சனி, 24 நவம்பர், 2018

செங்கல்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாடு

25.08.1929 - குடிஅரசிலிருந்து... சுயமரியாதை இயக்கத்தின் சமய சமுக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்குச் செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மா னங்களே போதிய அத்தாட்சியாகும். அதைக் கொண்டேதான் தேசியவாதிகள், மதவாதிகள் என்பவர்களும் கூட்டம் போட்டு பேசுகின் றார்கள். ஆகவே அதைப் பற்றி சிறிது யோசிப் போம்.

1.            செங்கற்பட்டு தீர்மானங்கள் என்ன வென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் ஜாதிபேதம் கிடையாது என்பது.

2. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம் புராணம் முதலியவைகளை பின்பற்றக் கூடாது என்பது.

3. வர்ணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது. 4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொது குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொதுஜனங் களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டுமென்பது.

5. இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

6. ஜாதி, மத வித்யாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது என்பது.

7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும். மனைவிக்கும் புருஷனுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்துகொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்துகொள்ளலாம். ஆண், பெண் தாங்களே ஒருவரைஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.

8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும் அதிக செலவில்லாமலும் ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும் ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.

9. கோயில் பூஜை விஷயத்தில் கோவில் களின் சாமிக்கென்றும் பூஜைக்கென்றும் வீணாகக் காசை செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.

புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத் திற்கும் வேதம் படிப்பதற் கென்றும் விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களைக் கல்வி ஆராய்ச்சி கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய் யும்படி கேட்டுக் கொள்ளுவது.

உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத் தையும் நேரத்தையும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளா தார உணர்ச்சி ஆகியவை களுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.

10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களைப் பகிஷ்கரிப்பது என்பது.

11. பெண் உரிமை விஷயத்தில்; பெண் களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும் படி பார்ப்பது என்பது.

12. தீண்டப்படாதார் விஷயத்தில், தீண்டப் படாதார்களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப் பது என்பது.

13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்குக் கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும் தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.

14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தைச் செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியைச் செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.

15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.

மேலும் இவைகளும் அநேகமாக சிபாரிசு செய்வது, கேட்டுக் கொள்ளுவது, முயற்சிக்க வேண்டியது என்கின்ற அளவில் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றதே அல்லாமல் திடீரென்று நிர்ப்பந்தமாய் தீர்மானிக்கப் படவில்லை. எனவே, இவற்றுள் எவை எவை நாத்திகம் என்றும், எவை எவை அந்நிய சர்க்காரை ஆத ரிப்பது என்றும் எவை எவை தேசியத்திற்கும், காங்கிரசிற்கும் விரோதமானவை என்றும் எந்த யோக்கியமான தேசியவாதியோ, அல்லது ஆத்திகவாதியோ, வீரத்துடன் வெளிவரட்டும் என்றுதான் அறைகூவி அழைக்கின்றோம். உண்மை விஷயங்களைச் சொல்லாமல் பொதுப்பட சுயநலப்பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி கிளிப்பிள்ளையைப் போலும் பிறவி அடிமையைப் போலும், கூப்பாடு போடுவதனாலேயே சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பு கோழைத் தன்மை உடையது என்று, சுயநலமும் கூலித் தன்மையும் கொண்ட இழி தகைமையது என்றும் அறிவினர்க்கு தற்றென விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.

எது எப்படி இருந்தபோதிலும் விதவை மணம், கலப்பு மணம், கல்யாண ரத்து, தக்கவயது மணம், பட்டம் குறிவிடுதல், பெண் கல்வி, தீண்டாமை விலக்கல், சுருக்கக் கல்யாணம், வகுப்பு உரிமை, மூடப்பழக்கங்களை ஒழித்தல், கோவில் கட்டுவதையும் உற்வசங்கள் செய்வ தையும் நிறுத்தி அந்தப் பணத்தை கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் செலவிடுதல் முதலாகிய காரியங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பலனாய் சமீப காலத்திற்குள் எவ்வளவு தூரம் காரியத்தில் பரவி வந்திருக்கின்றது, வருகின்றது என்பதும் இவ்விஷயங்களில் பொதுமக்களுக்கு எவ் வளவு தூரம் மனம் மாறுதல் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது என்பதும் இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எவ்வளவு தூரம் தானாகவே அழிந்துபட்டு வருகின்றது என்பதும் பொது வாழ்க்கையைக் கவனித்து வருபவர் களுக்கு நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கி வருகின்றது. அன்றியும் இவ்வியக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நாட்டில் இருக்கும் ஆத ரவை பரீட்சிப்பதற்கு இவ்வியக்க சம்பந்தமான பத்திரிகைகள் வளர்ச்சியையும் ஜில்லாக்கள் தோறும் தாலுகாகள் தோறும் நடைபெறும் மகாநாடுகளும் அங்கு கூடும் கூட்டங்களும் கூட்டங்களுக்கு வரும் மக்களின் யோக்கியதைகளும் அவற்றில் ஏகமனதாய் நிறைவேறும் தீர்மானங்களும் ஆகியவற்றையும் இவைகளுக்கு எதிரிடையாய் இருக்கும் கட்சிகளுடைய, கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும் மக்களுடைய யோக்கியதைகளையும், நிலைமைகளையும் கவனித்து நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால் எது மதிக்கப்படுகின்றதென்பது சிறு குழந்தையும் அறிய முடியும்.

நிற்க; தற்போது உலகத்தில் முன்னேறிவரும் எந்த தேசத்திலாவது மேலே குறிப்பிட்டக் கொள்கைகள் இல்லாமல் இருக்கின்றதா? யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் மேற்கண்ட கொள்கைகள் நமது நாட்டில் இதற்கு முன் பல பெரியார்களாலும் சீர்திருத்தக் காரர்களாலும் சொல்லப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும் வந்ததுதானா, அல்லது நம்மால் மாத்திரம் இப்போது புதிதாய் சொல்லப்படுவதா என்றும் கேட்கின்றோம். பொதுவாக இப்போது புதிதாக உள்ள வித்தியாசமெல்லாம் முன்னுள்ளவர்கள் வாயினால் சொன்னார்கள்; புத்தகங்களில் எழுதினார்கள். ஆனால், நாம் இப்போது அவைகளைக் காரியத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றோம். நம்முடைய ஆயுளிலேயே இவைகள் முழுவதும் அமலில் நடைபெற வேண்டுமென்று உழைக்கின்றோம். அவற்றுள் சிறிது பாகமாவது நடைமுறையில் காணப்படுகின்றது. இவை களைத் தவிர வேறு எவ்வித வித்தியாசங்கள் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். ஆகவே, பொது ஜனங்கள் தயவு செய்து இவைகளை எல்லாம் நன்றாய் கவனித்து தங்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, இதன் குணதோசங்களை உணர்ந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டு மாயும், வந்த முடிவை காலந்தாழ்த்தாமல் அமலுக்குக் கொண்டு வர வேண்டுமாயும் ஆசைப்படுகின்றோம்.

- விடுதலை நாளேடு, 24.11.18

வியாழன், 22 நவம்பர், 2018

பெரியார் சிந்தனைத் தொகுப்பினை பெரியாரனா ராச்சனா எனும் தலைப்பில் ஒடியா மொழியில் வெளியீடு

ஒடிசா மாநில அரசின் பாடநூல் நிறுவனம் (Odisha State Bureau of Text Book Preparation and Production) பெரியார் சிந்தனைத் தொகுப்பினை பெரியாரனா ராச்சனா எனும் தலைப்பில் ஒடியா மொழியில் பதிப்பித்து ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில்அக்டோபர் 27 ஆம் தேதி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை அழைத்து அவர் மூலம் வெளியிட்டது. ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் தலை வர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு அவர்கள் இந்நூலை மொழி பெயர்த்தார்.

-23.11.2013

திங்கள், 19 நவம்பர், 2018

தாழ்த்தப் பெற்றவர் நலனுக்கு உழைத்த தந்தை பெரியார்

முனைவர் பேராசிரியர்


ந.க.மங்களமுருகேசன்




தந்தை பெரியாரை முப்பிரிநூலோர், முன் நின்ற வகுப்பினர் எதிர்ப்பது, எதிர்த்துக் குரல் கொடுப்பது - இதுவரையில் நாம் நுகர்ந்து வந்த அதீத நன்மைகளுக்கு வேட்டு வைத்தவரே இந்த மாமனிதர் தாம், இவரல்லவா உறங்கிக் கிடந்த - உணர்வற்றுக் கிடந்த, சொரணையற்று விழிப்பின்றிக் கிடந்தவர்களை உயிர்ப்பித்து எழச்செய்து விட்டவர் எனும் ஆத்திர உணர்வினால், தங்கள் அகம் பாவப் பாம்பைச் சமத்துவம், சுயமரியாதை, வகுப்புரிமை என்னும் தடிகள் கொண்டு நசுக்கி விட்டாரே என்பதால்.

ஆனால் சமத்துவம் பெறாமல், ஜாதிச் சகதியினால் மூடப்பட்டுச் சுயமரியாதை உணர்வு பெறாமலிருந்த தாழ்த்தப்பெற்ற சகோதரர்கள், தந்தை பெரியார் பெற்றுத் தந்த உரிமை, வாழ்வு, இடஒதுக்கீடு ஆகியவற்றைப் பெற்றுப் புதுவாழ்வு பெற்றவர்கள் அனைவரும் தந்தை பெரியார்தான் தங்கள் முதல் தலைவர், மற்ற எவரும் தங்களுக்குப் பின்னவர்கள் தாம் என்பதை உணராமல் ‘பெரியார் எங்களுக்கு என்ன செய்து விட்டார்?' ‘பெரியார் பார்ப்பனரல்லாதார் நலனுக்கு உழைத்தவர், எளிய பிற்படுத்தப்பெற்ற பிற வகுப்பினருக்கு உழைத்த வர்தானே தவிர எங்கள் நலனுக்கு உழைத்தவர் இல்லை' என்று நாக்கூசாமல் பேசுகின்றனர்.

ஆனாலும் இதில் ஓர் ஆறுதல் - தொல்.திருமாவளவன் ஒத்த உண்மைச் சிந்தனையாளர்கள் பெரியார்தாம் பெரும்பங்கு என்பதை உணர்ந்து பேசியும், செயல்புரிந்தும் வருவது மட்டுமல்லாது தமிழர் தலைவர் ஆசிரியர் பால் மிகுந்த மதிப்பும் -  மரியாதையும், தேர்தல் பாதையில் சில மாறுபாடு கொண்டபோதிலும் செயலாற்றி வருகின்றனர்.

உண்மையிலேயே தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுபோல் தாழ்த்தப்பட்டவர் நிலைக்கு உழைத் திடாதவரா? தந்தை பெரியாரின் வாழ்க்கை வெளிப் படையான ஒளிவு மறைவு இல்லா வெளிச்சக் கீற்று மிகுந்த வாழ்க்கை. அதனை வெளிப்படுத்த இன்றும் ஆதாரங்களாக விளங்குபவை அவருடைய ஏடுகளாம். குடி அரசு, பகுத்தறிவு, விடுதலை, ரிவோல்ட் ஜஸ்டிசைட், உண்மை, மாடர்ன்ரேசனலிஸ்ட், திராவிடன் ஆகியன வாகும்.

எனவே, தந்தை பெரியாரின் ‘குடி அரசு' பழைய ஏடுகளைப் புரட்டினாலே இந்த மாமனிதர் தாழ்த்தப் பெற்றோர் நிலை உயர எவ்வளவுப் பாடுபட்டுள்ளார் என்பது வெளிப்படும். அதிலும் தொடக்கம் முதலே தீண்டாமைக்கு எதிரான, தாழ்த்தப்பெற்றோர் நிலை உயரக்கூடிய அவருடைய கருத்துமணிகள் கல்லில் வடித்த எழுத்துக் களே அன்றி காகிதத்தில் அச்சடித்த எழுத்துக்கள் ஆகா. சொல்மட்டுமல்லாது செயலும் அவ்வகைத்தே என்பதற்கும் சான்றுகள் பல காட்ட முடிகிறது.

உண்மையான பெரியார் தொண்டன், தந்தை பெரியாரை ‘எங்கப்பன் பெரியாரு, எங்கப்பன் பெரியாரு' என்று கூவியதை ‘இதழாளர் பெரியார்' எனும் நூலில் பெரியார் பேருரையாளர் இறையன் அவர்கள் பதிவிட்டிருப்பதைப் படித்தால் உண்மையாகவே சொல்கிறோம் - மெய் சிலிர்க்க வைக்கிறது. அவருடைய பதிவை அப்படியே சுருக்காமல், மறைக்காமல் காட்டுகிறேன்.

"எத்தனையோ ஆண்டுகள் கழிந்தோடிவிட்டாலும் என் நினைவுப் புலத்திலிருந்து நீங்காமல் நிலைத்திருக்கும் - காலம் வென்ற ஞாலப்பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த - அந்த நிகழ்வைப் பதிவு செய்கின்றேன் இங்கே.

உடுமலைப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குப் பெரியாரவர்கள் ஊர்தியில் சென்று கொண்டிருந்தார். வண்டியில் நானும் இருந்தேன். திடீரென வண்டி குலுங்கி நிற்க, அனைவரின் கண்களும் தெருவை நோக்கியபோது உடற்சட்டையணிந்திராத உருவமொன்று வண்டியின் குறுக்கே பாய்ந்தது, அய்யாவின் ஊர்தி சாலைப்பகுதிக்கு விரைந்து கொண்டிருந்தது. அவரைக் கண்டிக்கும் முறையில் சிலமொழிகளை வீசிய எங்களைப் பற்றியெல்லாம் அந்த ஆள் கண்டு கொள்ளவேயில்லை.

மாறாக அவ்வேன் ஊர்திச் சாளரத்தினூடே தன் கைகளை ஓச்சிமிகவும் தளர்ந்திருந்த அய்யாவின் கைகளைப் பற்றித்தன் கண்களில் ஒற்றிக்கொண்டும், ‘எங்கப்பன் பெரியாரு. எங்கப்பன் பெரியாரு' என ஓங்கிய குரலில் கூவிவிட்டு, தொடர்ந்து "ஊம். வண்டியை எடுங்கள், கூட்டம் நடக்கும் இடம் இந்தப் பக்கங்தான் இருக்கிறது" எனக்கட்டளையிட்டுவிட்டு ஊர்தியை ஒட்டியே வந்தார்.

எங்கள் எல்லாரையும் கவ்விய அதிர்ச்சி தணிந்து ஆறுதல் நிலையை நாங்கள் தழுவினோம். கீழிறங்கிய வுடன் சட்டையணிந்து கொண்டிராத முண்டு மட்டுமே அரைக் கசைந்திருந்த - அப்பாட்டாளித் தோழரிடம் பலவற்றையும், உசாவியபோது, அய்யாவைப் பற்றி நிறையப் பேசிய அவர் தான் ஒரு பளுதூக்கும் தொழிலாளி எனத் தெரிவித்தார்.

ஒரு பேரினத்தையே சுமந்து காக்கும் தொண்டறத்தை இயற்ற முன் வந்த பெரியாரின் அருமையையும், பெருமையையும் ஒரு சுமை தாங்கிப் பாட்டாளியால் ஏனையோரைக் காட்டிலும் எளிதாக விரைந்து புரிந்து கொள்ள முடிகிறது எனும் பேருண்மை புலப்பட்ட நிலையில் பெரும் உள்ள நெகிழ்ச்சிக்குத்தான் இலக்கானேன். அன்றும் பிறகும் பல மேடைகளில் அந்நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அடிக்கடி நான் அசைபோட்டுப் பார்க்கும் அரும் பொருள்களில் "எங்கப்பன் பெரியாரும்" ஒன்று!

ஆகத் தந்தை பெரியாரை நன்குணர்ந்த அந்தப் பளுதூக்கும் தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் போல் பலரும் இன்றும் இருக்கையில் பழைய நிலை அறியாது அறியாமைச் சேற்றில் உழலும், வேட்டி சட்டையிலிருந்து கால் சட்டைக்கு எப்படி மாறினோம், கல்விக் கூடங்களில் எப்படி கால் வைத்தோம், கூழோ, கஞ்சியோ குடித்த நாம் இன்று அரிசி உணவுக்கு மாறியது எப்படி? அதற்கு ஏணிப்படி எது என்பதை உணராத சிலர் வேண்டுமானால் தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீசலாம். சிலையைச் சிரச்சேதம் செய்யலாம். குண்டர் சட்டத்தில் காராக்கிரகத்தில் வாடலாம். ஆனால் அவர்களை ஏவியவன் சுகமாகக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறான்.

‘சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று கர்ஜித்தவர்  திலகர் எனக் கூறி படேலுக்குப் பின் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துச் அவருக்கும் சிலையமைப்போம் என்கிறார்களே; ஆம்! அத்திலகர்  திருவாய் மலர்ந்து அருளியவை இவை.

"செக்கு ஆட்டுவோரும், வணிகரும், சலவையாளரும் மற்ற தொழிலாளர்களும் தங்கள் குலத்தொழிலை விட்டுவிட்டுச் சட்டசபைக்கு வருவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய வர்களே தவிர, சட்டத்தை இயற்ற வேண்டியவர்கள் அல் லர். அதற்கு அவர்கள் ஆசைப் படக்கூடாது"

ஆம்! சவரம் செய்யும் தொழிலாளிக்கும், சலவைத் தொழிலாளிக்கும் சட்டசபையில் என்ன வேலை? என்று கேட்ட உயர்ஜாதி ஆணவக்காரர் திலகர் என வரலாறு கூறும். மறைக்கப்பட்ட உண்மை இது அவருக்கு.

