வியாழன், 31 அக்டோபர், 2019

நமது பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், தி. வை. சொக்கப்பா உரை வருமாறு.

ஓர் இனத்தின் உயிர்மை அதன் பண்பாட்டினால் புலனா கிறது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத் தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது. மொழியால் இலக்கியமும், இலக்கிய வாயிலாகப் பண்பாடும், பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது, வளருகிறது, வேற்று மொழிக் கலப்பால், மற்ற மொழியை அழிக்கவேண்டும் என்று திட்டமிட்ட ஆதிக்கத்தால், அம்மொழி சிதைந்து தேய்ந்து, அதனால் அவ்விலக்கியம் மறைந்து, மறைக்கப் பட்டு, இலக்கியத்தின் வெளிப்பாடாகிய பண்பாடு குலைந்து, பண்பாட்டினை வளர்த்த இனம் மங்கிப் போகிறது. மூவாயிரமாண்டுகளுக்கு முன் இத்தகைய நிலை தமிழினத்திற்கும் பண்பாட்டிற்கும் உருவாகி ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்போம்.

கி.மு. ஆயிரத்து அய்நூறு ஆண்டளவில் காந்தார நாட்டிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்து நம் நாட்டில் புகுந்த ஆரிய இனம் இங்கு வாழ்ந்த திராவிட இனத்தோடு போராடி அவர்களின் சிறந்த நாகரிக (சிந்துவெளி நாகரிக) வாழ்வை அழித்து பல பகுதிகளில் குடியேறிற்று. பேரினமாயிருந்த திராவிடர்களைக் கொன்று வெற்றி காண்பது எளிதானதல்லவெனக் கண்டு அவர்களோடு உறவாடி அடிமைப்படுத்தி ஆளமுற்பட்டது.

ஆரியரும் எழுத்துக் கலையும்

வேதங்களை இயற்றியவர்களுக்கு எழுத்துக் கலை தெரிந்திருந்தது என்பதற்கான சான்றோ ஆதாரமோ இல்லை என்று நாகரிக வரலாற்றின் ஆசிரியர் வில் டு ராண்டும், ஆரியர்கள் நாகரிக உலகோடு தொடர்பு கொள்வ தற்கு முன்பாக எழுத்துக் கலை அறியாதவர்கள் என உலக வரலாற்று ஆசிரியர் எச்.ஜி. வெல்சும் எழுதியுள்ளார்கள். பல்வேறு நாடுகளில் பரவிய ஆரியர்கள் அவர்கள் குடி யேறிய நாடுகளில் வாழ்ந்த நாகரிக மக்களின் எழுத்துக் களையே பயன்படுத்தித் தங்கள் நெடுங்கணக்கை அமைத் துக் கொண்டார்கள் என அறியக் கிடக்கிறது. அநாசாஸ் எனத் தங்களால் எள்ளி நகையாடப்பட்ட திராவிடர்களின் எழுத்துக்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியே தங்கள் எழுத்துக்களை அமைத்துக் கொண்டார்கள் என்று ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். ஆரியர்களின் வேதங்கள் சுருதியாக எழுதாக்கிளவியாக இருந்து தலைமுறை தலை முறையாக செவி வழியாகவே நெடுங்காலம் நிலவி வந்த தற்கு அவர்கள் எழுதும் முறையை அறியாமையே காரணம் ஆகும். ஆரியருடைய முதனூலாகிய ரிக்கு வேதத்தில் பல தமிழ்ச் சொற்கள்-அணு, இராத்திரி, கணம், பழம், பூசனை போன்றவை-ஆளப்பட்டுள்ளன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உணவு உற்பத்திக்காக ஏர்கொண்டு மண்ணைக் கிளறி உழவுத் தொழிலை மேற்கொள்வது பாவம் என மனுநீதி மூலம் ஆரியர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்டு அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை அத்தொழி லில் ஈடுபடுத்தி ஏற்றம் கொண்டனர்; ஆக்கம் பெற்றனர். வேதமொழியும் வடநாட்டில் நிலவிய பிராகிருதமும் கலந்து உருவான சமற்கிருதக் கலவை மொழியைத் திராவிடர்கள் கற்க வேண்டியதாயிற்று. இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு என்ற தம் நூலில் கில்பர்ட் சிலேட்டர் இதனையே திராவிடர் மொழியில் ஆரிய மயமாக்கப்பட்டனர் எனக் குறிப்பிடுகிறார்.

அகத்தியரும் தமிழும்

ஆரியர் மொழி நிலை இவ்வாறிருக்க, ஆரிய முனிவரா கிய அகத்தியர் பொதியமலையில் தங்கித் தமிழுக்கு முதனூலும் இலக்கணமும் வகுத்தார் என்ற கதையைப் புனைந்து, தமிழர்களை இன்றளவில் நம்ப வைத்துள்ளனர். அகத்தியர் வருகை தென்னகத்தில் ஆரியர் வருகைக் குறிப் பேயாகும். பல்வேறு காலங்களில்-நீண்ட இடைக்காலத்திற் கிடையில் - அவ்வையார் வாழ்ந்து பாடியதாக இலக்கியத்தில் காட்டப்படுவதுபோல், அகத்தியரும் பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் செயற்கரிய செய்ததாக இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறார். ஒருவரே ஒரு மொழியையும் அப்போதே அதன் இலக்கணத்தையும் படைக்கக்கூடும் என்ற கூற்றினை ஆராயவும் தயங்கும் அறிஞர்கள் முச்சங்க வரலாறு-அவைகளின் காலக்குறிப்பு, புலவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்குமிடத்து-அறிவுக்குப் பொருந்தாது, உண்மைக்குப் புறம்பானது என்று மாற்றார் அறையும்போது அலமந்து போகிறார்கள்.

தமிழ் இலக்கியத்தின் தொன்மைச் சிறப்பையும் அதன் விரிவையும் கண்டு பொறாது தமிழ் எழுத்து பிற்காலத்தில் அசோகரது பிராமி எழுத்தினின்றும் கிரந்த எழுத்தினின்றும் தோன்றியதென்றும் சாதித்தனர். தமிழ் நெடுங்கணக்கு பழைமையானது

சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்துக்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது பேராசிரியர் லாங்டன், டாக்டர் ஹண்டர், சர். அலெக்சாண்டர் ஆகியோரின் முடிபாகும். தமிழ்நாட்டுக் குகை எழுத்துக்களுக்கும் பிராமி எழுத்துகட்கும் நெருங்கிய தொடர்பைக் காணலாம். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தின் காலம் கி.மு. அய்ந்நூற்றுக்கு முந்தியது எனத் திட்டவட்டமாய் நிறுவி கி.மு. எழுநூறு என்று சொல்வதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் தந்துள்ளார்கள். அத்தகைய அரிய இலக்கியம் தோன்றுவ தற்குமுன் எத்தனையெத்தனை நூல்கள் இருந்திருக்க வேண்டும், அவற்றிற்கு எவ்வளவு காலத்திற்கு முன்பாகத் தமிழ் நெடுங்கணக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சிந்திக்க மறுக்கலாமா?

தமிழ் இலக்கியம் ஆரிய மயமானது

தமிழர்களின் மறைநூல், மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு, மூலநூல்களை அழித்துவிட்டு வடமொழியினின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தனபோலக் காட்டினார்கள் பிராமணர்கள் எனத் தாம் எழுதிய தமிழ் வரலாறு என்ற நூலில் (பக். 29-33) பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாரா யண சாஸ்திரியார்) எழுதுகிறார். தொன்னூல்களான தென்னூல்களெல்லாம் வடமொழியில் பெயர்க்கப்பட்ட பின் அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின என்று தமிழர் வரலாறு என்ற தம் நூலில் ஞா.தேவநேயப் பாவாணர் விரிவாக விளக்கியுள்ளார்கள். இவ்வழிப்புப் பணியால் இந்திய நாகரிகம் பெருமளவு ஆரியருடையது எனவும், அதன் சிறு கூறே திராவிடரது என்றும் கருதுமாறு செய்யப்பட்டுவிட்டது. அகத்தியத்தை தமிழ் முதனூல் என்றனர். தொல்காப்பியத்தில் வேண்டாத சமற்கிருதச் சொற்களையும் ஆரியக் கருத்துக்களையும் புகுத்தினார்கள். திருவள்ளுவரைச் சீவல்லபர் என்ற ஆரியராக்கியத்தோடு, திருக்குறளின் அறத்துப்பால் வடமொழி தர்மசாத்திரத்தையும், பொருட்பால் அர்த்தசாத்திரத்தையும், காமத்துப்பால் காம சூத்திரத்தையும் தழுவின எனக் கூறவும் தலைப்பட்டனர். திருக்குறளுக்கு உரைவகுத்த தூய தமிழ்ப்பெயர் தாங்கிய பரிமேலழகர் தம்முடைய உரையில் ஆரியக் கருத்துக்களை வலிந்து புகுத்தித் தமிழர் கருத்துக்களை மறைத்துள்ளார்.

தமிழ் இலக்கிய மறைப்பு இடைக்காலத்திலும் தொடர்ந் தது. பெரிய புராணம் உபமன்யு பக்த விலாசத்தையும் திருவிளையாடல் புராணம் ஆலாசிய மான்மியத்தையும், சிவஞானபோதம் ரௌரவாகமத்தின் இறுதிப் பகுதியையும் முதனூலாய்க் கொண்ட வழிநூல்கள் என்றார்கள். மூவர் தேவாரப் பதிகங்களை தில்லையம்பலத்தில் மறைத்து சிதல் அரிக்கவிட்டார்கள் (திருமுறைகண்ட புராணத்தைக் காண்க) தமிழ் கருத்துக்களை சமற்கிருதச் சொற்களால் மூடிமறைத்து அவற்றைத் தங்களுடையதாகக் காட்டிக் கொள்ளவும் துணிந்து இறங்கினார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்பவை முறையே தர்மார்த்த காமமோட்சம் என்றதன் மொழிபெயர்ப்பு எனவும் முப்பால் என்பது திரிவர்க்கம் என்பதின் சொல்லாக்கமே எனவும் கூறினர். தமிழரின் அய்ந்தெழுத்து பஞ்சாட்சரமாயின. வெகுளி, மயக்கம், காமம் என்ற மும்மாசுகள் ஆணவம், மாயை, காமியம் எனக் குறிப்பிடப்பட்டன. மேலெழுந்த வகையாய்ப் பார்த்தால் சொல் மாற்றச் சூழ்ச்சி தெரியவராது. கருத்துக்கள் சொல்லால் விளக்கம் பெறுகின்றன. சொல்லில்லையேல் கருத்துமில்லையாகிறது. சொல்லால் மறைக்கப்பட்ட கருத்தின் சொந்தக்காரர் சொல்லுக்குரியவராகி விடுகிறார். வடமொழி இலக்கணத்தை வலிந்தும் நலிந்தும் தமிழுக்குப் பொருத்தி வீரசோழியம், பிரயோக விவேகம் முதலிய நூல்கள் எழுதப்பட்டன. தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இருபத்தாறு செய்யுளுறுப்புகள் ஆறாகக் குறைந்தன. சமற்கிருத ஆதிக்கத்தால் தென்னாடெங்கும் நிலவிய தமிழ்மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் முளைத்தெழுந்தன. வடமொழிக் கலப்பால் தமிழும் சமற் கிருதமும் சரிக்குச் சரி கலந்த மணிப்பவழ நடை இடைக் காலத்தில் வழங்கிற்று. சமற்கிருத ஊடுருவலால் நூற்றுக் கணக்கான தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போயின. பா-கவிதை யாயிற்று; பாட்டு காதையாயிற்று. கழுவாய் (பிராயச் சித்தம்) சுடலை (மயானம்), திருச்சுற்று (பிராகாரம்), திரையல் (பீடா), பலகணி (சன்னல்), வலக்காரம் (தந்திரம்), முதுசெம் (பிதிரார்ஜிதம்), கூற்றுவன் (யமன்) முதலிய சொற்கள் (கவிப்புக் கோட்டிற்குள் இருக்கும் சமற்கிருதச் சொற்கள் நம்முடையதாகவும்) ஆதரிப்பாரின்றி அநாதையாகி விட்டன. சோறு, மிளகுநீர் போன்ற சில சொற்கள் இழிந்தன வாகக் கருதப்பட்டு உயர் மட்டத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்பட்டு விட்டன. (தேவநேயன் அவர்கள் தமிழ் வரலாற்றில் விரிவாய்க் காணலாம்).

கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவிலேயே தமிழ் பழிக்கப் பட்டது என்பதற்குச் சான்று வேண்டுமெனில் ஆரியநன்று, தமிழ்தீது எனக்குயக் கொண்டான் கூறியதை நக்கீரர் அங்கதம் பாடிக் கண்டித்துள்ளதை நினைவு கூரலாம். சமற்கிருதத்திற்கு முந்திய பழைமை உடைய தமிழைச் சமற்கிருதத்தோடு ஒத்த காலத்தது ஒத்த  பெருமையுடையது என்றாவது காட்டவேண்டுமென்பதற்காக சிவஞான முனி வர் எவ்வளவு முயன்றுள்ளார் என்பதை அவர் பாட் டொன்றால் அறியலாம்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளியதற்கு இணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேற்றம் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல் லேற்றுப் பாகர்... இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்

கலை

கலைத் துறையிலும் தங்கள் முன்னமையையும் முதன் மையையும் நிலைநாட்ட இசை, நாடகம், கணியம், மருத்து வம் முதலிய கலை, அறிவியல் இலக்கியமெல்லாம் சமற் கிருத மொழியில் பெயர்த்துக்கொண்டு, தமிழ் முதனூல் களையெல்லாம் அழித்துவிட்டனர். தமிழிசையைக் கருநாடக சங்கீதமென்றும் தமிழ் நடனத்தை பரதநாட்டியம் என்றும் கூறினர். நாடகத் தமிழ் நூலாகிய பரதம் என அடியார்க்கு நல்லார் குறித்துள்ளதைக்காணில் தமிழ் பரத நூல் மூலநூல் என்பது வெள்ளிடைமலை, தமிழ்ப் பண்களை மறைத்து இராகங்களெல்லாம் சமற்கிருதப் பெயர்களால் மக்களிடையில் வழங்குகின்றன. இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் இடம்பெற ஓர் இயக்கம் தேவைப்பட்டது. சித்தர் களின் மருத்துவத்தையும் மூலிகைகளையும் தமிழகத்திலிருந்து ஓட்டியேவிட்டார்கள்.

சங்ககாலத்தில் தமிழர்கள் நாளுக்குக்கும் (Star) கோளுக்கும் (Planet) வேறுபாடு அறிந்திருந்தார்கள், காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஒரு நாளை ஆறு பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள்.  சூரிய உதய, மறைவுக் காலங்கள் திங்கள்தோறும் மாறுபடுவதால் ஒரு நண்பகலிலிருந்து அடுத்த நண்பகல் வரை ஒருநாள் எனக் கணக்கிட்டனர். (பழந்தமிழ் நூல்களாகிய நற்றிணை யில் அரையிருள் நடுநாள், அகநானூற்றில் பானாட்கங்குலும் பகலும் என்றெல்லாம் பாடப்பட்டுள்ளன). தைத்திங்களிலி ருந்து ஆண்டுப் பிறப்பினைக் கொண்டாடினார்கள். (சித்தி ரையிலிருந்து அன்று) பிரபல - அட்சய என்ற முற்றிலும் சமஸ்கிருதத்திலான அறுபதாண்டு வட்டத்தைப் புகுத்தி ஒரு தொடராண்டுக் கணக்கில்லாமல் செய்துவிட்டனர். திங்களை மாதமெனவும், ஆண்டினை வருஷம் என்றும், காரிக்கிழமையை சனிக்கிழமையென்றும், கிழமையை வாரம் எனவும் பெயரிட்டார்கள்.

- வியாழக்கிழமை தொடரும்

- விடுதலை நாளேடு, 15.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக