சனி, 4 ஜூலை, 2020

உடன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்!


உடன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்!
எமதருமை மாணவச் செல்வங்களே, பட்டம் பெற்று வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களே, வேலை கிட்டாதா என்று ஏங்கும் தோழர்களே, சொந்தப் பணமோ, பெற்றோர் தந்த பணமோ, ஓட்டல் கடைக்கு சென்று நண்பர்களுடன் உல்லாசமாக உட்கார்ந்து, ஒய் யாரமாக 'அரட்டைக் கச்சேரி'யும் நடத்தி அனைவரும் அவர்கள் ஜாதி, மதம், பாலியல் பாகுபாடுமின்றி உணவருந் தும் வழமை உள்ள திராவிட - தமிழ் - வாலிபர்களே,

5 நட்சத்திர உணவு விடுதி முதல் வீதிகளில் அமைந்த எளிய உணவு விடுதிகள் வரையில் இன்று எங்கும் பேதாபேதமின்றி, எல்லோரும் ஒன்றாக உடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்து, உண்டாட்டத்தில் கொண்டாட்டமே கருதி குதூகலித்து மகிழும் நண்பர்களே, ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு - ஏன் அதற்கும் கூடக் குறைவான காலத்திலேயே அனைத்து ஜாதியினரும் பொது உணவு விடுதிகளான ஓட்டல்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் நிலை - உரிமை - இருந்ததா?

வர்ணாசிரம சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு, சமுதாயத் தில் இன்னமும் ஜாதி என்னும் விலங்குகள், பலரது கைகளில் தெரியாவிட்டாலும், மூளையில் போட்டுப் பூட்டி விட்டு, ஜாதி வெறித்தன போதையில் அவர்களைத் தள்ளாட வைத்துள்ள நிலையில் அன்று மக்கள் அனை வரும் சமமாக அமர்ந்து - உடன் உண்ணல் என்ற சமத் துவ உரிமையை அவர்களுக்கு அளித்ததா? இல்லை, இல்லவே இல்லை என்பதுதான் திட்டவட்டமான பதிலாகும்.

இந்த உரிமை எப்படிக் கிடைத்தது?

இதோ ஒரு வரலாறு:

“ஆப்கனிஸ்தானத்தை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டதில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக் கதுதான்.

ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்

ஆனால் மனுஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர்.

“.... பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினை உருவாக்கி, அவர்களை வெறும் வேலைக்காரர்களாக ஆக்கியது மனு. பிராமணனக்குத் தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப் பற்றி இப்படி எழுதியது.

“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மாபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் பேசுகிறது மனு.

- அக்னி ஹோத்திரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

இந்து மதம் எங்கே போகிறது, பக். 20

மனுதர்மத்தின்படி, சூத்திரன் அடிமை. அடிமைக்குக் கல்வி உரிமை, சொத்துரிமை, திருமண உரிமை... போன்ற பல மனித உரிமைகளில் சம உரிமை எதுவும் கிடையாது. அது மட்டுமா? பிறவி இழிவும் கூடத்தான்.

‘சூத்திரன்’ என்றாலே பார்ப்பான் வைப்பாட்டி மகன் என்று மனு அத்தியாயம் 8, சுலோகம் 415இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்பர் - வெள்ளையர் என்ற நிறவெறி, இனவெறி ஆதிக்கக் கொடுமை ஆட்சி புரியும் மக்களிடம் கூட இப்படி, ‘வைப்பாட்டி மகன் - தாசி புத்திரன்’ என்ற பிறவி இழிவுத் தொற்று - அவமானம் இணைந்திருப்பது உண்டா உலகில்? இல்லையே!

சாப்பிடுவதில்கூட European Restaurant Lavtory என்று ரயில்வே ஸ்டேஷன்களில் தனித்தனியாக இருக் கும் சமூகக் கொடுமை - அக்கிரமம் இருந்தது; ஆனால் இந்த நாட்டின் வர்ணாசிரம ஜாதியின் கொடுமை, ஒரு புறம் மானத்திற்கு பங்கம் - பறிமுதல் - அவமானம்; மறுபுறம் சமத்துவமின்மை - அறிவுப் பறிமுதல்.

எந்த அளவு மோசமான - உலகின் எங்கும் காண முடியாத அவலம் - அருவறுப்பான நிலை என்றால், காசு கொடுத்து உணவு விடுதிகளில் உண்ணும் போது கூட, அனைவரும் கலந்து உண்ணும் உரிமை கிடையாது. ஓட்டல்களில் ‘பிராமணாளுக்குத் தனி இடம், சூத்திரர் களுக்கு - கீழ்ஜாதிக்காரர்களுக்கு தனி இடம்‘ என்று பகிரங்கமாகவே ‘இடஒதுக்கீடு’ அறிவிப்புப் பலகை தொங்கிய நிலையில் பல ஆண்டு காலம் தொடர்ந்தது.

ஒன்றாகப் படித்துப் பழக வேண்டிய பருவமான மாணவப் பருவத்தினருக்குக் கூட ஒன்றாக அமர்ந்து கலகலப்பாக மகிழ்ந்து உரையாடி உடன் உண்ணல் வாய்ப்பு மறுக்கப்பட்டது 80, 90 ஆண்டுகளுக்கு முன்பு, அதன் விளைவே தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது நடத்திய சேரன்மாதவி குருகுலப் போராட்டம் (1924) “சமபந்தி போஜனம்“ என்ற உரிமைப் போரின் முதல் கட்டமாகும்! மனுவின் கொடுமையை நாட்டோர் புரிந்து கொள்ள வாய்ப்பு!

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கு வதற்கு முன்பே - அவர் காந்தியாரைத் தலைவராக ஏற்று, காங்கிரசில் சேர்ந்து, கடுமையாக உழைத்த நிலையில் தான் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் - உடன் (சமமாக) உண்ணல் உரிமைப் போராட்டம் - வெடித்தது!

பார்ப்பனர்கள் சாப்பிடும்போது சூத்திரர்கள் பார்க் கவே கூடாது; பார்த்தாலே தீட்டுப்பட்டு விடும் என்று கூறும் மனுதர்மம் தான் இந்தக் கொடுமைக்கு மூல சனாதனச் சம்பிரதாயக் கட்டளையாகும்.

இதோ மனுவின் சுலோகம் படியுங்கள்

“பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும்

நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும்

பதார்த்தம் அசுத்தமாகின்றது”

(மனு 3ஆவது அத்தியாயம் 241ஆவது சுலோகம்)

“சண்டாளன் - ஊர்ப்பன்றி - கோழி - நாய் -

மாதவிடாயானஸ்த் - பேடி - இவர்கள் பிராமணர்கள்

புசிக்கும் போது பாராமலிருக்கும்படி செய்ய வேண்டியது”

(மனு 3ஆவது அத்தியாம், 239ஆவது சுலோகம்)

நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி (உழைக்கும் மக்கள்) யினர் பன்றி, நாய், கோழி இவற்றைவிடவும் மிகவும் கேவலமானவர்கள் என்றே எழுதி வைக்கப்பட்டிருப்ப தைக் காலம் காலமாக ஹிந்து சனாதனம் கடைப் பிடித்ததன் தீய விளைவுதான் தேசீய குருகுலம் என்று பலஜாதிப் பிள்ளைகளைச் சேர்ந்த குருகுலத்தில் வ.வே.சு. அய்யர் என்ற பார்ப்பனர், பார்ப்பனப் பிள்ளை களுக்கு தனிச் சாப்பாடு, உயர் தரச் சாப்பாடு, பார்ப்பன ரல்லாதாருக்குத் தனிவரிசை, அதுவும் வெளியில் திண்ணையில் என்ற கொடுமையை அறிந்ததும், அன்று தமிழ்நாடு காங்கிரசின் தலைவர், செயலாளராக இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்களான தந்தை பெரியார், டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாண சுந்தர முதலியார் முதலிய பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலை வர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்!

ஆனால் இதனை ஆதரிக்க வேண்டிய முற்போக்கு பிராமணர்கள் என்று கூறப்பட்ட நிலையில் சி.ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி), சத்திய மூர்த்தி அய்யர், டி.எஸ்.எஸ். ராஜன் அய்யங்கார் போன்ற பார்ப்பனர்கள் அவர் களுக்குள் பல கோஷ்டியாக இருந்த நிலையில்கூட, இதில் ஒன்றாக நின்று தமிழ் தலைவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். தந்தை பெரியார் அதனைத் தோற் கடிக்கச் செய்தார். குருகுலம் நடத்திய வ.வே.சு. அய்யர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகப் புரட்சி நடத்தியவர் என்று புகழப்படுபவர். தான் தொடங்கிய தேசிய குருகுலத்தில் இப்படி பார்ப்பனரல்லாத மாணவர்களும், பார்ப்பன மாணவர்களும் உடன் அமர்ந்து உண்ணலை ஏற்படுத்தாமையை நியாயப்படுத்திப் பேசினார்.
-கி.வீரமணி

- தொடரும்
திராவிடர் கழகம், முகநூல் பக்கம், 4.7.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக