வியாழன், 26 ஜனவரி, 2017

மணமுறையும் புரோகிதமும்



24.11.1929, குடிஅரசிலிருந்து....
ஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு இவ்விரு பாலர்க்கும் இயற்கை ஒப்பந்தம் ஒன்று, என்று மனித சமுகம் உற்பத்தியானதோ அன்று முதல் தானாகவே இருந்து வருகின்றது, மனித சமுகம் பரவி விரிந்து நெருக்கமானதும், பெண்கள் கருப்பவதிகளாய் இருக்கும் காலத்து அவர்கட்கு ஒரு பாதுகாப்பு ஏற்படவேண்டும் என்ற முறையிலும்; மனித சமுகத்தில் சிக்கன நெருக்கடி ஏற்பட்டு அதனால் பேராசை வஞ்சகம், சோம்பேறித்தனம் முதலியவைகள் உட்புகுந்துவிட்டமையாலும் பொது சனங்கள் அறிய இவ்விருபாலர்க்கும் மணவினை ஏற்படுதல் அவசியமாயிற்று, இன்றேல், பெண்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பது திண்ணம்.
மேலும் குழந்தைகள் சதிபதிகட்கும் பொதுவாதலால், குழந்தைகளைப் பொறுத்தவ ரையிலாவது தந்தையின் பொறுப்பு விளக்கமாகத் தெரிய வேண்டிய அளவிலும் மணவினை பொது சனங்கள் அறிய நிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாயிற்று. எனவே, உலகத்தில் மிகச் சாதாரணமானதும் அதே சமயத்தில் மிகப் பெரியதுமான இவ்வாண் பெண் இணக்கம் மணம் என்ற பெயருடன், பொது நிகழ்ச்சி என்ற நிபந்தனையுடனும் நாகரிகம் முதிர்ந்த சமுகங்களால் கையாளப்பட்டு வருகின்றன.
ஆதித்தமிழர்கள் தங்கள் மணவினைகளை காதல் வயப்பட்டு நடத்தினார்கள். ஆண் பெண் இணக்கம் ஏற்பட்ட பின்னரேயே தாய் தந்தையர்கட்கும், ஊர்த் தலைவர்கட்கும் தெரியப்படுத்தி விழாச் செய்வது வழக்கமாய் இருந்தது. இவ்வொப்புயர்வற்ற அறிவுடைய மணமுறையைப் பற்றி நாம் நமது சங்க நூல்களில் பார்க்கக் காண்பதுடனின்றி இன்றைக்கும் பர்மா தேசத்திலும், இந்தியாவுடன் ஒரு காலத்தில் ஒன்றுபட்டிருந்த சுமத்ரா, ஜாவா, வாலி, முதலிய தீவுகளிலும் காணக்கூடும். ஆதலின் மணமுறைக்குப் புரோகிதருக்கும் யாதொரு சம்பந்தமு மில்லை.
எல்லா நிகழ்ச்சிகளிலும் புரோகிதத்தைப் புகுத்திய பிறந்தது முதல் இறக்கும் வரையில் பார்ப்பனரல்லாத குடும்பங்களில் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் காசைப் பறிக்க சூழ்ச்சி செய்த பார்ப்பனர்கள் மணவினையினையும் தமது மகசூலில் சேர்க்காமலாயிருப்பர் எனவும் தமிழர் மணவினையிலும் பார்ப்பனப் புரோகிதர் புகுந்து கொண்டனர். இது சொற்ப காலமாக அனுசரிக்கப்படும் ஒரு வழக்கமாகும்.
ஆனால் பார்ப்பனப் புரோகிதனோ வேறு எந்தப் புரோகிதனோ இல்லாமல் மணவினை நிகழ்த்தக் கூடுமா? அவ்வாறு நிகழ்த்தினால் அத்தகைய மணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கக் கூடுமா? என்பது கேள்வி.
இத்தகைய கேள்விக்கே நாம் வருந்துகின்றோம். இத் தகைய கேள்வி ஏற்படும் ஒரு நிலைமைக்கு நாம் மிகவும் துக்கிக்கின்றோம்.
பார்ப்பனர் அர்த்தமற்ற தனக்கே விளங்காத சிலவார்த்தைகளை மந்திரம் என்னும் பெயரால் உச்சரித்து, மணமக்கள் முகத்தை சுட்டுப் பொசுக்கி, கண் களிலிருந்து நீர்வடியச் செய்து அம்மியை மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதுமான மூடச் சடங்குகள் சிலவற்றைப் புரிவித்து, ஒவ்வொரு சடங்கிற்கும் சுவர்ண புஷ்பம் பெற்று மூட்டை கட்டிக்கொண்டு போனாற்றான் விவாகம் முடிந் ததாக அர்த்தம் என்று மதியுள்ளவர்கள் கூறுவார்களா?
இடைக்காலத்தில் சில காலம் மாறுதற்கேற்ப ஒரு குருட்டு வழக்கம் பீடித்ததனால் இவ்வழக்கத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்பது ஒரு அறிவுடைய நிர்ப்பந்தமா? இந்த நிர்ப்பந்தத்தை நாம் ஏன் அங்கீகரிக்க வேண்டும். அரசாங்கச் சட்ட மூலமாக பார்ப்பனரை வைத்துத்தான் விவாகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வரையறையை வற்புறுத்துவதால் மூடச் சடங்காகிய புரோகிதத்தை அரசாங்கமே ஆதரவு செய்வதாகும். பெரும் பான்மையான தமிழ்மக்கள் பார்ப்பனர்களையே வைத்து விவாகம் செய்து கொள்ளுவது இல்லை.
சில காலமாய் நடைபெறும் சீர்திருத்த விவாகங்களிலும் பார்ப்பனர்களும் பார்ப்பனியமும் நீக்கப் பெற்றுள்ளது. மேலும் தமிழர்களில் பிரம்மசமாஜம் போன்ற இயக்கங் களைத் தழுவி நிற்பவர்களும் புரோகித முறையை அநுட்டிப்பவர்களன்று. எந்த விதத்தாலும் புரோகிதம் என்ற ஒரு விலாசம் இருக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே விவாக முறையில் புரோகிதர்கள் குறுக்கிடுவதை தமிழ் மக்கள் சுயமரியாதை யுடன் நீக்குவார்களாயின் இம்முறையில் நிகழ்ந்த மணங்களை இவ்வரசாங்கமும் சரி, எவ்வரசாங்க மாயினும் சரி அங்கீகாரம் செய்துதான் ஆகவேண்டும்.
இதை ஒழித்து மலாய் நாட்டில் பார்ப்பனரின்றி செய்த ஒரு மணத்தை மணமாக அங்கீகரிக்க மறுத்த செயலை நாம் வன்மையாக கண்டிப்பதுடனின்றி திரு.எஸ்.வீராசாமி அவர்கள் மேற்கூறிய முறையில். தமிழரின் மனப்பான் மையை எடுத்துக் காட்டி, தமிழர் மணங்கட்கு புரோகிதன் அவசியமில்லை என்று குறிப்பிட்டதையும், நாம் பாராட்டு கின்றோம். திரு.எஸ்.வீராசாமி அவர்களைப் போன்றே நமது கூற்றை ஆதரித்து புரோகிதத்தைக் கடிந்து வெளியிட்டுள்ள திரு.எஸ்.சுப்பையா நாயுடுவின் செயலையும், நாம் மும்முறையும் போற்றுகின்றோம்.
இந்நிலையில் மலாய் நாட்டுக்குச் சென்று தமிழருடைய உதவியால் வயிறு வளர்க்கும் ஒரு அய்யங்கார் பத்திரிகை யாகிய தமிழ்நேசன் புரோகிதத்தை ஆதரிப்பதும், சுயமரி யாதைக் கொள்கைக்கு எதிராய் பிரச்சாரம் செய்வதும் வியப்பன்றே.
-விடுதலை,10.9.16

சுயமரியாதை இயக்கத்தின் பலன்



3.11.1929- குடிஅரசிலிருந்து...
ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான சம்பந்தமான ஒரு உத்தியோக அறிக்கையில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, கோயில் வரும்படி குறைந்து வருகின்றது. ஆதலால் முன்போல இனிவரும்படி எதிர்பார்க்க முடியாது என்று காணப்பட்டிருக்கின்றது.
மற்றும் ரிஜிஸ்திரேஷன் இலாகா வருஷாந்திர ரிப்போர்ட் ஒன்றில் இப்போது ரிஜிஸ்டர் கல்யாணங்கள் அதிகப்பட்டு வருவதால், கல்யாணங்களை ரிஜிஸ்தர் செய்ய ஒவ்வொரு இடத்திலும், அதிகமான ரிஜிஸ்டிரார்களை நியமிக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. வைதிகக் குடுக்கைகளுக்கும், புராண அழுக்கு மூட்டைகளுக்கும், வருணாச்சிரம புராணங் களுக்கும் அடியோடு பொதுமேடைகள் இல்லாமல் செய்து விட்டது.
காஞ்சிபுரம் சங்கராச்சாரி மடத்தில் இருந்து வந்த பள்ளிக் கூடத்தில் தீண்டப்படாத வர்களைச் சேர்த்துக் கொள்ளாததற்காக கிராண்டு மறுக்கப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்பட்டுவிட்டது.
சென்னைப் பச்சையப்பன் காலேஜில் தீண்டப் படாதவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அருப்புக் கோட்டை நாடார் பள்ளிக் கூடத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டாய்விட்டது. திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருதப் பள்ளிக் கூடத்தில் பார்ப்பன ரல்லாதார்களை சேர்த்துக் கொள்ளவேண்டுமாய் சர்க்கார் உத்தரவு போட்டு அந்தப்படி சேர்த்துக் கொண்டும் ஆய்விட்டது.
பெண்களுக்கு மூன்றாவது பாரம்வரை சம்பளம் இல்லாமல் சொல்லிக் கொடுப்பதாக சர்க்கார் ஒப்புக் கொண்டு அந்தப்படி அமலிலும் வந்துவிட்டது.
பெண்களுக்குப் போதனை முறைப் பாடசாலைகள் முக்கிய தாலுகாக்கள் தோறும் ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வேலை நடந்து வருகின்றது.
விதவைகள் ஆசிரமம் வெளி ஜில்லாக்களில் ஏற்படுத்த யோசனைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இவ்வள வும் அல்லாமல் முனிசிபாலிடிக்குச் சம்பந்தப்பட்ட பொதுக் கிணறுகளில் தீண்டப்படாதார் உட்பட எல்லோரும் தண்ணீர் எடுக்கலாம் என்றும் யாராவது ஆட்சேபித்தால் 50 ரூபாய் அபராதம் என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. ஜில்லா போர்டு, தாலுகா போர்டு சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கும் அதே மாதிரி சட்டம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
பதினாறு வயதிற்குட்பட்ட பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் கூடாது என்றும், பதினெட்டு வயதுக்கு மேற்படாத கல்யாணமில்லாத பெண்களை புணரக் கூடாது என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. விதவைகள் சொத்துரிமைக்கும், பெண்கள் சொத்துரிமைக்கும் சட்டங்கள் கொண்டு வரப்படப் போகின்றன.
சாமிபேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விபசாரி களாக்கப்பட்டுவருவதை நிறுத்தச் சட்டங்கள் செய்யப்பட்டு விட்டன.
பட்டணங்களில் விபசார விடுதிகளை ஒழிக்கச் சட்டம் செய்யப்படுகின்றது. இப்படியாக இன்னும் அநேக விஷயங்கள் இந்தியா முழுவதும் புற்றில் இருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல தினத்திற்குத்தினம் புதிதாக இந்த இரண்டு வருஷத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றதை கண்ணில் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.
இன்னமும் அடுத்த வருஷத் துவக்கத் தில், சில விஷயங்களுக்கு சத்தியாக்கிரகம் என்பவைகள் தாராளமாய் நடைபெறக் கூடிய நிலைமைக்கு நாடு வந்து விடும் என்கின்ற பலமான நம்பிக்கை நமக்குண்டு என்பதையும் தைரியமாய் வெளிப்படுத்துகின்றோம். அன்றியும் அதற்குள் பார்ப்பனர்கள் சாரதா சட்டத்தை மீறி செய்யப் போவதாய்க் கூறும் சத்தியாக்கிரகம் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகின்ற படி நடக்குமானால், அதுவும் நமது சுயமரியாதை இயக்கத்தின் பலன் என்பதோடு அதை நம்மவர்கள் நடத்தப்போகும் சத்தியாக்கிரகத்திற்கு அனுகூலமாய் தேசத்தில் உணர்ச்சி உண்டாக்கவும் கூடும்.


திருப்பதி வெங்கடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை!

24.11.1929- குடிஅரசிலிருந்து...

திருப்பதி வெங்கடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம்.
தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூஜையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங் களையும், பூமியையும், கட்டிடங்களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டி ருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும், நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள்தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.
ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும் மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து, அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலீசாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச் சைக்குப் பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கிடாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?
(தந்தை பெரியார் அவர்களது நகைச்சுவை உணர்வையும் நையாண்டி ஆற்றலையும் இக்கட்டுரை விளக்குகிறது - ஆசிரியர் கி. வீரமணி)
-விடுதலை,10.9.16

ஆசிரியர் கி.வீரமணி எழுதிய முதல் தலையங்கம்

வரியில்லாமல் ஆட்சி நடக்குமா?


“நிலைமையில் அபிவிருத்தி காண வேண்டுமானால் வரி போடவேண்டும், கடன் வாங்க வேண்டும். கடனும் வாங் காதே, வரியும் வாங்காதே என்றால் அது நடைமுறைக்கு ஒத்ததாக இருக்கமுடியுமா?” என்று பேசியுள்ளார் தமிழ் நாட்டு முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள்.
எந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தபோதிலும், அரசாங்கத்தை நடத்த நிதி தேவை. நிதியைப் பெருக்க பெரும்பாலும் நான்கு வழிகள்தான் உள்ளன.
1. வரி
2. கட்டண வருமானம் (ரயில், தபால், ரிஜிஸ்டிரேஷன் மூலம் வருவது)
3. கடன்
4. நோட்டு அச்சடித்தல்
நமக்குத் தெரிந்தவரையில் இதைத்தவிர வேறு வழிகள் கிடையாது என்றே கருதுகிறோம். இந்த உண்மை எதிர்க் கட்சி நாற்காலியில் உள்ள தலைவர்களுக்குத் தெரியாது என்று நாம் சொல்லமாட்டோம். தெரிந்தும் மறைத்து, திரித்துக் கூறினால் தான் ஆளுங்கட்சியை வீழ்த்த முடியும் என்பது அவர்களது முடிவு.
சென்ற நூற்றாண்டில் அரசாங்கம் என்றால் உள்நாட்டுக் கலவரங்களிலி ருந்தும் வெளிநாட்டுப் படையெடுப் புகளி லிருந்தும் மக்களைப் பாதுகாப்பதற்கும், சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கும், உடைமைகளைக் காப்பதற்குமே என்ற கருத்து நிலவி வந்தது.
ஆனால் இந்நூற்றாண்டில் அக்கடமைகளோடு, மக்கள் நலனைப் பெரிதும் பெருக்கக்கூடிய சமுதாய நல்வாழ்வுத் திட்டங்களை அமுல் செய்து எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற அடிப் படையில் பல கடமைகளும் பெருகி உள்ளன.
இந்நிலையில் அரசாங்க வருமானத்தைப் பெருக்காமல் எந்த அரசாங்கம் தான் மக்களுக்கு நன்மை செய்யமுடியும்?
தனி மனிதனின் பட்ஜெட் என்பது வரவுக்கேற்ப செலவை அமைத்துக் கொள்வதாகும். அரசாங்க பட்ஜெட் என்பது செய்ய வேண்டிய செலவினங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வருமானத்தைப் பெருக்குவது என்பதாகும். இது பொருளாதார தத்துவத்தின் பால பாடம்.
கொடுமை, கொடுமை, தாள முடியாத வரிக்கொடுமை என்று பிரச்சாரம் செய்யும் கோயபெல்ஸ் கூட்டத்தார்க்கு இதுகூடவா தெரியாது?  உதாரணத்திற்கு ஒன்று காட்டு வோம்.
தமிழ்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்து வந்திருக்கிறதென்பதை கல்விக்காக ஆண்டுதோறும் செலவான கணக்கைப் பார்த்தால் தெரியும்.
சென்னை ராஜதானியில்
(24 ஜில்லாக்கள் இருந்த காலத்தில்)
கல்விக்கான செலவு ரூ. 1 கோடியே 33 லட்சம்
1921-22இல் செலவு ரூ. 1 கோடி 33 லட்சம்
1922-23இல் செலவு ரூ. 1 கோடியே 54 லட்சம்
1923-24இல் செலவு ரூ. 1 கோடிய 63 லட்சம்
1924-1925இல் செலவு ரூ. 1 கோடியே 73 லட்சம்
பிறகு ஜஸ்டீஸ் ஆட்சியின் போது கட்டாய இலவசக் கல்வி புகுத்தியதால் 2 கோடியே 25 லட்ச ரூபாய் செலவழித்தனர்.
(ஆச்சாரியார் 1935-37 ஆட்சியிலும் ரூ. 2 கோடியே 52 லட்சம்; 1952-54இல் 11 கோடி ரூபாய் கல்விச் செலவை கணிச மாகப் பெருக்கவில்லை)
இன்று தமிழ்நாட்டின் மற்ற மொழிப் பகுதிகள் பிரிந்த நிலையில் (சுமார் 12 ஜில்லாக்கள் உள்ள நிலையில்) கல்விக்கான செலவு சமீபத்தில் மலையென உயர்ந்து இந்த ஆண்டு சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கல்வித்துறையில் இந்த அதிசயிக்கத்தக்க சாதனையை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. இன்னும் மென்மேலும் பெருகிக்கொண்டே போகும். இந்த ஒரு துறையின் செலவினமே இப்படி என்றால் ஊர்தோறும் மருத்துவமனைகள், சாலை வசதிகள், முதலியவை பெருகுவதால் எவ்வளவு செலவு அதிகரிக்கும் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாமே!
வரியை உயர்த்தாமல் எப்படி இதைச் செய்ய முடியும்? பஸ் முதலியவற்றை அரசாங்கமே எடுத்து நடத்தினால் வரி தேவையிருக்காது என்று கூறுகின்றனர். அவற்றை எடுத்துக் கொண்டால் பல நூறு கோடி ரூபாய்களை நஷ்ட ஈடாகத்தர வேண்டுமே! அரசாங்கத்தின் ஆண்டு வருமானமே 113 கோடி ரூபாய்தானே?
அதோடுகூட, அத்துறைக்கு அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் திறமையாக நடத்தச் செய்யும் பிரச்சினை வேறு உள்ளதே?
எல்லா உடமைகளையும் தேசிய மயமாக்கி உள்ள சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளிலே வரியே வசூலிக் கப்படுவதில்லையா?
தேசீய மயமாக்குதலே சர்வரோக நிவாரண சஞ்சீவி என்று கூறும் கொலம்பஸ்கள் கவனத்திற்கு இவை ஏன் வர வில்லை?
தேசியமயமாக்கப்பட்டால் கூட வரியில் பங்கு என்பதையும் எந்த அரசாங்கமும் தள்ளிவிடமுடியாது என்பதை விளக்கத்தான் இதைக்கூறுகிறோம்.
சென்னை நகர கார்ப்பரேஷனில் நிர்வாகப் பொறுப் பேற்றுள்ள ஒரு கட்சியின் தலைவர், கார்ப்பரேஷனில் நீங்கள் வந்த வுடன் பாலும் தேனும் பெருக்கெடுத்தோடும் என்று கூறினீர்கள், அரசாங்கத்தின் வரி உயர்வைக் கண்டிக்கும் உங்களது நிர்வாகத்தில் சுமார் ஒரு கோடிக்கு மேல் வரியை உயர்த்தி யுள்ளீர்களே என்று சென்னை வாழ் மக்கள் கேட்டால், வயலுக்கு வரப்பு போல, வேட் டிக்குக் கரைபோல ஆட்சிக்கு வரி என்று உவமை காட்டிப் பேசினார்.
இந்த ஞானோதய ஒளி ஏன் இவர்கள் சென்னை கோட்டையில் இருக்கும்போது வருவதில்லை? ரிப்பன் கட்டடத்தில் ஒரு மனப்பாங்கும், கோட்டையில் மற்றொரு மனப் பாங்கும் இருக்கலாமா?
‘மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி’ என்பதுதானே இது?
நிஷ்காமிய கர்மயோகியான திரு.ஆச் சாரியாரின் வரி எதிர்ப்பின் ரகசியமும் இதே தத்துவத்தைக் கொண்டதுதான். அவர் முதலமைச்சராக இருந்த போது வரி கொடுப்பதைப் பற்றி குறிப்பிடுகையில் நல்ல காரியத்திற்காக நீங்கள் ஆண்டவன் சந்நிதியில் பக்தன் பயபக்தியோடு காணிக்கை செலுத்துவது போல் செலுத்தி வரவேண்டும் என்றார்.
அவர் ஏன் இப்போது வரியைக் கண்டிக்கிறார் என்கிறீர்களா? அதற்குப் பெயர்தான் அரசியல்! அரசியல்!! அரசியல்!!!
- விடுதலை 25.8.1962
-விடுதலை ஞா.ம.3.12.16

தமிழர் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது


(06.03.2012)
சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மய்யத்தின் ஆண்டு மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திராவிடர் இயக்கம் பற்றி சிறப்புரையாற்றினார்.
சமூகத் துறையில் பெரும் தொண் டாற்றியமைக்காக தமிழர் தலை வருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டப்பட்டார்.
அண்ணா சாலையில் “டாம், டணீம்!”
சென்னை, அண்ணாசாலை யிலுள்ள எல்.அய்.சி. பேருந்து நிறுத்தத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பிள்ளையார் பால் குடிப்பதாகப் பரப்பப்படும் வதந்தியை எதிர்த்து தமுக்கடித்து பிரச்சாரம் செய்தார் (23.9.1995). அப்பொழுது அவர் உரையாற்றுகை யில், பிள்ளையார் சிலை பால் குடிப்பதை நிரூபித்தால், ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும். கொழுக் கட்டை சாப்பிட்டால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
-விடுதலை ஞா.ம.3.12.16

புதன், 11 ஜனவரி, 2017

இரட்டைமலை சீனிவாசன்




1893ஆம் ஆண்டில் பறையன் என்ற பத்திரிகை ஒன்றைத் தொடங்குவதற்கு ஒரு தனித் துணிவும், ஆழ்ந்த சிந்தனையும் கண் டிப்பாக தேவைப்பட்டு இருக்கும்; ஏன் அந்தப் பெயர் சூட்டப்பட்டது? பத் திரிகை நிறுவனர் அதற் கான காரணத்தையும் கூறி யுள்ளார்.

நான்! நான்! என்ற மகா மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவன் தன்னை உணர்ந்து சகல மும் அறியும் ஞானியாகி தலைவனைக் காண்பது போல், நான்! நான்! என்று எவன் ஒருவன் தன்னை யும், தன் இனத்தையும் மறுக்காமல், அச்சமும், நாணமும் இல்லாமல் உண்மை பேச தனி சுதந் திரத்தைப் பாராட்டுகிறானோ அவன் மதிக்கப் பெற்று இல்வாழ்க்கையில் சம்பத்துள்ளவனாய், நித்திய சமாதானத்துடன் வாழ்வானா கையால் பறையர் இனத்தொருவன் பறையன் என்பவன் நான் தான் என்று முன் வந்தா லொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தனித்தவனாய் இருப்பான். ஆகையால் பறையன் எனும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிகையை ஆரம் பித்தேன் என்றார் அவர் வேறு யாருமல்லர் - இரட்டை மலை சீனிவாசன் அவர்கள்தான்.

தந்தை பெரியார் கறுப்புச் சட்டை அணி யுங்கள் - அப்பொழுது தான் நாம் இழிவுபடுத்தப் பட்டுள்ளோம் என்ற உணர்வு நமது நினைவில் என்றும் நிற்கும் என்பதற்கு ஒப்பானது இது. ஏழு ஆண்டுகள் இப்படியொரு பத்திரிகையை அவர் அந்தக் காலத்தில் நடத்தி யது சாதாரணமானதல்ல.

அந்தக் காலகட்டத்தில் திண்ணைப் பள்ளிகள்தான் இருந்தன. ஏழு குழந்தை கள் சேர்ந்தால் பள்ளி என்று அரசு அங்கீகரித்தது. அந்தத் திண்ணைப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்க்க மறுக்கப்பட்டனர். அந்தக் கால கட்டத்தில் (1898இல்) பிரிட்டானிய அரசுக்கு மனு ஒன்றைத் தயாரித்து அனுப்பினார் இரட்டை மலை சீனிவாசன். அதன் நியாயத்தை உணர்ந்தது பிரிட்டானிய அரசு. 1898 அக்டோபர் 21ஆம் தேதி  பள்ளிகளைத் தொடங்கிட முடிவெடுக்கப்பட்டது; அதில் ஒரு நிபந்தனை அப்பள்ளிகளில் தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கல்வி கற்க முன்னுரிமை அளிக் கப்பட வேண்டும் என்பது தான்! அப்படி தொடங்கப் பட்டதுதான் சென்னை முனிசிபாலிட்டி ஸ்கூல்!

சென்னை சர்வ கலா சாலையில் (தற்போது சென்னை பல்கலைக்கழ கம்) இரட்டைமலையாரை செனட் உறுப்பினராக்கிப் பெருமை சேர்த்தது.

சில்வர்டங்க் சீனிவாச சாஸ்திரி என்று சொல்லு வார்கள் - அந்த அளவுக்கு ஆங்கிலப் புலமை வாய்ந்தவராம்; அவரின் உடை, நடை, பாவனையும் ஆங்கிலேயரை ஒத்திருக் குமாம்; அதேபோல நடை உடை பாவனை உடைய இரட்டை மலை சீனிவாசன் ஆங்கிலப் புலமையில் சில் வர்டங்க்காரரை தண்ணீர் காட்டுவாராம். அவரின் நினைவு நாள் இன்று (1945).

- மயிலாடன்

-விடுதலை,18.9.14

திங்கள், 9 ஜனவரி, 2017

சிங்கப்பூரில் சுயமரியாதைச் சங்கம் 

27.07.1930 - குடிஅரசிலிருந்து... 
உண்மை தர்மம்

சிங்கப்பூரில் சுயமரியாதைச் சங்கம் உண்மைத் தர்மம்

மலாய் நாட்டின் முக்கிய பட்டணமாகிய சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்தக் காரர்கள் சங்கம் என்பதாக ஒரு சுயமரியாதைச் சங்கம் ஏற்படுத்தப் பட்டிருப்பதைப் பற்றிய விவரம் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம். இதற்காகக் கூட்டப்பட்டுள்ள முதல் கூட்டத்திற்கு அவ்வூர்ப் பிரமுகர்கள் சுமார் 150 பேர்களுக்கு மேலாகவே கூட்டினதும், தலைமை வகித்த திரு. ராம சாமியார் பேசிய தலைமைப் பேருரைப் பேச்சுகளும் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்

அதாவது சங்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகை யில்,

1. மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாச்சிரம தர்மத்தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.

2. பெண்களுக்கு உரிமை அளித்தல்.

3. அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.

4. சிக்கன முறையைக் கைகொள்ளுதல்.

5. அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல்.

என்று சொன்னதிலிருந்து அவைகள் சுயமரியாதைக் கொள்கைகளை எவ்வளவு நுட்பமாக உணர்த்திச் சொல்லப்பட்ட உரைகள் என்பது யாவருக்கும் எளிதில் விளங்கும்.

தவிரவும் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சங்கங்கள் அனேகம் உடனுக்குடன் மறைந்து போவதற்குக் காரணம் அச்சங்கங்களுக்கு ஒரு சொந்த இடம் இல்லாததே என்று குறிப்பிட்டு விட்டு அதற்காக தானும் திருவாளர்

பி. கோவிந்தசாமி செட்டியாரும் சேர்ந்து ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் அக்கூட்டத்திலேயே வாக்களித் திருப்பதானது அவர்களின் பரோபகார எண்ணத்தையும் உண்மைத் தர்மத்தை உணர்ந்திருக்கும் உணர்ச்சியையும் காட்டுகின்றது. மலாய் நாட்டில் எங்கு பார்த்தாலும் சீனர்களுக்கு ஒரு பொது இடம் இருப்பதை நமது சுற்றுப் பிரயாணத்தில் கண்டோம்.

ஆனால் அங்கு இந்தியர்களுக்கு எங்கு பார்த்தாலும் கோவிலும் பூஜையும் தான் பார்க்க முடிந்ததே ஒழிய ஒரு தனிப் பொதுக் கட்டிடம் நமது கண்களுக்குத் தென்படவே இல்லை. இதை எதற்காக எடுத்துக் காட்டுகின்றோமென்றால் இந்தியர்களின் அறிவே, பொது நலம் என்றால் பொது தர்மம் என்றால் கோவிலைக் கட்டி குழவிக் கல்லை நட்டு கும்பாபிஷேகம் செய்து அதில் முட்டிக் கொள்வதே தான் என்று கருதி இருக்கிறார்கள்.

ஆனால் நமது உயர் திருவாளர்கள் ஓ. ராமசாமி நாடார் அவர்களும், பி.கோவிந்தசாமி செட்டியார் (நாயுடு) அவர்களும் சேர்ந்து சுமார் 15 ஆயிரம் அல்லது 20,000 ரூபாய்க்குள் ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் தீர் மானித்து இருப்பதிலிருந்து கோவிலுக்குப் பணம் போடுவது முட்டாள்தனம் என்பதை நன்றாய் உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிகின்றது.

இக்கட்டிடமும் சங்கமும் நிரந்தரமாய் இருந்து அதன் கடமைகளைச் செய்ய வேண்டுமானால் அதற்குச் சிறிது பண்டுத் தொகையும் இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயமாகும். அதற்கும் திரு. நாடார் அவர்கள் முயற்சிப்பார்கள் என்றே நம்புகின்றோம்.

இவ்விஷயத்தில் பார்ப்பன சூழ்ச்சியும், அவர்களது தாசர்களது தொல்லை களும் தடைகளாக ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் அவர்களுக்கெல்லாம் நமது நாடாரவர்கள் சிறிதும் பயப்படமாட்டார் என்பது நமது உறுதியாகும். எப்படியெனில், திரு. நாடாரவர்கள் முடிவுரையில், நமது இயக்கத்திற்கு எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு பலமாகவும், வேகமாகவும் இயக்கம் பரவும்.  என்று சொல்லியிருப்பதிலிருந்து எதிர்ப்பு களையும், தடுப்புகளையும் வரவேற்கின்றார் என்பது நன்றாய் விளங்குகின்றது.  மற்றும் சுயமரியாதை வீரர்களான கோ. சாரங்கபாணி, அதிசயம்,

எ. கோபால், அ. ராஜகோபால் முதலியவர்களும் மற்றும் திருவாளர்கள் வெ. சோமசுந்தரம் செட்டியார், கோ. ராமலிங்கத் தேவர், அ. சி. சுப்பையா, கா. தாமோ தரனார், ரா. து. கோவிந்தசாமி, மு. ரெ. முத்துக் கண்டியர், த.வ. குமாரசாமி, ச, குப்புசாமி, பு. ரா.கோவிந்தசாமி, ரெ.திருவேங்கிடம், அ. க. நாராயணசாமி, எ. ஆ. சிவராய பிள்ளை ஆகியவர்களும் இம் முயற்சியில் ஈடுபட்டிருப் பதைப் பார்க்க இச்சங்கமானது சிங்கையில் தலை சிறந்து விளங்கி ஒரு செல்வாக்குப் பொருந்திய பொது நல ஸ்தாபனமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆகவே வெகு சீக்கிரத்தில் இச்சங்கத்திற்குக் கட்டிடம் முதலியவைகள் ஏற்பட்டு திறப்புவிழா நடந்து பிரசாரம் துவக்கப்படும் என்று உறுதியாய் நம்புவதுடன் இந்திய தாழ்த்தப்பட்ட - கொடுமைப்படுத்தப்பட்ட - இழிவு படுத்தப்பட்ட - மக்களின் சார்பாக மேல்கண்ட நண்பர்களுக்கு நமது மனம் நிறைந்த நன்றியறிதலைச் செலுத்துகின்றோம்.

-விடுதலை,7.1.17

சாவித்திரிபாய் புலே




இன்று சாவித்திரிபாய்புலே அவர்களின் 186 ஆம் ஆண்டு பிறந்த நாள் (1831). உண்மையில் ஆசிரியர் தினத்தை இன்றுதான் கொண்டாடவேண்டும்

அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு, தன்னுடைய கணவர் மகாத்மா புலே இறந்த பிறகு பார்ப்பனர்களை அழைக்காமல் அவரது உடலை எரியூட்டவேண்டும் என்ற சாவித் திரிபாய் புலேவின் உறுதியான நிலைப்பாட்டை அடுத்து அவரது உறவினர்கள் யாரும் மகாத்மா புலேவின் உடலுக்கு மரியாதை செய்ய வரவில்லை. இதனை அடுத்து சாவித்திரிபாய் புலே மற்றும் அவர் தத்தெடுத்த குழந்தை இருவரும் சேர்ந்து புலேவின் உடலுக்கு எரியூட்டினர்.

புலே, தான் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய மனைவிக்கு அடிக்கடி சொல் வது,‘‘மனிதன்பிறந்தால்இறப் பது உறுதி; நான் இறந்த பிறகு என்னுடைய உடலுக்கு மதச்சடங்குகள் செய்வதோ, எனது உடலைச்சுற்றி அழுது புரள்வதோ தேவையில்லை. என்னுடைய பணியை நான் இருக்கும் வரை என்னுடையமனசாட்சிப்படிசீரா கச் செய்தேன். எனக்குப் பிறகு நீங்கள் என்னுடைய பணியை முன்னெடுத்துச் செல்லுங்கள். அதை விட்டுவிட்டு பிணத்தின் முன்பு அழுவதோ, அதற்கு சடங்குகள் செய்வதோ, பார்ப்ப னரை அழைத்துக்கொண்டு வந்து பூஜைகள் செய்வதோ கூடாது’’ என்று உறுதியாக கூறினார்.

அவரது வார்த்தைப்படியே உடலை அமைதியாக எரியூட்டி னார் சாவித்திரிபாய் புலே. அடுத்த நாளே அவரது ஆசிரியர் பணியைத் துவங்கினார்.

ஆசிரியர் பணியில் அவர் இருந்தபோது அவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவர்மீது சாணி யையும், மலத்தையும் கரைத்து ஊற்றிய கெடுமைகள் எல்லாம் நடந்ததுண்டு.

என்னே ‘அர்த்தமுள்ள’ இந்து மதம்?

சாவித்திரிபாய்புலேஅவர் களின் மராட்டிய கவிதைத் தொகுப்பு மிகவும் பிரபலமா னது.ஆனால்,அதுமொழி பெயர்க்கப்படாமல், புதுப்பிக்கப் படாமல் இன்றளவும் பிரபலமா காமல் உள்ளது.

அவரது கவிதையில் சில வரிகள்

புறப்படு கல்வி கற்றுக்கொள்ள புறப்படு!

தன்னம்பிக்கையுள்ளவராய் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக இருங்கள்!

கல்வி கற்றுக்கொள்ளுங்கள் அதன் மூலம் வேலை தேடுங்கள், செல்வத்தை திரட்டுங்கள்!

கல்வி அறிவு சுயமரியாதை இல்லாதிருந்தால் அனைத்தையும் இழந்து நிற்போம்!

அறிவிழந்து போனால் நாம் விலங்குகளில் ஒன்றாகிவிடுவோம்!

இனியும் தயங்காதீர்கள் கல்வி யைக் கற்றுக்கொள்ளுங்கள்!

எப்பாடுபட்டாவது கல்வி கற்றுக்கொள்ளுங்கள்!

இனியேனும் கல்வியைப் பெறுங்கள், அபலைகள், ஒடுக்கப் பட்டோர், ஆதரவற்றோர் அனை வரின் துன்பத்தை நீக்க,  கல்வி பயிலுங்கள். அவர்களுக்கும் கல்வியைப் புகட்டுங்கள்!

எந்த நாளும் பொன்னான நாள் தான் எந்த நேரமும் சிறப்பான நேரம் தான் ,

உடனே கல்வி பயிலுங்கள், தயக்கத்தை உதறுங்கள், எதிர்ப் பிற்கு அஞ்சாதீர்கள்!

கல்வி கற்றுக்கொள்ள புறப் படுங்கள்!!

- மயிலாடன்
-விடுதலை,3.1.19