வெள்ளி, 21 ஜூன், 2019

ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்பற்ற சேவை


திருச்செங்கோடு மகா நாட்டுத் தலைவர் ராவ்சாகிப் பொன்னைய கவுண்டர் முழக்கம்

வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

- ஆசிரியர்

திருச்செங்கோடு முதல் ஜஸ்டிஸ் மகாநாட்டில் இன்று கூடியிருக்கும் பிரதிநிதிகளுக்கும், தோழர்களுக்கும் என்னு டைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் அநேகர் இருக்கும் போது, என்னைப் பொருட்படுத்தி இந்த - மகாநாட்டில் தலைமை வகிக்கும்படி அழைத்திருக்கும் உபசரணைக் கமிட்டியாருக்கு எனது மனமார்ந்த வந் தனத்தைச் செலுத்து கிறேன்.

பிரிவாற்றாமை

ஜஸ்டிஸ் கட்சி என்கிற நீதிக்கட்சி நமது மாகாணத்தில் தோன்றி இன்றைக்கு சுமார் இருபது வருஷங்களாகின்றன. ஆனால், இது நமது நாட்டில் வேரூன்றியிருக்கும் ஒரு பெரிய இயக்கத்தின் அறிகுறி என்பதில் சந்தேகமில்லை. இது சரித்திர சம் பந்தமான ஒரு பழைய இயக்க மென்றே சொல்ல வேண்டும், சமூக வாழ்க்கையில் வேற்றுமை ஏற்படும் - போதெல்லாம் இந்த இயக்கம் கிளம்பி, இந்திய மக்களுக்கு நீதி வழங்கி வந்திருக்கிறது. வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகள் காலத்திலிருந்து திருவாங்கூர் புரொபஸர் சுந்தரம் பிள்ளை காலம் வரை அப்போதைக்கப்போது இந்த இயக்கத்தின் எதிரொலிகள் மகாஜனங்களின் காதில் பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தப்பழங்கதையை விவரிக்கும் வேலையில் இறங்காமல், சில வருஷங்களுக்கு முன்பு காலஞ்சென்ற நமது மூன்று பெரிய தலைவர்களின் உட்கருத்துகளை ஞாபகப்படுத்திக்கொண்டு, பொதுநல சேவை செய்ய நாம் எல்லோரும் கடமைப் பட்டிருக்கிறோம். டாக்டர் - டி.எம்.நாயர், சர்.பிட்டி தியாகராய செட்டியார், பனகால் ராஜா ஆகிய மூன்று தலைவர்களின் உருவப்படங்கள் இன்று இவ்விடம் பிரதிஷ்டை செய்யப்படுவது ஒரு சிறந்த காரியம். அப்பெரியார்களின் அரிய சேவைகளை மகாஜனங்கள் அனைவரும் நன்றாய்த் தெரிந்து கொள்ள வேண்டும், நாடு நகரங்களில் உள்ள ஏழை மக்களுடைய ஷேம லாபத்தையே முக்கியமாக நமது தலைவர்கள் நாடி வந்திருக்கிறார்கள்; இப்போதும் நாடி வருகிறார்கள்; இனிமேலும் அவ்வி தமே செய்வார்கள் என்பது நிச்சயம், சில உதாரணங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

தொழிலாளர்

தொழிலாளர் இயக்கமானது இப்போது உலகமெங்கும் பரவி வருகிறது. தொழிலாளர் முன்னேற்றத்திற்காக பல வருஷங்களுக்கு முன்பே பாடுபட்ட முதல் இந்தியத் தலைவர் யார் என்பதை கவனித்தால் அந்தப் பெருமை டாக்டர் நாயருக்கே உரித்தாகிறது. இந்தியத் தொழிற்சாலைக் கமிஷன் 1908இல் செய்த சிபாரிசுகள் ஏழைத் தொழிலாளர் களுக்குச் " சாதகமாயிருக்க வேண்டுமென்கிற கவலையுடன் லண்டன் சென்று, லார்டு மார்லியிடத்தில் வாதாடிய இவ்வுத்தமரின் புகழ் எப்போழுதும் அழியாது, தொழிலாளர் இயக்கமானது இன்று நமது நாடெங்கும் வலுத்து வருகிறது. புதிய சட்ட சபைக்கு தொழிலாளர்களே தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எளிதில் கிடைத்து விட்டது. இவ் விதமாக இவ்வளவு சீக்கிரத்தில் சர்க்காரும், ஜனத் தலைவர்களும் தொழிலாளர்களுடைய நியாயமான சுதந்திரத்தை - அங்கீகரிப்பார்கள் என்பதை டாக்டர் நாயர் உயிரோடு இருந்த சமயத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டாக்டர் நாயருடைய தூரதிருஷ்டியை விளக் கிக் காட்டுவதற்கு இன்னும் ஒரு உதாரணம் வேண்டுமா ? தாழ்த்தப் பட்ட சமூகத்தினரிடத்தில் அவரு க்கு இருந்த அளவில்லாத அன்பையும்,  அனுதாபத்தையும் அவரது வாழ்நாள் முழுவதிலும் அப்போது சொந்த நடத்தையால் நடத்திக் காண்பித்தாரே ஒழிய, வேறு வாச கைங்கிரியம் செய்தவரல்ல. தீண்டாமை பழக்கத்திற்கு சாஸ்திரங்களில் ஆதரவு உண்டா இல்லையா என்கிற சந்தேகத்தை அவர் கிளப்பினவரும் அல்ல. தீண்டாமை என்கிற ஜாதிப் பேயை இந்து சமூகத்திலிருந்து ஓட்டி விடுவதற்கு ஓர் சிறந்த சாதனத்தை அவர் தான் முதலில் கண்டுபிடித்தார். ஸ்தல ஸ்தாபனங்களிலும், சட்டசபைகளிலும் எல்லோருடனும் சரிசமமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடம் கிடைத்தால் தான் இரு சார்பாருடைய, மனோபாவத்தில் சரியான புரட்சி ஏற்படும் என்கிற உண்மையை அவர் முதலில் உணர்ந்து நடந்தார். அவரது செல்வாக்கின் பயனால், தாழ்த்தப்பட்ட இனங்களைச் சேர்ந்த பல கனவான்கள் பொது வாழ்க்கைத் துறையில் இப்போது பிரபலமான நிலைமையை அடைந் திருப்பதானது நமது சமூக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயமாகும், தமது உடல் பொருள் ஆவி மூன்றையும் நமது நாட்டிலுள்ள ஏழை மக்களுடைய விடுதலைக்காக அர்ப்பணம் செய்த தியாகமூர்த்தியின் வாழ்க்கைச் சரிதத்தை யார் தான் மறக்க முடியும்?

சர்.தியாகராயர் சேவை

விவசாயமும், கைத்தொழிலும், வியாபாரமும் நமது நாட்டில் ஒன்று போல செழித்திருந்த காலத்தில் ஜனங்களுக்கு எல்லாவித சுகங்களும் கிடைத்தன. விவசாயம் இப்போது ஒரு லாபகரமான தொழிலாய் இல்லை, எனவே, நமது நாட்டு கைத்தொழில்களையும் வியாபாரத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக சர்.தியாகராய செட்டியார் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். உதகமண்டலத்தில் பல வருஷங்க ளுக்கு முன்பு கூடிய கைத்தொழில் மகாநாட்டில் சர்க்காருக்கு அவர் கூறிய யோசனைகள் இப்போதும் பலன் தருகின்றன திருச்செங்கோட்டிலும், இதைச் சுற்றிலுமுள்ள கிராமங்க ளிலும் ஆயிரக்கணக்கான நெசவாளிகள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். கைத்தறி நெசவாளிகளுக்கு இப்போது ஒரு சோதனைக் காலம் ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கதே. ஆனால், அவர்களுக்காக சர். தியாகராய செட்டியார் பாடு பட்டது போல, நாமும் கால தேச வர்த்தமானப்படி நடந்து கொண்டால் கைத்தறி நெசவுக்கு ஏற்பட்டு வருகிற பலமான போட்டியை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, இந்த அழகான நாட்டுத் தொழிலைக் காப்பாற்ற முடியும். டாக்டர் நாயருடன், சர். தியாகராயர் சென்னை நகரசபையில் செய்த சேவை யானது நிகரற்றது. சர், தியாகராருடைய பெரிய உருவச்சிலை சென்னை நகர மண்டபத்தின்முன் நிற்கிறது. அது அவரது சிறந்த பொதுநல வேலைகளை ஞாபகப்படுத்துகிறது. இந்த வாரத்தில் நடைபெற்ற தேர்தலில், சென்னை நகரசபை  "காங்கிரஸ் வசமாயிற்று" என்ற கூற்றை ஒரு தமிழ் தினசரி கட்டிவிட்டிருக்கிறது. அதே தினத்தில் 'மதராஸ் மெயில்' உள்ள நிலைமையை உள்ளபடி தெளிவுபடுத்தியிருக்கிறது. சென்னை நகர சபையில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடையவே கிடையாது. ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தில் அரசியல் கட்சி பேதங்களுக்கு இடமில்லை யென்று நம்புகிற பலருக்கு இந்த நிலைமை திருப்தியளிக்கும்'' என்று பொருள் படும்படி 27.10.36இல் 'மதராஸ் மெயில்' எழுதியிருக்கிறது. இதிலிருந்து உண்மை விளங்குகிறது பாருங்கள்.

ஜஸ்டிஸ் கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்தபோது, சென்னை கவர்னராயிருந்த வில்லிங்டன் பிரபு சர். தியாக ராயரை அழைத்து ஒரு மந்திரி சபை அமைக்கும்படி கேட்டார். தமது பெயருக்குத் தகுந்தபடி, சர். தியாகராயர் தமது மூன்று தோழர்கள் அடங்கிய மந்திரி சபையை அமைத்துக்கொண்டு தனக்கு எவ்வித பதவியும் தேவையில்லை யென்று தியாக புத்தியுடன் சொல்லிவிட்டார். பதவி வேட்டை ஆடுகிறவர்கள் எல்லோருக்கும் இது ஓர் சிறந்த படிப்பினையாக விளங்குகிறது.

ஜஸ்டிஸ் கட்சியில் ராஜாக்களின் செல்வாக்கு நிறைந் திருக்கிற தென்று ஒரு சார்பார் அடிக்கடி புகார் செய்கிறார்கள். இதை சற்று ஆராய்வோம். பனகால் ராஜா முதல் மந்திரி ஸ்தானத்தை சுமார் 6 வருஷம் வகித்தார். அரசியல் நிர் வாகத்தில் அவர் ஒரு சிறந்த ஞானியார் ஒரு பெரிய நிபுணர் என்பதை இப்போது எல்லோரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். எல்லா வகுப்பினர்களுக்கும் அவர் நீதி வழங்கியதோடு, தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பின்னடைந்தவர்களுக்கும் அவர் விசேஷ உதவி செய்தார் என்பது வெளிப்படை. இனாம் நிலங்கள் மசோதா சென்னை சட்டசபையில் சமீப காலத்தில் நிறைவேறி விட்டது. ''சொத் துரிமையை ' இச் சட்டம் பாதித்து விட்டது' என்றும், இது போன்ற சட்டங்கள் காலக் கிரமத்தில் ஏற்படும் போது ஜமீன்தார்களையும், ராஜாக்களையும் பெரிதும் பாதிக்கும் என்றும் ஒரு சில வழக்கறிஞர்கள் பூச்சாண்டி காட்டி வருகிறார்கள். அவ்வித ஆபத்தான நிலைமை கூடிய சீக்கிரம் ஏற்படலாம் என்று அடிக்கடி பய முறுத்தப்பட்டும், கனம் பொப்பிலி ராஜா'' இந்த பூச்சாண்டி வந்தாலும் வரட்டும், ஏழைகளுடைய ஷேமமே பெரிது" என்று நம்பி ஏழை விவசாயிகளுக்கு நீதி செலுத்தக்கூடிய ஒரு சட்டத்தை தைரியமாய் இயற்றி வைத்திருக்கிறார். பொப் பிலி ராஜாவின் பெரும் தன்மையான இந்த ஒரு உதாரணத்தை பணக்காரர் கள் எல்லோரும் பின்பற்றக் க டமைப்பட்டிருக்கிறார்கள்.. சென்னை இனாம் நிலச் சட்டத்தை ராஜப் பிரதிநிதி அங்கீகரித்து விட் டார் என்கிற சந்தோஷமான செய் தியை நேற்று பத்திரிகைகள் மூலம் கவனித்திருப்பீர்கள். என்று நம்புகிறேன். ராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர் களின் ஒரு பெரிய நன்கொடையால் சிதம்பரத்தில் ஒரு சர்வ கலாசாலை ஏற்பட்டு உயர்தரக் கல்வி பரப்பப்படுகிறது, அவரது புதல்வர் கனம் செட்டி. நாட்டு குமார ராஜா ஜஸ்டிஸ் கட்சியின் கல்வி மந்திரியாக இப்போது, விளங்குவது மிகவும் பொருத்தமாயிருக்கிறது. ஆகவே, ''ராஜாக்கள் கட்சி' என்று ஜஸ்டிஸ் கட்சியைத் தூற்றுவது ஒரு பெரிய அநீதி என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

சட்டசபை வேலை

ராஜாங்க விவசாயக் கமிஷன் தலைவராக லார்டு லின்லித்கோ சுமார் பத்து வருஷங்களுக்கு முன்பு நமது தேசம் முழுவதிலும் சுற்றுப் பிரயா ணம் செய்தார். அவரே இப் போது ராஜப் பிரதிநிதியாக விஜயம் செய்து, கிராமச் சீரமைப்பு இயக் கத்துக்கு ஒரு புதிய சக்தியும், செல் வாக்கும் கொடுத்திருக்கிறார், "விவசாயக் கமிஷன் - தலைவராக அவர் - செய்துள்ள சேவையை இந்தியா' என்றும் மறவாது, அந்தக் கமிஷன் சிபார்சுகளை அவர் தமது உத்தியோக காலத்தில் நிறைவேற்றி வைத்து விடுவாரானால் அது ஒன்றே அவரை இந்தியர்கள் போற்றும்படி செய்யக்கூடிய தாக இருக்கும்'' என்று - ஒரு காங்கிரஸ் தமிழ் தினசரிப் பத் திரிகை கூறுகிறது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தமட் டில், இதற்கு வேண்டிய அடிப்படையான சில துறைகளில் ஜஸ்டிஸ் கட்சியானது கெட்டியான வேலைகளை சாதித் திருக்கிறது. நமது கட்சியின் உருவகமான வேலைகளை கிராம சகோதர்கள் எல்லோரும் சரிவரத் தெரிந்து கொள்ளும் படி இடைவிடாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும், ஒருசில அம்சங்களில் நாம் எதிர் பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படாவிடில் அக்குறையை ஜஸ்டிஸ் கட்சியின்பேரில் சுமத்துவது நியாயமல்ல.

மான்ட்போர்ட் சீர்திருத்தத்தில், ''இரட்டை ஆட்சி முறைப்படி, அபிவிருத்தி இலாகாக்கள் பெரும்பாலும் இந்திய மந்திரிகள் வசத்தில் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், நிலவரி போன்ற பெரிய வருமான இனங்களை , அதிகார வர்க்கத்தினர் கைவசத்தில் வைத்துக் கொண்டபடியால், அபிவிருத்தி இனங்களுக்குப் போதுமான பண சகாயம் கிடைக்காமல் போயிற்று. மேலும், சில அதிகாரங்களை மத் திய சர்க்காரே வகித்து வருவதால், நமது மந்திரிகள் இவை களில் பிரவேசிக்கக்கூடவில்லை. இத்துடன் சென்ற ஆறு வருஷங்களாக பொருளாதாரச் சுணக்கத்தால் உலகமெங்கும் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் நமது மாகாணத்தையும் வாட்டி விட்டன. இதையெல்லாம் தெளிவாய் தெரிந்தவர்கள் கூட ஜஸ்டிஸ்கட்சி இதைச் செய்யவில்லை; அதைச் செய்ய வில்லை' என்கிற வீண் குற்றச்சாட்டில் சுலபமாய்ச் சேர்த்து கலக்கம் செய்வதைப் பார்க்கப் பார்க்க வருத்தமாயிருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம் சரியான பிரசாரம் இல்லாதது தான் என்று சொல்லவேண்டியிருக்கிறது. இது விஷயத்தில், ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள் மட்டும் பாடு பட்டால் போதாது. எல்லோரும் சிரத்தையுடன் உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

மாண்ட்போர்ட் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ளுவதா அல்லது புறக்கணிப்பதா என்கிற விஷயத்தை ஆலோசிப் பதற்கு 1818ஆம் வருஷ த்தில் காங்கிரஸ் விசேஷ சபை பம்பாயில் கூடிற்று, சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று உபதேசித்த தலைவர் என்ன சொன்னார் என்பதை இது சமயத்தில் ஞாபகப்படுத்துக்கிறேன். ''ஒரு ரூபாயில் 16 அணா வேண்டும் என்று பிரிட்டிஷாரைக் கேட்டோம்; நாலு அணா மட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பெற்றுக்கொண்டு, மீதியைக் கொடுக்கும்படி நாம் வற்புறுத்துவோம்! என்று சொன்னார். அதே மனோபாவத்துடன் தான் ஜஸ்டிஸ் கட்சியாரும் மாண்ட்போர்ட் சீர் திருத்தத்தை இவ்வளவு வருஷங்களாக நடத்திக்காட்டி வந்திருக்கிறார்கள், ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் சென்னை சட்டசபையில் சாதித்த அளவுக்கு இதர மாகாணங்களில் எங்குமே வேலை நடந்தேறவில்லை என்கிற உண்மையை, அரசியல் பண்டிதர்கள் தாராளமாய் ஒப்புக் கொள்ளுகிறார்கள். சமஷ்டி அரசியலைப் பற்றியா வது, மத்திய சர்க்காரின் அதிகாரத்தைப் பற்றியாவது, புதிய சீர்திருத்தத்திட்டத்திலாவது அபிப்பிராய பேதத்திற்கு - இட மிருக்கலாம், ஆனால் மாகாண சுய ஆட்சி விஷயத்தில் விரும்பத்தக்க அம்சங்கள் இருக்கின்றன, சட்டசபைகளைக் கைப்பற்றுவோம்; பிற்போக்காளர்களின் கோட்டைகளை முற்றுகை செய்வோம்'' என்ற ஆரவாரம் செய்யும் அரசியல் வாதிகளின் கூற்றை எதிர்த்து ஜஸ்டிஸ் கட்சியார் தமது உருவகமான வேலைகளை சட்டசபைகள் மூலம் பரப்பத் தீர்மானித்திருக்கிறார்கள். ஜாதி மத வித்தியாசம் பாராட்டா மல் எல்லா சமூகங்களுக்கும் காரியத்தில் சரி சமமான அந்தஸ்தும் நீதியும் வழங்கும் கட்சி ஜஸ்டிஸ் கட்சி என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். இந்த உண்மையான நிலை மையை நமது சகோதர சகோதரிகள் எல்லோரும் சரிவரத் தெரிந்து கொள்ளும்படி செய்வதே நமது முக்கியமான கடமை.

நமது வேலைத்திட்டம்

கல்வி, சுகாதாரம், விவசாயம், கூட்டுறவு முதலிய துறை களில் அபிவிருத்தி ஏற்படுத்துவதற்கு ஜஸ்டிஸ் மந்திரிகள் கூடியவரை பாடுபட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.. மாகாண அதிகாரிகளிடம் இதுவரை இருந்து வந்த அதிகாரங்களும், பண வசதிகளும் இந்திய மந்திரிகளிடம் மாகாண சுய ஆட்சிப் புதிய திட்டப்படி 1.4-1937இல் ஒப்ப டைக்கப்படுமாகையால், நிர்வாக அனுபவம் நிறைந்த ஜஸ்டிஸ் கட்சி தான், வரப்போகும் தேர்தலில் வெற்றிய டைந்து சட்டசபைகள் மூலமாக பலவித உருவகமான நன்மைகளை மகா ஜனங்கள் அடையும் படி செய்யும். ஆகவே, தொடர்ந்து நாம் சட்ட சபைகளில் செய்யக் கூடிய பொதுநல வேலைகள் அதிகம் இருக்கின்றன. கட்டாய ஆரம்பக் கல்வி பரப்புவதற்காக ஜஸ்டிஸ் மந்திரிகள் ஒரு பத்து வருஷத்திட்டம் தயாரித்திருக்கிறார்கள். பொருளா தாரத் துறையிலும் இது போன்ற திட்டங்களை வகுத்து சரிவர  அமுலுக்குக் கொண்டுவர இப்போதிருந்தே அவர் கள் பெருமுயற்சி செய்து வருகிறார்கள். கிராமப் பஞ்சாயத் துகள், கூட்டுறவுச் சங்கங்கள் கிராம சீரமைப்பு வழிகாட்டிகள் மூலமாக மகா ஜனங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதற்குத் தேவையான உபாயங்களை ஜஸ்டிஸ் கட்சியார் தேடிக்கொடுக்க தயாராயிருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டமானது இப்போது உலகம் முழுவதிலுமே ஏற்பட் டிருக்கும் ஒரு சங்கடமான நிலைமை. இந்தச் சிக்கலான கஷ்டத்திலிருந்து விடுதலை அடைவதற்கு பலதேசங்களில் அரசியல் நிபுணர்கள் ஒரு வித திட்டம் வகுத்து வேலை செய்து வருகிறார்கள். சற்று முன்பு குறிப்பிடப்பட்ட துறைகளில் நமது நாட்டிற்கு சாத்தியமான அபிவிருத்தி ஏற்படும் போது இந்த வேலையில்லாக் கஷ்டம் பெரும் பாலும் நமது நாட்டில் குறையும் என்று நம்புவது மிகையா காது. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடம், பஞ்சாயத்து போர்டு கூட்டுறவு சங்கம் ஆகிய பொது நிலையங்கள் ஏற்படவேண்டும். தாலுகா தோறும் ஒரு நில அடமான பாங்கு, விளை பொருள்கள் விற்பனைச் சங்கம், முதியோர் கல்விச்சாலை, ஆஸ்பத்திரி முதலியவை ஏற்படவேண்டும், பிர்க்கா ஒவ்வொன்றிலும் பயிற்சி பெற்ற ஒரு வழி காட்டியாவது தங்கியிருந்து கிராமவாசிகளின் தேவைகளை ஒருமுகமாக உள்ளபடி எடுத்துக் காட்டி தக்க பரிகாரங்கள் தேடிக்கொடுக்கும் ஆற்றலும் அறிவும் உள்ளவர்களாய் அமையவேண்டும், கிராமங்களில் மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும், ரேடியோ, சினிமா, நிழல் படங்கள், நடமாடும் பள்ளிக் கூடங்கள், புஸ்தக சாலைகள் மூலமாக புதிய புதிய சத் விஷயங்களை மகாஜனங்களுக்கு போதிக்க வேண்டும். சொற்பச் செலவில் சத்துள்ள சாப்பாடும், சுகாதார விடுதிகளும் ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.) நிலமில்லாத விவசாயத் தொழி லாளிகளுக்கு கூட்டுறவு முறையில் தொழிலாளர் சங்கங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஸ்தல ஸ்தாபன ரோட்டுகளை அமைப்பதும், சீர்படுத்துவதுமான வேலைகளை கூட்டுறவு தொழிலாளர் சங்கங்களே நடத்தும்படி விட்டுவிடவேண்டும். ஒரு அளவு க்குக் கம்மியாக கூலி விகிதத்தைக் குறைக்கக்கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும், ஆலைத் தொழில்களில் கிடைக் கும் லாபத்தில் ஒரு சிறு பகுதியாவது தொழிலாளர் களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் குழுமி இருக்கும் நகரங்களில் கூட்டுறவு முறையில் வீடு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண் டும், காடு நகரங்களில் கடன் சுமை தாங்க முடியாமல் கஷ்டப்படுகிற ஏழை மக்களுக்கு சீக்கிரத்தில விமோசனம் தேடிக் கொடுக்க வேண்டும்.

ஒரு சில காரியங்களை மட்டும் குறிப்பிட்டேன். இவைக ளையும், இது போல அநேக பொது நல சேவைகளையும் செய்து முடிப்ப தற்கு புதிய சட்டசபைகளே சிறந்த சாதனங்களாய் இருக்கின்றன. நாம் எதிர் பார்க்கிற அளவுக்கு மகா ஜனங்கள் ஷேமம் அடையா விட்டால், இன்னும் அதிகமாக அரசியல், நிதிசுதந்திரம் அளிக்கும்படி சர்க்காரை சட்ட ரீதியில வற்புறுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம், நமது நியாயமான கோரிக்கைகளை அவர்களும் காலக் கிரமத்தில் பூர்த்தி செய்வார்கள் என்பது நிச்சயம்.

பொது

பலவித முறைகளில் நடைபெற்று வருகிற எதிர்ப் பிர சாரத்தைக் கண்டு ஜஸ்டிஸ் கட்சியார் பயப்படப் போவ தில்லை. ஜஸ்டிஸ் கட்சி இது வரை செய்திருக்கும். ஆக்க வேலையையும், இனிமேல் செய்யக் கூடிய உருவகமான வேலையையும் மகா ஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரி வித்துக் கொள்ளவது மட்டும் நமது கடமை. விஷயங்களை சீர் தூக்கிப் பார்த்து பாரபட்சமில்லாமல் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சக்தியும், புத்தியும் மகாஜனங் களிடம் நிரம்பி இருக்கின்றன. பல வித அரசியல் கட்சி களைச் சேர்ந்தவர்கள் போக, மீதியுள்ளவர்களே அதிகமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கிறார்கள். நடு நிலைமை வகிக்கிற இந்தப் பெரிய கோஷ்டி யார் தான், கட்சிகளின் வெற்றி அல்லது தோல்வியை உண்டுபண்ணுகிற வர்கள். இந்த உண்மையை உணர்ந்து நியாயமான முறை யில் நாம் தேர்தல் பிரசாரம் செய்து வெற்றி அடைவோமாக.

- விடுதலை 4.11.1936

விடுதலை 17.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக