வியாழன், 31 அக்டோபர், 2019

தமிழ் முப்பால் மரபும்,வடமொழி நாற்பால் மரபும் - டாக்டர் தி. முருகரத்தனம் உரை

சமஸ்கிருதம் உலகின் ஒரே அறிவியல் மொழியாம்!

- புலவர் பா.வீரமணி -

இந்தியாவிலேயே சமஸ்கிருதம்தான் ஒரே அறிவியல் மொழி (இந்து, 12.8.2019) என்று கூற நாணி, உலகிலேயே என்று கூறியிருப்பதில் மத்திய மனித வள துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலின் அட வாடித்தனமும், சர்வதிகாரப்போக்கும் முண்டியடுத்து வெளிப்பட்டுள்ளது. இப்போது அவரது கூற்று எத்துணை உண்மை என்பதை இனி நோக்குவோம்.

சமஸ்கிருதத்தில் பரந்து விரிந்த புலமை கொண்ட வர் இராஜாராம் மோகன்ராய் ஆவர். அவர் பன் மொழி அறிஞர். உருது, அரபு, பாரசீகம் போன்ற மொழிகளையும் ஆழ்ந்து கற்றிருப்பதுடன், பவுத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம் போன்ற சமயங்களை யும் ஆழக்கற்றவர், வேதங்களையும், உபநிடதங்க ளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். சமஸ்கிருத்தை வேர் முதல் உச்சிவரை உணர்ந்தவர். சமஸ்கிருதம், பெரும் இலக்கியங்களையும், இதிகாசங் களையும் பெற்றிருந்தாலும், அதன் சமுதாயப் பயன் என்னவென்பதை அவர் அடையாளம் காட்டியிருப்பதுதான் மிக முக்கியமானது. அவர் காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனி யார் சமஸ் கிருதப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்ட மிட்ட போது, கவர்னர் ஜெனரலாக இருந்த ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு ஒரு கடிதத்தை 11.12.1823 அன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் சமஸ்கிருதத் தைப் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிற கல்வியறிவைப் பரப்புவதற்கு இந்துப் பண்டிதர்களைக் கொண்டு சமஸ்கிருதப் பள்ளிகளை அரசினர் நிறுவி வருகின்றனர். இத்தகைய கல்விக் கூடம் இலக்கண நுட்பங் களையும் அப்பாலைத் தத்துவ வேறுபாடுகளையும் இளைஞர்களின் மனத் தில் பெருஞ்சுமையாக ஏற்றி வைக்குமே ஒழிய சமு தாயத்திற்கு எவ்வகையிலும் அவை பயன்படா. அப் பள்ளிகளில் பயிலும் மாணவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு அறியப்பட்டவை எவையோ அவற்றை அறி வதுடன், கற்பனைக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் சிலருடைய பயனற்ற சொற்சிலம்பு வாதங்களையுமே தெரிந்துகொள்வர். இத்தகைய கல்வி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நெடுங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதே முறையில், இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடக்கச் செய்வது பிரிட்டீஸ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்கு மானால், சமஸ்கிருதக் கல்விமுறையே அதற்குப் போதுமானதாகும். குடிமக்களுடைய கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக இருக்குமானால், அது மிகவும் முற்போக்கு இயல்பும், அறிவு நலமும், கனிந்த பயிற்சி முறையும் கொண்டதாக அமைய வேண்டும். அம்முறையில் கணக்கியல், இயற் கைத் தத்துவம், வேதியல், உடற்கூற்று இயல் முதலியவற்றோடு மற்றும் பயன்தரும் அறிவியல், கலைகளைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆதாரம் - இராஜாராம் மோகன்ராய் - எழுதியவர் - சவுமியேந்திரநாத் தாகூர் - 1972 - பக் - 41- சாகித்திய அகாதெமி

- நன்றி: 'முகம்' மாத இதழ், அக். 2019

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் தி. முருகரத்தனம் உரை வருமாறு.

1. உறுதிப் பொருள்கள் முதற்பொருள்கள் :

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு, அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன, என முப்பாலுக்கு உரை வகுத்த பரிமேலழகர் தன் உரையினைத் தொடங்குகிறார். அதாவது, உறுதிப் பொருள் கள் என்பன மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள்; மக்கள் அடையவேண்டியவை; மக்கள் மேற்கொள்ள வேண்டி யவை; மக்கள் பின்பற்ற வேண்டியவை ஆகும். இவற்றை முதற்பொருள் எனவும், ஊதியம் எனவும், பண்டைக்காலத் தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டனர். ஊதியம் என்பதும் அறம் பொருள் இன்பங்களை எனப் புறநானூற்றுப் பழைய ஆசிரியர் ஓரிடத்தில் விளக்குகிறார். (காண்க: புறநா. 28). இவற்றை ஆங்கிலத்தில்,‘Human Ideals’ or ‘Human Values’ or ‘Human Aims’ or Ends of  Life’.... எனக் குறிப்பிடுவர். மக்கள் வாழ்க்கைக்கு உறுதியாகின்ற காரணத் தினால் அவை உறுதிப்பொருள்கள் என வழங்கப்பட்டன. இவ்வுறுதிப் பொருள்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் சிந்தனையிலும், செயலிலும் இடம்பெற்று இயங்கியும் இயக்கியும் வந்துள்ளன. இவ்விந்திய மக்கள் சமயங்கள், தத்துவங்கள், கலைகள் ஆகியவற்றிலும் இவை பரக்க இடம் பெற்றன. இவை வடமொழியில் புருஷார்த் தங்கள் என வழங்கப்படும். புருடர்களுக்கு அர்த்தமாவது, மக்கட்செல்வம் என்பது இதன் பொருளாம்.

2. தமிழில் முதற்பொருள்கள் :

தமிழ் இலக்கிய இலக்கணத் தொடக்கக் கால முதற் கொண்டு இவை பற்றிய கருத்துக்கள் தமிழரிடையே காணப்படுகின்றன. தொல்காப்பியரின் பொருளதிகாரத்தில்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த அய்ந்தினை மருங்கின்

(தொல். களவு. 1)

எனவும்,

அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப

(தொல். செய்யுள் 411)

எனவும் கூறப்படுகின்றது. தொல்காப்பியம் இவற்றை மும்முதற் பொருள்கள் எனப் பொருள் பொதிந்த தொடரால் குறிப்பிடுகின்றது. புறநானூறு :

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்து வழிபடூஉம் தோற்றம் போல (புறம். 31)

எனவும்,

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெரும நின் செல்வம் (புறம், 28)

எனவும் கூறுகின்றது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் பெருங்கதை,

அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும்

(4:7:140) எனக் குறிப்பிடுகின்றது.

இம்மூன்று உறுதிப்பொருள்களையே வள்ளுவரின் முப்பால் எனும் நூல் விளக்கி வரைகின்றது.

இவற்றைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிருபடலம் முதலானவை இம்மும் முதற் பொருள்களைப்பற்றி பேசுகின்றன. இடைக்காலத்துக்கு முந்திய நூல்கள் தேவாரங்கள், திவ்வியப் பிரபந்தங்கள், நன்னூல் முதலான இலக்கியங்கள் ஆகியவையும் இவை பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றன.

3. வடமொழியில் முதற்பொருள்கள் :

இங்ஙனமே ஏறத்தாழ கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதற் கொண்டே வடமொழிச் சாத்திரங்களும், இலக்கியங்களும் இம்மும்முதற் பொருள்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகின்றன. இக்காலத்திற்குரிய கல்ப சூத்திரங்கள், மனுஸ்மிருதி, கவுடலீ யம், வாத்சாயனம், மகாபாரதம், இராமாயணம், காளிதாசர் நூல்கள் ஆகியவை இவ்வுறுதிப்பொருள்களைப் பற்றியும் பேசுகின்றன. இவற்றிற்கு முன்னால் தோன்றிய வேதங் களிலும், பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் இவ்வுறுதிப் பொருள்கள் பற்றிய கருத்துக்கள் இல்லை. கி.பி.யின் தொடக் கத்திலிருந்தே புருஷாத்தங்களைப் பற்றிய கருத்துக்கள் வடமொழியில் பரவலாகப் பேசப்பட்டன.

4. யாருக்கு உரியன?

ஆதலால் இவ்வுறுதிப் பொருள்-முதற்பொருள்கள்-பற்றிய கருத்துக்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா முழுவதிலும் தோன்றிய பலமொழி இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளமை தெளிவாகிறது. வடமொழி, தென்மொழி மரபுகளில் தொடக்கக் கால முதலே இக்கருத்துக்கள் இடம் பெற்றதால் இக்கருத்துக்களை வட மொழிக்குரியனவா? (அல்லது) தமிழ் மொழிக்குரியனவா? (அல்லது) ஆரியர்க்குரியனவா? (அல்லது) தமிழர்க்குரிய னவா? என வரையறுத்தல் கடினமாக உள்ளது. இக்கருத் துக்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாக உரிய கருத்துக்கள் எனக் குறிப்பிடலாம் போலும். இக்கருத்துக் களைப் போன்றே ஆன்மாவைப் பற்றிய கருத்துக்களும், பல்பிறப்புக்களைப் பற்றிய கருத்துக்களும், கர்மா பற்றிய கருத்துக்களும் இந்திய மக்கள் அனைவர்க்கும் உரிய கருத் துக்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்கள் இவற்றை ‘National Stock’ எனக் குறிப்பிடுவர். (மாக்சு மூலர், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் முதலானோர் இவர்கள்.)

5. மும்முதற்பொருளின் காலம் :

தென்மொழி மரபும், வடமொழி மரபும் தம் தொடக் கக் காலத்தில் முப்பால் பற்றியே பேசுகின்றன. தமிழ் மரபு மும்முதற்பொருள் எனப் பேசுவது முன்னர் சுட்டிக் காட்டப்பட்டது. வடமொழியில் இது 'திரிவர்க்கம்' எனப் படுகிறது. தமிழ்மொழியில் இம்முப்பால் மரபினைத் தொல்காப்பியம், சங்கத்தொகை நூல்கள், இரட்டைக் காப்பியங்கள், பெருங்கதை ஆகியவற்றின் காலம் வரை யில் காணமுடிகிறது. வடமொழியில் கல்ப சாத்திரங்கள், மகாபாரதம், இராமாயணம், மனுஸ்மிருதி, கௌடல்யம், வாத்சாயனம், காளிதாசர் நூல்கள் ஆகியவற்றில் இம் முப்பால் மரபினையே காண முடிகிறது. ஒவ்வொரு மொழி மரபிலும் இக்காலம், தொடக்க முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை எனக் கொள்ளலாம்.

6. நாற்பால் மரபு தோன்றல் :

இக்காலத்திற்குப் பின்னர்த் தமிழில் தோன்றிய சமய இலக்கியங்களான தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலான வற்றில் நாற்பால்மரபு பேசப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண் டினராகிய திருமங்கையாழ்வார்,

"......... ............. ........... ............ ............. ................. .............. அம்மறைதான்

மன்னும் அறப்பொரு ளின்பம்வீடு என்றுலகில்

நன்னெறி மேம்பட்டன நான் கன்றே

எனவும், ஏறத்தாழ அவர் காலத்தவராகிய மாணிக்கவாசகர்,

அருந்தவர்க்கு ஆழின்கீழ் அறம்முதலா நான்கினையும்

இருந்தவருக்கு அருளுவது

எனவும், கி.பி. 7 - ஆம் நூற்றினராகிய திருஞான சம்பந்தர்,

அழிந்தசிந்தை அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்பம்வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி...."

எனவும் நாற்பால் பற்றிப் பேசுதல் காணலாம்.

அதாவது, இந்தக் காலம்தொட்டு நாற்பால் மரபு. கல்வியின் பயனும் பண்புமாக அமைந்துவிட்டது. 12 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த் தண்டி ஆசிரியர், நாற் பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகி எனவும், நன்னூல் ஆசிரியர் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன் எனவும் குறிப்பிடும் நிலை தோன்றியது.

- வியாழக்கிழமை (24.10.2019) தொடரும்

- விடுதலை நாளேடு, 22.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக