்களில் இராவண காவிய மாநாடுகள், தொடர் சொற்பொழிவுகளை திராவிடர் கழகம் இன்றளவும் நடத்தி புலவர் குழந்தைக்குப் பெருமை சேர்த்து வருகிறது.
வாழ்க புலவர் குழந்தை.
அறிவோம் இராவண காவியம்.

புதன், 28 ஜூன், 2017

மூவலூர் இராமாமிர்தம் அம்மைய்யார்



தேவதாசி முறை ஒழிப்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்!

திருவாரூருக்கு அருகில் பாலூரில் 1883ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி _ சின்னம்மாளின் மகளாகப் பிறந்தார். கிருஷ்ணசாமி மனவேதனை-யில் வீட்டை விட்டுச் சென்றுவிட, வறுமையில் வாடிய சின்னம்மாள் குழந்தையை (இராமாமிர்தத்தை) 10 ரூபாய் பணத்துக்கும் ஒரு பழைய புடவைக்கும் தாசிலகுல பெண்ணிடம் விற்றுவிட்டார்.

அப்போது இராமாமிர்தத்திற்கு வயது 5.

இவருக்கு 7 வயதானதும் தாசித் தொழிலில் ஈடுபடுத்த சடங்கு செய்தனர். மூவலூரில் உள்ள திண்ணைப் பள்ளியில் படித்தார், கூடவே சுயம்பு பிள்ளையிடம் நாட்டியம் பயின்றார்.

ஆடல்பாடலில் வல்லவரானார். 17 வயதான நிலையில் 60 வயது கிழவர் இவரைத் திருமணம் செய்ய முயன்றபோது, இவர் தன் குருவான சுயம்பு பிள்ளையைத் திருமணம் செய்து-கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன், செல்லப்பா என்று இரு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்தன.

இராமாமிர்தம் தொடக்க காலத்தில் தந்தை பெரியாருடன் காங்கிரஸ்காரராகப் பணியாற்றினார். காஞ்சிபுரம் மாநாட்டில் காங்கிரஸைவிட்டு பெரியார் வெளியேறியபோது இவரும் வெளியேறினார். பின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் தந்தை பெரியாருக்குப் பெருந்துணையாய் இருந்தார். சுயமரியாதை மாநாடுகளுக்கு, தேவதாசிப் பெண்களை அதிகளவில் அழைத்துவந்தார்.

தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கியக் கொள்கையாய் இருந்தது. 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் அம்மையார் கலந்துகொண்டார். இந்தி எதிர்ப்பு முதல் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

முத்துலட்சுமி ரெட்டியின் முன்னோடி:-

தேவதாசி முறை ஒழிப்பில் முத்துலட்சுமி ரெட்டிக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முன்னோடியாவார். காங்கிரஸில் இருக்கும்போதே 1925இல் மாயவரத்தில் (மயிலாடுதுறை) தேவதாசி ஒழிப்பு மாநாடு கூட்டினார். கட்டுரை, கதை போன்றவற்றை எழுதி விழிப்பூட்டினார்.

‘குடிஅரசு’ இதழில் (13.12.1925) “தேவதாசிகளுக்கு ஓர் எச்சரிக்கை’’ என்ற கட்டுரையில் தன் சொந்த அனுபவங்கள் பற்றி எழுதி விழிப்பூட்டினார்.

தந்தை பெரியாரும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் ஊட்டிய விழிப்புணர்வின் விளைவாய் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி முறை ஒழிப்பை சட்டபூர்வமாகச் செய்ய முனைந்தார். சட்டசபையில் மசோதா கொண்டுவந்து, சத்தியமூர்த்தி அய்யரின் எதிர்ப்பையும் வென்று சட்டத்தை நிறைவேற்றினார். இதற்கு மூவலூர் அம்மையார் முழு ஒத்துழைப்பையும் தந்தார்.

“தாஸிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’’ என்ற நாவலையும், “தமயந்தி’’ என்ற சிறுகதையும் எழுதினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். 14.11.1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்றமைக்கு கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

எண்பது வயதைக் கடந்த அம்மையாரின் பொதுப்பணி அளவிடற்கரியது. தாய்க்குலத்-திற்கும், தமிழ்மொழிக்கும், சமுதாயப் புரட்சிக்கும், தன்மான இயக்கத்திற்கும் அவர் இறுதிவரை உழைத்தவர் என்ற சிறப்புக்குரிய இப் பெருமாட்டி 27.6.1962ஆம் நாள் மறைந்தார்.

‘அறப்போர் இதழ்’, ‘அம்மா போய்-விட்டார்கள்’ (6.7.1962, பக்கம் 2) என்று அவர் மறைவுச் செய்திக் கட்டுரை வெளியிட்டு, அவருடைய சிறப்புகளை நினைவு கூர்ந்துள்ளது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மறைவுக்கு 27.06.1962ஆம் நாள் ‘முரசொலி’ இதழில் எழுதிய தலையங்கத்தில்,

வீரத்தாயை இழந்தோம்

பால் நுரைபோல் தலை

தும்பை மலர் போல் உடை!

கம்பீர நடை!

கனல் தெறிக்கும் பேச்சு!

அனல் பறக்கும் வாதத்திறன்!

அநீதியைச் சுட்டெரிக்க சுழலுகின்ற கண்கள்!

அடிமை விலங்கு தகர்த்தெறிய ஆர்ப்பரிக்கும் உள்ளம்!

ஓயாத பணி! ஒழியாத அலைச்சல்!

என்று பாராட்டினார்.

-உண்மை,16-30.6.17