எந்தத் தலைவர் சிலையையும் இழிவு செய்தல் தகாது என்பவர்கள் நாம். இருப்பினும் கேட்கிறோம், இவ்வளவு இழிவுபடுத்திய திலகர் சிலையை இழிவுபடுத்த முடியுமா? தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயுமல்லவா? தந்தை பெரியார் என்ன கிள்ளுக்கீரையா?



தமிழ்த்தென்றல் திரு.வி.க. "சமபந்தி போஜனத்திற்குச் சாதகமான நிலைமை அக்காலத்தில் இல்லை. பிராமணரும், பிராமணல்லாதாரும் சமபந்தி போஜனம் செய்வதென்பது சாத்திய மில்லாத காலமாய் இருந்தது. பிராமணரல்லாதாருக்கு வெளித்திண்ணையில் இலை போட்டுத்தான் பிராமணர் வீடுகளில் சாப்பாடு போடுவார்கள்" என்று எழுதிய காலத்தில் இதுதான் தன் கொள்கை என்று தந்தை பெரியார் அறிவித்த கொள்கை இது.

"மாந்தன் மாந்தனாக இருக்க வேண்டும். மக்களிடையே எந்த உருவத்திலும் - வடிவத்திலும் ஏற்ற தாழ்வுகள் நிலைக் கூடா; மக்களாயத்தில் சமவாய்ப்பும், சமபங்கும், சமவுரிமையும், சமனுகர்ச்சியும் இருக்க வேண்டும். இக்குறிக்கோளை எய்துவதற்கு எதனையும் கொள்ளலாம், எதனையும் தள்ளலாம்" இதுதான் பெரியாரியல்.

1925இல் காங்கிரசில் இருக்கையிலேயே தாழ்த்தப் பெற்றோர் முன்னேறவேயில்லை என்பதைச் சுட்டிக்காட்டி

"பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்பு வாரிப் பிரிதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் மிக முக்கியமானதென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத்திலோ மற்றும் பல பொதுவாழ்க்கையிலோ அவர்கள் முன்னேறவேயில்லை" (8.11.1925 குடி அரசு)

18 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்திடா காலத் திலேயே தாழ்த்தப் பெற்றவர்களின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தான் முக்கியம் என்று சொன்ன பெரியாரைப் பார்த்து ‘என்ன செய்தார், பெரியார் எங்களுக்கு?' என்று கேட்கவே வெட்கப்பட வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையையே முன்னிறுத்திக் காஞ்சிபுரம் மாநாட்டில் உற்ற நண்பர் திரு.வி.க.வையே குறை கூறிக் காங்கிரசிலிருந்து வெளியேறியவர் தந்தை பெரியார்.

இடஒதுக்கீட்டுக்கு போராடியது மட்டுமல்லாது, தீண்டாமைக்கு எதிரியாகப் பிரகடனப்படுத்தியவர் தந்தை பெரியார். தெரியுமா, உங்கள் முப்பாட்டனார் மேலுக்குச்சட்டை போடக்கூடாது, காலுக்குச்செருப்புப் போடக்கூடாது, தோளில் துண்டு போடக்கூடாது,தெருவில் நடக்கக்கூடாது. தொட்டால் தீட்டு பட்டால் பாவம் என்றெல்லாம் இருந்த நிலைமை தெரியுமா? அதெல்லாம் தெரியாமல் இன்று பெரியார் பெற்றெடுத்த, வாங்கிக்கொடுத்த சுதந்திரக்காற்றை, உரிமைப் பங்கைப் பெற்றுவிட்டுப் பெரியார் என்ன கிழித்துவிட்டார் என்று ஓதுவோர் பார்வைக்கு மேலும் ஒரு குறிப்பு.

காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி விடுத்த அறிக்கையில் "தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடமையாகும். ஏனெனில் அது தீண்டாதார்களில் பிராமணரல்லாதாரின் முன்னேற்றமாகும். தீண்டாமை ஒழிப்பது மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யம் அடையும்" என அனைத்துக் கட்சியினரையும் சேர்ந்த பார்ப்பனரல்லாதாரைக் கடமையாற்றிட வேண்டிய தந்தை பெரியாரின் இதய சுத்தியை யார் கேள்வி கேட்பது? கேள்வி கேட்பது அறியாமை.

இன்னும் சொல்லப்போனால் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பெற்றோருக்குத் தனிக் கிணறு வைத்துத் தீண்டாமையைத் தூக்கிப்பிடிக்க முயன்றபோது கண்டனக்குரல் எழுப்பியவர் தந்தை பெரியார். எனவே தாழ்த்தப்பெற்றோர் நன்றியுடன் போற்றிட வேண்டிய முதல் ஒரே தலைவர் தந்தை பெரியார், தந்தை பெரியாரே! உணர்க, உணர்ந்து தெளிக!!

- விடுதலை நாளேடு, 17.11.18

ஞாயிறு, 18 நவம்பர், 2018

ஆதி திராவிடர் பெயர் காரணம் !

*பறையர்,பள்ளர் போன்ற* 


*தமிழ் குடிகளை ஆதித்தமிழர் என அழைக்காமல் 'ஆதி* *திராவிடர்' என*


*ஏன் அழைக்கிறார்கள்?*

இதுதான் திராவிடம் 


செய்த சதி என சிலர் 


வரலாற்றை திரித்து 


கதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்ன?

பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் மதராஸ் மாகாண சட்டசபையில் 


20 ஜனவரி 1922ல் M.C.ராசா 


சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.


அந்த தீர்மானத்தின்படி


 #பறையர், #பள்ளர் என்ற பெயர் 


நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற 


பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் (25.03.1922) பறையர், பள்ளர் மக்களுக்கு #ஆதிதிராவிடர் எனப் பெயர் 


மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு 


2ஆண்டுகளாகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. 


இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலைசீனிவாசன்  25.08.1924ல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

இந்த காலகட்டத்தில் (1925 வரை) பெரியார் காங்கிரசில் இருந்தார். 


நீதிகட்சி 'ஆதிதிராவிடர் 'என பெயர் மாற்றிய தீர்மானத்திற்கும் 


பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

1892ல் ஆதி திராவிடர் என்ற வார்த்தையை பதிவு செய்தவர் அயோத்திதாசர்.


 1.12.1891ல் பண்டிதர்அயோத்திதாசர்  நீலகிரியில் திராவிட  மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். 


அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரஸ்கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 


1892ல் அதை 


"ஆதிதிராவிட மகாசன சபை" எனப் 


பெயர் மாற்றி பதிவும் செய்தார்.

இதனை அடிப்படையாக கொண்டு நீதிக்கட்சி ஆட்சியில் 


1922ல் பள்ளர், பறையர் என அழைக்கப்பட்ட சாதிகளுக்கு "ஆதிதிராவிடர் " என அரசு அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியது.

 M.C.ராஜா பட்டியல் சமூகத்தை சார்ந்தவர். அவர் தன்னுடைய சமூகத்தின் பெயரை எப்படி அழைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து முடிவெடுத்தார். 


அதற்கு உறுதுணையாக இருந்தது


தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.


எதிர்காலத்தில் நீதிகட்சியிலிருந்து திராவிடர்கழகம் பிறக்கும் என்ற ஜோசியத்தை M.C.ராஜா அறிந்திருக்க வாய்ப்பு இல்லை

வரலாற்றை திரிக்கும் சிலர் சொல்வதுபோல ஆதி திராவிடர் என்ற பெயர் திராவிட கழகங்களால் கொடுக்கப்படவில்லை. 


1891ல் அயோத்திதாசரால் 


கொடுக்கப்பட்ட பெயர். 


அப்போது பெரியாருக்கு வயது 12.

'ஆதி திராவிடர்' என பெயர் மாற்றும்போது இந்தியா என்ற ஒரு சுதந்திர நாடே அப்போது கிடையாது. தமிழ்நாடு என்றவொரு 


மாநிலமும் அப்போது இல்லை. 


திராவிட கட்சிகள் அப்போது 


பிறக்கவே இல்லை.

அப்போது பிறக்காத திராவிட இயக்கங்களை இழுத்து அவர்கள்தான் ஆதித்தமிழருக்கு ஆதி திராவிடர் என பெயர் சூட்டியதாக பொய்யை சொல்லி வரலாற்றை திரித்து அரசியல் செய்வது தற்போது நடக்கிறது.


- கட்செவியில் வந்தது..