ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

விளம்பரமில்லா வியக்கத்தக்க பெரியார் தொண்டர்... கொள்கை வேங்கை பிரான்சிஸ்

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின்  செயலளாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் முதுபெரும் பெரியார் தொண்டர் பிரான்சிஸ் அவர்கள். முழுநேரத் தொண்டராகவே பணிபுரிந்தார்.
இவர் திருச்சி வரகனேரியில் 25---05-1910 இல் பிறந்தவர்.
தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான தோழர். எப்பணி அய்யாவால் அளிக்கப்பட்டாலும் அதனை முடியாது; இயலாது என்று மனம் சுளிக்காமல், அதற்கென்ன அய்யா முடித்துவிடுகிறோம் என்று துணிந்து சொல்வதோடு செய்து முடிப்பவராகவே அவர் இறுதி மூச்சடங்கும் வரை செயலாற்றியவர்.
திருச்சியில் வக்கீல் அய்யா என்று பலராலும் அழைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிர்வாகக் குழுத்தலைவர் பொ.வேதாச்சலம் அவர்களது உற்ற செயலாளராக நெருக்கமாக பிரான்சிஸ் எப்போதும் இருந்தார். மாவட்டத் தலைவர் அப்போது டி.டி.வீரப்பா அவர்கள். அவருக்கும் பிரான்சிஸ் அவர்களுக்கும் இயக்கப் பணி செய்வதில் அவ்வப்போது உரசல்களும் ஊடல்களும் வந்தாலும், நொடிப்பொழுதில் கரைந்துவிடும்.
அன்னை மணியம்மையார் அவர்கள் பிரான்சிஸ் போன்றவர்களை அண்ணன் என்று மிகுந்த மரியாதையுடன் அழைப்பார்கள். அவரது வாசம் பெரிதும் பெரியார் மாளிகையில்தான்! நமது தோழர்கள், பிரமுகர்கள் அவருக்கு பெரிதும் உதவுவார்கள்.
புலிப்பாலைக் கொண்டு வா என்றாலும், அய்யா சொல்லிவிட்டார்! உடனே அது நடத்திக் காட்டப்பட்டாக வேண்டும் என்று உடனடியாக கிளம்பிடும் மனவேகம் கொண்ட கட்டுப்பாடு மிகுந்த தொண்டர் _ தோழர் இவர்!
பெரியாரை எதிர்த்துப் பேசினால் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பிரான்சிஸ் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்! சீறிப் பாய்ந்துவிடுவார்!
கழகப் பணிகளின் வெற்றிக்காக சிற்சில நேரங்களில் அதீதமாக நடந்துகொண்டு அய்யா அவர்களால் கண்டிக்கப்பட்டதும் உண்டு. ஆனால், அதனால் மனந்தளரவே மாட்டார்!
இவரைப்போலவே திருச்சி மாவட்டத்தில் சுலைமான் என்ற ஒரு முக்கிய செயலாளரும் உண்டு. அவரும் அமைப்பாளர் போன்ற பணிகளைச் செய்தவர். இவர்களிருவரும் இரு சிறுபான்மைச் சமூகத்தவர் என்ற பேதமோ, உணர்வோ இன்றி அனைவரிடமும் மிகுந்த பாசத்துடன், சகோதரத்துவத்துடன் நடந்து கொள்வார்கள்.
தோழர் பிரான்சிஸ் அவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குப் போனவர். அரசியல் சட்டத்தாளை எரித்து சிறையில் சுமார் ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்றவர்.
எந்தச் செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பார். ஒருமுறை வக்கீல் அய்யா தி.பொ.வே. அவர்களுக்கு மணிவிழா (அறுபதாம் ஆண்டு விழா) என்று அறிவித்து அழைப்பிதழ் விளம்பரம் செய்து திருச்சி தேவர் ஹாலில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து விட்டார்; தந்தை பெரியாரையும் அழைத்துவிட்டார். திருச்சி பிரமுகர்கள், கழக முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் குழுமிவிட்டனர்!
அவ்விழாவில் எல்லோரும் பாராட்டிப் பேசிய பிறகு, தி.பொ.வே. ஏற்புரை _ நன்றி உரை கூறத் துவங்கியபோது,
என்னய்யா அக்கிரமம், இந்த பிரான்சிஸ் செய்த வேலை, எனக்கு 60 வயதே இன்னமும் ஆகவில்லை, எனக்கு இப்படி மணிவிழா என்று கூறி பெருங்கூட்டத்தைக் கூட்டி, விருந்து தடபுடல் அது இது என்று இந்த மனுஷன் செய்துவிட்டார்; உம், நீங்களும் வந்து விட்டீர்கள், நானும் வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டேன் என்று நகைச்சுவை பொங்கக் கூறியவுடன், வந்திருந்த அனைவரும் சிரித்து சிரித்து மகிழ்ந்தனர்.
பொய்மையும் வாய்மை உடைத்து என்பதை பல நேரங்களில் செய்யத் தவறாத தொண்டர், தோழர் பிரான்சிஸ் அவர்கள்.
05_08_-1966 அன்று மறைந்த ஃபிரான்சிஸ் அவர்களுக்கு தந்தை பெரியார் நேரில் சென்று மரியாதை செலுத்தி, அவரது ஊர்வலத்திலும் பங்கேற்றதுடன் பிரான்ஸிஸ் கல்லறை எனும் நினைவிடத்தையும் அமைத்தார்.
திருச்சியில் கலைவாணர் என்.எஸ்.கே. ஜட்கா வண்டிக்காரர்களுக்காக, கலை நிகழ்ச்சி நடத்தி, ஒரு தனி ஜட்கா ஸ்டேண்ட் ஏற்பாடு செய்து அது பலகாலம் (புத்தூரில்) இருந்தது. அதற்குச் சற்றுத்தள்ளி, உறையூர் ரோட்டில் பல ஆண்டுகாலம் பிரான்சிஸ் பெயரால் திருச்சி திராவிடர் கழகத் தோழர்கள் ஒரு அருமையான படிப்பகத்தை பிரான்சிஸ் படிப்பகம் என்று நிறுவி நடத்தினர்.
நெடுங்காலம் பாதுகாப்புடன் நடந்தது. அதனைத் தொடர நாம் எடுத்த முயற்சிகள் ஏனோ பலன் அளிக்கவில்லை; விரைவில் திருச்சி மாநகரத் தோழர்கள் அதில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறோம்!
இவர் ஒரு எடுத்துக்காட்டான லட்சியத் தொண்டர் _ தோழர் ஆவார்!
எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தவர் எவரிடமும் வாஞ்சையுடன் பழகுவார்!


பொதுவாழ்வில் எதனையும் சம்பாதிக்காது, புகழைச் சம்பாதித்த கொள்கை வேங்கை திருச்சி பிரான்சிஸ் புகழ் வாழ்க
உண்மை இதழ்,16-30.11.15

பெண்குல விளக்கு நீலாவதியார்


நூல்: பெண்குல விளக்கு நீலாவதியார்
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
சுயமரியாதை இயக்கம் கடந்த கரடுமுரடான பாதை!
(அக்காலத்தில் சுயமரியாதை இயக்கம் பட்ட துன்பங்கள் பற்றி விவரிக்கும் ஒரு நூலிலிருந்து)
இராம சுப்பிரமணியமும் அவர் துணைவியார் நீலாவதி அம்மையாரும் நடத்தி வந்த சங்கங்களில் குறிப்பிடத்தக்கவை, கலப்பு மணச் சங்கம். விதவை மறுமணச் சங்கம் ஆகியவை ஆகும்.
இந்த சங்கங்களின் பணிபற்றி அப்போது குடிஅரசு, பகுத்தறிவு பத்திரிகைகளில் நிறையச் செய்திகள் வரும்.
திருவண்ணாமலையை அடுத்த பேராயம்-பட்டு என்ற ஊரைச் சேர்ந்த ரெங்கம்மாள் இந்தப் பத்திரிகைகள் வாயிலாக அந்தச் சங்கங்களின் அரிய சேவைகளை அறிந்து வந்தார். ரெங்கம்மாள் ஓர் இளம் விதவை. ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். ஆசிரியைக்காக படித்தவர்.
இவர் தன் வாழ்க்கை நிரந்தர இருளில் மூழ்குவதற்குப் பதிலாக, இந்தச்  சங்கங்களின் உதவியால் தகுந்த மணாளனை தேர்ந்தெடுத்து புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்க விரும்பினார். ஆனால், அவருடைய உற்றார் உறவினரும் சுற்றத்தாரும் பழைய மரபுகளில் ஊறிப் போனவர்களாய் இருந்தார்கள்.
எனவே, தனது கருத்தை சொந்த வீட்டுக்குள்ளேயே வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்த ரெங்கம்மாள். தனது படிப்பறிவின் துணை கொண்டு, இராம.சுப்பிரமணியம் தம்பதிகளுடன் கடிதத் தொடர்பு கொள்ளலானார்.
ரெங்கம்மாளின் மனநிலையை தெளிவாகப் புரிந்துகொண்ட நிலையில் இவர்களும், அவரைத் தைரியமாக இருக்கும்படியாகவும், அவருக்குப் புனர் வாழ்வு தேடித் தருவதாகவும் பதில் அனுப்பி வந்தார்கள்.
ஒரு நாள் குடும்பத்தினருக்கு ரெங்கம்மாளின் இந்தக் கடிதப் போக்குவரத்து தெரியவந்தது. அவ்வளவுதான் கடும் வார்த்தைகளினாலும் நடவடிக்கைகளினாலும் அவரை இம்சிக்கத் துவங்கினார்கள்.
இந்நிலையில் ஒருநாள் இராம சுப்பிரமணியம் தம்பதிகள் அந்தப் பெண்ணை நேரில் சந்தித்துப் பேசவிரும்பி, அவருடைய சொந்த ஊரான பேராயம்பட்டுக்கே புறப்பட்டுப் போனார்கள். ரெங்கம்மாள் வீட்டில் அவருடைய மறுமணத்திற்கு கடுமை-யான எதிர்ப்பு இருப்பதை அறிந்திருந்த அவர்கள், திருச்சி அருகே ஒரு ஆசிரியை வேலைக்காகவே ரெங்கம்மாளைப் பார்க்க வந்ததாக அவருடைய இல்லத்தாரிடம் கூறினார்கள்.

ஆனால் ரெங்கம்மாள் நடவடிக்கையில் ஏற்கனவே சந்தேகப்பட்டிருந்த அந்த வீட்டார் இவர்களை நம்பவில்லை! சந்தேகமாகவே துருவித் துருவிப் பேசி கடைசியில் உண்மையையும் அறிந்து கொண்டுவிட்டார்கள்.
அவ்வளவுதான் இராம சுப்பிரமணியம் தம்பதிகளை அடித்து உதைத்து அவமானப்-படுத்த முஸ்தீபு செய்துவிட்டார்கள்.
நல்லகாலமாக இந்தத் தம்பதிகள் சாதுர்யமாக அங்கிருந்து நழுவி வெளியேறி-விட்டார்கள். ஆனாலும், அப்படியே அந்த ஊரைவிட்டு வந்துவிட இந்தத் தம்பதியருக்கு மனமில்லை.
ஒரு அபலைப் பெண்ணை மீட்டு அவளுக்கு வாழ்வு தரும் கடமைதங்களுக்கு இருக்க அதை மறந்து ஓடுவதா என்று அந்நிலையிலும் எண்ணினார்கள்.
எனவே அந்த ஊரில் ரெங்கம்மாள் உறவினர் அல்லாத வேறு யாருக்காவது அந்த அம்மாளைப் பற்றி தெரிந்திருக்குமா என்று யோசித்து அங்கே இங்கே சிலரை சந்தித்தார்கள். கடைசியாக ஒரு பெட்டிக் கடைக்காரர் இவர்களுக்கு உதவியாக அமைந்தார். அவர் கிட்டத்தட்ட ரெங்கம்மாள் வீட்டு விவரங்களை அறிந்திருந்தார்.
நீங்க ரெண்டு பேரும் அந்த வீட்டுக்கு நேரிலே போனதே தப்பு! அவங்க முரட்டு ஆளுங்க. ஏதோ நீங்க தப்பிச்சு வந்தது பெரிய விஷயம் என்று கூறிய அந்தப் பெட்டிக் கடைக்காரர் இன்னொரு முக்கியத் தகவலையும் தந்தார்.
வீட்டார் கொடுமை தாங்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்ட ரெங்கம்மாள் சென்னை போய்விட்டதாகவும், அங்கே ஏதோ அனாதை ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டதாகவும் தனக்கு நம்பகமான இடத்துத் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
அதைக் கேட்ட இராம சுப்பிரமணியம் தம்பதிகள் உடனே சென்னை பயணமானார்கள். அங்கே இங்கே என்று பல அனாதை ஆசிரமங்களை அணுகிவிட்டு, கடைசியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் சிஸ்டர் சுப்புலட்சுமி அம்மாள் நடத்தி வந்த ஆசிரமத்தில் ரெங்கம்மாள் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.
அங்கே சுப்புலட்சுமி அம்மாள் உதவியுடன் ரெங்கம்மாளை சந்தித்து எல்லா விஷயங்களையும் பேசினார்கள்.
ஏற்கனவே இராம சுப்பிரமணியம் தம்பதிகள் ரெங்கம்மாளின் மறுமணத்திற்காக செட்டிநாட்டைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரை மணமகனாகப் பார்த்து முடிவு செய்திருந்தார்கள்.
சிதம்பரம் ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்தவர்.
கிட்டதட்ட நாற்பது வயது ஆனவர். அவர் முதல் மணத்தில் பிறந்த மகனுக்கு திருமணம் ஆகி, சிறிது காலத்தில் அந்த மகன் காலமாகிவிட்டதால், மருமகள் விதவையாகப் பிறந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
வேறு யாரும் துணை இல்லாத சிதம்பரம் மறுமணத்திற்குத் தயாராக இருந்ததால், ரெங்கம்மாளின் நிலைமை, வயது எல்லாம் அவருக்குப் பொருத்தமே என்று இவர்கள் முடிவு செய்திருந்தார்கள்.
எனவே அந்த மாப்பிள்ளை பற்றி எல்லா விவரங்களையும் ரெங்கம்மாளிடம் எடுத்துக் கூறி அவருடைய சம்மதத்தைப் பெற்றார்கள். அத்துடன் ரெங்கம்மாளை அந்த விடுதியிலிருந்து அழைத்துச் சென்று குஞ்சிதம் குருசாமி (குத்தூசி குருசாமி துணைவியார்) இல்லத்தில் சிலநாள் வைத்திருந்தார்கள்.
பிறகு ரெங்கம்மாளை திருச்சிக்கு அழைத்து வந்து அங்கே அவருக்கும், சிதம்பரத்திற்கும் பெரியார் தலைமையில் சீர்திருத்த மணத்தையும் இராம சுப்பிரமணியம் தம்பதிகள் முன்னின்று நடத்தி வைத்தார்கள்.
சிதம்பரம் ரெங்கம்மாள் வாழ்க்கை இனிது நடந்து வந்தபோது, எதிர்பாராமல் ஒரு வழக்கு வந்து சேர்ந்தது.
சிதம்பரத்தின் மருமகள் தன் மாமனாரின் சொத்து முழுவதும் தனக்கே சேர வேண்டும் என்றும், தன் மாமனார் செய்துகொண்ட திருமணம் சட்டப்படி செல்லாதென்றும் வழக்கு கொடுத்திருந்தார்.
இந்த வழக்குக்கு சிதம்பரம் தம்பதிகள் சார்பான முக்கிய சாட்சிகளாக இராம. சுப்பிரமணியமும் நீலாவதி அம்மாளும் ஆஜர் ஆனார்கள்...
செட்டியார் வகுப்பைச் சேர்ந்த சிதம்பரம் யாரோ இன்னொரு வகுப்பைச் சேர்ந்த விதவையான ரெங்கம்மாளை மணந்தது சட்டப்படி செல்லாது என்று இவர்களுக்கு எதிராக வழக்காடப்பட்டது.
எனவே வழக்கு மன்றத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் இராம. சுப்பிரமணியம் தம்பதிகளை இந்தக் கோணத்திலேயே கேள்விகள் கேட்டு மடக்க முயன்றார்.
செட்டிநாட்டில் விதவா மணம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றா? இது வழக்கறிஞர் கேள்வி.
விதவா மறுமணத்தை சட்டம் அங்கீகரிக்கிறது. அதுதான் எங்களுக்குத் தெரியும். இது இராம சுப்பிரமணியம் தம்பதியர் பதில்...
சிதம்பரம், ரெங்கம்மாள் திருமணத்தில் தாலி கட்டப்பட்டதா? வழக்கறிஞர் கேள்வி!
இல்லை! இது இவர்கள் பதில்!
ஏன்?
கோவலன் திருமணத்தில் அவனும் கண்ணகியும் மாலை மாற்றி மணம் செய்த கொண்டதாகத்தான் கூறப்பட்டிருக்கிறது. அவன் தாலி கட்டியதாக தகவல் இல்லை. அந்த மணத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா? இது வழக்கறிஞரை மடக்க இந்தத் தம்பதியரின் எதிர் கேள்வி!
கோவலன் கதையை விடுங்கள். இப்போது நடைமுறையில் யாரேனும் தாலிகட்டாமல் மணம் செய்து கொண்டிருக்கிறார்களா?
இந்தக் கேள்விக்கு இவர்கள் ஏன் நாங்களே செய்துகொண்டிருக்கிறோமே என்றார்கள்.
அத்துடன் தங்கள் மணம் தாலி கட்டாமல் நடந்தது மட்டுமல்ல... கலப்பு மணமும்கூட... என்பதையும் இந்தத் தம்பதியர் எடுத்துக் கூறினார்கள்...
செட்டி நாட்டவர் கலப்பு மணத்தை ஏற்கிறார்களா? என்று வழக்கறிஞர் கேட்டார்...
இப்போதைய செட்டிநாட்டவரின் மூதாதையர் கலப்பு மணத்தால் வம்சவிருத்தி செய்து கொண்டவர்கள்தான்... 500 ஆண்டுகளுக்கு முன் சோழநாட்டிலிருந்து வெளியேறிய 150 வணிகச் செட்டியார் பாண்டியனிடம் வந்து தாங்கள் குடியேற இடம் கேட்டபோதுதான் அவர் இன்றைய செட்டிநாட்டுப் பகுதிகளை அவர்களுக்காக ஒதுக்கித் தந்தார்... பெண்டு பிள்ளைகள் இல்லாமல் அந்த 150 பேரும் ஆடவர்களாகவே பாண்டி நாட்டில் வந்து குடியேறியதால், அன்று அந்தப் பகுதியில் வாழ்ந்த வேளாள குலப்பெண்களை மணந்துகொண்டார்கள். அதன் காரணமாகவே வெகுகாலம் செட்டியார் குலம் சைவ உணவை மட்டும் உட்கொள்பவர்களாக இருந்து வந்துள்ளது...
என்று இந்தத் தம்பதியர் பழைய வரலாற்று ஆதாரங்களை எடுத்துப் பேசவே எதிர்தரப்பு வழக்கறிஞர் திணறிப்போனார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் வரை வந்து முடிவில் சிதம்பரம் ரெங்கம்மாள் தம்பதிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.
அதன் பலனாய் அவர்கள் மணம் ஒப்புக் கொள்ளப்பட்டதுடன் சிதம்பரத்திற்கு மலேசியாவில் இருந்து பல இலட்ச ரூபாய் சொத்துக்களும் சேதாரமின்றி அவருக்கே கிடைத்தன.
இந்தத் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள். இவர்களில் மூத்தவரான மோகனா அம்மையாரைத்தான் பிற்காலம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டார்.

-உண்மை இதழ்,16-30.11.15

நீதிக்கட்சி சமதர்மக்கட்சி!


- தந்தை பெரியார்
தமிழர்களா? ஆந்திரர்களா?
பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதார்கள் என்கின்ற பிரிவுகளையே மிக இழிவானது - வெறுக்கத்தக்கது என்று சொல்லி வந்த பார்ப்பனர்கள் இன்று ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காக, வெட்டிப் புதைப்பதற்கு ஆக தைரியமாய் ஆந்திரர்கள், - தமிழர்கள் என்கின்ற பிரிவினையை ஏற்படுத்திவிட்டு அந்தச் சாக்கில் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியும், முயற்சியும்  அழிக்கப் பார்க்கின்றார்கள் என்றால் அது அச்சமுகத்துக்கு எவ்வளவு இழிவானதும் துணிச்சலானதுமான காரியம் என்று யோசிக்கும்படி வேண்டுகின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு தமிழர்-களைவிட ஆந்திரர்கள் ஒன்றும் அதிகமாக சாதித்துக் கொண்டதாகச் சொல்லிவிட முடியாது.
உதாரணமாக ஆந்திரர் என்கின்ற முறையில் பனகல் ராஜாவுக்குப் பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருந்தால் தமிழர் என்கிற முறையில் செட்டிநாட்டு ராஜாவுக்குப் பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருக்கிறது. ஒரு ஆந்திரர் பனகல் முதல் மந்திரி ஆனால் ஒரு தமிழர் டாக்டர் சுப்பராயன் முதல் மந்திரி ஆனார்.
மந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த 1. ஒரு பனகல், 2. ஒரு சர். பாத்ரோ, 3. ஒரு சர். கே.வி.ரெட்டி, 4. ஒரு முனிசாமி நாயுடு, 5. ஒரு பொப்பிலி ஆகிய அய்ந்து பேர் மந்திரி ஆகியிருந்தால் தமிழர்களில் 1. ஒரு சுப்பராயலு ரெட்டியார், 2. ஒரு சர் சிவஞானம் பிள்ளை, 3. ஒரு டாக்டர் சுப்பராயன், 4. ஒரு முத்தைய முதலியார், 5. ஒரு சேதுரத்தினம் அய்யர், 6. ஒரு பி. டி. ராஜன், 7. ஒரு குமாரசாமி செட்டியார் ஆகிய ஏழு பேர்கள் மந்திரிகளாகி இருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு நிர்வாக சபை கவுன்சில் மெம்பர்களில்கூட ஆந்திரர் என்கின்ற முறையில் ஒரு  சர். கே. வி. ரெட்டியார் லா மெம்பராயிருந்தால் தமிழர்களில் 1. ஒரு கே. சீனிவாசய்யங்கார், 2. ஒரு சர். உஸ்மான், 3. ஒரு சர். சி. பி. ராமசாமி அய்யர், 4. ஒரு கே. ஆர். வெட்கிட்டராம சாஸ்திரி, 5. ஒரு கிருஷ்ண நாயர், 6. ஒரு பன்னீர்செல்வம் ஆக 6 பேர் தமிழர்கள் நிர்வாக சபை மெம்பராயிருக்கிறார்கள்.
ஹைக்கோர்ட் ஜட்ஜிகளை எடுத்துக்-கொண்டாலும் சரி சர்விஸ் கமிஷனை எடுத்துக்கொண்டாலும் சரி. மற்றும் சர்க்காரால் நியமிக்கப்பட்ட சகல பதவிகள் உத்தியோகங்கள் ஆகியவற்றில் தமிழர்களை எந்தத் துறையிலும் ஆந்திரக்காரர்கள் மிஞ்சிவிடவில்லை என்பதை எவ்வளவு மூடனும் சுலபமாய் உணர முடியும்.
அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் இதுவரை ஒரு ஆந்திரர்கூட கார்ப்பரேஷன் பிரசிடெண்டாகவோ மேயராகவோ ஆனதில்லை.
மேலும் இன்று எந்தத் தமிழனாவது மனம் துணிந்து தைரியமாய் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் ஆந்திரக்காரர் என்றாலும் இந்த மந்திரி பதவியினால் பணம் சம்பாதிக்கவோ, அல்லது தனது குடும்பத்துக்கோ, எஸ்டேட்டுக்கோ, தனது சொந்தத் துக்கோ, ஏதாவது அனுகூலமோ நன்மையோ செய்து கொள்ளவோ வந்திருக்கிறார் என்று சொல்லக் கூடுமா என்று கேட்கின்றோம்.
சுயமரியாதைக் கொள்கையைப் பொருத்த வரையில்கூட டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஒன்று, ராஜா பொப்பிலி இரண்டு ஆகிய இரண்டு மந்திரிகள் தான் அவ்வியக்கத்தில் கலந்து கொண்டதை தெரிவிக்கவோ அல்லது சில கொள்கை களையாவது ஒப்புக்கொள்ளு-கின்றோம் என்று சொல்லவோ தைரியமாய் முன் வந்தார்களே ஒழிய மற்ற எந்த மந்திரியாவது, ராஜாவாவது வாயினால் உச்சரிக்கவாவது இணங்கினார்களா என்று கேட்கின்றோம்.
ஆகையால் தமிழ் மக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் இம்மாதிரியான பயனற்றதும் விஷமத்தனமானதுமான ஆந்திரர் தமிழர் என்ற தேசாபிமானப் புரட்டின் மேல் தங்கள் வெற்றிக்கு வழி தேடி அவமானமடை-யாமல் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற விஷயத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து அதில் வெற்றிபெற உழைக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 16.12.1934
(பெரியார் களஞ்சியம், - குடிஅரசு, - தொகுதி 17, பக்கம் 412
* * *
நீதிக்கட்சி சமதர்ம கட்சியே!
ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும், பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்ஜியம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகிறது. அதனா-லேயே, நாம் அதை சமதர்ம ராஜ்ஜியம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள், ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வார் பயத்தினாலா? இல்லவே இல்லை.  தாங்களாகவே ஆசைப்-பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு செய்து கொண்டு, போய் அமர ஆசைப்-படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே! எஜமானே! என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ்கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்-பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தை-யாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆகாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கிறேன். (27.12.1936 அன்று சென்னை _- கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க நான்காவது ஆண்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை) -குடிஅரசு - சொற்பொழிவு - 10.01.1937

(பெரியார் களஞ்சியம் - குடிஅரசு - தொகுதி 22, பக்கம் 42)
-உண்மை இதழ்,16-30.11.15

புதன், 15 மார்ச், 2017

தியாகத்தின் வடிவான திராவிடத்தாய் - கி.வீரமணி



1957-இல் திருச்சியில் நம் அய்யா தந்தை பெரியார் மீது, பார்ப்பனர்களைக் கொல்லத் தூண்டிப் பேசியதாக ஒரு வழக்கு! அதற்கு அப்போது சென்றேன் _- கழகத் தொண்டன் என்ற முறையில் _- சட்டக் கல்லூரியில் முதல் ஆண்டு சேர்ந்த நிலையில்.

திருச்சி மாவட்ட (செஷன்ஸ்) குற்றவியல் நீதிபதி முன் நடைபெற்ற அவ்வழக்கில் அய்யா பெரியார் அவர்களுக்கு 6 மாதம் என மூன்று ஆறு மாதங்கள் தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தண்டிக்கப்பட்ட நிலையில்தான் அய்யா என்னை அழைத்து, அம்மாவுக்குத் துணையாக இருங்கள் என்று பணித்தார்கள். அவர்களிடம் எனக்கு நெருக்கமாகப் பழகும் அரிய வாய்ப்பு அதன்மூலமே கிட்டியது!

அரசியல் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கிறது என்பதற்காக, கையகலக் கடுதாசியான சட்ட நகல்களைக் கொளுத்தியதாக 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை நமது தோழர்களும், தோழியர்களும் சுமார் 3,000 பேர் தண்டிக்கப்பட்டு, சென்னை, வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தனர்.

அம்மா அவர்களுக்குத் துணையாக, கூட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன். விடுதலை அலுவலகப் பணிகளிலும் சில எடுத்துக் கவனித்தேன்.

அம்மா அன்னை மணியம்மையார் பற்றி நான் புரிந்து கொள்ளவும், என்னைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவுமான வாய்ப்பு அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்பட்டது.

அம்மா அவர்கள் கழகப் பிரச்சாரகர்களை அறிவார்கள்; உபசரிப்பார்கள்.  அய்யா அவர்களுக்கு அம்மா, பணிவிடைக்காரராய், தோழியாய், செவிலியாய், சேவகியாய் எல்லா வகைகளிலும் பங்கு பணி யாற்றியவரானதால் மற்றவர்கள் நெருங்கும் வாய்ப்பில்லை. இதனால் அவரைப் புரிந்தவர்களும் வெகு சிலரே. இயக்கம் பிளவுபட்டபோது, அவர்கள் பெற்ற வசவுகள் போன்று உலகில் எந்த ஒரு பெண்மணியும் பெற்றிருக்கவே முடியாது. அவரது கொள்கைப் பயிர் என்ற வயலில் அவை உரங்களாகி விழுந்தன! அவரது உறுதியையும், தன்னலமற்றத் தொண்டூழிய மனப்பான்மை யையும் வளர்த்தன!

அம்மாவிடம் கழகத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் ஏற்பட்ட மரியாதை அதிகமாக அவர்களைத் தொலைதூரத்தில் வைத்துப் பழகவே செய்தது. அய்யாவின் விருப்பப்படி நான் அம்மா அவர்களுக்கு உதவியாக இருந்த வாய்ப்பினால் என்னைப் பற்றிய பல செய்திகளை - எனது தாயார் இளமையில் என்னை விட்டுப் பிரிந்தது; எங்கள் குடும்ப சூழ்நிலை; எப்படி நான் வளர்ந்தேன்; படித்தேன்; உழைத்தேன்; எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்களால் நான் கழகக் கொள்கைப் பிரச்சாரத்திற்கு சிறு வயதிலேயே பயன்பட்டேன் என்ற பல்வேறு நிகழ்வுகள், செய்திகள் பற்றி அவர்கள் அறிந்தார்கள்.

அதுபோலவே என்னை ஒரு பெறாத பிள்ளையாகவே அவர்கள் மனதால் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற வகையில் அளவற்ற பாசத்தை, தாயன்பைக் கொட்டித் தீர்த்து விட்டார்கள்!

பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் அய்யா தந்தை பெரியார் அவர்களது ஆணையே என்னை ஆளும் சட்ட திட்டமாக அமைந்து இருந்தது.

அது மேலும் விரிந்தது. அம்மாவின் அன்பு என்ற வளையத்தில் நான் அகப்பட்டேன்; ஆம், நான் அவர்களின் அகத்தில் இடம் பெற்ற பிள்ளையானேன்!

தாயன்பு - வாஞ்சையை இதற்கு முன்பு எவரிடத்திலும் அனுபவித்திராத அளவிற்கு அம்மாவிடம் - ஒரு குறுகிய காலத்தில் நான் பெற்றேன்.

தாயினும் சாலப் பரிந்து என்பதற்கு என்ன பொருள் என்பதை அம்மாவிடம் நான் உணர்ந்தேன்.

அய்யாகூட வேடிக்கையாக சில நேரங்களில் கூறியதுண்டு. “அவன் (வீரமணி) நான் சொல்வதைவிட அம்மா சொன்னால் உடனே கேட்பான்’’ என்று “சீண்டுவதற்கே’’ சொல்லி மகிழ்வதுண்டு!

அய்யா _- அம்மாவின் நம்பிக்கையைப் பெற்றேன் என்பதை விட பாசப் பொழிவிற்கு உரியவனானது நான் பெற்ற பெரும் பேறு!

இன்று அதுதான் என்னை எல்லையற்று உழைக்கச் செய்யும் ஊக்கச் சக்தியாக உயர்ந்து நிற்கிறது!

எத்தனைத் தடை என்றாலும் தாங்கும் இதயம், தாண்டும் கால்கள், அணைக்கும் அன்புக் கரங்கள் எல்லாம் கிடைக்கவே செய்தன!

அய்யாவுக்குச் செவிலியராக, அம்மா இறுதிவரை வாழ்ந்த வாழ்வு தியாக வாழ்வு!

ஒருவர் பொன்னையும், பொருளையும், பதவியையும், புகழையும் ‘தியாகம்’ செய்யலாம்; ஆனால், அம்மா அவர்கள் அய்யாவைக் காப்பாற்ற முதலில் தம் ‘இளமையையே’ தியாகம் செய்தார்கள்!

பிறகு ‘மானத்தையும்’ கூட தியாகம் செய்தார்! இனமானம் தன்மானத்திலும் பெரிது; பொதுவாழ்வுக்கு வருபவர் மானம் பாராது தொண்டு செய்ய வேண்டும் என்ற தந்தை பெரியார் வகுத்த இலக்கணத்தின் பேரிலக்கியமாகத் திகழ்ந்தார்!

அய்யாவின் திருமணத்தைக் காட்டிப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சர் ஆன பிறகு ஒரு நாள் அவர்களது இல்லத்தில்  சந்தித்தபோது சொன்னார்கள். ‘விடுதலை’ நிர்வாகி தோழர் சம்பந்தம் அவர்களும் உடன் இருந்தார்கள். “அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது; மணியம்மையாரின் பத்திய உணவு, பாதுகாப்புதான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது மட்டுமல்ல; அய்யா அவர்கள் இவ்வளவு நாள் நம்மோடு வாழவும் வைத்திருக்கிறது’’ என்று சொன்னார்கள்!

இதை மனந்திறந்து அண்ணா அவர்களே கூறினார்கள் என்றால், இதைவிட அம்மாவின் தொண்டுக்கும், தியாகத்துக்கும் வேறு சான்று வேண்டுமா?

தாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார் அன்னையார். அதில் நானும் ஒருவன்!

‘அனாதைகள்’ என்று எவரும் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் மருத்துவமனையில் கைவிடப் பெற்ற குழந்தைகளைக் கூட, உடல் நலம் இடந்தராத நிலையிலும் அவர்கள் எடுத்து  வளர்த்து ஆளாக்கினார்கள்.

‘நன்றி பாராட்டாத தொண்டு’ என்ற தந்தையின் மற்றொரு இலக்கண விதிக்கும் இலக்கிய-மானார்கள்!

எளிமை, வீரம், அடக்கம், சிக்கனம் இவை, அவர்களிடம் ஒன்றுக்கு மற்றொன்று போட்டியிட்டு நின்றன!

உடல் சோர்வு உற்ற நிலையிலும் உள்ளச் சோர்வு என்றுமே அம்மா அவர்களிடம் கிடையாது!

ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தினை, தந்தை பெரியார் என்ற மாபெரும் இமயம் சாய்ந்த பிறகு தலைமை தாங்கி, கட்டிக் காத்தாரே அது வரலாறே பெருமை கொள்ள வேண்டிய அதிசயச் சாதனை!

அவர் வாழ அவருக்கும் ஒரு சில பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அம்மாவுக்குத் தெரியாது (பிறகே அவர்கட்குத் தெரிந்தது) அய்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சொத்துகளையும் ஓர் அறக்கட்டளையாக்கி கல்வி அறப்பணிக்கே அதனை விட்டுச் சென்றார்கள்!

அந்த அறக்கட்டளையில் அம்மா ரத்தபாசத்தைக் காட்டவில்லை. அய்யா அவர்களைப் போலவே கொள்கைப் பாசத்தையே கொட்டினார்!

இதைவிட ஒப்பற்ற பெருமனம் வேறு இருக்க முடியுமா?

அய்யாவின் சிக்கனத்தைத் தோற்கடிக்கக் கூடியது அம்மாவின் சிக்கனம். ஆம் அய்யாவிடம் கற்றதுதானே அது!

அம்மா கண்ட களங்கள் பல _- புறநானூற்றுத் தாயாக அவர் வீறுகொண்டு கிளர்ச்சிகளைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். திருச்சி சிறையில் 1958-இல் மாண்ட சாதி ஒழிப்பு வீரர்கள் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் தம் புதைக்கப்பட்ட சடலங்களை, முதல்வர் காமராஜருடன் வாதாடித் திரும்பப் பெற்றதும், திருவையாறு சாதி ஒழிப்பு வீரர் மஜித் மறைந்தபோது நடுநிசியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் தலைமை தாங்கியதும், 1974ஆம் ஆண்டு இராவண லீலா சென்னையில் நடத்தியதும் அவர் ஒரு தன்னிகரற்ற வீரத்தாய் என்பதற்கான காலப்பெட்டகங்கள்!

 -உண்மை இதழ்,1-15.3.17


திங்கள், 13 மார்ச், 2017

வீரர் தாலமுத்து

வீரர் தாலமுத்து (நாடார்) மறைவு

இடுகாட்டில் தலைவர்களின் துக்கம்



இந்தி எதிர்ப்பிலீடுபட்டுச் சிறையிலிருந்த தோழர் தாலமுத்து நாடாரின், பிரேத ஊர்வலம் நேற்று (12.03.1939) மாலை 5 மணிக்கு ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டது. அலங்கரித்த பாடையில் தோழர் நாடார் கிடத்தப்பட்டிருந்தார். ஏராளமான மலர் மாலைகள் போடப்பட்டன.

தொடக்கத்தில் சர்வாதிகாரி எஸ். சம்பந்தமும், மற்றும் மூவரும் பாடையைத் தூக்கி வந்தனர். தோழர் நாடாரின் வயதான பெற்றோர்களும், இளம் மனைவியும் சவத்தின் மீது விழுந்து புரண்டு அரற்றிய காட்சி கல் மனதையும் கரைத்து விட்டது. வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், தோழர்களும் கண்ணீர் விட்டனர். 10000 பேர்கட்கு மேற்பட்ட மக்கள் கொண்ட மாபெரும் கறுப்புக் கொடிகளுடன் கூடிய பிரேத ஊர்வலம் தங்கசாலை வழியாக மெதுவாய்ப் புறப்பட்டு வந்தது. கறுப்புச் சட்டையணிந்த சிலர் முன்னே பாண்டு வாத்தியம் முழக்கிச் சென்றனர். ஊர்வலத்தின் இரண்டு பக்கங்களிலும் பல நூற்றுக்கணக்கான போலீஸ்களும், சார்ஜண்டுகளும், இன்ஸ்பெக்டர்களும், பந்தோபஸ்து செய்து வந்தனர். டிப்டி கமிஷனரும் வந்திருந்தார்.

-விடுதலை,11.3.17

செவ்வாய், 7 மார்ச், 2017

தலித் சுயமரியாதை யாத்திரை  ரோகித் வெமுலாவின் தாயார் அறிவிப்பு



அய்தராபாத், மார்ச் 5 கடந்தாண்டு ஜனவரி மாதம் அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவன் ரோகித் வெமுலா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தலித் என்பதால் பல்கலைக்கழக நிர்வாகம் அவரிடம் பாகுபாடு காட்டியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ரோகித் வெமுலாவின் மரணம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தாண்டு அவரது நினைவு தினம் பல்கலைக்கழக வளாகத்தில் கடைப்பிடிக்கப்படும் என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அறிவித்தனர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்து விட்டது. இதையடுத்து மீண்டும் மானவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,  ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலம் முழுவதும் தலித் சுயமரியாதை யாத்திரையை மார்ச் 14 அன்று மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை தேவை மற்றும் நாடு முழுவதும் தலித்துகள் மீதான கருத்தியல் தாக்குதல் ஆகியவற்றை விளக்கி இந்த யாத்திரை இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், யாத்திரையில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14 அன்று தலித் சுயமரியாதை யாத்திரை நிறைவு பெறும் என்று ராதிகா வெமுலா தெரிவித்தார்.

-விடுதலை,5.3.17

வியாழன், 2 மார்ச், 2017

கருஞ்சட்டை தோழர் வாழ்க, கர்ம வீரர் வாழ்க.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் இருந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு. பெரியாரிடமும், காமராசரிடமும் பேரன்பும், பெரும் மதிப்பும் கொண்டவர். புதுடில்லி விமான நிலையத்தில் அவர் நின்று கொண்டிருந்தபோது, காமராசரும் அங்கு வர, அவருடன் ஏராளமானவர்கள் வந்து மரியாதை தந்தனர்.

அந்தக் கூட்டத்திலும் தூரத்தில் நின்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைப் பார்த்துவிட்டு, அவரை நோக்கி வந்து,

டில்லிக்கு எப்ப வந்தீங்க! என்று விசாரித்தார்.

நெ.து.சு. வணங்கிவிட்டு விவரம் சொன்னார். காமராசர் மீண்டும் கூட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டார்.

விமானம் புறப்படத் தயாரானது. காமராசர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். நெ.து.சு. விமானத்தின் பின் பகுதியில் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் காமராசர் பின்பகுதியில் கண்ணைச் செலுத்தித் தேடிவிட்டு, இருக்கையிலிருந்து எழுந்து நெ.து.சு. அமந்திருக்கும் இடம் நோக்கிச் சென்றார்.

நெ.து.சு. எழுந்து நிற்க, அவரை அமரச் செய்து, அவர் அருகில் காமராசர் அமர்ந்து கொண்டார்.

தமிழ்நாட்டின் கல்வித் துறைபற்றி அவரிடம் காமராசர் பேசத் தொடங்கினார்.

கிராமமக்களுக்கு மேல்படிப்பு ரொம்ப சுலபமாக கிடைக்கணும். அதுதான் முக்கியம்.

நகரத்திலிருக்கிறவன் எவ்வளவு செலவானாலும் படிச்சிடுவான். கிராமவாசி எங்கே போவான்! சாதாரண பள்ளிப் படிப்புக்கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விற்கவேண்டியிருக்கு....! கிராமபுற ஏழைப்புள்ளைங்க மேல் படிப்பு படிக்க ஏற்பாடு செய்யணும்...! என்று பேசினார்.

நெ.து.சு. அவர்கள், உங்கள் முயற்சியால், இன்றைக்கு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 60% மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் என்றார்.

அதற்குக் காமராசர், அதைத் தானே நாம் விரும்பினோம்; அதுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஒரு தலைமுறை படித்து மேல வந்துட்டா அப்புறம் அந்தத் தலைமுறையே, அந்த கிராமமே மேல வந்துடும்! என்றார்.

அய்யா பெரியார் கிட்ட இந்த விவரத்தைச் சொன்னேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு, இவ்வளவுக்கும் காரணம் காமராசர் அய்யாதான். அவருக்குத்தான் தமிழன் கடன் பட்டிருக்கான். அவர் மட்டும் இல்லான்னா   1952லேயே நம்ம தலைமுறையையே இராஜகோபாலாச்சாரியார் குழிதோண்டி புதைத்திருப்பார் என்று பெரியார் சொன்னதைக் கூறினார் நெ.து.சு.

உடனே காமராசர், அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் அய்யாவாலேதான் நடக்குது! அவர் சொல்றார் நாம செய்றோம்...! காரணகர்த்தா அவர்தானே! 1952இல் வந்த பிரச்சினை அய்யாயிரம் வருஷமா இருக்கிற தாச்சே...! கடவுள் பேராலும், மதத்து பேராலும் நம்மை ஒடுக்கி வைச்சுட்டானே...! இதைப்பத்தி யாரு கவலைப்பட்டா...?

பெரியார் ஒருத்தர் தானே தலையில எடுத்துப் போட்டிட்டு பண்ணிட்டிருக்கார். அவர் மட்டுமில்லன்னா நம்ம புள்ளைங்க கதி என்னாயிருக்கும்?

கோவணங்கட்டி ஏர் ஓட்டினவர்கள், கலெக்டரா, செக்ரட்டரியா. ஒக்காந்திருக்க யார் காரணம்! பெரியார் தானே...!

நம் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரியார் சொல்றதை செய்யுறோம்...!

பெரியார் எந்த அதிகாரமும் இல்லாமலே எவ்வளவு பெரிய காரியத்தையெல்லாம் நம் மக்களுக்காகச் செய்கிறார்! என்று உணர்வு பொங்கக் கூறினார் காமராசர். தமிழன் வீடு என்றால் அங்கு பெரியார் படமும் காமராசர் படமும் இருக்க வேண்டும், என்றார் நெ.து.சு!

வாழ்க பெரியார்! வாழ்க காமராசர்!