வியாழன், 31 அக்டோபர், 2019

தமிழ் முப்பால் மரபும்,வடமொழி நாற்பால் மரபும் - 20

டாக்டர் தி. முருகரத்தனம் உரை

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் தி. முருகரத்தனம் உரை வருமாறு.

செவ்வாய்க்கிழமை (22.10.2019) தொடர்ச்சி...

ஆதலால், தென்மொழி வடமொழி அடங்கிய இந்திய மரபில் முப்பால்மரபு 5, 6ஆம் நூற்றாண்டுவரையிலான காலத்திலும், அதன்பின் நாற்பால் மரபும், வழக்கிற்கு வந்தன எனத் தெளிவாகிறது. இவ்வாறு முப்பால் மரபு, நாற்பால் மரபாக மாறியது என அறியலாம். இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மரபு மாற்றமாக மட்டுமே இது தோன்றவில்லை. இந்திய மக்களின் சிந்தனைப் போக்கில் ஏற்பட்ட ஒரு பெரு மாற்றத்தின் விளைவே இது எனக் கொள்ளவேண்டும். அந்த மாற்றம் ஓர் அடிப்படையான மாற்றமாகும். இந்திய மக்கள் சிந்தனைப் போக்கினையும், வாழ்க்கைப் போக்கினையும் அதுமாற்றி அமைத்த மாற்றமாகவும் கருதலாம். இதனைச் சிறிது விளக்கமாகக் காணலாம்.

7. நாற்பாலின் நோக்கம் :

அறம், பொருள், இன்பம் என முப்பால் மரபு வழங்கிய தொடக்கக் காலத்தில் முப்பொருள்களும் ஒரே சீரான சிறப்புப் பெற்றன; ஒரே சீரான அழுத்தம் பெற்றன. அதாவது வாழ்க்கைக்கு அறம் தேவை; அது போலவே பொருளும் தேவை; அதுபோலவே இன்பமும் தேவை. மூன்றுமே சீராகத் தேவைப்படும் என்பது அக்காலத்தின் கொள்கை. மக்கள் அறத்தின் வழி நடந்து பொருளை ஈட்டி இன்பம் துய்த்தலை வாழ்க்கையாகக் கொண்டனர் என இதனால் அறியலாம்.(1)

ஆனால், முப்பால் மரபோடு வீட்டுப்பால் சேர்க்கப்பட்ட போது நான்காவது பாலாகிய வீட்டுப்பாலே சிறந்தது என வும், மற்றவை அத்துணைச் சிறப்பு இல்லாதவை எனவும், வீட்டுப்பாலே குறிக்கோள் எனவும், மற்றவை மூன்றும் கருவிகள் எனவும் விளக்கங்கள் தரப்பட்டன. இதன்பொருள் என்னவென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு உரிய அறம், பொருள், இன்பம் புறக்கணிக்கப்பட்ட மறுமைவாழ்வுக்குரிய வீடு போற்றப்பட்டது என்பதாகும். அதாவது சமூகக் கருத்தாக இருந்த முப்பால், சமயக் கருத்தாகக் கொள்ளத்தக்க நாற்பாலாக உற்ற மாற்றமே இது என்பதாகும். இந்த மாற்றமே மக்கள் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட மாற்ற மாகும். உலக விருப்பக் கொள்கையிலிருந்து உலக மறுப்புக் கொள்கைக்கு இந்திய மக்கள் வந்ததாகக் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றம் ஏற்பட்ட காலம். இந்து சமயம் தன் சாத்தி ரங்களாலும், காவியங்களாலும், தத்துவங்களாலும், வருணா சிரம தர்மம் எனும் சமூக அமைப்பாலும், உருவமும் உறுதி யும் பெற்ற காலம் ஆகும். அதாவது ஆரியப் பண்பாடு இந் திய நாட்டுப் பண்பாட்டின் பல கூறுகளையும் தன்மயமாக்கித் தன் மேன்மைக்கும் நலத்திற்கும் பயன்படுத்திக் கொண்ட காலமாகும்.

இக்காலத்தில் முப்பால் மரபு, பிராமணியமய மாக்கப்பட்ட அதாவது ஆரியமயமாக்கப்பட்ட வாழ்க்கைத் தத்துவமாக தரப்பட்டது. முப்பால் மரபில் இந்த உலக வாழ்க்கை வற்புறுத்திப் பேசப்பட்டது; சமய வாழ்க்கை சிறப்பாக இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்திய வரலாற்றுப் பேராசிரியர் பாசாம் போன்றவர்கள், 'அர்த்தமும், காமமும்' உலோகாயதக் கருத்துக்கள் கொண்டுள்ளன என எடுத்துக்காட்டுவதை கருத்தில் கொள்ளவேண்டும்(2) உலோகாயதத் தத்துவக் கருத்துக்களும் இவ்வுலக வாழ்வை வற்புறுத்தும் கருத்துக் களும் நீக்கப்பட்டு மறுவுலக வாழ்வை வற்புறுத்தும் சமயக் கருத்துக்கள் புகுத்தப்பட்டு, வகுக்கப்பட்ட மரபே நாற்பால் மரபாகும். பண்டை அறம் பொருள் இன்பங்களுக்கு அடிப் படையான, இவ்வுலகத்துக்கான கருத்துக்கள் ஆரியர் அல்லாத இந்திய மக்களுக்கும் குறிப்பாகத் திராவிட மக்க ளுக்கும் உரியவையாக இருந்திருக்கலாம். இந்திய நாட்டின் வாழ்க்கைக்குரிய எத்தனையோ தத்துவக் கருத்துக்களும், சமூகக் கருத்துக்களும், இலக்கிய மரபுகளும், கதைகளும் ஆரியமயமாக்கப்பட்டமை போன்றே இம்முப்பால் மரபும் ஆரிய மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையினையே வட மொழியில் நாம் காணுகின்றோம். தமிழகத்திலும் இது பரப்பப்பட்டது.

நாற்பால் மரபின் அடிப்படையான கருத்து. நான்காவ தான வீட்டுப்பாலே சிறந்ததாகும் என்பது, மற்ற மூன்று பால் களும் புறக்கணிக்கத்தக்கன என்பதும் ஆகும்.

“ஈதல்அறம்; தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;

காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு இட்டதே இன்பம்;

பரனை நினைத்து இம்மூன்றும் விட்டதே வீடு'

என்னும் அவ்வை பாட்டு இதனை எடுத்துக்காட்டும்.

ஆரிய மரபு இப்பெருமாற்றத்தினை-இவ்வடிப்படை மாற்றத்தினை, மெல்ல மெல்லச் செய்ததாகத் தெரிகிறது. முப்பால் மரபினை அது முற்றிலும் கைவிடவும் முடிய வில்லை. காரணம் அதன் பெருமை போற்றத்தக்கது. அதன் தேவை தவிர்க்க முடியாதது. ஆயினும் இம்முப்பால் மர பினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை! ஆகவே அது அதனை மாற்றி அமைத்தது; நான்காவது பாலே சிறந்தது எனக் காட்டும் அப்பணியினை நிறை வேற்றியது. முப்பாலினையே போற்றி முப்பால் எனவே பெயரிட்டு வள்ளுவர் செய்த திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகர் முப்பால்களையும் தாழ்த்தி இருப்பதைக் காணலாம். அம்முனிவரால் உணர்த்தப்பட்ட அம்மூன்றினுள் ஏனைப்பொருளும் இன்பமும் போலாது அறன், இம்மை மறுமை வீடு என மூன்றையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து, இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாகிய பொருள் கூறுவான் எடுத்துக்கொண்டார், அப்பொருளைத் துணைக் காரணமாக உடைத்தாய் இம்மையே பயப்பதாய இன்பம் கூறுவான் எடுத்துக்கொண்டார் என்னும் பரிமேலழகரின் உரைக் கருத் துக்கள் ஆரிய மரபின் இயல்பினை எடுத்துப் பேசுகின்றன.

8. அய்யம்

முப்பால் மரபினை நாற்பால் மரபாகத் தன்மயமாக்கினும் ஆரிய மரபு எப்போதும் அய்யக கண்கொண்டே முப்பாலை நோக்கி வந்திருக்கின்றது. நான்கு பால்களிலும் எது சிறந்தது என்னும் வாதங்களில் அது புலனாகிறது.

மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் இது பற்றிப் பேசப் படும் ஓரிடம் குறிப்பிடத்தக்கது. பாரதப் போர் முடிவுற்றுப் பாண்டவர்கள் வெற்றி நிலை நாட்டியபோது எங்கும் பேர ழிவு இருப்பது தெரிந்தது. அசுவத்தாமன் பாண்டவர்களு டைய நண்பர்களை முறையில்லாத வகையில் கொன்று குவித்திருந்தான். இப்பேரழிவினைக் கண்டு பாண்டவர்கள் அய்வரும் கசிந்து கண்ணீர் மல்கினர். இந்த உலகில் எது தான் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள் என்பது பற்றி அவர்கள் விதுரருடன் கூடி ஆராய்ந்தனர். அறமா, பொருளா, இன்பமா எது? விதுரர் அறமே சிறந்தது என அதற்குரிய காரணங்களைத் தந்து பேசினார். அர்ச்சுனன் பொருளேப் போற்றத்தக்க பொருள் எனப் பெரிதாக எடுத்துப் பேசினான். பீமன் இன்பமே சிறந்தது என விரித்துப் பேசினான். நகுலனும் சகாதேவனும் முப்பால்களுமே அளவுடன் மேற்கொள்ளத் தக்கவை எனப் பேசினர். தர்மர் மனநிறைவு பெறவில்லை. இங்கே அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பற்றி மட்டுமே விரிவாகப் பேசப்பட்டிருக் கின்றது. நான்காம் பாலைப் பற்றி பேச்சு இல்லை. (தி.மு. குறள்நெறி)

இக்கருத்துக்கள் முப்பால்பற்றி ஆரிய மரபு அய்யம் கொண்டிருந்தது என்பதையும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது என்பதனையும் தெளிவாகக் காட்டுகின்றன. ஆதலால் அதனுடன் நான்காம் பாலைச் சேர்த்து அதற்கு முதன்மை இடம் தந்து முப்பாலை அது இழிவுபடுத்தியது. அதாவது, இம்முப்பொருள்களையும் கருவிகளாக்கி வீட்டுப் பாலைக் குறிக்கோளாக வைத்தது. இதுவே வடமொழியாக் கத்தின் இறுதிப் பணியாயிற்று. மகாபாரதம் இன்றுள்ள நிலை யில் பிராமணியத்தால் தன் தேவைக்கேற்ப மாற்றி எழுதப் பட்டது என அறிஞர்கள் சுட்டுவதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.(3)

திருவள்ளுவரது நூலில் நாம் முப்பாலே காண்கின்றோம். அவர் முப்பாலில் எப்பால் சிறந்தது என எப்போதும் ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை. அவர் எதனையும் கருவியாக்கவில்லை. எதனையும் முடிவாக்கவில்லை. இந்த உலக வாழ்க்கைக்கு எல்லாமே தேவை என்பது அவர் கருத்து போலும். அவர் மரபே தமிழ் மரபு எனக் கொள் ளலாம். உலகச் சிந்தனையாளர் ஆல்பர்ட் ஷ்வைட்சர் இவ்வாறே கருதுகிறார்.(4)

இம்முப்பால் மரபு தமிழ் மரபு என்றே நாம் கொள்ளலாம். காரணம் இந்தியா முழுவதிலும் எல்லாக் காலங்களிலும் தோன்றிய நூல்களில் அறம் பொருள் இன்பம் எனும் மூன்றனையும் எடுத்து ஒரே ஆசிரியரால், ஒரே நூலால் செய்யப்பட்டது இத்தமிழ்த் திருக்குறளே. வடமொழியில் முப்பால் மரபு தொடக்கக் காலத்தில் (கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை) ஆங்காங்கே சுட்டப்பட்டிருந்தாலும் தர்ம சாத்திரங்களும், அர்த்த சாத்திரங்களும், காமசாத்திரங்களும் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்து இருந்தாலும் அவை அனைத்தையும் ஒன்றாகக் கண்டு விளக்கிய நூல் ஒன்றாயினும் அங்குத் தோன்றவில்லை. திருக்குறள் ஆசிரியர் முப்பாலைப் பற்றி எழுதுகின்றபோது முப்பாலும் வாழ்க் கைக்கு இன்றியமையாதவை எனப் பார்க்கும் ஒரு விரிந்த பார்வை அவரிடத்து அமைந்திருப்பதை நாம் காணலாம்.

வடமொழியில் இம்முழுப் பார்வை, குறைப் பிறவியா கவே அமைந்துள்ளது. அது முழுமை பெறவில்லை. தமிழ் மரபே முழுமைப் பெற்றது. ஆதலால் முப்பால் மரபுக்கு உரியவர்கள் தமிழர்களே எனலாம். தம் முப்பால் மரபினைத் தமிழர்கள் மறந்துவிட்டு, ஆரிய மொழி மயமாக்கப்பட்ட, நாற்பால் மரபினைத் தம் மரபாகப் போற்றி மயங்குகின்றனர். தமிழ் மக்கள் இனியேனும் மயக்கம் தெளிவீராக!

NOTES

(1)  ‘The Sutras lay equal stress on the three ends of  life, i.e. Dharma, Artha and Kama, but are absolutely Silent on Moksha’

- India of  Vedic Kalpa Sutras

- by Ramgopal, P. VIII.

‘A balanced outlook on life is recommended in the Sutras which lay equal stress on the three ends of life, i.e. righteous conduct (Dharma), acquisition of wordly objects (Artha) and their enjoyment (Kama)....

- Ibid. P. 482.

(2)          A.L. Basham, The Wonder That was India.

(3)          ‘The Mahabharata is frequently more secular than religions in tone; the work had its origin in lays composed to commemorate the deeds of a great warrior and may have been connected in some way with the royal sacrifice. Many of  the incidents go far back into the remote Vedic period. Transition from one story to another is often confused and awkward. These lays were later worked over by the priests, who expanded the meaning of the ballads, linked them together with prose narration, and interpolated treatises on ethical and theological problems. The major brahman modifications and additions probably date from about the second and first centuries B.C.

- Dre. Kmeier, Charles, Kingship and

Community in Early India, P. 131-132.

(4)          ‘So a natural and ethical world and life affirmation of this kind was present among the people of India at the beginning of our era although nothing of it can be found in Brahmanism, Buddhism and Bhagaved-Gita Hinduism. It gradually penetrates into Hindu through the great religious teachers who had sprung from the lower castes and lived among and felt with the people’.

- Schweitzer Albert, Indian Thought

and its Development, P. 201.

- விடுதலை நாளேடு, 24.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக