சனி, 25 ஜூலை, 2020

பெரியார் ஜாதியை ஒழிச்சிட்டாரா?

பகுதி - 1

பெரியார் ஜாதியை ஒழிச்சிட்டாரா? தமிழ்நாட்டில் ஜாதியே இல்லையா? 

பதில்: உண்மைதான்! தமிழ்நாட்டில் ஜாதி ஒழியவே இல்லை தான்!

ஆனால் ஒரு 100 வருசத்துக்கு முன்பு ஜாதி எப்படி இருந்தது?

அத விடு்ங்க... 50 வருசத்துக்கு முன்னாடி உங்க தாத்தா எப்படி இருந்தாரு?

அவரு படிச்சவரா? என்ன வேலை பார்த்தார்? 

ஒரு 25 வருசத்துக்கு முன்னாடி உங்க சொந்தகார மாமா, சித்தப்பா, பெரியப்பா இவங்கல்ல எத்தனை பேரு படிச்சு வேலையில இருந்தாங்கன்னு நினைவிருக்கா?

ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி உங்க வீட்ல வேல பாத்த மனிதர்களை நினைவிருக்கா... இல்ல உங்க சொந்த, பந்தத்துல, அக்கம் பக்கத்துல கூலி வேலை செஞ்சவுங்களை நினைவிருக்கா? 

அத கூட விடுங்க... சென்னையில இருக்குற உங்க வீட்டுல வேலை செய்யிற வேலைக்காரம்மா கிட்ட அவுங்க புள்ளைங்க என்ன பண்றாங்கன்னு கேளுங்க..

முடிஞ்சா எப்பவாச்சும் ஒரே ஒரு வாட்டி அதட்டல் போட்டு பாருங்க..

இதுக்கெல்லாம் என்ன பதில் வருதோ அதை சம் அப் பண்ணுங்க.. 

அதுதான் பெரியாரோட சாதனை.

நீங்க சொன்ன மாதிரி ஜாதிகள் ஒழியல. ஆனா அவர் தொடங்கி வச்ச அரசியல் மாற்றங்களால் ஜாதிய வல்லாதிக்கம் ஒழிஞ்சிருக்கு.

இன்னிக்கும் ஆணவக் கொலை நடக்குதுதான்.

ஆனா ஓர் ஒடுக்கப்பட்டவனுக்கு, தான் தாழ்ந்தவன், தான் தாழ்ந்தவள் இல்லைங்குற தன்னம்பிக்கை வளந்திருக்கு. அதுனாலதான் அவன் பயமில்லாம காதலிக்கிறான், அல்லது காதலிக்கிறாள். ஆதிக்க ஜாதி பொண்ணு, பையன்னு தெரிஞ்சும் ப்ரொப்போஸ் செய்கிறார்கள்.

50 வருசத்துக்கு முன்னாடி இது சாத்தியமா? ஏன் அப்போ யாரும் காதலிக்கலையான்னு கேக்கலாம்.. காதலிச்சாங்க.. ஆனா எத்தனை படிச்சு, பணியில் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்களுக்குக் காதலைச் சொல்ல அன்றைக்கு ஒரு தயக்கம் இருந்துச்சு.

பெரும்பாலும் நகரங்களில் உயர்கல்விப் பயிலும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலும் உயர் ஜாதி பெண்கள்/ஆண்கள் முன்னெடுப்பில் மட்டுமே அப்படிப்பட்ட காதல் மலர்ந்தது.

இன்றைக்கு என்ன நிலைமை? 

எதற்குக் காதலை உதாரணமாக எடுத்தேன் என கேட்கலாம்.

காதலும், கலப்புத் திருமணங்களுமே ஜாதியை அற்றுப் போகச் செய்ய வல்லவை. 

கல்வியும், வேலை வாய்ப்பும் அதற்கான புறக் காரணிகளாக இருந்து வருகின்றன.

கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம் கல்வி பெற்றதும் சட்டமாக்கப்பட்ட 
இடஒதுக்கீட்டு முறையில் பணியில் அமர்ந்ததும் குடிசை வீடுகள் கல் வீடுகளானதும், அழுக்கு வேட்டிகள் ராம்ராஜ் வேட்டிகளானதும், நடக்கவே பயந்த சாலைகளில் ஸ்கார்ப்பியோக்களில் பறப்பதும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஓர் அரசியல் உருவானதும், பிரதிநிதித்தும் உருவாக்கப்பட்டதும், வெவ்வேறு ஜாதியானாலும் பணத்திலும், வசதியிலும், அந்தஸ்த்திலும், அதிகாரத்திலும் நேருக்கு நேர் அமர்ந்து பேசும் நிலைக்கு உயர்ந்ததிலும் பெரியார் இருக்கிறார்.

- வி.சி.வில்வம் பதிவு

சனி, 4 ஜூலை, 2020

உடன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்!


உடன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்!
எமதருமை மாணவச் செல்வங்களே, பட்டம் பெற்று வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களே, வேலை கிட்டாதா என்று ஏங்கும் தோழர்களே, சொந்தப் பணமோ, பெற்றோர் தந்த பணமோ, ஓட்டல் கடைக்கு சென்று நண்பர்களுடன் உல்லாசமாக உட்கார்ந்து, ஒய் யாரமாக 'அரட்டைக் கச்சேரி'யும் நடத்தி அனைவரும் அவர்கள் ஜாதி, மதம், பாலியல் பாகுபாடுமின்றி உணவருந் தும் வழமை உள்ள திராவிட - தமிழ் - வாலிபர்களே,

5 நட்சத்திர உணவு விடுதி முதல் வீதிகளில் அமைந்த எளிய உணவு விடுதிகள் வரையில் இன்று எங்கும் பேதாபேதமின்றி, எல்லோரும் ஒன்றாக உடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்து, உண்டாட்டத்தில் கொண்டாட்டமே கருதி குதூகலித்து மகிழும் நண்பர்களே, ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு - ஏன் அதற்கும் கூடக் குறைவான காலத்திலேயே அனைத்து ஜாதியினரும் பொது உணவு விடுதிகளான ஓட்டல்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் நிலை - உரிமை - இருந்ததா?

வர்ணாசிரம சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு, சமுதாயத் தில் இன்னமும் ஜாதி என்னும் விலங்குகள், பலரது கைகளில் தெரியாவிட்டாலும், மூளையில் போட்டுப் பூட்டி விட்டு, ஜாதி வெறித்தன போதையில் அவர்களைத் தள்ளாட வைத்துள்ள நிலையில் அன்று மக்கள் அனை வரும் சமமாக அமர்ந்து - உடன் உண்ணல் என்ற சமத் துவ உரிமையை அவர்களுக்கு அளித்ததா? இல்லை, இல்லவே இல்லை என்பதுதான் திட்டவட்டமான பதிலாகும்.

இந்த உரிமை எப்படிக் கிடைத்தது?

இதோ ஒரு வரலாறு:

“ஆப்கனிஸ்தானத்தை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டதில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக் கதுதான்.

ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்

ஆனால் மனுஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர்.

“.... பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினை உருவாக்கி, அவர்களை வெறும் வேலைக்காரர்களாக ஆக்கியது மனு. பிராமணனக்குத் தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப் பற்றி இப்படி எழுதியது.

“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மாபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் பேசுகிறது மனு.

- அக்னி ஹோத்திரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

இந்து மதம் எங்கே போகிறது, பக். 20

மனுதர்மத்தின்படி, சூத்திரன் அடிமை. அடிமைக்குக் கல்வி உரிமை, சொத்துரிமை, திருமண உரிமை... போன்ற பல மனித உரிமைகளில் சம உரிமை எதுவும் கிடையாது. அது மட்டுமா? பிறவி இழிவும் கூடத்தான்.

‘சூத்திரன்’ என்றாலே பார்ப்பான் வைப்பாட்டி மகன் என்று மனு அத்தியாயம் 8, சுலோகம் 415இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்பர் - வெள்ளையர் என்ற நிறவெறி, இனவெறி ஆதிக்கக் கொடுமை ஆட்சி புரியும் மக்களிடம் கூட இப்படி, ‘வைப்பாட்டி மகன் - தாசி புத்திரன்’ என்ற பிறவி இழிவுத் தொற்று - அவமானம் இணைந்திருப்பது உண்டா உலகில்? இல்லையே!

சாப்பிடுவதில்கூட European Restaurant Lavtory என்று ரயில்வே ஸ்டேஷன்களில் தனித்தனியாக இருக் கும் சமூகக் கொடுமை - அக்கிரமம் இருந்தது; ஆனால் இந்த நாட்டின் வர்ணாசிரம ஜாதியின் கொடுமை, ஒரு புறம் மானத்திற்கு பங்கம் - பறிமுதல் - அவமானம்; மறுபுறம் சமத்துவமின்மை - அறிவுப் பறிமுதல்.

எந்த அளவு மோசமான - உலகின் எங்கும் காண முடியாத அவலம் - அருவறுப்பான நிலை என்றால், காசு கொடுத்து உணவு விடுதிகளில் உண்ணும் போது கூட, அனைவரும் கலந்து உண்ணும் உரிமை கிடையாது. ஓட்டல்களில் ‘பிராமணாளுக்குத் தனி இடம், சூத்திரர் களுக்கு - கீழ்ஜாதிக்காரர்களுக்கு தனி இடம்‘ என்று பகிரங்கமாகவே ‘இடஒதுக்கீடு’ அறிவிப்புப் பலகை தொங்கிய நிலையில் பல ஆண்டு காலம் தொடர்ந்தது.

ஒன்றாகப் படித்துப் பழக வேண்டிய பருவமான மாணவப் பருவத்தினருக்குக் கூட ஒன்றாக அமர்ந்து கலகலப்பாக மகிழ்ந்து உரையாடி உடன் உண்ணல் வாய்ப்பு மறுக்கப்பட்டது 80, 90 ஆண்டுகளுக்கு முன்பு, அதன் விளைவே தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது நடத்திய சேரன்மாதவி குருகுலப் போராட்டம் (1924) “சமபந்தி போஜனம்“ என்ற உரிமைப் போரின் முதல் கட்டமாகும்! மனுவின் கொடுமையை நாட்டோர் புரிந்து கொள்ள வாய்ப்பு!

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கு வதற்கு முன்பே - அவர் காந்தியாரைத் தலைவராக ஏற்று, காங்கிரசில் சேர்ந்து, கடுமையாக உழைத்த நிலையில் தான் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் - உடன் (சமமாக) உண்ணல் உரிமைப் போராட்டம் - வெடித்தது!

பார்ப்பனர்கள் சாப்பிடும்போது சூத்திரர்கள் பார்க் கவே கூடாது; பார்த்தாலே தீட்டுப்பட்டு விடும் என்று கூறும் மனுதர்மம் தான் இந்தக் கொடுமைக்கு மூல சனாதனச் சம்பிரதாயக் கட்டளையாகும்.

இதோ மனுவின் சுலோகம் படியுங்கள்

“பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும்

நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும்

பதார்த்தம் அசுத்தமாகின்றது”

(மனு 3ஆவது அத்தியாயம் 241ஆவது சுலோகம்)

“சண்டாளன் - ஊர்ப்பன்றி - கோழி - நாய் -

மாதவிடாயானஸ்த் - பேடி - இவர்கள் பிராமணர்கள்

புசிக்கும் போது பாராமலிருக்கும்படி செய்ய வேண்டியது”

(மனு 3ஆவது அத்தியாம், 239ஆவது சுலோகம்)

நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி (உழைக்கும் மக்கள்) யினர் பன்றி, நாய், கோழி இவற்றைவிடவும் மிகவும் கேவலமானவர்கள் என்றே எழுதி வைக்கப்பட்டிருப்ப தைக் காலம் காலமாக ஹிந்து சனாதனம் கடைப் பிடித்ததன் தீய விளைவுதான் தேசீய குருகுலம் என்று பலஜாதிப் பிள்ளைகளைச் சேர்ந்த குருகுலத்தில் வ.வே.சு. அய்யர் என்ற பார்ப்பனர், பார்ப்பனப் பிள்ளை களுக்கு தனிச் சாப்பாடு, உயர் தரச் சாப்பாடு, பார்ப்பன ரல்லாதாருக்குத் தனிவரிசை, அதுவும் வெளியில் திண்ணையில் என்ற கொடுமையை அறிந்ததும், அன்று தமிழ்நாடு காங்கிரசின் தலைவர், செயலாளராக இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்களான தந்தை பெரியார், டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாண சுந்தர முதலியார் முதலிய பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலை வர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்!

ஆனால் இதனை ஆதரிக்க வேண்டிய முற்போக்கு பிராமணர்கள் என்று கூறப்பட்ட நிலையில் சி.ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி), சத்திய மூர்த்தி அய்யர், டி.எஸ்.எஸ். ராஜன் அய்யங்கார் போன்ற பார்ப்பனர்கள் அவர் களுக்குள் பல கோஷ்டியாக இருந்த நிலையில்கூட, இதில் ஒன்றாக நின்று தமிழ் தலைவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். தந்தை பெரியார் அதனைத் தோற் கடிக்கச் செய்தார். குருகுலம் நடத்திய வ.வே.சு. அய்யர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகப் புரட்சி நடத்தியவர் என்று புகழப்படுபவர். தான் தொடங்கிய தேசிய குருகுலத்தில் இப்படி பார்ப்பனரல்லாத மாணவர்களும், பார்ப்பன மாணவர்களும் உடன் அமர்ந்து உண்ணலை ஏற்படுத்தாமையை நியாயப்படுத்திப் பேசினார்.
-கி.வீரமணி

- தொடரும்
திராவிடர் கழகம், முகநூல் பக்கம், 4.7.20

வியாழன், 2 ஜூலை, 2020

'சூத்திரர்கள் இடம்` என்று தனியாக ஒரு கல்



இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?* 9. பட்டுக்கோட்டை அழகரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட - தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் 'சூத்திரர்கள் இடம்` என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954 - இல் *தந்தை பெரியார்* அவர்களின் பெரும் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்கு தெரியுமா?

-  உண்மை இதழ், 16-31. 8. 19

சிவகங்கை இராமச்சந்திரனார்



#தேவர் சமூகத்தில் பிறந்து ஜாதியை மறுத்து, பெரியாரின் படைத் தளபதிகளாக செயல்பட்டவர்களில் ராமச்சந்திரர் குறிப்பிடத்தக்கவர். சிவகங்கை சீமையிலே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த தீண்டாமை வன்கொடுமைகள் நடந்தாலும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு களத்திற்கு செல்லும் வழக்கறிஞர்.

ஜாதிவெறியர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, சிவகங்கையின் #முதல் ஆதிதிராவிடர் மாநாட்டை நடத்தி காட்டியவர். மாநாட்டு மேடையிலும் துப்பாக்கியோடு அமர்ந்திருந்தவர். 1929 இல், தன் பெயருக்கு பின்னால் இருந்த ஜாதிப் பெயரை பெரியார் நீக்கியபோது, இவரும் தன் பெயருக்கு பின்னால் இருந்த "#சேர்வை" என்ற வாலை வெட்டிக்கொண்டார். இறுதிவரை, ஒடுக்கப்பட்ட நாடார்களுக்கும் தலித்களுக்கும் கள்ளர்களுக்கும் பிறருக்கும் பக்கபலமாக இருந்தார். இன்றைய தேவை பல ராமச்சந்திரன்கள்.
#பெரியாரின்_தளபதி
#சுயமரியாதை_வீரர்
- எட்வின் பிரபாகரன், முகநூல் பதிவு, 22.6.20

செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழர் தலைவர் கி.வீரமணி கைது பட்டியல்



1956இல் ராமன் படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

1960இல் தேசப்படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

1974இல் இராவணலீலா போராட்டத்தில் கைதானார்.

31.01.1976 முதல் 23.01.1977 வரை மிசா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

31.10.1977 இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டி கைதானார்.

நாகம்மையாரைப்பற்றி அவதூறு எழுதிய ஆஸ்தான கவி கண்ணதாசனை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியதற்கு 22.03.1979 
முதல் 04.04.1979 வரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1981இல் மனுதர்ம சாத்திரத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
16.03.1982இல் இஸ்மாயில், சோமசுந்தரம் கமிஷன்களின் பரிந்துரைகளை அமலாக்கக் கோரி கோட்டை முன் மறியல் செய்து கைதானார்.

23.01.1983இல் ஜெயவர்த்தனேவிற்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.

09.08.1984இல் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி இந்திராகாந்தி வீட்டு முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஆகஸ்டு 15 அய் (1984) துக்க நாளாகக் கருதி திருச்சியில் கருப்புக்கொடி ஏற்றியதற்கு கைது செய்யப்பட்டார்.

ஈழத்தில் ராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனமானது என்று கூறிய துணைக் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு 07.09.1984இல் சென்னையில் கருப்புக் கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

13.12.1984இல் தமிழக மீனவர்களை சிங்களக்கடற்படை வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மறியல் செய்து கைதானார்.

22.09.1985இல் இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழித்துப்போராட்டம் நடத்தியதற்கு கைது செய்யப்பட்டார்.

காவிரி நீருக்காக திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் செய்து 30.10.1985 முதல் 05.11.1985 வரை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய கல்வித்திட்ட நகல் எரித்ததற்கு 22.06.1986 முதல் 04.07.1986 வரை சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

07.10.1986 இல் டில்லியில் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

20.02.1987இல் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக கப்பல் மறியல் செய்து தூத்துக்குடியில் கைதானார்.

01.06.1987இல் ஈழத் தமிழருக்காக ரயில் மறியல் செய்து சென்னையில் கைதானார்.

02.08.1987இல் ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்த நகல் எரித்து சிறை சென்றார்.

ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்த தொலைக்காட்சி நிலையம் முன் மறியல் செய்ததற்கு 26.10.1987முதல் 04.11.1987 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

25.01.1988இல் இந்தியக் குடியரசு நாள் விருந்தினராக வந்த ஜெயவர்த்தனேயை எதிர்த்து கொடும்பாவி எரித்து வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றச் சொல்லி போராட்டம் செய்து கைதானார்.

21.03.1988இல் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து மதச் சார்பின்மைக்கு மாறாக ஒவ்வொரு முறையும் சங்கராச்சாரியிடம் செல்லும் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டி சென்னை கிண்டியில் கைதானார்.

10.09.1988இல் விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவை சந்திக்கச் செல்கையில் கைதானார்.

08.11.1988இல் தீண்டாமை, சதி ஆதரவாளர் பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவி எரித்ததற்கு கைது செய்யப்பட்டார்.

01.08.1989 இல் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி தமிழகம் எங்கும் அஞ்சலகங்கள் முன் மறியல் செய்ததால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

10.10.1990அல் மண்டல் குழுப் பரிந்துரையை தடை செய்த உச்சநீதிமன்ற ஆணையை எரித்து கைதானார்.

09.11.1991இல் காவிரி நீர் மண்டல் குழு பிரச்சினைகளுக்காக தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.

20.01.1992அல் கர்நாடகத் தமிழருக்காக சென்னை அண்ணாசாலை அஞ்சலகம் முன் மறியல் செய்து கைதானார்.

30.04.1992இல் காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கக் கோரி திருவாரூர் அஞ்சலகம் முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.

06.12.1992இல் தடையை மீறி இராவணலீலா விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தி புதுவையில் கைதானார்.

10.02.1993இல் சென்னை இரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

23.04.1993இல் சென்னையில் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி மறியல் போராட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

01.09.1993இல் 69 சதவீதத்தை முடக்கும் உச்சநீதிமன்ற ஆணையை எரித்தற்காக கைது செய்யப்பட்டார்.

02.12.1994இல் இந்தி திணிப்பு மற்றும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து சென்னையில் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.

31.08.1995இல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது சென்னை புதுப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் 25.09.1995இல் தமிழகத்தில் 69 சதவீத இடஓதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்ற ஆணையை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

23.08.1996இல் சமூகநீதிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவியை எரித்ததற்கு 15 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

29.12.2000இல் அமைனத்து சாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரி இந்து அறநிலைய அலுவலகம் முன்பு மறியல் செய்து தஞ்சையில் கைதானார்.

09.12.2004இல் சமூக நீதி கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்றம் முன் மறியல் செய்ய முயன்றபோது கைதானார்.
சென்னையில் 01.02.2006 அன்று அனைத்து சாதியினர் அர்ச்சகராக உரிமை கோரி மறியல் செய்து கைதானார்.

01.11.2006இல் தமிழ்நாடு அய்.ஏ.எஸ் அதிகாரிகளை அவமதித்ததற்கு நீதிபதி முகோபாத்யாயா மன்னிப்பு கேட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் முன் மறியல் செய்து கைதானார்.

23.09.2008இல் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க ரயில் மறியல் செய்து கைதானார்.

29.12.2008இல் பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் முறை திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் செய்து கைதானார்.

02.09.2009இல் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக ரயில் மறியல் செய்து கைதானார்.

05.06.2010இல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட கோரி சென்னையில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கி.வீரமணி 46 ஆவது முறையாக சிறை சென்றார்.

15.10.2012 அன்று நெய்வேலியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராத கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்க கூடாது என்று நெய்வேலி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தி 
47முறையாக சிறை சென்றார்

5.3.13: டெசோ சார்பில் இலங்கை தூதரகத்தின் முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க தமிழர் தலைவர் கி.வீரமணி 48-ஆவது முறையாக கைது செய்யப் பட்டார்.

12.3.13: ஈழத்தமிழர் நல்வாழ்வுக்காக டெசோ சார்பில் தமிழகம், புதுவையில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று சென்னை அண்ணாசாலையில் நடந்த மறியலில் ஈடுபட்டு 50-ஆவது முறையாக தமிழர் தலைவர் கி.வீரமணி கைது செய்யப்பட்டார்.


பெரியார் பற்றி பாவாணர் கூறிய அரிய செய்தி...

பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்துமாற்றமன்று . செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடுதலை, குடியரசு முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கும் தொடங்கப்பட்டதோ அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனும் சொன்னால்,  ' அதெல்லாம் நீங்களே தமிழ்ப்பண்டிதர்களாகச் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப் போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர்களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத் தொண்டு செய்பவன்' என்பார். ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப்பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமைதாங்கியுமிருக்கிறேன். 

ஒருமுறை நான் காட்டுப்பாடியிலிருக்கும் போது எனக்கு வருவாய் இல்லையென்று தெரிந்து என் வீடு தேடி கொஞ்சம் பணம் கொடுக்கவந்து நான் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்த போது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்தில் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர்.

நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் ஆற்றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத்தார் ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தாணியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை. 

கலப்புமணம் , பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை  விட்டு விட்டு எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது பண்டத்தை விட்டு விட்டுப் படிவத்தைப் பற்றுவதேயாகும். 

தனித்தமிழை வெறுப்பவரும் உண்மையான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் இந்தியைப் பொதுமொழியாக ஏற்பவருமான வையாபுரிகளுடன் கூடிக்கொள்வதும் தமிழுக்கு மாறான ஆரிய அமைப்பகங்களுடன் ஒத்துழைப்பதும் மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுதுவதும் பகுத்தறிவுக் கொள்கையின் அல்லது தன்மான வாழ்வின்பாற்பட்டன வாகா. 

பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது பெரியார் விழாக்கொண்டாட்டத்தில் ஊர்தொறும் ஊர்வலத்திற் கலந்து கொள்வதும் விடிய விடிய சொற்பொழிவாற்றுவதும் பெரியார் படிமைக்கு மாலையணிவதும் பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்? 

இது காறும் தமிழ்நாட்டில் தமிழர்க்கு மூவேறு  வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத்தையே அவர் தொண்டாகக் காட்டுபவர் அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவார். தம் சிறு கொள்கைக்கு வெற்றி பெறவே விழாவைப் பெருவியப்பாகக் கொண்டுள்ளனர். 

அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய,

முப்பெரும் பெரியார் அகவல்

தமிழகத் தீரே தமிழகத் தீரே
மொழிவர லாறு மொழிவது கேண்மின்
பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு
நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப் 
பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள் 
நைந்தமை தடுக்க நன்மருத்துவராய் 
வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர் 
நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்
நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்
அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்
அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே
விடுதலை பெறவழி வேறில்லை யென்றே
கடவுள் இலையெனுங் காரங் கலந்து
மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்
மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே
அடிமை யொழித்த வல்லதை எழுத்தின்
வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை
குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து
பண்டம் விட்டுப் படிவம் பற்றித்
தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத் 
தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து
பெரியார் பெயரைக் கெடுப்பார் 
தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.

>>> மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.
செந்தமிழ்ச்செல்வி ஏப்பிரல் 1979

தொடரும்......
- திருவாரூர் கிருஷ்ணமூர்த்தி முகநூல் பதிவு, 23.6.20

ஞாயிறு, 14 ஜூன், 2020

கீழ்வெண்மணி படுகொலையைப் பெரியார் ஆதரித்தாரா?

பதில்கள் - 1

வெண்மணி படுகொலையின் போது பெரியார் அமைதி காத்தார் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

கீழ்வெண்மணி படுகொலையின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக இருந்தாரா?

இதற்கான பதிலைத் தெரிந்துக் கொள்வதற்கு முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். "கலவரச் சூழல் குறைய முத்துராமலிங்கம் கைது செய்யப்பட வேண்டும்", என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தவர் பெரியார்.

கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற் சங்கம்' என்கிற அமைப்புத் திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. 

சாணிப்பால் கொடுப்பது, சவுக்கால் அடிப்பது போன்ற வன்கொடுமைகளைத் திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட் தோழர்களும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்குக் கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கான கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பில் சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

மேலும் "தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்" என்று அப்போது இருந்தது. அன்றைக்குப் பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இன்று வேலைக்குப் போனால், அடுத்த நாள் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்படி வேலை மறுக்கப்பட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணை ஆட்களுக்கு இருந்து வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.

டிசம்பர் 25, 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்து, 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது, பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.  

டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டில் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக இது அறியப்படுகிறது. அதனால் உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. 

ஆனால் பிறகு ‘கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்படி?’ என்ற தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினார் பெரியார். 12.01.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாகக் கூலி உயர்வுப் போராட்டங்களைப் பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதே முக்கியம் என்பதே அவரின் நிலைப்பாடு.

- தோழர் தியாகு
பதில்கள் - 2

எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித் தகராறு என்பது முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்.(குடிஅரசு 01.10.1933)

"நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” (பகுத்தறிவு - 02.12.1934)

"முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்" (1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்)

இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.

கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்குக் கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

கீழ்வெண்மணியை சார்ந்த முனியன் என்பவர் கீவளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண் : 327/68 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகக் கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106 பேரைக் காவல்துறைக் கைது செய்தது. 

கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970 இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தார்.

- தோழர் தியாகு
பதில்கள் - 3

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4 வருடங்கள், 3 மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன், கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

கவனிக்க: பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்குக் கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின் நடந்தது. எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆதரவளித்தாக சொல்வது எங்குமே பொருந்தாது. 

இன்னொரு முக்கிய விசயம், ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் நாயுடு, பெரியாரை சந்திக்கக் கீவளூர் வந்த போது பெரியார் “என்கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்ல சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரைக் கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போகச் சொல்லு," எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதைக் கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.

கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘காவலாக்குடி மதி' இன்னும் உயிரோடு இருக்கிறார். குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆக கலவரத்திற்கு முன்பும், பின்பும் திராவிடர் கழகமும், பெரியாரும் ஒரு போதும் ஆதிக்கச் சாதியினர்க்கு ஆதரவாக இல்லை!

- தோழர் தியாகு
- தொகுப்பு : வி.சி.வில்வம்