சனி, 25 ஜூலை, 2020

பெரியார் ஜாதியை ஒழிச்சிட்டாரா?

பகுதி - 1

பெரியார் ஜாதியை ஒழிச்சிட்டாரா? தமிழ்நாட்டில் ஜாதியே இல்லையா? 

பதில்: உண்மைதான்! தமிழ்நாட்டில் ஜாதி ஒழியவே இல்லை தான்!

ஆனால் ஒரு 100 வருசத்துக்கு முன்பு ஜாதி எப்படி இருந்தது?

அத விடு்ங்க... 50 வருசத்துக்கு முன்னாடி உங்க தாத்தா எப்படி இருந்தாரு?

அவரு படிச்சவரா? என்ன வேலை பார்த்தார்? 

ஒரு 25 வருசத்துக்கு முன்னாடி உங்க சொந்தகார மாமா, சித்தப்பா, பெரியப்பா இவங்கல்ல எத்தனை பேரு படிச்சு வேலையில இருந்தாங்கன்னு நினைவிருக்கா?

ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி உங்க வீட்ல வேல பாத்த மனிதர்களை நினைவிருக்கா... இல்ல உங்க சொந்த, பந்தத்துல, அக்கம் பக்கத்துல கூலி வேலை செஞ்சவுங்களை நினைவிருக்கா? 

அத கூட விடுங்க... சென்னையில இருக்குற உங்க வீட்டுல வேலை செய்யிற வேலைக்காரம்மா கிட்ட அவுங்க புள்ளைங்க என்ன பண்றாங்கன்னு கேளுங்க..

முடிஞ்சா எப்பவாச்சும் ஒரே ஒரு வாட்டி அதட்டல் போட்டு பாருங்க..

இதுக்கெல்லாம் என்ன பதில் வருதோ அதை சம் அப் பண்ணுங்க.. 

அதுதான் பெரியாரோட சாதனை.

நீங்க சொன்ன மாதிரி ஜாதிகள் ஒழியல. ஆனா அவர் தொடங்கி வச்ச அரசியல் மாற்றங்களால் ஜாதிய வல்லாதிக்கம் ஒழிஞ்சிருக்கு.

இன்னிக்கும் ஆணவக் கொலை நடக்குதுதான்.

ஆனா ஓர் ஒடுக்கப்பட்டவனுக்கு, தான் தாழ்ந்தவன், தான் தாழ்ந்தவள் இல்லைங்குற தன்னம்பிக்கை வளந்திருக்கு. அதுனாலதான் அவன் பயமில்லாம காதலிக்கிறான், அல்லது காதலிக்கிறாள். ஆதிக்க ஜாதி பொண்ணு, பையன்னு தெரிஞ்சும் ப்ரொப்போஸ் செய்கிறார்கள்.

50 வருசத்துக்கு முன்னாடி இது சாத்தியமா? ஏன் அப்போ யாரும் காதலிக்கலையான்னு கேக்கலாம்.. காதலிச்சாங்க.. ஆனா எத்தனை படிச்சு, பணியில் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்களுக்குக் காதலைச் சொல்ல அன்றைக்கு ஒரு தயக்கம் இருந்துச்சு.

பெரும்பாலும் நகரங்களில் உயர்கல்விப் பயிலும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலும் உயர் ஜாதி பெண்கள்/ஆண்கள் முன்னெடுப்பில் மட்டுமே அப்படிப்பட்ட காதல் மலர்ந்தது.

இன்றைக்கு என்ன நிலைமை? 

எதற்குக் காதலை உதாரணமாக எடுத்தேன் என கேட்கலாம்.

காதலும், கலப்புத் திருமணங்களுமே ஜாதியை அற்றுப் போகச் செய்ய வல்லவை. 

கல்வியும், வேலை வாய்ப்பும் அதற்கான புறக் காரணிகளாக இருந்து வருகின்றன.

கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம் கல்வி பெற்றதும் சட்டமாக்கப்பட்ட 
இடஒதுக்கீட்டு முறையில் பணியில் அமர்ந்ததும் குடிசை வீடுகள் கல் வீடுகளானதும், அழுக்கு வேட்டிகள் ராம்ராஜ் வேட்டிகளானதும், நடக்கவே பயந்த சாலைகளில் ஸ்கார்ப்பியோக்களில் பறப்பதும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஓர் அரசியல் உருவானதும், பிரதிநிதித்தும் உருவாக்கப்பட்டதும், வெவ்வேறு ஜாதியானாலும் பணத்திலும், வசதியிலும், அந்தஸ்த்திலும், அதிகாரத்திலும் நேருக்கு நேர் அமர்ந்து பேசும் நிலைக்கு உயர்ந்ததிலும் பெரியார் இருக்கிறார்.

- வி.சி.வில்வம் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக