வியாழன், 14 ஜூன், 2018

திராவிடர் இயக்க சாதனை ஒப்பீடு

ஜே பி. பிரகாஷ் அவர்களின் அருமையான பதிவு வடஇந்தியாவில் என்கூட தனியார்துரையில்  வேலைபார்ப்பவர் யாரும் பொரியாளர் பட்டியலில் தலித் இல்லை என்பது திடீர் தலித் போராளிகளுக்கு எங்கே தெரியபோகிறது .

திராவிட ஆட்சிகளை, குறிப்பாக திமுக & கலைஞரை குறைசொல்லும் "நியோ தலித்திய போராளிகள் & அமித்ஷாயிஸ்ட் தலித் போராளிகள்" கவனத்துக்கு..

எப்பா அறிவாளிகளே, எந்த ஒரு வளர்ச்சியையும் பிற பகுதிகளோடோ அல்லது ஒரே பகுதியில் பிற காலகட்டத்தோடோ ஒப்புமைப்படுத்தி, ஒப்பிட்டு பார்த்துத்தான் எவ்வாறு முன்னேறியுள்ளது, வளர்ச்சியடைந்துள்ளது என்பதை பார்க்கவேண்டும்... தமிழகத்தில் தலித்களின் நிலை என்ன, வட மாநிலங்களில் உள்ள நிலையென்ன?? ஐம்பதாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் என்ன நிலை, இப்போது என்ன நிலை.. இப்படி கம்பேர் செய்து, வளர்ச்சி அடைந்துளோம்மா இல்லையா என்பதை ஒப்பீட்டளவில் அறிந்துகொள்ளலாம்....

இன்றைய நிலையில் இந்தியாவில், தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில், குறிப்பாக தெற்கை தாண்டி, முன்னேற்றம் அடைந்துள்ளது பெரும்பாலும் உயர் சாதியினர் மட்டும் தான்... அங்கெல்லாம் அதிகம் உள்ள பிற்படுத்தப்பட்ட & மிக பிற்படுத்தப்பட்ட, தலித் & பழங்குடி மக்களின் நிலையானது இன்னும் முன்னேற்றம் அடையாமல், பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது.. உதாரணமாக ஐடி போன்ற தொழில்நுட்ப பணிகளில் உள்ளவர்களை மாநிலவாரியாக எடுத்துக்கொண்டால், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களில், உயர் ஜாதியினரே அதிகமிருப்பர்.. ஆனால், தமிழ் நாட்டினரை எடுக்கொண்டால், அனைத்து பிரிவு மக்களும் இருப்பார்கள்.. வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை எடுத்துக்கொண்டாலும், இதே நிலையத்தான்.. ஏனென்றால், தமிழகத்தில்தான், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இன்-குளூசிவ் வளர்சி மிக அதிகம்..

1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் பொருளாதார சமூக வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.
2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் சமூக பொருளாதார நிலை உயர்வாக உள்ளது.
3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.
4. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், தலித் வகுப்பை சேர்ந்த தொழில்முனைவோர் (entrepreneurs) மிக அதிகம் உள்ளனர்...

மேலும், சுதந்திர இந்தியாவிலேயே முதன்முதலாக உயர்நீதிமன்ற நீதிபதியாக தலித் வகுப்பை சேர்ந்த திரு. வரதராசனை 1974லில் நியமிக்க வழிவகுத்தது கலைஞர்... இவர்தான் பின்னர் உச்சநீதிமன்றத்தில் முதல் தலித் வகுப்பு நீதிபதியாக பணியாற்றிய சிறப்பு பெற்றவர்..

சென்னை மாநகருக்கு போலீஸ் கமிஷனராக முதன்முதலாக தலித் வகுப்பை சார்ந்தவரை நியமித்தது கலைஞர்.

அண்ணல் அம்பேத்கார் பெயரில் முதன்முதலாக கலை கல்லூரி, சட்ட கல்லூரி, சட்ட பல்கலைக்கழகம் போன்றவற்றை துவக்கியது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி..

சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபம் அமைக்கப்பட்டது (2000), வேலூர் அம்பேத்கர் மாவட்டம் (1989) பெயர்சூட்டியது எல்லாம் கலைஞரின் திமுக ஆட்சியில்..

கல்வி & திருமண உதவித்தொகை முதல் தலித் பிரிவிலேயே மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியின மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு கொடுத்து வரை நடந்தது எல்லாம் கலைஞரின் திமுக ஆட்சியில்.. 

நீதிக்கட்சி தமிழகத்தை ஆளும்போதுதான் தாழ்த்தப்பட்டோரின் பொது வீதிகளில் நடக்கலாம், பொதுக் கிணற்றில் நீரெடுக்கலாம் என சட்டமே இயற்றப்பட்டது அதுவும் திராவிட இயக்கம்தான்...

அம்பேத்கர் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பேசிய பேச்சுக்களை அந்த மாநாட்டு நிர்வாகக்குழுவே பதிப்பில் ஏற்ற மறுத்த நிலையில், திராவிட இயக்கம்தான் அதை ஆயிரக்கணக்கில் பதிப்பித்து விற்றது இதெல்லாம் சுதந்திரத்துக்கு முந்தைய வரலாறு.

அண்ணல் அம்பேத்தர்கரின் பெயரை அவர் பிறந்த மாநிலத்தில் ஒரு பல்கலைக் கழகத்துக்கு வைக்க முடியவில்லை - மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. இங்கே கலைஞர் ஆட்சியில் சட்டக் கல்லூரிக்கு பெயரே அம்பேத்தர்கரின் பெயர்தான்.

அம்பேத்கர் பிறந்த மகாராஷ்ட்ராவை விட அம்பேத்கர் சிலைகளும், சாலைகளும் தமிழகத்தில்தான் அதிகம். அம்பேத்கரின் நினைவுச் சின்னங்கள் மராட்டிய மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் அதிகம் இதெல்லாம் நிகழ்கால நிலைமை..

திராவிட இயக்க முன்னோடிகளுக்கும், ஆட்சிப்பொறுப்பில் இருந்து இதை சாதித்த திராவிட கட்சிகளுக்குமே, குறிப்பாக திமுக & கலைஞருக்கு தான் இந்த வெற்றி....

சரி, வட மாநிலங்களில் பிஜேபி ஹிந்துத்துவா கொலோசும் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரா, மாயாவதி பிஎஸ்பி ஆட்சி செய்த உபி, ராம்விலாஸ் பாஸ்வானின் பிகார் போன்ற தலித் மக்களின் நிலையை கொஞ்சம் பார்ப்போமா???

திருமண அழைப்புக்கு குதிரை மீது தலித் வகுப்பை சார்ந்த மாப்பிளை அமர்ந்து வந்ததால், ஆத்திரம் கொண்டு தலித் மக்கள் மீது கடும் தாக்குதல்..

தலித் வகுப்பை சார்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் பேண்ட் வாத்தியம் வைத்தால், எரிச்சல் கொண்டு, தலித் வகுப்பினர் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணெய்யை ஊற்றி பாழ்படுதினர் ஆதிக்க சாதியினர்..

தலித் வகுப்பை சார்ந்த மாப்பிள்ளை அலங்கரிகபட்ட காரில் ஊர்வலமாக வந்ததால், ஆத்திரம் கொண்டு தலித் மக்கள் மீது கடும் தாக்குதல்..

குதிரை வளர்த்த தலித் இளைஞர் எரித்து கொலை.

செத்த மாட்டின் தோலை அகற்றிய தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்..

தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்...

இவைகளெல்லாம் அங்கே தினந்தோறும் சர்வசாதாரணமாக நடப்பவைகள்..

உண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தலித் மக்கள் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்..

தமிழகத்தின் ஒருங்கிணைத்த சமூக, கல்வி & பொருளாதார வளர்ச்சிகளுக்கு முக்கிய காரணம், சென்னை மாகாணத்தில் உருவான பார்ப்பனர் அல்லாத இயக்கங்கள், நீதிக்கட்சியின் ஆட்சி, தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கங்கள், குறிப்பாக திமுக ஆட்சி தான்....

தமிழகத்திலும் ஒரு சில சாதிய அடக்குமுறை சம்பவங்கள் எப்போதாவது ஒருசில இடங்களில் நடக்கின்றன... ஆனால், தமிழகத்திற்கு வெளியே போய்ப் பாருங்கள், இங்கே எங்கோ ஒன்றிரண்டு இப்படி நடப்பவைகளெல்லாம், அங்கே எல்லா இடங்களிலும் அடிக்கடி நடக்கும்.....

Prakash JP.

- குமரேசன் தங்கவேல், பகுத்தறிவாளர்கள் vs மதவாதிகள் முகநூல்பதிவு( 15.6.18)

திங்கள், 11 ஜூன், 2018

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு

04.01.1931 - குடிஅரசிலிருந்து...

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்ததாகும்.  அந்தப்படி இவ்வருஷம் மார்ச் மாதம் கடைசியிலாவது ஏப்ரல் முதலிலாவது நடைபெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.  ராமநாதபுரம் ஜில்லாவில் மகாநாடு நடத்துவதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம்.  ஏனெனில், ரயில் போக்குவரத்து சவுகரியமும், உற்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதைவீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்யஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி முதலிய இடங்களுக்கும் அருப்புக்கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்யபாகமாகவும் இருப்பதாகும்.

ஆகவே, இந்த வருஷம் மாகாண மகாநாடு விருதுநகரில் நடைபெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம்.  மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள் செந்தில் குமார நாடார், வி.வி. ராமசாமி முதலியவர்களும் மற்றும் பல காரியங்களுக்கு திருவாளர் அருப்புக்கோட்டை கோபாலகிருஷ்ணசாமி நாயக்கர், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், முருகப்பா முதலியவர்களும் பிரதானமாக இருந்து துவக்கப்பட்டால் மகாநாடு கண்டிப்பாய் இதுவரை நடந்து வந்ததைப்பார்க்கிலும் விசேஷமாக நடைபெறக்கூடும் என்பதில் நமக்கு எவ்வித அய்யமுமில்லை.

தலைவர் ஸ்தானத்திற்கு சென்ற வருஷம் போலவே வட நாட்டிலிருந்து ஒரு பெரும் சீர்திருத்தவாதியாகவும், தலைகீழ் கிளர்ச்சிக்காரராகவும் பார்த்து ஒரு கனவானை திரு. ஆர்.கே. சண்முகம் அவர்கள் தயவால் அழைத்து வரலாம் என்கின்ற தைரியம் இருக்கிறது.  இம்மகாநாட்டில் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாகவும், அமலில் நடத்த வேண்டியதாகவும் இருப்பதால் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாவரும் தவறாமல் பங்கு எடுத்து உழைத்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதவசியமாகும்.  தண்ணீர் சௌகரியத்தை உத்தேசித்து அதே சமயத்தில் வேறு பல மகாநாடுகளும், 3,4 நாட்களுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாய் தெரியவருகிறது.  விருதுநகர் கனவான்கள் சுலபத்தில் ஒரு காரியத்தில் தலையிடமாட்டார்கள் என்பதும், தலையிட்டுவிட்டால் அவர்களைப் போல எடுத்துக் கொண்ட காரியங்களை ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் முடிப்பவர்கள் அரிது என்பதையும் நாம் தமிழ் நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.  இதை உத்தேசித்தே மேற்கொண்ட காரியங்களைப் பற்றி யோசிக்க ஈரோட்டில் இம்மாதம் கடைசி வாரத்தில் நிர்வாக கமிட்டி மீட்டிங்கை தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் கூட்டியிருக்கிறார்.

- விடுதலை நாளேடு, 9.6.18

கி.வீரமணி மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்

மம்சாபுரம் தாக்குதல்கள்’’



தாக்கப்பட்ட கார்.


 


20.07.1982 அன்று இரவு ராஜபாளையத்தில் மேற்கு முகவை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டத்தை முடித்துக்கொண்டு நான் மம்சாபுரத்தில் பெரியார் மருத்துவமனை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரை தேவசகாயம் காரில் புறப்பட்டு வந்தேன். என்னுடன் காரின் பின் சீட்டில் மதுரை தேவசகாயம், ராஜபாளையம் தங்கராஜன் ஆகியோர் அமர்ந்து வந்தனர். முன்சீட்டில் மதுரை தமிழரசனும் அமர்ந்திருந்தார். ராஜபாளையம் மெயின்ரோடில் மம்சாபுரம் அருகில் உள்ள புதுப்பட்டி பிரியும் வழியில் கார் வந்து கொண்டிருந்தபோது 10 இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கொடியுடன் “கலைஞர் வாழ்க’’ என்று சத்தம் போட்டுக்கொண்டு, காரை நிறுத்தி, நான் காரில் இருந்தபோது “விடாதே அடிடா! அடி!’’ என்ற ஒரே சத்தம் கேட்டது; உடனே கம்பாலும், சைக்கிள் செயினாலும் என்னை நோக்கி பயங்கரமாக தாக்க ஆரம்பித்தனர். என்னுடைய மூக்கிலும், தோளிலும் கல்விழுந்து ரத்தம் கொட்டியது; உடனே நான் டிரைவரிடம் வண்டியை மிக வேகமாக எடு என்று சொன்னவுடன் வேகமாக எடுத்ததால் எனக்கு கடும் பாதிப்பு தவிர்க்கப்பட்டாலும் கார் முழுவதும் கல்வீச்சில் படு சேதமடைந்தது; உடல் முழுவதும் கண்ணாடித் துண்டுகளாக இருந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டவுடன் பொதுமக்கள் ஆத்திரத்தோடு ஏராளமாகத் திரண்டு விட்டனர். போலீஸ் காவலும் கொடுத்து, பாதுகாப்புக்காக வந்தனர்.    


வன் முறையில் ஈடுபட்டவர்கள்    மம்சா புரத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். தங்கம், ரவி, சுயம்பு, சண்டியர் தங்கராசன் என்று அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டனர். அவர்களில் ஒரு பார்ப்பன இளைஞர் இருந்ததையும் தாம் பார்த்ததாகவும் அவர் பெயர் தெரியவில்லை என்றும் அவர் சொன்னார். அவர்கள் அனைவரும் அதிமுகவைச் சார்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார். ஒரு தபால் ஊழியர் தடிகளோடு வந்தவர்களை மம்சாபுரத்தில் பார்த்ததாகவும் அவர்கள் ஒரு வரவேற்புக்குப் போவதாகத் தம்மிடம் சொன்னதாகவும் கூறினார். உடனே அங்கிருந்த த.சி.அய்.டி. போலீசாரிடம் இதைப் பதிவு செய்ய வேண்டுமாய் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.




ராஜபாளையத்தில் மின்சாரத் தடை காரணமாகக் கூட்டம் இரவு 10 மணிக்குத் துவங்கியது. கூட்டம் ஏராளமாகக் கூடிவிட்டது. மிகவும் கொந்தளிப்பான நிலை இருந்தது. நான் அந்தக் கூட்டத்தில் இரவு 12 மணி வரை உரையாற்றினேன். உடனே அங்கிருந்து திட்டமிட்டவாறு திருவில்லிபுத்தூர் கூட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன். என் காரைப் பின்தொடர்ந்து கழகத் தோழர்கள் லாரிகளிலும் பஸ்களிலும் உடன் வந்தனர். போலீசாரும் பின்தொடர்ந்து வந்தனர்.


இரவு 12.30 மணிக்கு திருவில்லிபுத்தூர் கூட்டத்தில் பேசினேன். நான் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பே யாரோ சிலர் கல்வீசியதாக தோழர்கள் என்னிடத்தில் தெரிவித்தார்கள். நான் இரவு 2.30 மணி வரை தொடர்ந்து  உரையை நிகழ்த்தினேன். கூட்டத்திற்கு திருவில்லிபுத்தூரே திரண்டு வந்துவிட்டது. ஒரே உணர்ச்சியாகவும் கொந்தளிப்பாகவும் இருந்தது.


கூட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் தாக்கப்பட்டதற்கான மருத்துவச் சான்றிதழ்களைக் கேட்டனர்! அதற்குப் பிறகு அரசு மருத்துவமனைக்குச் சென்று தாக்கப் பட்டதற்கான மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்று காவல்துறையினரிடம் அளித்துவிட்டு  மதுரையிலிருந்து கழகத் தோழர்களுடன் திருச்சி வந்து சேர்ந்தேன்.


அடுத்த நாள் காலையில் பெரியார் மாளிகையில் இருந்தபோது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்து, கவனமாகப் பயணத்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். பின்பு அங்கிருந்த செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தேன். அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று திராவிடப் பாரம்பரியத்தைச் சார்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு ஆட்சியை, மத்திய அரசு குற்றம் சாட்டி மாநில அரசின் உரிமைகளை மேலும் பறித்து விடுவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்துவிடக் கூடாதே என்றுதான் கவலைப்படுகிறேன் என்று நான் செய்தியாளர்களிடம் கூறினேன்.




டாக்டர் காமேஸ்வரன் சிகிச்சை அளிக்கிறார்.


அப்போது எனக்கு ஏற்பட்ட காயங்களைக் கண்டு ஏராளமான கழகத் தோழர்களும் தாய்மார்களும், உணர்ச்சி வயப்பட்டு, கண்ணீர் விட்டு அழுதுகொண்டு பெரியார் மாளிகைக்கே வந்துவிட்டனர். விவசாயத் துறை அமைச்சர் காளிமுத்து அவர்களும், புதுவை மாநில அமைச்சர் சிவக்குமார் அவர்களும் என்னிடம் தொடர்புகொண்டு விசாரித்தனர்.


காலிகளால் திட்டமிட்டு நான் தாக்கப்பட்டதற்கு தலைவர்கள், தங்கள் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார்கள். திரு.அப்துல் லத்தீப், திரு.குமரி அனந்தன், தென்னரசு, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


பின்னர் சென்னை வந்தவுடன், என் உடல் நிலையை காது, மூக்கு, தொண்டை (ணிழிஜி) டாக்டர் பெரியவர் காமேசுவரன் பரிசோதித்து மூக்கு எலும்பு முறிந்திருக்கலாம் என்று சந்தேகித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள். இதை கேள்வியுற்ற திமுக தலைவர் கலைஞர் அவர்கள், தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது நேரில் என்னுடைய இல்லத்திற்கு வந்து டாக்டர்கள் கட்டளைப்படி வளவனூர் கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம், மருத்துவமனையில் சேரும்படி அன்புடனும் கண்டிப்புடனும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, ஆகஸ்ட் அன்று நடைபெறவிருந்த அறப்போரும், அதனை விளக்கி தஞ்சையில் நடைபெறவிருந்த மாநாடும் ஒத்தி வைக்கப்பட்டன.
(நினைவுகள் நீளும்...)

( தமிழர் தலைவர் கி.வீரமணி)

- உண்மை இதழ், 1-15.2.18


கி.வீரமணி எதிர்கொண்ட அறைகூவல்கள்

அரசியல்வாதிகள் அன்றாடம் எதிர்கொள் ளும் அறைகூவல் இயல்பானது. ஆனால் சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் _அதாவது சவால்கள் அப்படியல்ல; வேறு பாடானவை.

தந்தை பெரியார் என்னும் மாபெரும் சமூக அறிவியலார் எதிர்கொண்ட சந்தித்த அறைகூவல் களை அவருடைய அடித்தோன்றல் அண்ணாவோ, அண்ணாவின் அரசியல் வாரிசு கலைஞரோ சந்திக்கவில்லை எனலாம். ஆனால்,
அந்தவகையில் தந்தை பெரியாரின் அடியொற் றியே நடைபோடும் அவருடைய இயக்க வழித் தோன்றல் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்திக்க நேர்ந்தது இயற்கையான வியப்பின் வெளிச்சக்குறி. ஆம்! தந்தை பெரியார் என்னென்ன போராட்டங் களை_போர்க்களங்களைச் சந்தித்தாரோ அவற்றை யெல்லாம் ஆசிரியர் ஒவ்வொன்றாக அவருடைய எண்பது அகவைக்குள் சந்தித்து வருகிறார், சந்தித்து வருகிறார்.

அர்னால்டு டாயின்பீ

இதற்குக் காரணம் என்ன? என்று சிந்திக்கையில் அர்னால்டு டாயின்பீ என்னும் மேலைநாட்டு வரலாற்று அறிஞர் எழுதிய ‘History of Civilization’ என்னும் நூலில் எடுத்துக்காட்டும் வரலாற்றுத் தத்துவம் நம்முன் நிற்கிறது. அது இதுதான்:

அறைகூவலும் எதிர்கொள்ளலும்

உலக நாகரிகங்களின் நீண்ட, நெடிய வரலாற்றை ஆய்வு செய்து அவர் எழுதிய கோட்பாடு ‘Challenge and Response’ என்பதாகும். அதாவது அறைகூவலும் எதிர்கொள்ளலும் என்பதாகும். அக்கோட்பாட் டின்படி அறைகூவல் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதனை எதிர்கொள்ளலும் அதிகமாகிறது.

சுருக்கமாகச் சொல்வதாயின் எதிர்ப்புகள் வலிமை அதிக வலிமை பெறும் அளவிற்கு அவற்றை எதிர்கொள்ளல் வலிமை பெறுகிறது. இதனை ஆசிரியரின் எண்பதாண்டுக்கால வாழ்வில் நாம் தொடர்ந்து காண்கிறோம்.

வாழ்க்கையே அறைகூவல்

ஆசிரியர் வாழ்க்கை என்பது ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை. இதுபோல் ஒளிவு மறைவில்லாத ஒரு வாழ்க்கையுடைய தலைவர் எவரேனும் இருக்கிறாரா என்று தேடிப்பார்த்தபோது அதிலும் பெரியார்தான் அவருக்கு முன் நிற்கிறார், வழிகாட்டுகிறார். அவருடைய குடும்பம் ஒன்றும் மிட்டா _ மிராசுதார் குடும்பம் அல்ல. எளிய குடும்பம்தான்.

இதைப் பெரியாரே விடுதலை (6-.6.1964) தலையங்கத்தில் எழுதியிருக்கிறார்.

பெரியார் வாய்மொழி

பெரியார் அய்யா சொல்கிறார் பெருமை பொங்க: அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்தநிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல் மற்றொருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகரா கவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன் படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன்.

அய்யாவின் அறைகூவல்

ஆகக் கல்வி கற்பதிலிருந்து வாழ்க்கையை எதிர் நீச்சல் போட்டு, அதில் முன்னணியில் பொற்பதக்கம் பெற்றுத் தேர்வில் வெற்றி பெற்றுச் சட்டக் கல்வியி லும் முன்னணி நிலை வகித்து, சட்டத் தொழிலிலும் கடலூரில் முன்னணி நிலை வகித்தவருக்கு முதல் அறைகூவல் அவரை உருவாக்கிய பெரியார் ஒப்படைத்த விடுதலை ஏட்டைத் தூக்கி நிறுத்துவதில் தொடங்குகிறது. அந்த அறைகூவல் பெரியார் விடுத்த அறைகூவல், அய்ம்பதாண்டுக் கால அறைகூவல். அதை வெற்றிகொண்ட மாமனிதர் என்பதால் முதலில் தலைவணங்குகிறோம்.

அம்மாவின் அறைகூவல்

இயக்கப் பேச்சாளர் என்ற அளவில் மட்டும் தெரிந்து வைத்திருந்த அம்மா அன்னை மணியம் மையார் ஒரு பெறாத பிள்ளையாகக் கருதியதோடு, அள்ள அள்ளக் குறையாத அன்பையும், பாசத்தை யும் _ சிலர் பொறாமைப்படும் அளவிற்குக்கொட்டிய அம்மா அவர்களின் சொற்கள் ஆசிரியருக்கு விடுக்கப்பட்ட ஆணைகள் மட்டுமல்ல _ அறைகூவல்களும் கூட என்பேன்.

வீரமணி என்னைவிட அம்மா சொன்னால்தான் தட்டாமல் கேட்பான் என்று பெரியார் அய்யாவே சொல்லுமள விற்குரிய அந்த அன்னை விடுத்த அறைகூவல் 22.12.1977ல் வந்தது. எப்படி?

22.12.1977ல் திடீர் நெஞ்சு வலிக்கு ஆளான அன்னை மணியம்மையார் சென்னை பொதுமருத் துவமனையில் இருதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர். 25.12.1977 காலை 11 மணிக்குத் திராவிடர் கழக மய்ய நிருவாகக் குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் அறிவிக்கப்பட்டு இருந்தபோது, மருத்துவர்களின் இசைவோடும், மருத்துவர்களின் துணையோடும் வருகை தந்து, தலைமை தாங்கி சிறிதுநேரம் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றியவர், தாம் எழுதி வைத்திருந்த குறிப்பினை, தாம் கழகப் பொறுப்பி லிருந்து விலகுவதாகவும், ஆசிரியர் வீரமணி அப்பொறுப்புகளை ஏற்று கழகத்தை நடத்த வேண்டும் என்று படித்தபோது, அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து, தலைமையிலிருந்து அன்னையார் விலகல் என்னும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக உரையாற்றி அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்த துணிவு, ஓர் அறைகூவலுக்கான பதில். அதனால் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் எண் 10 அன்னையார் அவர்கள் பெருமகிழ்ச்சியோடு ஒப்புதல் தர நிறைவேறியது என்பது திராவிடர் கழக வரலாறு காட்டும் அறைகூவல்தான்.

அன்றும் என்றும் தலைமைப் பதவிக்குத் தாவிஓடாத, தாவிப்பிடித்து விடவேண்டும் என்னும் தணியாத ஆர்வம் ஏதும் இல்லாத போக்கு, இதற்கெல்லாம் காரணம் இவருக்கு மாறாத மனிதநேயம், மறையாத தன்னல மறுப்பு இவற்றைக் கற்றுத் தந்தவர் நம் தலைவர் தந்தை பெரியார் என்பதுதான்.

விடுதலைக்கு அறைகூவல்

விடுதலையின் வளர்ச்சி என்பது ஒரு மாபெரும் அறைகூவல். விடுதலை என்பது வெறும் ஏடு அல்ல. விடுதலை என்பது பெரியார் ஒப்படைத்த மாபெரும் அறிவாயுதம் என்பதை உணர்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அவர் ஆசிரியர் ஒருவர்தான். ஏனென்றால் விடுதலையின் வளர்ச்சிதான் நம் இனத்தின் எழுச்சி; அது இல்லையேல் நம் இன வீழ்ச்சி என்பதை உணர்ந்து வாழ்நாள் முழுமையும் விடுதலையை நாடெல்லாம், தமிழர் வீடெல்லாம் கொண்டு சேர்க்க எத்தகைய அறைகூவல்களையும் எதிர்கொண்டவர் அவர். இனமான எதிரிகள் நெருக்கடி காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளைத் தூள் தூளாக்கியவர் என்றும் கூறவேண்டும்.

சிறைக் கூவல்கள்

ஒரு சமூகப் புரட்சியாளரின் முன்னணித் தொண்டர் வாழ்வின் எண்பதாண்டுக் காலத்தில் தமிழர் நலன்களுக்காகச் சமூக நீதிக்காகவே போராட்டக் களத்தில் முன் நின்றிருக்கிறார் என்பது பெருமை. அதில் அய்ம்பதுக்கு மேற்பட்ட முறைகள் அரசின் கைதுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது பெருமைமிகு வரலாறு.

1956இல் முதன்முதலாக ராமன் பட எரிப்பில் கைதான வரலாறு _ 2012 வரை தொடர்கிறது. கைதுக்கு முற்றுப்புள்ளி இல்லை, இக்கழகத் தலைவருக்கு. கடைசியாகக் களம் கண்டது நெய்வேலியில் _ கைதானது நெய்வேலியில் _ அதுவும் தம்வாழ்விணையர் திருமதி மோகனா வீரமணி அவர்களையும் களத்தில் சேர்த்துக் கொண்ட பெருமைமிகு வரலாறு வேறு எவருக்கு வாய்க்கும்?

நெய்வேலி நிலக்கரிக்கும், நரிமணம் பெட்ரோ லுக்கும் ராயல்டி கேட்டுப் போராடி வென்ற அத்தலைவர், காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகா விற்கு, தமிழ் உழவர் வயிறு காயக் கழுத்தறுப்புச் செய்யும் கர்நாடகத்திற்குக் கடிவாளம் போடக் களமாக, நெய்வேலியைத் தேர்ந்தெடுத்து 15.10.2012இல் வாழ்விணையரோடு போராட்டக் களத்தில் அறைகூவலைச் சந்தித்துத் தொண்டரோடு தொண்டராய் எளிய உணவு உண்டு ஓர் அறைகூவலை எதிர்கொண்டார்.
காலையில் கைதாகி மாலையில் விடுதலை ஆகாமல் காராக்கிரகக் கம்பிகளுக்குள் இருந்த சோதனை நாட்களும் உண்டு. அதில் சோதனை மிகுந்த சிறை வாழ்க்கையை எவ்விதப் போராட்டங் களும் தவறுகளும், குற்றங்களும் இழைத்திடாது, சுயமரியாதை வீரராய் வாழ்ந்ததற்காகவே மிசாக் கைதியாக 3.1.1976 முதல் 23.1.1977 வரை ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்த கொடுமையான அனுப வமும் மறக்க முடியாத, மறுக்க முடியாத அறை கூவல். அதைப்பற்றிக் கேள்விப்படுவோர் நெஞ்சம் நடுங்கும், வேதனைத் தீயில் மூழ்கித் திளைக்கும் _ காரணமானவர் மீது வெறுப்பு அகலவிடாது.

அடுத்த சிறை வாழ்வு 22.3.1979 முதல் 4.4.1979 வரை சென்னை மய்யச் சிறையில். அன்னை நாகம்மையாரைப்பற்றி அவதூறு எழுதிய ஆஸ்தானக் கவியை எதிர்த்த அறப்போராட்டம் அளித்த பரிசாகும்.

காவிரி நீருக்கு இன்று மட்டுமல்ல, 27 ஆண்டுகளுக்கு முன்னே போராடிச் சிறைப்பட்டவர் ஆசிரியர். திருவாரூர் வட்ட ஆட்சியர் முன் மறியல் செய்து திருச்சி சிறையில் 30.10.1985 முதல் இருந்தார்.

1986ல் புதிய கல்வித் திட்ட நகலை எரித்ததால் 22.6.1986 முதல் 4.7.1986 வரை மீண்டும் சென்னை மய்யச் சிறை வரவேற்றது. நல்லவேளை மிசாக் கொடுமை அரங்கேறிடவில்லை இப்போது என்பது நமக்கெல்லாம் ஆறுதல்.
சென்னைத் தொலைக்காட்சி, தொல்லைக் காட்சியாகத் தமிழர் வாழ்வில் பலமுறை விளங்கியதுபோல. ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்ய, அதனை முறியடிக்கத் தொடர்வண்டி மறியல் மேற்கொண்டு 26.10.1987 முதல் 4.11.1987 வரை சென்னை மய்யச் சிறையில்.

இதையடுத்துப் பதினைந்து நாள் சிறைவாழ்வு ஏகியது வேலூரில். சமூகநீதிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொடும்பாவி எரித்துச் சென்னையில் கைது செய்து வேலூரில் 15 நாள் சிறை வைத்தனர்.

இவ்வாறு சிறை சென்று சமூக நீதிக்-கு எதிரான எந்த அறைகூவலையும் எதிர்கொள்ளத் தயங்கியதில்லை.

அறக்கட்டளைக்கு அறைகூவல்

1952இல் தந்தை பெரியார் உருவாக்கிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளை துரோகிகள், எதிரிகள் கண்களை உறுத்தியது. இன்றைக்குப் பெருமையாகப் பெரியார் திடல் செல்கிறோம் என்று கூறுகிறோமே அந்தத் திடல் உள்ளிட்ட அறக்கட்டளைக்கு _ அய்யா காலத்தில் தொடங்கி, அன்னையார் காலத்தில் முடிந்து, ஆசிரியர் காலத்தில் தொடர்ந்த வருமானவரி வழக்கு _ ரூ. 80 லட்சம் வருமான வரி என்று வளர்ந்தது வேறு. அறக்கட்டளைக்கு ஏற்பட்ட அறைகூவலை வீரமணி அவர்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்று 80 ஜி எனும் நன்கொடை வரிவிலக்குப் பெற்றதும் பெருமைமிகு அரிய சாதனை மட்டுமல்ல _ அறைகூவல்களுக்கு எதிர்கூவலாகும்.

எம்.ஜி.ஆர் அறைகூவலும் ஈர்ப்பும்

எதிலும், எப்போதும் வெற்றி என்றே கூறப்பட்ட எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரானபோது தவறான அணுகுமுறை ஒன்றை மேற்கொண்டார். இடஒதுக்கீட்டிலே வருமான வரம்பு எனும் அளவுகோலைத் திணித்து 2.7.1979இல் அரசாணை பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து முதல் அறிக்கை விட்டவர் வீரமணி. (3.7.79) வெறும் அறிக்கை வீரரல்லர் அவர் என்பதால் 4.7.79இல் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம். 14.7.1979இல் சேலத்திலும், சென்னையில் 22.7.1979லும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகாப்பு மாநாடு, தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம், 26.11.1979ல் வருமான வரம்பு அளவுகோல் ஆணை தீயிட்டுப் பொசுக்கல் என்று வரிசையாக நிகழ்வுகள் நடந்ததன் விளைவு, தோல்வி காணாத எம்.ஜி.ஆரின் கட்சி 1980 ஜனவரியில் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.

எனது ஆட்சி இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்று வீரமணி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து நம்ப வைத்தார் என்று எம்.ஜி.ஆர். ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததோடு 21.1.1980ல் அனைத்துக் கட்சி  கூட்டத்தைக் கூட்டி அதில்  வீரமணி அவர்களே பேசினால் போதும் என்று கூறி 45 நிமிடம் அவர் விளக்கிப் பேச 21.1.1980ல் அரசாணையை எம்.ஜி.ஆர் அரசு திரும்பப் பெற்றது எம்.ஜி.ஆரின் அறைகூவலை எதிர்கொண்ட வரலாறு.

எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை

எம்.ஜி.ஆர். அரசு, அரசாணையைத் திரும்பப் பெற்றது என்று மட்டும் முடித்துக்கொள்ளக் கூடாது. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருக்குப் பின் இயக்கத் தலைமைப் பொறுப்பேற்ற ஆசிரியர், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எவ்விதச் சபலங்களுக்கும் ஆட்படாமல் செய்து முடிப்போம் என்று சூளுரைத்து 14.7.1979ல் சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு நடத்தி அதிலே இடஒதுக்கீட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். எம்.ஜி.ஆர் 1980 ஜனவரியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தியதையும் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 69 விழுக்காடாக்கியதையும் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை எனவும், அதற்குக் காரணமானவர் ஆசிரியர் வீரமணி என்பதையும் பதிவு செய்வோம்.

அறியாமைச் சேற்றில் அல்பர்கள்

31 சி சட்டத்தை 9ஆவது அட்டவணையில் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியில் சேர்த்திட மேற்கொண்ட முயற்சியையும், அதன் பயனாய்ச் சமூகநீதி காத்த வீராங்கனை என அழைத்ததையும், நன்கு ஆழமாகச் சிந்தித்து அதன் பின்னணியையும் சிறப்பையும் உணராத அற்ப மானிடர் சிலர் அறியாமைச் சேற்றில் விழுந்து இன்றும் நமுட்டாக ஆசிரியரை அறியாமையால் விமரிசிப்பது உண்டு. எனவே எத்தகைய அறைகூவலுக்கு இடையில் 31 சி சட்டம் 9ஆவது அட்டவணையில் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பதை விளக்குவோம்.

இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 50 விழுக்காட்டிற்குமேல் இடஒதுக்கீடு தரக் கூடாதென தடை விதித்திட, தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காடு இடஒதுக்கீடு 50ஆகக் குறைத்து 19 விழுக்காடு இழக்கவேண்டிய ஆபத்து உருவாயிற்று. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.என். வெங்கடாசலய்யா, அகர்வால் ஆகியோர் இடைக்காலத் தடை ஆணை விதித்தனர்.

சமூக நீதிக்கு ஆபத்து என்றால் துடித்தெழும் முதல் மாமனிதர் ஆசிரியர் வீரமணிதான். எனவே 1993 செப்டம்பர் முதல் நாள் அந்த ஆணையைக் கொளுத்தினார். இந்தச் சமூக நீதிக்கு ஏற்பட்ட ஆபத்தைக் களைய வழிதேடினார். இந்திய அரசமைப்புச் சட்டம் 31 சி பிரிவின் கீழ் மாநிலச் சட்டப் பேரவை ஒரு சட்டம் நிறைவேற்றி அதற்குக் குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிடும். இது ஒன்றுதான் தீர்வு.

அப்போது ஆட்சியில் இருந்ததோ செல்வி ஜெயலலிதா. இந்தியத் தலைமை அமைச்சரோ பி.வி. நரசிம்மராவ், ஒப்புதல் அளிக்க வேண்டிய குடிஅரசுத் தலைவரோ சங்கர் தயாள் சர்மா. இது நடக்கக் கூடியதா? என்று பலரும் அய்யுற்றனர். ஏனெனில் மேலே குறிப்பிட்ட மூவரும் பார்ப்பனர்.

இந்நிலையில் இந்த அறைகூவலை வீரமணி எதிர்கொண்டு வென்றார் என்றால் அது சாமானியமானதா? அரசின் சட்டத்துறை செய்ய வேண்டிய பணியான சட்டமுன் வரைவை உருவாக்கும் பணியினை _ 31 சி சட்ட வரைவினை உருவாக்குதலை 17.11.1993ல் செய்து முடித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி 26.11.1993ல் அதனை விளக்கினார். ஆசிரியர் வீரமணி எடுத்துரைத்த நியாயத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றார். ஏற்றதோடு 31 சி சட்டமுன்வரைவு 30.12.1993ல் தமிழகச் சட்டப் பேரவையில் அறிமுகம் ஆகியது. குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டது.

குடியரசுத் தலைவரை அதற்கு ஒப்புதல் அளிக்க 7.2.1994ல் தந்திகள் அனுப்புமாறு மக்களை வேண்டினார். 31 சி பிரிவுக்கு குடியரசுத் தலைவர் சங்கர்தயாள்சர்மா ஒப்புதல் வழங்கினார். அதனை 9ஆவது அட்டவணையில் சேர்த்திடப் போராடி வீரமணி அவர்கள் வெற்றிமணி ஆனார். மூன்று முதன்மைப் பொறுப்புகளில் பார்ப்பனர் வகுப்பினர் இருந்த நிலையில் 31 சி சட்டத்தை நிறைவேற்றி 9ஆவது அட்டவணையில் சேர்க்கும் அறைகூவலில் வெற்றி பெற்றார்.

மண்டல்குழு

மண்டல் குழு அறிக்கை கிடப்பில் கிடந்ததற்கு உயிர் கொடுக்க வகை செய்தவர் ஆசிரியர். 25.2.1982ல் தலைமை அமைச்சருக்குத் தந்தி அனுப்பினர். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டதுடன் அதனை நடைமுறைப் படுத்திட இடைவிடாமல் போராடிய மாவீரர். நடத்திய போராட்டங்கள் மட்டுமே 16. மாநாடுகள் மட்டுமே 42. பத்தாண்டுக் காலம் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், மாநாடுகள், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி, கையெழுத்து இயக்கம், தந்திகள், நேர்முகங்கள், சந்திப்புகள் என்று எத்தனை எத்தனை. 8.8.1990ல் நடைமுறைக்கு மண்டல் அறிக்கை வந்தது நடைமுறையில்.

நெஞ்சில் தைத்தமுள்

1970ஆம் ஆண்டு டிசம்பர் 2இல் நம் தமிழர் தலைவர் பிறந்த நாளில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் உரிமை பெறும் சட்டத்தை நிறைவேற்றியது கலைஞர் அரசு. ஆனால் பெரியாரின் லட்சியக் கனவு நிறைவேறிடவில்லை. பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படவில்லை. 2006இல் மே மாதம் மீண்டும் கலைஞர் ஆட்சியில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேறியது. இன்றும் ஆதிக்க சக்திகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

கல்வி அறைகூவல்

சமூக மாற்றத்திற்குக் கல்வி முதன்மைக் கருவி என்று முழுமையாக நம்பிய பெரியாரின் வழியில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் வழங்கிய 100 பவுன் தங்கத்தைப் பெரியார் நூற்றாண்டு மகளிர் பல்தொழில் நுட்பப் பள்ளியாக உருவாக்கியவர். கல்வி வரலாற்றில் எதிர்கொண்ட அறைகூவலின் வெற்றிக்கனிதான் தஞ்சைத் தரணியில் தலைநிமிர்ந்து பெரியார் _ மணியம்மையார் பெயர் சொல்லும் தந்தை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்.

தனக்கு ஏற்பட்ட சோதனை

சமூகத்திற்கு ஏற்பட்ட சோதனைகளை எதிர்கொண்டு சாதித்த ஆசிரியர். 1982ல், (20.7.1982ல்) இராசபாளையத்தை அடுத்த மம்சாபுரம் புதுப்பட்டியில் பார்ப்பனரால் தூண்டிவிடப்பட்ட சில துரோகிகளால் தாக்கப்பட்டபோதும், 11.4.1985ல் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் எதிரிகளால் கொலைமுயற்சிக்கு ஆளானபோதும், 27.4.1985ல் மீண்டும் கொலை முயற்சிக்கு ஆளானபோதும், 1987இல் சேலம் தம்மம்பட்டியில் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் 28.8.87இல் தாக்கப்பட்டபோதும், 2011இல் சென்னையில் விருகம்பாக்கத்தில் தாக்குதல் முயற்சிக்கு ஆளானபோதும் அத்தனை அறைகூவல் களையும் துச்சமென உதறித் தன்பயணத்தைத் தொடர்கிறார்.

இத்தனைக்கும் இரண்டு முறை இருதய நோய்க்கு ஆட்பட்டவர். இந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் தன்நலனுக்கு ஏற்பட்ட அறைகூவல்களை எதிர்த்து நின்று வென்றிருக்கிறார்.

எனவே இவருடைய வாழ்க்கை _ 11 வயதில் தொடங்கியது 69 ஆண்டுகளாகத் தொடர்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பாராட்டுகளையும் அரவணைப்பையும் மிகச் சிறுவயதிலேயே பெற்று வளர்ந்தவர் ஆசிரியர். தலைவர் கலைஞர் அவர்கள் திராவிடர் கழகத்தை வலிவோடும் பொலிவோடும் வழிநடத்திச் செல்லுவதில் வல்லவராக, தந்தை பெரியார் அவர்களுக்கு என்றும் பெருமை சேர்க்கும் தளகர்த்தராகத் திகழ்கிறார் என்று கூறி உழைப்பும், தொண்டும் தொடர 75ஆம்  அகவையில் வாழ்த்திய தோடு, அறைகூவல்களை எதிர்த்து நின்று வென்று வீரமணியாகவும், வெற்றிமணியாகவும் விளங்குகிறார் என்பதையும் சேர்த்திட வேண்டும்.

- பேரா.ந.க.மங்களமுருகேசன்

- உண்மை இதழ், 1-15.12.12