திங்கள், 17 ஜூன், 2019

பெரியார் மய்யம் எழுந்த வகை

*ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்*

*- ஈரோட்டுக் கண்ணாடி -*

சமூக வலைத் தளங்களில் சங்கி மங்கிகள் சிலர் *"பெரியார் மய்யம்"* என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெயர் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டிடத்தின் படத்தைப் போட்டு, "இந்தி வேண்டாம் என்று சொல்லும் பெரியார் கட்சிக்காரர்கள் இங்கே மட்டும் மூன்று மொழிகளில் எழுதியிருக் கிறார்களே, *இதுவா உங்க நியாயம்?"* என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இது போட்டோஷாப் செய்யப்பட்டதா என்று நண்பர்கள் கூட கேட்டார்கள். இந்த கட்டிடத்தில் உள்ள எழுத்துகள் போட்டோஷாப் செய்யப்பட வில்லை; *உண்மையில் அங்கு பொறிக்கப்பட்டுள்ளவை தான்* என்றோம்.

*உண்மையான படத்தைப் பரப்பும் அளவுக்கு அறிவு நாணயம் உள்ளவர்களா...?* அவர்கள் என்று ஆச்சரியப் படாதீர்கள். இவ்வளவு ஆர்வமாக *பெரியார் மய்யத்தின் புகைப்படத்தை எடுத்து பகிர்ந்த அந்தக் காவிகளின் அறிவு நாணயம் எங்கு அடிபட்டுப் போகிறது என்றால், அந்தக் கட்டிடம் எங்கு இருக்கிறது என்பதை கூட அவர்கள் சொல்லாமல் மறைத்ததில் தான். இன்னும் சிலர் இது சென்னையில் உள்ள திராவிடர் கழக அலுவலகம் என்று பரப்புகிறார்களாம். இது பெரியார் அறக்கட்டளையின் கட்டடம் தான். ஆனால் தமிழ் நாட்டில் இல்லையே....? .*

*தமிழுக்கு முதலிடம் தந்து, அதற்கடுத்து ஆங்கிலம்,  மூன்றாம் இடத்திற்கு இந்தி  தள்ளப்பட்டு,  இந்தியில் எழுதப்பட்ட பெயருடன் இந்த "பெரியார்  மய்யம்" கட்டிடம் அமைந்திருப்பது இந்தியாவின் தலைநகரம் டெல்லியில்! அதுதான் கெத்து!*

இந்தியை எதிர்த்த பெரியாரின் பெயரிலான அந்த கட்டிடத்தில் இந்தி எழுத்துக்கள் இருப்பது பெரியாரின் தோல்வியா என்றால், இந்தி பெல்ட் எனப்படும்  இடத்தில் பெரியார் மய்யம் இருப்பது தான் பெரியாரின் வெற்றி! அதுவும் சாதாரண வெற்றியல்ல.

சரித்திர வெற்றி! எப்படி?

*இதோ அந்த வெற்றிச் சரித்திர வரலாறு*

*தந்தை பெரியாரின் கருத்துகளை உலகெங்கும் பரப்புவதற்கான ஒரு நல் வாய்ப்பாக "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன" த்தின் சார்பில்   "பெரியார் மய்யம்" டெல்லியில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுக்க நிதி திரட்டித் தோழர்கள் வழங்கிய நன்கொடை  தொகையோடு, தனது எடைக்கு எடை வழங்கப்பட்ட தங்கத்தின் நிதியையும் சேர்த்து டெல்லி விமானநிலையப் பகுதியில் அமைந்துள்ள பாம்னோலியில் இடத்தை வாங்கி, பெரியார் மய்யக் கட்டிடப் பணி 1998 அக்டோபர் 7 அன்று தொடங்கபட்டது.*

*தமிழ் நாட்டிலிருந்து தனி இரயிலில் (பெரியார் சிறப்பு ரயில்  PERIYAR SPECIAL TRAIN)  ஏராளமான கருஞ்சட்டை குடும்பங்கள் செல்ல, மிகப் பெரிய விழாவோடு 01.10.2000 அன்று திறக்கப்பட்டது தான் இந்த டெல்லி பெரியார் மய்யம்.* அந்த பகுதியைச் சுற்றியுள்ள பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொழிற் பயிற்சிகளை, கணினிப் பயிற்சிகளை வழங்கி சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த மய்யத்தை, *தீவிரவாதச் செயல்களுக்கு இடம் கொடுக்கிறார்கள், சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டியிருக்கிறார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டை சொல்லி,*  அரசியல் புரோக்கர் சுப்பிரமணியசாமி யின் தூண்டுதலின் பெயரில் அன்றைய டெல்லி அரசாங்கம் இடித்துத் தள்ளியது. இத்தனைக்கும் அது அங்கு செய்யத் தொடங்கியிருந்தது சமூக நலப்பணிகள், பயிற்சிகள் தான். அதற்கே அவர்களுக்குக் கோபம்.

தமிழர்கள் தங்களின் உழைப்பைச் சிந்திக் கொடுத்த பணத்தில், பெரும் பொருட் செலவில், உரிய அனுமதிகளை எல்லாம் பெற்று உருவான பெரியார் மய்யம், *எந்தவித சட்ட ரீதியான நடவடிக்கைக் கான வாய்ப்பும் தரப்படாமல் 2001 டிசம்பர் 3 அன்று வெறும் ஒரு மணி நேரத்தில் இடித்து இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. அன்று மத்தியில் இருந்தது "மதவெறி" பி.ஜே.பி.ஆட்சி!*

*சட்டவிரோதமாக, நியாயத்திற்குப் புறம்பாக அவர்கள் செய்த இந்த சதியை* முறியடிக்க டெல்லி சென்று *மேனாள் பிரதமர்  "சமூகநீதிக் காவலர்" வி.பி.சிங்,  சந்திரஜித் யாதவ்* ஆகியோரோடு *மதிமுக  பொதுச்  செயலாளர்  வைகோ* அவர்களையும் அழைத்துக்கொண்டு பிரதமராக இருந்த பா.ஜ.க.வின் வாஜ்பேயி அவர்களைச் சந்தித்தார் அன்றைய *திராவிடர்  கழகப்  பொதுச்  செயலாளரும்,  பெரியார்  சுயமரியாதைப்  பிரச்சார  நிறுவனச்  செயலாளருமான  ஆசிரியர்  கி.வீரமணி* அவர்கள்! சட்டப்படி அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்துச் சொல்லி, கட்டடம் இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று விளக்கியதும், 'மீண்டும் எங்களைப் போராட்டத்திற்கு இழுக்காதீர்கள்' என்று எச்சரிக்கை செய்து, இதற்கு மாற்று நடவடிக்கையாக உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

*தவறை உணர்ந்த வாஜ்பேயி, அன்றைய டெல்லி துணைநிலை ஆளுநரை அழைத்து உடனடியாக அதற்கு நஷ்ட ஈடு வழங்கி, அவர்கள் விரும்பும் வேறு இடத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும்* என்று ஆணையிட்டார்.

*டெல்லி ஜசோலா* என்ற பகுதியில் அப்போலோ மருத்துவமனை அருகில் அமைந்துள்ள இடத்தை *டெல்லி அரசு தன் தவறுக்கான பதிலீடாக வழங்கியது. அரசிடமே போராடி பெற்ற இடத்தில், அரசு வழங்கிய தண்டத் தொகையில், முன்பு இருந்ததை விட மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டது தான் இந்த புதிய "பெரியார் மய்ய" க் கட்டடம். 2010 மே மாதம் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தலைமையில் திறக்கப்பட்டது.*

இப்போது அங்கு பெரியார் கணினி மற்றும் மேலாண்மைக் கல்லூரி நடைபெறுகிறது.
முன்பு இடிக்கப்பட்ட பாம்னோலி இடமும் சட்டப்படி மீண்டும் கைக்கு வந்துள்ளது.

இடித்துத் தள்ளப்பட்ட அதே ஊரில், இடித்துத் தள்ளிய அரசையே தண்டம் கட்டச் செய்து, மீண்டும் வானுயர எழுந்து நிற்கும் அளவுக்கு பெரியார் பெற்ற *'ஹீரோயிக் வெற்றி'* யின் (Heroic victory) அடையாளம் இந்தக் கட்டடம்!
இது தொடக்கம்.
இனி தான் இருக்கிறது ஆட்டம்!

*தந்தை பெரியார் கருத்துக்கள் வடநாட்டில் பரவிடக் கூடாது என்று தந்தை பெரியாரின் "ராமாயணப் பாத்திரங்கள்" என்ற நூலுக்கு 60 ஆண்டுகளுக்கு முன் தடை போட்டார்களோ, அந்த பயம் இன்னும் போகவில்லை.*

இன்றும் தந்தை பெரியாரைக் கண்டு அச்சப்படும் வடநாட்டு சங்கிகளுக்குத் தெரியட்டும் - இந்தியிலிருக்கும் பெரியார் மய்யம் என்ற எழுத்துகள் வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இன்னும் அதிகமாக பரப்புங்கள் தென்னாட்டு சங்கிகளே!

சொல்லுங்கள் அவர்களுக்கு... *பெரியார் டெல்லியில் மய்யம் கொள்கிறார். வருகிறார் பெரியார் இந்தியில்! தயாரா நீங்கள்?*

*पेरियार उत्तर की ओर आ रहा है! तुम तैयार हो  பதிவு தோழர்  Prince Ennares Periyar*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக