வியாழன், 31 அக்டோபர், 2019

நமது பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், தி. வை. சொக்கப்பா உரை வருமாறு.

ஓர் இனத்தின் உயிர்மை அதன் பண்பாட்டினால் புலனா கிறது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத் தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது. மொழியால் இலக்கியமும், இலக்கிய வாயிலாகப் பண்பாடும், பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது, வளருகிறது, வேற்று மொழிக் கலப்பால், மற்ற மொழியை அழிக்கவேண்டும் என்று திட்டமிட்ட ஆதிக்கத்தால், அம்மொழி சிதைந்து தேய்ந்து, அதனால் அவ்விலக்கியம் மறைந்து, மறைக்கப் பட்டு, இலக்கியத்தின் வெளிப்பாடாகிய பண்பாடு குலைந்து, பண்பாட்டினை வளர்த்த இனம் மங்கிப் போகிறது. மூவாயிரமாண்டுகளுக்கு முன் இத்தகைய நிலை தமிழினத்திற்கும் பண்பாட்டிற்கும் உருவாகி ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்போம்.

கி.மு. ஆயிரத்து அய்நூறு ஆண்டளவில் காந்தார நாட்டிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்து நம் நாட்டில் புகுந்த ஆரிய இனம் இங்கு வாழ்ந்த திராவிட இனத்தோடு போராடி அவர்களின் சிறந்த நாகரிக (சிந்துவெளி நாகரிக) வாழ்வை அழித்து பல பகுதிகளில் குடியேறிற்று. பேரினமாயிருந்த திராவிடர்களைக் கொன்று வெற்றி காண்பது எளிதானதல்லவெனக் கண்டு அவர்களோடு உறவாடி அடிமைப்படுத்தி ஆளமுற்பட்டது.

ஆரியரும் எழுத்துக் கலையும்

வேதங்களை இயற்றியவர்களுக்கு எழுத்துக் கலை தெரிந்திருந்தது என்பதற்கான சான்றோ ஆதாரமோ இல்லை என்று நாகரிக வரலாற்றின் ஆசிரியர் வில் டு ராண்டும், ஆரியர்கள் நாகரிக உலகோடு தொடர்பு கொள்வ தற்கு முன்பாக எழுத்துக் கலை அறியாதவர்கள் என உலக வரலாற்று ஆசிரியர் எச்.ஜி. வெல்சும் எழுதியுள்ளார்கள். பல்வேறு நாடுகளில் பரவிய ஆரியர்கள் அவர்கள் குடி யேறிய நாடுகளில் வாழ்ந்த நாகரிக மக்களின் எழுத்துக் களையே பயன்படுத்தித் தங்கள் நெடுங்கணக்கை அமைத் துக் கொண்டார்கள் என அறியக் கிடக்கிறது. அநாசாஸ் எனத் தங்களால் எள்ளி நகையாடப்பட்ட திராவிடர்களின் எழுத்துக்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியே தங்கள் எழுத்துக்களை அமைத்துக் கொண்டார்கள் என்று ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். ஆரியர்களின் வேதங்கள் சுருதியாக எழுதாக்கிளவியாக இருந்து தலைமுறை தலை முறையாக செவி வழியாகவே நெடுங்காலம் நிலவி வந்த தற்கு அவர்கள் எழுதும் முறையை அறியாமையே காரணம் ஆகும். ஆரியருடைய முதனூலாகிய ரிக்கு வேதத்தில் பல தமிழ்ச் சொற்கள்-அணு, இராத்திரி, கணம், பழம், பூசனை போன்றவை-ஆளப்பட்டுள்ளன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உணவு உற்பத்திக்காக ஏர்கொண்டு மண்ணைக் கிளறி உழவுத் தொழிலை மேற்கொள்வது பாவம் என மனுநீதி மூலம் ஆரியர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்டு அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை அத்தொழி லில் ஈடுபடுத்தி ஏற்றம் கொண்டனர்; ஆக்கம் பெற்றனர். வேதமொழியும் வடநாட்டில் நிலவிய பிராகிருதமும் கலந்து உருவான சமற்கிருதக் கலவை மொழியைத் திராவிடர்கள் கற்க வேண்டியதாயிற்று. இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு என்ற தம் நூலில் கில்பர்ட் சிலேட்டர் இதனையே திராவிடர் மொழியில் ஆரிய மயமாக்கப்பட்டனர் எனக் குறிப்பிடுகிறார்.

அகத்தியரும் தமிழும்

ஆரியர் மொழி நிலை இவ்வாறிருக்க, ஆரிய முனிவரா கிய அகத்தியர் பொதியமலையில் தங்கித் தமிழுக்கு முதனூலும் இலக்கணமும் வகுத்தார் என்ற கதையைப் புனைந்து, தமிழர்களை இன்றளவில் நம்ப வைத்துள்ளனர். அகத்தியர் வருகை தென்னகத்தில் ஆரியர் வருகைக் குறிப் பேயாகும். பல்வேறு காலங்களில்-நீண்ட இடைக்காலத்திற் கிடையில் - அவ்வையார் வாழ்ந்து பாடியதாக இலக்கியத்தில் காட்டப்படுவதுபோல், அகத்தியரும் பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் செயற்கரிய செய்ததாக இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறார். ஒருவரே ஒரு மொழியையும் அப்போதே அதன் இலக்கணத்தையும் படைக்கக்கூடும் என்ற கூற்றினை ஆராயவும் தயங்கும் அறிஞர்கள் முச்சங்க வரலாறு-அவைகளின் காலக்குறிப்பு, புலவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்குமிடத்து-அறிவுக்குப் பொருந்தாது, உண்மைக்குப் புறம்பானது என்று மாற்றார் அறையும்போது அலமந்து போகிறார்கள்.

தமிழ் இலக்கியத்தின் தொன்மைச் சிறப்பையும் அதன் விரிவையும் கண்டு பொறாது தமிழ் எழுத்து பிற்காலத்தில் அசோகரது பிராமி எழுத்தினின்றும் கிரந்த எழுத்தினின்றும் தோன்றியதென்றும் சாதித்தனர். தமிழ் நெடுங்கணக்கு பழைமையானது

சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்துக்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது பேராசிரியர் லாங்டன், டாக்டர் ஹண்டர், சர். அலெக்சாண்டர் ஆகியோரின் முடிபாகும். தமிழ்நாட்டுக் குகை எழுத்துக்களுக்கும் பிராமி எழுத்துகட்கும் நெருங்கிய தொடர்பைக் காணலாம். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தின் காலம் கி.மு. அய்ந்நூற்றுக்கு முந்தியது எனத் திட்டவட்டமாய் நிறுவி கி.மு. எழுநூறு என்று சொல்வதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் தந்துள்ளார்கள். அத்தகைய அரிய இலக்கியம் தோன்றுவ தற்குமுன் எத்தனையெத்தனை நூல்கள் இருந்திருக்க வேண்டும், அவற்றிற்கு எவ்வளவு காலத்திற்கு முன்பாகத் தமிழ் நெடுங்கணக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சிந்திக்க மறுக்கலாமா?

தமிழ் இலக்கியம் ஆரிய மயமானது

தமிழர்களின் மறைநூல், மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு, மூலநூல்களை அழித்துவிட்டு வடமொழியினின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தனபோலக் காட்டினார்கள் பிராமணர்கள் எனத் தாம் எழுதிய தமிழ் வரலாறு என்ற நூலில் (பக். 29-33) பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாரா யண சாஸ்திரியார்) எழுதுகிறார். தொன்னூல்களான தென்னூல்களெல்லாம் வடமொழியில் பெயர்க்கப்பட்ட பின் அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின என்று தமிழர் வரலாறு என்ற தம் நூலில் ஞா.தேவநேயப் பாவாணர் விரிவாக விளக்கியுள்ளார்கள். இவ்வழிப்புப் பணியால் இந்திய நாகரிகம் பெருமளவு ஆரியருடையது எனவும், அதன் சிறு கூறே திராவிடரது என்றும் கருதுமாறு செய்யப்பட்டுவிட்டது. அகத்தியத்தை தமிழ் முதனூல் என்றனர். தொல்காப்பியத்தில் வேண்டாத சமற்கிருதச் சொற்களையும் ஆரியக் கருத்துக்களையும் புகுத்தினார்கள். திருவள்ளுவரைச் சீவல்லபர் என்ற ஆரியராக்கியத்தோடு, திருக்குறளின் அறத்துப்பால் வடமொழி தர்மசாத்திரத்தையும், பொருட்பால் அர்த்தசாத்திரத்தையும், காமத்துப்பால் காம சூத்திரத்தையும் தழுவின எனக் கூறவும் தலைப்பட்டனர். திருக்குறளுக்கு உரைவகுத்த தூய தமிழ்ப்பெயர் தாங்கிய பரிமேலழகர் தம்முடைய உரையில் ஆரியக் கருத்துக்களை வலிந்து புகுத்தித் தமிழர் கருத்துக்களை மறைத்துள்ளார்.

தமிழ் இலக்கிய மறைப்பு இடைக்காலத்திலும் தொடர்ந் தது. பெரிய புராணம் உபமன்யு பக்த விலாசத்தையும் திருவிளையாடல் புராணம் ஆலாசிய மான்மியத்தையும், சிவஞானபோதம் ரௌரவாகமத்தின் இறுதிப் பகுதியையும் முதனூலாய்க் கொண்ட வழிநூல்கள் என்றார்கள். மூவர் தேவாரப் பதிகங்களை தில்லையம்பலத்தில் மறைத்து சிதல் அரிக்கவிட்டார்கள் (திருமுறைகண்ட புராணத்தைக் காண்க) தமிழ் கருத்துக்களை சமற்கிருதச் சொற்களால் மூடிமறைத்து அவற்றைத் தங்களுடையதாகக் காட்டிக் கொள்ளவும் துணிந்து இறங்கினார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்பவை முறையே தர்மார்த்த காமமோட்சம் என்றதன் மொழிபெயர்ப்பு எனவும் முப்பால் என்பது திரிவர்க்கம் என்பதின் சொல்லாக்கமே எனவும் கூறினர். தமிழரின் அய்ந்தெழுத்து பஞ்சாட்சரமாயின. வெகுளி, மயக்கம், காமம் என்ற மும்மாசுகள் ஆணவம், மாயை, காமியம் எனக் குறிப்பிடப்பட்டன. மேலெழுந்த வகையாய்ப் பார்த்தால் சொல் மாற்றச் சூழ்ச்சி தெரியவராது. கருத்துக்கள் சொல்லால் விளக்கம் பெறுகின்றன. சொல்லில்லையேல் கருத்துமில்லையாகிறது. சொல்லால் மறைக்கப்பட்ட கருத்தின் சொந்தக்காரர் சொல்லுக்குரியவராகி விடுகிறார். வடமொழி இலக்கணத்தை வலிந்தும் நலிந்தும் தமிழுக்குப் பொருத்தி வீரசோழியம், பிரயோக விவேகம் முதலிய நூல்கள் எழுதப்பட்டன. தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இருபத்தாறு செய்யுளுறுப்புகள் ஆறாகக் குறைந்தன. சமற்கிருத ஆதிக்கத்தால் தென்னாடெங்கும் நிலவிய தமிழ்மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் முளைத்தெழுந்தன. வடமொழிக் கலப்பால் தமிழும் சமற் கிருதமும் சரிக்குச் சரி கலந்த மணிப்பவழ நடை இடைக் காலத்தில் வழங்கிற்று. சமற்கிருத ஊடுருவலால் நூற்றுக் கணக்கான தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போயின. பா-கவிதை யாயிற்று; பாட்டு காதையாயிற்று. கழுவாய் (பிராயச் சித்தம்) சுடலை (மயானம்), திருச்சுற்று (பிராகாரம்), திரையல் (பீடா), பலகணி (சன்னல்), வலக்காரம் (தந்திரம்), முதுசெம் (பிதிரார்ஜிதம்), கூற்றுவன் (யமன்) முதலிய சொற்கள் (கவிப்புக் கோட்டிற்குள் இருக்கும் சமற்கிருதச் சொற்கள் நம்முடையதாகவும்) ஆதரிப்பாரின்றி அநாதையாகி விட்டன. சோறு, மிளகுநீர் போன்ற சில சொற்கள் இழிந்தன வாகக் கருதப்பட்டு உயர் மட்டத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்பட்டு விட்டன. (தேவநேயன் அவர்கள் தமிழ் வரலாற்றில் விரிவாய்க் காணலாம்).

கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவிலேயே தமிழ் பழிக்கப் பட்டது என்பதற்குச் சான்று வேண்டுமெனில் ஆரியநன்று, தமிழ்தீது எனக்குயக் கொண்டான் கூறியதை நக்கீரர் அங்கதம் பாடிக் கண்டித்துள்ளதை நினைவு கூரலாம். சமற்கிருதத்திற்கு முந்திய பழைமை உடைய தமிழைச் சமற்கிருதத்தோடு ஒத்த காலத்தது ஒத்த  பெருமையுடையது என்றாவது காட்டவேண்டுமென்பதற்காக சிவஞான முனி வர் எவ்வளவு முயன்றுள்ளார் என்பதை அவர் பாட் டொன்றால் அறியலாம்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளியதற்கு இணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேற்றம் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல் லேற்றுப் பாகர்... இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்

கலை

கலைத் துறையிலும் தங்கள் முன்னமையையும் முதன் மையையும் நிலைநாட்ட இசை, நாடகம், கணியம், மருத்து வம் முதலிய கலை, அறிவியல் இலக்கியமெல்லாம் சமற் கிருத மொழியில் பெயர்த்துக்கொண்டு, தமிழ் முதனூல் களையெல்லாம் அழித்துவிட்டனர். தமிழிசையைக் கருநாடக சங்கீதமென்றும் தமிழ் நடனத்தை பரதநாட்டியம் என்றும் கூறினர். நாடகத் தமிழ் நூலாகிய பரதம் என அடியார்க்கு நல்லார் குறித்துள்ளதைக்காணில் தமிழ் பரத நூல் மூலநூல் என்பது வெள்ளிடைமலை, தமிழ்ப் பண்களை மறைத்து இராகங்களெல்லாம் சமற்கிருதப் பெயர்களால் மக்களிடையில் வழங்குகின்றன. இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் இடம்பெற ஓர் இயக்கம் தேவைப்பட்டது. சித்தர் களின் மருத்துவத்தையும் மூலிகைகளையும் தமிழகத்திலிருந்து ஓட்டியேவிட்டார்கள்.

சங்ககாலத்தில் தமிழர்கள் நாளுக்குக்கும் (Star) கோளுக்கும் (Planet) வேறுபாடு அறிந்திருந்தார்கள், காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஒரு நாளை ஆறு பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள்.  சூரிய உதய, மறைவுக் காலங்கள் திங்கள்தோறும் மாறுபடுவதால் ஒரு நண்பகலிலிருந்து அடுத்த நண்பகல் வரை ஒருநாள் எனக் கணக்கிட்டனர். (பழந்தமிழ் நூல்களாகிய நற்றிணை யில் அரையிருள் நடுநாள், அகநானூற்றில் பானாட்கங்குலும் பகலும் என்றெல்லாம் பாடப்பட்டுள்ளன). தைத்திங்களிலி ருந்து ஆண்டுப் பிறப்பினைக் கொண்டாடினார்கள். (சித்தி ரையிலிருந்து அன்று) பிரபல - அட்சய என்ற முற்றிலும் சமஸ்கிருதத்திலான அறுபதாண்டு வட்டத்தைப் புகுத்தி ஒரு தொடராண்டுக் கணக்கில்லாமல் செய்துவிட்டனர். திங்களை மாதமெனவும், ஆண்டினை வருஷம் என்றும், காரிக்கிழமையை சனிக்கிழமையென்றும், கிழமையை வாரம் எனவும் பெயரிட்டார்கள்.

- வியாழக்கிழமை தொடரும்

- விடுதலை நாளேடு, 15.10.19

சனி, 26 அக்டோபர், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

 நேயன்

அடுத்த 10ஆவது குற்றச்சாட்டும் தலித் சார்ந்ததாக இருப்பதால் இரண்டுக்கும் சேர்த்து உரிய பதிலைத் தர விரும்புகிறோம்.

10.          தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஈ.வெ.ரா. இருந்ததில்லை.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராட முன்வந்தபோது தாழ்த்தப்பட்டோரின் நிலை என்ன?

1.            ஆதிதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்ல முடியாது.

2.            ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.

3.            தங்க நகைகள் அணியக் கூடாது.

4.            மண்குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.

5.            ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6.            அடிமையாக இருக்க வேண்டும்.

7.            சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

8.            திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

9.            பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

10.          குதிரை மீது ஊர்வலம் செல்லக்கூடாது.

11.          வண்டி ஏறிச் செல்லக் கூடாது.

12.          பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

13.          சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.

14.          பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.

15.          மேல் அங்கியோ, துண்டு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது.

16.          பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

17.          நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று இருந்தது. இவற்றை மாற்றவே சுயமரியாதை இயக்கம் அதிகம் போராடியது.

பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழுநோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று எழுதி வைத்தனர்.

தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்று தலைப்பில் 24.11.1929 “குடிஅரசில்” எழுதினார்.

அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 ‘குடிஅரசில்’ பெரியார் எழுதினார்.

ஆதிதிராவிடர், தீயர், தீண்டாமை விலக்க மாநாடுகளை பெரியார் நடத்தினார்.

21.7.1929இல் சென்னையிலும், 25.8.1929இல் இராமநாதபுரத்திலும், 10.6.1930இல் திருநெல்வேலியிலும், 16.5.1931இல் சேலத்திலும், 7.6.1931இல் லால்குடியிலும், 5.7.1931இல் கோவையிலும், 4.7.1931இல் தஞ்சையிலும், 7.12.1931இல் கோவையிலும், 7.2.1932இல் லால்குடியிலும், 28.8.1932இல் அருப்புக்கோட்டையிலும், 7.8.1933இல் சென்னையிலும், 1.7.1938இல் சீர்காழியிலும், 7.3.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.5.1936இல் கொச்சியிலும், 2.9.1936இல் சேலத்திலும், 6.5.1937இல் சிதம்பரத்திலும், 4.7.1937இல் ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டனத் தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.

மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்ப்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.

ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும்  பழங்குடி மக்களும் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 9.2.1982இல் ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’, தலித்திய ஏடுகள் போன்றவற்றைப் படியுங்கள்.

பெரியார் பேசுகிறார்: “நானோ, திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை; இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாகக் கருதவேண்டாம். ஆதிதிராவிடன் - திராவிடன் என்கிற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.

இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன்: திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றுமிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதைச் செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.

தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்று வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்கிற உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர, தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்று மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர்.

நான் மிக எதிர்பார்த்திருந்தேன் _ அவரின் ஒத்துழைப்பை - இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால், எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ  அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நம் அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூறவேண்டுமானால் இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாள்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்ற நான் அஞ்சுகிறேன்.

எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வடநாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது போலும்! நான் அதைப் பற்றித் தப்பாகவோ குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத்தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால் வடநாட்டுப் படிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?

என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இருக்கும் இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு.

                                                                      (‘விடுதலை’ 8.7.1947)

                                                                                       (தொடரும்)

உண்மை இதழ், 16 -31. 10 .19

சனி, 19 அக்டோபர், 2019

ஜஸ்டிஸ் கட்சி வேலை திட்டம்

10.02.1935, குடிஅரசிலிருந்து...




ஈ.வெ.ரா. தீர்மானம்


வாசகங்களைப் பொருத்தவரை சில திருத்தங்களைச் செய்ததோடு அத்திட் டங்களை மூன்று தலைகளாகப் பிரித்து, அதாவது, பொருளியல், சமுதாய இயல், அரசியல் என்பதாகப் பிரித்து அவைகள் தனித்தனி தலைப்பின் கீழ் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது,

பொருளியல்


1.  விவசாயிகளைக் கடன் தொல் லையில் இருந்து விடுவிக்கவும், மேலால் கடனால் கஷ்டப்படாமலிருக்கும் ஆன காரியங்களை கடனுக்காக பூமியை கடன்காரர் கைப்பற்றா திருக்கச் செய் வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதையெல்லாம் செய்ய வேண்டும்.,

2.  அநியாய வட்டி லேவா தேவிக்காரர்களால் விவசாயிகளுக்குக் கஷ்டம் நேரிடாமல் இருக்கும்படி கோவாப்ரேட்டிவ் பாங்கிகளையும், லேண்ட் மார்ட்டி கேஜ் (பூமி அடமான) பாங்கிகளையும் விஸ்தரிக்க வேண்டும். இந்தப் பாங்கிகளின் நிர்வாகம் சர்க்கார் அதிகாரி களாலேயே நடைபெறச் செய்ய வேண்டும்.

3.  விவகாரங்களைக் குறைப்பதற் காக முக்கியமாய் சொத்துக்கள் விஷ யத்தில் சர்க்காரே தெளிவான ரிக் கார்டுகள் வைக்க வேண்டும். இப் பொழுது அமலில் இருந்து வரும் நிமித்திய மாத்திரம் எழுதி வைக் கப்பட்டது என்கின்ற வாதத்தை சர்க் கார் கோர்ட்டுகளில் இனி செல்லு படியற்றதாக்க வேண்டும்.

4.  விவசாயக்காரர்கள் விளைவின் பலனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர், மத்திய வியாபாரிகள் ஆகிய வர்களை விலக்குதல் செய்து விளை பொருள் சாமான்களை வாங்குபவர் களுடன் நேரில் கலந்து கொள்ளத்தக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாக செய்ய வேண்டும்.

5.  பொது ஜனங்களுடைய உப யோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே, தந்தி, தபால், தண்ணீர் சப்ளை, எலக்ட் ரிசிட்டி முதலியவைகளை சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ, அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காராலேயே நடந்து வரும்படி செய்ய வேண்டும்.

6 .  இன்ஷுரன்ஸ் விஷயத்தில் சர்க் கார் உத்தியோகஸ்தர்களுக்குச் சர்க்கார் செய்து கொடுத் திருக்கும் சவுகரியத்தை அதாவது போஸ்ட் ஆபீசைப் போல் மற்ற ஜனங்களும் அடையும் படியாகச் செய்ய வேண்டும்.

சமுதாய இயல்


1.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் எல்லா மக்களுக்கும் படிப்பு ஏற்படும்படி செய்துவிட வேண்டும்.

2.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மதுபானம் ஒழியும்படி சட்ட மூல மாகவே செய்ய வேண்டும்.

3.  தீண்டாமைக்குச் சட்டத்தி லாவது, அரசியல் நிர்வாகத்திலாவது இடமே இருக்கக் கூடாது.

4.  பெண்களுக்கு அரசியல் நிர்வாகத்தில் ஆண்களைப் போலவே உத்தியோகமும், பிரதிநிதித்துவமும் வகிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.

5.  தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்து வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதோடு அவர்களுடைய சவுகரியங்களைத் தாராளமாய் கவனித்து அவற்றிக்குக் குறையாத வரும்படி கிடைக்கும்படி நிர்ணயப்படுத்திவிட வேண்டும்.

அரசியல்


1.  உத்தியோகங்களில் நமது மாகா ணத்தில் உள்ள எல்லா வகுப்பார் களையும், அவர்களது எண்ணிக்கை யையும் கவனித்து தக்கபடி பிரதிநிதித்துவமும், உத்தியோகமும் கிடைக் கும்படி செய்ய வேண்டும்.

2. தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால் நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயல வேண்டி யதோடு சம்பளங்களை இந்தியர் சராசரி வாழ்க்கையையும், இந்திய பொருளாதார நிலைமையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்.

3.  வரிப்பளுவை மக்களுக்குச் சமபாகமாக பங்கீடுவதற்கு நில வரு மானத்தையும், பொருள் சம்பாதனை யையும் பொருத்து வரி விதிப்பதில் ஒரு படிப்படியான விகிதாச்சார முறையை அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட குறைந்த வரும்படி உள்ளவர்கள் விஷயத்தில் நிலவரியையும் ரொக்க வருமான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

4.  முனிசிபாலிட்டி, லோக்கல் போர்டு, கோவாப்ரேட்டிவ் முதலிய  ஸ்தாபனங்களுக்கு இன்னும் அதிகமான வேலைகளைச் செய்ய சந்தர்ப்பம்  அளிக்கப்பட வேண்டும். அதன் நிர்வா கங்கள் ஸ்டேட் உத்தியோகஸ்தர் களாலேயே நடைபெற வேண்டும்.

5.  இந்தக் காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக்கொள்கையை பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இந்தப்படியான வாசகங்களால் திருத்தி அமைக்கப்பட்டு தோழர்கள், ஆர்.கே.ஷண்முகம், சவுந்தர பாண்டியன் முதலிய சுயமரியாதை இயக்கத்

தலைவர்களுடையவும் மற்றும் பல ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடை

யவும், சம்மதத்தைப் பெற்று கட்சித் திட்டமாய் ஒப்புக் கொள்ள சிபார்சு செய்து நிர்வாக சபைக்கு வைக்கப்பட்டு விட்டது.

- விடுதலை நாளேடு 12 10 19

திங்கள், 14 அக்டோபர், 2019

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!”



சீன தேசத்துச் சன்-யாட்-சன் சென் என்பவரைப்பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவருடைய குருவான கன்பூசியஸ் என்னும் பேரறிஞருடன், பெரியார் இராமசாமி அவர்களை. ஒப்பிடலாம்.

-சீனப் பேராசிரியர் சி.எஸ்.ஸி. (1939)

இந்தியாவில் - இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதா யப் புரட்சி தமிழ் நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட்சியைச் செய்தவர் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேரா சிரியர்களின் கருத்தாகும்.

- அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி

(‘ஆனந்தவிகடன், 16.7.1972)

“Periyar, the prophet of the New Age ;
the socrates of South East Asia ;
Father of the social reform movement;
and arch enemy of ignorance ;
Superstitions, meaningless
customs and ba seless manners.”


- UNESCO 27-6-1970

தந்தை பெரியார் மலர் - 1988

இதழாக்கம்:-  நூலகர் கோவிந்தன்


-   விடுதலை ஞாயிறு மலர், 28 .9 .19

முதன் முதலில்! - கம்யூனிச அறிக்கை



மார்க்ஸ், ஏங்கல்சு அறிக்கையை முதன்முதலில் வெளியிட்டவர் தந்தை  பெரியார். முதல் இதழ் ‘குடிஅரசு’ (4.10.1931).

இது தந்தை பெரியார் பொதுவுடை மைப் பூமியான ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே என்பதுதான் அடிக்கோடிட்டுச் சுட்டிக் காட்டத் தகுந்ததாகும். (தந்தை பெரியார் ரஷ்யாவிற்கு புறப்பட்ட நாள் - 13.12.1931).

1927ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநாட்டிலேயே பொதுவுடைமைக் கருத்துகளைப் பேசியவர் பெரியார்.

விருதுநகர் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசினார்: “தோழர்களே! எனது அய்ரோப்பிய யாத்திரை யிலோ, குறிப்பாக ரஷ்ய யாத்திரையிலோ நான் கற்றுக் கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் எனக்குக் காணப்படவில்லை . ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும், அக்கொள்கைகளால்தான் உலக விடுதலையும், சாந்தியும் சமாதானமும் அடையக் கூடும் என்றும் தெரிந்தேன். இதுதான் உங்களுக்கு அய்ரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என்கிற முறையில் சொல்லும் சேதியாகும்.”

(குடிஅரசு’ 12.3.1933)

பார்ப்பான் மேல் ஜாதி, பறையன் கீழ் ஜாதி என்பதற்கு எது ஆதாரமோ அதுதான் இந்த ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என்கிற பழக்கத்திற்கும், நடப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்றது என்று அதே விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் இங்கு ஜாதி (Caste) தான் வர்க்கமாக (Class) இருந்து வருகிறது. அந்தவகையில் பார்க்கப்போனால் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியா தைத் தத்துவம்தான் இந்நாட்டுக்கான பொதுவுடைமையாக இருக்கிறது என்பது யதார்த்தமாகும்.

நாம் யாரை விரோதித்தாலும், யாரை நேசித்தாலும் நமது கருத்து ஒன்றேயாகும். அதாவது படித்தவர்கள் என்றும், பணக்காரர்கள் என்றும் அரசாங்கத்தார் என்றும் சொல்லிக் கொண்டு ஏழைகளின் இரத்தத்தை எவரும் உறிஞ்சக் கூடாது என்பதேயாகும் என்று எளிதிற் புரியும் படியான சமதர்மத்தைப் போதித்துள்ளார்.

“ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கின்ற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலையை அடைந்துதான் ஆக வேண்டும். அதுவே என் கொள்கை” (‘குடிஅரசு’ 10.5.1936).

இதற்கு மேல் எங்கிருக்கிறது பொதுவுடைமைச் சீலம்?

தந்தை பெரியார் ருசியா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த பிறகு, குழந்தைகளுக்கு அவர் பெயர் சூட்டிய விதம் இருக்கிறதே - அதற்கு யாரும் முன்மாதிரி கிடையாது. குழந்தைகளுக்கு ரஷ்யா என்றும், லெனின் என்றும், ஸ்டாலின் என்றும் பெயர் சூட்டி இந்நாட்டு மக்களிடத்தில் அந்தப் பொதுவுடைமைச் சிந்தனைக்கான வாயிலைத் திறந்து விட்ட விதம் மிகவும் வித்தியாசமானது.

கம்யூனிஸ்டுகள் ஆண்ட கேரள மாநிலத்தில், மகரஜோதி மோசடி சுரண்டல் பற்றி உண்மையான கருத்துத் தெரிவிக்கக்கூடத் தயாராக இல்லையே! பெரியாரியலின் வீச்சும், உரமும் எவ்வளவுத் தேவை என்பதை இது துல்லியமாக உணர்த்தவில்லையா?

- மயிலாடன்

(ஒற்றைப்பத்தி, தொகுதி -4)

- விடுதலை ஞாயிறு மலர், 28. 9 .19

வியாழன், 10 அக்டோபர், 2019

ஹிந்திப் புரட்டின் நோக்கம் - தமிழரை அடிமைப்படுத்துவதே! - 15

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


15.5.1938 அன்றைய


"குடி அரசு" எழுதுவதாவது:-


நம்நாட்டுப் பார்ப்பனீயமானது "தோலைக் கடித்து, துருத் தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது'' என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது.

பார்ப்பனீயப் போராட்டம்


தமிழ் மக்களில் எவருடைய ஆட்சேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லட்சியம் செய்யாமல் ஒரே அடியாய் சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்' என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத் தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப் போட்டு உதை உதை என்று உதைத்தாலும், அடி அடியென்று அடித் தாலும், பெண்டு பிள்ளைகளை நிர்வாணத்துடன் புரட்டிப் புரட்டி மானபங்கப்படுத்தினாலும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்


தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்று பெரிய மனிதனான மக்களில் பெரும்பாலோர் இன்று தம் சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழி நிலைக்கு வந்து விட்டார்கள். தாம் தமிழர் தமிழ்மக்கள் சந்ததி என்கின்ற சாக்கை சொல்லி உத்தியோகம் பெற்று பணம் தேடி அதனால் தங்களது பிள்ளைக்கும் குட்டிகளுக்கும் உத்தியோ கமும், மேன்மையும் தேடிக்கொண்ட தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம் மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டு அறியாதவர் போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலை சூப்பிக்கொண்டு தனது வாழ் வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி


அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தா பனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள் இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண் புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்க கத்தி தீட்டிக் கொடுப்பதான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டி யவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால், தமிழ் மக்கள் இது சமயம் சக்தியற்று நாதி அற்றுக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று கேட் கின்றோம்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?


வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ் மக்களுக்கு இந்தியாவிலும், வார்தா கல்வித்திட்டத் தாலும் ஆபத்து இல்லை, கேடில்லை, தமிழன் மனிதத் தன்மையோடு வாழுவதற்கு தடையில்லை என்று எந்த தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே. எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும் வார்தா கல்வித் திட்டமும் தமிழனுக்கு கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாய் விட்டது. இந்நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக் கொடு மையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன் வருகிறார்கள்? என்று கேட்கின்றோம்.

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?


மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளை யும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக் காட்டுவோம். இனி அடுத்தாற்போல் தமிழன் என்ற காரணத் தால் உத்தியோகம் பெற்று மேற்பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும் இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும் இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றியும் பின்னால் எழுது வோம். இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்கு பிரதிநிதியாய் பார்ப்பானுக்கு காங்கிரசுக்கு எதிர்க்கட்சியில் இருப்ப தாய் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதைதான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம்.

காங்கிரஸ் தமிழர்கள் நிலை என்ன?


மற்றும் தேசத்துக்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங் கிரஸ்தான்' என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர் குலையச் செய்ய சம்மதித்து பார்ப்பனர்களை தஞ்சமடைந்து வயிறு வளர்க்கும் தமிழ் மக்கள் தானாகட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடியான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். தோழர் டி.ஏ. ராமலிங்க செட்டியார் முதற்கொண்டு ஒவ்வொருவருடைய யோக்கிய தையை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இவர்கள் தான் என்ன செய்கிறார்கள்? தோழர் செட்டியார் தன்னை தமிழ் மகன் என்றும் தான் தமிழபிமானி என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவு பெருமை பெற்றார் என்றெல்லாம் பார்ப்போ மானால் தமிழனின் நிர்க்கதி விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். ஏன் இதை குறிப்பிடுகிறோம். ஏன் நமது பலவீனத்தையும் குறைகளையும் குற்றங்களையும் எடுத்துக் காட்டுகிறோம் என்று சிலர் கருதக்கூடும். ஏனெனில் நம் காலிலேயே நாம் நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஞாபகமூட்டவும் பாமர மக்களும் நம் வீர வாலிபர்களும், நேரடியில் அப்பெரியார்கள், பிரமுகர்கள் என்பவர்களை எதிர்பாராமல் இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரி விக்கவுமே இதை எழுதுகிறோம்.

தமிழன் செய்ய வேண்டியதென்ன?


தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி தீவிர யோசனை செய்ய வேண்டும். ஹிந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதை யும் தாங்கள் யோசனை செய்வதற்கு முன் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து நாமும், நம் பின் சந்ததிகளும் தப்புவதற்கு ஆக செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதி சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படி சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ் மகனும் தனது தன் மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?


அதாவது 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சமூகம் அதாவது பார்ப்பன சமூகமோ, ஆரிய சமூகமோ, வைதீக சமூகமோ அல்லது பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் புரோகித சமூகமோ எதுவானாலும் சரி அந்தச் சிறு சமூகம் இவ்வளவு பெரிய மாபெரும் சமூகமாகிய பழம் பெரும் குடிகளாகிய தமிழ் மக்களை சமுதாயத்தில், பொருளாதாரத்தில் ஆத் மார்த்தம் என்பதில் இவ்வளவு கீழாக இழிவாக தாழ்மையாக அழுத்தி வைத்து ஆதிக்கம் செலுத்த முடிகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இக்கூட்டம் 100க்கு மூன்றே எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் இந்த 100க்கு மூன்றும் கெட்டியாகவும் - கட்டுப்பாடாகவும் - தன் சமூக நலனுக்கு உயிரைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்து பாடுபட வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையை உண்மை யாய் கடைப்பிடித்து கட்டுப்பாடாய் உழைக்கும் சமூகமாய் இருந்து வருவதினாலேயே 100க்கு 97 கொண்ட சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தமிழன் நிலைமை


தமிழன் எண்ணிக்கையில் 100க்கு தொண்ணூறாய் இருந் தாலும் என்ன பயன்? அவன் பொருளாதாரத் துறையில் சர்வத்தையும் பார்ப்பானுக்கு அழுது விட்டு "மோட்சத்தில் இடம்'' தேடிக்கொள்ள கற்பிக்கப்பட்டவனாகி விட்டான். சமுதாயத் துறையில் பார்ப்பானுக்கு தொண்டு செய்து தன்னையே பார்ப்பானுக்கு அர்ப்பணமாக்கி பார்ப்பான் கால் கழுவிய நீரை தீர்த்தமாக உட்கொண்டு அதன் மூலம் தான் தினந்தோறும் செய்யும் "பாவத்துக்கு'' மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டியவனாக ஆகிவிட்டான்.

- தொடரும்

- 'விடுதலை', 17.5.1938

- விடுதலை நாளேடு, 9. 10. 19