வியாழன், 10 அக்டோபர், 2019

பண்பாடு சமற்கிருத மயமாக்கப்படுதல்- 16

சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் குறித்து டாக்டர் க.த.திருநாவுக்கரசு உரை


பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - அதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் க.த.திருநாவுக்கரசு (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை) உரை வருமாறு.

இந்திய நாட்டில் பல்வேறு வகைப் பண்பாடுகள் உள்ளன. பண்பாடு என்பதனை எளிதில் விளக்க இயலாது. அறிவுத் துறைகள் பலவற்றிலும், எது பண்பாடு? எனும் வினாவிற்கு வெவ்வேறு வகையான விளக்கங்கள் தரப் பட்டுள்ளன. எனினும், எல்லாத் துறைகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு பொதுவான விளக்கத்தைத் தருவதற்கு முயல லாம்.

பண்பாடு


இக்காலத்தில் வரலாறு என்பது, ஓர் இனத்தின்-நாட்டின்- நாகரிகத்தினை விளக்குவதாக, பண்பாட்டினைப் படம்பிடித் துக் காட்டுவதாக அமைய வேண்டும் என்று வரலாற்றுப் பேரறிஞர் அர்னால்டு டாயின்பி மொழிந்துள்ளார். இங்கே சுட்டப்பட்டும் இரு சொற்களின் பொருளைப் புரிந்து கொள்ளுவோமானால், நம்முடைய நோக்கத்தை நன்கு வெளிப்படுத்த இயலும்.

உலக வாழ்க்கையில்-புறவாழ்வில் மனிதன் அடைகின்ற வியத்தகு முன்னேற்றங்கள், பெறுகின்ற பேறுகள் போற்றிப் பின்பற்றப்படுகின்ற நாள் வண்ணம், இன்பம் தரும் பகட்டு மிகு வாழ்க்கை வசதிகள் போன்ற யாவும் நாகரிகத்தின் கூறுகள் ஆகும்.

வாழ்க்கையில், மனிதன் முழு நிறைவை அடைவதற்கு முயலும் முயற்சியின் பயனாக அமைவது பண்பாடு. முழு நிறைவான வாழ்க்கை இனிமையும், ஒளியும் உடையதாக அமையும். முழு நிறைவான வாழ்க்கையைப் பெற மனிதர் கள் ஒன்றாகக் கூடி வாழ்வதால் உருவாகும் சமூக அமைப்பு களின் இயல்புகளாக அமைவது பண்பாடு. சமூகங்கள் பல சேர்ந்து ஒரு சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து இயங்கும்பொழுது, உருவாகும் வாழ்க்கை நெறி, பழக்க வழக்கங்கள், கலையுணர்வு, ஆட்சி அமைப்புகள், சிந்தனை முதிர்ச்சி ஆகிய அனைத்தும் இணைந்து ஒருவகைச் சமுதாய சிந்தனையாக வெளிப்படுவதே பண்பாடு எனலாம்.

இந்த வரையறையைக் கருத்தில் கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல் அமைப்புகள், வாழ்வியல், சமூக நிலை, சமயவுணர்வு, கலை வளர்ச்சி போன்றவற்றை மதிப்பிடுவதே இந்த ஆய்வரங்கின் நோக்கமாகும்.

சமற்கிருத மயமாக்குதல்


கடந்த இருபது ஆண்டுகளாக, இந்திய அறிவரங்கில், சமற்கிருத மயமாக்குதல் எனும் தொடரைப் பலர் பயன்படுத்துவதை அடிக்கடி நாம் கேள்வியுறுகிறோம். சமற்கிருத மயமாக்குதல் என்பதற்கு என்ன பொருள்? இந்தப் பாரத நாட்டில் எல்லாவற்றையும் சமஸ்கிருத மொழி வழிப்பட்ட பண்பாட்டின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, மானிட இயல் (Anthropology) அறிஞர்கள் சூட்டியுள்ள புதுமைப் பெயரே சமஸ்கிருத மயமாக்குதல் என்பதாகும்.

இந்தியாவில் சமற்கிருத மொழி வழிப்பட்ட நாகரிகமும் பண்பாடுமே சிறந்தவை. மற்ற மொழி வழிப்பட்ட பண்பாடு கள் எல்லாம் காட்டுவாழ் மக்களின் வாழ்க்கை நெறிகள். அவை யாவும் மட்டமானவை; கடுமையும் கொடுமையும் நிறைந்தவை; அவற்றில் உயர்ந்த சிந்தனைக்கும், கவர்ச்சிமிகு கலைகளின் வளர்ச்சிக்கும் இடமே கிடையாது எனும் எண்ணப்போக்கின் அடிப்படையில் எழுந்ததே இக்கருது கோளாகும்.

எனவே, இந்தியப் பண்பாட்டின் தலையூற்றாய் விளங் குவது சமஸ்கிருத மொழிவழிப்பட்ட பண்பாடு. அதனுடைய தாக்கத்தினாலேயே, இந்தியா முழுமையும் நாகரிகமும், பண்பாடும் வளர்ச்சியுறத் தொடங்கியதுஎனும் கருத்தை நிலைநாட்ட முயலுவதே சமற்கிருத மயமாக்குதலின் அடிப் படை நோக்கமாகும்.

கிரேக்கர்கள் பண்டைக்காலத்தில், தாங்கள்தான் உலகி லேயே நாகரிகம் அடைந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்று கூறினர். இதைப் போன்றே, சமற்கிருத மொழிப் பண்பாட்டாளர்கள், மற்றவர்களை மிலேச்சர்கள் எனும் சொல்லால் சுட்டினர்.

மிலேச்சர்களையும், காட்டுமிராண்டிகளையும் நாகரிகம் அடையச் செய்ததையே சமற்கிருத மயமாக்குதல் எனும் தொடரால், இக்கால அறிஞர்கள் சுட்டுகின்றனர்.

இதனால், புலனாவது யாது? சமற்கிருத மொழிவழிப்பட்ட பண்பாட்டை உடையவர்களே, உலகிற்கு - சிறப்பாக இந்தி யாவிற்கு நாகரீக ஒளியைக் கொண்டுவந்து புகுத்தியவர்கள்; சமற்கிருத மொழியாளர் இந்தியாவிற்கு வராமல் போய் இருந்தால், இந்தியா இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடா கவே இருந்திருக்கும் எனும் தன்முனைப்பு வாய்ந்த எண் ணப்போக்கை வெளிப்படுத்துகிறது.

ஆரிய மயம்


சென்ற நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டின் இடைப் பகுதி முடிய, உலக அறிஞர்களின் சிந்தனையில் ஆரிய மயமாக்குதல் (Aryanization) எனும் கருத்து நிலை வீறுடன் விளங்கியது.

உலக வரலாற்றில் சிறந்தவை, உயர்ந்தவை, போற்றத் தக்கவை, முன்னேற்றத்திற்கு வழிகாட்டுபவை எனக் கருதப்பட்ட நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் அனைத்துமே ஆரியருக்கு உரியவை என்று நம்பப்பட்டது. இதனால், எல்லாரும் இந்தியப் பண்பாட்டை, ஆரியப் பண்பாடு என வும், இசுலாமியர் வருகைக்கு முற்பட்ட இந்திய அரசுக ளையும், ஆட்சிகளையும் ஆரியரின் ஆட்சி (Aryan Rule) என்றே குறிப்பிட்டனர். இதைத்தான், அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை எனும் பெயரால் அழைத்தார்.

இந்திய வரலாற்றின் தொடக்கக் காலத்தில் ஆரியரும், ஆரியர் அல்லாதவரும் பேரளவிற்குக் கலந்து உறவாடியதன் மூலம், புதியதொரு பண்பாட்டினை உருவாக்கினர் என்ப தில் யாருக்கும் அய்யம் இருக்காது. ஆனால், அந்தக் கலப்பின் விளைவாக உருவான புதிய பண்பாட்டில் உள்ள முனைப்பான தலைமைக் கூறுகள் யாவும், ஆரியருக்கு உரியனவாகும்; அவர்களுடைய மொழியே காட்டுமிராண்டி மொழிகளாக இருந்து வந்த பழங்குடி மக்களின் மொழிகளை அழித்து, அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொண்டது; அல்லது அவற்றை எழுத்து வடிவம் பெற்று, இலக்கிய வளர்ச்சி அடையுமாறு செய்தது! என்பது பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்தாகும்.

இந்நிலையில், ஆரிய மயமாக்குதல் எனும் பெயரினை ஏன் கைவிட்டுவிட்டு, சமற்கிருத மயமாக்குதல் எனும் புதிய திருப்பெயரை அறிமுகப்படுத்தினார்கள்? எனும் எண்ணம் எழுவது இயல்பாகும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, இரண்டாவது உலகப் போரினால் மனித இனம் பட்ட அல்லலாகும். ஆரியர்களே உலகில் ஆளப் பிறந்தவர்கள்? எனும் இட்லரின் (Hitler) இனவெறியே, அப்போர்  உண்டா வதற்கு மூலகாரணம் என்பதை யாவரும் உணர்ந்தனர். இதனால் யுனெஸ்கோ (UNESCO) நிறுவப்பட்டதும், உலகின் பல பகுதிகளில், இனம் என்பது ஒரு பொய்க்கதை (Race is a myth) எனும் பொருள்பற்றி மாநாடுகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இவற்றின் முடிவாக, உலகில் எங்குமே கலப்பற்ற-தூய்மையான-இனம் ஒன்று கூட இன்று இல்லை என்று அறிஞர்கள் முழங்கினர்.

மற்றொரு காரணம் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றியமையாகும். இந்த இயக்கத்தின் நோக்கையும் போக்கையும் கண்டு, உள்ளார்ந்த தன்னல நோக்கம் கொண்டவர்கள் அஞ்சினர். இதனால் ஆரியராவது-திராவிடராவது? எனும் கருத்தைப் பரப்பத் தொடங்கினர். பிராமணர்கள் ஆரியர் அல்லர்; தமிழர்களே எனும் கருத்தைப் பரப்ப முயன்றனர்.

இதன் விளைவாகவே, மொழிவழிப் பண்பாடு பற்றிய எண்ணப் போக்கினை இந்திய அறிஞர்கள் வளர்த்தனர். இந்த நிலையில், பிறப்பால் பிராமணரும் இந்திய மானிட இயல் அறிஞருமான டாக்டர் எம்.என். சிறீநிவாசன், சமற் கிருத மயமாக்குதல் எனும் தொடரைத் தம்முடைய இந்திய கிராமங்களின் நிலை சிறப்பாக கூர்க்கு கிராமங்கள் எனும் ஆய்வேட்டில் 1956 அளவில் பயன்படுத்தினார். இப்புதுமை யான பெயர், உலக அரங்கில் மிக விரைவாகப் பரவியது. இதனால் சமற்கிருத மயமாக்குதல் எனும் தொடர் பெரு வழக்கிற்கு வந்தது.

பெரிய-சிறிய மரபுகள்


இந்திய மானிட இயல் அறிஞர் படைத்த இப்பெயரை ஏற்றுப் போற்ற, அமெரிக்கர்கள் தயங்கினர். இதனால், புதியதொரு பெயரை அவர்கள் படைத்து வழங்கலாயினர்.

சமஸ்கிருத வழிப்பட்ட எண்ணப் போக்கையும், வாழ்க்கை முறையையும் இணைத்து, பெரிய மரபு (Great Tradition) எனும் பெயரால் சுட்டினர். வடமொழியின் தாக்கத்திற்கு இரையாகாத பிற மொழிகளின் எண்ணப் போக்கையும், பண்பாட்டையும் சிறிய நெறி  (Little Tradition)  எனும் பெயரால் குறிப்பிடலாயினர். பெரிய மரபாக மாற்றுதல் என்பது இவர்கள் சமற்கிருத மயமாக்குதலுக்குக் கொடுத்த பெயராகும்.

இன்று மேற்கு நாட்டு அறிஞர்களுள் பலர், பெரிய நெறி, சிறிய நெறி எனும் தொடர்களையே பயன்படுத்துகின்றனர். ருஷிய, ஆசிய நாடுகளின் அறிஞர்களே சமற்கிருத மயமாக் குதல் எனும் தொடரினைப் பயன்படுத்துகின்றனர். இவ்விரு பெயர்களும், பண்பாட்டைச் சமற்கிருத மயமாக்குதலையே உணர்த்துகின்றன.

ஆனால், நீலகண்ட சாஸ்திரியார் போன்ற வரலாற்று அறிஞர்கள், ஆரிய மயமாக்குதல் எனும் தொடரையே, தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர்.

- விடுதலை நாளேடு, 10 .10 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக