வியாழன், 31 அக்டோபர், 2019

நமது பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை பேராசிரியர் தி.வை.சொக்கப்பா உரை - 18

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், தி. வை. சொக்கப்பா உரை வருமாறு.

15.10.2019 அன்றைய தொடர்ச்சி...

குமுகாயம்

தமிழகத்திற்கு வந்த ஆரிய மக்கள் சிறுபான்மையரெனினும் அவர்கள் தமிழர்களின் சமயத்துறையில் தோற்றுவித்த மயக்கமும் மாற்றமும் அவற்றால் ஏற்பட்ட தமிழரின் தாழ்வும் அவர்களின் சாதனையாகும். நமக்கு வேதனை தருவதாகும். தமிழ் மன்னர்களின் பேதைமை, மதப்பித்து, கொடைமடம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் பூதேவரென்றும், தங்கள் மொழி தேவமொழியெ னவும் சொல்லித் தங்கள் வலக்காரத்தாலும், வெண்ணி றத்தாலும் அவர்களை ஏமாற்றிவிட்டார்கள். அவர்களிடம் குருமார் (புரோகிதர்)களாகவும் அமைச்சர்களாகவும் அமர்ந் தனர். தங்களை மதித்த தமிழ் மன்னர்களைச் சத்திரியராக்கி வேள்விகளைச் செய்தால் மழை பெய்யும். அதனால் நாடுசெழிக்கும், குடிகள் நலம் பெறுவர், போரில் அரசருக்கு வெற்றிகிட்டும் என்றெல்லாம் நம்பிக்கையூட்டி மூவேந் தரையும் கொலை வேள்வியை மேற்கொள்ளச் செய்தனர். பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யானை செல்கெழுகுட்டுவன் போன் றோர் வேள்வி வழிபாட்டிற்கு பலியானவர்களில் சிலராவர். இவ்வழிபாட்டைத் திருவள்ளுவர் ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செருத்து உண்ணாமை நன்று எனக் கண்டித்தும் பேதைமையில் மூழ்கிவிட்ட வேந்தர்கள் தெளிவுபெறவில்லை. மூவேந்தரைப் பின்பற்றிய மக்களும் மடமையில் ஆழ்ந்தனர். இப்போது யாகங்கள் பெருமளவு வழக்கற்றுப் போயினும் தீ வளர்த்து எரியோம்பல் எனும் ஆரிய வழக்கு தமிழனுக்காயிற்று. சத்திரியர் ஆக ஆக்கப்பட்ட மன்னர்கள் வர்மன் என்ற பெயர் ஈற்றினைப் பெருமையாக ஏற்றனர். (மாறவர்மன்) தங்கள் கல்வெட்டு களை சமற்கிருதத்திலும், பின்னர் சமற்கிருதம் கலந்த தமிழி லும் எழுதச் செய்தார்கள். தமிழ் வணிகர் வைசியராகிப் பூணூல் அணியத் தொடங்கினார்கள். குப்தன் என்ற பெய ரீற்றையும் கொண்டனர். வேளாளர்களைச் சூத்திரராக்கி அடிமைப்படுத்தினார்கள்.

பழங்காலத்தில் மக்களைத் தொழில் வகையில் அந்த ணர், அரசர், வணிகர், வேளாளர் என்று பிரித்திருந்த பாகு பாட்டை மாற்றி நிறவேறுபாடு, பிறப்பு அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வர்ணங் களாக்கினார்கள். அப்பிரிவுகளுக்குத் தனித்தனியே தொழி லும், ஆசாரமும் கற்பித்து அவைமுறையே ஒன்றினுக்கு ஒன்று தாழ்ந்தவை எனவுமாக்கி இவ்வேறுபாடு இறைவன் படைப்பென நம்பச் செய்து இச்சாதிக் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டனர் பிராமணர்கள். இந்த குமுகாய அமைப்பில் தமிழர்கள் நிரந்தரமாய்த் தாழ்த்தப்பட்டார்கள். எத்தகைய கல்விச் சிறப்புப் பெற்றிருந்தாலும், குணக்குன் றானாலும், பட்டம் பதவி வகிக்கினும் சூத்திரர், மற்ற மூவர்ணத்தாருக்கு குற்றேவல் செய்யப் பிறந்தவர்களே.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்து வந்த மக்களைப் பல குலங்களாக்கி, பாழ்செய்யும் உட்பகையைப் புகுத்தி அவர்களைச் சின்னாபின்னப்படுத்தித் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டினர். இவ்வாறு ஏமாளி மக்கள் மீது ஏற்றங்கண்ட பிராமணர் கல்வித்துறையை தமக்கே உரியதாக்கிக் கொண்டு ஏனையரோடு கலந்து வாழாது தனித்தெருவில் வாழ்ந்து, இறப்பவருக்குத் தனிச் சுடலையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பிராமணரல்லாதாரை அசுரர் எனக் குறிப்பிட்டனர். கொல்லேற டக்கல் முதலிய மறவினை செய்து மணத்தலை அசுர மணமாக்கினர். பாட்டியல் இலக்கணத்தில் பிராமணரைப்பாட வெண்பா, வேளாளரைப் பாட வஞ்சிப்பா எனவும் வகுத்தனர். பாட்டெழுதும் ஓலை நறுக்கின் அளவு பிராமணருக்கு 24 விரல், வேளாளர்க்கு அதில் பாதியென வரையறுத்திருந்தனர். எழுத்துகட்கும் பாக்கட்கும் தெய்வமும் குலமும் வகுக்கப்பட்டன. பிராம ணரை வணங்குமாறு காரிகிழார் வேண்டினார். தமிழரின் பொருளைப் பறிக்க பதினாறு தானங்கள் வகுக்கப்பட்டன.

ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து  (புறம்-367)

என்ற அவ்வையார் பாடலைக் காணலாம். திருத்தொண் டர்த்தொகை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் எனப் பாடியுள்ளது மேற்கூறியவற்றை வலியுறுத்துகிறது.

பிறவிக் குலப் பிரிவினைத் திட்டம் இழிவான காரியங் களை ஒரு சாராருக்கு ஒதுக்கி அவற்றைச் செய்ததாலேயே தீண்டாதவர்களாக்கப் பட்டனர். அவர்களை ஊரின் புறத்தே வாழச் செய்ததன் பயனாய்த் தீண்டாமை, அணுகாமை, பாராமை வளர்ந்து மக்களினத்திற்கே மாசு ஏற்பட்டது.

நாவலம் பொழிலாக விளங்கிய நம் நாட்டிற்கு சம்புத் தீவம், பரதகண்டம், பாரத தேசம் என்றெல்லாம் பெயரிட் டனர். சேரநாடு பரசுராம சேத்திரமாயிற்று. குமரிநாடே இல்லை எனக்கூறி அந்நாடே மறைக்கப்பட்டது. அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றாசிரியன் கிருட்டிணை, காவேரி, வைகையாற்று வெளிகளிலிருந்து நாட்டு வரலாற் றைத் தொடங்காமல் கங்கைச் சமவெளியில் வேதகால ஆரிய வருகையிலிருந்து தொடங்கியதால் வரலாற்றேடுகள் இன்றளவில் திராவிடருக்கு உரிய இடம் அளிக்காமலேயே அமைந்துள்ளன. இந்திய வரலாற்றாசிரியனுக்குத் தன் னாட்டுப் பாவினின்று அயலார் ஊமையை எளிதில் பிரித்து எடுக்க இயலாதவாறு ஆரியம் மிக நன்றாய் வேரூன்றிவிட்டதெனப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அங்கலாய்க் கிறார்.

சமயம்

இலிங்க வணக்கம் செய்து வந்த திராவிடரை சிசினதேவர் (ஆண்குறியை வழிபடுவோர்) என இழித்தும் பழித்தும் வந்த ஆரியர்கள் தாங்கள் வணங்கி வந்த சிறு தெய்வங் களாகிய இயற்கைக் கடவுள்களை விடுத்து தமிழர் தெய்வங் களை ஏற்று வழிபடத் தொடங்கியதன் வாயிலாக அவர் களிடம் நல்லெண்ணத்தைப் பெற்று சமயத்துறையில் தாங்கள் விரும்பிய மாற்றங்களையெல்லாம் செய்து தங்களாதிக்கத்தை என்றுமே அசைக்க முடியாதவாறு நிலைபெறச் செய்து கொண்டார்கள். தமிழர் தெய்வங்களுக்கு வடமொழிப் பெயர்களிட்டு ஆரியத் தெய்வங்களாக்கிக் கொண்டனர். முத்தொழிலுக்கும் (படைத்தல், காத்தல், அழித் தல்) உரிய முழு முதற் கடவுளாகிய சிவனுக்கு கடைத் தொழிலைத் தந்து, பிரமனைப் படைத்து படைப்புத் தெய்வ மாக்கி திருமாலுக்குக் காக்கும் தொழிலை ஈந்து பிரமன், திருமால், சிவன் என்ற முத்திருமேனிகளைப் படைத்தார்கள். தமிழர்கள் பிரமனை ஏற்காததால் அத்தெய்வத்திற்குக் கோவிலும் கும்பிடும் இல்லாது போயிற்று திருமாலைக் குறிக்கும் விண்டு எனும் தென் சொல் விஷ்ணு என்ற வட சொல்லாய் மாறிற்று. முல்லை நிலத்து முகில் தெய்வமாகிய மாயோனே திருமாலாகும். சிவன், சங்கரன் என்றும், குறிஞ்சித் தெய்வமாகிய முருகன், பிராமணருக்கு நல்லவன் எனப் பொருள் தரும் சுப்பிரமணியன் என்றும் பெயரிடப்பட்டனர். தமிழ்த் தெய்வமாகிய காளியை ஆரியத் தெய்வமாய்க்காட்ட துர்க்கை, மகிடாசுரமர்த்தனி நிகம்பசூதனி எனப் பலப்பட பெயரிட்டு அதற்கேற்ப கதைகளையும் புனைந்தனர். அத்தகைய கதைகளே முப்பத்தாறு புராணங்களாகும். கந்த புராணத்திலில்லாத புளுகு எந்த புராணத்திலும் இல்லை என்ற பழமொழியே புராணங்களின் பொய்மையை விளக் கும். தசாவதாரக் கதைகள் திருமாலுக்குப் பல வடிவங்கள் தந்து பல்லாற்றல்களையும் கற்பித்தன. நஞ்சுண்டகதை, தாரூக வனக்கதைகளால் சிந்துவெளிக் கடவுளாக இருந்த சிவன் வேத ஆரியக் கடவுளானான். கறைமிடற்றோன், மாதொரு பாகன், தாயுமானவன், கயற்கண்ணி, பெருமாள் என்ற தமிழ்த் தொடர்கள் முறையே நீலகண்டன், அர்த்த நாரீசுவரன், மாதுருபூதம், மீனாட்சி, மகாவிஷ்ணு ஆயின. திருத்தலங்களும் சமற்கிருதப் பெயர்கள் பெற்றன. அண்ணாமலை, சிற்றம்பலம், திருவானைக்கா, கழுக்குன்றம், மறைக்காடு, முதுகுன்றம் ஆகியவை முறையே அருணா சலம், சிதம்பரம், சும்புகேசுவரம், பட்சி தீர்த்தம், வேதாரண் யம், விருத்தாசலம் என்று பெயர் மாற்றம் பெற்றன.

புராணக்கதைகளை நாடு முழுவதும் நாள்தோறும் மக் களிடையில் பரப்பி வந்தனர். வருகின்றனர். அக்கதைகளைக் கேட்பதே நல்வினையாய்க் கருதப்பட்டு பாமரரும் படித்த வரும் பகுத்தறிவை இழந்தனர்.

ஆரிய மதக்கொள்கைகளும் தமிழரின் சமயக் கருத்துக் களும் இணைந்த ஒன்றே இந்துமதமாகும். ஆதிசங்கரர் காலம் வரையில் ஆதியில் ஆரியமதம் வேதமதம் என்றும், பிறகு பிராமண மதமென்றும் வழங்கிவந்தன. அதன் பிறகே அது இந்து மதமாயிற்று. சிந்து ஆற்றின் பெயர் பாரசீகமொழியில் இந்துவாகத் திரிந்து அதுவே மக்களுக்கும் மதத்திற்கும் நாட்டுக்குமாயிற்று. தமிழர்கள் இந்துக்கள் ஆகியவுடன் பிறவி அடிப்படையில் வளர்ந்து வந்திருந்த நால்வர்ணக் கொள்கைப்படி பிராமணர்கள் உயர்த்தப்பட்டுத் தமிழர்கள் தாழ்த்தப்பட்டார்கள். அதன் பயனாகப் பிராமணர் கோவில் வழிபாடு செய்யும் தகுதிபெற்றனர். அத்தகுதியைத் தமிழர்கள் இழந்ததோடு கோவிலில் தெய்வங்களை நெருங்கவும் முடியாது போயிற்று. வழிபாட்டு மொழித் தகுதியைச் சமற்கிருதம் பெற்றதனால் தமிழ் தகுதியற்றுவிட்டது. இறை வழிபாட்டோடு, மற்ற மதச் சடங்குகளும் திருமணங்களும் பிராமணர்களே நடத்தி வைக்கும் உரிமை பெற்றனர். கோயில் நுழைவே பலருக்கு மறுக்கப்பட்டது. சைவ சமயம் மிகப் பழமையானது என சிந்துவெளி தாயித்துக்களை ஆராய்ந்த சர். ஜான் மார்ஷல் கருதினார். சிந்துவெளி மக்கள் லிங்க-யோனி வணக்கத் தையும் சிவவழிபாட்டையும் பின்பற்றினார்கள். யோகக் குறியாகக் கருதப்பட்ட சுவஸ்திகர்க்குறி சிவதாயித்துக்களில் காணப்படுகிறது. தமிழரின் அய்ந்தெழுத்து சிவபோற்றியே. தென்னாட்டுடைய சிவனே போற்றி என மாணிக்கவாசகர் திருவாசகப் போற்றித் திருவகவலில் வழுத்துகிறார். அவ் வைத்தெழுத்து சிவாய நம என்ற பஞ்சாட்சரமாக்கப்பட்டது கோவில் வழிபாட்டிலிருந்து தமிழரை விலக்க வடமொழி சிவாகமங்களை ஆக்கிக்கொண்டார்கள். தமிழர் சமயக் கருத்துக்களை விவரிக்கும் சைவ சித்தாந்த தத்துவங்களை நானே கடவுள் என்னும் வேதாந்தக் கொள்கைகளால் திரும்பியும் பார்க்காமல் செய்துவிட்டார்கள்.

நாட்டுப்பெயரையும், தெய்வங்களின் பெயர்களையும் நம்முடைய பல்துறை கருத்துக்களையும், நூல்கள், கலைகள் யாவற்றையும் சமற்கிருதச் சொற்களால் மறைத்தும் மாற்றி யும் நமது பண்பாட்டை ஆரிய மயமாக்கி தங்களுடைய தாக்கிக் கொண்டு, நம்மையும் உலகினையும் நம்பவைத்து விட்டார்கள். இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லாமிழந்தும், விழிப்பூட்டப் பெற்றும், விழித்தெழ மாட்டாமல் மடமையிலாழ்ந்தும் கிடக்கிறோம்.

- விடுதலை நாளேடு, 17.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக